8 ஆண்டுகளாக திரைப்படங்களுக்கு பாடல் எழுதிக்கொண்டிருப்பவர் பாடலாசிரியர் நா.முத்துக்குமார்.
நினைத்து நினைத்து பார்த்தேன், அக்கம் பக்கம் யாருமில்லா, அவள் அப்படி ஒன்றும் அழகில்லை என அவருடய பல நூற்றுக்கணக்கான பாடல்கள் அவரது தனித்தன்மையை உறுதி செய்துகொண்டு, இசையுலகில் பிரபலமாக திகழ்பவை.
நான் கவிஞர் கண்ணதாசன் போல இசையமைப்பாளர் முன்னிலையில் உட்கார்ந்து, மெட்டு போட்டவுடன் பாடல் எழுதுவதையே விரும்புகிறேன். அதுதான் எனக்கு ரொம்பவும் பிடிக்கும் எனும் நா.முத்துக்குமாரிடம், அவருடைய கவிப்பயணம் குறித்து கேட்ட போது,
ஒருபாடல் எழுத அரைமணியிலிருந்து, 2 மணி நேரத்துக்குள் ஆகும். ஒரு படத்துக்கு 5 இலிருந்து 6 பாடல்கள் தேவைப் பட்டாலும் அதை ஒரே நாளிலேயே எழுதி முடித்து விடுவேன். மிக எளிமையான நடையில், ஆழமான கருத்துக்களை இனிமையாகவும் கொடுத்து விடுவதாக இயக்குனர்கள், இசை அமைப்பாளர்கள் சொல்கிறார்கள். நானும் அப்படிக் கொடுப்பதைத்தான் கொள்கையாக வைத்திருக்கிறேன். அதோடு நான் எழுதும் பாடல் வரிகள் காட்சிப்பூர்வமாக இருப்பதாகவும், கதையை விளக்கி சொல்ல வசதியாகவும் இருப்பதாக இயக்குனர்கள் சொல்கிறார்கள்.
நடிப்பதில் எனக்கு ஆர்வம் இல்லை என்றாலும், உணர்ச்சிப் பூர்வமாக பாடல் வரிகளை விரைவில் கொண்டுவருவதில் எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. அதனால்தான் பாடல் வரிகளே காட்சியை விவரிக்கும் படி என்பாடல்கள் அமைந்து விடுகிறது. தோனி திரைப்படத்தில் வரும் வாங்கும் பணத்துக்கும் பாக்குற வேலைக்கும் சம்மந்தமில்லை என்கிற பாடல் இளைஞர்களைக் கவரும் விதமாக அமைந்திருந்தது.
நிறைய இளைஞர்கள் என்னைப் பாராட்டினார்கள். தோனி படத்தில் அனைத்துப் பாடல்களும் நான்தான் எழுதினேன். இப்போது கவுதம் மேனன் இயக்கிக் கொண்டிருக்கும் நீதானே என் பொன்வசந்தம் படத்தில் 8 பாடல்களும் நான்தான் எழுதியிருக்கேன். மும்பையில் எழுதி பதிவு செய்தோம். அதன்பிறகு சிம்பொனி இசைக்காக கவுதம் மேனனும், இசைஞானியும் லண்டன் சென்றார்கள்.
நீதானே என் பொன்வசந்தம் திரைப்படத்தில் அத்தனைப் பாடல்களும் மிக நன்றாக வந்திருக்கிறது. உலகெங்கிலும் உள்ள இசைஞானியின் ரசிகர்களுக்கு இது நல்ல விருந்தாக இருக்கும் என்கிறார்.
இவரின் கைவண்ணத்தில் 60 க்கும் மேற்பட்ட பாடல்கள் கொண்ட திரைப்படங்கள் வெளிவரத் தயார்நிலையில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.