கே.பாக்யராஜ் நடிகர், இயக்குநர், பத்திரிகையாளர்... எனப் பன்முகத்தன்மை கொண்ட மிகச் சிறந்த ஆளுமை. சீரியஸான பல விஷயங்களை இயல்பான நகைச்சுவையுடன் சொல்வது இவரது தனித்தன்மை. இந்தியாவில் விரல்விட்டு எண்ணக்கூடிய சிறந்த திரைக்கதையாசிரியர்களில் இவரும் ஒருவர். இவரது திரைக்கதைக்காகவே பல படங்கள் இந்தியில் வெற்றி பெற்றன. இவர் தனக்கு ஸ்ட்ரெஸ் எதனால் எற்படும், அதற்கு அவர் என்னவிதமாக ரிலீஃப் தேடுவார் என்பதைப் பற்றி விவரிக்கிறார் இங்கே...
''குழந்தையாக இருந்தவங்க குழந்தையாகவே இருந்துட்டோம்னா, நமக்கு பிரச்னையில்லை. வளர ஆரம்பிச்சிட்டாலே, 'எனக்கு இது வேணும் எனக்கு அது வேணும்'னு கேட்க ஆரம்பிச்சிடுவோம். அங்கேயே நமக்கு ஸ்ட்ரெஸ் ஆரம்பிச்சிடுது.
நாம் கேட்டதை நம்ம அப்பா வாங்கித் தருவாரா, அம்மா ஏதாவது சொல்வாங்களா, வாத்தியார் எதாவது சொல்லுவாரோனு நினைக்க ஆரம்பிச்சோம் பாருங்க. அப்பவே டென்ஷன் ஆரம்பிச்சிடுச்சு. சில பேர் அது கிடைக்கலேன்னாலும் ஸ்போர்ட்டிவா எடுத்துக்கிட்டு, 'சரி ஓகே'னு போயிடுவாங்க. சில பேர் அதையே நினைச்சுக்கிட்டு இருப்பாங்க.
நான் ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆக இருந்தேன்னா, `ஒண்ணு நடந்துடுச்சுன்னா அதையே ஏன் நெனைச்சுக்கிட்டு இருக்கே. அப்படி இருக்கிறதாலா என்னாகப் போகுது? அதுல இருந்து வெளியில வர்றதுக்கு என்ன வழினு யோசி’னு சொல்லுவாங்க.
சின்ன வயசுல சினிமாவுக்குப் போகக் கூடாதுனு வீட்டுல சொல்லுவாங்க. ஆறு மணி ஷோவுக்குப் போயிட்டு வந்தாலே, ராத்திரி மணி பத்தரை ஆகிடும். ஆனா, அதையும் மீறி, அடிக்கடி நைட் ஷோ போயிடுவேன்.
சின்ன வயசுல சினிமாவுக்குப் போகக் கூடாதுனு வீட்டுல சொல்லுவாங்க. ஆறு மணி ஷோவுக்குப் போயிட்டு வந்தாலே, ராத்திரி மணி பத்தரை ஆகிடும். ஆனா, அதையும் மீறி, அடிக்கடி நைட் ஷோ போயிடுவேன்.
படம்விட்டு வீட்டுக்கு வர்றப்போ மெயின் ரோடு வரைக்கும் லைட் இருக்கும். அங்கேயிருந்து கோவை பாரதிபுரத்துல இருக்கிற எங்க வீட்டுக்குப் போகணும்னா அங்க லைட் இருக்காது. கும்முனு இருட்டா இருக்கும். ஒண்ணும் தெரியாது. பேய், பூதம்னு சொல்லிவெச்சிருப்பாங்க, இல்லையா. ரொம்ப பயமா இருக்கும். அப்போ அது பெரும் டென்ஷனாக இருக்கும்.
அதுக்காக அங்கேயேவா இருக்க முடியும்? ஏதாச்சும் பாட்டு பாடிக்கிட்டுப் போய் சேர்ந்துடுவோம்னு பாடிக்கிட்டே வீட்டுக்குப் போயிடுவேன்.
அதுக்காக அங்கேயேவா இருக்க முடியும்? ஏதாச்சும் பாட்டு பாடிக்கிட்டுப் போய் சேர்ந்துடுவோம்னு பாடிக்கிட்டே வீட்டுக்குப் போயிடுவேன்.
சினிமாவுக்கு வந்ததுக்கப்புறம் அசிஸ்டென்ட் டைரக்டரா வேலை பார்க்கும்போது ஏற்படுற டென்ஷன்... அது ஒரு பக்கம் இருந்தாலும், புரொட்யூஸர் கிடைக்கறது இருக்கு பாருங்க... அதுதான் பெரிய டென்ஷன்.
நாம சொல்ற கதை தயாரிப்பாளருக்குப் பிடிக்கணும். தயாரிப்பாளருக்குப் பிடிச்சாலும், அடுத்து ஹீரோவுக்குப் பிடிக்கணும். இப்போ ரெண்டு நாளைக்கு முன்னாடிகூட 'அருவி' படம் பார்த்தேன். அப்படிப்பட்ட வித்தியாசமான கதையை ஏத்துக்கிட்டு தயாரிப்பாளர் தயாரிக்கிறதுதான் பெரிய விஷயம்.
என் விஷயத்துல நான் `கிழக்கே போகும் ரயில்’ படத்தில் வேலை பார்க்கும்போதே, எனக்கு படம் இயக்க வாய்ப்பு வந்துச்சு. நான்தான் இன்னும் கொஞ்சம் கத்துக்கிட்டு பண்ணலாம்னு தள்ளிப்போட்டேன். அதுக்கப்புறம் எங்க டைரக்டர் மூணாவது படம் ஆரம்பிச்சிட்டார். அப்புறம் நாலாவது படம் `புதிய வார்ப்புகள்’ல என்னையே ஹீரோவாக்கிட்டார்.
நான் தனியா படம் பண்ணும்போது டென்ஷன் இல்லாமதான் 'சுவரில்லாத சித்திரங்கள்' படத்தை இயக்கினேன். இளையராஜாவின் அறிமுகம் இருந்தாலும், கங்கை அமரனே போதும்னு ரொம்ப ரிலாக்ஸாகத்தான் பண்ணினேன். அதனால எனக்கு யாருகிட்ட கதை சொல்லி ஓ.கே வாங்கணும்கிற டென்ஷனும் இல்லை. படம் டைரக்ட் பண்ணும்போதும் சிரமம் இல்லை. ஆனால், அந்தப் படம் வெளிவந்து வெற்றி பெற்ற பிறகுதான் எனக்குக் கொஞ்சம் டென்ஷன் ஏற்பட்டுச்சு.
அதன் பிறகு நான் இயக்கிய 'ஒருகை ஓசை', 'மௌன கீதங்கள்', 'இன்று போய் நாளை வா', 'விடியும் வரை காத்திரு'னு தொடர்ந்து வெற்றி பெறவும்தான் டென்ஷனானேன். அதுக்கப்புறம், 'அந்த 7 நாட்கள்' படம் பண்ணும்போதுதான் டென்ஷன் குறைய ஆரம்பிச்சுது.
'முந்தானை முடிச்சு' நாங்க எதிர்பார்த்ததைவிட மிகப் பெரிய வெற்றி. அது ஒரு நூறு நாள் படமாகத்தானிருக்கும்னு நெனைச்சோம். ஆனா, ஊரு ஊருக்கு குடும்பங்கள் வண்டி கட்டிக்கொண்டு போனதைப் பார்த்தபோது ரொம்ப சந்தோஷமாகவும் டென்ஷனாகவும் இருந்துச்சு..
ஒவ்வொரு முறையும் கடைசியா வந்த எனது படத்தை எனது அடுத்த படம் தாண்டிடணும்னு ஒரு பெரிய ரிஸ்க் ஏற்பட்டுச்சு. அதுக்காக கதை பண்ணும்போது காட்சிகள் சிறப்பா வரணும்ங்கிறதுக்காக மண்டைய உடைச்சிக்குவோம். 'மற்றவங்க சிரிக்கிறதுக்காக நாம கதவைச் சாத்திக்கிட்டு அழவேண்டி இருக்கு' என்று என் அசிஸ்டென்ட்களிடம் வேடிக்கையாகச் சொல்வேன்.
நான் பாரதிராஜா சார்கிட்ட இருந்து வந்ததால, இன்னிக்கு ஷூட்டிங்குல என்ன எடுக்கணும்னு மனசுலயே ஒரு கணக்குப் போட்டு ஷூட் பண்ண ஆரம்பிச்சிடுவேன். டயலாக்கூட ஸ்பாட்டுல போய்தான் எழுதுவேன்.
'தூறல் நின்னுப் போச்சு' படத்துல சுலக்ஷனா வீட்டைவிட்டு ஓடிப் போய்விட்டு திரும்ப வீட்டுக்கு வந்ததும், சுலக்ஷனாவோட அப்பா செந்தாமரை கேட்பார். 'ஏண்டி... அவ வாசப்படி மட்டும்தான் தாண்டினாளா, இல்லை வயித்தையும் நிரப்பிக்கிட்டு வந்துட்டாளானு கேளுடி'ம்பார்.
சுலக்ஷனாவும் அவங்க அம்மாவும், 'அய்யய்யோ'னு அப்படியே ஷாக் ஆகிடுவாங்க. 'ஏங்க அவ நம்ம பொண்ணுங்க’னு சொல்லி டயலாக் பேசுவார். சுலக்ஷனா போயி எரிகிற கொள்ளிக்கட்டையை எடுத்து அது மேல நின்னுடுவாங்க.
இப்படி எல்லா சீனும் எடுத்துக்கிட்டு இருந்தேன். ஆனா, இதுக்குப் பதில் தர்ற மாதிரி செந்தாமரை பேசுற டயலாக் மட்டும் தோணவே இல்லை. நானும் இங்கிட்டு அங்கிட்டு நடந்துக்கிட்டுப் போறேன். டயலாக் தோணவே இல்ல. சிகரெட்டா பத்தவெச்சுக்கிட்டு இருக்கேன். எதுவும் தோணவே இல்லை.
கடைசியில, ஷாட் ரெடி பண்ணச் சொல்லிட்டேன். லைட்டிங் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. கவுன்ட்டர் டயலாக் சொல்லணும்.. 'யாருடி பைத்தியக்காரியா இருக்கே... அத்துக்கிட்டுப்போற மாடு தெற்கு வடக்குனு பார்த்துக்கிட்டா ஓடும்?'னு டயலாக் வெச்சேன். எனக்கும் பெரிய சேட்டிஸ்பேக்ஷன். யூனிட்லயும் பாராட்டுனாங்க. தியேட்டர்லயும் அந்த டயலாக் கிளாப்ஸ் வாங்கிச்சு.
எங்களை மாதிரி சினிமாக்காரங்களுக்கு நாம கிரியேட் பண்ற விஷயம் சரியா ஜனங்களுக்குப் போய்ச் சேரணும்னு ஒரு ஸ்ட்ரெஸ் இருந்துகிட்டேதான் இருக்கும்" என்றவரிடம், "உங்களுடைய ஸ்ட்ரெஸ் ரிலீஃப்க்கு என்ன பண்ணுவீங்க?" எனக் கேட்டோம்.
''ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொண்ணு பிடிக்கும்.ஒரு சிலருக்கு கார்ட்ஸ் ஆடுறது பிடிக்கும். ஒரு சிலருக்கு ரேஸுக்குப் போறது பிடிக்கும். எனக்கு புத்தகம் படிக்கிறது ரொம்பப் பிடிக்கும். புத்தகப் புழுவாக இருப்பேன். எப்போ வெளியூர் போனாலும் சூட்கேஸ்ல புக்ஸ் எடுத்துக்கிட்டுப் போவேன்.
அப்புறம் `பாக்யா’ பத்திரிகைக்காக வித்தியாசமான நிறைய புத்தகங்கள் படிப்பேன். அந்த அனுபவம் என் வாழ்க்கைக்கும் பயன்படுது" என்றவரிடம், 'நடிகர், இயக்குநர், பத்திரிகையாளர், இயக்குநர் பயிற்சிக் கல்லூரி விரிவுரையாளர் எனப் பலவித வேலைகளை எப்படி பேனல்ன்ஸ் பண்ணிக்கிறீங்க?' என்று கேட்டோம்.
நமக்குப் பிடிச்ச வேலையை லயிச்சு செய்யும்போது நமக்கு அலுப்பே வராது. நேரம் போறதே தெரியாது. வேலையை வேலையா நெனைச்சா ஸ்ட்ரெஸ் தானா வந்துடும். சினிமாவைப் பொறுத்தவரை அதை நான் வேலையா நெனைக்கிறதில்லை'' என்று கூறி விடைகொடுத்தார்.