காலையில் பாடசாலைக்கு தயாராகிக் கொண்டிருந்த ஆசிரியரான தந்தை , தனது மூன்று வயது மகன் விளையாடிக்கொண்டே தன் எண்ணத்திற்கு ஏதோ ஒரு பாடலையும் பாடிக்கொண்டிருப்பதை உற்றுக் கவனித்தார்.
பாடலின் வரியையும் அதன் மெட்டையும் அட்ஷரம் பிசகாமல் மகன் பாடிக்கொண்டிருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்த தந்தை , மனைவியை அழைத்து அந்த ஆச்சரியத்தைக் காண்பித்து மகிழ்ந்தார். மகனோ தன் போக்கில் பாடலை முழுமையாகப் பாடி முடித்தான். தனது பேரபிமானத்திற்குரிய மகாகவி பாரதியின் பாடலை மகன் பாடியதால் தந்தையார் பேருவகையடைந்தார். தனது அண்ணனைப் போல ஒரு இசைக்கலைஞனாக வருவான் என்று மனதில் நினைத்துக் கொண்டார்.
" சிந்துநதியின்மிசை நிலவினிலே " என்ற அந்த.பாரதிபாடலைப் பாடிய அந்த குழந்தை வேறுயாருமல்ல, இந்தக்கட்டுரையாளர் தான்! இந்தப்பாடலின் வரிகளை இன்று கேட்டாலும் சொல்ல முடியும் என்று சொல்லுமளவுக்கு மனதில் பதிந்துவிட்ட பாடல் அது.
இந்த சம்பவம் சாதாரணமானது என்றாலும் தமிழ் சினிமாஇசையின் மெல்லிசை மலர்ந்து கொண்டிருந்த காலமொன்றைச் சேர்ந்த இனிய பாடல் என்பதை நினைவுறுத்தும் பொருட்டு சொல்கிறேன்.மூன்று வயது பையன் ஒருவன் பாடலின் பொருள் தெரிந்தா பாடியிருப்பான்? பாடலின் இசைதான்அதை சாத்தியமாக்கியிருக்கும் என்பதைச் சொல்லித்தெரிய வேண்டிய அவசியம் இங்கில்லை!
நமது வாழ்க்கையோட்டத்தில் மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தியினரின் பாடல்கள் விதையாகி , செழித்து வளர்ந்தது இவ்விதமே.
கடந்து போன காலங்களை நினைக்கையில் இதயத்துடன் பிணைந்த பாடல்களின் வாசம் நம் நெஞ்சங்களை நிறைக்கும். பிஞ்சுமனங்களில் வேரூன்றி, பற்றிப்படர்ந்து , நெஞ்சின் அடியாழத்தின் உள்ளுறைகளில் புதைந்த பாடல்களை நம்மால் இலகுவாக மறக்கமுடிவதில்லை.
Music and Rythm find their way in to the secret places of the Soul - என்பார் பிளேட்டோ.
கடந்து கால நினைவுகளை மீட்டிப்பார்ப்பதற்கு இசை ஒரு இலகுவான சாதனம். பழைய பாடல்களைக் கேட்கும் போது எந்தெந்தப்பாடல்களைக் எங்கெல்லாம் கேட்டோம், எந்தச் சூழ்நிலையில் அவற்றைக்கேட்டோம் என்பதெல்லாம் விரல் சொடுக்கில் வந்து விழுந்துவிடுகின்றன. வாழ்வின் மகிழ்ச்சிகரமான சம்பவங்களிலும் , துக்ககரமான சம்பவங்களிலும் இசை கலந்தே இருக்கிறது.!
நினைவுகளின் ஓடையாக இசை விளங்குகிறது. இசையுடன் தான் நாம் வளர்ந்து வந்திருக்கின்றோம். ஒவ்வொரு பாடலும் நம்முடன் உரையாடல்களை நிகழ்த்தியே வந்துள்ளது. இசையின் முருகு இளம்வயது பருவத்தில் நம்மை ஆட்கொள்கிறது. இனிய வாத்திய இசையுடன் அதை பருகும் போது மனம் எழிலடைகிறது. உணர்ச்சி நிறைந்த இசை உள்ளத்தில் சிறு பொறியைத் தோற்றுவித்து நுண்ணறிவில் சுவாலையை ஏற்படுத்துகிறது இதனால் எழும் அறிவார்வத்திற்கு உயிர் கொடுக்கிறது.
வானலைகளில் நீந்தி ,காற்றுவெளியில் மிதக்கும் இசையலைகள் மனிதனின் காதுகளில் புகுந்து அவனோடு ரகசியம் பேசவும் , பலவித கற்பனைகளையும் ,உணர்வுகளையும் கிளர்த்துகின்றன.
காரண காரியங்கள் தெரியாமல் , காலகாலமாய் நாம் இசையைக் கேட்டு ரசித்து மகிழ்ந்திருக்கின்றோம். பிறந்து வளர்ந்த காலம் தொட்டு இசையில் லயித்து வந்த நாம் எங்களுக்குப் பழக்கமான பாடல்களைக் கொண்டாடியும் வந்திருக்கின்றோம். இன்பம் தரும் பல இசைவகைகளின் சுமைதாங்கியாகவும் நாம் இருக்கின்றோம்.
தமிழ் மக்கள் வாழ்வில் இரண்டறக் கலந்த பாடல்கள் என்றால் அது திரையிசைப்பாடல்களே ! ஒலிப்பதிவு செய்யப்பட்ட இப்பாடல்கள் மீண்டும், மீண்டும் கேட்க வழிவகுத்தன.
வாழையடி வாழையாய் வந்த ராகங்களில் அமைந்த பலவிதமான பாடல் வகைகள் ,அவற்றில் மெல்லியதாய் நுழைந்து , நமக்கு அறிமுகமில்லாத இசைவகைகளையும் , வாத்தியங்களையும் இசையமைப்பாளர்கள் கலாபூர்வமாக இணைத்து தந்த பாடல்களால் நம் உணர்வுகள் கிளரப்பட்டிருக்கின்றன.
இவ்விதம் தமிழ் திரையிசைக்கு ஜீவசத்துமிக்க பாடல்களைத்தந்த முன்னோடிகளில் முதன்மையானவர்கள் மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இரட்டையர்கள்!
மரபு வழியின் தடம் பற்றி திரையிசையின் மெல்லிசையில் பரவசமும் , புதுமையும் ,உணர்ச்சி வெளிப்பாட்டில் மிகச் சிறந்த பாடல்களையும் தந்து மிக உயர்ந்த இடத்திற்கு உயர்த்தியவர்கள் மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி.
பழமைக்கும் புதுமைக்கும் நிகழ்ந்த போராட்டத்தில் புதுமையின் கை ஒங்க வைத்த பெருமை இவர்களையே சேரும். படத்திற்குப் படம் இனிமையான பாடல்களைப் பொழிந்தார்கள்.
அவர்கள் தந்த பாடல்களில் தான் எத்தனை உணர்வுகள் , எத்தனை பாவங்கள்..!
நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளம் தென்றலே- வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே....
மலர்ந்தும் மலராத பாதி மலர் போல மலரும் விழிவண்ணமே - வந்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக விளைந்த கலையன்னமே
இந்தப்பாடல் வரிகளை வாசிக்கும் போதே எத்தனை பரவசம் ஏற்படுகிறது. பாடலின் ஒலிநயம் உள்ளக்கிளர்ச்சியை ஏற்படுத்த அதனுடன் இணைந்த இசையோ நம்மை நெகிழ வைக்கிறது.
அழகுணர்ச்சியையும் ,மன எழுச்சியையும் தூண்ட நுட்பமும் ,செறிவும் ஒன்றிணைந்து கலாப்பூர்வமாக வெளிப்படும் கவிதை அதை இனிதே எடுத்துச் செல்லும் தன்னிகரில்லாத இசை. இனிமையான குரல்களில் வரும் இனிமையும், சோகமும் கலந்த அற்புதமான தாலாட்டு.
தங்களது குடும்பநிலை , உறவுகளின் பெருமை,மற்றும் பலவிதமான நிலை என தாலாட்டு மரபின் அத்தனை அம்சங்களையும் உயர்வளித்து சொன்ன பாடல் அது!
இது போன்று கதையின் சூழலை கவிதையின் உயர்வான நடையில் பல பாடல்களில் கேட்டிருக்கின்றோம்.
வானாடும் நிலவோடு கொஞ்சும் விண்மீன்கள் உனைக்கண்டு அஞ்சும் - எழில் வளமூட்டும் வினை மின்னல் உனைக்கண்டு அஞ்சும்
என்று கவிஞர் வில்லிபுத்தன் எழுதிய " மாலாஒரு மங்கல் விளக்கு " பாடலை நாம் உதாரணமாக இங்கே தந்தாலும், அந்தப்பாடல் மிக அருமையான மெட்டமைப்பைக் கொண்ட பாடல் தானெனினும் , "மலர்ந்தும் மலராத" பாடல் அளவுக்கு வெகுமக்களிடம் சென்று வெற்றியடையவில்லை என்பதே உண்மை. மிகப்பெரிய வெற்றிப்படமான பாசமலர் படத்தின் வெற்றியும் இந்தப்பாடல் அதிக புகழ்பெற்றமைக்கான காரணமாகும்.
எனினும் மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி இரட்டையர்கள் இசையமைத்த இனிய மெட்டல்லவா அதை மக்களிடம் கொண்டு சேர்த்தது ! இது போன்ற பல இசைவார்ப்புகள் நம்மைக் கொள்ளை கொண்டு சென்றன. நெஞ்சை ஆட்சி செய்யும் வளமிக்க பாடல்கள் அவை !
இனிய இசையின் வெற்றி என்பதே இது தான்! அந்த இனிய இசைக்கு என்ன வரிகளை வைத்தாலும் இசை வென்று விடும் என்பதே உண்மை.ஆனால் உயிர்த்துடிப்புமிக்க வரிகள் இணையும் போது நெஞ்சைப் பறி கொடுக்கும் ரசவாதம் பிறந்து விடுகிறது.
தமது அமரத்துவக் கானங்களால் நம் வாழ்க்கையின் ஒவ்வொரு கூறிலும் அழகுலகைக் காட்டியதில் பெரும் பங்கு தமிழ் திரையிசையமைப்பாளர்களுக்கு உண்டு.அதில் மிகவும் குறிப்பிட்டுச் சொல்லதகுந்த தனித்தன்மை மிக்கவர்கள் தான் மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி.
வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத எத்தனை வகை , வகையான, எண்ணற்ற இனிய பாடல்களால் தமிழ் இசை ரசிகர்களை இன்பத்தில் திணறடிக்க வைத்தவர்கள் மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இணையினர்.
பின்னாளில் எத்தனையோ புகழாரங்களை மெல்லிசைமன்னர்கள் பெற்றாலும் , அதில் அதியுயர் பாராட்டாக, அதே துறையில் யாரும் எட்டாத சிகரங்களைத் தொட்ட இசைஞானி இளையராஜா , மெல்லிசைமன்னர்களின் இசை எவ்விதம் தன்னை பாதித்தது என்பதை விளக்க முனைந்தமை சிறந்த பாராட்டாக அமைந்தது
" நான் ஒரு இசைக்கலைஞனாக இந்த உலகத்தில் நடமாடிக்கொண்டிருப்பதன் முக்கியமான காரணம் அண்ணன் விஸ்வநாதன் அவர்களும் , மெல்லிசைமன்னர் ராமமூர்த்தி அவர்களுமே ! ஏனென்றால் நான் பிறந்த கிராமத்திலே இசை கற்றுக் கொள்ள விரும்பினாலும் அங்கே சொல்லிக் கொடுக்க யாருமில்லை. அந்தக் கிராமத்திலே அவர்களுடைய பாடல்கள் ஒலிக்காத நாளெல்லாம் விடியாத நாள் என்று தான் எங்கள் பொழுதுகள் கழிந்தன......உணர்வுமயமான அவர்களது நாதம் என்னுடைய நாடி , நரம்பில், இரத்தத்தில் உடம்பில் எல்லாம் ஊறிப்போனதால் தான் !
இது தான் மெல்லிசைமன்னர்கள் பெற்ற அதியுயர் பாராட்டு என்பேன். அவர்களின் இசைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்பது அவர்களது இசை, ஒரு மாபெரும் கலைஞனை உருவாக்குவதில் எவ்விதம் பங்காற்றியிருக்கிறது என்பதே!
பழைய பாடல்கள் என்றதுமே கருப்பு வெள்ளைப் படங்களும் , வானொலிப்பெட்டியும் நம் நினைவுகளிலிருந்து பிரிக்க முடியாதவையாகும்.வானொலி நம்மை தன்னுடன் இறுக அணைத்துக் கொண்ட சாதனமாகும். இதயத்தோடு இணைந்த எத்தனையோ பாடல்களைத் தந்து உணர்வு மிகுதியில் நம்மைத் திளைக்க வைத்ததிருக்கிறது.இசையில்நம்மை தாலாட்டி வளர்த்த தாய்வீடு வானொலியே என்று சொல்லி கொள்வதற்குக் காரணமாயிருந்தவர்களில் முதன்மையானவர்கள் மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி
விருது பெறுவதால் மட்டும் ஒருவரின் திறமை அளவிடப்படும் இன்றைய விசித்திர சூழ்நிலையில் , தனது திறமைக்கு கிடைக்க வேண்டிய குறிப்பிடத் தகுந்த விருதுகளும் பெறாமல் மறைந்தவர் மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்.
அவர் இசையமைத்த பாடல்கள் சில தேசிய அளவில் விருதுகள் பெற்றாலும் அவருக்கு அது கிடைக்கவில்லை. ஆனால் உண்மை என்னவென்றால் விருதுகளுக்கு அப்பால் நல்லிசை ரகிகர்கள் மனதில் சிம்மாசனம் போட்டிருப்பவர் தான் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் !
தனது படைப்புக்கள் பேசப்பட வேண்டும் என்றோ , விருகள் பெற வேண்டுமென்றோ முனைப்புக்காட்டாத அவர், மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கு பெற்ற சினிமா இசை மூலம் பெரும் பணம் சம்பாதிக்க முடியும் என்று நினைத்துப் பார்க்க முடியாத காலத்து மனிதராக வாழ்ந்து மறைந்தார். ஆயினும் அந்த ஆதங்கம் அவரிடம் வெளிப்பட்டுமிருக்கிறது."உழைக்கத் தெரிந்தது , பிழைக்கத் தெரியவில்லை" என்பார்!
கேரளாவில் பாலக்காடு மாவட்டத்தில் இசைப்பாரம்பரியமற்ற ஒரு குடும்பத்தில் பிறந்து தமிழ் சினிமாவில் புதியதொரு பரிமாணத்தை நிகழ்த்திய மாமேதை எம்.எஸ்.விஸ்வநாதன்.
தமிழின் சகோதர மொழியான மலயாளம் தந்த ஈடு இணையற்ற இசையமைப்பாளனை தமிழ்த்திரையுலகம் தத்தெடுத்துக் கொண்டது.
அதற்கு கைமாறாக அவர் தந்த இசை, தமிழ்ப்பாடல்களை பிற மொழியினர் வியந்து பார்க்க வைத்தன. 1940 களிலேயே கொடிகட்டி பறந்த ஹிந்தியின் மெல்லிசை , அதன் ஈர்ப்பால் 1950 களில் வீசிய தெலுங்கு மெல்லிசை அலை போல 1960 களில் தமிழில் வீசியடித்த மெல்லிசை வீச்சின் சொந்தக்காரர் மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இணையினர்.
1952 இலிருந்து 1965 வரை ஒன்றிணைந்து இயங்கிய அவர்கள் மனது மறக்காத பல பாடல்களைத் தமிழ்மக்களுக்கு விட்டுச் சென்றார்கள். அழகியல் நோக்கில் பல இனிமையான பாடல்களைத் தந்தவர்களின் பிரிவு பற்றிய துல்லியமான காரணிகள் யாராலும் பேசப்படவில்லை. அவர்களும் அது குறித்து பேசியதில்லை. இசை வேட்கை மிகுந்த இரு மேதைகளின் பிரிவு தமிழ் திரை இசைக்கு ஏற்பட்ட பாரிய இழப்பு என்பதை விட நல்லிசை ரசிகர்களுக்கு பேரிழப்பு என்பதே பொருத்தமானதாகும்.
மெல்லிசைக்கு புதுக்கட்டியங் கூறிய இரட்டையர்களின் கூட்டு குறிப்பாக இறுதி 5 ஆண்டுகளில் [1960 - 1965] உச்சம் பெற்றது.ஒளிவீசிக் கொண்டிருந்த நட்சத்திரம் உதிரும் போது ஒளியைப் பாய்ச்சி மறைவது போல , நல்ல பல பாடல்களை அள்ளிக் கொட்டியவர்கள் பிரிந்து சென்றனர்.
நம் வாழ்வின் நீண்ட பாதையில் அவர்களது பாடல்களுடன் நாம் பயணித்திருக்கின்றோம்.
வானொலியில் பிறந்து காற்றலைகளில் மிதந்த அவர்களது பாடல்கள் நம் நெஞ்சங்களில் கலந்து நீங்கா இடம் பிடித்திருக்கின்றன.
ஆரம்பநாளில் மெல்லிசைமன்னர் இசையமைத்த "வான் மீதிலே இன்பத் தேன்மாரி பெய்யுதே " , "கூவாமல் கூவும் கோகிலம் " , "தென்றலடிக்குது என்னை மயக்குது , "கண்ணில் தோன்றும் காடசி யாவும்" ,"கசக்குமா இல்லை ருசிக்குமா" போன்ற பாடல்களை நினைக்கும் போதே மனம் ஒருவித போதையில் ஆழ்கிறது. நினைவு திரையில் மறைந்த உறவுகளும் , நினைவுகளும் , கழிந்து போன நாட்களும் நம்மை வருத்தம் தந்து வருடிச் செல்லும். மெல்லிசையில் ஒரு துலக்கத்தை அந்தக் காலத்திலேயே காண்பித்திருப்பதையும் அவரது திறமமையையும் எண்ணி வியக்கவும் வைக்கிறது .
மெல்லிசைமன்னர்கள் திரைப்படத்தில் நுழைந்து முன்னுக்கு வந்த காலத்தைக் கவனத்தில் எடுத்தல் தேவையாகிறது. கர்னாடக செவ்வியலிசையின் கட்டுக்கள் தளர்ந்து மெல்லிசையின் துளிர்கள் அரும்பிக்கொண்டிருந்த காலம் என்பதை திரையிசையை நோக்குபவர்கள் உணர்வார்கள். மெல்லிசைக்கான முகிழ்ப்புக்கு , நாடக மரபில் வந்த மூத்த இசையமைப்பாளர்களைப்போல மரபையொட்டிய மெல்லிசையையும் ஹிந்தி திரை இசையையும் ஆதர்சமாகக் கொண்டு பாடல்களைக் கொடுக்க முனைந்தனர்.
இந்திய சினிமாவில் அதிக செல்வாக்கு செலுத்திய ஹிந்தி திரைப்படப்பாடல்களுக்கு நிகராக,தமிழ் பாடல்களும் வரவேண்டும் என்று ஆரம்பகால இசையமைப்பாளர்கள் ஓரளவு முனைப்புக் காட்டினார்கள்.ஆயினும் அன்றிருந்த மரபிசையின் செல்வாக்கிற்குள் நின்று தான் அவர்களால் புதுமையைக்காட்ட முடிந்தது.அதில் அவர்கள் குறிப்பிடத் தகுந்த வெற்றிகளையும் கண்டார்கள்.
ஆயினும் அவர்களில் வயதில் இளையவராக இருந்த சி.ஆர்.சுப்பராமன், மரபில் நின்றதுடன் புதுமை விரும்பியாகவும் தனது படைப்பை தர முயன்றார்.அவரது அகால மரணம், அவரது அடியொற்றி வந்த புதுமை நாட்டம் மிகுந்த ஒரு புதிய பரம்பரையினரை அரங்கேற்றியது. ஏ.எம்.ராஜா , டி.ஜி..லிங்கப்பா , டி.ஆர் .பாப்பா , எம்.எஸ்.விஸ்வநாதன் , டி.கே.ராமமூர்த்தி போன்றவர்கள் புதுமை காண விளைந்தனர். புதுமை சகாப்தம் சி.ஆர்.சுப்பராமனுடன் ஆரம்பித்தது என்பதை யாரும் ஏற்றுக்கொள்வர்.
மெல்லிசை உருவாக்கத்தில் தீவிர ஆர்வம் காட்டிய மெல்லிசைமன்னர்கள், ஹிந்தி திரையிசையை முன்மாதிரியாகக் கொண்ட அதே வேளையில் தங்கள் தனித்துவத்தைக் காண்பிக்கவும் , நாடக மரபில் வந்த மூத்த இசையமைப்பாளர்களைப்போல மரபையொட்டிய மெல்லிசையையும் ஆதர்சமாகக் கொண்டு பாடல்களைக் கொடுக்க முனைந்தனர்.
1950 களில் வெளிவந்த திரைப்படங்களை அவதானிக்கும் பொழுது ஜி.ராமநாதன் , ஜி. கோவிந்தராஜுலுனாயுடு , எஸ்,வி.வெங்கட்ராமன் ,ஆர்.சுதர்சனம் , எஸ்.எம். சுப்பையா நாயுடு ,எம்.எஸ்.ஞானமணி , பெண்டலாயா , எஸ்.ராஜேஸ்வரராவ் ,எஸ்.தட்சிணாமூர்த்தி , கண்டசாலா , சி.ஆர் சுப்பராமன் , லக்ஷ்மன் பிரதர்ஸ் ,ஆதி நாராயணராவ் , வி.நாகைய்யா , கே.வீ மகாதேவன் ,சி.என்.பாண்டுரங்கன் , ஏ. ராமராவ் ,எம்.டி.பார்த்தசாரதி சி.எஸ்.ஜெயராமன் , களிங்கராவ் , எச்.ஆர் .பத்மநாபசாஸ்திரி என பல இசையாளுமைகள் வெற்றிகரமாகக் களமாடிக்கொண்டிருந்ததை அவதானிக்க முடிகிறது.
இவர்களுடன் புதிய சந்ததியினரான விஸ்வநாதனின் இளவட்ட சகபாடிகளான டி.ஜி..லிங்கப்பா , டி.ஆர்.பாப்பா , ஏ,எம்.ராஜா,டி.சலபதிராவ் ,ஆர்.கோவர்த்தனம் ,வேதா , பி.எஸ்.திவாகர் போன்ற பலரும் தனித்தனியான இசையமைப்பாளர்களாக அறிமுகமாகிக் கொண்டிருந்தார்கள்
1940 களில் ஏற்பட்ட வளர்ச்சியின் அடையாளமாக மரபு வழி வந்த நாடக இசையின் மைந்தர்களான ஜி.ராமநாதன் , எஸ்.வீ.வெங்கட்ராமன் , பாபநாசம் சிவன் , எஸ்.எம் சுப்பையாநாயுடு,ஆர்.சுதர்சனம் போன்றவர்கள் முன்னணிக்கு வந்துவிட்டார்களெனினும் நாடக இசையின் வட்டத்தைச் சார்ந்தும், அதிலிருந்து விடுபடவும் ஓரளவு முனைப்பு காட்டினர் 1950 களில் தியாகராஜா பாகவதர் , பி.யு.சின்னப்பா காலத்து பாடும் பாணி மாறி புதிய மெல்லிசைப்போக்கின் பயணம் தொடங்கியது.
பாடி நடித்து பெரும்புகழ் பெற்ற தியாகராஜா பாகவதர் , பி.யூ.சின்னப்பா போன்றோருடன் அந்த சகாப்தம் நிறைவுற்றாலும் தங்கள் வாழ்நாளின் இறுதிவரை பாடி நடிப்பதை பிடிவாதத்துடன் கடைப்பிடித்தவர்கள் டி.ஆர். மகாலிங்கம் மற்றும் கே.பி.சுந்தராம்பாள் ஆகியோரே ! பாடும் ஆற்றல் வாய்ந்த எஸ்.வரலட்சுயும் இறுதிவரை ஆங்காங்கே பாடி நடித்தவர்களில் ஒருவர்.
பாடி நடிக்காத புதிய நடிகர்களான எம்.கே ராதா , ரஞ்சன் போன்றோர் முன்னணிக்கு வந்து கொண்டிருந்தார்கள்.நடிகர் ரஞ்சன் ஒரு சில பாடல்களை பாடினாலும் ஒரு பாடகர் என்ற அளவுக்குப் புகழ் பெறவில்லை.
எஸ்.எஸ்.வாசனால் பெரும் செலவில் எடுக்கப்பட்ட அபூர்வ சகோதரர்கள் , மங்கம்மா சபதம் போன்ற படங்களில் முக்கிய பாத்திரமேற்று நடித்தவர்கள் எம்.கே ராதா , ரஞ்சன் என்பது குறிப்பிடத்தக்கது.இவர்களுடன் நடிகைகளான ருக்மணி [ நடிகை லட்சுமியின் தாயார் ] , டி.ஆர்.ராஜகுமாரி போன்றோரையும் சேர்த்துக் கொள்ளவேண்டும்.டி.ஆர்.ராஜகுமாரி பாடுவதிலும் ஓரளவு வெற்றி பெற்றிருந்தாலும் ருக்மணியால் வெற்றிபெறமுடியவில்லை.ஸ்ரீவள்ளி திரைப்படத்தில் ருக்மணி பாடினார் என்றும் பின்னர் இனிமை குறைவு எனக் கருதி பி.ஏ.பெரியநாயகியைப் பாட வைத்து டப் செய்தார்கள் என்கிறார் ஆய்வாளர் வாமனன்.
இனிமையாகப்பாடுவதில் புகழடைந்த டி.ஆர்.மகாலிங்கம் அளவுக்கு இல்லை என்றாலும் பாடுவதில் கணிசமான அளவு வெற்றியடைந்தவர் "நடிப்பிசைப்புலவர்" என்று அழைக்கப்படட கே.ஆர் ராமசாமி. இவரது வெற்றிக்கு திராவிட இயக்கம் பெருமளவு உதவியது.சிறைவாசத்துடன் தொடங்கிய தியாகராஜபாகவதரின் வீழ்ச்சியை, ஏற்கனவே பாடி நடித்து புகழ் பெற்றுக்கொண்டிருந்த டி.ஆர்.மகாலிங்கம் , கே.ஆர் ராமசாமி போன்ற நடிகர்கள் நிரப்ப முனைந்தனர். ஆயினும் பாடி நடிக்கும் காலம் மெதுவாக மலையேறிக்கொண்டிருந்தது என்பதும் கவனத்திற்குரியது.
சி.ஆர்.சுப்பராமன் விட்டுச் சென்ற இசைப் பணிகளை முடித்துக்கொடுக்கும் வாய்ப்பு அவரின் உதவியாளர்களாக இருந்த விஸ்வநாதன் , ராம்மூர்த்தியினருக்கு கிடைத்தது.ஆயினும் தனது இசையார்வத்தால் சி.ஆர்.சுப்பராமன் உயிருடன் இருந்த காலத்திலேயே தனித்து இசையமைக்க முயன்றவர் எம்.எஸ்.விஸ்வநாதன்.
வளரத் துடிக்கும் விஸ்வநாதனை தனது புதிய படத்தில் அறிமுகம் செய்ய விரும்பிய மலையாளபடத் தயாரிப்பாளர் ஈப்பச்சன், எம்.ஜி.ஆரை வைத்து ஜெனோவா என்ற படத்தை எடுத்தார்.புதிய இசையமைப்பாளர் விஸ்வநாதன் பற்றி எம்.ஜி ஆர் அறிந்த போது " ஆபீஸ் பையனாக இருந்தவனை இசையமைப்பாளனாகப் போட்டு என் படத்தை கெடுத்துவிடப் போகிறீர்கள் " என்று மறுக்க ,விஸ்வநாதன் தான் இசையமைப்பாளர் என்பதில் உறுதியாக நின்ற தயாரிப்பாளர் " அவர் போடும் பாட்டுக்களைக் கேளுங்கள்,இல்லை என்றால் மாற்றிவிடலாம் " என்று கூற பாடல்களைக் கேட்ட எம்.ஜி.ஆர் நன்றாக இருக்கிறது,இன்னும் நன்றாக இசையமைக்க வேண்டும்,உனக்கு எனது ஆதரவு எப்போதும் உண்டு என்று பாராட்டினார் " என மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் திரும்பிப்பார்க்கிறேன் என்ற ஜெயா டி.வி நிகழ்ச்சியில் தனது நினைவுகளை பகிர்கிறார்.
ஆனாலும் ஜெனோவா படத்தில் அக்கால இசையமைப்பாளர்களான எம்.எஸ்.ஞானமணி , டி.ஏ.கல்யாணம் போன்றோரும் இசையமைத்ததாக பட டைட்டில் தெரிவிக்கிறது.
காலமாற்றத்தின் விளைவாக திரைத்துறையில் வெவ்வேறு துறைகளிலும் புதியவர்களின் வருகையும் மெல்லிசைமன்னர்கள் அறிமுகமான காலத்தில் ஏற்படத்தொடங்கியது.
நடிப்பில் ......,,,,
எம்.ஜி.ஆர், [ராஜ குமாரி 1948 ,மந்திரி குமரி 1950 - மலைக்கள்ளன் 1953]
சிவாஜி, பராசக்தி [1952] ,,
பத்மினி ,வையந்திமாலா போன்றோரும்,
பாடகர்களில் ,,,
அபிமன்யூ [1948 ] படத்தில் திருச்சி லோகநாதன்
பாதாள பைரவி [1950 ] படத்தில் பி.லீலா
மந்திரி குமாரி [1950] படத்தில் டி.எம்.சௌந்தரராஜன்
மந்திரி குமாரி [1950] படத்தில் ஜிக்கி
சம்சாரம் [1951] படத்தில் ஏ.எம்.ராஜா
பெற்ற தாய் [1952] படத்தில் பி.சுசீலா
ஜாதகம் [1953] படத்தில் பி.பி.ஸ்ரீநிவாஸ்
பொன் வயல் [1954] படத்தில் சீர்காழி கோவிந்தராஜன்
போன்றோரும் ,இசையமைப்பில் மேற்குறிப்பிடட புதியவர்களும் அறிமுகமாகியிருந்தனர்.
பாடும் பாணியிலும் , இசையமைப்பிலும் புதிய முறை அரும்பிய காலம் என்பதை அக்காலப் பாடல்கள் சில நிரூபணம் செய்கின்றன.திரைப்படங்களில் சமூகக் கதையமைப்பு மாற்றமும் அதற்குத் தகுந்தற்போல இசையும் மெல்லிசைமாற்றம் பெறத் தொடங்கியது.பெரும்பாலும் அக்கால ஹிந்தி இசையை ஒட்டியே அவை அமைந்திருந்தன.
ஆயினும் ஹிந்திப்பாடல்களை தழுவாத வகையில் வாத்திய அமைப்பைக் கொண்ட பாடல்களும் ஆங்காங்கே வெளிவரவும் செய்தன.வலுவான ஹிந்தி இசையின் தாக்கத்தோடு போராடிய இசையமைப்பாளர்கள் காட்டிய சிறிய தனித்துவவீச்சுக்கள் தான் இவை என கருத வேண்டியுள்ளது.
ஆரம்ப காலத்தில் மெல்லிசைமன்னர்கள் ஒரு சில படங்களுக்கு இசையமைத்தவர்களாயினும் படைப்புத்திறனில் வீச்சைக் காண்பிக்க ஆர்வத்துடன் முனைந்து செயற்பட்டனர்.அபூர்வமான சில பாடல்களை அப்போதே தந்ததை இன்று அவதானிக்க முடிகிறது அவை இன்றும் ஆர்வத்துடன் கேட்கப்படுகிறது. எண்ணிக்கையில் குறைந்தளவு படங்களுக்கு இசையமைத்தமையும்,அதிக புகழ்பெறாமையும் இவர்களது தனித்துவம் வெளிப்படாத காலமும் இவையாகும்.
1950 களில் ஒருவகை மெல்லிசைப்போக்கு உருவாகியிருந்தது. பொதுவாக "மெல்லிசை " என இங்கு குறிப்பிடப்படும் இசை என்பது பாடலமைப்பில் , பிரயோகங்களில் எளிமை என்றே கருதப்படுகிறது.அவை வெவ்வேறு காலங்களில் வாத்திய அளவில் கூடியும் , குறைந்தும் பயன்படுத்தப்பட்டிருந்தன.மெல்லிசையில் வாத்திய இசையின் பங்கு அல்லது அடிப்படை என்பதே மெட்டின் இசைப்பண்பை வாத்திய இசையால் மெருகூட்டுவது எனக்கருதப்படுகிறது .இது காலத்திற்கேற்ப உயிர்த்துடிப்புமிக்க இசையை தர முனையும் இசையமைப்பாளர்களது ஆற்றலையும் , தனிப்பாதையையும் காட்டி நிற்கும்.மெல்லிசை என்பது திரையிலும் ,வானொலியிலும் கலைஞர்களுக்கு கிடைக்கும் வாத்திய எண்ணிக்கையின் அளவிற்பார்பட்டதே என்பதையும் நாம் நினைவிற்கொள்ளவேண்டும்.
வானொலியில் எண்ணிக்கையில் குறைந்த வாத்திய அளவும் ,திரையில் அதிகமானஅளவிலும் பயன்பட்டிருக்கிறது என்பதும் அவதானத்திற்குரியது.
1953 இல் இசையமைக்க ஆரம்பித்த மெல்லிசைமன்னரின் சில பாடல்கள் சோடை போகவில்லை என்று சொல்லலாம்.அவர் அறிமுகமான ஜெனோவா படத்தில் வெளிவந்த சில பாடல்கள் அதற்கு சான்று பகர்கின்றன.
01 கண்ணுக்குள் மின்னல் காட்டிடும் காதல் ஜோதியே - படம்:ஜெனோவா 1952 - பாடியவர்கள்:ஏ.எம்.ராஜா + பி.லீலா - இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
02 தேடியே மனம் ஓடுதே அன்பே என் ஆருயிரே - படம்:ஜெனோவா 1952 - பாடியவர்கள்:ஏ.எம்.ராஜா + பி.லீலா - இசை: எம்.எஸ்.விஸ்வநாதன
03 துன்பம் சூழும் பெண்கள் வாழ்வில் - - படம்:ஜெனோவா 1952 - பாடியவர்கள்:ஏ.எம்.ராஜா - இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
04 எண்ணாமலே கண்ணே நெற்று - படம்:ஜெனோவா 1952 - பாடியவர்கள்:குழுவினர் - இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
05 புதுமலர் வனம்தனை - படம்:ஜெனோவா 1952 - பாடியவர்கள்:ஏ.எம்.ராஜா + பி.லீலா - இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
06 பரலோக மாதா பரிதாபமில்லையா - படம்:ஜெனோவா 1952 - பாடியவர்கள்: பி.லீலா - இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
போன்ற பாடல்கள் இசைத்தட்டில் உள்ளன. இதில் "கண்ணுக்குள் மின்னல் காட்டும்" , மற்றும் "பரலோக மாதா பரிதாபமில்லையா" போன்ற பாடல்கள் இனிமையின் இலக்கை எட்டியிருக்கின்றன என்று சொல்லத் தோன்றுகிறது.
விஸ்வநாதனின் முன்னோடி இசையமைப்பாளர்களின் பாடல்கள் சிலவற்றை இங்கே ஒப்பிட்டு பார்க்கும் போது மெல்லிசையின் இனிய தெறிப்புக்கள் பலவற்றை நாம் காண்கிறோம். ஜெனோவா படத்தில் பல பாடல்கள் இருப்பினும் " கண்ணுக்குள் மின்னல் காட்டும் " , " பரிதாபம் இல்லையா பரலோக மாதா " போன்ற பாடல்கள் இயல்பான நீரோடை போன்ற ஓட்டம் கொண்ட பாடல்களாக நம் நினைவில் நிலைத்து நிற்கின்றன.
அக்காலத்தில் வெளிவந்த திரைப்படப்பாடல்களோடு ஒப்பு நோக்கும் போது அதிபிரமாதம் என்று சொல்ல முடியாவிட்டாலும் காலத்தை ஒட்டிய இனிய பாடல்கள் என்பதில் சந்தேகமில்லை.
இத்தைய பின்னணியில் மெல்லிசைமன்னர் விஸ்வநாதன் அறிமுகமான காலத்துக்கு முன்னர் வெளிவந்த பாடல்களை சற்று நோக்கினால் சிறந்த பல பாடல்கள் வெளிவந்ததை அவதானிக்கலாம்.
01 ஆகா ஆடுவேனே கீதம் பாடுவேனே - படம்:அபூர்வ சகோதரர்கள் 1949 - பாடியவர்கள்:டி.ஏ.மோதி + பி.பானுமதி - இசை :எஸ்.ராஜேஸ்வரராவ் .
02 மானும் மயிலும் ஆடும் சோலை - படம்:அபூர்வ சகோதரர்கள் 1949 - பாடியவர்கள்: பி.பானுமதி - இசை :எஸ்.ராஜேஸ்வரராவ்
03 பேரின்பமே வாழ்விலே - படம்:தேவகி 1952 - பாடியவர்கள்:திருச்சி லோகநாதன் + பி.லீலா - இசை :ஜி.ராமநாதன்
04 ஆசைக்கிளியை அழைத்து வாராய் தென்றலே - படம்:சின்னத்துரை 1951 - பாடியவர்கள்:டி.ஆர்.மகாலிங்கம் + பி.லீலா - இசை :டி.ஜி.லிங்கப்பா
03 வானுலாவும் தாரை நீ இதயகீதமே - படம்:இதயகீதம் 1950 - பாடியவர்கள்:டி.ஆர்.மகாலிங்கம் + டி.ஆர்.ராஜகுமாரி - இசை :எஸ்.வி.வெங்கட்ராமன்
04 பாட்டு வேணுமா உனக்கொரு பாட்டு வேணுமா - படம்:சின்னத்துரை 1951 - பாடியவர்கள்:டி.ஆர்.மகாலிங்கம் - இசை :டி.ஜி.லிங்கப்பா
05 ஒ..ஜெகமத்தில் இன்பம் தான் வருவது எதனாலே - படம்:சின்னத்துரை 1951 - பாடியவர்கள்:டி.ஆர்.மகாலிங்கம் + வரலட்சுமி - இசை :டி.ஜி.லிங்கப்பா
05 சம்சாரம் சம்சாரம் சலகதர்ம சாரம் - படம்:சம்சாரம் 1951 - பாடியவர்கள்:ஏ.எம்.ராஜா - இசை :ஈமானி சங்கர சாஸ்திரி
06 அழியாத காதல் வாழ்வின் - படம்:குமாரி 1950 - பாடியவர்கள்:ஏ.எம்.ராஜா - இசை :கே.வீ.மகாதேவன்
07 பேசும் யாழே பெண் மானே - படம்:நாம் 1951 - பாடியவர்கள்:ஏ.எம்.ராஜா - இசை :சி.எஸ்.ஜெயராமன்
08 ஆடும் ஊஞ்சலைப் போலே அலை - படம்:என் தங்கை 1952 - பாடியவர்கள்:டி.ஏ.மோதி + பி.லீலா - இசை :சி.என்.பாண்டுரங்கன்
09 காதல் வாழ்விலே கவலை தவிர்ந்தோம் - படம்:என் தங்கை 1952 - பாடியவர்கள்:டி.ஏ.மோதி + பி.லீலா - இசை :சி.என்.- இசை :சி.என்.பாண்டுரங்கன்
10 புது ரோஜா போலே புவி மேலே வாழ்வோமே -படம்: ஆத்ம சாந்தி [1952]- பாடியவர்கள் : டி.ஏ.மோதி + பி.லீலா - இசை :
தந்தை பெரியாரின் சீர்திருத்தக்கருத்துக்கள் புகழ்பெறத்தொடங்கிய இக்காலத்தில் அதன் ஆதிக்கம் சினிமாவிலும் எதிரொலித்தது. பொருளற்ற புராணப்படங்களைப் பார்த்து சலிப்படைந்த மக்களை பாடல்களால் சோபையூட்டிக்கொண்டிருந்த சினிமாவில் சமூகக்கதைகளை கொண்ட விழிப்புணர்வு கருத்துக்கள் தலையெடுக்கவும் தொடங்கின.எதற்கெடுத்தாலும் பாடிக்கொண்டிருந்த சினிமாவை உரையாடல் பக்கம் திருப்பியவர்கள் திராவிட கழகத்தினரே!
திராவிட இயக்கக் கருத்தோட்டம் முன்னணிக்கு வந்துகொண்டிருந்த இக்காலத்தில் ,அந்த இயக்கம் சார்ந்த கதாசிரியர்களான அண்ணாத்துரை , கருணாநிதி ,கண்ணதாசன் , நடிகர்களான என்.எஸ்.கிருஷ்ணன் , கே.ஆர் ராமசாமி ,எம்.ஜி.ராமசந்திரன் , சிவாஜி கணேசன் ,எஸ்.எஸ்.ராஜேந்திரன் போன்றவர்கள் முன்னனிக்கு வந்து கொண்டிருந்தார்கள்.
தங்கள் "இமேஜை " மக்கள் மத்தியில் வளர்ப்பதற்கும், தங்கள் பிரபல்யமாவதற்கும் திராவிட இயக்கக் கருத்தை ஏற்றார்கள்.அது போலவே வளர்ந்து வரும் நடிகர்களின் புகழைக் காட்டி தமது இயக்கத்தை வளர்த்துவிட முடியும் என்று அரசியல் தலைவர்கள் உணர்ந்திருந்தார்கள்.அவர்களுக்குச் சாதகமாக அமைந்த சினிமாத்துறையை சரியான நேரத்தில் பயன்படுத்திக் கொண்டார்கள் இன உணர்வு ,தமிழுணர்வு போன்றவற்றை பயன்படுத்தி வெற்றிபெறத் துடித்தனர்.
புராண ,இதிகாசப் படங்களுடன் ,கைநழுவிப் போய்க்கொண்டிருந்த நிலமானியக்கருத்துக்களை மையமாகக் கொண்ட உணர்ச்சிமிக்க கதைகள் கருப்போருளாகின.கதைகளுக்கேற்ற பாத்திர வார்ப்புகளில் எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்றோர் நடித்துக் கொண்டிருந்தனர்.
தங்கள் அரசியல் கருத்துக்களை அலங்கார வசனங்களைக் கொண்டு கட்டமைத்ததைப் போல , இசையிலும் கட்டமைக்க முயன்றனர்.திராவிடக் கருத்துக்களுக்கு சார்பான கவிஞர்களுள் பாரதிதாசன் பரம்பரைகவிஞர்கள் உருவானார்கள்.அவர்களில் உடுமலை நாராயணகவி முடியரசன் ,சுரதா , ஐயாமுத்து ,விந்தன் போன்றோர் 1950 களின் முன்னோடிக்கவிஞர்களாக விளங்கினர்
எம்.ஜி.ஆர் நடித்த மலைக்கள்ளன்[1953] படத்தில் மக்களன்பன் எழுதிய " எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே " பாடல் தி.மு.க வினரின் அரசியல் கொள்கையை பிரதி பலித்தது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
வசனகர்த்தாவாக வர விரும்பிய கண்ணதாசன் அதற்கு சரியான வைப்பு கிடைக்காததால் கன்னியின் காதலி [1949] படத்தில் பாடலாசியர் வாய்ப்பைப் பயன்படுத்தி அறிமுகமானார்.
பாரதிதாசன் பரம்பரையில் வந்த கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கம்யூனிஸ்ட்கட்சி ஆதரவாளனாக தன்னை வெளிப்படுத்தி கொண்டார்.பாரதி , பாரதிதாசன் போன்ற பெருங்கவிகளின் கவிவீச்சைக் கொண்டிருந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 1954 இல் சினிமாவில் அடி எடுத்து வைக்கிறார்.
விஸ்வநாதன் ராமமூர்த்தி இரட்டையரின் வளர்ச்சி மெதுவாகவே நகர்ந்தது.1952 ஆம் ஆண்டிலிருந்து 1959 வரையான காலப்பகுதியில் சுமார் இருபது படங்களுக்கு இசையமைத்தார்கள்.அவர்களின் சமகால இசையமைப்பாளர்கள் பல சிறந்த பாடல்களைத் தந்துகொண்டிருந்த வேளையில் தங்களையும் பேசவைக்குமளவுக்கு ஆங்காங்கே நல்ல பாடல்களையும் தந்தார்கள் என்பதை யாரும் மறுத்துவிட முடியாது.அவர்கள் சிருஷ்டித்துத் தந்த பாடல்கள் சில இன்றும் நம் நெஞ்சங்களை கொள்ளை கொள்ளுபவையாக விளங்குகின்றன.
சொர்க்கவாசல் [1954] படத்தில் சில பாடல்கள் :
01 "கன்னித் தமிழ் சாலையோரம் " என்று ஆரம்பமாகும் ஒரு பாடல் நாட்டுப்புறப்பாங்கில் அமைந்திருக்கிறது.இந்தப்பாடலில் திராவிட இயக்கக்கருத்துக்கள் முழுமையாக வெளிப்படுகின்றன.தமிழரின் பழம்பெருமையையும் சேரன் கல்லெடுத்து கண்ணகிக்கு சிலை வைத்த பெருமையையும் பறைசாற்றும் இனிமையான இந்தப்பாடலை தேஷ் ராகத்தில் அமைத்து நம்மைக் கனிய வைத்திருக்கிறார்கள்.இப்பாடலைப் பாடியவர் நடிப்பிசைப்புலவர் கே.ஆர்.ராமசாமி.
02 " நிலவே நிலவே ஆட வா நீ அன்புடனே ஓடிவா " என்ற பாடலையும் தேஷ் ராகத்தில் அமைத்து நெஞ்சில் இருக்க வைத்திருப்பார்கள்.குழந்தையை நிலவுக்கு ஒப்பிட்டு பாடுவதுடன் நிலவை விட குழந்தை அழகு என்பதாக அமைக்கப்பட்ட இந்தப்பாடலும் தேஷ் ராகத்திலேயே அமைக்கப்படுள்ளது.இப்பாடலைப் பாடியவர் கே.ஆர்.ராமசாமி.
03 " ஆத்மீகம் எது நாத்தீகம் எது அறிந்து சொல்வீரே " என்று ஆத்மா விசாரம் செய்யும் பாடல்
04 " மொழி மீது விழி வைத்தே முடிமன்னர் ஆண்ட தமிழ் நாடு " என்று ஆரம்பிக்கும் இந்தப்பாடலும் தமிழ் பெருமையும் , திராவிட பெருமையும் பேசுகின்ற பாடல்.
05 " சந்தோசம் தேட வேணும் வாழ்விலே " என்று ஆரம்பிக்கும் இந்தப்பாடல் ஒரு காதல்பாடல்.இனிமைக்கு குறைவில்லாமல் திருச்சி லோகநாதனும் டி.வி.ரத்தினமும் பாடிய பாடல்.
1955 இல் வெளிவந்த நீதிபதி படத்தில் வெளிவந்த சில பாடல்கள் :
01 " தாயும் சேயும் பிரிந்தைப் பார் சதியதனாலே " [ பாடியவர் :சி.எஸ்.ஜெயராமன் ] என்ற உணர்ச்சி
ததும்பும் துயர கீதம்.இந்தப்பாடலில் காலத்தை மீறியதாக, புதுமைமிக்க அமைந்த கோரஸ் பின்னணியில் ஒலிப்பதைக் கேட்கலாம்.
02 " உருவம் கண்டு என் மனசு உருகுது மனசு உருகுது " [பாடியவர்கள் : கே.ஆர்.ராமசாமி + டி.எம்.சௌந்தரராஜன் ] என்று ஆரம்பிக்கும் நகைச்சுவைப் பாடல்.தங்குதடையற்ற நதியோட்டம் மிக்க பாடல்.கே.ஆர்.ராமசாமி , டி.எம்.சௌந்தரராஜன் இணைந்து பாடிய அபூர்வமான பாடல்.மெல்லிசைமன்னர்களின் இசையில் சௌந்தரராஜன் பாடிய இரண்டாவது பாடல் இது.
03 " பறக்குது பார் பொறி பறக்குது பார் " [ பாடியவர்கள் : கே.ஆர்.ராமசாமி + ஏ.பி.கோமளா ] இந்தப்பாடலும் திராவிட இயக்கக் கருத்தை பறை சாற்றும் பாடல்.
04 " வருவார் வருவார் என்று எதிர் பார்த்தேன் " [ பாடியவர்கள் : கே.ஆர்.ராமசாமி + ஏ.பி.கோமளா ] என்று தொடங்கும் நகைச்சுவைப்பாடல்.இருபக்க இசையாக ஒலிக்கும் இந்தப்பாடல் ஒரு இசைநாடகப் பாணியில் அமைக்கப்பட்டுள்ளது.
1955 இல் வெளிவந்த குலேபகாவலி படத்தில் வெளிவந்த சில பாடல்கள் :
01 "வில்லேந்தும் வீரரெல்லாம் வீழ்ச்சி பெற்றார் பகடையிலே " [ பாடியவர்கள் : திருச்சி லோகநாதன் + பி.லீலா ] இந்தப்பாடல் பன்மொழியில் அமைந்த ராகமாலிகைப்பாடல்.
02 ஆசையும் என் நேசமும் [ பாடியவர் : கே.ஜமுனாராணி ] லத்தீனமெரிக்க இசையின் வீச்சையும் ,வாத்திய அமைப்பின் புதிய போக்கையும் , கோரஸ் இசையுடன் மிக அருமையாக அமைத்திருப்பார்கள்.
03 "சொக்கா போட்ட நாவாப்பு " - [பாடியவர் : ஜிக்கி ]
04 " கண்ணாலே பேசும் பெண்ணாலே " [பாடியவர் : ஜிக்கி ] மாயாலோகத்திற்கு அழைத்து செல்லும் உணர்வைத் தரும் கோரஸ் இசையுடன் அரேபிய இசையின் சாயலில் அமைக்கப்பட்டபாடலை ஜிக்கி வசீகர அதிர்வுடன் பாடிய பாடல்.
05 " அநியாயம் இந்த ஆட்சியிலே " [ பாடியவர் : டி.எம்.சௌந்தரராஜன் ] விஸ்வநாதன் இசையில் இவர் பாடிய முதல் பாடல் இதுவே.
06 " நாயகமே நபி நாயகமே " ;[ பாடியவர்கள்: எஸ்.சி.கிருஷ்ணன் + குழுவினர் ] இந்து - முஸ்லீம் ஒற்றுமை பற்றிய டைட்டில் பாடல்.எஸ்.சி.கிருஷ்ணன் உச்சஸ்தாயியில் அனாசாயமாகப் பாடிய பாடல்.
07 "மாயாவலையில் வீழ்ந்து மதியை இழந்து " [ பாடியவர் : டி.எம்.சௌந்தரராஜன் ] ஜி.ராமநாதன் பாணியில் அமைந்த இந்தப்பாடல் கரகரப்ரியா ராகத்தில் முதற் பகுதியும் நாட்டுப்புறப்பாங்கில் பிற்பகுதியும் நிறைவுறும் பாடல்
1956 தெனாலிராமன்
01 உலகெலாம் உனதருளால் மலரும் [ பாடியவர் :பி.லீலா ] டைட்டில்பாடல் , சிந்துபைரவி ராகப்பாடல்
02 சிட்டுப் போல முல்லை மொட்டு [ பாடியவர் :ஏ.பி.கோமளா ]
03 ஆடும் கலை எல்லாம் பருவ மங்கையர் அழகு கூறும் கலையாகுமே பாடியவர் : பி.லீலா ] காம்போதி ராகம்
04 கண்களில் ஆடிடிடும் ,,,,கன்னம் இரண்டும் மின்னிடும் [ பாடியவர்;பி.பானுமதி ] அரேபிய பாணி .
05 பிறந்த நாள் மன்னன் பிறந்த நாள் [ பாடியவர் : பி.பானுமதி ] சன்முகப்ப்ரியா நாட்டியப்பாடல்
06 புத்திலெ பாம்பிருக்கும் ,,,கோட்டையிலே ஒரு காலத்திலேயே [ பாடியவர்கள் : டி.எம்.சௌந்தரரராஜன் + வி.என்.நாகையா
07 உல்லாசம் தேடும் எல்லோரும் ஒரு நாள் [ பாடியவர் : கண்டசாலா ]
1955 போட்டர் கந்தன்
01 வருந்தாதே மனமே வீணே வருந்தாதே மனமே - [ பாடியவர் : எஸ்.சி.கிருஷ்ணன் ]
1957 குடும்ப கௌரவம் [1957] படத்தில் " சேரும் காலம் வந்தாச்சு " [பாடியவர்கள் : பி.பி.ஸ்ரீநிவாஸ் + கே.ஜமுனாராணி ]
1957 இல் வெளிவந்த மகாதேவி படம் மெல்லிசைமன்னர்களுக்கு மிக முக்கிய படமாக அமைந்தது.
மரபு ராகங்களில் அலங்காரம் செய்வதை அழகு பார்த்த அக்காலத்தில் ,அதன் வடிவத்திற்குள் உணர்ச்சிபாவம் கொப்பளிக்கும் அற்புதமான பாடல்களையும் தந்தார்கள்.
01 சிங்கார புன்னகை கண்ணாராக் கண்டாலே சங்கீத வீணையும் ஏத்துக்கம்மா- பாடியவர்கள்: எஸ்.ராஜேஸ்வரி + ஆர்.பாலசரஸ்வதி தேவி + குழுவினர்
" பேசாமல் பேசும் புருவங்கள் கண்டால் பேசாத சிற்பங்கள் ஏதுக்கமா" என்ற அருமையான கவி வரிகளை தாலாட்டில் அளித்த இந்தப்பாடல் தாலாட்டு மரபில் முன்பு வெளிவந்த பாடல்களை உடைத்து புதுமரபை ஏற்படுத்தியது.மென்மையும் , இனிமையும், தாய்மையும் ஒன்று குழைந்து வரும் இனிய குரல்களுடன் , மகிழ்வின் ஆரவாரத்தை வெளிக்காட்டிட கைதட்டல் போன்றவற்றை மிக லாவகமாகப் பயன்படுத்திய பாடல்..
கேட்கும் தருணங்களிலெல்லாம் மெய்சிலிர்ப்பும் , நெகிழ்வும் தருகின்ற பாடல்.இப்பாடலின் வெற்றியால் பின் வந்த காலங்களில் தாலாட்டு என்றால் ஆபேரி ராகத்தில் அமைக்கப்பட வேண்டும் என்ற எழுதப்படாத இலக்கணம் அமைத்துக் கொடுத்த பாடல் எனலாம்.இந்த பாடலின் வெற்றி "மலர்ந்தும் மலராத பாதி மலர் போல " பாடல் உருவானதின் பின்னணியில் இருந்தது என்று கூறலாம்.
"ஏரு பூட்டுவோம் நாளை சோறு ஓட்டுவோம் -" பாடியவர்கள்: டி.எம்.சௌந்தரராஜன் + எல்.ஆர்.ஈஸ்வரி + குழுவினர்
விவசாயிகள் பாடுவதாக அமைக்கப்பட்ட கொண்டாட்டமும் , களிப்பும் பொங்கும் பாடல்.பாடலில் கோரஸ், கைதட்டல் மிக அருமையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.பாடலின் நடுவே காதலர்களின் உணர்வை வெளிப்படுத்தும் பாங்கில் " மனசும் மனசும் ஒன்றா சேர்ந்தா மறக்க முடியுமா " என்ற வரிகளில் கனிவும் , இனிமையும் பொங்கி வர செய்யும் இசை மனதை பறித்துச் செல்லும்!
காதல் பாடல்களிலும் மென்மையைக் காண்பிக்கும் "கண்மூடு வேளையிலும் காலை என்ன கலையே" , "சேவை செய்வதே ஆனந்தம்" போன்ற அழகான பாடல்களையும் , பட்டுக்கோட்டை க்கல்யாணசுந்தரம் எழுதிய கருத்துக் செறிந்த தத்துவப்பாடல்களான " குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் ", " தாயத்து தாயத்து " போன்ற பாடல்களையும் அதனதன் இயல்புகளை வெளிப்படுத்தும் வகையில் அற்புதமாக இசையமைத்துள்ளார்கள்.
குறிப்பாக "குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் " என்ற பாடலில் பட்டுக்கோட்டையாரின் அற்புதவரிகளை எழுச்சியுடனும் நெகிழ்சசியுடனும் இசைத்து உணர்ச்சியின் உச்சத்தை தொடுகிறார்கள். இந்தப்பாடலுக்கு அவர்கள் தெரிந்தெடுத்த ராகம் அவர்களின் நுண்ணுணர்வைக் காட்டும்.
"காமுகர் நெஞ்சில் நீதியில்லை " என்று தொடங்கும் ஜமுனாராணி பாடிய நெஞ்சை உருக்கும் பாடல். படத்தின் நாயகி துயரத்தின் எல்லையில் நின்று பாடும் சோகத்தால் மனதை துருவித் துளைக்கும் பாடல்.
உணர்ச்சிமிக்க பாடல்களுடன் நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தும் விதமாக ஜெ.பி.சந்திரபாபு பாடிய " தந்தானா பட்டு பாடணும் " , "உன் திருமுகத்தை ஒரு முகமா திருப்பு " போன்ற பாடல்களையும் நாம் கேட்கலாம்
ஆரம்ப காலங்களில் மெல்லிசைமன்னர்கள் ஒருசில படங்களுக்கு இசையமைத்தாலும் படைப்புத் திறனில் வீச்சைக் காண்பிக்க முனைந்து செயல்பட்டனர் என்பதை உணரக்கூடியதாகவே உள்ளது.
மெல்ல மெல்ல தங்கள் தனித்துவத்தை காட்ட தலைப்பட்டதை இக்காலங்களில் காண்கிறோம்.
1959 இலிருந்து அவர்களது இசைப்பயணம் மெல்லிசையின் புது வண்ணத் தேடல்களை நோக்கிப் பயணித்தது.புதிய வாத்தியங்களும் , அவற்றில் எழும் நுண்ணிய ஒலியலைகளை கலையழகுடன் துணிகரமாகப் பயன்படுத்தத் தொடங்கினர்.
மேலைத்தேய இசையின் தலையீடு ஏற்படத் தொடங்கியவுடன் சினிமா இசையிலும் புதிய புதிய மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின.மேலைத்தேய இசையின் தாக்கம் உள்ளடக்கத்திலும் ம்மாற்றங்களை ஏற்படுத்தியது.ஆயினும் அவர்களது இசை மரபிசையின் பண்புகளுடனேயே இசைந்து வெளிப்பட்டது.
"பக்கமேளம்" என்று ஜி.ராமநாதனால் வர்ணிக்கப்பட்ட வாத்திய இசைச் சேர்ப்பு இவர்கள் காலத்திலேயே புதிய நிலையை எட்டியது.புதிய , புதிய வாத்தியக்கருவிகளின் தனித்துவக் கூறுகள் அக்கால வழக்கில் இருந்த ஒலியமைப்பிலிருந்து வேறுபடுத்திக்காட்டியது.
காலாவதியாகிப் போன மந்திர , மாயாஜாலக் கதைகளும் , புராணக்கதைகளும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்த தமிழ்சினிமாவில் 1950 களில் சமூகக்கதைகள் அரும்பத் தொடங்கின.அவை துரிதகதியில் முன்னேறி 1950 களின் நடுப்பகுதியில் தீவிரம் பெற்று வளந்தது இக்கால திரையிசையை அவதானிப்பவர்கள் செவ்வியலிசையின் பாரிய தாக்கத்தையும் தயங்கி நின்ற மெல்லிசையையும் அவதானிப்பர்.
ஆயினும் ஐம்பதுகளில் அரும்பிய மெல்லிசை ஐம்பதுகளின் இறுதியில் பெருகி அறுபதுகளில் பெரும் பாய்ச்சலைக்காட்டுகிறது.இந்தப்போக்கின், புதிய வாரிசுகளாக மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இணையினை நாம் கருதவேண்டியுள்ளது.மெல்லிசை இயக்கத்தை செயலில் காட்ட உத்வேகத்துடன் செயல்பட்டனர்.
இசை என்பது கலை என்ற அம்சத்தில் திரை இசையின் கலைப்பெறுமானம் முக்கியமானதாக நோக்கற்படவேண்டும் என்பதும் புதிய வாத்தியக்கருவிகள் கலையம்சத்துடன் பயன்படுத்த வேண்டும் என்கிற சீரியபார்வையும் இவர்களிடமிருந்தது என்பதும் அவதானிக்கப்பட வேண்டும்.
ஹிந்தி திரையிசையின் நவீனமும் , இனிமையுமிக்க இசை இந்தியாவெங்கும் மக்களின் கவனத்தை ஈர்த்த நிலையில் ,அது பற்றிப்பிடித்த வாத்திய இசைக்கோர்வைக்கு நிகராக தாங்களும் படைக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டிருந்தததையும் மெல்லிசைமன்னர்களிடம் காண்கிறோம்.
இவர்களது முன்னோடி இசையமைப்பாளர்களான ஜி.ராமநாதன், சுப்பைய்யாநாயுடு, எஸ் .வி. வெங்கட்ராமன் மற்றும் அக்காலத்திலிருந்த , பல இசை ஜாம்பவான்கள் தந்த இனிய பாடல்களுக்கு மத்தியில் இவர்களது மெல்லிசை முயற்ச்சிகள் அரும்பின.
தமிழ் திரைப்படத்தின் பொற்காலப் பாடல்கள் என்று அக்காலத்திய பாடல்களைச் சிலர் சொல்லுமளவுக்கு தமிழ் செவ்விசை சார்ந்த மெல்லிசைப்பாடல்கள் வெளிவந்து கொண்டிருந்த காலமது.அவர்களின் ஆதிக்கத்தை எங்கனம் மீறினார்கள் என்பதும் சிந்திக்க வைக்கும் ஒன்றாகும்.
அக்காலத்தில் வெளிவந்த சில பாடல்களை நாம் உற்று நோக்கும் போது அப்பாடல்களின் வலிமையை நாம் உணரும் அதே நேரம் இவர்கள் எதிர் கொண்ட நெருக்கடியையும் விளங்கிக்கொள்ளலாம்.
உதாரணத்திற்கு 1956 ம் ஆண்டு வெளிவந்த சில பாடல்கள் :
பூவா மரமும் பூத்ததே -படம்: நான் பெற்ற செல்வம் [1956]- பாடியவர்கள் : டி.எம்.சௌந்தரராஜன் + ஜிக்கி - இசை :ஜி.ராமாநாதன்
இனிதாய் நாமே இணைந்திருப்போமே -படம்: காலம் மாறிபோச்சு [1956]- பாடியவர்கள் : திருச்சி லோகநாதன் + ஜிக்கி - இசை :மாஸ்டர் வேணு
அழகோடையில் நீந்தும் இள அன்னம் -படம்: கோகிலவாணி [1956]- பாடியவர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் + ஜிக்கி - இசை :ஜி.ராமநாதன்
திரை போட்டு நாமே மறைத்தாலும் -படம்: ராஜா ராணி [1956]- பாடியவர்கள் : ஏ .எம்.ராஜா + ஜிக்கி - இசை :டி.ஆர் பாப்பா
ஆகா நம் ஆசை நிறைவேறுமா -படம்: தாய்க்குப் பின் தாரம் [1956]- பாடியவர்கள் : டி.எம்.சௌந்தரராஜன் + பி.பானுமதி - இசை :கே.வி மகாதேவன்
நாடகம் எல்லாம் கண்டேன் -படம்: மதுரைவீரன் [1956]- பாடியவர்கள் : டி.எம்.சௌந்தரராஜன் + ஜிக்கி - இசை :ஜி.ராமாநாதன்
1956 ம் ஆண்டு வெளிவந்த, மெல்லிசைமன்னர்களின் சில பாடல்கள் :
1956 ஆம் ஆண்டு வெளிவந்த படங்களில் பாசவலை , தென்னாலிராமன் ஆகிய இரண்டு படங்களுக்கு மேல்லிசைமன்னர்கள் இசையமைத்தார்கள்.
பாசவலையில் " உனக்கெது சொந்தம் எனக்கெது சொந்தம் ", " அன்பினாலே உண்டாகும் இன்ப நிலை ". போன்ற பாடல்கள் குறிப்பிடத்தக்கனவாகும்.
மக்கள் கவிஞன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் விஸ்வநாதன் ராமமூர்த்தியுடன் இணைந்த முதல் படம் பாசவலை ஆகும்.
தென்னாலி ராமன் படத்தில் இடம் பெற்ற " ஆடும் கலையெல்லாம் பருவ மங்கையர் " என்ற செவ்வியலிசைப்பாடலும், " உல்லாசம் தேடும் எல்லோரும் ஓர் நாள் சொல்லாமல் போவார் அல்லாவிடம் " என்ற பாடலும் , " அலை பாயும் கண்கள் அங்கும் இங்கும் " என்று பானுமதி பாடும் அரேபிய பாணியிலமைந்த பாடலும் , " சிட்டு போலே முல்லை மொட்டுப்போலே " என்று ஏ.பி.கோமளா பாடிய பாடலும் குறிப்பிடத்தக்கன.
1957 ம் ஆண்டு வெளிவந்த சில பாடல்கள்
*** வாடா மலரே தமிழ் தேனே -படம்: அம்பிகாபதி [1957]- பாடியவர்கள் : டி.எம்.சௌந்தரராஜன் + பி.பானுமதி - இசை :ஜி.ராமாநாதன்
*** ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா -படம்: மக்களைப் பெற்ற மகராசி [1957]- பாடியவர்கள் : பி.பி.ஸ்ரீநிவாஸ் + சரோஜினி - இசை :கே.வி. மகாதேவன்
*** கம கமவென நறுமலர் மணம் வீசுதே -படம்: சமய சஞ்சீவி [1957]- பாடியவர்கள் : பி.பி.ஸ்ரீநிவாஸ் + ஜிக்கி - இசை :ஜி.ராமாநாதன்
*** தேசுலாவுதே தென் மலராலே -படம்: மணாளனே மங்கையின் பாக்கியம் [1957]- பாடியவர்கள் : கண்டசாலா + பி.சுசீலா - இசை :ஆதி நாராயணராவ்
1957 ம் வருடம் வெளிவந்த இன்னும் சில பாடல்களை உற்று நோக்குவது பொருத்தமாக இருக்கும்
** பூவா மரமும் பூத்ததே பொன்னும் மணியும் விளைந்ததே - படம் :நான் பெற்ற செல்வம் [1957] -இசை :ஜி.ராமாநாதன்
** இன்பம் வந்து சேருமா - படம் :நான் பெற்ற செல்வம் [1957] - இசை :ஜி.ராமாநாதன்
** இக லோகமே இனிதாகுமே - படம் :தங்கமலை ரகசியம் [1957] -டி.ஜி.லிங்கப்பா
** அமுதைப்பொழியும் நிலவே நீ அருகில் வராததேனோ - படம் :தங்கமலை ரகசியம் [1957]
** இதய வானிலே உதயமானது - படம் :கற்புக்கரசி [1957] - இசை :ஜி.ராமாநாதன்
** கனியோ பாகோ கற்கண்டோ - படம் :கற்புக்கரசி [1957] - இசை :ஜி.ராமாநாதன்
** நிலவோடு வான் முகில் விளையாடதே - படம் :ராஜா ராணி [1957] - இசை :கே.வி. மகாதேவன்
** வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே - படம் :மல்லிகா [1957] -டி.ஆர்.பாபபா
** வானமீதில் நீந்தி ஓடும் வெண்ணிலாவே - படம் :கோமதியின் காதலன் [1957] - இசை :ஜி.ராமாநாதன்
** மின்னுவதெல்லாம் பொன்னென்று எண்ணி - படம் :கோமதியின் காதலன் [1957] - இசை :ஜி.ராமாநாதன்
மரபுணர்வு மேலோங்கிய இசையமைப்பாளர்களை ஒட்டியே மெல்லிசை மன்னர்களும் பாடல்களைத் தரமுனைந்ததை 1950 களின் இறுதிவரையில் காண்கிறோம்.கதையின் போக்கு மற்றும் பாத்திரங்களின் தன்மைகளுக்கு ஏற்ப வகைமாதிரியான பாடல்களைக் கொடுத்த முன்னையவர்கள் காட்டிய வழி தடத்திலேயே தங்கள் இசைப்பயணத்தை மேற்கொண்டு வாய்ப்புகளைத் தம் வசமாக்கினர்.
புதியவர்களுக்குரிய உத்வேகத்தையும் கற்பனை வீச்சையும் அக்காலப்பாடல்களில் நாம் காணவும் செய்கிறோம்.மரபு வழியில் நின்று கொண்டே தமது புதுமைக்கண்ணோடடத்தையும் மெதுவாக நகர்த்திய வண்ணமுமிருந்தனர்.
இளவயது சகபாடிகளும் , உத்வேகமும் ,இடர்களும் :
செவ்வியல் இசை சார்ந்த பாடல்களை சிறப்பாகக் கொடுத்துக்கொண்டிருந்த தமது முன்னோடிகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் அல்லது அவர்களுக்கு தாங்கள் சளைத்தவர்களல்ல என்று முனைப்பு காட்டும் வகையில் செவ்வியலிசை ராகங்களில் நேர்த்தியான பாடல்கள் தந்தமை முக்கிய கவனம் பெறுகின்றன
அம்பிகாபதி படத்தில் ஜி.ராமநாதன் இசையமைத்த " வாடா மலரே தமிழ் தேனே " என்ற புகழபெற்ற முகாரி ராகப்பாடலுக்கு இணையாக தம்மாலும் சோகம் ததும்பும் முகாரி ராகத்தில் " கனவு கண்டேன் நான் கனவு கண்டேன் " [ சிவகங்கைச் சீமை 1959] என்ற பாடலை அமைத்துக் காண்பித்தார்கள்.
"வாடா மலரே தமிழ் தேனே "பாடல் சோக ரசம் பொழியும் ராகத்தில் காதல் மகிழ்ச்சியை வெளிப்புத்தியது புதுமையாகப் பேசப்படட காலம் என்பதை நாம் மறந்துவிடலாகாது.
இவைமட்டுமல்ல ராகங்களின் அடிப்படையில் பாடல்கள் அமைப்பதிலும் ராகங்களின் பிரயோகங்களிலும் ஆழமும் , நுண்மையும் காட்டும் வல்லமை தங்ளுக்கு உண்டு என்று காட்டித் தம்மை நிலைநிறுத்திக் காண்பித்தார்கள்.அக்காலத்தில் பெருகியிருந்த செவ்வியலிசை சார்ந்த பாடல்களைக் கொண்டு நாம்நோக்குதல் பொருத்தமாக இருக்கும்.
மெல்லிசைமன்னர்களின் முன்னோடிகளினதும் அவர்களது சமகாலத்தவர்களினதும் பாடல்களுடன் ஒப்பிடுப்பார்த்தால் புரியும். சில எடுத்துக்காட்டுக்கள் :
எல்லாம் இன்ப மாயம் – படம்:மணமகள் [1951] – பாடியவர்கள் :பி.லீலா + எம்.எல்.வசந்தகுமாரி – இசை: சி.ஆர்.சுப்பராமன் நீயே கதி ஈஸ்வரி – அன்னையின் ஆணை 1958 – பாடியவர் : பி.லீலா – இசை : எஸ்.எம் சுப்பைய்யாநாயுடு
வேலன் வருவாரோடி வடிவேலன் – படம்: திருமணம் [1957] – பாடியவர்கள் : எம்.எல்.வசந்தகுமாரி – இசை: எஸ்.எம் சுப்பைய்யாநாயுடு
ஸ்ரீ சரஸ்வதி மாதா ஜெயம் அருள் – படம்: ராணி லலிதாங்கி [1958] – பாடியவர்கள் :பி.லீலா + டி.பி.ராமசந்திரன் – இசை: ஜி.ராமநாதன்
தாயே உன் செயல் அல்லவோ – படம்: இரு சகோதரிகள் [1957] – பாடியவர்கள் :பி.லீலா + ML வசந்தகுமாரி – இசை: எஸ்.ராஜேஸ்வரராவ்
நெஞ்சிருக்கும்வரைக்கும் நினைவிருக்கும் – படம்: ராணிசம்யுக்தா 1962 – பாடியர்: பி.சுசீலா – இசை : கே.வீ.மகாதேவன்- ராகம் சாருகேசி
ஆடும் அழகே அழகு – படம்:ராஜ ராஜன் [1956] – பாடியவர்கள் :சூலமங்கலம் சகோதரிகள் + பி .லீலா – இசை: கே.வீ.மகாதேவன்.
இது போன்ற செவ்வியல் இசைசார்ந்த பாடல்களுக்கு மெல்லிசைமன்னர்களும் ஈடு கொடுத்து இசைத்தார்கள் என்பது முக்கியமான அம்சமாகும்.
மெல்லிசைமன்னர்களின் இசையில் வெளியான செவ்வியலிசை சார்ந்த பாடல்களுக்கு சில எடுத்துக்காட்டுகள்:
01 ஆடும் கலை எல்லாம் பருவ மங்கையர் அழகு கூறும் கலையாகுமே- படம் : தென்னாலிராமன்[ 1956 ] - பாடியவர் : பி.லீலா ] காம்போதி ராகம் - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
02 கலைமங்கை உருவம் கண்டு காதல் கொண்டு - படம் :மகனே கேள் [1957] - பாடியவர்கள் : சீர்காகாழி கோவிந்தராஜன் + எம்.எல்.வசந்தகுமாரி - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி -ராகம் :கல்யாணி
இரு பெரும் பாடகர்கள் "சவால்" என்று சொல்லத்தக்க வகையில் இணையில்லாமல் பாடிய பாடல்.பாலும் , தேனும் கலந்த இனிமை என்று சொல்வார்களே, அது தான் இந்தப்பாடல் என்று துணிந்து சொல்லிவிடலாம்.
பட்டுக்கோட்டையாரின் கவிநயம் மிக்க பாடல் வரிகளும் கல்யாணி ராகமும் இணைந்த அசாத்திய பாடல் !
03 ஆடாத மனம் உண்டோ நடையாலங்காரமும் - மன்னாதிமன்னன் 1960 - பாடியவர்கள் : டி.எம்.சௌந்தரராஜன் + எம்.எல்.வசந்தகுமாரி - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி - ராகம் : லலிதா
03 முகத்தில் முகம் பார்க்கலாம் - தங்கப்பதுமாய் 1959 - பாடியவர்கள் : டி.எம்.சௌந்தரராஜன் + பி.லீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி ராகம் :கல்யாணி
04 அன்பினாலே உண்டாகும் இன்ப நிலை - பாசவலை 1956- பாடியவர் : சி.எஸ்.ஜெயராமன் - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி ராகம் :கரகரப்ரியா
05 மோகனைப் புன்னகை ஏனோ - பத்தினித் தெய்வம் 1956- பாடியவர்கள் : டி.எம்.சௌந்தரராஜன் ++ பி.சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி ராகம் :மோகனம்
06 வருகிறார் உனைத்தேடி மணவாளன் நானே என்று - பத்தினித் தெய்வம் 1956- பாடியவர்கள் : எம்.எல்.வசந்தகுமாரி + சூலமங்கலம் ராஜலட்சுமி - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி ராகம் :அடானா
கற்பனையான அரசகதைகளும் சரித்திர மற்றும் புராண கதைகளும் வெள்ளப்பெருக்கென ஓடிய காலம் மாறி சமூகக்கதைகள் சார்ந்த திரைப்படங்கள் ஊக்கம் பெறத தொடங்கியது 1950 களின் இறுதியிலேயேயாயினும் அவற்றின் தொடர்ச்சி 1960 களிலும் சில இடைச் செருகலாக ஆங்காங்கே வெளிவரவும் செய்தன என்பதையும் மறுப்பதற்கில்லை.
உணர்ச்சி பாவங்களை தங்களது இசையின் உயிர் ஒட்டமாகக் கருதிய இசையமைப்பாளர்களில் மெல்லிசைமன்னர்களும் முக்கியமானவர்களாக விளங்கினர்.உணர்வின் பாவங்களை இனிய மெட்டுக்களில் சலிப்பில்லாத வகையில் உயிரோட்டமாகப் படைப்பதில் முனைந்து செயல்பட்டார்கள்.பொருத்தப்பாடான சூழ்நிலைகளில் கதாபாத்திரங்களின் மன உணர்வை இசையில் காட்டிட மரபுவழியையும், புதுமையான அணுகுமுறைகளையும் பயன்படுத்தி வெற்றியும் கண்டனர்.
தங்கப்பதுமை படத்தில் , " வாய் திறந்து சொல்லம்மா " என்ற பாடலில் ஒரு மாறுதலாக ,மன எழுச்சி தரும் வகையில் உணர்ச்சிக்கு கொந்தளிப்பை ,மனதை கசக்கிப்பிழியும் அவஸ்தையை வெளிப்படுத்துகிறார்கள்,
வாய் திறந்து சொல்லம்மா உன் மக்களின் கதை கேளம்மா - படம் :தங்கப்பதுமை [1959] - பாடியவர்: பி.லீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி. செம்பும் கல்லும் தெய்வமென்று நம்புவோர்கள் பித்தரென்று
சித்தர்கள் உரைத்தமொழி மெய்தானோ? சிற்பிகள் செதுக்கி வைத்த
சித்திரச் சிலைகளுக்குள் தேவி வந்திருப்பதுவும் பொய்தானோ? ,,,,
என்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கடவுளை சீண்டும் சிந்தனை வரிகள் கொண்ட உணர்ச்சிமிக்க பாடல். தான் பாடிய பாடல்களிலேயே தனக்கு மிகவும் பிடித்த பாடல் இந்தப்பாடல் தான் என்று , மகத்தான பால பாடல்களைப் பாடிய பி.லீலா குறிப்பிட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
உணர்ச்சி பாவங்களை தங்களது இசையின் உயிர் ஒட்டமாகக் கருதிய இசையமைப்பாளர்களில் மெல்லிசைமன்னர்களும் முக்கியமானவர்களாக விளங்கினர்.உணர்வின் பாவங்களை இனிய மெட்டுக்களில் சலிப்பில்லாத வகையில் உயிரோட்டமாகப் படைப்பதில் முனைந்து செயல்பட்டார்கள்.பொருத்தப்பாடான சூழ்நிலைகளில் கதாபாத்திரங்களின் மன உணர்வை இசையில் காட்டிட மரபுவழியையும், புதுமையான அணுகுமுறைகளையும் பயன்படுத்தி வெற்றியும் கண்டனர்.
1950 களின் ஒரு போக்காக " ட டா , ட டா, ட டா .டாடடா " என்ற ஓசை பிரயோகம் பரவலாக பாடல்களில் பயன்படுத்தப்பட்டது.சில பாடல்களில் இசை கரடு முரடாகவும் இருந்தது என்பதும் ,குறிப்பாக 1950 களில் வந்த ஹிந்திப்பாடல்களின் மெட்டுக்களை நேரடியாகக் கொண்டமைந்த பாடல்களில் இத்தன்மையை நாம் காண்கிறோம்.
1950 களின் திரையின் மெல்லிசைப்போக்கை அவதானிப்பவர்கள் புதிய போக்கு ஒன்று அங்கொன்றும் , இங்கொன்றுமாகச் சில பாடல்கள் மூலம் மெதுவாக வளர்ச்சி அடைந்து வந்ததை அவதானிக்க முடியும்.
ஒருபக்கம் பழமையை உயர்த்திப்பிடித்த அதே நேரம் மறுபக்கம் புதுமையையும் ஆங்காங்கே உயர்த்திப்பிடித்து அற்புதமான பாடல்களைத் தந்து இசைரசிகர்களைக் கிறங்க வைத்தவர்கள் மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி !
அதன் சாட்சியாக சில பாடல்களை இங்கே உதாரணம் காட்டலாம்.
01 விண்ணோடும் முகிலொடும் விளையாடும் வெண்ணிலவே- படம்: புதையல் [1957] - பாடியவர்கள் :சி.எஸ்.ஜெயராமன் + பி.சுசீலா - இசை : விஸ்வநாதன் + ராமமூர்த்தி
02 தென்றல் உறங்கிய போதும் - படம்: பெற்ற மகனை விற்ற அன்னை [1957] - பாடியவர்கள் :ஏ.எம்.ராஜா + பி.சுசீலா - இசை : விஸ்வநாதன் + ராமமூர்த்தி
03 துள்ளி துள்ளி அலைகள் எல்லாம் - படம்: தலை கொடுத்தான் தம்பி [1957] - பாடியவர்கள் :ஏ.எம்.ராஜா + பி.சுசீலா - இசை : விஸ்வநாதன் + ராமமூர்த்தி 04 கண்மூடும் வேளையிலும் கலை என்ன கலையே - படம்: மகாதேவி [1957] - பாடியவர்கள் :ஏ.எம்.ராஜா + பி.சுசீலா - இசை : விஸ்வநாதன் + ராமமூர்த்தி 05 தங்க மோகன தாமரையே - படம்: புதையல் [1957] - பாடியவர்கள் :பி.சுசீலா - இசை : விஸ்வநாதன் + ராமமூர்த்தி
06 என் வாழ்வில் புதுப்பாதை கண்டேன் - படம்: தங்கப்பதுமை [1957] - பாடியவர்கள் :பி.சுசீலா - இசை : விஸ்வநாதன் + ராமமூர்த்தி
07 சின்னஞ் சிறு கண்மலர் - படம்: பதி பக்தி [1958] - பாடியவர்கள் :பி.சுசீலா - இசை : விஸ்வநாதன் + ராமமூர்த்தி
08 வீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே - படம்: பதி பக்தி [1958 - பாடியவர்கள் :டி.எம்.சௌந்தரராஜன் - இசை : விஸ்வநாதன் + ராமமூர்த்தி
08 ராக் அண்ட் ரோல் - படம்: பதி பக்தி [1958 - பாடியவர்கள் :ஜெ.பி.சந்திரபாபு + வி.என்.சுந்தரம் - இசை : விஸ்வநாதன் + ராமமூர்த்தி 09 மழை கூட ஒருநாளில் - படம்: மாலையிடட மங்கை [1959] - பாடியவர்கள் :எம்.எஸ்.ராஜேஸ்வரி - இசை : விஸ்வநாதன் + ராமமூர்த்தி
09 இல்லறம் ஒன்றே நல்லறம் என்றே - படம்: மாலையிடட மங்கை [1959] - பாடியவர்கள் :பி.சுசீலா - இசை : விஸ்வநாதன் + ராமமூர்த்தி
10 செந்ததமிழ் தென் மொழியாள் - படம்: மாலையிடட மங்கை [1959] - பாடியவர்கள் :டி.ஆர். மகாலிங்கம் - இசை : விஸ்வநாதன் + ராமமூர்த்தி
11 நானன்றி யார் வருவார் படம்: மாலையிடட மங்கை [1959] - பாடியவர்கள் :டி.ஆர். மகாலிங்கம் + ஏ.பி.கோமளா - இசை : விஸ்வநாதன் + ராமமூர்த்தி
செவ்வியல் இசையின் இறுக்கம் தளர்ந்து ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த மெல்லிசைப் போக்கின் வேகத்தைச் சற்று அழுத்தம் கொடுத்து நகர்த்தியதுவே மெல்லிசைமன்னர்களின் பாரிய பங்களிப்பாக இருந்தமை இக்காலகடடத்தின் பங்களிப்பாக இருந்தது.
வெற்றிக்கனிகளைதட்டிப்பறிக்க விந்தைதரும் மாயாஜாலக் காடசிகளுடன் அமைந்த புராணக்கதைகள் மட்டுமல்ல சமகால சமூக வாழ்வை அழகுடன் சொன்னாலும் வெற்றியளிக்கும் என்பதை இயக்குனர் ஸ்ரீதர் கல்யாணப்பரிசு [1959] படத்தின் மூலம் எடுத்துக்காட்டியமை தமிழ் திரை வரலாற்றில் புதிய உடைப்பை உண்டாக்கியது.அப்பாடத்தின் அபார வெற்றியும் , பாடல்களின் மெல்லிசை ஓங்கிய தன்மையும் மெல்லிசைக்கான புதிய பாதையை அகலத்திறந்து விட்டது எனலாம். கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் , இசையமைப்பாளர் ஏ.எம்.ராஜா புகழின் உச்சிக்கு சென்றார்கள்.ஏ.எம்.ராஜா சிறந்த பாடகர் மட்டுமல்ல சிறந்த இசையமைப்பாளர் என்ற அடையாளமும் பெற்றார்.
கல்யாணப்பரிசு படத்தில்
" வாடிக்கை மறந்ததும் ஏனோ "
" ஆசையினாலே மனம்"
" உன்னைக்கண்டு நான் ஆட"
" துள்ளாத மனமும் துள்ளும்
" காதலிலே தோல்வியுற்றான்"
போன்ற பாடல்கள் மெல்லிசையின் உயிர்த்துடிப்புகள் மேலோங்கி நிற்கும் சாகாவரம் பெற்ற பாடல்களாக இன்றும் விளங்குகின்றன.
"வாடிக்கை மறந்ததும்" ஏனோ பாடலில் சைக்கிள் மணி ஒலியும் ,"ஆசையினாலே மனம்" பாடலில் I see ,Really ,Sorry ஆங்கில வார்த்தைகளை கல்லூரியில் படிக்கும் காதலர்கள் பாடுவதாக சமயோசிதமாக புதுமையாக ஆங்காங்கே பயன்படுத்திதுடன் ஹம்மிங்கையும் இணையாகப் பயன்படுத்திய பாடல்.
இயக்குனர் ஸ்ரீதர் , இசையமைப்பாளர் ஏ.எம்.ராஜா கூட்டணியில் தொடர்ந்து வெளிவந்த தேன் நிலவு [1960] ,விடிவெள்ளி [1960] மற்றும் அன்புக்கோர் அண்ணி [1960] போன்ற படங்களில் மெல்லிசைப்பாடல்கள் விட்டுவிடுதலையாகிப் பறந்து கொண்டிருந்தன.
தேன்நிலவு படத்தில் " சின்ன சின்ன கண்ணிலே வண்ண வண்ண ஓவியம் " " நிலவும் மலரும் பாடுது " " காலையும் நீயே மாலையும் நீயே " " மலரே மலரே தெரியாதா " " ஊர் எங்கு தேடினேன் " " பாட்டுப் பாடவா"
விடிவெள்ளி படத்தில்
" எந்நாளும் வாழ்விலே " " பண்ணோடு பிறந்தது தாளம் " " இடை கையிரண்டில் ஆட " " நினைத்தால் இனிக்கும் சுப தினம் " " கொடுத்துப்பார் பார் பார் " " காரு சவாரி ஜோரு "
" நான் வாழ்ந்ததும் உன்னாலே "
அன்புக்கோர் அண்ணி படத்தில் " ஒருநாள் இது ஒரு நாள் உனக்கும் எனக்கும்"
ஆடிப்பெருக்கு படத்தில் " கண்ணாலே பேசும் காதல் நிலையாகுமா "
" பெண்களில்லாத உலகத்திலே "
" காவேரி ஓரம் கவி சொன்ன காதல் "
" கண்ணிழந்த மனிதர் முன்னே ஓவியம் வைத்தான் "
" அன்னையின் அருளே வா வா வா "
" புரியாது புரியாது வாழ்க்கையின் ரகசியம் புரியாது "
" தனிமையிலே இனிமைக்கான முடியுமா "
உற்று நோக்கினால் எளிமையும் , இனிமையும் , குதூகலமும் ஒன்று கலந்த மெட்டுக்களில் , எளிய நடையிலமைந்த பாடல் வரியும் , மேலைத்தேய இசையைத் தொட்டு செல்லும் இயல்பு குன்றாத காதல் உணர்வும், துயரத்தில் மூழ்கடிக்கும் சோகரச இலக்கணமுமிக்க பாடல்களை மெல்லிசையின் போக்கிலமைந்திருப்பதையும் அவதானிக்கலாம்.
" ஏ.எம் ராஜா , திரையிசையில் ஒரு முன்னோடி.அவருக்கு முன்னிருந்த இசையை மாற்றி , வடநாட்டுப்பாணியை ஆரம்பித்து வெற்றியும் கண்டார்.ராஜாவின் சங்கீதம் மேன்மை , இனிமை , மென்மை ஆகிய மூன்றின் சங்கமம் " என்பார் அவரது சமகாலப் பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ்.[ திரை இசை அலைகள் -1 , வாமனன் ]
இக்காலங்களில் மெல்லிசைப்பாங்கை முன்னிறுத்திய முக்கிய இசையமைப்பாளராக முன்னணிக்கு வந்துகொண்டிருந்தவர் மெல்லிசைமன்னர்களின் சமகாலத்தவரான டி.ஜி.லிங்கப்பா. 1950 களிலிருந்தே சிறந்த பல பாடல்களைத் தந்தவர் .அவர் இசையமைத்த சில பாடல்களை உற்று நோக்குவது பொருத்தமாகும்.
ஓ ,,ஜெகமத்தில் இன்பம் தான் வருவதும் எதனாலே - [மோகனசுந்தரம் 1950]
பாட்டு வேணுமா உனக்கொரு பாட்டு வேணுமா - [ மோகன சுந்தரம் 1950] மதுமலரெல்லாம் புதுமணம் வீசும் - [கல்யாணம் பண்ணியும் பிரமச்சாரி 1954]
தென்றலே வாராயோ இன்ப சுகம் தாராயோ - ஒரு நாள் 1956]
அமுதை பொழியும் நிலவே - [ தங்கமலை ரகசியம் 1957]
இக லோகமே இனிதாகும்- [ தங்கமலை ரகசியம் 1957]
கானா இன்பம் கனிந்ததேனோ - சபாஷ் மீனா 1958]
சித்திரம் பேசுதடி எந்தன் சிந்தை மயங்கித்தாடி - [சபாஷ் மீனா 1958] தென்றல் உறங்கிடக் கூடுமடி எங்கள் சிந்தை உறங்காது - [ சங்கிலித் தேவன் 1960]
படிப்புத் தேவை முன்னேற படிப்புத் தேவை - [சங்கிலித் தேவன் 1960 ] தாமரைப் பூ குளத்திலே சாயங்கால பொழுதிலே [ முரடன் முத்து 1965] ஏ.எம்.ராஜா ,டி.ஜி.லிங்கப்பா போன்றவர்கள் மெல்லிசைமுன்னோடிகள் என்பதையாரும் மறுத்துவிட முடியாது.துரதிஷ்டாவசமாக ஏ.எம்.ராஜா ஒதுக்கப்படடமையும் , அல்லது ஓதுங்கியமையும் , டி.லிங்கப்பா , இயக்குனர் பி.ஆர் .பந்துலுவால் கன்னடப்படங்களில் சிறப்பாகப் பயன்படுத்தப்படடமையாலும் தமிழ் சினிமா இரு மாபெரும் இசையமைப்பாளர்களின் இசையை இழந்தது.
இசையமைப்பாளர்களின் திறமை ஒரு பக்கம் இருந்தாலும் அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்திய இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் அளவுக்கதிகமான தலையீடும் இனிய இசை தரமுனைந்தவர்களுக்கு கொடுக்கப்படட இடையூறுகள் கசப்பாகவே இருந்தததை பலரும் பதிவு செய்திருக்கிறார்கள்.இது பற்றி இசை ஆய்வாளர் திரு.வாமனன் "திரை இசை அலைகள் " நூலில் பின்வருமாறு எழுதுகிறார்.
ஏ.எம்.ராஜா
" படித்து படம் பெற்ற ராஜா , கண்டிப்பும் கட்டுப்பாடும் மிக்கவர்.தன் பணியைக் குறித்து படு சீரியஸான கண்ணோட்டம் உடையவர்.தன்னுடன் பணியாற்றுபவர்களும் அப்படியே இருக்க வேண்டும் என்று நினைப்பார்.சினிமா உலகின் நெளிவு சுழிவுகளும் , சினிமா நபர்களிடம் பழகும் போது காட்ட வேண்டிய நீக்கு போக்குகளும் ராஜாவுக்கு கைவராத விஷயங்கள்.....தான் எதிர்பார்க்கிற சூழ்நிலை ஒரு இடத்தில் இல்லை என்றால் ஒலிப்பதிவுக் கூடத்தை விட்டு விட்டு பேசாமல் வீட்டுக்கு சென்று விடக்கூடியவர் ராஜா."
டி.ஜி.லிங்கப்பா கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி படத்திற்கு இசையமைப்பதில் லிங்கப்பாவுக்கு ஒரு சங்கடம் இருந்தது.பந்துலுவுக்கு மெட்டுப் போட்டுக் காட்டுவார்.ஓகே ஆகும்.நீலகண்டன் அவற்றை நிராகரிப்பார்.வேறு மெட்டுக்கள் போடச் சொல்வார். " நீலகண்டன் சொல்ற மாதிரிச் செய்திடு " என்று இயக்குனருக்கு வீட்டுக் கொடுத்தார் தயாரிப்பாளர் பந்துலு. " கர்நாடக பாணியில் லைட்டா கொடுத்தா பந்துலுவுக்குப் பிடிக்கும், ஆனா நீலகண்டன் பாமரமான இசையைத் தான் கேப்பார்.
நீலகண்டனுக்கு இருந்த இன்னொரு பழக்கமும் லிங்கப்பாவிற்கு நெருடலாக இருந்திருக்கிறது.
லிங்கப்பா மெடட்டமைத்தவவுடன் திரைப்படக் கம்பனியில் வேலை பார்க்கும் டிரைவர் ,ஆபீஸ் பையன் எல்லோரையும் கூப்பிட்டு " எப்படி இருக்கு " என்று இசையமைப்பாளரின் முகத்திற்கு நேரேயே கேட்பாராம் நீலகண்டன். " நான் சங்கீத பரம்பரையியிலிருந்து வந்தவன்யா ...என் ரத்தத்திலே இசை ஓடுது .......நீ யார் யாரையோ கேட்டுக்கிட்டிருக்கே .!?
இது போன்ற ஒரு சம்பவத்தை மெல்லிசைமன்னர் விஸ்வநாதன்," நான் ஒரு ரசிகன் " என்ற விகடன் தொடரில் தனக்கு நேர்ந்த அனுபவத்தை மிகுந்த மரியாதையுடன் பின்வருமாறு எழுதுகிறார். "...கொஞ்ச நாட்கள் கழித்து வாசன் ஸாரிடமிருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது.நானும் ராமமூர்த்தி அண்ணாவும் அவரைப் பார்க்கச் சென்றோம்." வாருங்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி அவர்களே !" என்னு வெளியில் வந்து எங்களை அவரே வரவேற்றார். உள்ளே அழைத்து உட்க்காரச் சொன்னார் பெரியவர் என்ற மரியாதையுடன் நாங்கள் நின்றுகொண்டே இருந்தோம். " நான் உட்காரச் சொல்றேன் .. உட்காருங்க .." என்றார் அன்போடு.நாங்கள் உட்கார்ந்தோம்.
" நீங்கள் பல படங்களுக்கு இசையமைச்சு நல்ல புகழோடு இருக்கீங்க ..என்னோட அடுத்த தயாரிப்பு " வாழ்க்கைப்படகு "! இந்தப் படத்துக்கு உங்களைத்தான் மியூசிக் டைரக்டரா போடணும்னு எனக்கு வேண்டியவங்க, டிஸ்ரிபியூட்டர்கள் , நடிகர்கள் ,, ஏன் என் வீட்டில்கூட சொல்லிட்டாங்க... நான் உங்களை ரொம்ப இம்சை பண்ணுவேன். நான் நிறைய ஆட்களை வைச்சிருக்கேன் . இது நொள்ளை அது நொள்ளை குற்றம் சொல்லிக்கிட்டிருப்பாங்க .." என்று வாசன் சார் சொன்னார்.எனக்கு ஒன்றுமே புரியலே.ராமமூர்த்தி அண்ணனோ தொடய்யக் கிள்ளி " என்ன ...விசு .. போயிடலாமா ?"னு கிசுகிசுத்தார்.முழுசாத்தான் கேட்டு தெரிஞ்சுக்குவோம்னு " ஏன் சார் அப்பாடிச் சொல்றீங்க?"னு நான் கேட்ட்டேன்.
" இங்கே நிறைய ஆட்களுக்கு சம்பளம் கொடுத்து வெச்சிருக்கேன் அபிப்பிராயம் சொல்றதுக்கு .. இவங்கள்லாம் ஏதாவது சொல்லணுமென்கிறத்துக்காக சொல்வாங்க.... உங்களை ரொம்ப " பன்ச் " பண்ணுவாங்க .." பன்ச் " பண்ணுவாங்க ..இதையெல்லாம் நீங்க சகிச்சுப்பீங்களா ?னு வாசன் சார் கேடடார் .
யோசிக்கிறதுக்கு இரண்டு நிமிட டயம் கேட்டேன். " நான் வேணும்னா வெளியே போய் இருக்கட்டுமா ?" ன்னார் அவர் ரொம்ப பெருந்தன்மையோட. நாங்க போறதா சொல்லிட்டு வெளியே வந்தோம்.
மெல்லிசைமன்னருடன் இறுதிக்காலம் வரை பணியாற்றிய கவிஞர் காமகோடியான் எம்.எஸ்.வி பற்றிய ஒருசம்பவத்தை பின்வருமாறு நினைவு கூறுவதை பாருங்கள்
காமகோடியன் : பார் மகளே பார் படத்திலே , கவ்ஞர் கண்ணதாசன் வந்தாச்சு ,ஒரு பாட்டு எழுதி முடிச்சாச்சு.எம்.எஸ்.வீ நல்லா விசில் பண்ணுவாரு,நீரோடும் வைகையிலே பாடலை விசிலிலேயே பண்ணிட்டிருக்கிராரு ..நால்லாயிருக்கேடா பல்லவி போட்டிடுவோம் என்கிறார் கண்ணதாசன் ! கவிஞரே உங்க வேலை இன்னகைக்கு முடிஞ்சுது.நாளைக்கு உட்காருவோம்.இது வந்து full song விசிலிலேயே பண்ணப்போறேன்.டேய் ,டேய் நல்லாயிருக்கிடா டுயூன் ,வார்த்தை போட்டா நல்லாயிருக்கும்.இதை புதிசா பண்ணுவோமே, நாளைக்கு சந்திப்போம்! கண்ணதாசன் எழுந்திரிச்சு போயி நேரா சிவாஜி வாகினியில் இருப்பதை அறிந்து அங்கே வாகினியிக்கு கார் எடுத்திட்டு போயி [ரெக்கார்டிங் நடப்பது ஏ.வீ. எம்மில் ] சிவாஜி சாரை கூட்டிக்கிட்டு நேரே இங்கே வந்திட்டாரு! சிவாஜி எம் எஸ் வீயை பார்த்து " என்னமோ ஒரு டியூன் போட்டியாமே , எங்கே ஒருக்கா வாசிச்சுக் காட்டு !இவ்வளவு அருமையான டுயூனுக்கு 4 நிமிஷம் விசிலே அடிச்சா சனங்களுக்கு போய் சேருமா பாட்டு !? கவிஞர் எழுதட்டும்ன்னு சொல்லிட்டு போயிட்டாரு !
[Endrum Nammudan MSV - 16/08/2015 | SEG 01 ]
1950 களில் மெல்லிசைப்பாங்கில் தங்கள் தனித்துவத்தை அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளிப்படுத்த மெல்லிசைமன்னர்கள் பாகப்பிரிவினை பாடல்களால் தனிக்கவன பெற்றார்கள் என்று சொல்லலாம்.பதிபக்தி , தங்கப்பதுமை போன்ற படங்களில் தெறித்த மெல்லிசை உருவ அமைப்பு முழுமையாக ஹிந்தி திரை இசைக்கு நெருக்கமாக மாறி தமிழ் திரையிசையை நகர்த்தியது.
கதைகளின் நாயகர்களாக நடிப்பது மாறி தாங்கள் அடைந்த புகழால் மட்டுமல்ல, தங்கள் அரசியல் இயக்கத்தின் பின்புலத்தோடும் தமிழ் திரையின் மிகப்பெரிய நாயகர்களாக எம்.ஜி.ஆரும், சிவாஜியும் முன்னணிக்கு வந்தார்கள்.
கதைகளில் நடிப்பது என்பது மாறி இந்த நடிகர்களுக்காக செயற்கையாகக் கதைகள் தயாரிக்கப்படும் புதிய கலாச்சாரம் தமிழ் திரையில் உதயமாக இருநடிகர்களும் மூல காரணமாயினர்.
வீரதீர சாகசம் புரிபவராகவும் , தாயன்புமிக்கவராகவும் ,நேர்மை, வாய்மையாளனாகவும் ,ஏழைகளின் நண்பனாகவும் , காதலிகளால் மட்டும் காதலிக்கப்படும் கதாநாயகனாகவும் எம்.ஜி.ஆரும் , துன்பத்துயரில் தவிக்கும் கதாநாயகனாகவும் , சோகத்தை வாரிச்சுமக்கும், நாயகனாகச் சிவாஜியும் தங்களுக்கெனத் தனிப்பாதையில் வலம்வரத் தொடங்கிய காலம்.இந்நிலையில் படித்த சாதாரண மனிதர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாயகராக ஜெமினி கணேசனும் முன்னணிக்கு வந்தார் . 1950 களில் மெல்லிசைப்பாங்கில் தங்கள் தனித்துவத்தை அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளிப்படுத்த மெல்லிசைமன்னர்கள் பாகப்பிரிவினை பாடல்களால் தனிக்கவனம் பெற்றார்கள் என்று சொல்லலாம்.புதையல் , பதிபக்தி , தங்கப்பதுமை போன்ற படங்களில் தெறித்த மெல்லிசை உருவ அமைப்பு முழுமையாக ஹிந்தி திரை இசைக்கு நெருக்கமாக மாறி தமிழ் திரையிசையை நகர்த்தியது.
பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து , கவிஞர் கண்ணதாசனால் தயாரிக்கப்படட "மாலையிடட மங்கை " பட இசையால் மெல்லிசைமன்னர்கள் பெரும் புகழ் அடைந்தார்கள்
1950 களில் வீச ஆரமபித்த மெல்லிசைகாற்றில் ஆங்காங்கே புது புது நறுமணங்களை தூவி ரசிகர்களைக் கவர்ந்து புதிய பாய்ச்சலை நிகழ்த்தியவர்கள் மெல்லிசைமன்னர்கள் என்று சொல்வதே பொருத்தமானதாக இருக்கும்.
1950 களிலேயே தலைதூக்கிய தெலுங்கு திரையின் மெல்லிசை, பத்து வருடங்கள் முன்னோக்கியதாவே இருந்தமை மெல்லிசைமன்னர்களுக்கு உத்வேகம் கொடுத்திருக்கும் என நம்பலாம். தெலுங்கில் மட்டுமல்ல தமிழிலும் தெலுங்கு இசையமைப்பாளர்கள் இசையமைத்து சிறந்த பாடல்களையும் தந்து கொண்டிருந்தார்கள்.தென்னிந்திய இசையுலகில் எழுந்த இசையலையின் போக்குகளையும் மெல்லிசைமன்னனர்கள் பற்றுக்கோடாகக் கொண்டிருப்பர் என்றும் கருதலாம். எனினும் தெலுங்கு திரையிசை மெல்லிசைக்கு மடைமாற்றம் பெற்ற வேகத்தில் நிகழாமல் , தமிழில் அதற்கான காலம் 1960 களில் கனியும் வரை பொறுத்திருக்க நேர்ந்தது.
தமிழ் திரையிசையின் முன்னோடிகளின் வழியில் சற்று விலகிவர முனைந்ததும் ஹிந்தித் திரைப்பட இசையின் அதிர்வலையிலிருந்து மீள முயற்சி செய்ததுடன் அதற்கு நிகராக பாடல்களை உருவாக்குவதிலும் முனைப்புக் காட்டினார்கள்.
பட்டுக்கோட்டையாருடனான இணைவும் , வாழ்வியல் பாடல்களும் :
1950 களின் நடுப்பகுதியில் மெல்லிசைமன்னர்களின் இசைப்பயணத்தில் இணைந்து கொண்டு திரைப்பாடல் அமைப்பில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் !
மரபில் உதித்து , புதுமையில் நாட்டம் கொண்ட மெல்லிசைமன்னர்களின் இசையுடன் மரபில் நின்று கொண்டே சொல்லும் கருத்தில் புதுமையும் காட்டிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் இணைவும் புதிய அலையைத் தொடக்கி வைத்தது.
பாரதி, பாரதிதாசன் போன்ற மகாகவிகளின் தொடர்ச்சியே பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
பாரதியின் அடியொற்றி பல கருத்துக்களை கூறியவர் என்ற முறையில் அதற்குப் பொருத்தமான இசை வடிவம் கொடுத்த இசையமைப்பாளர்களில் மெல்லிசைமன்னர்களுக்கும் தனியிடம் உண்டு என்பதை யாரும் மறுத்துவிட முடியாது.
பாட்டு என்பதை பாங்கோடு தந்த பட்டுக்கோட்டையாரின் பாடல்கள் சமூக நலன் , ,மக்கள் நலன் என்ற அடிப்படையில் நாட்டார் பாடலின் வேரில் முகிழ்த்தெழுந்தவையாகும்.மண்வளச் சொற்களை சினிமாப்பாடல்களில் அள்ளி,அள்ளிப் பூசியதுடன்,மண்ணின் உணர்ச்சி ததும்பும் பாமரப்புலமையை பண்டிதர்களும் வியக்கும் வண்ணம் புனைந்தவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். காவிய நடைகளிலிருந்து மாறி உயிர்த்துடிப்புள்ள பொதுஜனங்களின் மொழியில் பாடல்கள் பிறந்தன.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள் பற்றி பின்வருமாறு விவரிக்கிறார் அறிஞர் நா.வானமாமலை.
"சமூக மாறுதல், சமூக உணர்ச்சிகளுக்கேற்ப பாடலைகளைத் தோற்றுவிப்பவன் நாட்டார்கவி. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் போல.அவர்களுடைய உணர்ச்சிகள் , மதிப்புகள் நலன்களுக்கு ஏற்றார் போல அவர்கள் ஏற்றுக்கொள்ளத் தகுதியானவற்றை அவர் பாடினார்.அது ஏற்றுக்கொள்ளப்பட்டு , நாட்டாரது போர் முழக்கமாயிற்று.அது நாட்டார் ரசனைக்காக மட்டுமல்ல அது சினிமா பார்க்கிற எல்லா வர்க்கங்களுடைய அனுபவத்திற்காகவும் எழுதப்பட்டதால் , நாட்டார் பண்பாட்டுக்கருவை , நாட்டார் மொழியிலும் , சிறிதளவு இலக்கிய மொழியிலும் பாடினார்.நாட்டுப்பாடல் எழுத்தறிந்தவர் அனுபவிப்பதற்காக உருமாறுகிறது.இதுவும் நாட்டுப்பாடலே .கல்யாணசுந்தரம் பாடல்கள் நாட்டு மக்கள் உணர்வு , நாட்டு மக்கள் பண்பாடு மதிப்புக்கள் , அவர்கள் ஆர்வங்கள் இவற்றை வெளியிடுகின்றன." [தமிழர் நாட்டுப்பாடல் - பேராசிரியர் நா. வானமாமலை ]
தமிழ் திரையைப் பொறுத்தவரையில் உடுமலை நாராயணகவி, கம்பதாசன் , மருதகாசி , தஞ்சை ராமையாதாஸ், கண்ணதாசன் போன்றவர்களை நாட்டுப்புறப் பாங்கில் பாடல்கள் புனைந்தவர்களில் முக்கியமானவர்களாகக் கருதலாம்.ஆயினும் இவர்களில் புதிய சகாப்தத்தை, சாதனையை படைத்தவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்றால் மிகையில்லை.அவரின் பாட்டுத்திறத்தை சரியான வழியில் மதிப்பிடுகிறார் கம்யூனிஸ்ட் தலைவரும் சிறந்த கலைஞருமான தோழர் ப.ஜீவானந்தம் அவர்கள். /// சராசரி மனிதனின் சாதாரண விருப்பு வெறுப்புக்களையும் மன அசைவுகள் உணர்ச்சிப் பெருக்குகளையும் எளிமையாக நேர்பாங்காக உயிர் துடிப்பாகச் சொல்லும் மரபே நாடோடி மரபு. இதில் சிக்கலான கருத்துக்களுக்கும், உருவங்களுக்கும் இடமில்லை. எளிய விவசாய நாகரிகத்தின் அடிப்படையான உணர்வுகளை வெளியிட்டு வந்திருப்பதையே இந்த மரபில் பார்க்கிறோம். சிக்கல் நிறைந்த நிகழ்கால வாழ்க்கைத் தோற்றத்தை மிகச் சாதாரண கண்ணோட்டத்தில் வைத்துக் கூறுவதும், கேட்பவரின் நெஞ்சை உடனடியாகக் கவரும் விதத்தில் நேரான வழி வழியான ஆற்றலோடு வெளியிடுவதும் நாடோடி மரபின் இரட்டைக் கூறுகள். .........சிந்து, காவடிச்சிந்து, கும்மி, குறவஞ்சி, பள்ளு, ஆனந்தக் களிப்பு, தெம்மாங்கு, கண்ணிகள் முதலிய பாடல் உருவகங்களின் தோற்றங்களும் சித்தர்கள், தாயுமானவர், இராமலிங்கனார், பாரதி, கவிமணி, பாரதிதாசன் போன்றோர் தத்துவ, சமய, லௌகிக, அரசியல், சமுதாயக் கருத்தோட்டங்களை வெளியிட மேற்படி உருவகங்களையெல்லாம் வளர்த்துப் பயன்படுத்திய முயற்சியும் நாம் கவனத்தில் கொள்ளத்தக்கவை. ....... அவர் பாடல்களில் நான் மிகச் சிறந்த இரண்டு கூறுகளைக் காண்கிறேன். ஒன்று நாடோடிப் பரம்பரை,அதாவது வழிவழி மரபு மற்றொன்று நவீன முறையில் வெளியிடுதல்[ Modern எஸ்பிரஸின் ] வழிவழி மரபையும் நவீன உணர்வையும் இணைத்துப் பாட்டுத்திறம் காட்டுவது இன்று மிகமிக முக்கியத் தேவையாக அமைந்துவிட்டது.// என்று விளக்குகிறார் ப.ஜீவானந்தம் . அந்தவகையில் சிறப்பு மிக்க பட்டுக்கோட்டையின் பாட்டுத்திறம் கும்மி , பள்ளு , காவடி சிந்து , உழவர் பாட்டு , லாவணி , விடுகதை , தத்துவம் , கதைப்பாடல்,தாலாட்டு என நாட்டுப்புற மரபின் அத்தனை அம்சங்களையும் கொண்டு மண்வாசனையுடன் வெளிப்பட்டிருக்கிறது.
சினிமாப்பாடல்களில் பெரும்பான்மையானவை மெட்டுக்கு எழுதப்படும் வழமையில் ,அந்த மெட்டுக்களையும் தாண்டி, பாடல் வரிகளை வாசிக்கும் போது, பாடலின் கருத்தில் எளிமையும், சிக்கலின்றி புரிந்து கொள்ளும் தன்மையும், கருத்துத் தெளிவும் நிறைந்தவையாக இருப்பதை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்களில் மிக இயல்பாய் காணலாம்.
மேற்குறிப்பிடட நாட்டுப்புறப் பாடல் வகைகளை மையமாக வைத்து மெல்லிசைமன்னர்களும் பட்டுக்கோட்டையாரும் இணைந்து தந்த பாடல்கள் ஒன்றையொன்று பிரிக்கமுடியாத வண்ணம் மிக இயல்பாய் அமைத்திருக்கின்றன.பாடல்களின் எளிமையும், கருத்துச்செறிவும் அவை மெட்டுக்கு எழுதப்பட்ட பாடல்கள் போலல்லாது எழுதப்பட்ட வரிகளுக்கு இசை அமைக்கப்படட பாடல்கள் போலவே திகழ்கின்றன.
மெல்லிசைமன்னர்களுடன் பட்டுக்கோட்டையாரின் அறிமுகம் பாசவலை படத்தில் ஏற்படுகிறது.
அந்தப்படத்திலேயே குட்டி ஆடு தப்பிவந்தால் குள்ளநரிக்குச் சொந்தம்! குள்ளநரி மாட்டிக் கிட்டால் கொறவனுக்குச் சொந்தம்! தட்டுக்கெட்ட மனிதர் கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்.... என்று தொடங்கும் பாடலில் நாட்டுப்புற பழமொழியையும் ,
பாகப்பிரிவினை படத்தில் "புள்ளையாரு கோயிலுக்குப் பொழுதிருக்க வந்திருக்கும் புள்ளை யாரு _ இந்தப் பிள்ளை யாரு?
என்ற பாடலில் லாவணி பாடலையும் , அமுதவல்லி படத்தில் [1958] ஆடைகட்டி வந்த நிலவோ - கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ. என்ற பாடலில் காவடி சிந்து பாடலையும்,
பதிபக்தி படத்தில் சின்னஞ்சிறு கண்மலர் செம்பவழ வாய்மலர் சிந்திடும் மலரே ஆராரோ! வண்ணத் தமிழ்ச்சோலையே! மாணிக்க மாலையே ஆரிரோ… அன்பே ஆராரோ!
என்ற தாலாட்டையும்,
தமிழ் நாட்டின் கும்மிப்பாடலை சின்னச் சின்ன இழைபின்னிப் பின்னிவரும் சித்திரக் கைத்தறிச் சேலையடி – நம்ம தென்னாட்டில் எந்நாளும் கொண்டாடும் வேலையடி தய்யத் தய்யா தத்தத்தானா தய்யத் தத்தத்தானா...
என்ற பாடலை "புதையல் " படத்தில் தந்ததுடன் , வேறு பல இனிய பாடல்களையும் இப்படத்தில் தந்தார்கள்.
தமிழ்திரையின் ஒப்பற்ற கவிஞனாகத் திகழ வேண்டிய மாகவிஞன், பாரதி,பாரதிதாசனுக்குப் பின்வாராது வந்த மாமணியான பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் வாழ்வு மிக இளவயதில் ஓய்ந்தது.
நாட்டார் பாடல்களின் வண்டலை தந்த மாகவிஞனின் எதிரொலி அவருக்கு முன்னிருந்த கவிஞர்களையும் அவர் போல எழுத வைக்குமளவுக்கு பாதிப்பு ஏற்படுத்தியே ஓய்ந்தது.
என்னதான் சிறப்பாகப் பாடல் எழுதினாலும் இனிய இசை இல்லையென்றால் காலத்தால் அடித்துச் செல்லப்பட்டு விடும்.லாவகமும் நுடபமும் ஒன்றுகலந்த அவர்களின் பாடல்கள் காலத்தை கடந்து நிற்கின்றன. இசையும் பாடலும் ஒன்றை ஒன்று பிரியாத அற்புத ஆற்றல்களின் இணைவு அதை சாதித்திருக்கிறது.அந்த இனிய இசையை தந்த புகழ் எல்லாம் மெல்லிசைமன்னர்களுக்கே !
பட்டுக்கோட்டை கலயாணசுந்தரம் பாடல்கள் பற்றி அதிகம் பேசப்பட்டிருக்கிறது.ஆனால் மெல்லிசைமன்னர்களுடனான அவரின் இணைவு குறித்தோ அவர்களது இணைவில் வந்த பாடல்கள் பற்றிய குறிப்புக்களை மிக அரிதாவே காண்கிறோம்.அது குறித்து மெல்லிசைமன்னர்களும் அதிகம் பேசியதில்லை.
1959 ஆம் வருட இறுதியில் காலம் மாகவிஞனுக்கு முற்றுப்புள்ளி வைத்தாலும் , தன் வசப்பட்ட காலத்தில் பலவிதமான உணர்வுகளையும் வெளிப்படுத்தும் பாடல்களை புனைந்தவர் பட்டுக்கோட்டையார்.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ,மெல்லிசைமன்னர்கள் இணைந்து தந்த புகழபெற்ற சில பாடல்கள். காதல் பாடல்களையும் அற்புதமாக எழுதும் ஆற்றல்மிக்கவர் என்பதை நிரூபிக்கும் சில பாடல்கள்: 01 கலைமங்கை உருவம் கண்டு காதல் கொண்டு - மகனே கேள் [1965 ] 02 முகத்தில் முகம் பார்க்கலாம் - தங்கப்பதுமை[1959 ] 03 இன்று நமதுள்ளமே பொங்கும் - தங்கப்பதுமை[1959] 04 அன்பு மனம் கனிந்த பின்னே -படம்: ஆளுக்கொரு வீடு ஆண்டு: 1960 05 கொக்கரக்கோ சேவலே படம்: பதிபக்தி [1958 ] 06 ஆடைகட்டி வந்த நிலவோ படம்: அமுதவல்லி [ 1959 ] 07 சலசல ராகத்திலே படம்: ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு : 19607 08 உனக்காக எல்லாம்… படம்: புதையல் [1957 ] 09 சின்னஞ்சிறு கண்… படம்: பதிபக்தி[ 1958 ] [தாலாட்டு]
தத்துவப்பாடல்களில் புகழ் பெற்ற சில பாடல்கள் :
01 தாயத்து… படம்: மகாதேவி | ஆண்டு: [1957 ] 02 குறுக்கு வழியில்… படம்: மகாதேவி :[ 1957 ] 03 உனக்கேது சொந்தம் - பாதாம் :பாசவலை 04 ஆறறிவில் ஓர் அறிவு அவுட்டு படம்: மகனே கேள் [1965 ]
பட்டுகோட்டை கல்யாணசுந்தரம் போன்ற பாடலாசிரியர்களுடன் இணைந்து சிறப்பாக நாட்டார் பண்புகளை தந்தமை மட்டுமல்ல , திரைக்கதையின் சூழ்நிலைகளுக்கு பொருத்தப்பாடான கருத்துக்களுக்கு , இயக்கப்போக்குகளுக்கு இசைந்து நாட்டார்மரபிசையையும் , மெல்லிசையையும் இசைவேட்கையுடன் தந்தவர்கள் மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இணையினர்!
தமிழ்நாட்டு அரசியல் தமிழ்திரையில் கடுமையாக எதிரொலித்துக்கொண்டிருந்த காலம் என்பதாலும் அதன் சூழல், போக்கு மற்றும் வீச்சுகளுக்கு ஏற்ப அதற்கீடு கொடுத்து உகந்ததொரு இனிய இசையை கொடுத்தார்கள்.
குறிப்பாக ,அக்கால திராவிட இயக்கத்தினரின் கருத்தோட்டப் போக்கின் முதன்மையான உணர்வாக வீர உணர்ச்சி வெளிப்பட்டது.அதன் இன்னுமொரு முக்கிய கூறாக தாலாட்டும் , தாய்பாசமும் அமைந்தது.தாலாட்டிலும் , வீர உணர்வு பாடலிலும் எழுச்சி ஊட்டும் வண்ணம் பாடல்கள் அமைக்கப்படடன.இதனூடே அக்கால இளைஞர்களுக்கு அரசியல் விழிப்புணர்ச்சியூட்டிடலாம் என்ற திராவிட முன்னேற்றக கழகத்தினரின் கொள்கைக்கு மெல்லிசைமன்னர்களின் இசை மிக வலு சேர்த்தது என்றால் மிகையில்லை.
தமிழ்த்திரைப்படப் பாடல்கள் வாழ்நிலையின் உணர்ச்சிகளை சித்தரித்தன என்ற வகையில் நோக்கும் போது நாட்டுப்புறவியலாளர்கள் கூறும் கருத்துக்கு ஒப்ப பாடல்கள் அமைந்திருப்பதையும் காண்கிறோம்.
மரியா லீச் [Maria Leach - [ 1892 - 1977 ] என்கிற நாட்டுப்புறவியலாளர் வகைப்படுத்தும் பாடல் வகைகள் போலவே திரையிலும் பாடல்கள் அமைக்கப்படடன.
மரியா லீச் [Maria Leach] நாட்டுப்புறப்பாடல்களை பின்வருமாறு வகைப்படுத்துகிறார்
- உணர்ச்சிப்பாடல்கள் [ Emotional ] 2. வாழ்வியல் பாட்டு [ Daily Life ] 3. வாழ்வின் முக்கிய நிகழ்ச்சி பாடல்கள் [ Crucial Movement of life ]
இதில் உட்பிரிவுகளாக
- பிறப்பு [ birth ] 02. மணம் [ marriage] 03. பிரிவு [parting]
- இறப்பு [death] 05. தாயக நாட்டம் [ nostalgia] 06. போர்ப்பாடல் [ war ]
போன்றவற்றை குறிப்பிடுகின்றார்.
நாட்டுப்புறப்பாடல்களை வெவ்வேறு நாட்டுப்புற ஆய்வாளர்களும் வெவ்வேறுவகையாக வகைப்படுத்துகின்றனர்.எனினும் பொதுப்படையில் மரியா லீச் [ 1892 - 1977 ] வகைப்படுத்தும் பாங்கு பொதுமையாக விளங்குகிறது.மனித உணர்வுகள் பொதுமையாக இருப்பதால் நமக்கும் அவை பொருந்திப் போகின்றன.
இவை நாட்டுப்புற இசை சார்ந்த ஆய்வுகளே ஒழிய தமிழ் திரையிசையில் மெல்லிசைமன்னர்கள் தனியே நாட்டுப்புற இசைவடிவங்களில் தான் தமது பாடல்களை இசைத்தார்கள் என்று அர்த்தமல்ல.இந்தவகைப்படுத்தலில் அமைந்த பாடல்களை மெல்லிசைவடிவங்களிலேயே அமைத்து புதுமை செய்தார்கள்.நாட்டுப்புறப்பாங்கிலும் , செவ்விசைவடிவங்களிலும் ஜி.ராமநாதன் , எஸ்.எம்.சுப்பைய்யாநாயுடு , ஆர்.சுதர்சனம் கே.வி.மஹாதேவன் போன்றவர்கள் ஏலவே இசைத்திருக்கிறார்கள்.
மரியா லீச் குறிப்பிடும் "வாழ்வியல் பாடல்" வகையிலே நாட்டுப்புற இசையின் அடிநாதத்தோடு , அவற்றை மென்மையாகத் தழுவிக் கொண்டே, அவற்றில் மெல்லிசைச் சாயங்களைப் பூசி ஜாலவித்தை காட்டியவர்கள் மெல்லிசைமன்னர்கள். அதில் புதிய வாத்தியங்களை இணைத்து தந்த இசைக்கோலங்கள் எத்தனை,எத்தனை என்று ஆச்சர்யத்துடன் வியக்கிறோம்.
மெல்லிசை மெட்டில் விழும் எளிமைமிக்க இனிய சங்கதிகள் செவ்வியலிசையின் உச்சங்களைத் தொடும் வண்ணம் அமைக்கப்படத்திலிருந்து அவர்கள் ராக இசையின் ரசப்பிழிவுகளை தேவை கருதி பயன்படுத்தியதையும் காண்கிறோம்.
வாழ்வியல்பாடல்கள் என்ற பகுதியில் வரும் தாலாட்டு ,காதல் ,பிரிவு, திருமணம் , இறப்பு ,நாட்டுப்பற்று,வீர உணர்ச்சி போன்ற பலவிதமான உணர்வுகள் பாடல்களிலும் பிரதிபலித்தன.அதுமட்டுமல்ல ஒரு நிகழ்வின் பல படி நிலைகளுக்கும் பாடல்கள் பயன்படுத்தப்படடன.
தாலாட்டும் , வீரமும்
தாம் பெற்ற பிள்ளையை உறங்கவைக்க பாடும் பாடல் தாலாட்டாகும்.உலகெங்கும் தாலாட்டு என்பது நாட்டார்பாடல் வகையில் சிறப்பிடம் பெற்ற ஒன்றாகும்.தமிழிலும் அவ்விதமே! தாலாட்டைப பாடாத கவிஞர்கள் கிடையாது என்று கூறிவிடலாம். பெரும்பாலும் தாய்மார்கள் தாலாட்டை பாடுவது வழமையாக இருந்து வருகிறது.தாலாட்டுப் பாடும் தாய் தனது நிலையையும் , தன குடும்பத்து நிலைமையையும் , பெருமைகளையும் இணைத்துப் பாடுவது தமிழ்மரபு.
"தமிழ்நாட்டு பாமரர்பாடல்" என்ற நூலை எழுதிய பேராசிரியர் நா.வானமாமலை தாலாட்டுப்பாடலுடனேயே தொடங்குகிறார்.அந்நூலில் வர்க்க வேறுபாடுகளுக்கு ஏற்ப தாலாட்டு மாறுவதை கூறிச் செல்லும் ஆசிரியர் உழைப்போர் கண்ணோட்டத்தில் தாலாட்டு எவ்வாறு அமைந்தது என்பதனை உதாரணங்களோடு விளக்குகிறார்.
தாலாட்டு பற்றி கூறும் தமிழண்ணல் " இருவர் கொள்ளும் காதலை விட , உடன்பிறந்தோர் கொள்ளும் வாஞ்சையைவிட,ஏன் உலகலக்கும் அருளினைவிட, பிள்ளைப்பாசமே ஆழமானது , வலிமைமிக்கது, உணர்ச்சிமயமானது. இத்தகைய தாயும் சேயும் என்ற உறவுப்பிணைப்பிலே இயற்கைக் கலைதான் தாலாட்டு " என்பார்.[ காதல் வாழ்வு - தமிழண்ணல் ]
பிள்ளைத் தமிழ் என்பது தமிழிலக்கியத்தில் தனி இலக்கியவகையாகக் கருதப்படுகிறது "பழந்தமிழ் பாடல்களில் பிள்ளைத்தமிழ், உலா முதலிய பிரபந்தங்கள் தெய்வங்களை குழந்தையாகவும் , வீரர்களாகவும் பாடியதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்." என்பார் பேராசிரியர் க.கைலாசபதி.[ இரு மகாகவிகள் ]
தாலாட்டுப்பாடலை மிகச் சிறந்த முறையில் தமிழ் சினிமாப்பாடல்கள் வெளிக்கொண்டுவந்திருக்கின்றன.அதிலும் மெல்லிசைமன்னர்கள் உயிர்த்துடிப்பும் ,உணர்ச்சிப்பெருக்கும் , நெகிழ்சியுமிக்க சிறந்த பாடல்களை தமது தனித்துவ முத்திரையோடு அமைத்துத் தந்திருப்பது நம் கவனத்திற்குரியது.
தமிழ் திரையில் ஒலித்த தாலாட்டுப்பாடல்கள் என்றாலே அதில் எல்லோருக்கும் எடுத்த எடுப்பிலேயே நினைவுக்கு வருமளவுக்கு சில முக்கியமான பாடல்களைத் தந்த பெருமை மெல்லிசைமன்னர்களை சாரும்.இசைவளப்பெருமை வாய்ந்த பல பாடல்களை புது லாகிரியுடன் தந்திருப்பதையும் அவதானிக்கலாம். பழைய ராகங்களில் நவீனத்தின் பண்புகளை இணைத்து திரையிசையைத் தம் பக்கம் இழுத்துக் கொண்டவர்கள் மெல்லிசைமன்னர்கள்.
மெல்லிசைமன்னர்கள் இசையமைத்த தாலாட்டுப்பாடல்கள் சில :
01 சிங்காரப்புன்னகை கண்ணாரக் கண்டாலே - படம்: மகாதேவி [1957] - பாடியவர்கள்: எஸ்.ராஜேஸ்வரி + ஆர்.பாலசரஸ்வதிதேவி
அக்காலத்தில் வெளிவந்த தாலாட்டுப் பாடல்களில் புதிய பாங்கில் வந்த பாடல்.மரபாக வரும் ராகங்களில் அல்லாமல் ஆபேரி ராகத்தில் அமைத்ததுடன் அதனுடன் கைத்தட்டு , கோரஸ் , ஹம்மிங் போன்றவற்றை இணைத்து புதுநெறிகாட்டிய பாடல்.அதுமட்டுமல்ல தாலாட்டில் வீரமும் ,பாசமும் இன்றிணைத்தோடும் கருணை , இனிமை பொங்கும் பாடல்.பின்னாளில் ஆபேரியில் தாலாட்டுப் பாடல்கள் வெளிவரும் புதிய நெறியை அமைத்துக் கொடுத்த பாடல்.
இந்தப்படத்தின் வசனத்தையும் , இந்தப்பாடலையும் எழுதியவர் என்ற ரீதியில் கவிஞர் கண்ணதாசன் தனது அன்றைய தி.மு.க.அரசியல் சார்பான கருத்தியோட்டத்தையும் கதைக்கு பொருத்தமாக அமைந்துவிடும் நுடபத்தையும் காணலாம்.இப்பாடலில் காலத்திற்கேற்ற தனது அரசியல் போக்கின் தன்மையையும் காட்டுகிறார் கண்ணதாசன்.
தன்மானச் செல்வங்கள் வாழ்கின்ற பூமியில் வில்லேதும் வீரன் போலவே மகனே நீ வந்தாய் மழலைச் சொல் தந்தாய் வாழ்நாளில் வேறென்ன வேண்டுமம்மா
02 மானம் ஒன்றே பெரிதெனக் கொண்டு வாழ்வது நமது சமுதாயம் - படம்: மகாதேவி [1957] - பாடியவர்கள்: டி.எஸ்.பகவதி
- மானத்தையும் வீரத்தையும் மிகுந்த உணர்ச்சிப்பாங்குடன் கூறும் தலை சிறந்தபாடல் இது.
"அபிமன்யூ போர்க்களத்தில் சாய்ந்துவிட்டான் " என்று தொடங்கும் வரிகளில் ஹிந்தோள ராகத்தில் பீரிட்டெழும் உணர்ச்சிக் கொந்தளிப்பை மெய்சிலிர்க்கும் வண்ணம் மெல்லிசைமன்னர்கள் காண்பிப்பார்கள்.அதைத் தொடர்ந்து வரும்
" போதும் நிறுத்து ! பாண்டவர்கள் அழுது சோகம் கொண்டாடியிருக்கலாம் , கண்ணீர் வடிக்கும் கோழைப்பாட்டு எனக்குத் தேவையில்லை. என் மகன் வீரமரணத்திற்கேற்ற தாலாட்டு பாடு ! ".... மகாபாரதத்தின் அபிமன்யுவை தனது மகனுக்கு உவமையாக்கி பாடும் இப்பாடலில் இடையிடையே வரும் வசனங்களில் உணர்ச்சி பெருக்கெடுக்கிறது.மெல்லிசைமன்னர்களின் இசையோ உயிரை வதைக்கிறது.
03 தென்றல் வந்து வீசாதோ தெம்மாங்கு பாடாதோ - படம் சிவகங்கைச் சீமை [1959 ]- பாடியவர்கள் :எஸ்.வரலட்சுமி + டி.எஸ்.பகவதி
தாலாட்டுப்பு பாடலில் தனது நாட்டின் பெருமையையும் மன்னன் பெருமையையும் சோகம் பொங்க அமைக்கப்படட பாடல்.
வெள்ளியிலே தேர் பூட்டி மேகம் போல மாடுகட்டி அள்ளி அள்ளி படியளக்கும் அன்பு நிலம் வாடுவதோ....
எனத் தங்கள் குடும்பத்தின் பெருமையை உணர்த்தி விட்டு , வரப்போகும் போரின் துயரத்தையும் அதன் விபரீதத்தையும் நெகிழ்ச்சியுடன் கூறும் பாடல்.
தவளை எல்லாம் குரவையிடும் தாமரையும் பூ மலரும் குவளையெல்ல்லாம் கவி இசைக்கும் வந்து வந்து கூடும் வண்ண எழில் யாவும் அண்டி வரும் போர் புயலில் அழிந்து பட சம்மதமோ .......
ஆத்தாள் அருகினில் அம்மான் மடிதனிலே காத்திருக்கும் பாலகரும் கண்ணான மங்கையரும் போர் மேவி புறப்படுவார் பொன்னாட்டின் புகழ் வளர்ப்பார்
யார் வருவார் யார் மடிவார் யார் அறிவார் கண்மணியே
என சோகத்தின் உச்சிக்கு நம்மை அழைத்து செல்லும் பாடலை மெல்லிசைமன்னர்கள் முகாரி ராகத்தில் அமைத்து உணர்ச்சியை பிரதானப்படுத்துகிறார்கள் பாடல் அமைப்பும் பாடிய பாடகிகள் [எஸ்.வரலட்சுமி + டி.எஸ்.பகவதி ] பாடிய பாங்கும் தாய்மையின் குரலை ஓங்கவைக்கிறது. பாடல் வரியும் , இசையும் ஒன்றையொன்று தழுவி உயிர் பெறுகின்ற பாடல். முகாரி ராகத்தில் அமைந்த ஒரு சில பாடல்களில் இதுவும் ஒன்று.
03 சின்னஞ் சிறு கண்மலர் செம்பவள வாய் மலர் - படம்: பதிபக்தி 1959 - பாடியவர்: பி.சுசீலா
04 ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ - படம்: பாகப்பிரிவினை 1959 -பாடியவர்: டி.எம்.சௌந்தரராஜன் 05 மழை கூட ஒரு நாளில் தேனாகலாம் -படம் மாலையிட்ட மங்கை [1959 ]- பாடியவர் :எம்.எஸ்.ராஜேஸ்வரி
06 காலமகள் கண் திறப்பாள் கண்ணைய்யா - படம்:ஆனந்த ஜோதி [1963 ]- பாடியவர் :பி.சுசீலா 07 நீரோடும் வகையிலே நின்றாடும் மீனே - படம்:பார் மகளே பார் [1963 ]- பாடியவர் :சௌந்தரராஜன் பி.சுசீலா 08 பிள்ளைக்குத் தந்தை ஒருவன் - படம்:பார்த்தால் பசி தீரும் [1963 ]- பாடியவர்:டி.எம். சௌந்தரராஜன் 09 மாணிக்கத் தொட்டில் இங்கிருக்க -- படம்:பணம் படைத்தவன் [1963 ]- பாடியவர் :பி.சுசீலா டி.எம். சௌந்தரராஜன் + எல்.ஆர்.ஈஸ்வரி
10 கண்ணன் வருவான் கதை சொல்லுவான் - படம்:பஞ்சவர்ணக்கிளி [1963 ]- பாடியவர் :பி.சுசீலா 11 அத்தைமடி மெத்தையடி ஆடிவிளையாடம்மா - படம்:கற்பகம் [1964 ]- பாடியவர் :பி.சுசீலா
12 காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே - படம்:சித்தி [1967 ]- பாடியவர் :பி.சுசீலா
13 செல்லக்கிளியே மெல்லப்பேசு - படம்:பெற்றால் தான் பிள்ளையா [1966 ]- பாடியவர்:டி.எம். சௌந்தரராஜன்
14 காதலிலே பற்று வைத்தால் அன்னையடா - படம்:இதுசத்தியம் [1963 ]- பாடியவர் :பி.சுசீலா
15 கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான் - படம்:பெற்றால் தான் பிள்ளையா [1966 ]- பாடியவர்:டி.எம். சௌந்தரராஜன் + பி.சுசீலா
16 செல்லக்கிளிகளாம் பள்ளியிலே - படம்:எங்கமாமா [1968]- பாடியவர்:டி.எம். சௌந்தரராஜன்
தாலாட்டில் பலவகைப்பட்ட உணர்வுகளை பிரதிபலித்த பேராற்றலைக் காண்பித்த மெல்லிசைமன்னர்கள் வீர உணர்வை வெளிப்படுத்தும் பாடல்களிலும் தங்கள் தனித்துவத்தைக் காண்பித்தார்கள்.
தமிழர் மரபில் தொன்றுதொட்டு வீரர்களின் பெருமை ,அவர்களுக்கு நடுகல் அமைத்துப் போற்றிய செய்திகளும் பழந்தமிழ் இலக்கியங்களில் விரவிக்கிடக்கின்றன.வீரர்களைக் கொண்டாடியது மட்டுமல்ல அவர்களை வழிபாடும் செய்தனர்.
இனக்குழு சமுதாய அமைப்பு மாறி பின் தோன்றிய நிலமானிய காலத்து பாடல்கள் வீரயுகப்பாடல்கள் என்பார் பேராசிரியர்.க.கைலாசபதி.
" முதியோள் சிறுவன் படைத்தழிந்து மாறின னென்று பல கூற மண்டமர்க் குடைந்த னாயினுண்டவென் முலை யறுத்திடு வென் "
புறநானூறு - 278
தனது மகனின் முதுகில் காயம்படவில்லை என்று தாய் பெருமைப்படும் பாடல். பெண்களும் வீரத்தில் சளைத்தவர்களில்லை ,போர்க்குணம் மிகுந்தவர்களாயிருந்தனர் எனக் காட்டுகிறது புறநானூறு பாடல்.
வீரர்கள் பற்றிய புகழாரங்களை கூறும் இம்மரபை பின்னாளில் அரசியல் இயக்கங்கள் சுவீகரித்து கொண்டன.குறிப்பாக தமிழ் தேசியத்தையும் , பிராமணீய எதிர்ப்பையும் மற்றும் சோஷலிஸக் கருத்துக்களையும் முழக்கமாகக் கொண்டு திரைப்படத்தை தங்கள் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தியவர்கள் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக கழகத்தினர்.தங்களை வீர தீரர்களாக காட்டிக்கொண்டிருந்த அன்றைய நிலையில் கட்சித் தொண்டர்களை உசுப்பேற்றவும் தாம் உய்யவும் வழி தேடினர்.
திரைக்கதையில் மட்டுமல்ல பாடல்களிலும் அவை கணிசமாகவே வெளிப்பட்டன. மரபாக இருந்த போக்கை திரைக்கதை , இசை போன்றவற்றின் உறவுகளின் அடிப்படையிலும், திரைப்படத்தை வெற்றிபெற வைக்கும் உத்தியாகவும் வீர உணர்வை வெளிப்படும் பாடல்களை பயன்படுத்தினர்.
1950 களின் ஆரமபத்தில் திராவிட முன்னேற்றக கழக கொள்கை பிரச்சாரப்பாடல்கள் இறந்தகாலத்தின் மீதான பிரேமையும்,ஏக்கமும் , அதோடு அதை புளங்காகிதப்படுத்தி புத்தாக்கம் செய்யும் வகையில் புனையப்பட்டதையும் காண்கிறோம்.
"தமிழன் என்றொரு இனமுண்டு " என்று தொடங்கும் மலைக்கள்ளன் [ 1954 ] பட டைட்டில் பாடலை திராவிட முன்னேற்றக கழகத்தினரின் அன்றைய கொள்கை விளக்கப் பாடல் என்று சொல்லுமளவுக்கு அமைத்திருந்தார்கள். அது மட்டுமல்ல அதே படத்தில் "எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே " என்ற பாடலும் அதி உன்னதமான கருத்துக்களை அள்ளி வீசிய பாடலாகும்.
வீர உணர்வை வெளிப்படுத்தும் பாடல்கள்
01 பறக்குது பார் பொறி பறக்குது பார் -- படம்:நீதிபதி [1955 ]- பாடியவர் : கே .ஆர் . ராமசாமி
வீணரை வென்றுவந்த வீரராம் வென்று வந்த சேரராம் - அந்த வீராதி வீரராய் போல் சிரிக்குது பாராய்
பாண்டியன் சபையினிலே பாய்த்தெழும் கண்ணகி போல் பறக்குது பார் பொறி பறக்குது பார்
"பறக்குது பார் பொறி" பொறி என்று பூடகமாக தங்கள் கருத்தை வெளிப்படுத்தும் பாடல் இது.
02 வாழ்வது என்றும் உண்மையே -- படம்:ராஜா மலையசிம்மன் [ 1959 ] - பாடியவர் :சீர்காழி கோவிந்தராஜன்
வெற்றியின் பாதை தெரியுதடா வீணர்கள் கோட்டை சரியுதடா எட்டுத் திசையும் கொண்டாடவே எகிறிப் பாய்ந்து முன்னேறடா முன்னேறடா முன்னேறடா
03 எங்கள் திராவிட பொன்னாடே -- படம்:மாலையிடட மங்கை [1959 ]- பாடியவர் : டி.ஆர் . மகாலிங்கம்
விந்தியம் குமரியிடை விளங்கும் திருநாடே வேலேந்தும் மூவேந்தர் ஆண்டிருந்த தென்னாடே.. எங்கள் திராவிடப் பொன்னாடே.
தி.மு.க இயக்கத்தின் கொள்கை விளக்கப்பாடல் என்ற அளவுக்கு புகழ் பெற்ற பாடல்.படத்தின் கதைக்கும் , இந்தப்பாடலுக்கும் ஏதும் தொடர்பில்லை.மக்களைக் கவர்வதற்கென்றே சேர்க்கப்படட பாடல் இது.
04 வீரர்கள் வாழும் திராவிட நாட்டை -- படம்:சிவகங்கை சீமை [1960 ]- பாடியவர் :டி.எம். சௌந்தரராஜன்
மன்றம் மலரும் முரசொலி கேட்கும் வாழ்ந்திடும் நம் நாடு - இளந் தென்றல் தவழும் தீந்தமிழ் பேசும் திராவிடத் தீருநாடு வேலும் வாழும் தாங்கிய மறவர் வீழ்ந்ததும் கிடையாது 05 அச்சம் என்பது மடமையடா -- படம்:மன்னாதிமன்னன் [1960 ]- பாடியவர் :டி.எம். சௌந்தரராஜன் விளங்கினார்.
ஆங்கிலப் படங்களில் வீரதீர நாயகனாக திகழ்ந்த ஏரோல் பிளைன் [Errol Flynn ] என்ற நடிகரைப் போல தானும் நடிக்க வேண்டும் என்று விரும்பிய எம்.ஜி.ஆர் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி கொண்டார்.குதிரை ஓட்டம், வாள்வீச்சு , கூட்டமாக வரும் வில்லனின் ஆட்களை அனாயாசமாக அடித்து வீழ்த்துவது , கொடியில் தாவி பாய்வது , உடையலங்காரம் என Errol Flynn பாணியை முழுதாக பின்பற்றியதென்பது தமிழ் சினிமாவில் யாரும் செய்யாத ஒன்றாக விளங்கியது.இவையெல்லாம் எம்.ஜி.ஆரை மிகப்பெரிய நட்ஷத்திரமாக வளர்ச்சி பெற உதவி புரிந்தன.
சாகசம் புரியும் நாயகனுக்கு [ எம்.ஜி.ஆர்] திராவிட முன்னேற்றக கழக பாணி வார்த்தை வீச்சுக்களும் கைகொடுத்தன.அதோடு மெல்லிசைமன்னர்களின் புதியபாணி இசையும் புது ரத்தம் பாய்ச்சியது என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.
திரைப்படத்தில் கதாநாயகன் அறிமுகம் ஆகும் காட்சிக்கு வகைமாதிரியான பாடல் எனபதற்கு முன்னுதாரணமாக அமைந்த பாடல் இது என்று துணிந்து கூறிவிடலாம்.
இந்தப்பாடலுக்கு முன்பே இது போலவே குதிரையில் அல்லது பயணம் செல்லும் போது பாடும்பாடல்கள் பல வெளிவந்த போதிலும் , அவை பயணத்தின் உல்லாசத்தில் எழும் இன்ப உணர்வை வெளிப்படுத்துவதாகவே அமைந்திருந்த நிலையில் ,1952 இல் வெளிவந்த தேவதாஸ் படத்தில் பயணத்தின் போது இயற்கையாக எழும் உற்சாகத்தை , ஊடுருவிச் செல்லும் இன்பத்தை வெளிப்படுத்துவதாக அமைந்த பாடல் " சந்தோசம் தரும் சவாரி போகும் " என்ற பாடலாகும்.இந்தப்பாடலையும் இசையமைத்தவர் மெல்லிசைமன்னர் என்பதும் குறிப்பிடத்தக்க செய்தியாகும்.
ஆயினும் கதாநாயகனின் உள்ளத்து வேட்கையை ,புத்துணர்ச்சியை அவனின் சமுதாயப்பார்வையை , அவனது இலட்சிய ஆவலை வெளிப்படுத்துவதாக நீலமலைத் திருடன் [1957 ] படத்தில் கே.வி.மகாதேவன் இசையமைத்த " சத்தியமே லடசியமாய் கொள்ளடா " என்ற பாடல் ஒரு கொள்கை முழக்கமாக அமைந்த முக்கியமான பாடல் என்று கூறலாம்.
இதே போலவே அரசிளங்குமரி [1961 ] படத்தில் " ஊர்வலமாக மாப்பிள்ளை பொண்ணு சேர்ந்து வருகிறார் " என்ற பாடலை டி.எம்.சௌந்தரராஜன் , சூலமங்கலம் ராஜலட்சுமி இணைந்து பாடிய பாடலை ஜி.ராமநாதன் இசையமைத்தார்.
இந்தப்பாடலின் பாதிப்பு பின்னாளில் இது போன்ற பாடல்கள் மூலம் கதாநாயகர்களை படத்தின் ஆரம்பத்திலேயே அறிமுகம் செய்யும் வழமை உருவானது.
நாடகத்தில் முன்பாட்டு [ Entrance Song ] என்று அழைக்கப்பட்ட கதாநாயகர்கள் அறிமுகமாகும் காட்சி போல , தமிழ்திரையிலும் நாயகர்கள் இது போன்ற பாடல்களுடன் அறிமுகமாவது ஒரு புதிய போக்காக அமைய மெல்லிசைமன்னர்களின் பாடல்கள் காரணாமாயிருந்தன.
வீரவுணர்ச்சி மட்டுமல்ல வெற்றிக்களிப்பில் உண்டாகும் உற்சாகத்தை " ஏரு பூட்டுவோம் நாளை சோறு ஊட்டுவோம் " என்ற பாடலை மகாதேவி படத்தில் மெல்லிசைமன்னர்கள் அமைத்தனர்.
இதே போன்றே திருமணம் மற்றும் அதுதொடர்பான நிகழ்வுகளைச் சிறப்பித்து காட்டும் வண்ணம் தமிழ் திரையிசை பாடல்கள் வெளிவந்திருக்கின்றன.திருமண பாடல் என்றதும் என் நினைவுக்கு வரும் முதல் பாடல் "வாராய் என் தோழி வாராயோ " என்ற பாசமலர் திரைப்படப் பாடலே !
திருமண வைபவங்களில் பாடல்களை ஒலிபரப்பரப்புபவர்களுக்கு உடனடியாக கைவரக்கூடிய பாடலாக இந்தப்பாடல் அமைந்திருந்தது அந்தளவுக்கு திருமணத்தை பாடல்களில் வடித்துக் கொடுத்த முதன்மை இசையமைப்பாளர்கள் மெல்லிசைமன்னர்கள் என்பது மிகையல்ல.
இதுமட்டுமல்ல மணமக்களை பல சந்தர்ப்பங்களிலும் வாழ்த்திப்பாடும் அற்புதமான பாடல்களையும் தந்திருக்கிறார்கள்.
சில எடுத்துக்காட்டுக்கள்.
01 வாராய் என் தோழி வாராயோ - படம்: பாசமலர் [1961 ] -[ மணப்பெண்ணை அழைத்துவரும் பாடல் ] 02 போய் வா மகளே போய் வா மகளே - படம்: கர்ணன் 1964 ] - [ பிள்ளைபெறுவதற்கு தாய் வீடு செல்லும் போது பாடும் பாடல்.] 03 வளையல் சூட்டி - - படம்: கர்ணன் 1964 ] -[1964 ] - [ வளைகாப்புப் பாடல் ] 04 குங்குமப்பொட்டு குலுங்குதடி - - படம்: இது சத்தியம் [1964 ] - [ வளைகாப்புப் பாடல் ] 05 ஆயிரம் இரவுகள் வருவதுண்டு - - படம்: கற்பகம் [1964 ] - [ முதலிரவு நேரம் தோழி பாடும் பாடல்] 06 கல்யாண பொண்ணு கண்ணான கண்ணு - படம்: படகோட்டி 1964 ] - [ வளைகாப்புப் பாடல் ] 07 கெட்டி மேளம் கட்டுற கல்யாணம் - படம்: சந்திரோதயம் 1967 ] 08 தங்கமணி பைங் கிளியும் தாயகத்து நாயகனும் - படம்:சிவந்தமண் [ 1970 ] [ மணமக்கள் வாழ்த்துப்பாடல் ] - [ இசைத்தட்டில் வெளிவராத பாடல்.] 09 புகுந்த வீடு இனிமையான மல்லிகை பந்தல் - படம்: புண்ணியபூமி [1974 ] -
நாட்டார் பண்பியலில் அமைந்த சில பாடல்களை 1950 பாதிக் கூறிலிருந்து கொடுக்க முனைந்ததைக் காண்கிறோம்.நாட்டுப்புற இசையின் ஓசைநயங்களையும் தேவை கருதி அங்கங்கே மெல்லிசையில் இழைத்து வந்ததைக் காண்கிறோம்.
வீரம் , மானம் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் போது உணர்ச்சி கொந்தளிப்பையும் , தாலாட்டுப் பாடல்களில் தாயின் பாசத்தையும் , கண்ணீர் பெருக்கையும் , தாலாட்டின் வாய் மொழி ஓசையின்பத்தையும் அத்தோடிணைந்த மெல்லிசையின் சுகந்தத்தையும் மிக இயல்பாய் கொடுத்த பெருமை மெல்லிசைமன்னர்களை சாரும்.
எழுச்சியும் , கிளர்ச்சியும் மிக்க பாடல்களுடன் தங்களுக்கேயான,தனித்துவமிக்க இசையுலகத்தை படைத்துக்காட்ட 1960 களுக்கு நகர்கிறார்கள்.
மரபும், வாத்திய இசைவார்ப்புகளும்
1950 களில் மெல்லிசைப்பாங்கில் தங்கள் தனித்துவத்தை அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளிப்படுத்திய மெல்லிசைமன்னர்கள் பாகப்பிரிவினை, மாலையிட்ட மங்கை பாடல்களால் தனிக்கவனம் பெற்றார்கள் என்று சொல்லலாம்.பதிபக்தி , தங்கப்பதுமை போன்ற படங்களில் தெறித்த மெல்லிசை உருவ அமைப்பு முழுமையாக ஹிந்தி திரை இசைக்கு நெருக்கமாக மாறி தமிழ் திரையிசையை முன்னோக்கி நகர்த்தியது.
ஒப்பீட்டளவில் 1950 களைவிட 1960 களில் சமூகக்கதைகள் திரையில் இடம் பிடிக்க ஆரம்பித்ததும் பாடல்களிலும் , இசையமைப்பிலும் உணர்வுகளை கதைகளுக்கு பொருத்தமாக வெளிப்படுத்தினார்கள்.காதல் , திருமணம், தாலாட்டு , பிரிவு ,வீரம் போன்ற உணர்வுகள் என பலவிதமான சூழ்நிலைகளும் அக்காலப் பாடல்களில் பிரதிபலித்தன.
தமிழ் திரையிசையின் முன்னோடிகளின் வழியிலிருந்து சற்று விலகிவர முனைந்ததும் ஹிந்தித் திரைப்பட இசையின் அதிர்வலையிலிருந்து மீள முயற்சி செய்ததுடன் அதற்கு நிகராக பாடல்களை உருவாக்குவதிலும் முனைப்புக் காட்டினார்கள்.
தமிழ் திரையிசையின் நவீனத்துவம் [ Modernity ] எனும் பண்பு சி.ஆர்.சுப்பராமன்,மற்றும் அதன் தொடர்ச்சியாக1950 களின் இறுதியில் ஏ.எம்.ராஜா போன்ற இசையமைப்பாளர்களால் அறிமுகமானதெனினும் அதன் முழுமை மெல்லிசைமன்னர்களாலேயே நிறைவானது.பழைய முறையை மாற்றி நவீன இசைக்கருவிகளையும் வெற்றிகரமாகக் கையாண்டு கதாபாத்திரங்களின் உணர்வுகளை இசையில் வடித்தார்கள். எந்த ஒரு துறையிலும் மாற்றம் நிகழும் காலங்களில், அக்காலங்களின் இயல்புப் போக்குகளையும் அனுசரிக்கும் தன்மை கொண்டதாக இருப்பதை அவதானிக்கலாம்.மெல்லிசைமன்னர்களைப் பொறுத்தவரையில் இந்திய அளவில் ஹிந்தித் திரையிசையின் வல்லாதிக்கமும் , உலக இசையில் பொழுது போக்கு வணிக இசையாக வெற்றியளித்த லத்தீன் அமெரிக்க இசையின் வல்லாதிக்கமும், தமிழ் திரையில் செவ்வியல் இசையின் ஆதிக்கமும் நிலவியது என்பது நோக்கத்தக்கதாகும்.அவற்றின் நல்ல கூறுகளை எடுத்துக் கொண்டு புதுமை காண்பித்தார்கள் ஒழிய அவற்றை அப்படியே பிரதி எடுக்கவில்லை என்பது கவனத்திற்குரியது.
ஹிந்தித் திரையிசையமைப்பாளர்களும் மேலைத்தேய மற்றும் லத்தீன் அமெரிக்க இசையால் கவரப்பட்டிருந்தனர்.1950 களில் புகழபெற்ற இசையமைப்பாளர் சி.ராமச்சந்திரா பெனி கூட்மன் [ Benny Goodman ] போன்ற மேலைத்தேய கலைஞரைப் பின்பற்றியதையும்,ஓ.பி.நய்யார், எஸ்.டி.பர்மன் போன்ற மூத்த இசையமைப்பாளர்களும் ஆங்காங்கே மேலைத்தேய பாணியை கையாண்டதையும் பார்க்கிறோம். அதனூடே ஹிந்தி பாடல்கள் புதிய மாற்றங்கள் பெற்றதென்பதை 1950,1960 களில் வெளிவந்த படங்களில் காண்கிறோம். ஹிந்துஸ்தானி இசையில் பாடல்களை அமைத்துப் புகழ்பெற்ற இசைமேதையான நௌசாத் அலி கூட மேலை நாட்டு இசையால் பாதிப்படைந்திருக்கிறார் என்பதை அவர் இசையமைத்த Dulari [1949] படத்தின் ஒரு சில பாடல்களில் கேட்கிறோம்.
தங்களுக்கு முன்பிருந்த இசையமைப்பாளர்கள் போலவே கர்னாடக இசை , நாட்டுப்புற இசை , ஹிந்துஸ்தானிய இசை ஆகியவற்றுடன் லத்தீன் அமெரிக்க இசையையும் பிரதானமாகப் பயன்படுத்தி மெல்லிசைமன்னர்கள் வெற்றிகண்டார்கள்.ராகங்களின் அடைப்படையில் மட்டும் தான் பாடல்களைக் கொடுக்க முடியும் என்பதில் நம்பிக்கையற்றவர்கள் என்ற அடிப்படையிலும், உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தவர்கள் என்ற வகையிலும் " ஊனாகி உயிராகி அதனுள் நின்ற உணர்வாகி " என்று தேவாரப்பாடல் கூறுவது போல, ராகங்களின் இயல்பான தன்மையையறிந்து , உரிய விதத்தில் பயன்படுத்தி கரையாத நெஞ்சங்களையும் இசையால் கரைய வைத்தார்கள்.நெஞ்சை உருக்கும் மரபு ராகதளங்களில் நின்று பாடல்களை உயர் நிலையில் அமைப்பது மாத்திரமல்ல , ஒரு பாடல் எப்படி எடுப்பாக ஆரம்பிக்கிறதோ அதே வேகம் தளராமல் , தொய்வில்லாமல் அதன் முடிவு வரை செல்வதை மெல்லிசைமன்னர்களின் பாடல்களில் காணலாம்.தமிழ் இசையுலகில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட ராகங்களை விடுத்து ,தமது பாடல்களை புதுமையாகக் காட்ட விளைந்த அவர்கள் தமிழ் மக்கள் அறியாத ஹிந்துஸ்தானிய ராகங்களையும் அதிகமாய் பயன்படுத்தினர்.
பழமையின் இனிமை காட்டி அதற்குள்ளே அடங்கி நிறைவு காணாமல் அதிலிருந்து புதுமை நோக்குடன் இசையை அணுக முனைந்தனர்.பழைய தமிழ் ராகங்களுடன் அதிகம் பயன்படுத்தப்படாத ராகங்களையும் எடுத்துக் கொண்டு நுண்மையுடன் , இனிமையையும் குழைத்து தந்த பாடல்களில் ஜனரஞ்சகத்தன்மையும் வியத்தகு முறையில் இணைந்திருந்தது.
ஆயினும் அவர்களின் வெற்றியின் அடிநாதமாக விளங்கியது ஹிந்துஸ்தானிய சங்கீதமும் , லத்தீன் அமெரிக்கசங்கீதமுமே என்பதை தமிழ் திரையிசையின் பின்னணியை ஆராய்பவர்கள் அறியலாம்.திரைக்கதையின் போக்குக்குகேற்ப காடசிகளில் என்ன தேவையோ அதற்கேற்ற வகையில் பொருத்தமாக மேற்சொன்ன இரு இசையையும் பயன்படுத்திக் கொண்டார்கள்.எளிமையான பாடல் அமைப்பில் மெல்லிசை மிகைப்பைக் காட்டினார்கள்.
அவர்கள் ஆர்வம் காட்டிய ஹிந்தி திரையிசையும் , மேல்நாட்டிசையும் ஒன்று கலந்த புதிய கலப்பிசை, சொல் எளிமையும் இசையின்பமும் ஒன்று கலந்த புது இசைக்கு ஒரு புதிய நடையை உருவாக்கிக் கொடுத்தது.புதிய அழகியலிசையாக அது பிறந்தது. கதைமாந்தர்கள் வசனம் பேசி ஓய்ந்த காலம் முடிந்த பின், பாடல்களில் செந்தமிழ் கவித்துவம் அழுத்தாத எளிமைப்படுத்தப்பட்ட வரிகளுடன் இசை இடையூறில்லாமல் கைகோர்த்தது மெல்லிசைமன்னர்களின் காலத்திலேயே ! எளிமையான உருவத்தில் ஆழ்ந்த உணர்வுகளை வெளிப்படுத்தியதுடன் ரசிகர்களையும் இலகுவாக இசையை நெருங்க வைத்தது.உணர்வுகளின் உயிரை எடுத்துச் செல்லும் ஒப்புயர்வற்ற சந்தங்களில் பாடல்வரிகள் இலகுவாக அமர்ந்து கொண்டன.
பாடல் வரிகளுக்கு இடையூறில்லாத இனிய வாத்திய இசை அழகுடன் இணைந்து கொண்டது.மெட்டுக்கள் கொடுத்த சௌகரியமான இடங்களில் பாடல் வரிகள் அமர்ந்து கொண்டன.இசையும் பாடல்களும் ஒன்றை ஒன்று பிரிக்க முடியாத வகையில் இயல்பாய் அமைந்த பாடல்கள் உருவாகின. இனிமையும் பொருள் எளிதில் புரியும் எளிமைமிக்க பாடல்களை மெல்லிசைமன்னர்கள் உருவாக்கினார். இது 1960 களின் பொதுவான போக்காகவும் அமைந்தது. இந்தப்பின்னணியிலிருந்து பார்க்கும் போது மெல்லிசையை ஒரு இயல்பானதாக்கிய பெருமையும் மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் ராமூர்த்தியினரையே சேருகிறது.மெல்லிசையில் எளிமையையும் இயல்பான போக்கையும் அமைத்துக் காட்டி, இதனூடே இசையில் ஒரு இயற்பண்புவாதம் [ Naturalism ] என்று சொல்லும் வகையில் எளிய மக்களும் பாடும் வகையிலமைந்த பாடல்களை உருவாக்கினார்கள். இசையில் விடுபட்டுப்போன ,அல்லது தமிழுக்கு புதியதான சில நுணுக்கங்களை கூர்ந்து நோக்கி அதன் அழகியல் வசீகரங்களை வெளிக்கொணரும் வண்ணம் இசையில் மாயங்கள் செய்யும் ஒலிகளை வெளிப்படுத்தினர்.
எல்லாம் நம்மிடம் இருக்கிறது கற்பனையை உடைத்து நிஜத்தில் இல்லை என்பதை பறைசாற்றும் வண்ணம் இசையில் சில மாற்றங்களைக் கொண்டுவந்தனர்.அதனூடே மெல்லிசையின் புதிய ஒலிகளையும், புதிய ஒலிவண்ணத் சாயல்களையும் பயின்று வந்தனர்.
பல்வேறு இசைமரபுகள் இணைந்த இசையால் விளைந்ததென்னவென்றால் ‘காதைகள் சொரிவன செவிநுகர் கனிகள்’ என்ற கம்பன் வாக்குக்கு அமைய பாடல்கள் பிறந்தன.
இசையின் தலையாய கடமை இனிமை என்பதும், புதுமை என்பது அது மரபை அறுத்துக் கொண்டெழுவதுமல்ல என்பதிலும் தெளிவு கொண்டியங்கியவர்கள் மெல்லிசைமன்னர்கள்.
அந்தவகையில் 1960 களின் திரையிசையை ஆக்கிரமித்த இசையமைப்பாளர்கள் என்றால் அது மெல்லிசைமன்னர்களே என்பதில் எந்தவித சந்தேகமும் இருக்கமுடியாது.தமிழ்த்திரையின் வகைமாதிரிச் சூழலுக்கு நாடகபாணிப்பாடல்களை பொருத்துவது என்ற சலிப்பு நிலை தொடர முடியாத ஒரு சூழலை மெல்லிசையால் உருவாக்கி, புதுமை என்பது காலத்தின் கட்டாயம் என்று நிலைக்கு உயர்த்தியவர் மெல்லிசைமன்னர்களே.!
வழமையான சட்டகங்களில் மடக்கிப்பிடிபடாத வகையில் , அல்லது வழமையான ராகமடிப்புகளில் சிக்காத, நழுவி ஓடி இனிமை காட்டும் ஒரு புதிய மெல்லிசை ஸ்தூலம் பெறுகிறது.மெல்லிசையில் புதிய அணுகுமுறைகள் தேவை என்பதை உணர்ந்து மெல்லிசையில் புதிய மரபை உருவாக்கினார்கள்.
மரபின் வளர்ச்சியையும் அதன் போக்கையும் இனம் கண்டு , புதிய வாத்திய இசையால் அதையூடுருவி செழுமைப்படுத்திய பாங்கு மிக வியப்புக்குரியதாகவே உள்ளது.குறிப்பாக வாத்தியக்கருவிகளையும் , மனிதக் குரல்களையும் ,பின்னணி இசையாகவும் பயன்படுத்திய நூதனப்பாங்கு இசையின் புதிய அழகியலாக செம்மைபெற்றதுடன் , வாத்திய இசை எவ்விதம் அமைக்க வேண்டும் என்ற புதிய வழி காட்டுதலாகவும் அமைந்தது.
இதே போலவே அமெரிக்கத்திரைப்படங்களும் புதியதொரு இசைவடிவத்தை 1930 களில் வேண்டிநின்றன.16 . 17 ம் நூற்றாண்டுகளில் ஐரோப்பிய நாடுகளில் பெருவளர்ச்சியடைந்த செவ்வியலிசையின் அம்சங்களை மேல்நாட்டுத் திரையிசை உள்வாங்கி கொண்டது.மேலைத்தேய செவ்வியல் இசையின் தாக்கத்தை 1930 ,1940 களில் வெளிவந்த ஹொலிவூட் திரைப்படங்களில் கேட்கலாம் . Erich Wolfgang Korngold ,Dmitri Tiomkin , Alfred Newman போன்றோரின் இசையமைப்பை இதற்கு உதாரணம் காட்டலாம். அமெரிக்க சினிமாவில் இவர்களது செவ்வியல் இசைப்பாணி புதிய பாச்சலை ஏற்படுத்தியது.மகத்தான வெற்றிப்படங்கள் என்று இன்று போற்றப்படுகின்ற பல படங்களின் வெற்றிக்கு பின்னணியில் இவர்களது இசையும் முக்கிய பங்காற்றியுள்ளது.
செவ்வியலிசையின் மூல வடிவம் படிமங்கள் , புதியகாலவழிப்பட்ட திரைப்படம் எனும் நவீன கலைவடிவத்திற்கிசைய அவர்களது இசைப்புலமையாலும் , சிந்தனை ஆழத்தாலும் மேலைத்தேய செவ்வியலிசையின் புதிய பரிமாணங்களாக மாற்றமடைந்தன.
மொஸாட் ,பீத்தோவன் , ஹைடன் , பாக் போன்ற செவ்வியலிசைமேதைகளால் செழுமை பெற்ற செவ்வியல் இசைமரபை கொண்டு சென்ற இளம் ஐரோப்பிய இசைக்கலைஞர்கள் ஹொலிவூட் திரையிசைக்கு புதிய பரிணாமம் கொடுத்தார்கள்.
ஐரோப்பிய செவ்வியலிசையில் உச்சம் பெற்ற வாத்திய இசையின் நிலைக்கு நாம் வந்தடைவதென்றால் குறைந்தது நூறு வருடமாவது செல்ல வேண்டும்.அந்தளவுக்கு ஏராளமான இசைப்படைப்புகளை அவர்கள் படைத்திருக்கிறார்கள்.ஒருவர் தன வாழ்நாளில் கேட்டுவிட முடியாத அளவுக்கு இசைத் தொகுதிகள் குவிந்து கிடக்கின்றன.
அந்த நோக்கில் வாத்திய இசையின் அவசியம் குறித்த ஒரு சிறு பொறியை கொடுத்தது திரைப்படங்களே.இந்தியாவில் முன்னணி வகித்துக் கொண்டிருந்த ஹிந்தி திரையிசை வாத்தியத்திலும் சிறந்து விளங்கியது. 1950 களின் தமிழ் திரை இசையமைப்பாளர்களுக்கு இந்த விழிப்புணர்ச்சியற்று இருந்த நிலையை 1960 களில் வாத்திய இசையின் இனிமையை தங்களால் முடிந்தளவு நிவர்த்தி செய்ய அவற்றை வெற்றிகரமாகப்பயன்படுத்தி சாதனை புரிந்தவர்கள் மெல்லிசைமன்னர்களே !
வாத்திய இசையின் பற்றாக்குறையை புதுமையுடனும் பிரக்ஞைடனும் நிவர்த்தி செய்ய முயன்றமை மட்டுமல்ல , அதன் உயிர்த்துடிப்புகளை இனம் கண்டு மரபு ராகங்களில் அமைந்த மெட்டுக்களின் சுவைகளையும் அதனுடன் இரண்டறக்கலந்தனர்.இசைப்பாடலில் பல்லவி ,அனுபல்லவி , சரணம் போலவே, வாத்திய இசையிலேயே முன்னிசை , இடையிசை போன்றவற்றிலும் கவனம் செலுத்தினார்கள். மெட்டுக்கள் பிரதானம் என்ற நிலையில் , ஒரு பாடலுக்குக்கான மெட்டுக்களை அமைப்பதே இசையமைப்பாளர்களின் பிரதான கடமையாக இருந்த நிலையில் அதற்கான பின்னணி இசை அமைப்பதென்பது அக்கால இசையமைப்பாளர்களின் உதவியாளர்களாலும் நிறைவு செய்யப்பட்டு வந்தன என்பதும் இங்கே குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாகும்.இந்த நிலை 1970 களின் மத்தியில் இளையராஜாவின் வருகைவரை பின்னணி இசை குறித்த புரிதல் , விழிப்புணர்வு இல்லாத நிலை இருந்தது. நீடித்திருந்தது.1950, 1960 களில் மெட்டுக்கள் தான் முக்கியம் அதற்கான பின்னணி இசை என்பது பிரதானமற்றது,என்பதுடன் குறிப்பிட்ட பாடல்களையே மெல்லிய வாத்திய இசையாக இசைத்தால் போதும் என்ற நிலை சினிமாக்காரர்கள் மத்தியிலும் , ரசிகர்கள் மத்தியிலும் ஒரு மனப்போக்காக வளர்ந்திருந்தது என்பதும் குறிப்பிட வேண்டிய முக்கியமான அம்சமாகும்.
வாத்திய இசை என்பது பாடப்படும் பாடலுக்கு பின் ஓடும் ஒரு சங்கதி என்றும், பாடகரை நிதானமாகப் பின்பற்றும் செயல்முறை எனவும் கர்னாடக இசைக்கச்சேரிகளில் உணடாக்கப்பட்ட ஓர் முறை போன்று நினைக்கப்பட்ட காலம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.மேடை நாடகங்களில் இடைவேளைகளில் ஹார்மோனிய இசை இடைவெளிகளை நிரப்பப் பயன்டுத்தப்பட்டதையும் பொருத்திப் பார்க்கலாம்.
நாடக மரபிலிருந்து இந்த முறையைப் பின்பற்றி வந்த மெல்லிசைமன்னர்களுக்கு முன்பிருந்த ,அவர்களின் சமகாலத்து தமிழ் திரை இசையமைப்பாளர்களுக்கும் இந்த விழிப்புணர்ச்சியற்ற நிலையை உள்ளிருந்து பார்த்தவர்கள் என்ற நிலையில் 1960 களில் தங்களால் முடிந்தளவு வாத்திய இசையின் இனிமையை புதுமையுடனும் பிரக்ஞைடனும் நிவர்த்தி செய்ய மிகுந்த சிரத்தை எடுத்தனர். 1960 களில் இந்த நிலையை கணிசமான அளவு மாற்றியமைத்தவர்கள் மெல்லிசை மன்னர்களே! ஓவியத்தில் கோடுகள், அதன் இயல்பான போக்கு ,வேகம், குறியீடுகள் மற்றும் வண்ணங்கள் அதன் பொருத்தப்பாடு ,அதனுடனிணைந்தெழும் தாள அசைவுகள் என பல்வகைப் பொருத்தப்பாடுகள் இணைந்து அழகு சேர்ப்பது போல இசையிலும் மெட்டு ,அதற்கு இசைவாகப் பயன்படுத்தப்படும் வாத்தியங்களின் ஒத்திசைவான இசை [ Harmony ] , தாளம் மற்றும் பாடகர்களின் குரல்களில் எழும் இசைக்கார்வைகள் போன்றவை அழகுக்கு அழகு சேர்ப்பனவையாகும்.
தங்கள் ரசனையின் அடிப்படையில் பாடல்களை அமைத்து தங்களுக்கானதாகவும் அதேவேளை மற்றவர்களுக்கானதாகவும் தந்து இசையின் உயிர் நிலையைக் காண்பித்தார்கள்.
பாடல்களில் மெல்லிசைமன்னர்கள் தந்த ஜீவமகரந்தங்களை சுமந்த இசைக்கோர்வைகளைக் கேட்ட மூத்தசகபாடி இசையமைப்பாளர்கள் வியந்து பாராட்ட நேர்ந்தது.புதிய மரபை உருவாக்கிக்கிக் காட்டிய இவர்களை யாராலும் மறுக்கவும் முடியவில்லை என்பதையும் நாம் காண்கிறோம்.பழமை மாறாத முன்னையவர்களின் இனிய தொடர்ச்சியாகவே அது இருந்தது!
மெல்லிசைமன்னர்களின் சமகாலத்தவர்களான எஸ்.எம்.சுப்பையாநாயுடு , ஆர்.சுதர்சனம் , கே.வி.மகாதேவன் போன்ற மூத்தசகபாடி இசையமைப்பாளர்களிடமும் இவர்களின் தாக்கத்தை பார்க்கிறோம். ஈடற்ற செல்வமான மரபின் எழிலையும்,வனப்பையும் காட்டி தனது தனித்துவமான இசையால் கானமழை பொழிந்துகொண்டிருந்த இசைமேதை ஜி.ராமநாதனின் இசைமாளிகையிலும் இவர்களது இசை நுழைந்தது. ஜி.ராமநாதன் இறுதிக்கால படங்களில் மெல்லிசைமன்னர்களின் வாத்திய இசையின் பாதிப்புக்களை, அதன் எதிரொலிகளை நாம் கேட்கிறோம். குறிப்பாக அவர் இசையமைத்த தெய்வத்தின் தெய்வம் படப்பாடல்களை இதற்கு சிறந்த உதாரணமாக காட்டலாம்.புற யதார்த்தமாக இருந்த மெல்லிசைமன்னர்களின் பாதிப்பே அதன் காரணம் என்பதை நான் சொல்லித் தெரியத்தேவையில்லை.
இவர்களது இசை முன்னவர்கள் தொடர்ச்சியின் பெருமிதமாகவே இன்று அதை நாம் நோக்க வேண்டியுள்ளது.இதே போன்றதொரு நிலையை இளையராஜாவின் வருகைக்கு பின்னர் வாத்திய இசையில் எழுந்த ஆச்சர்யங்களால் சமகால முன்னோடிகள் வாயடைத்துப் போனதும் ,அதை பெருமை பொங்க மெல்லிசைமன்னரே அங்கீரித்ததுமான ஒரு நிலையை ஒப்பிட்டு நோக்கலாம்.
வாத்திய இசையில் கவனம் செலுத்திய மெல்லிசைமன்னர்கள் ஒரு பிரளயத்தை ஏற்படுத்தினார்கள் என்று சொல்லலாம்.எந்த வாத்தியமாய் இருந்தாலும் அவற்றை பட்டியில் அடைக்காமல் இசைவெள்ளத்தில் ஓட வைத்தார்கள்.
காலவரிசையில் வரிசைவரிசையாக அவர்கள் கொடுத்த வெற்றிப்பாடல்களின் வழியே அவற்றை நோக்குதல் பயன்தரும்.அவை காலத்திற்கு காலம் கண்சிமிட்டி விட்டு மறையும் பாடல்கள் அல்ல என்பதையம் காலம் கடந்து நிற்கும் இசைச் சிற்பங்களாக அவை நிலைபெற்றதையும் காண்கிறோம்.
அக்காலத்தில் வெளிவந்த பல பாடல்களை இவர்களின் பாடல்களுக்கு அருகருகே வைத்துப் பார்த்தால் மெல்லிசைமன்னர்கள் வாத்திய இசையின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தமை புரியும்.பெரும்படியாக மெடுக்களிலேயே சிறப்புக் கவனம் செலுத்தப்பட்ட அன்றை சூழ்நிலையில் மெட்டுக்களை இசைக்கருவிகளால் மேம்படுத்த முனைந்த ஆர்வம் முன்னெழுவதையும் இவர்களிடம் காண்கின்றோம். வாத்திய இசையின் பாலபாடத்தை தமிழ் சினிமாவுக்கு வழங்கியவர்கள் இவர்களே என்று கூட சொல்லலாம்.
இவர்கள் 1950 களில் இசையமைத்த படங்களின் சில பாடல்களைக் கூர்ந்து நோக்கினால் வாத்திய இசையின் நெருங்கிய பிணைப்பையும், கவர்ச்சியையும், தனிநடையையும் எளிதில் காணலாம்.அவை புதுமையின் துளிர் காலம் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.தமிழ் சினிமா இசைத்துறையில் புதிய அணி ஒன்று மரபைதழுவிக் கொண்டே புதிய பாதையும் வகுத்துக் கொண்டு முகிழ்த்த வரலாறு அங்கிருந்து தான் ஆரம்பமாகிறது.வாத்திய இசையின் வாசத்தை , அதன் செம்மையை காட்ட முனைந்த சில பாடல்களை உதாரணமாகத் தருகின்றேன். பாடல்: 1
1954 இல் வெளிவந்த வைரமாலை படத்தில் இடம்பெற்ற " கூவாமல் கூவும் கோகிலம் " என்ற பாடலின் பல்லவி முடிந்து வரும் இடையிசையில் இணக்கமும் இனிமையும் குழைந்த இனிய வாத்திய இசையையும் அனுபல்லவிக்கும் , சரணத்திற்குமிடையில் வரும் இசையிலும் இனிய குழைவையும் கேட்கிறோம்.
பாடல்: 2
"விண்ணோடும் முகிலொடும் விளையாடும் வெண்ணிலவே " என்கிற பாடலிலும் [ புதையல் 1957 ] இந்தப்பாடலின் அழகான முன்னிசையிலும் இடையிசையிலும் மெல்லிசைமன்னர்களின் முன்னோக்கிய பார்வையை நாம் அவதானிக்கலாம்.
பாடல்: 3
தென்றல் உறங்கிய போதும் [ பெற்ற மகனை விற்ற அன்னை 1957 ] உயிர் தொடும் குழலிசையும் வயலின்களும் இணைந்து அமுத நிலையை தரும் இசைவார்ப்பு நெஞ்சை அள்ளும் வகையில் , உணர்வு நிலையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் இனிய இசை.இதயவானிலே ரீங்காரமிடும் ஆபேரி ராகத்தின் எழுச்சியைக்காட்டும் உயர் இசை.
பாடல்:4
தங்க மோகன தாமரையே - புதையல் [1957 ]
புதுமையான வாத்தியங்களுடன் கோரஸ் இணைக்கப்பட்ட இனிமையான பாடல் . சைலபோன் [ xylophone] எனகிற வாத்தியத்தை மிக இயல்பாக பயன்படுத்தி இனிமை காட்டுகிறார்கள்.
பாடல்:5
இரை போடும் மனிதருக்கே இரையாகும் வெள்ளாடே - பதிபக்தி [1959 ]
விறுவிறுப்பான ,துள்ளும் நடையில் செல்லும் இந்தப்பாடலில் சாரங்கி என்ற இசைக்கருவியையும் , புல்லாங்குழலிசையையும் மிக அருமையாக பயன்படுத்தினார்கள்.
பாடல்: 6
தென்றல் வந்து வீசாதோ தென்பாங்கு பாடாதோ [ சிவகங்கை சீமை 1959 ] தாலாட்டின் மென்மைக்கு சாமரம் வீசும் மென்மையான இசைக்கோர்வையால் வியக்க வைக்கும் வாத்திய பிரயோகங்கள்.ஆச்சர்ய இசையமைப்பு.நம்மை புதிய கற்பனையில் மிதக்க வைக்கும் ஆற்றல்மிக்க வாத்திய பிரயோகங்கங்கள்.எத்தனை முறை பாராட்டினாலும் போதாது.அபாரமான இசை!
பாடல் 7 ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ [ பாகப்பிரிவினை 1959]
மனதைப்பிழியும் சோகப்பாடல்.எவ்வளவு துயரம்! எவ்வளவு உணர்ச்சிமிக்க இசை !கேட்கும் போதெல்லாம் என் மனதை கரைய வைக்கும் பாடல்.மெதுவாக ஆரம்பிக்கும் இப்பாடலின் உச்சம் முதலாவது சரணத்திற்கு [ கை கால்கள் விளங்காத கணவன் குடிசையில் " என்ற வரிகளுக்கு முன் வரும் ] வாத்திய இசை உச்சம் காட்டி நெஞ்சை நெகிழ வைக்கிறது.தனது இயலாமையின் கையறு நிலையை நொந்து கொள்ளும் வகையில் பாடல் வரிகள் அமைத்து விட இசையோ எழுச்சியில் உச்சம் தந்து மனதை நோகடிக்கிறது.இது தான் பாடலின் உச்சம் என்று சொல்லலாம்.அதோடு நின்று விடவில்லை பாடலின் இரண்டாவது சரணத்திற்கு [ மண் வளர்த்த பெருமை எல்லாம் ] முன் வரும் இசையோ , தனது மனைவியின் பெருமையை கூறும் போது கனிவு பொங்கி அணைத்து ஆறுதல் தருகிறது.வாத்தியங்களின் பிரயோகம் அதியற்புதமானவை !
1960 களில் வெளிவந்த தமிழின் மெல்லிசைமுறையின் வெற்றிப்பெருமிதம் என்றாலே மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன்- ராமமூர்த்தி இணையினரே என்பதை பாடல்கள் நிரூபணம் செய்தன.
கலையம்சமும் , கேட்கக்கேட்கத் திகட்டாத தெள்ளமுதமாகவும்,வார்த்தையால் வணிக்கமுடியாத இனிமையுடனும் விளங்குகின்ற பாடல்கள் தான் எத்தனை எத்தனை ! இசையில் புதிய சௌந்தர்யத்தை அலுக்காத வண்ணம் கொடுத்த பெருமை மெல்லிசைமன்னர்களை சாரும்! தமிழுக்கு இளமைமிக்க இசை இவர்களால் கரையேறியது.மரபுடன் சம்போகம் செய்து களித்துப் பிறந்த இசை சுண்டியிழுக்கும் தாளத்தின் ஞானாலயத்துடன் சமநிலையில் வியாபித்துப் பரந்தன.
ப,பா வரிசையில் இயக்குனர் பீம்சிங் இயக்கிய தொடர் வெற்றிப்படங்களிலும், அதற்கு முன்பே 1950 இல் வெளிவந்த ஒரு சில படங்களிலும் புதிய இசையின் நறுமணங்களை, புதிய வாசனைச் சேர்க்கைகளை நுகரச் செய்தார்கள். 1960 இல் நான்கைந்து படங்களுக்கு இசையமைத்தாலும் அதிலும் மெல்லிசையின் ரஸத்துளிகளைத் தரத் தவறவில்லை.உதாரணத்திற்கு சில பாடல்கள்.
பாடல் 1
படிக்கப்படிக்க நெஞ்சிலினிக்கும் பருவம் என்ற காவியம் - இரத்தினபுரி இளவரிசி [1960]
டி.ஆர்.மகாலிங்கத்தின் முத்திரையுடன் கூடிய பாடல் என்று கருதப்படும் அந்தப்பாடலில்
தடுத்தவர் வெல்வதில்லை சரித்திரமே சொல்லும் அடுத்தவர்கள் அறியாமல் ரகசியமாய் செல்லும் காதல் ரகசியமாய் செல்லும் ...
என்ற வரிகளைத் தொடர்ந்து வரும் வயலின் இசை நெஞ்சில் அலைகளை மிதக்க வைக்கிற இனிமையில் தங்கள் முத்திரையை பதிக்கிறார்கள்.அதுமட்டுமல்ல பாடலில் புல்லாங்குழலிசை பயன்படுத்தப்பட்ட முறையும் வியந்து பேசவைப்பதாய் உள்ளது.எஸ்.ஜானகியின் குரலையும் வாத்தியத்திற்கு இணையாக பயன்படுத்தியதோ அபாரம்.
பாடல்: 2
குறிப்பாக "கவலையில்லாத மனிதன்" [ 1960 ] படத்தின் டைட்டில் இசையிலேயே அப்படத்தின் பல பாடல்களையும் இசைமாலையாக இசையமைத்து புதுமை காட்டினார்கள்.அதுமட்டுமா அப்படத்தின் பெரும்பாலான பாடல்களிலும் வசீரம் மிகுதியாகவே உள்ளன.
"காட்டில் மரம் உறங்கும் கழனியிலே நெல் உறங்கும் " என்ற பாடலில் பெண்கள் குரல்களையும் , ஆண்களை குரல்களையும் வெவ்வேறு விதங்களிலும் ,அவற்றுடன் புல்லாங்குழல் இசையையும் பயன்படுத்திய பாங்கும் ,அதை நாட்டுப்புறப்பாணியில் தந்ததும் அதிஉச்சம் என்றே வேண்டும்.
பாடல்:3 கூடிவாழ்ந்தால் கோடி நன்மை [ 1960 ] படத்தில் குழலிசையை சிறப்பாக பயன்படுத்திய "துணிந்தால் துன்பமில்லை சோர்ந்துவிட்டால் இன்பமில்லை " என்ற பாடல் இசையின் சிறப்பை எடுத்துக்காட்டும் இசைச்சிற்பமாகும்.
"பகைமை நீங்கிவிடும் பாட்டாலே - பெரும் பசியும் நீங்கிவிடும் கேட்டாலே
கசப்பான வாழக்கையை இனிப்பாக்குவது பாட்டு என்ற பட்டுக்கோட்டையாரின் பாடல் வரிகளை மேலும் அழகாக்கி விடுகிறார்கள் மெல்லிசைமன்னர்கள்.
பாடல்: 4 அதுபோலவே " சலசல ராகத்திலே தம்மோ டும்மோ காலத்திலே " [ பாடியவர்: பி.சுசீலா] என்ற பாடலும் அழகுக்கு அழகு சேர்த்த பாடலாகும்.இப்பாடலில் குழலிசையும் , வயலிகளின் இனிய உரசல்கள் பீறிட்டுக் கிளம்புவதையும் காதாரக் கேட்கலாம்.
பாடல்:5 "ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு " [ பாடியவர்கள்: டி.எம்.சௌந்தரராஜன் + ஜிக்கி + குழுவினர் ]என்று தொடங்கும் பாடலில் இனிமையுடன் கலந்து இழையும் புதுவிதமான குரலிசையையும் [Chorus ] ,விறு விறுப்பான தாள அசைவையும் கேட்கலாம்.
பாடல்: 6 ஏழைப்பெண் பாடுவதாய் அமைந்த "எங்க வாழ்க்கையிலே உள்ள சுவையைப் பாருங்க மனமுள்ள முதலாளி " [ பாடியவர்கள் : பி.சுசீலா.கே.ஜமுனாராணி + குழுவினர் ] என்ற பாடல் கடம் தாளவாத்தியத்துடன் எளிமையாக ஆரம்பித்து , பின் பணக்கார்கள் கொண்டாட்டமாகப் பாடுவதாக லத்தீன் அமெரிக்க இசைப்பாணியில் , அதன் தாளலயத்தையும் ,வாத்தியபரிவாரத்தையும் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தும் பாடல்.இருவேறு உலகங்களை இசையால் வெளிப்படுத்தும் இனியபாடல்.
பாடல்: 7
அன்புமனம் கனிந்த பின்னே அச்சம் வேண்டுமா [ ஆளுக்கொரு வீடு [ 1960 ] மென்மையான காதல் உணர்வை வெளிப்படுத்த சாரங்கி , வயலின் ,சித்தார் போன்ற வாத்தியங்களை மிக இயல்பாக நூலிழைகளைப் போல இழைத்து வியக்க வைக்கிறார்கள்.இதன் மூலம் பட்டுக்கோட்டையாரின் உயிரோட்டமான வரிகளை நம் நெஞ்சங்களில் நீக்காதவண்ணம் விதைத்துவிடுகிறார்கள்.
இவ்விதம் பல்வேறு விதமான இனிய வாத்தியக்கலவைகளை 1950 களில் வெளிவந்த பாடல்கள் சிலவற்றில் காண்பிக்கிறார்கள். 1960 களில் அவர்களின் இசையாளுமை கட்டறுத்து ஓடுவதைக் காண்கிறோம். ஆரோக்கியமான சவாலாக பல பரிசோதனைகளை இக்காலத்தில் நிகழ்த்துகிறார்கள் என்று சொல்லத்தூண்டுகிறது. தங்களுக்கு கிடைத்த இசைக்களத்தை வாத்திய இசைக்கலவைகளால் மரபாக ஒட்டி உறவாடி வந்த முறைகளிலும் ,அதனை மீறியும் புதுமையுடன் பயன்படுத்தி கவனத்தை ஈர்க்கிறார்கள்.
அமெரிக்க ஹொலிவூட் திரைக்கு சிறப்பான இசைமரபைக் கொண்ட ஐரோப்பிய இசைக்கலைஞர்கள் கிடைத்தது போல தமிழ் திரைக்கு பழமை மீறி புதுமை பாய்ச்சும் இசைக்கலைஞர்கள் கிடைக்கவில்லை. இசையின் மீது தீராக்காதலும் , திரையிசை குறித்த நற்கனவுகளையம் கொண்ட மெல்லிசைமன்னர்கள் அந்த பாரிய பொறுப்பை சுமக்க முனைந்தனர். 1950 மற்றும் 1960 களின் ஆரம்பகாலத் திரைப்படங்களில் பின்னணி இசையின் ஒரு விதமான போக்கு நிலவியதை நாம் காணலாம்.
அக்காலப்படங்களின் பின்னணி இசையை கூர்ந்து கவனிக்கும் ஒருவர் , பின்னணி இசை என்பது ஏலவே வந்த ஒரு பிரபல்யமான பாடலை பின்னணியில் வாசித்து விடுவதையும் ,அல்லது அந்தப்படத்திலேயே வந்த ஒருபாடலை மீண்டும் வாசித்துவிடுவதையும் அவதானிக்கலாம்.காட்சிகளின் சூழலுக்கு ஏற்ப அமைந்த புகழபெற்ற வேறு திரைப்படப் பாடல்களையும் வாசிப்பது ஒரு வழமையாகக் கூட இருந்தது.உதாரணமாக ,காதல் காட்சியென்றால் புகழ்பெற்ற ஒரு காதல் பாடலையும் ,நகைச்சுவைக்காட்சியென்றால் ஒரு நகைச்சுவைப் பாடலையும் வாத்திய இசையாக வாசித்திருப்பதை அவதானிக்கலாம்.குறிப்பாக இசையமைப்பாளர் ஜி.ராமநாதனின் படங்களில் இந்நிலையை அதிகமாகக் காணலாம்.பெரும்பாலும் எல்லா இசையமைப்பாளர்களும் இதே முறையைப் பயன்படுத்தினார்கள் என்பதும் கவனத்திற்க்குரியது. இந்த நிலை 1970கள் வரையும் ஆங்காங்கே மிகக்குறைந்த அளவில் தொடர்ந்ததையும் அவதானிக்கலாம்.
சிறப்பான செவ்வியல் இசைமரபை நீண்டகாலமாகக் கொண்டிருக்கும் தமிழ் இசையுலகில் , பிறநாடுகளைப்போல ஒரு வாத்திய இசைக்குழு [ Symphony Orchestra ] இன்றுவரை இல்லை என்பதும் கவனத்திற்குரியது. வெளிநாடுகளில் ஒவ்வொரு சிறிய நகரத்தில் கூட அதற்கென ஒரு இசைக்குழு இருப்பதை நாம் காண்கிறோம். அந்த நோக்கில் வாத்திய இசையின் அவசியம் குறித்த ஒரு சிறு பொறியை கொடுத்தது திரைப்படங்களே.
ஐரோப்பிய இசையுலகில் ஓபரா இசையில் வாத்திய இசையையும் இணைத்து புதுமை நிகழ்த்திய ரொமான்டிக் கால இசைக்கு ஒப்பாக 1950 களில் தமிழ்திரையிசையில் நாடகப்பாணி மெட்டுக்களுக்கு இடையிசையாக பல வாத்தியங்கள் பயன்படுத்தப்பட்டன.
அந்த வகையில் 1950 களில் தமிழ் நாடகமரபோடு ஒட்டி வந்த இசைப்போக்கின் சற்று மேம்பட்டு நின்ற இசையாக இருந்து வந்த திரையிசையை ஹிந்தித் திரைப்படங்களுக்கு நிகராக நவீனப்படுத்த வேண்டிய அவசியம் மெல்லிசைமன்னர்களுக்கு இருந்தது.தமிழ் திரையில் அதிகம் பயன்படுத்தப்படாத பல வாத்தியக்கருவிகள் பயன்பாட்டுக்கு வரத் தொடங்கின.மரபோடு ஒன்றியைந்து வரக்கூடியதும் ,ஆதனூடே புதிய மரபையும் உருவாக்கிக்க்காட்டியவர்கள் மெல்லிசைமன்னர்கள்.
தங்கள் இசையை முன்னவர்கள் போல அமைப்பதும் அதன் கட்டுனமானங்களை குலைக்காமல் அதனோடியைந்த புதுமையை தங்களுக்கே உரிய தனித்தன்மையுடனும் புகுத்தினார்கள்.வாத்திய இசையில் புதிய உத்திகளும், சோதனை முயற்சிகளும் செய்தனர்.வாத்திய இசையின் நுண்மையான அலைவீச்சை பரந்த கற்பனையில் புதுவர்ணக்கலவையாய் தந்தனர்.மின்னி ,மின்னி ஜாலம் காட்டி இசையின் உயிர்ப்புகளை ஒளிரவைக்கும் ஒலிநயங்களை வெவ்வேறு வாத்தியங்களில் புதிய தரிசனத்துடன் தந்தார்கள். பாடல்களின் ஒலித்திரளில் கண நேரம் வந்து போகும் வாத்திய கோர்வைகளால் இனபத்தையும் , குதூகலத்தையும் பேராவலையும் ,களிப்பையும் சுருக்கமாகச் சொன்னால் வாழ்வின் நாடகத்தை இதயத்தின் ஆழத்தில் புதைத்து விட வாத்தியங்களை பொருத்தமான இடங்களில் அணி அணியாய் அமைத்து நயக்க வைத்தார்கள்.
இவர்களின் ஆததர்சமாக இருந்த ஹிந்தி திரையிசையின் வீச்சுக்கு நிகராக பாடல்கள் அமைக்க புதிய வாத்தியங்களை அறிமுகம் செய்ய முனைந்ததுடன் .மேலைத்தேய வாத்தியங்களான பியானோ,கிட்டார் , சாக்ஸபோன், ட்ரம்பெட் ,பொங்கஸ், சைலோபோன் மட்டுமல்ல அவற்றுடன் வட இந்திய இசைப்பாரம்பரியத்திலிருந்து வந்த சித்தார் ,செனாய் , சாரங்கி ,சந்தூர் போன்ற இசைக்கருவிகளையும் இணைத்து பெரும்சாதனை புரிந்தார்கள்.கடின உழைப்பும் ,வாத்தியங்கள் குறித்த நுண்ணறிவும் அவர்களது புதிய முயற்சிகளுக்குத் துணையாய் நின்றன.அவைமட்டுமல்ல ஹோரஸ், விசில் , மிமிக்கிரி போன்ற பல்வேறு சப்த ஒலிகளையெல்லாம் வெற்றிகரமாகச் செயற்படுத்தினர். சுருக்கமாகச் சொல்வதானால் இசையை புதுப்பித்து புதுநிர்மாணம் செய்தார்கள்.
தமிழ்த்திரையிசையின் புது இசைப் பிரவேசமாக இதனை நாம் நோக்க வேண்டும். அந்த இசை வீச்சும் , ஆழமும், பன்முகத்தன்மையும் கொண்டதாக விளங்கிது.இதுவரை சேகரத்திடலிருந்த இசையறிவின் புதுவளர்ச்சியாக உருவாக்கம் செய்தார்கள்.சாதாரண இசைரசிகர்களை மனதில் கொண்டதாகவும் , அவர்களது இசைரச உணர்வை தூண்டுவதாகவும் அமைந்தது.
புதுப்புது வாத்தியங்களை சலனமின்றி அறிமுகம் செய்த மெல்லிசைமன்னர்கள் வட இந்திய இசைக்கருவியான செனாய் வாத்திய இசைக்கருவியை பயன்படுத்திய பங்கு விதந்துரைக்கத் தக்கது.ஏற்கனவே இந்தித்திரையிசையில் வேரூன்றி விருத்தி பெற்ற இக்கருவியை ஆங்காங்கே ஒரு சில பாடல்களிலும் ,பெரும்பாலும் சோகக்காட்சிகளிலும் பிற இசையமைப்பாளர்களும் பயன்படுத்தியிருக்கின்றனர்.
மூத்த இசையமைப்பாளர் ஜி.ராமநாதன் எளிமையான உத்திகளை பயன்படுத்தி இசையமைப்பதில் வல்லவர்.அவர் செனாய் இசையை மகிழ்ச்சிப்பாடல்களில் வைத்த மூலவர்களில் ஒருவர்.
வீரபாண்டிய கட்டப்பொம்மன் [1958] படத்தில் சுசீலா குழுவினர் பாடும் " அஞ்சாத சிங்கம் என் காளை " என்று தொடங்கும் பாடலிலும் , அரசிளங்குமரி [1960] படத்தில் சௌந்தரராஜன் , சூலமங்கலம் ராஜலட்சுமி பாடும் " ஊர்வலமாக மாப்பிள்ளை சேர்ந்து வ்ருகிறார் " என்ற பாடலிலும் செனாய் வாத்தியத்தில் கிராமிய மணம் கமழ வைத்துக் காட்டினார்.
சோகத்தை எதிரொலிக்க வைத்த பாடல்களில் தெய்வத்தின் தெய்வம் [1962] படத்தில் சுசீலா பாடும் " பாட்டுப் பாட வாய் எடுத்தேன் " என்ற பாடலில் ஜி.ராமநாதனும் ,மாமன் மகள் [1959] படத்தில் ஜிக்கி பாடும் " ஆசை நிலா சென்றதே " என்ற பாடலை எஸ்.வெங்கட்ராமனும் மிக அற்புதமாக தந்து சென்றுள்ளனர்.
தமிழ் சூழலில் செனாய் சோக உணர்வை தரும் வாத்தியமாக கருத்தப்பட்டுவந்த சூழ்நிலையில் அபூர்வமாக ஒரு சில பாடல்களும் வெளிவந்தன அந்நிலையில் "சோகக்காட்சியா" ? கொண்டுவா செனாய் வாத்தியக்கருவியை " என அன்றிருந்த ஒரு காலகட்டத்தில் அந்த வாத்தியத்தை அதிகமான மகிழ்ச்சிப்பாடல்களிலும் வைத்துக்காட்டி பெருமை சேர்த்தவர்கள் மெல்லிசைமன்னர்கள் என்றால் மிகையில்லை.
இன்ன வாத்தியம் இன்ன உணர்வைத்தான் பிரதிபலிக்கும் என்ற வரையறைகளைத் தாண்டி ,"அவற்றின் எல்லை இது தான் " என்று முன் சொல்லப்பட்ட கருத்துக்களை மீறி புதிய கோணங்களில் பயன்படுத்தினர். இன்னொருமுறையில் சொல்வதென்றால் தலைகீழ் விகிதத்திலும் பயன்படுத்தினார்கள் எனலாம் .
செனாய் வாத்தியத்தை காதல்பாடல்களில் மட்டுமல்ல ,பலவிதமான பாடல்களிலும் புதுமுமையாகப் பயன்படுத்தி வியக்க வைத்த சில பாடல்களை இங்கே பார்ப்போம்.
மெல்லிசைமன்னர்களின் மகிழ்ச்சிப்பாடல்களில் செனாய்:
பாடல்: 1
--------------
"ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்" - பாலும் பழமும் [1961]
இந்தப் பாடலின் இசையில், அதன் இனிமையில் செனாய் பயன்பட்டிருப்பதை பலரும் கவனித்தருக்க மாட்டார்கள்.அதை உற்று நோக்கிக் கேட்கும் போது மட்டுமே அதன் இன்பத்தை நாம் அனுபவிக்கலாம்.பாடலின் பல்லவியின் முடிவிலும் , சரணத்திலும் செனாய் வாத்தியத்தின் குழைவையும், இனிமையும் வியக்கலாம். பாடலின் பல்லவி முடிந்தவுடன் காலையை குளிர்ச்சியுடன் வரவேற்கும் செனாய் இசையை இன்பப்பெருக்காகத் தருகிறார்கள்.
இப்பாடலின் முடிவில் "அருள்மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன் " வரிகளை தொடரும் வயலின் இசையும் , புல்லாங்குழல் இசையும் சம்போகம் செய்து இன்பமாய்ப் புலரும் இனிய கலைப்பொழுதை இதமாக வருடிக் கொடுக்கின்றன.காலைப்பொழுது இருக்கும்வரை இந்தப்பாடல் இருக்கும் என்பதில் ஒரு சந்தேகமும் இருக்க முடியாது.
பாடல் :2
-------------
" மதுரா நகரில் தமிழ் சங்கம் " -பார் மகளே பார் [ 1963 ]
இந்தப் பாடலிலும் செனாய் இசையை வாஞ்சையுடன் தருகிறார்கள்.காதலின் அன்புக்கனிவுக்கு அச்சாரமாக பாடலின் முன்னிசையிலேயே செனாயின் மதுரத்தை,, அதன் ஜீவஒலியை அள்ளித்தரும் அதிசயத்தைக் காண்கிறோம்.பாடலின் முன்னிசையிலும் , தொடரும் இடையிசைகளிலும் நம்மை இன்பம் தெறிக்கும் செனாய் இசையின் உபாசகர்களாக்கி விடுகிறார்கள்.செனாய் இசை இன்பப் பெருக்காய் பாயும் பாடல் இது.
பாடல்: 3
-------------
செனாய் இசையுடன் கரைந்த இன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்றால் நாம தவிர்க்க முடியாத பாடல் ஒன்றுள்ளது.அது தான் கலைக்கோயில் [ 1963 ] படத்தில் இடபெற்ற " தங்கரதம் வந்தது வீதியிலே " [ பாடியவர்கள்: பாலமுரளி கிருஷ்ணா + சுசீலா ] தொடங்கும் பாடல்.
இப்பாடல் பெரும்தச்சர்களின் கைவண்ண நேர்த்தியுடன் செதுக்கப்பட்ட உயிர்த்துடிப்புமிக்க இசைச்சிற்பம் என்று சொல்லலாம்.மரபார்ந்த ராகமான ஆபோகி ராகத்தில் தோய்ந்த அழகிய மெல்லிசையில் மெல்லிசைமன்னர்களின் மனஎழுச்சியையும் , மன ஓசையையும் செனாய் வாத்திய இசையில் கேட்கிறோம்.நவீனங்களை மரபு வழியில் நின்று தரும் இசைலட்ஷணங்களை இந்தப்பாடலில் தரிசிக்கிறோம்.நமது மனங்களில் தைல வண்ணமாக இசை வழிந்து செல்லும் அற்புதஅனுபவத்தை ,செனாய் வாத்தியத்தின் மதுர இசையில் காதலின் இன்பநிலையை அமுதமயமாகத் தருகிறார்கள்.செனாய் இசை விரவி ஆட்கொள்ளும் புதுஅனுபவம் பாடலின் முடிவில் விஞ்சி நிற்பதை நான் பல முறை உணர்ந்திருக்கிறேன்.கேட்கக் கேட்க இன்புற வைக்கும் இப்பாடல் காலத்தை விஞ்சி நிற்கிறது
இந்தப்பாடலை மிகச் சிறப்பாகப்பாடும் என் தந்தையாரையும் நான் இக்கணத்தில் நினைத்துப்பார்க்கிறேன்.அவர் மூலமே இப்பாடலை நான் அறியும் வாய்ப்பு கிடைத்தது.
பாடல்: 4
-------------
கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே [ கர்ணன் ]
பாடலின் பல்லவி முடிந்து வரும் இடையிசையில் இன்பப்பெருக்கை அள்ளித்தரும் விதத்தில் இசைக்க வைக்கப்பட்டுள்ளது.அனுபல்லவி முடித்து வரும் இசைப்பகுதியில் அந்த இசை, கோரசுக்குப்பதிலாக சாரங்கி வாத்திய இசையில் வருகிறது.கோரஸ் இசையுடன் குழைந்து வரும் தேனமுதாக கலந்து இசையில் புதிய போதனை காட்டியது அன்றைய நிலைக்கு நேரெதிராகவே இருந்தது.
சுத்ததன்யாசி ராகத்திற்கு மெல்லிசைமன்னர்கள் புதிய முகவரியைக் கொடுத்த பாடல்.பாடிய விதமோ அபாரம்.
பாடல்: 5
-------------
கேள்வி பிறந்தது அன்று [ பச்சை விளக்கு ]
எத்தனை, எத்தனை வாத்தியப்பரிவாரங்கள் என்று வியக்கவைக்கும் பாடல்.றம்பட, ட்ரம்ஸ்,எக்கோடியன்,வயலின், குழல்,விசில் , ரயில் சத்தம் என வினோதமான இசைக்கலவை.உலக மனிதனின் கண்டுபிடிப்புகளை வியந்து பாடும் இந்த பாடலில் அத்தனையையும் கலந்து கொடுத்து வியக்க வைக்கிறார்கள்.
உலக விஷயங்களின் பெருமைகளை வியந்து பாடும் போது வானம் தொட்டுச் சென்ற இசை, இப்பாடலின் இனிய திருப்பம், வீடு பற்றி பாடும் போது உள்ளக்கிளர்ச்சி தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
பாடலின் சரணத்தில் புதிய தினுசாக , புதிய திருப்பமாக அதைக் கையாண்ட மெல்லிசைமன்னர்களின் ஆற்றலை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை.உணர்ச்சிப் பெருக்கும் , மெய்சிலிர்ப்பும் தரும் அந்த இசைக்கு மெல்லிசைமன்னர்கள் பயபடுத்திய வாத்தியம் செனாய் ஆகும்.அதுமட்டுமல்ல அதன் பின்னணியில் ஒலிக்கும் பொங்கஸ் தாளம் பெரும் மனவெழுச்சி தருகிறது.
குலமகள் வாழும் இனிய குடும்பம் கோவிலுக்கிணையாகும்
என்ற வரிகளுக்கு முன்பாக வரும் சிலிர்ப்பூட்டும் செனாய் இசை 10 செக்கன்கள் மட்டுமே ஒலிக்கிறது.இயற்கையோடிசைந்த வாழ்க்கை போல பாடலின் உணர்வுக்கும் இசைவாய் அமைக்கப்பட்ட அற்புதமான இசை படக்காட்சியையும் தாண்டி தனியே இசை கேட்பவர்களையும் பரவசப்படுத்தி நிற்கிறது.இசையின் மகோன்னதம் இதுவல்லவா !
பாடல்: 6
-------------
சிங்காரத் தேருக்கு சேலை கட்டி [ இது சத்தியம் ]
மலைவாழ் தொழிலாளர்கள் பாடும் பாங்கில் அமைந்த இந்தப்பாடலில், கேட்போரை குதூகலமடையச் செய்யும் வண்ணம் செனாய் பயன்படுத்தப்பட்டுள்ளது.குழல் ,சந்தூர் , கோரஸ் பரிவாரங்களும் அருமையாக இணைக்கப்பட்ட பாடல்.பின்னாளில் ஹிந்தி சினிமாவில் புகழ் பெற்ற ஹேமமாலினி நடனமாடும் பெண்கள் குழுவில் முன்வரிசையில் ஆடுவதை இந்தப்பாடல் காட்சியில் காணலாம்.
பாடல்:7
-------------
ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது - [பச்சை விளக்கு ]
நாதஸ்வர இசையுடன் ஆரம்பிக்கும் ஒரு இனிய பாடலில் செனாய் இசை எப்படி இணையும் ? என்று ஆச்சர்யப்பட வைக்கும் பாடல்.நாதஸ்வரம், செனாய் இரண்டு மகோன்னதமான இசைக்கருவிகள்.மாபெரும் இசைக்கலைஞர்களால் பயன்படுத்தப்பட்ட உயர் ரக இசைக்கருவிகள் ! மனோதர்ம இசையில் உச்சம் தருகின்ற வாத்தியங்கள்.இவை மெல்லிசைவடிவங்களின் இசைக்குறிப்புகளில் அடங்கி நிற்குமா என்ற ஐயம் எழாமல் இருக்க முடியாது.
உணர்வு நிலையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் இவ்விரு மேதகு வாத்தியங்களை ஒரே பாடலில் ஒருங்கிசையாத தந்த மெல்லிசைமன்னர்களின் இசைஞானத்தை இப்பாடலில் தரிசிக்கின்றோம்.இனிய நாதஸ்வர இசையுடன் ஆரம்பிக்கும் இந்தப்பாடலின் அனுபல்லவியில்
நால்வகை மதமும் நாற்பது கோடி மாந்தரும் வருகின்றார் - அந்த நாயகன் தானும் வானில் இருந்தே பூமழை பொழிகின்றான்
என்ற பாடல் வரிகளைத் தொடர்ந்து வரும் இடையிசையில் புல்லாங்குழலுடன் நாதஸ்வர இசையை இணைத்து தருகிறார்கள்., மீண்டும் சரணத்தில் , அதே மெட்டில் "குங்குமச் சிலையே குடும்பத்து விளக்கே " என்ற வரிகளைத் தொடரும் இசையில் நாதஸ்வரத்திற்குப் பதிலாக குழலுடன் செனாயைப் பயன்படுத்தி எழுச்சியூட்டுகின்றனர்.
வெவ்வேறு ஒலிக்கலவைகளை கலந்து மெல்லிசையைத் தளிர்த்தோங்க வைத்து புதுமை காட்டுகிறார்கள். பாடல்: 8
-------------
வாரத்திருப்பாளோ வண்ணமலர் கண்ணன் அவன் - [பச்சை விளக்கு ]
இது சந்தித்துப் பேசும் வாய்ப்பு பெற்ற காதலர்கள் பாடும் விரகதாபப்பாடல். பொதுவாக விரகதாபம் சந்திக்க முடியாத சூழ்நிலையிலேயே அமைவது வழக்கம்.ஒரே வீட்டில் இருந்தும் தங்கள் விருப்பை வெளியிட முடியாத கட்டுப்பாட்டில் இருந்து பாடப்படும் பாடல்.
தனியே பாடலைக்கேட்பவர்கள் மிதமிஞ்சிய சோகப்பாடல் என்று நினைக்க வைக்கும் அளவுக்கு உருக்கம் நிறைந்த செனாய் வாசிப்பு சோக உணர்வை ஏற்படுத்திவிடுகிறது.கட்டுப்பாட்டுடன் அருகில் நிற்கும் காதலனைப்பார்த்து "பக்கத்தில் பழமிருக்க பாலோடு தேன் இருக்க உண்ணாமல் தனிமையிலே உட்கார்ந்த மன்னன் அவன் "
என்ற வரிகளின் பின்னணியில் ஒலிக்கும் செனாய் இசை , காதலனின் இதய வேதனையை வெளிப்படுத்துகிறது.
அனுபல்லவியின் மெட்டிலேயே வரும் சரணத்தில் [ கல்வியென்று பள்ளியிலே ] காதலின் பாடும் வரிகளுக்கு பின்னால் செனாய் இசைக்கபடவில்லை.
இந்தப்பாடலில் செனாய் காதலனின் இதயதாபமாக ஒலிக்கிறது.
இன்னுமொரு முக்கிய திருப்பமாக பாடலின் சரணத்திற்கு [ கல்வியென்று பள்ளியிலே ] முன்பாக வரும் இடையிசை உற்சாகத்தில் குதித்தெழுந்து பாய்கிறது.அந்த உற்சாகமிகுந்த இசை பழைய ஹிந்திப்பாடலின் இடையிசையை மேற்கோள் காட்டுவது போல பாய்ந்து சென்று நெஞ்சை நெகிழ வைக்கிறது.இது போன்ற இனிய இசைத்திருப்பங்களை மெல்லிசைமன்னர்களின் பாடல்களில் ஆங்காங்கே காணலாம.பாடல் காட்சியும் மிக நேர்த்தியாகப் படமாக்கப்பட்டுள்ளது
பாடல்: 9
-------------
கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும் [ ஆனந்தி] பாடியவர் பி.சுசீலா.
மூன்றரை நிமிடங்களில் ஒலிக்கும் இந்தப்பாடல் காலப்பெருவெளியில் மறைந்து கிடைக்கும் ஞாபகத்தடயங்களை கிளறி உணர்ச்சிப்பெருவெள்ளத்தில் ஆழ்த்தும் ஆற்றல் பெற்றது.நம் மனங்களை உருக வைத்து வாழ்வை அர்த்தப்படுத்தும் பாடல்!
காதலின் உச்சத்தில் நின்று பாடப்படும் இந்த மகிழ்ச்சிப்பாடலில் இனம்புரியாத சோகத்தையும் உள்ளிணைக்க செனாய் வாத்தியத்தைப் பயன்படுத்தி உணர்வின் உள்ளொளியைக் காட்டும் மெல்லிசைமன்னர்களின் இசை மேதைமையைக் காண்கிறோம். பல்லவியைத் தொடரும் இடையிசையில் அன்பின் ததும்பலாக சந்தூர் வாத்தியத்தின் இனிய சிதறல்களை காட்டுகிறார்கள்.
பிள்ளையோ உன் மனது இல்லையோ ஓர் நினைவு
என்ற வரிகளைத் தொடர்ந்து வரும் இடையிசையில் செனாய் தரும் மதுர இசையைத் தொடர்ந்து எக்கோடியன் சுழன்றடித்து அனுபல்லவியை அபாரமாக எடுத்துக்கொடுக்கிறது.அன்பின் முருகிய நிலையை முழுமையாய் தரும் பாடல்.எனது பால்யவயதின் நினைவலைகளை மீட்டும் பாடல்.
பாடல்: 10
-------------
இரவும் நிலவும் மலரட்டுமே [கர்ணன் ]
மெல்லிசை இயக்கத்தின் புத்திரர்கள் கொடுத்த கலையழகு குன்றாத கைநேர்த்தியை இந்தப்பாடலில் கேட்கலாம்.குழல் ,சாரங்கி ,சந்தூர் போன்ற வாத்தியங்களுடன் அணி சேர்த்து செனாய் இசையின் இனிமையை இன்பத்தின் தித்திப்பாய்த் தந்து தனிச்சுவை காட்டி நிற்கும் பாடல்.வட இந்திய இசைக்கருவிகளை வைத்து ஹிந்துஸ்தானிய இசைப்படிமங்களை தமிழில் கலந்த புது மெருகு இந்தப்பாடல்.
பாடல்: 11
பொன்னொன்று கண்டேன் - படித்தால் மட்டும் போதுமா - திருமணமாகாத அந்நியோன்யமான சகோதரர்கள் பாடும் பாடலாக அமைந்த இந்த அற்புதமான பாடலில் கனிவும் , நெகிழ்ச்சியும் ததும்பி நிற்கிறது. கதையின் போக்கில் பின்னர் நிகழப்போகும் துயரத்தின் அறிவிப்பாய் ஒலிப்பது போல செனாய் கரைந்து செல்கிறது.
சோக ரசத்தில் மிளிரும் ஒரு அற்புத இசைக்கருவியை மகிழ்ச்சி கரைபுரண்டோடும் ,உணர்ச்சி ததும்பும் பாடல்களிலும் வைத்த நுட்பம்,லாவண்யம், விழிப்புணர்வு தூண்டும் புதுமை தவிர வேறென்னவாக இருக்க முடியும்!
செனாய் வாத்தியம் என்பது துயரத்தை அறிவிக்கும் ஒரு இசைக்கருவி என்ற தப்பான கருத்து தமிழர்கள் மத்தியில் நிலவுகிறது.இதுமாதிரியான ஒரு அடையாளத்தை சினிமாவும் ,வானொலிகளும் கொடுத்திருந்த என்பது மறுக்க முடியாததாகும்.குறிப்பாக வானொலிகளின் அஞ்சலி நிகழ்வுகள் செனாய் வாத்தியமின்றி இடம்பெறாமையும் இதுமாதிரியான ஒரு தோற்றப்பாங்கு ஏற்படக்காரணமாகின.
குறிப்பாக ஈழத்து தமிழர்களை பொறுத்தவரை இது ஒரு மரண இசைக்கருவி என்று கூறுமளவுக்கு மரணஅஞ்சலி நிகழ்வுகளுக்கு அதிகம் பயன்படுத்தப்பட்ட வாத்தியம் ஆகும்.
வடஇந்திய இசைக்கருவியாக செனாயின் உள்ளார்ந்த இயல்பில் சோகம் கவிந்திருந்தாலும் ,மகிழ்ச்சியிலும் பூரண இன்பத்தில் திளைக்க வைக்கக்கூடியதாகும்.வட இந்தியத் திருமணங்களில் மங்களவாத்தியம் செனாய் !
மெல்லிசைமன்னர்களின் பாடல்களில் செனாய் வாத்திய இசையில் மகிழ்ச்சி ஓங்கி நிற்கும் பாடல்களுக்கு மேலும் சில உதாரணங்ககளை கீழே தருகின்றேன்.
கண்களும் காவடி சிந்தாகட்டும் - எங்கவீட்டுப்பிள்ளை
தங்க மகள் வயிற்றில் பிஞ்சு மகன் உருவம் [வாழ்க்கைப்படகு]
துள்ளித் துள்ளி விளையாட துடிக்குது மனசு- [மோட்டார் சுந்தரப்பிள்ளை ]
தென்றல் வரும் சேதி தரும் - [ பாலும் பழமும் ]
போய் வா மக்களே போய் வா - கர்ணன் என் உயிர் தோழி கேளடி சேதி - கர்ணன்
தித்திக்கும் பால் எடுத்து - [ தாமரை நெஞ்சம் ]
தேடித் தேடி காத்திருந்தேன் - [பெண் என்றால் பெண் ]
வெள்ளி மணி ஓசையிலே உள்ளமெனும் கோவிலிலே [இருமலர்கள் ]
கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான் [ பெற்றால் தான் பிள்ளையா ] பொட்டு வைத்த முகமோ [சுமதி என் சுந்தரி ] உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் [ அவளுக்கென்றோர் மனம்]
தீர்க்க சுமங்கலி வாழகவே [தீர்க்க சுமங்கலி ] திருப்பதி சென்று திரும்பி வந்தால் [ மூன்று தெய்வங்கள்]
சோகப்பாடல்களில் மிக இயல்பாய் பயன்படுத்தப்பட்டு வந்த இந்த வாத்தியக்கருவியை மகிழ்ச்சிப்பாடலிலேயே எவ்வளவு அற்புதமாகத் தந்தார்கள் என்றால் அதன் இயல்பிலேயே சோகம் கொட்டும் இசைக்கருவியை வார்த்தையால் வர்ணிக்கமுடியாத வகையில் உணர்ச்சி பீறிட்டுப்பாயும் வகையில் தந்து இசைரசிகர்களைக் கிற்ங்கடித்திருக்கிறார்கள் என்று சொன்னால் தவறேதுமில்லை.அந்தளவுக்கு சோகரசம் ததும்பும் பாடல்களிலும் அள்ளித்தந்திருக்கின்றார்கள்.
சோகப்பாடல்கள்:
மெல்லிசைமன்னர்கள் இசையமைத்த பாடல்களில் எனக்கு அதிகம் பிடித்த சோகப்பாடல்களில் அதியுன்னதமான சில பாடல்களைத் தருகிறேன்.வார்த்தையால் வர்ணிக்கமுடியாத பாடல்கள் என்று நான் கருதும் இப்பாடல்களை குறிப்பிடாமல் இக்கட்டுரை நிறைவடையாது என்பதாலும் அதை குறிப்பிடாமல் என்னாலும் இருக்க முடியாது என்பதாலும் அவற்றை இங்கே நினைவுபடுத்துகிறேன்.
இந்தப்பாடல்களை கண்ணீர்வராமல் என்னால் கேட்கமுடிவதில்லை.இப்பாடல்களில் என்னை அதிகம் கவர்ந்தது இசைதான் என்பதும் பாடலின் வரிகள் அதனோடு மாற்றொணாவண்ணம் பின்னிப்பிணைந்து இருப்பதால் பாடல் உயர் நிலையை எய்திநிற்கின்றமையாலும் கூடுதல் மதிப்பு ஏற்படுகிறது.
மெல்லிசைமன்னர்கள் , கண்ணதாசன் , சுசீலா இந்தக் கூட்டணியில் வந்த அனைத்துப் பாடல்களும் வெற்றியின் உச்சங்களைத்
தொட்டவையாகும்.குறிப்பாக 1960 களில் வெளிவந்த பாடல்களை பற்றி சொல்லவே தேவையில்லை.அதில் சோக உணர்வில் உச்சம் தொடும் பாடல்களில் சில.
மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் [ பாக்கியலட்சுமி 1961 ] நினைக்கத்தெரிந்த மனமே உனக்கு [ ஆனந்த ஜோதி 1963 ] எட்டடுக்கு மாளிகையில் [ பாத காணிக்கை 1962 ]
பாடல்:1
மாலைப்பொழுதில் மயக்கத்திலே - [ பாக்கியலட்சுமி ]
நன்றாகக் பாடக்கூடிய தனது சிநேகிதியிடம் பாடல் பாடும்படி கேட்கும் போது , தனது மனதில் இருப்பதை பூடகமாக வெளிப்படுத்தும் பாடல்.
வீணை இசையுடன் மகிழ்ச்சியாக ஆரம்பமாகும் இந்தப்பாடல் ,நாயகியின் துயரத்தை வெளிப்படுத்துவதாயும் அமைக்கப்பட்டுள்ளது.இப்பாடலில் செனாய் வாத்தியம் துயரத்தின் குறியீடாக வெளிப்படுத்தப்படுவதுடன் அமைக்கப்பட்ட ஹிந்தோள ராகத்தின் உயர்வையும் , மேன்மையையும் உச்சத்தில் வைத்து நம்மை சிலிர்க்க வைக்கிறது.
பல்லவி முடிந்ததும் அருமையான வீணை மீட்டலும் ,தாவிச் சென்று பாடலுக்குள் கரைக்கும் வயலின் இசையும் ஒன்றிணைய அனுபல்லவி ஆரம்பிக்கிறது.
அனுபல்லவியில்..
மணம் முடித்தவர் போல் அருகினில் ஓர் வடிவு கண்டேன் தோழி மங்கை என் கையில் குங்குமம் தந்தார் மாலையிட்டார் தோழி...
என்ற வரிகளைத் தொடர்ந்து வரும் செனாய் உருக்கமும், நெகிழ்ச்சியும் தந்து நம்மைக் கரைய வைக்கிறது.
அனுபல்லவியைத் தொடர்ந்து பொங்கி வரும் வயலின்களும் ,அதற்கு அணைகட்டி ஆற்றுப்படுத்தும் வீணையிசையும் அதைத் தொடர்ந்து வரும் செனாய் இசையும் பாடலின் உச்சக்கட்டமாக துயரத்தின் உச்சத்தை தொட்டு கனிந்து குழைய சரணம் ஆரம்பிக்கிறது.
கனவில் வந்தவர் யார் எனக் கேட்டேன் கணவர் என்றார் தோழி .... கணவர் என்றால் அவர் கனவு முடிந்ததும் பிரிந்தது ஏன் தோழி ..
கணவர் என்றால் அவர் கனவு முடிந்ததும் பிரிந்தது ஏன் தோழி என்ற வரிகளைத் தொடர்ந்து வரும் செனாய் இசை ,நெகிழ்ந்து, கனிந்து கரைந்து துயரத்தின் வடிவாய் நிற்கும் நாயகியின் சோகத்தை நம்முடன் இணைத்துவிடுகிறது.
வீணை இசையுடன் மகிழ்ச்சியாய் ஆரம்பிக்கும் பாடல் துயரத்தின் துளிகளை நம்முள் சிந்திவிட்டு முடிகிறது. புகழபெற்ற ஜப்பானிய திரைப்பட இயக்குனர் அகிரா குரசேவா கூறிய “There is nothing that says more about its creator than the work itself.” என்ற புகழபெற்ற வாசகம் மெல்லிசைமன்னர்களுக்கு சாலவும் பொருந்தும்.
ஆணிவேரான மரபு ராகங்களில் சஞ்சரித்து புதிய ரசனைகளைத் திறந்துவிட்ட, உணர்வின் புதிய எல்லைகளைத் தொட்டு படைப்பூக்கத்தில் சாகசம் காட்டிய மகாகலைஞர்களின் அற்புதப்படைப்பு இந்தப் பாடல்.காலத்தால் மென்றுவிட முடியாத பாடல்.
பாட்டு :2
எட்டடுக்கு மாளிகையில் [ பாத காணிக்கை 1962 ]
இந்தப்பாடல் அவலச்சுவையின் உச்சம்.
வாத்தியக்கலவையில் அதிமேதமைகாட்டும் இந்தப்பாடலில் செனாய் இசையுடன் நாதஸ்வரம் ,தவில் , குழல் இசையையும் கலந்த அற்புதத்தை எப்படி எழுதுவது !?
இசைப் பேராளுமையுடன் திரையின் காட்சியை கண்முன் நிறுத்துகிறார்கள்.
பல்லவி முடிந்து வரும் இசையில் நாதஸ்வரமும் ,செனாயும் ஓங்கி ஒலித்து ,இன்பத்தையும் துன்பத்தையும் ஒன்று கலந்து தர அனுபல்லவி [ "தேரோடும் வாழ்வில் என்று "] ஆரம்பிக்கிறது.
அந்த வரிகளின் இடையிலும் [ "போராட வைத்தானடி, கண்ணில் நீரோட்ட விடடானடி " ] செனாய் ஒலித்து நம்மை நெகிழ வைக்கிறது.
தேரோடும் வாழ்வில் என்று ஓடோடி வந்த என்னை போராட வைத்தானடி - கண்ணில் நீரோட விட்டானாடி
என்ற வரிகளுக்கு பின்னால் ஒலிக்கும் செனாய் இசையை முதல் முறையும் , மீண்டும் அதே வரிகளை பாடும் போது இரண்டாவது முறையாக குழலையும் பயன்படுத்தி சிலிர்க்க வைக்கிறார்கள் மெல்லிசைமன்னர்கள்.
பின்னர் அதை தொடரும் இடையிசையில் [ "கையளவு உள்ளம் வைத்து " என்ற வரிகளுக்கு முன்பாக வரும் இசையில் ] உணர்ச்சி பெருக்கெடுக்கும் வண்ணம் ,அது கனிந்து கனிவு தரும் இசையாக ஓங்குகிறது.அந்த கனிவின் நிறைவை கண்ணதாசன் தனது வரிகளால் அழகாக நிறைவுசெய்கிறார்.வழமை போல பாடலின் மென்மையான சோகத்தை
கையளவு உள்ளம் வைத்து கடல் போல் ஆசை வைத்து விளையாடச் சொன்னானடி
என்ற வரிகளிலும் பாடலின் உச்சத்தை நாதஸ்வர , செனாய் இசைகளின் ஒன்றிணைவில் ஓங்கி ஒலிக்க வைத்து பெருஞ் சோகத்தில் ஆழ்த்துகிறார்கள்.
காலங்கள் உள்ளவரை கன்னியர்கள் யார்க்கும் -இந்த காதல் வர வேண்டாமடி - எந்தன் கோலம் வர வேண்டாமடி
என்ற வரிகளை பாடும் போது அந்த சோகம் நமக்கு வந்தது போன்ற உணர்வைத் தருகிறார்கள்.பாடலின் நிறைவில் மீண்டும் வரும் பல்லவியில் செனாய் உருக்கமாக ஒத்தூதுகிறது. நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு - ஆனந்த ஜோதி [1963]
வீடு நோக்கி ஓடி வந்த என்னையே [ சோகப்பாடல்] - பதிபக்தி
இந்த நாடகம் அந்த மேடையில் - பாலும் பழமும் என்னையார் என்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய் - பாலும் பழமும்
நிலவே என்னிடம் நெருங்காதே [ ராமு ] தேரேது சிலையேது திருநாள் ஏது - பாசம் உனக்கு மட்டும் உனக்கு - மணப்பந்தல் மலர்களை போல் தங்கை உறங்குகிறாள் - பாசமலர் -டி.எம்.எஸ் ஆத்தோரம் மணல் எடுத்து - தரை மேல் பிறக்க வைத்தான் - படகோட்டி - ஊர் எங்கும் மாப்பிள்ளை ஊர்வலம் - சாந்தி பல்லாக்கு வாங்கப் போனேன் - பூச்சூடும் நேரத்திலே போய் விட்டாயே அம்மா - பார் மக்களே பார் நிலவே என்னிடம் நெருங்காதே - ராமு இதயம் இருக்கின்றதே தம்பி - பழனி கண்ணன் வருவான் கதை சொல்லுவான் - பஞ்சவர்ணக்கிளி ஒருவனுக்கு ஒருத்தி என்று - தேனும் பாலும் நல்ல மனைவி நல்ல பிள்ளை சுமை தாங்கி சாய்ந்தால்
அடி என்னடி ராக்கம்மா [பட்டிக்காடா பட்டணமா ] மலர்களைப்போல் தங்கை - [பாசமலர்] உனக்கு மட்டும் உனக்கு மட்டும் [ மணப்பந்தல்]
காவிரி நகரினில் கடற்கரை ஓரத்தில் [ வாழ்ந்து காட்டுகிறேன் ]
ஒருநாள் இரவு பகல் போல் நிலவு [ காவியத்தலைவி ]
கல்யாணப்பந்தல் அலங்காரம் [ தட்டுங்கள் திறக்கப்படும் ]
சைலோபோன் [ xylophone ]
மேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி ,17 ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க அடிமைகளால் மத்திய அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டது.மரக்கட்டைகளால் உருவான இந்த வாத்தியம் தாள ஒலியுடன் இணைந்து காதுக்கு இனிய ஒலியை தரும் இயற்கையான,ஆபிரிக்க நாட்டுப்புற இசைக்கருவியாகும்.
காலனி காலத்தில் மெக்சிகோ மற்றும் மத்திய அமெரிக்கநாடுகளில் புகழபெற்ற இந்த வாத்தியம் சில நாடுகளில் பிரதான வாத்தியமாகப் பயன்பட்டு வருகிறது. குறிப்பாக குவாட்டமாலா நாட்டின் தேசியவாத்தியம் என்று சொல்லும் அளவுக்கு பெயர்பெற்று விளங்குகிறது. இந்நாடுகளில் இதனை Marimbo என்று அழைக்கின்றனர்.
மெக்சிக்கோவில் சிலமாற்றங்களை பெற்ற இந்த வாத்தியம், மத்திய அமெரிக்காவில் மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது..லத்தீன் அமெரிக்க வாத்தியம் என அறிமுகமாகி , பின் வட அமெரிக்காவில் [USA] மேலைத்தேய இசையில் பயன்பட தொடங்கியது.
மத்திய அமெரிக்காவின் வீதியோர இசைக்கருவியாக மட்டுமல்ல, பெரிய இசை நிகழ்ச்சிகளிலும், பின் 1940களில் ஐரோப்பிய உயர் இசையான "சிம்பொனி "இசை வரையும் பாவனைக்கு வந்துவிட்டது.
1960 களில் தமிழ் திரையில் பயன்பாட்டுக்கு வந்த இந்த இசைக்கருவியை அதிகம் பயன்படுத்தி காதுக்கு இனிமையான பாடல்களைத் தந்தவர்கள் மெல்லிசைமன்னர்களான விஸ்வநாதன் ராமமூர்த்தி இணையினர் என்று துணிந்து கூறலாம்.
சைலோபோன் [ xylophone ] பயன்படுத்தப்பட்ட பாடல்கள் சில:
-------------------------------------------------------------------------------------------------------------------------
01 தங்க மோகனத் தாமரையே - புதையல் 1957
மெல்லிசைமன்னர்கள் இசையமைத்த ஆரம்ப காலப்பாடலான இந்தப்பாடலில் மிகத்தெளிவாக சைலபோன் இசையை கேட்டு வியந்து போகிறோம்.1957லேயே சைலபோன் பயன்படுத்தப்பட்டிருப்பதை கண்டு ,அவரின் இசைத்தேடலையும் வியக்கிறோம்.
02 மதுரா நகரில் தமிழ் சங்கம்
இந்தப்பாடலின் ஆரம்ப இசையிலேயே , குழலுடன் இணைத்து Xylophone ஐ மிக அருமையாக பயன்படுத்தியிருக்கிறார்கள்.பாடலின் இனிப்புக்கு முத்தாய்ப்பாக இந்த வாத்தியத்தையும் இணைத்து தருகிறார்கள்.
03 கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா - ஆலயமணி இந்தப்பாடலின் ஆரம்பத்திலும் இந்த வாத்தியம் பயன்படுத்தப்பட்டுள்ளது.வாசிப்பு முறையில் வானத்தில் பறப்பது போன்ற உணர்வையும் கனவில் மிதப்பது , அமானுஷ்ய ,அதீத உணர்வுகளையும் வெளிப்படுத்தும் பாங்கில் பயன்படுத்தப்பட்டுள்ளதை அவதானிக்கலாம்.
04 சிட்டுக் முத்தம் கொடுத்து சேர்ந்திடக்கண்டேனே- புதியபறவை 1963
மலைவாழ் மக்களை பிரதிபலிக்கும் ஆரம்பத் தாளத்தையடுத்து வரும் ஒரு கணநேர சைலபோன் இசையைத் தொடர்ந்து பாடல் ஆரம்பிக்கிறது.பாடலின் இடையிடையேயும் ஜலதரங்கம் சந்தூர் , குழல், வயலின் இசையுடன் இயைந்து துலாம்பரமான எடுப்பும் , பொலிவும் , சைலபோணை மிக லாகவமாகக் கலந்த செம்மையின் அழகு இந்தப்பாடல்.இடையிடையே கலந்த வரும் பி.சுசீலாவின் கம்மிங் பாடலின் கம்பீரத்தையும் , இனிமையையும் ,பரவசத்தையும் தருகிறது.இனிமை இழையோடும் இந்தப்பாடல் கால எல்லையைக் கடந்து நிற்கும் குளிர்ந்த காற்று .
05 அம்மம்மா கேளடி தோழி - கறுப்புப்பணம் சந்தூர் , ரம்பட் ,குழல் ,சைலபோன் பொங்கஸ், சாக்ஸ் கிட்டார் என பலவகை இசைக்கருவிகள் ஹார்மோனியுடன் பயன்படுத்தப்பட்ட பாடல்.பல்லவி முடிந்து வரும் இடையிசையில் சைலபோன் ஒரு சில கணங்கள் ஒலித்த பின் அனுபல்லவி [ பிஞ்சாக நானிருந்தேனே ] மிக அருமையாக ஒலிக்கிறது.
06 கண்ணுக்கு குலமேது - கர்ணன் இதைப்பாடலிலும் சரணத்திற்கு முன்னர் " கொடுப்பவர் எல்லாம் மேலாவார் " என்ற வரிகளுக்கு முன்னாக சந்தூர் , குழல் இனிமையுடன் சைலபோன் இனிமைக்கு மறைந்திருந்து இனிமை கொடுக்கிறது.
07 பவளக்கொடியிலே முத்துக்கள் பூத்தால் - பணம் படைத்தவன் அமானுஷ்ய உணர்வைத் தரும் இந்தப்பாடலில் எல்.ஆர் ஈஸ்வரியின் ஹம்மிங் மற்றும் சைலபோன் இயைந்து இனிமையூட்டுகிறது.
08 கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா - ஆலயமணி தந்திக்கருவிகளின் சலசலப்பை தென்னங்கீற்றாய் பொலிவுடன் தரும் அமானுஷ்யப்பாடல்.அலையலையாய் பொங்கி பெருகி மறைந்து மீண்டும் எழுந்து வரும் இனிமை பொங்கும் ஹம்மிங் இந்தப்பாடலுக்கு சைலபோன் நிறைவையும் பொலிவையும் தருகிறது.ஆகாயத்தில் மிதக்கும் உணர்வை தந்த பாடல்.
09 நான் பாடிய பாடலை மன்னவன் கேட்டான் - வாழ்க்கை வாழ்வதற்க்கே வைரமாக மின்னும் சந்தூர் ஒலியுடன் குதூகலமாக ஆரம்பமாகும் இந்தப்பாடலில் , மிதந்து வரும் குளிர்ந்த காற்றின் இதத்தை சைலபோன் மறைந்து நின்று பாடலின் இனிமையை உயர்த்துகிறது.
10 எங்கே நிம்மதி எங்கே நிம்மதி - புதிய பறவை நிம்மதியில்லாத நாயகன் கனவிலும் தவிப்பது போன்றமைந்த இந்தப்பாடலில் ஆச்சரியமான இசைக்கலவைகளை அமைத்திருப்பார்கள்.அன்றைய காலத்தில் அதிகமான வாத்தியக்கருவிகள் பயன்படுத்தப்பட்ட பாடல் என்ற பெருமை இந்தப்பாடலுக்கு உண்டு.
பாடலுக்கு தேவையான உணர்வுகளை மிக அற்புதமாக ,அசாத்தியமாக இசையமைப்பாளர்கள் வெளிப்படுத்தியிருக்கும் இப்
பாடலின் ஆரம்பம் சைலபோனுடன் தான் ஆரம்பிக்கிறது .அதுமட்டுமல்ல பாடலின் பல்லவி முடிந்து வரும் இடையிசையில் [ எனது கைகள் மீட்டும் போது ,,,,என்ற வரிகளைத் தொடர்ந்து வரும் ] சைலபோன் இசையைக் கேட்கலாம்.
கோரஸ் ,வயலின்,குழல் , பொங்கஸ் என வாத்தியங்கள் பெரும் அணி தங்குதடை இல்லாமல் பிரவகித்து ஓடும் பாடல்.
11 புதிய வானம் புதிய பூமி - அன்பே வா இந்தப்பாடலின் ஆரம்பத்திலும் இந்த வாத்தியத்தின் மதுர ஒலியை துல்லியமாக நாம் கேட்கலாம்.
12 ஒரு ராஜா ராணியிடம் - சிவந்தமண்
வெளிநாட்டு காட்சிகள் கொண்ட இப்பாடலில் மிகக்கச்சிதமாக பயன்படுத்தப்பட்ட சைலபோன் இசை ஒளிந்திருந்து ஜாலம் காட்டுகிறது.
13 பொங்கும் கடலோசை - மீனவ நண்பன் 1960களில் மென்மையான முறைகளில் இந்த வாத்தியத்தைக் கையாண்ட மெல்லிசைமன்னர் தனியே இசையமைத்த இந்தப்பாடலில் மிக துல்லியமாகத் தெரியும் வண்ணம் , தெளிவான தாள நடையில் , அதை தனியே தெரியும் வண்ணம் கொடுத்த முக்கியமான ஒரு பாடல்.
14 யாதும் ஊரே யாவரும் கேளிர் - நினைத்தாலே இனிக்கும்
இந்தப்பாடலிலும் துல்லியமாக சைலபோன் இசையை கேட்கலாம்.
இவை மட்டுமல்ல , பொதுவாக வெளிநாடுளில் படப்பிடிப்பு செய்யப்பட்ட காட்சிகளின் பின்னணியிலும் இந்த வாத்தியம் பின்னணி இசையாக பயன்படுத்தப்பட்டிருப்பதை நாம் [ உலகம் சுற்றும் வாலிபன் ,சிவந்தமண் போன்ற படங்களில் ] அவதானிக்கலாம்.
செனாய் வாத்திய இசையின் இனிமையை அதன் தன்மையறிந்து அசாதாரண சூழ்நிலைகளுக்கு பயன்படுத்தியதையும் , சைலபோன் என்ற தென் அமெரிக்க வாத்தியத்தை ,அதன் இனிமையை மற்ற வாத்தியங்களுடன் மறை பொருளாக இணைத்து இசையின் மதுரத்தை தேனாகத் தந்த புதுமையைக் காண்கிறோம்.
மரபோடிணைந்த இசையின் வாரிசுகளாக அறிமுகமானாலும் தமக்கு வெளியே உள்ள இசைவகைகளை இனம் கண்டு கொண்டதுடன் , அதற்கு மாறான எதிர் நிலையில் உள்ளதென அறியப்பட்ட இசைவகைகளை படைப்பூக்கத்துடன் பயன்படுத்தி வெற்றியும் கண்டிருக்கிறார்கள்.
இவர்களது சமகால ஹிந்தி திரையிசையமைப்பாளர்கள் முன்மாதிரியான பாடல்களைத் தந்து சென்றதை மிக நுணுக்கமாகக் அவதானித்து தங்களுக்கேயுரிய பாங்கில் தனித்துவம் காட்டி மக்கள் மீது அதிக செல்வாக்கு செலுத்தும் சினிமா இசையைத் தம் பக்கம் திருப்பிய பெருமை மெல்லிசைமன்னர்களுக்கு உண்டு.
இசை நுட்பங்களை வெளிநாடுகளிலிருந்து அறிந்தார்கள் என்பதைவிட சமகாலத்து ஹிந்தி இசையமைப்பாளர்கள் வழிமுறையைப் பின்பற்றியவர்கள் என்றே எண்ணத் தோன்றுமளவு ஹிந்தி இசை தாக்கம் விளைவித்துக் கொண்டிருந்தது என்றே சொல்லத்தூண்டுகிறது. மெல்லிசைமன்னர் பல்வகை வாத்தியங்களை விதந்து பாராட்டும் வண்ணம் தனது பாடல்களில் பயன்படுத்தியிருப்பதை நாம் காண்கிறோம்.பியானோ , எக்கோடியன் , ரம்பட் , சாக்ஸபோன்,,ஹார்மோனிக்கா , ஆர்மோனியம் , மவுத் ஓர்கன் , கிட்டார் , மேண்டலின் , பொங்கஸ், பிரஸ் ட்ரம்ஸ் , போன்ற மேலை வாத்தியங்களும் , சந்தூர் , சாரங்கி , சித்தார், செனாய் போன்ற மைய நீரோட்ட வட இந்திய வாத்தியங்களை வைத்து புது உலகைக் காட்டி படைப்பூக்கத்தில் உன்னதங்களை நிகழ்த்திக்காட்டினார்கள்.
மேற்குறித்த வாத்தியங்களில் அமைந்த பாடல்கள் சிலவற்றை பறவைப்பார்வையில் பார்ப்போம்.
இனிய வாத்தியக்கலவைகளும் , பல்வகை ஒலிநயங்களும்.
மரபிசையோடு இயைந்த மெட்டுக்களை சிறப்பாக அமைக்கக்கூடிய முன்னோடிகளான ஜி.ராமநாதன், எஸ்.எம்.சுப்பைய்யாநாயுடு ,வி. வெங்கட் ராமன் , கே.வி.மகாதேவன் போன்றவர்களின் பாடல்களிலிருந்து மெல்லிசைமன்னர்களின் வித்தியாசமானதாக , புதுமையாக இருப்பதை நாம் காண்கிறோம்.முன்னோடிகளின் மெட்டுக்கள் இனிமையாக இருப்பினும் வாத்திய அமைப்பில் போதாமையையும் காண்கிறோம்.
மெல்லிசைமன்னர்களின் இசை வசீகரத்தின் ஆதாரமே புதிய, புதிய இசைக்கருவிகளை மிக நுட்பமாக பயன்படுத்தியது தான் என அடித்துக் கூறலாம்.எளிமையும் ,கவர்ச்சியும் வனப்பும் ,கனிவும் மிக்க மாயக்கலவையாக அவர்களது இசை இருந்தது.
"தேடு கல்வி இல்லாதொரு ஊரைத் தீக்கிரையாக மடுத்தல் " எனும் பாரதியின் வாக்குக்கு அமைய
தாம் கேட்டு அனுபவித்த இசைவகைகளை எளிமையாக மாற்றி தர முனைவதும், அதில் இருந்து புதிதாய் ஒன்றைக் கண்டடைய முயன்றதையும் அவர்களது இசையமைப்பில் காண்கிறோம்.
அதுமட்டுமல்ல சிக்கலான இசை நுட்பங்களை ,ஒன்றோடொன்று தொடர்பற்ற இசை போல தெரியும் இசைவகைகளிலிருந்து எளிமையான மெட்டுக்களை உருவாக்கி அவற்றை தமிழ் சூழலுக்குகேற்றவகையில் தகவமைக்கும் ஆற்றலையும் எண்ணி வியக்கின்றோம்.வெவ்வேறு இசைவகைகளிலிருக்கும் எல்லைக் கோடுகள் ,இடைவெளிகளை அழித்து பெரிய மாற்றத்தை தோற்றுவித்து ,இசையால் ரசிகர்களை உயிர்ப்பூட்டும் புதிய முயற்சிக்கு தயார்படுத்தினார்கள்.
தேனீக்கள் போல சேகரித்தவைகளை செம்மையாகவும் ,துல்லியமாகவும் வெளிப்படுத்தும் பாங்கில் இசைவும் தெளிவும் இருந்தது.இதனூடே பாடல்களிலும் உள்நுழையும் வாத்தியங்களை கூர்ந்து கேட்கையில் அவர்களது இசையின் தாகத்தையும் வேட்கையையும் உணர முடிகிறது.
வாத்திய இசைகளின் அடர்த்தியில் இயைந்து செல்லும் பாடல்களைக் கேட்கும் போது ஆனந்த நிலைகளில் அசைந்து செல்லும் குதூகலங்களும், பழமையின் இனிய நினைவுதுளிர்ப்பும் , உயிர்ப்பின் சிலிர்ப்பும் நம்மை ஒன்றாகத் தாக்குகின்றன.
வாத்தியங்களின் இசைக்கலவைகளையும் ,அவற்றின் துல்லியத்தையும் ஒன்று கலந்து தேவையான உணர்வுகளுக்கு அதன் கட்டமைவுகளுக்கு அடிப்படையான இசையை ,பாடல்களை வழங்கினார்.அக்கால சூழ்நிலையின் பின்னணியில் வைத்துப் பார்க்கும் பொது அவை புத்திசையின் பள்ளியெழுச்சி என்று கூறலாம்.ஆச்சர்யமிக்க படைப்பூக்கத்துடன் பாடல்களைத் தந்த மெல்லிசைமன்னர்கள் இசையின் மீது காதல் , மயக்கம் கொண்ட நாடோடிகளாகவும் தெரிகின்றனர்.
எளிமையான மெட்டுக்களில் நுட்பமான இசையொலி இழைகளை வைத்து அவற்றை வீணே பலியாக்காமல் ,அதனுடன் விரிநுணுக்கக் கூறுகளையும் இணைத்து உள்ளமுவக்கும் பாடல்களைத் தந்து சென்றிருக்கிறார்கள்.மேம்போக்காக நாம் கேட்டு கேட்டு ரசித்த பல பாடல்களில் அவர்கள் இணைத்துத் தந்திருக்கும் வாத்திய இசைக்கோர்வைகளை மீண்டும் நுணுகிக் கேட்கும் போது,நாம் முன்பு சுவைத்ததற்கும் மாறான வேறுபாட்டையும், புதிய அனுபவத்தையும் பெறுகிறோம்.
அவர்களுடன் நெருங்கிப்பழகிய இசைக்கலைஞர்கள் ,தயாரிப்பாளர்கள் ,நடிகர்கள் போன்றோர் தாம் பங்குகொண்ட பாடல்களின் ஒலிப்பதிவு மற்றும் நுட்பங்கள் குறித்துத் தரும் தகவல்கள் மெல்லிசைமன்னர்களின் திறனுக்கு சான்று பகர்வதுடன் இசைரசிகளையும் பாடல்களை துருவித் துருவி ஆராயும் மனப்போக்கை வளர்க்க உதவுவவும் செய்கின்றன.
மெல்லிசைமன்னர்களின் மெட்டுக்களின் இனிமையிலும் , அவை தரும் உணர்வில் மயங்கும் அல்லது மனம் பறிகொடுக்கும் ரசிகர்கள் பாடலின் ஒரு பகுதியைத் தான் ரசிக்க முடியும் என்ற நிலையைத்தாண்டி அதில் இணைந்திருக்கும் வாத்திய இசையை நுணுகிக் கேட்பதும், அவற்றின் நுணுக்கங்களை கேட்டு அனுபவிப்பது என்பது புதிய அனுபவம் என்பதும் மகிழ்ச்சி தருவதும் எழுதுபவர்களுக்கும் பயன்படக்கூடியவையுமாகும்.
அவர்களது இசையில் வாத்திய இசையின் பங்களிப்பை அறிய முனைபவர்கள் என்னென்ன வாத்தியங்களை அவர்கள் தங்கள் பாடல்களில் இணைத்து சிறப்பு சேர்த்திருக்கிறார்கள் என்பதை அறிய வேண்டுமாயின் அவர்களது பாடல்களின் வழியே உள்நுழைந்து வருவதைத் தவிர வேறு வழியில்லை.
அந்த வகையில் பியானோ ,ட்ரம்பட் , ட்ரம்ஸ் ,எக்கோடியன் , கிட்டார் ,ஹார்மோனிக்கா போன்ற மேலைத்தேய வாத்தியங்களை மட்டுமல்ல வட இந்திய இசைக்கருவிகளான சாரங்கி ,சந்தூர் ,சித்தார் போன்ற இசைக்கருவிகளை சுவீகரித்து திறமையுடன் வழி வழியாக வந்த இசையோடு, தங்களுக்குரிய ஆர்வத்தோடு,ஒருங்கிசைவுடன் தந்த அழகை, அமுதாகக் கலந்து தந்த பாடல்கள் சிலவற்றை இங்கே நோக்கலாம்.
01 பியானோ: [Piano]
--------------------------------
17 ம் நூற்றாண்டில் இத்தாலியில் கிறிஸ்டிபோறி [ Cristifori ] என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட இசைக்கருவி பியானோ. பிளூஸ், ஜாஸ், ரோக் மற்றும் மேலைத்தேய செவ்வியல் இசையிலும் அதிக பயன்பாட்டில் உள்ள இசைக்கருவி. மிக நுண்ணிய, இசைவான சுரங்களையும் வாசிக்க ஏதுவான இசைக்கருவி.
தற்போது மேலைத்தேய நாடுகளில் பல்வகை இசைகளிலும் விஸ்தாரமாகப் பயன்படும் இக்கருவியை செவ்வியல் இசையில் வியக்கத்தக்க அளவில் ஜோகன் செபஸ்டியா பாக் [Johann Sebastian Bach ] , மொஸாட் போன்றோர் பயன்படுத்தி வெற்றிகண்டனர். ஜாஸ் இசையிலும் உச்சங்களைத் தொட்ட Duke Ellington, Nat King Cole,Errol Garner போன்ற எண்ணற்ற கலைஞர்களையும் நாம் இங்கே நினைவூட்டலாம்.
பியானோ இசை மேலைத்தேய செவ்வியல் இசையிலும் அதிகம் பயன்பட்டாலும் மெல்லிசைமன்னர்களைப் பொறுத்தவரையில் வணிக மற்றும் பொழுதுபோக்கு [ Entertaining ] இசையின் உச்சமாகத் திகழ்ந்த ஜாஸ் மற்றும் லத்தீன் அமெரிக்க இசையைத்தான் தங்கள் ஆதர்சமாகக் கொண்டார்கள்.குறிப்பாகப் பியானோ இசையை அந்த பாங்கிலேயே பயன்படுத்தியிருக்கிறார்கள்.
ஜாஸ் இசை என்று பொதுவாக நாம் இங்கே குறிப்பிட்டாலும் அதிலுள்ள Stride Piano ,Boogie - Woogie போன்ற நுணுக்கங்களையும் பயன்படுத்தினர்.
காலத்தால் முந்திய Ragtime Piano என்பது ஜாஸ் இசைக்கு வெளியே பயன்படுத்தப்பட்ட பியானோ இசையாகும்.Ragtime Piano என்பது Scot Joplin [1868-1917 ] என்ற கறுப்பினக் கலைஞரால் சிகாகோவில் உருவாக்கப்பட்டது.இசைக்குறிப்புகள் கொண்ட ,மனோதர்ம வாசிப்பு இல்லாத , கனதியற்ற வாசிப்பு முறை கொண்ட இசையாகும். இந்த இசையில் தேர்ச்சிபெற்ற இசைக்கலைஞரான Jelly Roll Morton [ 1890 - 1941 ] என்பவரே ஜாஸ் இசையின் பிதாமகன் எனக்கருதப்படுகிறார்.
Stride Piano என்பது மனோதர்ம [ Improvisation ] முறையில் வாசிப்பதை அடிப்படையாகக் கொண்டது.இது நீண்ட அடியிட்டுத் தாவிச்செல்லும் வேகமான வாசிப்பு முறையைக் கொண்டதாகும்.James P Johnson [ 1891 - 1955 ]என்ற கலைஞர் father of the Stride Piano எனக் கருதப்படுகிறார்.இவரை அடியொற்றி பியானோ இசையில் அதிக தாக்கம் விளைவித்து பாரிய பங்காற்றிய கலைஞர்களாக Thomas "Fats" Waller , Art Tatum போன்றோர் ஜாஸ் இசையில் அதிக தாக்கம் விளைவித்தவர்களாவர்.
Boogie - Woogie என்ற ஜாஸ் இசைப்பாணி 1930 களில் உருவான முறையாகும்.மெலோடியின் உருவத்தை தாளத்தின் நளினத்தோடு வெளிப்படுத்துவதோடு ,தாள் அமைவுகளின் கலை நுணுக்கப்பற்றார்வத்தையும் வெளிப்படுத்தும் ஓர் முறையாகும்.இருவர் ஒரு பியானோவை வாசிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துவதும் , இசை குறிப்புக்களை வாசிக்க முடியாதவர்களும் ,தாளநடைக்கு ஏற்ப வாசிக்க தெரிந்தவர்களும் வாசிக்க முடியும் என்பது இதன் சிறப்பம்சமாகும்.Boogie - Woogie இசையிலிருந்து ஜாஸ் இசையின் பல பிரிவுகள் பிறந்ததென்பர்.
மெல்லிசைமன்னர்கள் இசையில் Boogie - Woogie என்ற இசைவகையில் அமைந்த சில பாடல்கள்:
01 மலரென்ற முகம் ஒன்று சிரிக்கட்டும் - வெண்ணிற ஆடை [1964 ] - பாடியவர்: எல் ஆர்.ஈஸ்வரி - விஸ்வநாதன் ராமமூர்த்தி.
02 அல்லிப்பந்தல் கால்கள் எடுத்து - வெண்ணிற ஆடை [1964 ] - பாடியவர்: எல் ஆர்.ஈஸ்வரி- விஸ்வநாதன் ராமமூர்த்தி.
03 என்ன என்ன வார்த்தைகளோ - வெண்ணிற ஆடை [1964 ] - பாடியவர்: பி.சுசீலா - விஸ்வநாதன் ராமமூர்த்தி
04 ஆடவரெல்லாம் ஆட வரலாம் - கறுப்புப்பணம் [1964 ] - பாடியவர்: எல் ஆர்.ஈஸ்வரி- விஸ்வநாதன் ராமமூர்த்தி
05 யாரோ ஆடாத தெரிந்தவர் யாரோ - குமரிப்பெண் [1965 ] - பாடியவர்: எல் ஆர்.ஈஸ்வரி - விஸ்வநாதன்
ஜாஸ் இசை என்று இங்கே குறிப்பிடும் போது அதனுடன் இணைந்து பிரஷ் ட்ரம்ஸ் [Brush drums ],"வுட் பாஸ்" [Wood Bass ], Snare Drum , Bangos ,Accordian ,Mouth Organ , குழல், வயலின்,ட்ரம்பட் போன்ற பிற வாத்தியக்கருவிகளையும் இணைத்து சாகசம் புரிந்தவர்கள் மெல்லிசைமன்னர்கள்!
பொதுவாக துள்ளல் இசையில் வைக்கப்படும் பியானோ இசைக்கருவியின் அத்தனை இசைச் சாத்தியங்களையும் தங்களின் பாடல்களில் வைத்து பாடலின் உணர்வுகளைத் ததும்ப வைத்தார்கள்.அவை கிராமிய பாடல் ,காதல் பாடல் ,சோகப்பாடல் ,வீர உணர்வை வெளிப்படுத்தும் பாடல், நகைச்சுவைப்பாடல் எதுவாக இருப்பினும் அதன் ஒத்திசைவுக்கு ஏற்ப பாடல்களை அமைத்து படைப்பாற்றலின் அதீதங்களைக் காட்டினார்கள்.
பியானோ கருவியுடன் இணைத்து ட்ரம்பெட் ,ட்ரம்ஸ் ,கிட்டார் , சாக்ஸபோன்,எக்கோடியன் , பொங்கஸ் எனப் பலவகை இசைக்கருவிகளையும் இணைத்து அவர்கள் தந்த எண்ணற்ற பாடல்கள் உள்ளன. மெல்லிசைமன்னர் இணைந்தும் பின் தனியே பிரிந்து சென்று இசையமைத்த பாடல்களில் சில:
06 பாட்டொன்று கேட்டேன் - பாசமலர் [1961 ] - பாடியவர்: கே.ஜமுனாராணி - விஸ்வநாதன் ராமமூர்த்தி.
07 வரவேண்டும் ஒரு பொழுது - கலைக்கோயில் [1964 ] - பாடியவர்: எல் ஆர்.ஈஸ்வரி -விஸ்வநாதன் ராமமூர்த்தி.
08 உன்னை ஒன்று கேட்பேன் - புதிய பறவை [1963 ] - பாடியவர்: பி.சுசீலா - விஸ்வநாதன் ராமமூர்த்தி.[ ட்ரம்பெட் ,ட்ரம்ஸ் ]
09 விஸ்வநாதன் வேலை வேணும் - காதலிக்க நேரமில்லை [1964 ] - பாடியவர்: PBS + குழுவினர்.- விஸ்வநாதன் ராமமூர்த்தி.
10 கண்ணிரண்டும் மின்ன மின்ன - ஆண்டவன் கட்டளை [1961 ] - பாடியவர்: BPS + எல் ஆர்.ஈஸ்வரி - விஸ்வநாதன் ராமமூர்த்தி.
11 காற்று வந்தால் தலை சாயும் - காத்திருந்த கண்கள் [1962 ] - பாடியவர்: BPS + சுசீலா - விஸ்வநாதன் ராமமூர்த்தி.
12 வண்ணக்கிளி சொன்ன மொழி - தெய்வத்தாய் [1962 ] - பாடியவர்: TMS + சுசீலா - விஸ்வநாதன் ராமமூர்த்தி.
13 மனிதன் என்பவன் தெய்வமாகலாம் - சுமைதாங்கி [1962 ] - பாடியவர்: PBS - விஸ்வநாதன் ராமமூர்த்தி.
14 மாணிக்கத் தொட்டில் அங்கிருக்க - பணம் படைத்தவன் [1962 ] - பாடியவர்: TMS + சுசீலா - விஸ்வநாதன் ராமமூர்த்தி.
15 கண்ணென்ன கண்ணென்ன -பெரிய இடத்துப் பெண் - [1963 ] - பாடியவர்: TMS - விஸ்வநாதன் ராமமூர்த்தி.
16 கண் போன போக்கிலே கால் போகலாமா -பணம் படைத்தவன் [1965 ] - பாடியவர்: TMS + குழு - விஸ்வநாதன் ராமமூர்த்தி.
17 நான் நன்றி சொல்வேன் -குழந்தையும் தெய்வமும் - [1965 ] - பாடியவர்: சுசீலா + MSV - விஸ்வநாதன்
18 ஓ லிட்டில் பிளவர் - நீலவானம் 1966 - பாடியவர்: TMS - விஸ்வநாதன் [பியானோ ,எக்கோடியன் , ட்ரம்ஸ்,கிட்டார் ,குழல் ]
19 தேடினேன் வந்தது- ஊட்டிவரை உறவு 1967 - பாடியவர்: சுசீலா- விஸ்வநாதன் [பிரஸ் ட்ரம்ஸ் ,பியானோ ,ட்ரம்பெட் ,குழல்,வயலின் ]
20 என்ன வேகம் சொல்லு பாமா -குழந்தையும் தெய்வமும் 1965 - பாடியவர்: TMS + குழு - விஸ்வநாதன்
21 அவளுக்கென்ன அழகிய முகம் - சர்வர் சுந்தரம் - [1967 ] - பாடியவர்: TMS + + எல் ஆர்.ஈஸ்வரி - விஸ்வநாதன்
22 தொட்டுக்க காட்ட வா - அன்பே வா [1967 ] - பாடியவர்: TMS + ராகவன் + குழு - விஸ்வநாதன்
23 நாடோடி நாடோடி - - அன்பே வா [1967 ] - பாடியவர்: TMS + ராகவன் + குழு - விஸ்வநாதன்
24 பால் தமிழ்ப்பால் -- ரகசிய போலீஸ் 115 [1968] - பாடியவர்: TMS + ஈஸ்வரி - விஸ்வநாதன்
25 செல்லக்கிளிகளாம் பள்ளியிலே - எங்க மாமா [1968] - பாடியவர்: TMS - விஸ்வநாதன்
26 அத்தானின் முத்தங்கள்- உயர்ந்த மனிதன் [1968] - பாடியவர்: P சுசீலா - விஸ்வநாதன்
27 தைரியமாகச் சொல் நீ - ஒளிவிளக்கு - [1968] - பாடியவர்: TMS - விஸ்வநாதன்
28 மெழுகுவர்த்தி எரிகின்றது -கவுரவம்1974 - பாடியவர்: TMS - விஸ்வநாதன்
பியானோ இசையை பிரதானப்படுத்தி இசையமைக்கப்பட்ட இப்பாடல்களில் முக்கியமான, புதுமையான கலப்பாக செய்யப்பட்ட பாடலாக கீழ் வரும் இரண்டு பாடல்களை இங்கே குறிப்பிடலாம்.
**** கண்ணென்ன கண்ணென்ன -பெரிய இடத்துப் பெண் - [1963 ] - பாடியவர்: TMS - விஸ்வநாதன் ராமமூர்த்தி.
நாட்டுப்புறத்தான் பாடும் ஒரு பாடலாக அமைந்த இந்தப்பாடலில் விறுவிறுப்பையும் , ஏளனத்தையும் காண்பிக்க பியானோவை பயன்டுத்தி,பாடலின் பின்பகுதியில் நாட்டுப்புற தாளத்திற்கு இசைவாக்கிய தன்மையையும் குறிப்பாகக் சொல்லலாம்.
**** மாணிக்கத் தொட்டில் அங்கிருக்க - பணம் படைத்தவன் [1962 ] - பாடியவர்: TMS + சுசீலா - விஸ்வநாதன் ராமமூர்த்தி.
உருக்கமும் ,மிக எழுச்சியும் மிக்க ஹம்மிங்குடன் ஆரம்பிக்கும் இந்த பாடலில் பியானயோவை தாளகதியாக வைத்துக் கொண்டு மூன்று குரல்களை [ TMS +சுசீலா + ஈஸ்வரி ] இணைத்து மிக அருமையான தாலாட்டாக அமைத்திருக்கின்றார்கள்.இந்தப்பாடலில் தான் எத்தனை உணர்வு ,எத்தனை பாவம்! கேட்கக்கேட்கத் திகட்டாத பாடல்.
பலவிதமான உணர்வுகளை கிளரும் இந்தப்பாடலில் மேலைத்தேய இசையில் துள்ள இசைக்குப் பயன்படும் பியானோ இசையுடன் செனாய் வாத்தியத்தையும் அதில் கிராமியத் தன்மையையும் இணைத்து முற்றிலும்மாறுபாடான வாத்தியங்களை வைத்து உணர்வின் ஆழங்களைக் காண்பித்து புது விதியை உருவாக்கினார்கள்.
02 ட்ரம்பெட்: [ Trumpet ]
----------------------------------
உற்சாகமும் எழுச்சியும் தரும் குழல் வாத்தியங்களில் முக்கியமான இடம் ட்ரம்பட் [ Trupet ] என்ற வாத்தியத்திற்கு உண்டு.ஆதிகாலத்தில் போர்களிலும் ,வேட்டை ஆடும் நேரங்களிலும் பயன்டுத்தப்பட்டு வந்த கொம்பு எனும் கருவியின் நவீன வடிவமே ட்ரம்பட் வாத்தியம்.
நவீன உருவாக்கத்தில் செப்பு உலோகத்தால் செய்யப்பட்டு பயன்பாட்டில் உள்ள இந்தக்கருவி ஐரோப்பிய செவ்வியலிசையில் நுழைந்தது 15 ம் நூற்றாண்டிலேயே! பின்னர் ஜாஸ் இசையிலும் தனித்துவமான இடம் பிடித்த இந்த வாத்தியம் ஜாஸ் இசையின் அடிப்படையான வாத்தியமாகவும் கருதப்படுகிறது.
மொஸாட் , ஹைடன் , பாக்ஹ் மற்றும் பல ஐரோப்பிய செவ்வியலிசையாளர்கள் கணிசமான பயன்படுத்தி செழுமைப்படுத்தினர் எனலாம். குறிப்பாக பராக் [ Barok ] கால இசையில் இந்த வாத்திய இசையை அதிகம் கேட்கலாம்.
அமெரிக்க உள்நாட்டுப் போரில் ராணுவவீரர்களாகப் பங்கு பற்றிய கறுப்பினமக்கள் இந்த வாத்தியத்தை தங்களுக்கேயுரிய தனித்திறத்துடன் பயன்படுத்தி வந்தததால் ஜாஸ் இசைக்கான வாசிப்பு முறை உருவானது.கறுப்பின மக்களின் அடிப்படை இசையான மனோதர்ம இசையின் வீச்சுக்களில் 20 ம் நூற்றாண்டின் தலை சிறந்த கறுப்பின இசைக்கலைஞர்கள் புதிய ஒலியலைகளை மிதக்கவிட்டு சாதனை புரிந்தார்கள்.ஜாஸ் இசையில் மிக உயர்ந்த இடத்தை தொட்டவர்களில் முதன்மையானவராகக் கருதப்படுபவர் ஆம்ஸ்ட்ரோங் 1901 - 1971 [ Louis Daniel Armstrong ]. இவரைப் போல பலர் பின்னே உருவானார்கள்.
1950 களிலேயே ஹிந்தி திரையிசையில் ட்ரம்பட் கணிசமான அளவு பயன்படுத்தப்பட்டுள்ளது.அக்காலத்தில் புகழபெற்றிருந்த எல்லா இசையமைப்பாளர்களும் துணிந்து பயன்படுத்தினார்கள் என்று சொல்லத்தக்கவகையில் பாடல்கள் உள்ளன. குறிப்பாக ஷங்கர் ஜெய்கிஷன் .எஸ்.டி. பர்மன் , ஓ.பி.நய்யார் போன்றோர் பாடல்களில் மட்டுமல்ல , பின்னணி இசையாகவும் மிக வெற்றிகரமாக பயன்படுத்தினார்கள்.
1950 மற்றும் 1960 களிலேயே ஹிந்தி திரையிசைமைப்பாளர்கள் தந்த பாடல்கள் சில:
01 Tirchi Nazar Hai Patli Kamar Hai - Baarsat 1948 - Lata + Mukesh - Music : Shankar Jaikihan
02 Haal Kaisa Hai Janaab Ka - Chalti Ka Naam Gaadi 1958 - Kishore Kumar + Asha Bosley - Music :S D Burman
03 Teri Dhoom Har Kahin - Kaala Bazar 1960 - Rafi - Music :S D Burman
04 Matwali Ankhowakle - chotte Nawab 1961 - Rafi - Music: R.D.Burman
05 Baar Baar dekho - china Town 1962 - Rafi - music: Shankar Jaikishan
ஹிந்தித் திரையிசையை ஆழ்ந்து அவதானிதத்தவர்கள் என்ற வகையில்,அவற்றால் உந்துதல் பெற்று உள்ளக்கிளர்ச்சியுடனும், ஈர்ப்புடனும் ,படைப்பாற்றலின் நுட்பத்துடணும் பயன்படுத்தி வெற்றிகண்டவர்கள் மெல்லிசைமன்னர்கள் .தங்கள் இசையனுபவத்தின் வழியே மிக நேர்த்தியுடன்,அழகுடன் இந்த வாத்தியத்தின் பல்வேறு ஒலியமைப்புகளை கலைநயத்துடன் பயன்படுத்தினார்கள்.
ட்ரம்பெட் என்ற வாத்தியம் அடிப்படையில் போர்க்கருவியின் சந்ததியாக இருப்பதால் அந்த வாத்தியத்தின் முழக்கத்தின் அதிர்வை , உணர்வுகளைத் தட்டி எழுப்பி உற்சாகம் தரும் பாடல்களாக்கித் தந்திருக்கும் பாடல் சிலவற்றைக் காண்போம்.
01 அதோ அந்தப்பறவை போல - ஆயிரத்தில் ஒருவன் [1965] - பாடியவர்: TMS + குழு - விஸ்வநாதன் ராமமூர்த்தி.
சுதந்திர உணர்வின் குறியீடாக ஒலிக்கும் இப்பாடலில் ட்ரம்பெட் , ,ட்ரம்ஸ் ,கோரஸ் ,வயலின் ,குழல் போன்ற இசைக்கருவிகளை வைத்து ஒரு சித்து விளையாட்டு காட்டியிருக்கிறார்கள் மெல்லிசைமன்னர்கள் என்று தான் சொல்ல முடியும்! பாடலின் மெட்டுக்கு மெருகூட்டும் ட்ரம்பட் இசை சுதந்திரத்தின் அசரீரியாக ஒலித்து உணர்வு பொங்கச் செய்கிறது.பாடியவரின் குரல் கனகச்சிதமாக எழுச்சியூட்டி ஆர்ப்பரிக்கிறது.
02 நான் ஆணையிட்டால் - எங்க வீட்டுப்பிள்ளை 1963 - TMS - விஸ்வநாதன் ராமமூர்த்தி
அறைகூவல் விடும் இப்பாடலில் சவுக்கடியின் ஒலியுடன் எழுச்சிக் குறியீடாக ட்ரம்பட் ஒலிக்கிறது.
03 கேள்வி பிறந்தது அன்று - பச்சை விளக்கு 1964 - TMS - விஸ்வநாதன் ராமமூர்த்தி
பகுத்தறிவை பறைசாற்றும் இந்தப்பாடல் விசில்சத்தத்துடன்ஆரம்பிக்கிறது.ட்ரம்பட் ,ட்ரம்ஸ் ,செனாய் ,
எக்கோடியன் ,பொங்கஸ் ,குழல் என வாத்தியங்களின் ஒத்திசைவையும் ,புத்தெழுச்சியையும் அழகுடன் வெளிப்படுத்தும் அற்புதத்தை காண்கிறோம்.பாடலின் சரணத்திலோ உயிர்வதை செய்யும் செனாய் வாத்தியத்தின் மூலம் உள்ளத்தைக் கனிய வைக்கின்றார்கள்.எழுச்சிமிக்க ட்ரம்பட் இசையுடன் ஆரம்பிக்கும் பாடல் உள்ளத்தைக் கனிய வைக்கும் செனாய் இசையுடன் நிறைவடைகிறது.
04 பார்த்த ஞாபகம் இல்லையோ-புதிய பறவை 1963 - P சுசீலா - விஸ்வநாதன் ராமமூர்த்தி
பொங்கஸ் தாளத்துடன் ஆரம்பிக்கும் இப்பாடலில் ட்ரம்பட்,எக்கோடியன்,பொங்கஸ்,குழல் ,வயலின் , கோரஸ் என எத்தனை பரிவாரங்கள் ! அத்தனை வைத்தாலும் மிக இனிமையுடன் மன எழுச்சியையம் ஒரு பாடலில் கொடுக்க முடியும் என நிரூபிக்கும் பாடல் இது.
05 அவளுக்கென்ன அழகிய முகம்- சர்வர் சுந்தரம் 1964 - TMS + ஈஸ்வரி - - விஸ்வநாதன் ராமமூர்த்தி
ட்ரம்பெட் ,கிட்டார் ,குழல் ,பொங்கஸ் ,வயலின் ,பியானோ,கிட்டார் என வாத்திய பரிவாரங்களை வைத்து முழக்கமிடும் லத்தீன் அமெரிக்க இசைவிருந்து.
06 வீடுவரை உறவு வீதி வரை மனைவி -பாதகாணிக்கை - [1962 ] - பாடியவர்: TMS + ஈஸ்வரி - விஸ்வநாதன் ராமமூர்த்தி.
மன விரக்தியிலும்,சோகத்திலும் தத்துவம் பேசும் இந்தப்பாடலில் பலவிதமான சேர்க்கைகளாக பாடலை அமைத்திருக்கின்றனர்.கிராமிய மணத்தை தாலாட்டாக ஹம்மிங்கிலும் ,ட்ரம்பெட் ஒலியை மேலைத்தேய பாணிக்கும் பயன்படுத்தி வாத்தியங்களின் குறியீட்டுத் தன்மையையும் செவ்வையான கலவையாக தந்து வியக்க வைக்கின்றார்கள்.
07 மன்னவனே அழலாமா - கற்பகம் [1964 ] - பாடியவர்: சுசீலா - விஸ்வநாதன் ராமமூர்த்தி.
காணும் இடங்களிலெல்லாம் இளவயதிலேயே மறைந்து போன தனது மனைவியை "ஆவியாகக்" காணும் கணவன் ,அவளது துயரக்குரலைக் கேட்டு அதிர்ச்சியடைவதும் அமானுஷ்ய உணர்வை பெறுவதுமான ஒரு உணர்வை வெளிப்படுத்துவதாகவும் ஆரம்பிக்கிறது இந்தப்பாடல்.
மனைவியின் இதய ஓலமாக சுசீலாவின் ஹம்மிங்கும் ,நாயகன் அடையும் பேரதிர்ச்சியைக் காண்பிக்க ட்ரம்பட் இசையின் அதிர்வையும் ,மனித மனங்களில் ஆழமாகப் பதிந்து கிடக்கும் தொன்ம [ Myth ] நம்பிக்கைகளை,வியப்பு கலந்த சோகத்தை , அமானுஷ்ய உணர்வுகளை இசையில் காண்பிக்கும் அற்புதத்தை இப்பாடலில் கேட்கின்றோம்.
இடையிசையில் ஹம்மிங்குடன் ட்ரம்பட் இசையையும் இணைத்து வார்த்தையில் வர்ணிக்க முடியாத அமானுஷ்ய உணர்வை காட்டுகிறார்கள்.பலநதிகள் ஒன்றிணைந்து கரைந்து ஒன்றாக ஓடுவது போல வாத்தியங்கள் கரைந்து பாடலின் உணர்வுக்கு வலுசேர்க்கின்றன. பாடலின் மெட்டு தன்னைத்தான் நொந்து கொள்கிற உணர்வைத் தரும் கீரவாணி ராகத்தில் மிகப்பொருத்தமாக அமைக்கப்பட்டுள்ளது.இது மெல்லிசைமன்னர்களின் சாதனைப்பாடல்களில் ஒன்று என்று அடித்துக் கூறலாம்.
08 இது வேறு உலகம் - நிச்சய தாம்பூலம் 1962 - TMS + ஈஸ்வரி + ஜமுனாராணி - இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி
நைட் கிளப்பில் பாடும் ஒரு பாடலாக அமைந்தப் பாடலில் நாயகனின் உள்ளத்து உணர்வுகள் வெளிப்படுத்தப்படுகின்றன. கவலையை மறந்திட கண்ணாடி விளிம்பைத் தேடுவார் என்று மது போதையில் மயங்கும் நாயகன் நிலையையும் மனைவியும் மக்களும் பொய்யடா நாம் இருக்கிற உலகம் மெய்யடா எனவும் அழகாக வெளிப்படுத்தும் இந்தப்பாடல் லத்தீனமெரிக்க இசைப்பாணியில் அமைந்திருக்கும்.
09 பார்த்த ஞாபகம் இல்லையோ [புதிய பறவை 1963] - சுசீலா - இசை : விசுவநாதன் ராமமூர்த்தி
இந்தப்பாடல் நைட் கிளப்பில் பாடப்படும் ஒரு பாடல் தான்.இனம்புரியாத உணர்வலைக் கிளர்த்தும் இந்தப்பாடல் லத்தீன் அமெரிக்க இசைப்பாணியில் அமைந்த பாடலாகும்.சுசீலாவின் குரலால் அமரத்துமிக்க பாடலாகி விட்டதொரு பாடல் என்றால் மிகையில்லை.
10 அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டு [ வெண்ணிற ஆடை ] சுசீலா - இசை : விசுவநாதன் ராமமூர்த்தி .
குற்றால அருவில் குளிக்கும் சுகத்தை பாடலில் தரும் அதிசயப்பாடல்.இப்பாடலைக் கேட்கும் போது எழும் ஆனந்தத்தை வார்த்தையால் வர்ணிக்கத்துவிட முடிவதில்லை." நீரில் நின்று தேனும் தந்தது அள்ளி அள்ளி கொள்ளும் சுகமோ " என்று கண்ணதாசன் இந்த மெட்டைத்தான் குறிப்பிடுகிறாரோ அல்லது பாடிய சுசீலாவின் குரலைத்தான் குறிப்பிடுகிறாரோ என எண்ண வைக்கின்ற பாடல்.
அம்மம்மா ... என்று பாடலில் வரும் சொல்லை சுசீலா கூவியழைப்பதின் சுகமே சுகம்.எக்கோடியன் ,வயலின் ,குழல் வாத்த்தியங்களின் இணைப்பும் அலாதியானவை.
11 சொந்தமுமில்லை பந்தமுமில்லை - ஹல்லோ மிஸ்டர் ஜமீன்தார் 1962 - GK வெங்கடேஷ் + குழுவினர் - இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி
12 கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா [ பறக்கும் பாவை ] எக்கோடியன் , ட்ரம்பெட் ,குழல் ,வயலின்.ட்ரம்ஸ்
பாடலின் சரணத்தில் வரும் வரிகளில் [சந்திரனை தேடி சென்று ] உச்சம் தரும் ட்ரம்பெட் இசையை நாம் எப்படி ரசிக்காமல் போவது!?
03 மியூட் ரம்பட்: Mute Trumpet :
-------------------
Mute Trumpet என்கிற இசைக்கருவி மனித குரலுக்கு மிக நெருக்கமானதென்பர். MuteTrumpet என்பது நுட்பமிக்க இசையை வாசிப்பதற்கு அதிக திறமையைக் கோரும் ஒரு இசைக்கருவியாகும். ஜாஸ் இசையில் பயன்படும் ட்ரம்பட் கருவியுடன் இணைக்கப்பட்ட Stem என்ற மூடும் கருவியும் ஒன்றாக இணைத்து இயக்கப்படுவதன் மூலம் புதிய ஒலியை தரும் ஒரு முறையாகும்.அதில் Harmon Mute என்பதும் ஒருவகை.
Stem பொருத்தப்பட்டு இசைக்கப்படும் Trumpet இல் பிறக்கும் ஒலிகளின் மூலம் பலவகை உணர்வுகளை பிரதிபலித்து காட்சிகளை சிறப்பாக வெளிப்படுத்த முடியும்.சினிமாக்களில் இக்கருவியை நகைச்சுவைக் காட்சிகளில் பயன்படும் வாக் வாக் [ Wah Wah ] முறையைக் குறிப்பிடலாம்.1940 களில் Walt Disney தனது காட்டூன் பாத்திரங்களுக்குப் பயன்படுத்தி வெற்றிகண்டவராவார்.
மியூட் ரம்பட்டை Harmon என்கிற கருவியுடன் இணைத்து வாசிக்கும் போது வாக் வாக் [ Wah Wah ]என்று ஒலிப்பது போன்ற ஒலி உண்டாகும்.காட்டூனில்இந்த வகையான ஒலி யை மட்டுமல்ல பின்னணியாக உறுமல் , பதைபதைப்பு ,ஒழுங்கற்ற அசைவுகள் , உறுமல் .சிறகடிப்பு , முனகல் மெதுவாக நகர்தல் என பல்வேறு விதமான உணர்வுகளை வெளிக்காட்டி இருக்கிறார்கள்.
காட்டூன் மட்டுமல்ல பின்னாளில் திரையிசையிலும் இந்த நுடபம் பயன்படுத்தப்பட்டது.ஹிந்தி திரையிசையில் 1952 இல் வெளிவந்த AAN படத்தில் நகைச்சுவைக் காட்சியில் இசையமைப்பாளர் நௌசாத்தும் , சாரதா [ ஹிந்தி 1960 ] படத்தில் சி.ராமச்சந்திராவும் பயன்படுத்தியதைக் குறிப்பிடலாம்.
தமிழ் திரையிசையில் நாகேஷ் வரும் நகைச்சுவைக் காட்சிகளில் Wah Wah இசையை கேட்கலாம்.
மிக நுண்ணிய உணர்வுகளைக் காண்பிக்கக் கூடிய Mute Trumpet கருவியை மிக அருமையாகக் காதல் பாடலிலும் வைத்தவர்கள் மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இணையினர்!.
01 அத்தான் என் அத்தான் - பாவமன்னிப்பு 1961 - சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
இந்தப்பாடலில் அனுபல்லவியின் ,"ஏன் அத்தான்" என்ற வரிகளுக்கு முன்னர் எக்கோடியனை அடுத்து வரும் Mute Trumpet வாத்தியத்தை மிக நேர்த்தியாகப் பயன்படுத்திருக்கின்றனர். அதே போலவே சரணத்திலும் காட்டிச் செல்கின்றனர்.
Trumpetஇசைக்கருவியை மிகப் பொருத்தமான இடங்களில் பலவிதமான கோணங்களில் பின்னணி இசையாகவும் பயன்படுத்தியுமிருக்கின்றார்கள்.கலாட்டாக் கல்யாணம் போன்ற படங்களில் Title இசையாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது
04 எக்கோடியன்: [Accordion ]
ஐரோப்பிய வாத்தியமான எக்கோடியன் உலகம் முழுவதும் பரவியிருக்கிற மிகப்பிரபலமான வாத்தியங்களில் ஒன்று.நாட்டுப்புற இசையில் சரளமாகப் பயன்படும் இந்த இசைக்கருவி மக்கள் கூடுமிடங்களிலெல்லாம் நாம் எளிதில் காணக்கூடிய இசைக்கருவியாகவும் , குறிப்பாக தெருவோர இசைக்கலைஞர்கள் கைகளில் காணப்படும் இசைக்கருவியாகவும் விளங்குகிறது.
நாட்டுப்புற இசைக்கு முக்கியத்துவம் வழங்கும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் அதிகம் பயன்படும் இக்கருவி முன்னாள் யூக்கோஸ்லாவாக்கியா நாட்டின் தேசிய வாத்தியமாகவும் கருதப்படுகிறது.செக்கோஸ்லாவாக்கியா நாட்டின் புகழபெற்ற போல்கா [Polka] நடனத்திற்குரிய இசையில் அதிகம் பாவனையில் இந்த இசைக்கருவி பயன்பட்டு ஏனைய நாடுகளுக்கும் பரவியது.ஜிப்ஸி இசையிலும் முக்கியத்துவம் வாய்ந்த கருவி எக்கோடியன்.நாட்டுப்புற இசையில் அதிகம் பயன்பட்ட இக்கருவி வேறு பல இசைவடிவங்களிலும் பயன்படுகிறது. மேலைத்தேய செவ்வியலிசையிலும் பயன்பாட்டில் உள்ளது.ரஷ்ய நாட்டு செவ்வியல் இசையாளர் சைக்கோவ்ஸ்க்கி யின் [ Pyotr Ilyich Tchaikovsky ] Song of Autum என்ற இசைப்படைப்பு இதற்கு சான்றாக உள்ளது.
அமெரிக்க இசையிலும் புகழபெற்ற இந்த வாத்தியம் ,லூசியானா பகுதியில் வாழ்ந்த ஆபிரிக்க அடிமைகளால் உருவாக்கப்பட்ட புளூஸ் இசை ,மற்றும் புளூஸ் தாளத்துடன் இணைந்த இசையாகவே வடிவம் பெற்றுள்ளது. Zydeco என்றழைக்கப்படும் ஒரு பிரிவு இசையாகக் கருதப்படும் இந்த இசை பிரஞ்சு குடியிருப்பாளார்களின் கரோல் மற்றும் ஸ்பானிய இசையுடன் கலந்ததொரு இசையாகும். குடும்பங்கள் ஒன்றாகச் சந்திக்கும் வேளைகளில் இசைக்கப்படும் இவ்விசையில் Waltz , Blues, Rock and Roll, Country Western போன்ற இசைக்கூறுகள் இணைந்ததாக உள்ளது.
1930 களில் ஜாஸ் இசையில் எக்கோடியன் இசை பயன்படுத்தப்பட்டு புகழ்பெற்றது.அமெரிக்க Country Music மற்றும் ஐரோப்பிய ஜாஸ் இசையிலும் இதன் பயன்பாடு பரவலாக்கப்பட்டு புகழ் பெறத் தொடங்கியது.குறிப்பாக டியாங்கோ ரெயின்காட் [ Dijango Reinhardt ] என்ற புகழ் வாய்ந்த ஜிப்ஸி இனக்கலைஞர் நிகழ்த்திய இசை நிகழ்ச்சிகளில் பிரெஞ்சு எக்கோடியன் கலைஞர் Gus Viseur கலந்து சிறப்பித்தார்.
1930 மற்றும் 1940 களிலேயே புகழபெற்ற எக்கோடியன் கலைஞர்கள் என Andonis 'Papadzis' Amiralis [Greek],Tony Muréna [Italy] , Pietro Frosini [Italy], Louis Ferrari [Italy] , William Quinn [Irish ] , Emile Vacher [France] ,Tony Murena [France] , Émile Carrara [france] போன்ற ஐரோப்பிய எக்கோடியன் இசைக்கலைஞர்களை உதாரணம் காட்டலாம்.
அமெரிக்க பொழுதுப்போக்கு இசையாக வளர்ந்து ,அக்கால விறுவிறுப்புமிக்க நவீன இசையாக மலர்ந்த ரோக் அன்ட் ரோல் [ Rock and Roll] ,அதன் கவர்ச்சி ,மற்றும் அவற்றின் வாத்தியஅமைப்பு,அந்த இசையின் வர்த்தக விரிவாக்கத்தோடு எக்கோடியன் இசைக்கருவியும் உலகம் முழுவதும் பரவியது.
இதன் தாக்கம் ஹிந்தித் திரையிசையிலும் தாக்கம் விளைவித்தது.வாத்திய இசையின் சாத்தியங்களை பயன்படுத்தி முன்மாதிரியாக விளங்கிய ஹிந்தி திரையிசையமைப்பாளர்கள் ஆர்மோனியம் என்கிற இசைக்கருவியைப் போலவே எக்கோடியனையும் பயன்படுத்த தொடங்கினர். அக்கால புகழின் உச்சியிலிருந்த இசையமைப்பாளர்களான S.DBurman, Shankar Jaikishan , O.P.Nayyar , Madhan Mohan ,Salil Chowtry போன்ற பெரும்பாலான இசையமைப்பாளர்கள் தங்கள் பாடல்களிலும் பின்னணி இசையில் அதிகம் பயன்படுத்தினார்.
குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் சங்கர் ஜெய்கிஷன் இரட்டையர்களின் ஆதர்சமான வாத்தியம் எக்கோடியன் என்று கூறுமளவுக்கு அசாத்தியமான திறமையுடன் கையாண்டார்கள் என்பதற்கு சான்றாகச் சில பாடல்களை தருகிறேன்.
01 Awaara Hoon - Awaara [1951] - Music: Shankar Jaikishan
02 Aye Mere Dil Kahin Aur Chal - [Daag 1952] -Music: Shankar Jaikishan
03 Yaad Kiya Dil Ne- Patita [1953 ] - Music: Shankar Jaikishan
04 Duniya mein chaand suraj kitni haseen - Kathputli [1957] Music: Shankar Jaikishan
05 Dekhke Teri Nazar - Howrah Bridge 1958 - Music: O.P.Nayyar
06 Beqarar Karke Humein - Bees Saal Baad - 1960 - Music: Hemant Kumar
07 Chhote Se Ye Duniya - Rangoli 1962 - Music: Shankar Jaikishan
08 Dheere Dheere Chal Chand - Love Marriage 1959 - Music: Shankar Jaikishan
09 Kahe Jhoom Jhoom Raat Yeh Suhani - Love Marriage 1959 - Music: Shankar Jaikishan
10 Har Dil Jo Pyar Karega - Sangam [1964] - Music: Shankar Jaikishan
11 Sab Kuch Seeka Humne - Anari [1959] - Music: Shankar Jaikishan
12 Har Dil Jo Pyar Karega - Sangam 1964 - Mugesh + Lata - Shankar Jaikishan
இந்தப்பாடல் காட்சியில் நாயகன் எக்கோடியன் வாசிப்பது போலவே அமைந்திருக்கும்.
.
மெல்லிசைமன்னர்கள் வெற்றிகரமாகப் பயன்படுத்திய இசைக்கருவிகளில் முக்கியமானதொன்று எக்கோடியன்.பாடல்களின் உணர்வுகளுக்கு ஏற்ப உணர்ச்சி பெருக்குடனும் ஆச்சரியப்பட வைக்கும் வகையிலும் இழைத்து, இழைத்து பாடலின் அழகில் கரைத்து தங்கள் படைப்பை அர்த்தப்படுத்தியிருக்கின்றார்கள்.
இங்கே எக்கோடியன் இசை வரும் பாடல்களைக் குறிப்பிடும் போது தனியே எக்கோடியனில் மட்டுமல்ல வேறு பல வாத்தியங்கள் இணைந்த தேன் அமுதக்கலவையாய் வருவதை நாம் அவதானிக்க வேண்டும்..பாரதிதாசன் தனது கவிதை ஒன்றில்
கனியிடை ஏறிய சுளையும் - முற்றல்
கழையிடை ஏறிய சாறும்
பனிமலர் ஏறிய தேனும் ....
என்ற வரிகளை இவர்களின் இசைக்கும் பொருத்திக் கூறலாம்.
எக்கோடியன் இசையுடன் காஸ்ட் நெட் ,குழல் ,சைலபோன் ,சேனை ,பொங்கஸ்,ட்ரம்ஸ் என பலவிதமான இசைக்கருவிகளையும் ,அவற்றின் இயல்புகளை தேனாகக் குழைத்தெடுத்த அற்புதங்களையும் கேட்கிறோம்.எதிர்மறையான வாத்தியங்கள் என்று சொல்லத்தக்க இசைக்கருவிகளை வைத்து தங்கள் இசையலங்காரங்களால் தமிழ் சினிமாப பாடல்களை புதிய தளத்திற்கு உயர்த்திக் சென்றனர்.
எக்கோடியனுடன் மேற்குறிப்பிடட வாத்தியக்கருவிகளைத் தேனாக, மதுரமாகக் குழைத்தெடுத்த சில பாடல்கள்.
01 தென்றல் வரும் சேதி வரும் - பாலும் பழமும் 1961 - சுசீலா - இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி
02 போனால் போகட்டும் போடா - பாலும் பழமும் 1961 - TMS - இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி
03 அத்தான் என் அத்தான் - பாவமன்னிப்பு 1961 - சுசீலா - இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி
04 பறக்கும் பந்து பறக்கும் - பணக்காரங்க குடும்பம் 1963 - TMS + சுசீலா - இசை விஸ்வநாதன்
05 வெண் பளிங்கு மேடைகட்டி - போஜய்க்கு வந்த மலர் 1965 - சீர்காழி + ஈஸ்வரி - இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி
06 நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் - நெஞ்சில் ஓர் ஆலயம் 1962 - BPS - இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி
07 இது வேறு உலகம் - நிச்சய தாம்பூலம் 1962 - TMS + ஈஸ்வரி + ஜமுனாராணி - இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி
08 தமிழுக்கும் அமுதென்று பேர் - பஞ்சவர்ணக்கிளி 1965 - சுசீலா - இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி
[குழல் ,சந்தூர் ,எக்கோடியன் ஜாலம்].
09 காதல் என்றால் ஆணும் - பாக்கியலட்சுமி 1961 - AL ராகவன் + சுசீலா - இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி
10 கண்ணிலே அன்பிருந்தால் - ஆனந்தி 1965 - சுசீலா - இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி
11 கண் போன போக்கிலே - பணம் படைத்தவன் 1965- TMS - இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி
12 அழகுக்கும் மலருக்கும் - நெஞ்சம் மறப்பதில்லை 1963 - BPS + ஜானகி - இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி
13 பாவை யுவ ராணி பெண்ணோவியம் -சிவந்தமன் 1969 - TMS - இசை விஸ்வநாதன்
14 ஒரு ராஜா ராணியிடம் -சிவந்தமன் 1969 - TMS + சுசீலா - இசை விஸ்வநாதன்
15 ஒரு நாளிலே உருவானதே -சிவந்தமன் 1969 - TMS + சுசீலா - இசை விஸ்வநாதன்
16 போகப் போக தெரியும் - சர்வர் சுந்தரம் 1965 - BPS +சுசீலா - இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி
17 காற்று வாங்க போனேன் - கலங்கரை விளக்கம் 1965 - TMS - இசை விஸ்வநாதன்
18 நினைத்தால் சிரிப்பு வரும் [பாமா விஜயம் ] [எக்கோடியன் காஸ்ட் நெட் ,குழல் ,சைலபோன் ,குழல்,பொங்கஸ்,ட்ரம்ஸ் ]
19 கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா [ பறக்கும் பாவை ] [எக்கோடியன் , ட்ரம்பெட் ,குழல் ,வயலின்.ட்ரம்ஸ்]
பாடலின் சரணத்தில் [சந்திரனை தேடி சென்று ] உச்சம் தரும் ட்ரம்பெட் இசையை நாம் கேட்கிறோம்.
20 நான் ஆணையிட்டால் [ எங்க வீட்டுப் பிள்ளை ] [எக்கோடியன் ,பொங்கஸ் , ட்ரம்பெட் ,கிட்டார் ]
21 குயிலாக நானிருந்தென்ன - செல்வ மகள் 1967 - TMS + சுசீலா - இசை விஸ்வநாதன் [செனாய் ]
22 நேற்று வரை நீ யாரோ - வாழ்க்கைப் படகு 1961 - BPS - இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி
23 நான் ஒரு குழந்தை - படகோட்டி 1964 - TMS - இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடலுக்குக்கிடையே இழையோடும் எக்கோடியன் , சந்தூர். ,குழல் ,மேண்டலின்
24 பாட்டு வரும் பாட்டு வரும் - நான் ஆணையிட்டால் 197 - TMS + சுசீலா - இசை விஸ்வநாதன்
பாடலுக்குக்கிடையே இழையோடும் எக்கோடியன் , சந்தூர். ,குழல் ,மேண்டலின், கிட்டார்
25 கொடுத்ததெல்லாம் கொடுத்தான் - படகோட்டி 1964 - TMS - இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடலுக்குக்கிடையே இழையோடும் எக்கோடியன் , சந்தூர். ,குழல்
26 உலகம் பிறந்தது எனக்காக - பாசம் 1962 - TMS - இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி
குழல் ,சந்தூர் ,எக்கோடியன் ஜாலம்.
27 எனக்கொரு மகன் பிறப்பான் - பணம் படைத்தவன் 1965 - TMS +சுசீலா - இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி
குழல் ,சந்தூர் ,எக்கோடியன் ஜாலம்.
28 நாணமோ இன்னும் நாணமோ - ஆயிரத்தில் ஒருவன் 1965 - TMS +சுசீலா - இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடலின் இடையில் ஆங்காங்கே பாடலுக்கு உயிர் கொடுக்க எக்கோடியன்.
08 கண்ணே கனியே முத்தே - ரகசியாய்ப் போலீஸ் 1965 - TMS +சுசீலா - இசை விஸ்வநாதன்
சந்தூர் ,ட்ரம்ஸ் ,எக்கோடியன் குழல்
29 உன்னைத்தானே ஏய் உன்னைத்தானே - பறக்கும் பாவை 1970 - TMS + சுசீலா - இசை விஸ்வநாதன்
30 என்னைத் தெரியுமா - குடியிருந்த கோயில் 1965 - TMS - இசை விஸ்வநாதன்
எக்கோடியன் , பியானோ ,ட்ரம்ஸ் கோரஸ்
31 ஒரு தரம் ஒரே தரம் - சுமதி என் சுந்தரி 1970 - TMS + சுசீலா - இசை விஸ்வநாதன்
சித்தார் , ட்ரம்ஸ் ,வயலின் , குழல்
32 பாவை பாவை தான் - எங்கமாமா 1970 - சுசீலா - இசை விஸ்வநாதன்
பொங்கஸ் , எக்கோடியன் ,கிட்டார் ,ட்ரம்ஸ் ,சாக்ஸ் ,ட்ரம்பட்
33 மின் மினியைக் கண்மணியாய் - Kannan என் காதலன் 1969 - TMS + ஈஸ்வரி - இசை விஸ்வநாதன்
எக்கோடியன் ,மேண்டலின் ,சந்தூர் , ட்ரம்ஸ் ,வயலின் , குழல்
34 இயற்கை என்னும் இளைய கன்னி - சாந்தி நிலையம் 1969 -SPB + சுசீலா - இசை விஸ்வநாதன்
சந்தூர் , பொங்கஸ் ,வயலின் , குழல் ,ட்ரம்பட் ...சரணாத்த்திற்கு முன்னரும் எக்கோடியவ் வரும்.
35 கண்டேன் கல்யாண பெண் போன்ற மேகம் - மேயர் மீனாடசி 1976 - SPB + சுசீலா - இசை விஸ்வநாதன்
36 மௌனம் தான் பேசியது - எதிர்காலம் 1971 - LR ஈஸ்வரி - இசை விஸ்வநாதன்
37 கன்னி வேண்டுமா கவிதை வேண்டுமா - பச்சை விளக்கு 1964 - PBS + ஈஸ்வரி - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
38 சத்தியம் இது சத்தியம் - இது சத்தியம் 1963 - TMS - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
39 தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே - ஆலயமணி 1963 - S ஜானகி
மெல்லிசைமன்னர்களின் நாதக்கலவை எனும் விருந்தை நாம் முழுமையாக விவரிப்பதென்றால் செழுமை நிறைந்து விரிந்து பரந்திருக்கும் நதிக்கரையின் தீரத்திலிருந்து கண்ணுக்கெட்டிய தூரத்திற்கப்பால் மறைந்திருக்கும் கரைய பார்ப்பது போன்றதாகும்.
இசையில் நவீனத்தை அடையத் துடித்த மெல்லிசைமன்னர்கள் தங்கள் வேகத்தை , ஆர்வத்துடிப்பை ஆங்காங்கே விசிறியடித்துக் காட்டினாலும் ,இரண்டாயிரம் ஆண்டு செழுமை பெற்ற நமது இசையையும் அதன் அடையாளங்களையும் உதறிச் சென்றவர்களில்லை என்பதையும் நிரூபித்த வண்ணம் பெரு நதியாக நடைபோட்டார்கள்.
அந்தவகையில் வட இந்திய மரபு இசையில் பயன்படுத்தப்பட்ட வாத்தியங்களையம் பயன்படுத்தி இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கும் வண்ணம் இசைவெள்ளத்தில் தமிழ்ப்பாடல்களை ஊறவைத்தார்கள்.அந்தவகையில் சந்தூர் ,சாரங்கி வாத்தியங்களையும் பயன்படுத்தி அசத்தினார்.
05 ட்ராம்போன்
01 ஒரு ராஜ ராணியிடம் - சிவந்தமண் 1969 - TMS + சுசீலா - இசை: விஸ்வநாதன்
02 வெள்ளிக்கிண்ணம் தான் - உயர்ந்த மனிதன் 1969 - TMS + சுசீலா - இசை: விஸ்வநாதன்
06 சந்தூர் [ Santoor ]
---------------------------------
காஸ்மீரின் தேசியவாத்தியம் சந்தூர். வீணை குடும்பத்தைச் சேர்ந்த இக்கருவி நாட்டுப்புற இசையிலும் செவ்வியலிசையிலும் பரிமளிக்கக்கூடிய தந்தி வாத்தியக்கருவி சூபி [Sufi ]இசையிலும் பாவனையில் உள்ள இசைக்கருவியாகும். இவ்விசைக்கருவியின் மூலாதார இசைக்கருவி மத்திய கிழக்கு ,குறிப்பாக ஈரான் நாட்டின் பூர்வீக இசைக்கருவி எனக் கருதப்படுகிறது.
சந்தூர் இசைக்கருவியின் ஒலியை நாளெல்லாம் கேட்டுக்கொண்டே இருக்கலாம். துளித் துளியாக அமுதங்களைப் பொழிந்து இனம் புரியாத உணர்வுகளைக் கிளர்த்தும் இசைக்கருவி. காற்றில் சிதறாத மழைத்தாரைகளின் அணிவகுப்பை காண்பது போல மனதில் பரவசமூட்டி ரீங்காரமிட வைக்கும் இதமான ஒலியலைகளை எழுப்பவும் , காற்றில் அலைந்து நுண்ணீர்துளிகளாய் விழும் தூவானங்களை இசையில் மனக்காட்சி விரிவாய் ராகங்களின் ஆலாபனைகளில் ஏற்றி, வாசிப்பின் வேகத்தின் அளவுகளால் அதி நுண்திரட்சிகளை ஆழ்ந்தும் ,விரித்தும் பரவிப்பாய்ந்தும், பரவி சிதறும் திவலை தூவல்களை ,இசையால் மனக்கண் நிறுத்தும் வல்லமை இந்த இசைக்கருவிக்கு உண்டு.
ஹிந்துஸ்தானிய செவ்வியலிசையில் சந்தூர் இசையின் வசீகத்தை கலைஞர் சிவகுமார் சர்மாவின் வாசிப்பை மணிக்கணக்கில் மெய்மறந்து நாம் கேட்கலாம்.
விழிகளின் நுண் இமையசைப்பின் அபிநயத்தை திரையில் காண்பிக்கும் வல்லமை கொண்ட சினிமா இவ்வாத்தியத்தை மிகச் சிறப்பாகக் கையாண்டுள்ளது.பின்னணிக்காட்சிகளில் மட்டுமல்ல பாடல்களிலும் திகைக்க வைக்குமளவுக்கு பயன்படுத்தி திரை இசையமைப்பாளர்கள் வெற்றி கண்டுள்ளனர்.முன்னோடிகளான ஹிந்தி சினிமா இசையமைப்பாளர்கள் எல்லோரும் தங்கள் பாடல்களில் வியப்பு மேலோங்கும் அளவுக்கு பயன்படுத்தியிருக்கின்றனர் என்று துணிந்து கூறலாம்.
மெல்லிசைமன்னர்கள் ஒன்றாக இணைந்து இசையமைத்த காலங்களிலும் , பின்னர் விஸ்வநாதன் தனியே பிரிந்து இசையமைத்த போதும் ஏனைய வாத்தியகளுடன் ஒத்திசைவாய் நிறையவே பயன்படுத்திய இசைக்கருவி சந்தூர்.உதாரணமாக சில பாடல்கள்
01 ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும் - பழனி 1963 - TMS + PBS + சீர்காழி - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
02 கண்களும் காவடி சிந்திக்கட்டும் -எங்கவீட்டு பிள்ளை 1963 - T ஈஸ்வரி - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
03 சித்திர பூவிழி வாசலில் வந்து - இதயத்தில் நீ 1968 - ஈஸ்வரி + சுசீலா - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி [ + குழல் ]
04 நேற்றுவரை நீ யாரோ - வாழ்க்கைப்படகு 1962 - PBS - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி [ + எக்கோடியன் ]
05 இந்த மன்றத்தில் ஓடிவரும் - போலீஸ்காரன் மக்கள் 1963 - PBS + ஜானகி - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
06 செந்தூர் முருகன் கோவிலிலே - சாந்தி 1963 - PBS + சுசீலா - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
07 பச்சை மரம் ஒன்று - ராமு 1966 - சுசீலா - இசை: விஸ்வநாதன்
08 முத்து சிப்பி மெல்ல மெல்ல - ராமு 1966 - சுசீலா - இசை: விஸ்வநாதன்
08 விழியே விழியே உனக்கென்ன வேலை - புதிய பூமி 1966 - TMS + சுசீலா - இசை: விஸ்வநாதன் [ட்ரம்பட்]
09 வெற்றி மீது வெற்றி வந்து - தேடி வந்த மாப்பிள்ளை 1968 - TSPB - இசை: விஸ்வநாதன்
10 கண்ணே கனியே முத்தே அருகில் வா - ரகசிய போலீஸ் 115 1966 - TMS + சுசீலா - இசை: விஸ்வநாதன் [ சந்தூர் + எக்கோடியன் ]
11 பொன் எழில் பூத்தது புது வானில் - கலங்கரை விளக்கம் 1965 - TMS + சுசீலா - இசை: விஸ்வநாதன் [+ எக்கோடியன் ]
12 பாட்டு வரும் உன்னை பார்த்து கொண்டிருந்தால் - நான் ஆணையிட்டால் 1966 - TMS + சுசீலா - இசை: விஸ்வநாதன் [ + எக்கோடியன் + கிட்டார் + குழல் ]
13 குங்கும பொட்டின் மங்களம் - குடியிருந்த கோயில் 1968 - TMS + சுசீலா - இசை: விஸ்வநாதன் [ + சாரங்கி + குழல் ]
14 சிரித்தாள் தங்கப்பதுமை - Kannan என் காதலன் 1967 - TMS + சுசீலா - இசை: விஸ்வநாதன் [ + எக்கோடியன் + கிட்டார் + குழல் ]
15 சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ - சந்திரோதயம் 1968 - TMS + சுசீலா - இசை: விஸ்வநாதன் [ + எக்கோடியன் + குழல் ]
16 நீயே தான் எனக்கு மணவாட்டி - குடியிருந்த கோயில் 1968 - TMS + சுசீலா - இசை: விஸ்வநாதன் [ + சாரங்கி + குழல் ]
17 எங்கிருந்தோ ஆசைகள் - சந்திரோதயம் 1968 - TMS + சுசீலா - இசை: விஸ்வநாதன் [ + சந்தூர் + குழல் ]
07 சாரங்கி:
இந்திய சங்கீதத்தின் மிக நுட்பமான சுரங்களை மனிதக் குரல்களை போல வெளிப்படுத்தும் முதன்மையான இசைக்கருவி வீணை ஆகும்.
ஹிந்துஸ்தானி இசையில் புகழபெற்ற தந்தி இசைக்கருவியான சாரங்கியும் மனிதக்குரலுக்கு நெருக்கமான வாத்தியமாகும். இந்த வாத்தியமும் ஈரான் ,ஆபிகானிஸ்தான் போன்ற நாடுகளின் வேர்களைக் கொண்ட வாத்தியமாகும்.
ஹிந்துஸ்தானி போன்ற செவ்வியலிசை அரங்குகள் மட்டுமல்ல ஹிந்தித் திரையிசையிலும் கணிசமானளவில் பய்னபடுத்தப்பட்டிருக்கும் ஒரு அருமையான இசைக்கருவி.
ஹிந்துஸ்தானிய இசையில் புகழபெற்ற சாரங்கி நேபாளம் ,பாகிஸ்தான் போன்ற நாடுகளின் நாட்டார் இசையிலும் பயன்படுத்தப்படும் ஒரு இசைக்கருவி ஆகும் சந்தூர் இசைக்கருவி போலவே இதன் பூர்வீகம் ஈரான் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
துயரத்தில் தனிமைப்படுத்தப்பட்டு, உறவுகளிலிருந்து அந்நியப்பட்டு தனது வேதனையை தானே நொந்து அனுபவிக்கும் ஒருவரின் சோக இருள் கவிந்த மனநிலையை ,அவ்வுணவர்வின் ஆழத்தை ஒரு இசைக்கருவியால் வெளிப்படுத்த முடியும் என்றால் அதற்கு மிகவும் பொருத்தமான வாத்தியம் சாரங்கி என்றால் மிகையாகாது.
ஹிந்தி திரையிசையில் பல்வேறு சூழ்நிலைக்கும் பொருத்தமாக மிக இனிமையான பாடல்களில் பயன்படுத்தி வெற்றிகண்டிருக்கின்றார்கள்.தமிழ் திரையைப் பொருத்தவரையில் 1960களில் இந்த இசைக்கருவியை அதிகமாகப் பயன்படுத்தியவர்கள் மெல்லிசைமன்னர்கள் என்று கூறலாம்.
தெளிவின்மை , மௌனம் சூழ்ந்த வார்த்தையால் வெளியிட முடியாத துயரத்தை ,மெலிதான சோகம் தழுவிய உணர்வுகளை மட்டுமல்ல பல்வேறு மனநிலைகளுக்கும் பொருத்தமாக பாடல்களில் வைத்த பெருமை மெல்லிசைமன்னர்களுக்கு உண்டு.
01 இரை போடும் மனிதருக்கே - பதிபக்தி 1959 - சுசீலா - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
02 நான் கவிஞனுமில்லை - படித்தால் மட்டும் போதுமா 1963 - TMS + PBS - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
03 ஒரு நாள் இரவில் - பணத்தோட்டம் 1963 - சுசீலா - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி [ + குழல் + ஜலதரங்கம் ]
04 மனிதன் என்பவன் தெய்வமாகலாம் - சுமைதாங்கி 1962 - PBS - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
05 ராதைக்கேற்ற கண்ணனோ - சுமைதாங்கி 1963 - ஜானகி - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
06 என் அன்னை செய்த பாவம் - சுமைதாங்கி 1963 - ஜானகி - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
07 நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே - பார் மக்களே பார் 1963 - TMS + சுசீலா - இசை: விஸ்வநாதன்
08 அத்தை மகனே போய் வரவா - பாத காணிக்கை 1962 - சுசீலா - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
09 என்னுயிர் தோழி கேளொரு சேதி - கர்ணன் 1964 - சுசீலா - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
10 யார் அந்த நிலவு - சாநதி 1968 - TMS - இசை: விஸ்வநாதன்
11 என் வானத்தில் ஆயிரம் வெள்ளி நிலவு - காவியத் தலைவி 1972 - சுசீலா - இசை: விஸ்வநாதன்
குழல்.
மெல்லிசைமன்னர்களின் இசையில் தனிச் சிறப்புடனும் அழகுடனும் பயன்படுத்தப்பட்ட மிக முக்கியமான காற்று வாத்தியங்களில் ஒன்று புல்லாங்குழல்.குழலுக்கு மயங்காத மனிதன் உண்டோ?எந்த சூழ்நிலைகளுக்கும் பயன்படக் கூடிய , தேனருவியாய் பொழிகின்ற குழலிசையை தமிழ் சினிமாவில் அவர்களது சமகால, முன்னோடி இசையமைப்பாளர்களும் மிக அற்புதமாகப் பயன்படுத்திருக்கின்றனர்.
கீழே தந்திருக்கும் பாடல்களில் குழலை பிரதானமாகப் பயன்படுத்திருப்பதையும் ,இனிமையான குழலுடன் சந்தூர் , எக்கோடியன் ,மேண்டலின் போன்ற பல இசைக்கருவிகளையும் இணைத்து தந்திருப்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.பாடலின் இயங்கு நிலைக்கும் ,உயிர்ப்புக்கும் இனிமைக்கும் பொருத்தமாக இணைத்து பாடலில் கரைத்துவிடும் மேதமை மெல்லிசைமன்னர்களின் சிறப்பம்சமாகும்.
வாத்திய கருவிகளின் பாவனை குறைந்த காலத்தில் இசையமைப்பாளர்களுக்கு உற்ற நண்பனாய் இருந்த வாத்தியம் புல்லாங்குழல் என்றால் மிகையில்லை.குழலின்றி அமையாது உலகு என்று கூறுமளவுக்கு திரையிசையில் பயன்படுத்தப்பட்ட வாத்தியம் குழல்.
01 தாழையாம் பூ முடித்து - பாகப்பிரிவினை 1960 - TMS + பி.லீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடலின் ஆரம்பத்திலேயே ஹம்மிங்குடன் ஆரம்பிக்கும் குழலிசை பாடல் முழுவதும் இழையோடும் அழகை நாம் ரசிக்கலாம்.
02 காதலிலே பற்று வைத்தாள் அன்னையடா - இது சத்தியம் 1963 - சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடலின் உணர்வுக்கு ஏற்ப கரைந்துருக்கும் குழல் வாசிப்புடன் செனாய் வாசிப்பின் மேன்மையையும் ரசிக்கும் நாம் ஆங்காங்கே விறுவிறுப்பான குழல் விரைந்த வாசிப்பையும் , இவை ஒன்று கலந்து தேனமுதமாக வரும் இசையையும் ரசிக்காமல் இருக்கமுடியாது.
03 வா என்றது உருவம் - காத்திருந்த கண்கள் 1962 - சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
குழலின் குளுமையும் இனிமையும் இந்தப்பாடலில் கேட்கலாம்.
04 ஓடம் நதியினிலே - காத்திருந்த கண்கள் 1962 - சீர்காழி - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
உணர்ச்சிமயமான இந்தப்பாடலில் பெங்காலி மக்களின் படகு பாட்டான "பாட்டியாளி" எனப்படும் இசைப்பண்பை தரிசிக்கின்றோம்.பாடலின் இசையமைப்பும் அசாத்தியமான சங்கதிகளும் அதனைப் பாடிய பாங்கும் தன்னிகற்றற்றவை.நாயகியின் விரகதாபத்தை ஒரு ஆண் குரலில் வெளிப்படுத்தும் அனாயாசமாக பாடல்.நாயகியின் உணர்வலைகளை சீர்காழியார் தனது குரலின் இனிமையால் அசாத்தியமான சங்கதிகளை அநாசாயமாக வெளிப்படுத்தும் பங்கு வார்த்தையால் வர்ணிக்க முடியாதவை.மெல்லிசைமன்னரின் அபிமான இசையமைப்பாளரான நௌசாத் வியந்து பாராட்டிய பாடல் இது.
05 பாலும் பழமும் - பாலும் பழமும் 1961 -TMS - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
வயலின் , குழல் இசையுடன் குழைந்து ஆரம்பிக்கும் இந்தப்பாடலில் குழல் மனதை தேற்றும் மருத்துவன் போல ஆற்றுபடுத்துவதாயும் அமைக்கப்பட்டிருப்பதை கேட்கிறோம்
06 ஆறோடும் மண்ணில் எங்கும் - பழனி 1963 - TMS + சீர்காழி + BPS - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
மூவர் இணைந்து பாடும் இந்த அழகான பாடலில் குழலிசையை கச்சிதமாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதை கேட்கலாம்.
07 என்னை எடுத்து தன்னைக் கொடுத்து - படகோட்டி - பாடியவர்: சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி.
மனதை இதமாக வருடும் இந்தப்பாடலில் வன்மையாக ஒலிக்கும் குழலிசையையும் , அபாரமான ஹம்மிங்கையும் இணைத்து அழங்கான சங்கதிகளால் மெய்சிலிர்க்க வைக்கும் அதிசயமான இசையமைப்பை கேட்க்கிறோம்.குறிப்பாக இந்தப்பாடலில் வரும் " வந்தாலும் வருவாண்டி " என்ற சொற்களில் எத்தனை விதமான சங்கதிகள் வைத்து ஆச்சர்யப்படுத்துகிறார் மெல்லிசைமன்னர்.ஹம்மிங்கை வார்த்தையால் வர்ணிக்க முடியாது.
08 கட்டோடு குழலாட ஆட - பெரிய இடத்து பெண் 1963 - TMS + சுசீலா + குழு - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
குழலின் இனிமையை இந்தப்பாடலில் கேட்கலாம்.
09 செல்லக்கியே மெல்ல பேசு [ சோகம் ] - பெற்றால் தான் பிள்ளையா 1967 - சுசீலா - இசை : விஸ்வநாதன்
சித்தார்:
01 சொன்னது நீதானா - நெஞ்சில் ஓர் ஆலயம் 1963 - சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
02 நம்பினார் கெடுவதில்லை - பணக்காரங்க குடும்பம் 1963 - சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
நாதஸ்வரம்
01 வாராய் என தோழி வாராயோ - பாசமலர் 1961 - எல்.ஆர்.ஈஸ்வரி + குழுவினர் - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
02 பூ முடிப்பான் இந்த பூங் குழலி - நெஞ்சிருக்கும் வரை 1966 - TMS - இசை: விஸ்வநாதன்
03 எட்டடுக்கு மாளிகையில் - பாதகாணிக்கை 1962 - சுசீலா - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
04 ஒளிமயமான எதிர்காலம் - பச்சை விளக்கு 1963 - TMS - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
வீணை:
01 அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்- - பஞ்சவர்ணக்கிளி 1965 - சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
02 மனமே முருகனின் மயில் வாகனம் -- மோட்டார் சுந்தரம்பிள்ளை 1966 - ராதா ஜெயலட்சமி - இசை : விஸ்வநாதன்
03 மழைப் பொழுதின் மயக்கத்திலே - பாக்கியலடசுமி 1961 - சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
மவுத் ஓர்கன்:
ஹார்மோனிகா [harmonica ] என்று மேலைநாடுகளிலும், மவுத் ஓர்கன் [Mouthorgan ] என்று கீழை நாடுகளில் அறியப்படும் இந்த வாத்தியம் ஐரோப்பிய இசையில் குறிப்பிடத்தகுந்த இடத்தை பிடித்துள்ளது.இலகுவாக கையில் எடுத்துச் செல்லக்கூடிய இந்த கையடக்கமான இசைக்கருவி வியன்னா நகரில் தோன்றிய காற்று இசைக்கருவியாகும்.
அமெரிக்க கவ்போய் [ Cowboy ]திரைப்படங்கள் என்றதும் திரை ரசிகர்கள் மனதில் தோன்றுவது சார்ள்ஸ் பிரவுன்சன் மற்றும் கிளின்ட ஈஸ்டவுட் நடித்த cowboy பாணியிலமைந்த தொடர் படங்களே!
இத்திரைப்படங்களில் நாயகர்கள் மவுத் ஓர்கன் வாசிக்கும் இசைத்துணுக்குகள் உலகப்புகழ் பெற்றவையாகும். Once Upon A Time in the West , The Good the Bad And the Ugly போன்ற படங்களின் பின்னணியில் ஒலிக்கும் இசை மரண பயத்துடன் பல்வகை உணர்வுகளையும் ஒளி சிந்த வைத்து மறைந்து விடும் விநோதமிக்கவையாகும்.சுழலும் துப்பாக்கிகளும் , மரத்தில் தொங்கும் பிணங்களை ,மரணவாசலில் நிற்கும் மனிதனும் என வெளிப்பட்டு நிற்கும் காட்சிகளில் மவுத் ஓர்கன் இசையும் கலந்து பீதியூட்டும்.
மவுத் ஓர்கன்அல்லது ஹார்மோனிக்காவை ஹொலிவூட் திரைப்படங்களில் வைத்து சாகசம் புரிந்தவர் இத்தாலிய இசையமைப்பாளரான என்னினோ மார்க்கோனி ஆவார்.
திரையில் மட்டுமல்ல ஜாஸ் இசையிலும் பயன்படும் இசைக்கருவியாகும்.ஜிப்ஸி இசையின் ஜாம்பவான் என்று புகழப்படும் டியாங்கோ ரெயின்காட் [Django Reinhard ] என்ற இசைக்கலைஞர் தனது ஆதர்ச கலைஞர் என்று பிரஞ்சு இசைக்கலைஞரான Jean Thielemans என்பவரைக் குறிப்பிடுகிறார். " He is one of the greatest musicians of our time " என Quincy Jone கூறியது குறிப்பிடத்தக்கது.இவரது மனோகரமான வாசிப்பை The Soul Of Toots Thielemans , The Soul Of Jazz Harmonica [1959 ] போன்ற இசை அல்பங்களில் கேட்கலாம்.
மவுத் ஓர்கன் கருவியை தமிழில் மெல்லிசைமன்னர் வியக்கத்தக்கமுறையில் பயன்படுத்தி ஆச்சர்யப்படுத்தினார்.
01 முத்து சிப்பி மெல்ல பிறந்து வரும் - - நெஞ்சில் ஓர் ஆலயம் 1963 - சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
02 பிள்ளைக்குத் தந்தை ஒருவன் - பார்த்தால் பசி தீரும் 1963 - TMS - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
03 கண்ணன் வருவான் கதை சொல்லுவான் -பஞ்சவர்ணக்கிளி 1964 - சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
இவை போன்ற மரபு சார்ந்த வாத்தியங்களை மட்டுமல்ல கைத்தட்டு ஒலி, விசில் , ஜுடீலிங் ,மவுத் ஓர்கன் , ஜலதரங்கம் ,மணி ஒலிகள் என பல்வகை ஒலிகளையும் தங்கள் பாடல்களில் வைத்து படைப்பூக்கத்துடன் கலைப்படைப்பாகத் தந்து இசையில் புதுப்பித்து படிமங்களை தந்து ஆச்சர்யப்படுத்தி சென்றார்.
கைத்தட்டு ஒலி அமைந்த பாடல்கள் சில.
01 குங்குமப்பொட்டு குலுங்குதடி - இது சத்தியம் 1963 - சுசீலா + ஜானகி - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
02 தங்க மகள் வயிற்றில் பிஞ்சு மகன் - வாழ்க்கை படகு 1963 - சுசீலா + குழு - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
03 குங்குமப்பொட்டு குலுங்குதடி - இது சத்தியம் 1963 - சுசீலா + ஜானகி - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
04 தொட்டால் பூ மலரும் -படகோட்டி 1964 - TMS + சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
05 சிங்கார புன்னகை - மகாதேவி 1957 - பாலசரஸ்வதி தேவி +எம்.எஸ்.ராஜேஸ்வரி - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
06 ஆடவரெல்லாம் ஆடவரலாம் -கலைக்கோயில் 1962- எல்.ஆர்.ஈஸ்வரி + குழுவினர் - இசை : விஸ்வநாதன்ராமமூர்த்தி
07 சந்தனம் குங்குமம் கொண்ட தாமரைப்பூ -ரகசிய போலீஸ் 115 1967- சுசீலா + குழுவினர் - இசை : விஸ்வநாதன்.
08 பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் -சாந்தி நிலையம் 1967- TMS + குழுவினர் - இசை : விஸ்வநாதன்.
09 கெட்டவரெல்லாம் பாடலாம் -தங்கை 1967- TMS + குழுவினர் - இசை : விஸ்வநாதன்
10 கல்யாண வளையோசை கொண்டு -ஊருக்கு உழைப்பவன் 1967- TMS + சுசீலா - இசை : விஸ்வநாதன்.
11 எங்கேயும் எப்போதும் சங்கீதம் - நினைத்தாலே இனிக்கும் 1967- SPB + ஈஸ்வரி - இசை : விஸ்வநாதன்.
விசில் சத்தத்தை பயன்படுத்தி அமைத்த பாடல்கள்.
01 வந்த நாள் முதல் - பாவமன்னிப்பு 1961- TMS - இசை : விஸ்வநாதன்ராமமூர்த்தி
02 நீரோடும் வகையிலே - பார் மக்களே பார் 1963- TMS + சுசீலா - இசை : விஸ்வநாதன்ராமமூர்த்தி
03 கேள்வி பிறந்தது அன்று - பச்சை விளக்கு 1964 - TMS - இசை : விஸ்வநாதன்ராமமூர்த்தி
04 நெஞ்சத்தை அள்ளி கொஞ்சம் தா தா- காதலிக்க நேரமில்லை 1961- ஜேசுதாஸ் + சுசீலா + ஈஸ்வரி - இசை : விஸ்வநாதன்ராமமூர்த்தி
05 எந்தன் பருவத்தின் கேள்விக்கு - சுமைதாங்கி 1962 - BPS + ஜானகி - இசை : விஸ்வநாதன்ராமமூர்த்தி
06 நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய் - சாந்தி 1966- சுசீலா - இசை : விஸ்வநாதன்
07 கொடுக்க கொடுக்க இன்பம் பிறக்குமே - நான் ஆணையிட்டால் 1966- TMS - இசை : விஸ்வநாதன்
ஜலதரங்கம் மற்றும் மணி ஒலிகள்:
ஜலதரங்கம் மற்றும் , பலவிதமான மணி ஒலிகளையும் வியக்கத்தக்க முறையில் மெல்லிசைமன்னர்கள் தங்கள் காலத்தில் பயன்படுத்தி வெற்றி கண்டார்கள்.குறிப்பாக குழந்தைகள் மற்றும் தாலாட்டுப் பாடல்களில் மிக நுணுக்கமாக மணி ஒலிகளை இணைத்து பல பாடல்களை தந்திருக்கிறார்கள்.இந்த மாதிரியை வைத்துக் கொண்டு பின்னால் வந்த இசையமைப்பாளர்களும் குழந்தைகள் பாடல்களில் வைப்பதற்கான முன்மாதிரியாக அமைந்திருக்கிறது.
01 இதழ் மொட்டு விரிந்திட - பந்தபாசம் 1963 - BPS + சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
02 அத்தைமடி மெத்தையடி - கற்பகம் 1964- சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
03 மாலையும் இரவும் சந்திக்கும் - பாசம் 1962 - BPS + சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
04 மலர்ந்தும் மலராத - பாசமலர் 1961 - TMS + சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
05 மலர்களை போல் தங்கை - பாசமலர் 1961 - TMS - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
06 வளர்ந்த கலை மறந்து விட்டால் - காத்திருந்த கண்கள் 1962 - BPS + சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
07 கண்ணன் வருவான் கதை சொல்லுவான் - பஞ்சவர்ணக்கிளி 1964 - சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
08 அழகன் முருகனிடம் - பஞ்சவர்ணக்கிளி 1964 - சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
07 அம்மா அம்மா கவலை வேண்டாம் - பாக்கியலக்ஸ்மி 1961 - சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
08 ஒரு நாள் இரவில் கண் உறக்கம் பிடிக்கவில்லை - பணத்தோட்டம் 1963 - சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
07 பிள்ளைக்குத் தந்தை ஒருவன் - பார்த்தால் பசிதீரும் 1962 - TMS - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
08 பூஜைக்கு வந்த மலரே வா - பாதகாணிக்கை 1964 - BPS + சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
09 மயங்குகிறாள் ஒரு மாது - பாசமலர் 1961 - சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
10 தங்கத்தில் ஒரு குறை இருந்தாலும் - பாகப்பிரிவினை 1961 - சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
11 முத்தான முத்தல்லவோ - நெஞ்சில் ஓர் ஆலயம் 1963 - சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
12 காலங்களில் அவள் வசந்தம் - பாவமன்னிப்பு 1961 - PBS - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
12 பச்சைமரம் ஒன்று [சோகம்] -ராமு 1966 - PBS + சுசீலா - இசை : விஸ்வநாதன்
13 முத்துச் சிப்பி மெல்ல மெல்ல -ராமு 1966 - PBS + சுசீலா - இசை : விஸ்வநாதன்
14 ஆடிவெள்ளி