சிறு வயதில் அவருக்கு ஓர் ஆசை இருந்திருக்கிறது. படங்களில் வருவதுபோல், ஒரு பெட்டி நிறைய பணத்தோடு தன் அம்மாவை சந்திக்க வேண்டுமென. அந்த ஆசையை நிகழ்த்தி, தன் அம்மாவை சந்தோஷப்படுத்தினாரா எனத் தெரியவில்லை. நிச்சயம் உலகம் கொண்டாடும் ஒரு நடிகனாகத் தன் அம்மாவை சந்தோஷப்படுத்தியிருப்பார்.
ஒரு நடிகனின் வேலை இன்னொருவனாக மாறுவது அல்ல. அந்த கதாபாத்திரத்தில் மறைந்துள்ள நிஜத்தை வெளிக்கொண்டுவருவதுதான். அப்படி தான் நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் அதன் உண்மையை நமக்கு உணர்த்தியவர், நடிகர் இர்ஃபான் கான். பாலிவுட்டில், கடந்த 20 ஆண்டுகளில் இர்ஃபான் நிகழ்த்தியவை யாரும் நினைத்துப் பார்க்க முடியாதவை. ஆனால் அந்த இடத்தை அடைந்து, அதைச் செய்துமுடிக்க அவர் செய்த நீண்ட காத்திருப்பும், கடின உழைப்பும் ஏராளம்.
1967-ம் ஆண்டு ஜனவரி 7-ம் தேதி, ராஜஸ்தான் மாநிலத்தில் செல்வந்தர் வீட்டு மகனாகப் பிறந்தார் இர்ஃபான் கான். அவருடைய முழுப்பெயர் சஹாப்சாதே இர்ஃபான் அலி கான். இர்ஃபானுக்கு முதல் காதல், கிரிக்கெட் மீதுதான். கிரிக்கெட்டர் ஆகும் கனவோடு நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடி, ரன்களை விரட்டிக்கொண்டிருந்த அவருக்கு, ஒரு பெரிய தொடரில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அவருடைய பெற்றோர் அவரை விளையாட அனுமதிக்கவில்லை. அதனால் கிரிக்கெட் மீதான காதலைப் புதைத்துவிட்டு, படிப்பிலேயே கவனம் செலுத்தத் தொடங்கினார் இர்ஃபான்.
1984-ம் ஆண்டு நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமாவில் சேர்ந்து படிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. தனக்குள் ஒளிந்திருக்கும் திறமையான நடிகனை அங்குதான் அவர் கண்டுகொண்டார். ஒருபுறம் எம்.ஏ டிகிரியும் படித்துக்கொண்டு, இன்னொருபுறம் நடிப்புக் கல்வியும் பயின்ற இர்ஃபான், நாடகக் கலையில் டிப்ளமோவும் முடித்தார். அவர் மும்பைக்கு வந்த நாள்களில், ஏர் கன்டிஷனர் மெக்கானிக்காகவும் பணிபுரிந்தார். அவர் முதன்முறையாக ஏர் கன்டிஷனர் பழுதி நீக்கியது, பாலிவுட்டின் லெஜெண்ட் ராஜேஷ் கண்ணா வீட்டில்.
1988-ம் ஆண்டு கோர்ஸ் முடியும் தருவாயில், மீண்டும் ஒரு அற்புதமான வாய்ப்பு இர்ஃபானைத் தேடி வந்தது. ஆஸ்கரின் சிறந்த அயல்நாட்டு சினிமா பிரிவில், இந்தியா சார்பாகப் பரிந்துரைக்கப்பட்ட 'சலாம் பாம்பே" திரைப்படத்தில் நடிக்க இர்ஃபானை தேர்வுசெய்தார், படத்தின் இயக்குநர் மீரா நாயர். ஆனால், சில காரணங்களால் படத்தின் ஒரே ஒரு காட்சியில் மட்டும்தான் மீராவால் இர்ஃபானை பயன்படுத்த முடிந்தது. இர்ஃபானின் 6 அடி 1 அங்குலம் உயரமே அதற்கு காரணமாகவும் சொல்லப்பட்டது. மனமுடைந்த இர்ஃபான், பின்னர் தொலைக்காட்சித் தொடர்களில், சிறு வேடங்களில் நடிக்கத் தொடங்கினார்.
1995-ம் ஆண்டு, நேஷனல் ஸ்கூல் டிராமாவின் சக மாணவியும், எழுத்தாளருமான சுதாபா சிக்தாரை திருமணம் செய்துகொண்டார். இந்த இணையரின் காதலுக்கு, பபில் மற்றும் அயன் என இரு மகன்கள் உள்ளனர். கிட்டத்தட்ட 12 வருடங்கள் இப்படியே கடந்து சென்றன. ஒரு கட்டத்தில், நடிப்புத்தொழிலையே மொத்தமாக விட்டுவிடலாம் என எண்ணியவருக்கு, கடல் கடந்து ஒரு வாய்ப்பு வந்தது. பிரிட்டிஷ் இயக்குநரான ஆசிஃப் கபாடியா, தன்னுடைய 'தி வாரியர்' படத்தின் கதாநாயகன் வேடத்தை இர்ஃபானுக்குத் தந்தார். தனக்குக் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி, இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் தன் திறமையை நிரூபித்தார். பாலிவுட்டில் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்றில்லாமல், நல்ல நல்ல கதாபாத்திரங்களைத் தேர்வுசெய்து நடிக்க ஆரம்பித்தார் இர்ஃபான். பிரமாதமான நடிகனாகப் பரிணமித்தார்.
2005-ல் வெளியான `ராக்' திரைப்படம், இர்ஃபான் ஹீரோவாக நடித்த முதல் கமர்ஷியல் படமாக அமைந்தது. அவர் பெயரில் இருக்கும் கூடுதலான ஒரு `R'-க்கு காரணம், நியூமராலஜி அல்ல. அவ்வாறாக அழுத்தி தன் பெயரை உச்சரிப்பது, அவருக்குப் பிடிக்கும் என்பதுதான். 'மெட்ரோ', 'பான் சிங் டோமர்', 'தி லன்ச்பாக்ஸ்' என வித்தியாசமான கேரக்டர்கள் முலம் அனைவரையும் வியக்கவைத்தார். இந்திய சினிமாவைத் தாண்டி உலக அளவிலும் தனக்கான முத்திரையைப் பதித்தார் இர்ஃபான். 'ஸ்லம்டாக் மில்லினியர்', 'லைஃப் ஆஃப் பை', 'தி அமேஸிங் ஸ்பைடர்மேன்', 'இன்ஃபெர்னோ' என உலகம் முழுதும் தன் நடிப்புக்கு தனி ரசிகர்களை உருவாக்கினார். ஆஸ்கர் விழாவில் இவரைப் பார்த்த ஜூலியா ராபர்ட்ஸ் 'நான் உங்கள் ரசிகை' என சொல்லிச் சென்றிருக்கிறார்.
மாபெரும் ஹாலிவுட் இயக்குநரான கிறிஸ்டோபர் நோலன், தனது `இன்டர்ஸ்டெல்லார்' படத்தின் முக்கியமான வேடத்தில் நடிக்கவேண்டி இர்ஃபானை அணுகினார். ஆனால், அப்போது `லன்ச் பாக்ஸ்' மற்றும் `டி டே' கமிட்டாகியிருந்த காரணத்தினால் மறுத்துவிட்டார். `ஸ்லம்டாக் மில்லினியர்' மற்றும் `லைஃப் ஆஃப் பை' என இரண்டு ஆஸ்கர் திரைப்படங்களில் நடித்த முதல் இந்திய நடிகர் இர்ஃபான்தான். தன் நடிப்பிற்கான பல அங்கீகாரங்களைப் பெற்ற இர்ஃபான், இன்று நம்மோடு இல்லை. அவர் தாய் இறந்து மூன்றே நாள்களில் அவரும் பிரிந்துவிட்டார். சிறு வயதில் அவருக்கு ஓர் ஆசை இருந்திருக்கிறது. படங்களில் வருவதுபோல், ஒரு பெட்டி நிறைய பணத்தோடு தன் அம்மாவை சந்திக்க வேண்டுமென. அந்த ஆசையை நிகழ்த்தி தன் அம்மாவை சந்தோஷப்படுத்தினாரா எனத் தெரியவில்லை. நிச்சயம் உலகம் கொண்டாடும் ஒரு நடிகனாக உயர்ந்து, தன் அம்மாவை சந்தோஷப்படுத்தியிருப்பார்.
1993-ம் ஆண்டு `ஜுராசிக் பார்க்' வெளியானபோது, அதற்கு டிக்கெட் எடுக்க காசில்லாமல் இருந்த இர்ஃபான், பின்னாளில் `ஜுராசிக் வேர்ல்டு' படத்தில் நடித்தார். அவர் ஆறடி உயரத்திற்குக் காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதற்காக, அவர் நிராகரிப்புக்கும் ஆளாகியிருக்கலாம். ஆனால், புகழின் இந்த உயரத்தை அடைய, அவர் மட்டுமே காரணம். அவர் கடின உழைப்பும் விடா முயற்சியுமே காரணம். அதில் அவரை யாராலும் நிராகரிக்க முடியாது. காலம் கடந்து நிற்கக்கூடிய பெரும் கலைஞன் இர்ஃபான்.