Thursday 2 July 2015

தமிழ்த் திரையுலகில் கேரள வரவுகள்!

தமிழ்த் திரையுலக நடிகைகளில் மலையாள வரவுகளின் எண்ணிக்கை எப்போதும் கணிசமான அளவில் இருந்தே வந்திருக்கிறது .



சிந்து நதியின் மிசை நிலவினிலே சேர நன்னாட்டிளம் பெண்களுடனே சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைக்க பாரதி கண்ட கனவு திரையுலகின் மூலம்தான் நிறைவேறி வருகிறது. தமிழ்க் கதாநாயகர்கள் பல்வேறு காலக்கட்டங்களில் அவ்வப்போது சேர நன்னாட்டிளம் பெண்களுடனே டூயட் பாடியே வந்திருக்கிறார்கள் ; வளர்ந்திருக்கிறார்கள்.

இது பற்றிய ஒரு பின்னோக்கிய பார்வை பார்த்தோமானால், அந்தக் காலத்து வி.என்.ஜானகி, லலிதா,பத்மினி,ராகினி

எல்லாம் மலையாள வரவுகளே. இடைக் காலத்தை எடுத்துக் கொண்டால்,கே.ஆர்.விஜயா,, சுஜாதா போன்ற சிலரும் கேரள வரவுகளே.

ரஜினி, கமல் காலத்தை எடுத்துக் கொண்டால் மலையாள நாயகிகள் ராதா, அம்பிகா என்று கொடி கட்டிப் பறந்தனர். இவர்கள் இருவருமே அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்து வெற்றி நாயகிகளாக, வெற்றி நட்சத்திரங்களாக வலம் வந்தனர்.

ராதா, அம்பிகா சகோதரிகளில் இப்போதும் ராதாவின் மகள்கள் கார்த்திகாவும். துளசியும் நடித்து வருகின்றனர்.

கார்த்திகா கோ முதல் புறம்போக்கு வரை பல படங்களில் நடித்தார். துளசி மணிரத்னத்தின் கடல் முதல் நீர்ப்பறவை என்று நடித்தவர் மேலும் நடித்து வருகிறார்.,பிறகு பெரிய வரவேற்பைப் பெற்ற நதியா மும்பையில் பிறந்தவர் என்றாலும் இவரும் ஒரு மலையாள குடும்பத்தைச் சேர்ந்தவரே.

ஒருகாலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தது இந்த மலையாள நடிகைகள் வரவு. போகப்போக அதிகமாகி அதிகரிக்கத் தொடங்கி தற்காலத்தில் மலையாள நடிகைகள் ஆக்கிரமித்து வருகின்றனர்.மும்பை மோகம் மாறத்தொடங்கியுள்ளது ஒரு மாற்றமாகும்.கேரளத்து .நடிகைகளில் தமிழில் நிலைத்து நின்ற, நிலைத்து நிற்கும் சிலரைப் பார்ப்போம்.



லிசி

மலையாளத்தில் மோகன்லாலுடன் 19 படங்கள் மம்முட்டியுடன் 23 படங்கள் நடித்தவர் லிசி. தமிழில் கமலுடன் விக்ரம் படத்தில் நடித்தார். சில படங்களில் நடித்தவர் பிறகு மலையாளத்தில் மட்டுமே கவனம் செலுத்தினார். இயக்குநர் பிரியதர்ஷனை திருமணம் செய்து கொண்டார்.

சீமா

ஐ வி. சசியைத் திருமணம் செய்த சீமா மலையாளத்தில் பிரபலம் தமிழில் குணச்சித்திர வேடத்தில் வந்தார். இப்போது தமிழில் டிவி தொடர்களில் வருகிறார்.



ஊர்வசி

காலம் கடந்து நிற்பவர் ஊர்வசி, முந்தானை முடிச்சு படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர் நூற்றுக் கணக்கான படங்களில் நடித்தவர் அனைத்து முன்னணி நாயகர்களுடன் இணைந்தவர். ஒரு கட்டத்தில் கதாநாயகியிலிருந்து நகைச்சுவைக்கு மாறி இன்றும் நடிப்பில் கலகலப்பூட்டி வருகிறார்.

மீனா

மலையாள வரவுகளில் அம்பிகா, ராதாவுக்குப் நிலைத்து நின்றவர் மீனா.கன்னூர் மாவட்டம் இவரது பூர்வீகம்.. .தமிழ்நாடு அரசின் 4 விருதுகள்,மற்றும் ஆந்திரஅரசின் நந்திவிருதுகள் 2ம் பெற்றவர்.

இவர் தமிழில் ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், சரத் என பலருடன் இணைந்து நடித்தவர். மம்முட்டி மோகன்லால், வெங்கடேஷ், பாலகிருஷ்ணா, விஷ்ணுவர்தன் என்று தென்னிந்திய நாயகர்களுடன் வலம் வந்தவர். திருமணமான பின்னும் மோக

ன்லாலுடன் இவர் நடித்த த்ரிஷ்யம் படம் பெரிய வெற்றிவெற்றது இன்றும் மதிப்புள்ள நடிகையாக வலம் வருகிறார்.

அசின்

குடும்பப் பாங்கு தவிர்த்து சற்று கவர்ச்சியில் தாராளம் காட்டி அறிமுகமான அசின், தமிழில் கமலுடன் தசாவதாரம் பட வாய்ப்பு பெற்றதும் உயரே சென்றார்.

விஜய், அஜித்,சூர்யா,ஆர்யா, ஷாம் என்று என்று நடித்தவர் அதன் பிறகு இந்தியில் நுழைந்து அங்கும் ஓரிடத்தைப் பெற்றார். அதிகப் பணவரவு என்று இந்திக்குப் போன போது தமிழில் இடைவெளி விழவே இங்கு படங்கள் இல்லை. வெற்றிடத்தைக் காற்று நிரப்புவது போல வேறு நடிகைகள் அவர் இடத்தை நிரப்பிக் கொண்டார்கள்.



அபிராமி

திருவனந்தபுரத்துக்காரரான அபிராமி தான் ஒரு தமிழ்ப்பெண் என்று கூறுவார். குழந்தை நட்சத்திரமாக 7 படங்களில் நடித்துவிட்டு வளர்ந்ததும் நாயகியானவர். வானவில், மிடில் கிளாஸ் மாதவன், சமஸ்தானம், சார்லி சாப்ளின் என்று நடித்தவர், கமலுடன் விருமாண்டியில் நடித்ததும் பல படிகள் மேலேறினார். சமீபத்தில் வந்த 36 வயதினிலே படத்தில் கூட நடித்துள்ளார்.

ஷாலினி

பேபி ஷாலினியாக கலக்கிய இவர் பேபியாகவே 35 படங்கள் நடித்தவர். நாயகியாக முதல் படம் அனியத்தி பிராவு மலையாளப்படம் ..பிறகு விஜய்யுடன் காதலுக்கு மரியாதையில் நடித்தார் அமர்க்களம் படத்தில் அஜித்துடன் நடித்த போது அவரது காதலுக்கு மரியாதை செய்தார் மீண்டும் விஜய்யுடன் கண்ணுக்குள் நிலவு, மாதவனுடன் அலைபாயுதே, பிரசாந்துடன் பிரியாத வரம் வேண்டும என நடித்து அஜித்தை திருமணம் செய்து கொண்டு திரையுலகிற்கு விடைகொடுத்து விட்டார்.

கோபிகா

இந்த திருச்சூர்க்கார கோபிகா 4 த பீப்பிள் மூலம் பிரலமானார்.சேரனின் ஆட்டோகிராப் மூலம் தமிழுக்கு வந்தார் பிறகு கனா கண்டேன், பொன்னியின் செல்வன், தொட்டி ஜெயா, அரண், எம்டன் மகன் வெள்ளித்திரை என்று நடித்தவர் இரண்டாம் கட்ட நடிகர்களுடன் மட்டும் நடித்தவர் என்ற நிலையில் திருமணம் செய்து கொண்டு போய்விட்டார்.

அஞ்சு அரவிந்த்

பூவே உனக்காக படத்தில் விஜய்யுடன் நடித்தவர் மூக்கும் முழியுமாக வசீகரமான குடும்பப் பாங்கான முகம்தான். அதன்பின் அவர் ஏற்ற படங்கள் அவரை உயர்த்த வில்லை அருணாசலத்தில் ரஜினியின் தங்கையாக நடித்தார். ஆனாலும் எனக் கொரு மகன் பிறப்பான், ஒன்ஸ்மோர், சூர்ய வம்சம், குருப்பார்வை போன்ற படங்களில் நடித்தும் முக்கியத்துவம் பெறாததால் காணாமல் போனார்.

மோனிகா

குழந்தை நட்சத்திரமாக 15 படங்களில் நடித்த இவர் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருது வாங்கியுள்ளவர். குமரியானதும்அழகி படம் மூலம் குடும்பப் பாங்கான அடையாளம் பெற்றார்.பிறகு நடித்த சிலபடங்கள் பெரிதாக கை கொடுக்க வில்லை. இவர். இம்சைஅரசன் ,சிலந்தி போன்ற படங்களில் தரம் இறங்கினார். . இப்போது முஸ்லிமாக மாறித் திருமணம் செய்து கொண்டு விட்டார்.

பாவனா

திருச்சூர்காரரான பாவனா, மிஷ்கினின் சித்திரம் பேசுதடியில் தமிழுக்கு அறிமுகமானார். பிறகு கிழக்கு கடற்கரை சாலை, வெயில், தீபாவளி, கூடல் நகர், வாழ்த்துகள். என்று இரண்டாம் நிலை நடிகர்களுடன் நடித்தார். என்ன பிரச்சினையோ தெரியவில்லை.பிறகு மேலே வரமுடியவில்லை.

மீராஜாஸ்மின்

துறு துறு முகம் குடும்பப் பாங்கான தோற்றம் என்றிருக்கும் மீராஜாஸ்மின் தேசிய விருது, தமிழ்நாடு அரசு விருது, 3 பிலிம்பேர்விருதுகள், 4 ஆசியாநெட்விருதுகள் என பல விருதுகளை அள்ளியவர். ரன்னில் மாதவனுடன் அறிமுகமானார் விஜய்யுடன் புதிய கீதையிலும் அஜித்துடன் ஆஞ்சநேயாவிலும் நடித்தவர். விஷாலுடன் சண்டக் கோழி, தனுஷுடன் பரட்டை என்கிற அழகு சுந்தரம், பரத்துடன் நேபாளி, பிரசாந்துடன் மம்பட்டியான் என்று நடித்தவர். கவர்ச்சியாக நடிப்பவரல்ல தேர்ந்தெடுத்து நடிப்பவர் என்கிற பெயர் பெற்று தனக்கென ஓரிடம் பெற்றவர்.

ஜோதிர்மயி

தமிழில் இதயத்திருடன்அறிமுகம். முதல் படம் நடிக்கும் முன்பே மலையாளத்தில் 16 படங்கள் முடித்தவர். தலைநகரம், பெரியார், சபரி, நான் அவனில்லை, வெடிகுண்டு முருகேசன் போல கலந்துகட்டி நடித்தார். இவருக்கு பெரிய இடம் கிட்ட வில்லை.

மல்லிகா

ஆட்டோகிராபில் அறிமுகமாகி ஆட்டோகிராப் மல்லிகா என்றழைக்கப்பட்டவர். திருப்பாச்சியில் விஜய் தங்கையானார். திருப்பதியில் சுமாரானவேடம் தோட்டா, சென்னையில் ஒரு நாள் என சிறு சிறு பங்களிப்புகள் பியாரி மொழியில் படமொன்றில் நடித்து தேசியவிருது பெற்று விட்டவர், வணிகரீதியாக வளரவில்லை..

அமலாபால்

மைனா படம் மூலம் புகழ் பெற்ற இவர் தமிழ், தெலுங்கு கன்னடம் என்று 35 படங்களில் நடித்தவர். விஜய்யுடன் தலைவா வில் நடித்த போது படத்தில் கேமராவுக்கு முன் விஜய்யுடனும் பின் இயக்குநர் விஜய்யுடன் டூயட் பாடியவர் . நிஜ க்ளைமாக்ஸில்இயக்குநர் விஜய்யை திருமணம் செய்து கொண்டு விட்டார்.

அனன்யா

நாடோடிகள் மூலம் அறிமுகமான அனன்யா தமிழ், தெலுங்கு, மலையாளம் என 35 படங்கள் முடித்தாலும் சீடன், எங்கேயும் எப்போதும், புலிவால், அதிதி, இரவும் பகலும் என்று நடித்தாலும் மேலேவர போராடும் நிலையில்தான் இருக்கிறார்.

பூர்ணா

படங்களில் பூர்ணா என்கிற பெயரில் நடிக்கும் ஷாம்னா காசிம் கன்னூர்க்காரர். முனியாண்டி விலங்கியல் 3 ஆம் ஆண்டு கொடைக்கானல், துரோகி, ஆடுபுலி, வித்தகன், தகராறு என்று நடித்தவர்,ஜெயம்ரவியுடன் அப்பா டக்கர் நடிக்கும் வரை மிதமான வெற்றிகளால் போராடினார். இவர் கையில் உள்ள படம் படம் பேசும் வாய்ப்பு.

அனுமோல்

பாலக்காட்டுக்காரரன அனுமோல் ஒரு பொறியியல் பட்டதாரி. தேர்ந்தெடுத்து நடிப்பவர் கண்ணுக்குள்ளே, ராமர் சூரன் படங்களைத் தொடர்ந்து திலகரில் நடித்துள்ளார். பாத்திரம்அறிந்துமட்டுமே நடிப்பவர்.

நஸ்ரியா

குறுகிய காலத்தில் பரபரப்பாகி திடுதிப்பென திருமணம் செய்து கொண்டவர் நஸ்ரியா. இந்த நஸ்ரியாவுக்கு அந்தக்கால நதியா போல வியர்க்க வைக்கும் விசிறிகள் பெருகினர். நேரம் இவரது முதல்படம். பிறகு தனுஷுடன் நய்யாண்டி, ஆர்யாவுடன் ராஜா ராணி, ஜெய்யுடன் திருமணம் எனும் நிக்காஹ் என்று நடித்தவர் பரபரப்பானார். ஆனால் மதிப்பு மார்க்கெட் இருக்கும் போதே திருமணம் செய்து கொண்டுவிட்டார்.

ஓவியா

வாய்ப்புகளைத் தேடி அடைவது ஒருரகம். வருவதை ஏற்பது இன்ொரு ரகம் என்றால் ஒவியா இரண்டாவது ரகம். களவாணியில் அறிமுகம் ஆனார் பிறகு முத்துக்கு முத்தாக, மன்மதன் அம்பு, மெரினா, கலகலப்பு யாமிருக்க பயமே என்று நடித்தார்.சரத்துடன் நடித்த சண்டமாருதம். இவருக்கு 12 வது படம். .அந்த அளவுக்கு வருவதை ஏற்றுக் கொண்டு நடித்தார். இப்போது அகராதி, சீனி என நடிக்கிறார்.

நயன்தாரா

ஐயாவில் சரத்துடன் அறிமுகமானாலும் பிறகு நடித்த ரஜினி படம் சந்திரமுகி, சூர்யாவுடன் கஜினி, விஜய்யுடன் சிவகாசி என்று நடித்தார். முக்கியத்துவம் இல்லாத பாத்திரங்கள் என்றாலும் வெற்றிப்பட ராசி வந்தது. பிறகு விஜய்யுடன் வில்லு, அஜித்துடன் பில்லா,ஆரம்பம், தனுஷுடன் யாரடிநீ மோகினி ,சூர்யாவுடன் மாஸ் என்று விஸ்வருப மெடுத்தார். அவ்வப்போது கிசுகிசுக்களில் காதல் வளர்த்து பரபரப்பும் விளம்பரம் தேடிக் கொண்டு இன்று 3 கோடி சம்பளம் வரை போனவர். இப்போதும் ஜீவா, சிம்பு, கார்த்தி என்று இணைந்து வருபவர் இன்றும் தமிழில் கைநிறைய படங்களுடன் இருக்கிறார்.

லட்சுமி மேனன்

கும்கியில் அறிமுகமானார். பிறகு இவர் காட்டில் மழை விக்ரம்பிரபுவுடன் இவன் வேறமாதிரி விஷாலுடன் பாண்டியநாடு, கார்த்தியுடன் கொம்பன், சசிகுமாருடன் சுந்தரபாண்டியன் என நடித்தவர் வெற்றிப் படங்கள் மூலம்தன் மதிப்பைக் கூட்டிக் கொண்டார். இப்போது அஜித் படம் உள்பட பல படங்கள் இவர்கையில்

ஸ்ரீதிவ்யா வருத்தப்படாத வாலிபர் சங்க வெற்றிக்குப் பின் வெள்ளக்காரதுரை நடித்து இன்று வேகமாக வளர்ந்து வருபவர்.

மேனகாவின் மகளான கீர்த்தி சுரேஷ் ரஜினிமுருகன், இது எனன மாயம், பாம்பு சட்டை என தமிழிலும் தென்னக மொழிகளிலும் நடித்து நம்பிக்கை தருகிறார்.இப்படி நம்பிக்கை தரும் நல்வரவுகள் சிலருண்டு.



மலையாள நடிகைகளில் நல்ல எதிர்பார்ப்பு இருந்தும் சரியாக பயன்படுத்திக் கொண்டு வளராதவர் சித்தாரா.சில படங்களுடன் ஆளே காணவில்லை..

சபாஷ் கண்ணன் வருவான், வேதம், என்று நடித்த திவ்யா உன்னிக்கு பாளையத்து அம்மனில் பக்தி சொட்டச் சொட்ட நடித்தும் திருப்புமுனை அமையவில்லை சரியான வெற்றி கிடைக்காதவர்கள், வெற்றிக்குப் போராடிவர்கள் வரிசையில் மம்தா மோகன்தாஸ், தேசியவிருது, பத்ம விருது பெற்றும் தமிழில் காலூன்ற முடியாமல் தவிக்கும் வித்யாபாலன், ,குடும்பப் பாங்காக நடித்தும் உயரம் தொட முடியாத நவ்யாநாயர் இந்த வரிசையில் நிற்கும் சிந்து மேனன், ரேஷ்மிமேனன், பார்வதிநாயர் போன்றவர்களும் குறிப்பிடத்தக்கவர்கள்.

மிட்டாய், திருப்பூர், அறியாதவன் புரியாதவன் போன்ற படங்களில் நடித்த உன்னிமாயாவும் உயரவில்லை.

என்மன வானில், நம்நாடு, திண்டுக்கல் சாரதி, மகிழ்ச்சி, என்று நடித்த கார்த்திகாவால் மேலே வர முடியவில்லை.

சூரியன் சட்டக் கல்லூரி, காவலன், புத்தனின் சிரிப்பு என்று நடித்த மித்ரா குரியன் கையில் நந்தனம் என்கிற ஒரு படம்தான் உள்ளது.

மலையாளத்தில் 20 படங்கள் நடித்தாலும் மனதோடு மழைக்காலம் நாயகி நித்யாதாஸுக்கு தமிழில் நல்ல காலம் அமையவில்லை.

தனக்கென தனியான இடமில்லாமல் தவிக்கும் இனியா இன்னும் போராடுகிறார்.தேர்ந்தெடுத்து நடித்தும் மணிரத்னத்தின் ஒகே கண்மணியில் நடித்தும் வெற்றியை கொடுக்க முடியாத நித்யாமேனன்.இன்னொருவர்.

இப்படி காவ்யாமாதவன், ஹிமாநாயர் என்று பலரும் போராடி வருகிறார்கள்.

சினிமாவில் அழகு திறமை, வரவேற்பு என்பவை வெற்றியை வைத்தே தீர்மானிக்கப் படுகின்றன. வெற்றிக்குப் பின்தான் மற்றவை. எனவே நடிகைகளின் படவெற்றிகள் என்கிற அளவு கோலின்படியே அவரவர்களுக்கான இடம் அமைகிறது. ஓரிடத்திலிருந்து போராடி மேலே வர முயற்சிகள் நடக்கின்றன. எப்படியாயினும் மலையாள வரவுகள். வந்து கொண்டேதான் இருக்கிறார்கள்..

இடையிடையே மும்பை வரவுகளின் படையெடுப்புகள் இருந்தாலும் அவர்களில் குஷ்பூ ,சிம்ரன்,ஜோதிகா போல சிலர் நிலைத்து நின்றாலும் மலையாள முகங்களுக்கான ஆதரவும் வரவேற்பும் இருந்துதான் வந்திருக்கிறது.இன்று தமிழ் நடிகைகளுக்கான வெவ்வேறு வகையான போட்டி அடுக்குகளில் மலையாள வரவுகள் களத்தில் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

மும்பை முகங்களை பளபள நிறத்துக்காக கவர்ச்சிக்காக ரசிக்கலாம் ஆனால் அவர்களை ரசிகர்கள் தம்மில் ஒருவராக நினைக்கத் தயங்குகிறார்கள். என்பதே உண்மை.




வசீகரமான நிறம், நமக்கு நெருக்கமான முகம், உடல் தோற்றம் இருப்பதால் மலையாள நடிகைகளை தமிழ் பாத்திரங்களில் அமர வைப்பது எளிது ஆகிறது. ஆயிரம் இருந்தாலும் மலையாள மரபில் இருப்பது தென்னக,திராவிட வேரல்லவா?

எனவே அவர்களது தோற்றம் காலமாற்றத்தால் இன்று பரவலாக ஏற்றுக் கொள்ளப் படுகிறது. என்பதை இதன் பின்னுள்ள உளவியல் உண்மையாகக் கூறுகிறார்கள்.