Wednesday, 15 March 2017

தமிழ் சினிமாவில் வறண்டு போன நகைச்சுவை!

நகைச்சுவைப் படங்களுக்கு நம் தமிழ் மக்களிடையே எப்பொழுதுமே வரவேற்பு உண்டு. ஆனால் கடந்த ஓரிரு ஆண்டுகளாக மிகப் பெரிய வெற்றி பெற்ற நகைச்சுவைப் படங்கள் என்று எதனையும் கூறிவிட முடியாது. காரணம் அனைவரும் அறிந்ததே.
 
 
 
 அவ்வளவு நல்ல நகைச்சுவைப் படங்கள் எதுவும் வரவில்லை என்பது ஒரு காரணமாக இருந்தாலும், வெளியான ஒருசில நல்ல நகைச்சுவைப் படங்களும் மக்களை திரையரங்கிற்கு ஈர்க்கவில்லை என்பதே உண்மை. நம் மக்கள் நகைச்சுவைப் படப் பிரியர்கள்தான் என்றாலும் அவர்கள் நம்பி திரையரங்கிற்குச் செல்வதற்கு ஒரு நல்ல நகைச்சுவையாளர் தேவைப்படுகிறார். இன்றைய சூழலில் அப்படி யாரும் இல்லை என்பதே கசப்பான உண்மை.

ஒரு காலத்தில் கவுண்டமணி-செந்தில் காம்பினேஷன் இருந்தாலே எதைப் பற்றியும் யோசிக்காமல் திரையரங்கிற்கும் செல்லும் வழக்கம் இருந்தது. அதே போல்தான் விவேக்கிற்கும், வடிவேலுவிற்கும். பின் சிறிது காலம் சந்தானம். கவுண்டமணி செந்தில் ஓய்வு பெறும் சூழலில் எப்படி வடிவேலு மற்றும் விவேக் அவர்கள் இடத்தை ஓரளவிற்கு நிரப்ப முயற்சி செய்தார்களோ அதே போல வடிவேலு, விவேக்கின் படங்கள் குறையத் தொடங்கும் நேரத்தில் சந்தானம் அதனை நிவர்த்தி செய்தார். ஆனால் சந்தானத்திற்குப் பிறகு அவ்வளவு பெரிய பொறுப்பை சுமக்கும் அளவுக்கு வேறு நகைச்சுவையாளர்கள் தற்பொழுது இல்லை என்பது வருத்தத்திற்குரிய ஒன்றே. 
 
 மேற்கூறிய அனைவருமே நகைச்சுவையாளராகத் தொடராததற்கு வெவ்வேறு காரணங்கள். கவுண்டருக்கு முதுமை. வடிவேலுவுக்கு சிலபல அரசியல் காரணங்கள். விவேக்கிற்கு குடும்ப வாழ்க்கை... சந்தானத்திற்கு கதை நாயகன் ஆசை. இவர்கள் அனைவருமே ஒவ்வொரு காலகட்டத்தில் சம்பளத்தொகையில் தயாரிப்பாளர்களை அலற வைத்தவர்கள்தான். கவுண்டர் 90 களிலேயே 40 லட்சம் வரை வாங்கியவர். கதாநாயகனுக்கு இணையான முக்கியத்துவம் அவருக்குத் தரப்பட்டது. கவுண்டர் அதற்கு ஒர்த்தானவர். அவரால்தான் பட படங்கள் ஓடின, என்கிறார்கள் கவுண்டரின் திரையுலக ரசிகர்கள். வடிவேலுவின் சம்பளத்தைக் கேட்டு அலறி அடித்துக்கொண்டு ஓடிய இயக்குநர்களையும் தயாரிப்பாளர்களும் நாம் நன்கறிவோம். 
 
இவருக்கு என்னால் சம்பளம் கொடுக்க முடியவில்லை என சுந்தர்.சி ஓப்பனாக பேட்டியும் கொடுத்தார்.
 
மீட்டர் வட்டி, ஸ்பீடு வட்டிகளைப் போல் நாள் சம்பளம், ஒவ்வொரு ட்ராக்கிற்கும் சம்பளம் என நகைச்சுவையாளர்களின் சம்பளம் எங்கெங்கோ எகிறியிருந்தது. சந்தானம் காமெடியனாக நடித்த பொழுது அவருக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் ஒரு கால்ஷீட்டிற்கு பதினைந்து லட்சம் (அவ்வ்). மேலும் அதிகரித்திருக்கலாம். சொல்லப்போனால் தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர்களைக் காட்டிலும் இவர்களின் ஊதியம் அதிகம். 
 
வருமான உயர்வு என்பது மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சி அளிக்கக் கூடிய ஒரு செய்தி. ஆனால் ஒரு ஆய்வு என்ன சொல்கிறதென்றால் ஒருவனுடைய மாத வருமானம் 48 லட்சத்தைத் தாண்டும் பொழுது, அதன் பின் வருகிற வருமான உயர்வு அவனுக்கு மகிழ்ச்சியை அளிக்காது என்கிறது. (48 லட்சமா? 30 ரூவாடா... 30 ரூவா குடுத்தா 3 நாள் கண்ணு முழிச்சி வேலை செய்வேண்டா என்ற வசனம் உங்கள் மனதில் வந்து போனால் கம்பெனி பொறுப்பல்ல). 
 
வருமானத் தேவை பூர்த்தியாகும் பொழுது பிறகு அதை விட பவர்ஃபுல்லான பேர், புகழ், இடம், பதவி, முன்னிலை போன்றவற்றிற்கு மனது ஆசைப்படுகிறது. ஒரு அளவிற்கு மேல் மக்களிடத்தில் வரவேற்பு எகிறும்போது அவர்களின் குணாதியங்களும் மாறிப்போகின்றன. புகழ் போதை கண்களை மறைக்கத் துவங்குகிறது. நம்மை எதற்காக மக்கள் விரும்புகிறார்கள் என்பதை மறந்து நகைச்சுவையாளர்கள் மனது கதை நாயகன் இடத்தைக் குறி வைக்கிறது 
 
நகைச்சுவையாளர்கள் கதாநாயகன் ஆகக் கூடாது என்பது என்னுடைய கூற்று அல்ல. அதற்கான கதை அமையும் போது நடிப்பதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் மக்கள் அவர்களைக் ஒரு நகைச்சுவையாளராகத்தான் அதிகம் ரசிக்கிறார்களே தவிர ஒரு கதையின் நாய்கனாக அல்ல. மேற்கூறிய எந்த நகைச்சுவையாளரும் அதற்கு விதிவிலக்கல்ல. கவுண்டர் முதல் சந்தானம் வரை அத்தனை பேருக்கும் அதே ஆசை இருந்தது. நடித்தனர். ஆனால் அந்த ஆசையிலிருந்து மீண்டு தன்னிலை திரும்புவதில்தான் இருக்கிறது சிக்கல். கவுண்டருக்கும் சரி வடிவேலுவுக்கும் சரி கதாநாயகனாக நடித்த பின்னர் மற்ற கதாநாயகர்களுடன் இணைந்து மீண்டும் நகைச்சுவையாளராக நடிக்க சிக்கல் இருக்கவில்லை. ஆனால் சந்தானத்திற்கு அது மிகவும் சிரமமே... 
 
இப்போது நம் பதிவு சந்தானத்தையே ஏன் குறிவைக்கிறது என்றால், இவ்வளவு பிச்சனைகளும் அவர் ஒருவரால்தான். அவர் எப்பொழுதும் போல நடித்துக் கொண்டிருந்தால் இப்படி புலம்புவதற்கு வேலையே இருந்திருக்காது. இப்பொழுது இருப்பவர்களில் பெரிய காமெடியன் யார் என்று பார்த்தல் சூரிதான் முதலில் ஞாபகம் வருகிறார் (நிலமை அப்டி ஆகிப்போச்சு).
 
 அவருக்கு அடுத்தபடியாக சதீஷ் (கஷ்டகாலம்) இதற்கடுத்தாற்போல் கருணாகரன், யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், சாமிநாதன் போன்ற பார்ட் டைம் காமெடியர்கள் ராஜ்ஜியம் தான் இப்பொழுது தமிழ் சினிமாவில். பத்தில் ஒரு படத்தில்தான் இவர்களின் காமெடி எடுபடுகிறது. 
 
மேலும் நகைச்சுவை வறட்சி என நம்மை உணர வைப்பதற்கு தமிழ் சினிமாவின் பரிணாம வளர்ச்சியும் புது இயக்குநர்களின் வருகையும் கூட ஒரு முக்கியக் காரணம் என்றே கூறலாம். மேலும் இப்பொழுது வரும் நகைச்சுவைகள் வெறும் வசனங்களை மட்டுமே நம்பியிருக்கின்றன. வெறும் வசனங்களைத் தாண்டி, காட்சி அமைப்புகளும் நகைச்சுவையாளர்களின் உடல் மொழிகளுமே ஒரு நகைச்சுவையின் வெற்றிக்கு மிக முக்கியம். அது தற்பொழுது இருக்கும் நகைச்சுவையாளர்களிடம் மிகவும் குறைவு.
 
 இளம் இயக்குநர்கள் அயல்நாட்டுப் படங்களின்பால் ஈர்க்கப்பட்டு, அவர்கள் படங்களில் black comedy வகைகளையே பயன்படுத்துகின்றனர். இதுபோன்ற black comedy கள் பெரும்பாலும் திரையரங்கில் பார்ப்பவர்களை மட்டுமே சிரிக்க வைக்கும். அதுவும் ஒரே ஒரு முறை. நமக்கு ஆதி முதல் இன்றுவரை பழக்கப்பட்டதும் விரும்புவதும் உடல் மொழிகளை அதிகம் உபயோகிக்கும் Slapstick வகை நகைச்சுவைகளே. நகைச்சுவைப் படங்களுக்கென தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களே இன்று தடுமாறி நிற்கின்றனர். 
 
கவுண்டர், வடிவேலு மற்றும் சந்தானம் இவர்கள் அனைவருடைய அதிகபட்ச நகைச்சுவையை வெளிக்கொணர்ந்தவர் சுந்தர்.சி. அவர் நிலமையே இப்பொழுது டண்டனக்காவாகி இருக்கிறது. 
 
சூரியை வைத்துக்கொண்டு சுராஜ் என்னசெய்வதென்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார். ரோபோ சங்கர், யோகி பாபு போன்றவர்களே தற்பொழுது ஓரளவு நம்பிக்கையைக் கொடுக்கிறார்கள். 
 
சந்தானத்தை தெரிவு செய்தவர்களின் அடுத்த தெரிவு தற்பொழுது ரோபோ ஷங்கர் அல்லது யோகி பாபு பக்கம் லேசாகத் திரும்பியிருக்கிறது. ஓரளவு திறமையுள்ளவர்களும் கூட. இவர்வகளை வைத்து எப்படியாவது தப்பித்துக்கொண்டால் தான் உண்டு. வெறும் பகுதிநேர பந்துவீச்சாளர்களை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு எப்படி ஒரு ஆட்டத்தில் ஜெயிப்பது கடினமோ அதேபோலத்தான் நகைச்சுவைப் படங்களில் ஜெயிக்கவும் பகுதிநேர நகைச்சுவையாளர்கள் மட்டுமின்றி மெயில் தல ஒன்று தேவைப்படுகிறது. விரைவில் ஒருவரை உருவாக்குங்கள்!

அரசியல்வாதிகளையே மிஞ்சிய விஷால்

வரப்போகும் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை முன்னிட்டு, அரசியல்வாதிகளையே மிஞ்சிவிட்டார் விஷால் என்று  முணுமுணுக்கின்றனர் கோடம்பாக்கத்தினர்.
vishal 
நடிகர் சங்கத்தைக் காப்பாற்றுவேன் என்று கூறி நடிகர் சங்கத்தின் பொருளாளராக ஆனார் விஷால். ஓரிரு போராட்டங்கள்  தவிர்த்து இதுவரை அவர் எதுவுமே செய்யவில்லை. குறிப்பாக, ‘சுச்சி லீக்ஸ்’ விஷயத்தில் நடிகர் – நடிகைகளின் பெயர்  நாறியபோது கூட, நடிகர் சங்கம் சார்பில் ஒரு புகார் கூட அளிக்கவில்லை. அவ்வளவு ஏன், அதைப்பற்றி ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. ஆனால், தன்னுடைய தாயார் பெயரில் உள்ள அறக்கட்டளை மூலமாக ‘விஷால் அதைச் செய்தார்,  இதைச் செய்தார்’ என அவருடைய பி.ஆர்.ஓ. மூலம் செய்தி அனுப்பி தனிமனித பப்ளிசிட்டி தேடிக் கொண்டார்.
 
இந்த நிலையில், அடுத்ததாக தயாரிப்பாளர் சங்கத்தையும் காப்பாற்றுவேன் என்று கூறி களமிறங்கியிருக்கிறார். நடைபெறப்  போகும் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் விஷால், வழக்கம்போல் வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார். அத்துடன்,  எந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தாலும், அழைப்பு இல்லாமலேயே வாலண்டியராகக் கலந்து கொள்கிறார்.  இன்னும் இரண்டு வருடங்களுக்கு இப்படித்தான் எல்லா பட விழாக்களிலும் கலந்து கொள்வேன் என்று அவரே விளக்கமும்  கொடுக்கிறார்.
 
பொதுவாக, அரசியல்வாதிகள் தான் தேர்தல் நேரத்தில் தொகுதிப் பக்கம் சென்று நல்லது செய்வது போல் நடிப்பார்கள். தேர்தல் முடிந்ததும் அந்தப் பக்கமே வரமாட்டார்கள். 
 
ஜெயித்தவர்களும் சரி, தோற்றவர்களும் சரி… இந்த விஷயத்தில் இருவருமே  இப்படித்தான் நடந்து கொள்வர். அதேபோலத்தான் விஷாலும் நடந்து கொள்கிறார். தன்னுடைய படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளிலேயே கலந்து கொள்ளாமல் டேக்கா கொடுக்கும் சினிமா நடிகர்களுக்கு மத்தியில், இதுவரை எத்தனையோ விழாக்களுக்கு அழைத்தும் வராத விஷால்,அழைக்காமலேயே வருவது எல்லாமே ஓட்டுக்காகத்தான். அரசியல்வாதிகளையே  இவர் மிஞ்சிவிட்டார் என்கின்றனர் கோடம்பாக்கத்தில் இருப்பவர்கள்.