Wednesday, 2 January 2019

ரஜினி: ‘சந்திரமுகி’ முதல் ‘பேட்ட’ வரை

திரைப்பட நடிகர் என்றால் சிவந்த நிறமும் வசீகரமான முகத்தோற்றமும் இருக்க வேண்டும் என்றிருந்த காலத்தில் அவை சார்ந்த தடைகளை உடைத்து உச்ச நட்சத்திரமாக உயர்ந்த ரஜினியின்  சினிமா பயணத்தில் ஆச்சரியமான பல மேடுகளும் அதிர்ச்சிகரமான சில பள்ளங்களும் உண்டு. இந்த நோக்கில் ‘சந்திரமுகி’ திரைப்படம் முதல் வெளிவரவிருக்கிற ‘பேட்ட’ வரையான ரஜினி சினிமாக்களின் சுருக்கமான வரலாற்றைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.ரஜினியின் சினிமா பயணத்தில் ஒரு குறிப்பிடத்தகுந்த திரைப்படமாக 2005-ல் வெளிவந்த ‘சந்திரமுகி’யை சொல்லலாம். அந்த வருடத்திய நிலைமையின் படி ஒரு திரையரங்கில் அதிக நாட்கள் தொடர்ந்து ஓடி சாதனை புரிந்த தென்னிந்திய திரைப்படமாக ‘சந்திரமுகி’ இருந்தது. சென்னை, சாந்தி தியேட்டரில் 890 நாட்கள் தொடர்ந்து ஓடி, தியாகராஜ பாகவதர் நடித்த ‘ஹரிதாஸின்’ முந்தைய சாதனையை முறியடித்தது.

இந்த வெற்றி ரஜினியின் தரப்பிற்கு வழக்கத்தை விடவும் கூடுதல் மகிழ்ச்சியை தந்திருக்கக்கூடும். ஏனெனில், பலத்த எதிர்பார்ப்பிற்குப் பிறகு வெளியான முந்தைய திரைப்படமான ‘பாபா’ (2002) மோசமான தோல்வியைச் சந்தித்திருந்தது. ‘சூப்பர் ஸ்டார்’ என்னும் சிம்மாசனத்தில் ரஜினி அழுத்தமாக உட்கார்ந்த பிறகு அவருடைய அகராதியில் தோல்வி என்பதே பெரும்பாலும் இல்லாமல் இருந்தது. ஹாலிவுட் திரைப்படமான ‘பிளட் ஸ்டோன் (1988), ‘நாட்டுக்கு ஒரு நல்லவன்” (1991), சொந்த தயாரிப்பான வள்ளி (1993) போன்று அரிதான சில திரைப்படங்கள் முன்பு தோல்வியைச் சந்தித்திருந்தாலும் உச்ச நட்சத்திரமாக ரஜினியின் பிம்பம் உறுதிப்பட்ட பிறகு அவருடைய வணிகச் சந்தை பெரும்பாலும் ஏறுமுகமாகவே இருந்தது. ஒரு ரஜினி திரைப்படத்தின் வசூல் சாதனையை அவரது அடுத்த திரைப்படமே முறியடிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டிருந்தது. இந்த வெற்றிகரமான பயணத்தின் மிகப் பெரிய கரும்புள்ளி என்று ‘பாபா’வைச் சொல்லலாம்.

வழக்கமான வணிக அம்சங்கள் பெரும்பாலும் இல்லாதது, அந்த திரைப்படம் விவரித்திருந்த ‘ஆன்மீகம்’, சுவாரசியமற்ற திரைக்கதை போன்ற காரணங்களால் ‘பாபா’ திரைப்படத்தை ரசிகர்கள் ரசிக்கவில்லை. மட்டுமல்லாமல் ரஜினியின் அரசியல் பிரவேசத்தைப் பற்றிய உறுதியான சமிக்ஞை இந்த திரைப்படத்தில் இருக்கும் என்று அவர்கள் எதிர்பார்த்தது மீண்டும் நிகழாததால் மனதளவில் சோர்ந்து போனார்கள். இந்த திரைப்படத்தினால் விநியோகஸ்தர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ரஜினி ஈடுகட்டும்படியான சூழல் உருவாயிற்று.

தனது வணிக பிம்பத்தில் ஏற்பட்ட இந்த ஓட்டையை சரிக்கட்டுவதற்காக அடுத்த காலடியை கவனமாக எடுத்து வைத்தார் ரஜினி. 1993-ல் வெளியாகிய ‘மணிச்சித்ரதாழு’ என்கிற திரைப்படத்தையொட்டி ‘ஆப்தமித்ரா’ என்கிற கன்னட திரைப்படத்தை அப்போதுதான் இயக்கி முடித்திருந்தார் இயக்குநர் வாசு. அதை தமிழில் கொண்டு வருவதற்காக திட்டமிட்டார் ரஜினி. ஒவ்வொரு வணிக அம்சமும் இதில் மிக கவனமாக சேர்க்கப்பட்டன.

நகைச்சுவை நடிகர் வடிவேலு அப்போது உச்சத்தில் இருந்தார். ‘வடிவேலுவின் கால்ஷீட்டை முதலில் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்’ என்று ரஜினி சொன்ன தகவல், ‘சந்திரமுகி’ வெற்றி விழா மேடையில் தெரிவிக்கப்பட்டிருந்ததில் இருந்து, இந்த திரைப்படத்தின் வெற்றியில் ரஜினி மிக ஜாக்கிரதையாக இருந்தார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ‘ஸ்பிலிட் பர்சனாலிட்டி’ என்னும் உளக்குறைபாட்டை வைத்து உருவாக்கப்பட்ட மலையாள சினிமாவின் ஆன்மாவை கொன்று புதைத்தாலும் ‘சந்திரமுகி’யில் இருந்த வணிக அம்சங்கள், ஜோதிகாவின் அசத்தலான நடிப்பு, வித்யாசாகரின் அருமையான பாடல்கள் உள்ளிட்ட பல காரணங்களால் இத்திரைப்படம் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது. ‘வேட்டையன்’ என்கிற எதிர்மறையான பாத்திரத்தில் பழைய ‘ரஜினி’யை பார்க்க முடிந்தது.

இதற்குப் பிறகு ஷங்கரின் இயக்கத்தில் வெளியான ‘சிவாஜி’ (2007)  திரைப்படம், ‘சந்திரமுகி’ திரைப்படத்தின் வசூல் சாதனையை முறியடித்தது. இதன் பின்னர் மீண்டும் இன்னொரு ரீமேக் முயற்சியில் இறங்கினார் ரஜினி. ‘கதபறயும் போள்’ என்கிற மலையாள திரைப்படத்தை தமிழில் கொண்டு வரத் திட்டமிட்டார். ‘சந்திரமுகி’ போலவே இதுவும் வெற்றியடையக் கூடும் என்று அவர் நினைத்திருக்கலாம். மலையாளத்தில் சீனிவாசன் ஏற்றிருந்த பாத்திரத்தில் பசுபதி நடித்தார். புகழ்பெற்ற நடிகராக மம்முட்டி ஏற்றிருந்த பாத்திரத்தை தமிழில் ரஜினி ஏற்றார். இந்தத் திரைப்படம், அடிப்படையில் ஒரு சராசரி நபருக்கும் அவரது இளமைப்பருவ நண்பராக இருந்து பின்னர் ‘சூப்பர் ஸ்டார்’ நடிகராக ஆனவருக்கும் இடையிலான உறவின் தத்தளிப்பைச் சித்தரிக்கும் திரைப்படம். சராசரி நபரின் கோணத்திலேயேதான் பெரும்பாலான திரைப்படமும் நகரும். மலையாளத்தில் மம்முட்டி சில காட்சிகளில் மட்டுமே வருவார். ஆனால் இது தமிழில் உருவாக்கப்படும் போது ரஜினிக்காக பல காட்சிகளும் வணிக அம்சங்களும் இணைக்கப்பட்டன. இதன் விளைவாக இன்னொரு மலையாள சினிமாவை கொத்து பரோட்டா போட்ட புகழ் இயக்குநர் வாசுவிற்கு கிடைத்தது.

இந்தத் திரைப்படமும் தோல்வியடையவே மீண்டும் ஷங்கரிடம் அடைக்கலம் புகுந்தார் ரஜினி. துவக்கத்தில் கமலுக்காக உருவாக்கப்பட்ட ‘எந்திரன்’ திரைப்படம் சாத்தியமாகாமல் போகவே ரஜினிக்காக மாற்றங்கள் செய்யப்பட்டன. பொதுவாக ஒரு வெகுசன திரைப்படத்தை உயர்தரத்தில் உருவாக்க விரும்பும் ஷங்கர், அதே சமயத்தில் சராசரி ரசிகனுக்குரிய பல அம்சங்களும் இருக்குமாறு பார்த்துக் கொள்வார். ஹாலிவுட்டிற்கு பழைய சமாச்சாரம் என்றாலும், ஒரு ரோபோட்டிற்கும் பெண்ணிற்கும் இடையிலான காதல் என்பது தமிழ் சினிமாவிற்குப் புதியது என்பதாலும் ஷங்கரின் திறமையான இயக்கம் காரணமாக ‘எந்திரன்’ வணிகரீதியாக வெற்றி பெற்றது.

அடுத்ததாக மீண்டும் இன்னொரு தோல்விப்படம். ரஜினியின் மகள் செளந்தர்யாவின் இயக்கத்தில் ‘சுல்தானாக’ துவங்கி பிறகு கைவிடப்பட்டு ‘ராணா’வாக பரிணமித்து ரஜினியின் உடல்நலக்குறைவு உள்ளிட்ட காரணங்களால் அதுவும் கைவிடப்பட்டு பிறகு ‘கோச்சடையனாக’ உருவானது. ஹாலிவுட்டைப் போன்று அனிமேஷன் திரைப்படங்களுக்கென்று பிரத்யேகமான ரசிகர்களோ, வணிகச்சந்தையோ இந்தியாவில் இல்லை. சரியாக திட்டமிடப்பட்டிருந்தால் ‘கோச்சடையான்’ இந்தப் போக்கின் துவக்கப் புள்ளியாக அமைந்து ஒரு சிறந்த முன்னுதாரணமாக ஆகியிருக்கக்கூடும். வெற்றிப்பட இயக்குநரான ‘கே.எஸ்.ரவிக்குமார்” பிறகு வந்து இந்தத் திட்டத்தில் இணைந்தாலும், பல்வேறு குழப்பங்களால் ‘கோச்சடையான்’ தோல்விப்படமாக அமைந்தது. ரஜினியின் குடும்பம் நிதி சார்ந்த சில வழக்குகளையும் எதிர்கொள்ள நேர்ந்தது.

தனது பிம்பத்தின் சரிவை சரிக்கட்டும் நெருக்கடியில் இருந்த ரஜினி, தனது அடுத்த திரைப்படத்தை எப்படியாவது வெற்றிப்படமாக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் தனது ஆஸ்தான இயக்குநர்களில் ஒருவரான கே.எஸ்.ரவிக்குமாருடன் மீண்டும் இணைந்தார். விளைவாக ‘லிங்கா’ உருவானது.  இந்தியாவிலுள்ள நதிகள் இணைக்கப்பட வேண்டும் என்கிற தம் விருப்பத்தை காவிரி நீர் விவகாரம் பற்றியெரிந்த ஒரு கணத்தில் தெரிவித்த ரஜினி, அந்தத் திட்டத்திற்காக கணிசமான நிதியை வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். ‘லிங்கா’ திரைப்படமும் இது தொடர்பாக அமைந்தது. முல்லை பெரியார் அணை உருவானதற்கு பிரதான காரணமாக இருந்த ஜான் பென்னிகுயிக் என்கிற ஆங்கிலேயப் பொறியாளர் தொடர்பான வாழ்க்கைச் சம்பவங்களின் சாயல் இதன் திரைக்கதையில் இணைக்கப்பட்டது.

ஒரு வெகுசன திரைப்படத்திற்குரிய அம்சங்கள் ‘லிங்கா’வில் இருந்தாலும் தேய்வழக்கு பாணியில் அமைந்த காரணத்தினாலேயே வணிகரீதியான வெற்றியை அடையவில்லை. இந்தத் தோல்விக்கு இன்னொரு முக்கியமான காரணமும் உண்டு. உலக சினிமா உள்ளிட்ட மாற்று முயற்சிகளை பார்த்து வளர்ந்திருந்த இளைய தலைமுறை அப்போது பெருகி வந்திருந்தது. வெகுசன திரைப்படமென்றாலும் கூட அது வித்தியாசமாகவும் தரமுள்ளதாகவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிற மனோபாவம் அவர்களிடம் அதிகரித்தது. இதனாலேயே தேய்வழக்கு பாணியில் அமைந்த சினிமாக்களையும் அதன் காட்சிகளையும் சமூக வலைத்தளங்களில் கிண்டலடித்து தீர்க்கும் பழக்கமும் பெருகியது. மேலும் திரையரங்கத்திற்கு வரும் பார்வையாளர்களின் பெரும்பான்மை சதவீதமாக இளைஞர்களாக இருப்பதால் ஒரு திரைப்படத்தின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் காரணியாகவும் அவர்களே இருக்கிறார்கள். இந்த திரைப்படத்தின் வணிகரீதியான தோல்வி காரணமாக விநியோகஸ்தர்களின் கசப்புகளையும் ரஜினி தரப்பு எதிர்கொள்ள நேர்ந்தது.

ரஜினி தன் வயதை விட மிகக்குறைந்த நாயகிகளுடன் டூயட் ஆடுவதை அவரது ரசிகர்களில் சில சதவீதத்தினரே கூட விரும்பவில்லை. அமிதாப்பச்சனைப் பின்பற்றி ரஜினியும் தன் வயதுக்கேற்ற பாத்திரங்களிலும் கதைகளிலும் நடிக்க வேண்டும் என்கிற விருப்பமும் எதிர்பார்ப்பும் பரவலாக இருந்தது. இதுவும் ‘லிங்கா’வின் தோல்விக்கு ஒருவகை காரணமாக இருக்கக்கூடும்.


இந்தச் சூழலை ரஜினியும் உணர்ந்திருப்பார் என்று தோன்றுகிறது. அவரது அடுத்த திரைப்படமான ‘கபாலி’யில், வழக்கமான போக்கை கைவிட்டு வயதான டானாக நடித்திருந்தார். இது மட்டுமல்லாமல், பல வெற்றிப்பட இயக்குநர்கள் அவரது கால்ஷீட்டிற்காக காத்துக் கொண்டிருந்த போது ‘இரஞ்சித்’ என்கிற இளம் இயக்குநரிடம் ரஜினி தன்னை ஒப்படைத்துக் கொண்டது புதிய மாற்றங்களை தேடி அவர் நகர்கிறார் என்பதை உணர வைத்தது. இதில் முக்கியமானதொரு மாற்றமும் உண்டு. ‘எஜமான் காலடி மண்ணெடுத்து நெற்றியில் பூச வேண்டும்’ என்று நிலவுடமைச் சமுதாய பெருமிதங்களைப் பேசும் படங்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்த ரஜினி, ‘தலித்’ அரசியலை பிரதானமாக முன்வைக்கும் படத்தில் நடித்தது, அவரின் திரை பிம்பத்தில் உருவான முக்கியமான மாற்றம் என்று சொல்லலாம். இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கான அம்சங்களும் இருந்தன. இந்தச் சவாலை ரஜினி வெற்றிகரமாக தாண்டி வந்தார்.

‘கபாலி’யின் வெற்றியால் உற்சாகமடைந்த ரஜினி அடுத்த திரைப்பட வாய்ப்பையும் இரஞ்சித்திற்கே அளித்தார். ஒரு பெருநகரின் பூர்வகுடிகளை நிலமற்றவர்களாக ஆக்கி நகருக்கு வெளியே அப்புறப்படுத்தும் ‘தூய்மை அரசியலை’ காலா மையப்படுத்தியது. ஆனால் இது ரஜினியின் திரைப்படமாகவும் அல்லாமல் இரஞ்சித்தின் அரசியல் சினிமாவாகவும் அல்லாமல் இருந்ததால் இதை எப்படி ஏற்றுக் கொள்வது என்கிற குழப்பம் ரசிகர்களிடையே இருந்ததால் அதிக வெற்றியை அடையவில்லை.

தனது சமீபத்திய திரைப்படத்தை, கார்த்திக் சுப்பராஜ் என்கிற இளம் இயக்குநரிடம் ஒப்படைத்ததில் இருந்து இளம் இயக்குநர்களின் மூளைகளையே ரஜினி அதிகம் நம்ப விரும்புகிறார் என்று எண்ணத் தோன்றுகிறது. தானொரு தீவிரமான ரஜினி ரசிகன் என்பதை ‘பேட்ட’ திரைப்படத்தின் இயக்குநரான கார்த்திக் சுப்பராஜ் நெடுங்காலமாகவே கூறி வருகிறார். ஒரு நடிகரின் தீவிரமான ரசிகருக்கு சம்பந்தப்பட்ட நடிகரையே இயக்கும் வாய்ப்பு கிடைப்பதென்பது சுவாரசியமான திருப்பம். ஒரு சராசரி ரஜினி ரசிகன் எதிர்பார்க்கும் விஷயங்களோடு, இளம் தலைமுறையினர் எதிர்பார்க்கும் போக்குகளின் கலவையாக ‘பேட்ட’ இருக்கக்கூடும்.

ரஜினி ரசிகர்கள் மட்டுமல்லாது பொதுவான பார்வையாளர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கும் படம் 2.0. நீண்ட கால தயாரிப்பில் உள்ள இந்த திரைப்படம் சில தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாக வெளியாவதில் தாமதம் என்று கூறப்படுகிறது. தமிழ் சினிமாவின் வணிகம் பல கோடிகளைத் தாண்டி சாதனை புரிவதற்கும் அதன் சந்தை வெளிநாடுகளில் வளர்ந்து விரிந்து கொண்டே போவதற்கும் ரஜினியின் திரைப்படங்களே பிரதான காரணமாக இருக்கின்றன என்பதை சில புள்ளிவிவரங்களின் மூலம் அறிய முடிகிறது.

**

ரஜினியின் அரசியல் நுழைவின் வரலாறு என்பது ஓர் அவல நகைச்சுவை நாடகத்திற்கான சிறந்த உதாரணம். ‘வரும்.. ஆனா வராது..’ என்கிற வசனத்திற்கேற்ப தன் அரசியல் வருகையை இத்தனை வருடங்களுக்கு இழுத்திருக்கக்கூடிய ஒரே நபராக ரஜினி மட்டுமே இருப்பார் என்று தோன்றுகிறது. அண்ணாமலை திரைப்படத்தில் இருந்த சில வசனங்கள், அப்போதைய ஆளுங்கட்சியாக இருந்த ஜெயலலிதாவை கடுப்பேற்றதியதில் துவங்கிய உரசல், பா.ம.க.தலைவர் ராமதாஸூடன் தொடர்ந்து பற்றியெரியத் துவங்கியது. மாறி மாறி ஆண்ட இரண்டு திராவிடக் கட்சிகளின் மீதான அதிருப்தியும் மக்களிடம் பெருகியது. இதன் காரணமாக ரஜினி அரசியலில் நுழைந்து ஒரு சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்று பொதுசமூகத்தில் ஏற்பட்ட நம்பிக்கைத் தீயில், தனது நீண்ட கால மெத்தனத்தின் மூலம் ரஜினியே நீர் ஊற்றி அணைத்தார். இன்னமும் கூட இந்த அபத்த நாடகத்தை அவர் தொடர்ந்து கொண்டேயிருப்பது துரதிர்ஷ்டமானது.  தன் அரசியல் பிரவேசத்தின் மீது மக்களுக்கு இருந்த எதிர்பார்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அதையும் தனது திரைப்படங்களில் காட்சிகளாகவும் வசனங்களாகவும் பயன்படுத்தி அதையும் ஒரு முதலீட்டாக்கிக் கொண்ட சாமர்த்தியம் ரஜினிக்கு இருந்தது.

சில பல விமர்சனங்கள் இருந்தாலும் ரஜினி ஒரு கவர்ச்சிகரமான ஆளுமை என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஒரு சராசரி நபருக்கான முகத்தோற்றத்தைக் கொண்டவர், சினிமாத்துறையின் உச்சத்தை அடைந்து அதில் நீண்ட காலம் தனது இருப்பை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பதற்கான வாழும் உதாரணமாக இருப்பவர் ரஜினி. இன்னமும் கூட ரஜினி என்கிற பிம்பத்தின் மீதாக கவர்ச்சி பெரிதும் மங்கவில்லை. அவரது ஒவ்வொரு புதிய திரைப்படத்திற்கும் மீதும் எழும் எதிர்பார்ப்பு இன்னமும் குறைந்து விடவில்லை. காலத்தின் போக்கிற்கு ஏற்ப சினிமாவில் தன்னை தகவமைத்துக் கொள்வதில் ரஜினியின் தொலைநோக்கு திறமையை பல சமயங்களில் பிரமிக்க முடிகிறது.

மாறி வரும் போக்குகளினாலும் ரஜினி என்கிற குதிரையின் வேகம் சற்று சுணங்கினாலும் அது முற்றிலுமாக குறைந்து விடவில்லை. ஆனால் அரசியலைப் பொறுத்தவரை ஆமை வேகம் கூட இல்லை. நிஜத்திற்கும் நிழலிற்கும் வேறுபாடு அறியாத ரசிகர்கள் இருந்த காலக்கட்டங்கள் முடிந்து விட்டன. இந்த யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு சினிமா, அரசியல் என்கிற இரட்டைச் சவாரியை கை விட்டு, தன்னுடைய பலமான சினிமாவில், பொருத்தமான பாத்திரங்களை ஏற்று நடித்தால் எஞ்சியிருக்கும் ரஜினியின் பிம்பம் மேலும் சேதமுறாமல் தப்பிக்கும். 

(இந்தியா டுடே - தமிழ் - ரஜினிகாந்த் சிறப்பிதழில் வெளியான கட்டுரையின் எடிட் செய்யப்படாத வடிவம்) - நன்றி: இந்தியா டுடே