Thursday 21 May 2015

ஏன் இந்த பேய் மோகம்!

சமீபகாலமாக ஹீரோக்கள் ஆதீத ஆர்வம் காட்டி வருவது பேய்க்கதைகளில்தாம். சந்திரமுகியில்  ரஜினி செவ்வனே துவக்கி வைத்த இந்தப் பாதையில் தற்போது பெரும்பாலான ஹீரோக்கள் வரிசை கட்டத் துவங்கிவிட்டார்கள்.சரி பேய்ப் படங்களை அந்த அளவிற்கு ரசிக்கிறார்களா என்றால் ‘காஞ்ஜூரிங்’ படத்தையே கப்சா விடுறாங்க பாஸ் ரேஞ்சுக்கு சமூக வலைதளங்களில் ஒரு கூட்டம் கலாய்க்க ஆரம்பித்து விட்டது.



என்னதான் ஆச்சு நம்ம தமிழ் சினிமாவுக்கு? சிம்பிள் பட்ஜெட், ஒரு பங்களா, லைட் மேன் செலவு கூட குறைவுதான். வெறும் 4 பேர் கொண்ட குழுவை வைத்துக்கொண்டே இரண்டு மணி நேரப் படத்தை ஓட்டி விடலாம். இதுவே முதல் காரணம் என்கிறார் தமிழ் சினிமாவின் முக்கியஸ்தர் ஒருவர்.சரி பேய் என்பதே நம்மை சீட்டில் உறைய வைக்க எடுக்கப்படும் படங்கள் தான். ஆனால் அந்த வகையில் கடைசியாக வெளியான ’ஈவில் டெட் 2013’, ‘அன்னாபெல்’, ’ஓஜா’ என பல ஹாலிவுட் படங்களே அதில் பல்புதான் வாங்கியது. நமக்குத் தெரிந்து நம்மைச் சிறிதே ஆட்டிய படங்கள் ‘எக்ஸார்சிஸ்ட்’, ‘க்ரட்ஜ்’;’தி ரிங்’, ‘இட்’ , என மிகச்சில படங்களே உள்ளன. அந்தப் படங்களையும் இப்போது டிவிகளில் பார்க்கையில் சிரிப்பு தான் வருகிறது.

இவர்களைப் பார்த்து பாடம் கற்றார்களோ என்னவோ காமெடி ட்ராக்கில் பேயை வைத்து கிண்டல் செய்ய துவங்கிவிட்டார்கள் கோலிவுட் வாசிகள். தொட்டா பேய் வரும், கட்டிப்பிடிச்சா பேய் வரும், இப்படிப் பேய்கள் பல விதம். முன்பெல்லாம் பேய்ப் படங்கள் என்றாலே புதுமுக நடிகர்கள் மட்டுமே ஹீரோக்களாக வருவார்கள். பின்னர் நிழல்கள் ரவி, மோகன் என படையெடுத்தார்கள். ’சந்திரமுகி’ மூலம் ரஜினியே பேய்ப் பட ஹீரோவாக அவதாரம் எடுத்தார். அவ்வளவு தான் லாரன்ஸ், ஆதி, நந்தா, சுந்தர் சி, வினய், ஜி.வி.பிரகாஷ்,  அருள் நிதி, சிபிராஜ் இப்போது சூர்யா வரை இந்த பேய்ப் பட மோகம் தலை விரிக்கத் துவங்கிவிட்டது.

சரி இப்படி ஒரே நேரத்தில் பேயை வைத்து எல்லாரும் ஒரு காட்டு காட்டினால் கூட ஓகே , ஊரே பயப்படும் ஒரு கான்செப்டை காமெடி பீசாக அல்லவா மாற்றிவிட்டனர். அப்படியென்றால் பேய் பயம் மொத்தமாக போய் விட்டதா, இருட்டைக் காட்டியே நம்மை பயமுறுத்திய சினிமாக்கள் எங்கே? ஒவ்வொரு சீனையும் ஐஸ் க்ரீம் சாப்பிடக் கூட மறந்து பார்த்துக்கொண்டிருக்க ஐஸ்க்ரீம் உருகி கீழே வழிந்தோடிய காலங்கள் எங்கே? என ஏங்க வைத்துவிட்டனர் சினிமா படைப்பாளிகள். ’காஞ்சனா’ பார்த்து கதறிய குழந்தைகள் இப்போது தங்களது அப்பா , அம்மாவிடம் ஹையோ! இது பொம்மை, என சிரிக்கத் துவங்கிவிட்டனர். ’ வேப்பமர உச்சியில் நின்னு பேயொன்னு ஆடுதுன்னு விளையாட்டா சொல்லி வைப்பாங்கன்னு’ சொன்ன பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தோட வரிகள் பொய்யாகி வருகிறது என்பதுதான் உண்மை. நல்லது நடந்தா சரி.

Saturday 16 May 2015

ஜெயகாந்தனின் சினிமா

தம் வாழ்நாளில் ஒரு தங்க வாய்ப்பையாவது  பெற்று விட முடியாதா என்கிற கனவுடன் தமிழ் எழுத்தாளர்கள் உட்பட ஆயிரக்கணக்கான நபர்கள் தமிழ் சினிமாவுலகில் நுழைய முண்டியடித்துக் கொண்டிருக்கும் போது அந்தக் காட்சி ஊடகமும் அதிலுள்ள நபர்கள் இயங்கும் போலித்தனத்திற்காகவே அதை தம் எழுத்தில் தொடர்ந்து முற்றிலும் கறாராக விமர்சித்து, வெறுத்து ஒதுக்கிய ஒரு நபர் அதிலேயே சில காலம் இயங்கி சில திரைப்படங்கள் இயக்க நேர்ந்தது என்பது விதியின்  சதுரங்க ஆட்டத்தின் ஒரு சுவாரசியமான அசைவு போலவே இருக்கிறது. 
 
 
ஜெயகாந்தன் சில காலத்திற்கு முன் எழுதிய 'ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்' நூலை வாசிக்கும் போது அவர் தமிழ் சினிமாவிற்கு வந்து விழுந்ததே ஒரு தற்செயலான விபத்து என்றே தோன்றுகிறது. அந்தளவிற்கு தம்முன் வந்த வாய்ப்புகளையெல்லாம் மிக மூர்க்கத்தனத்துடன் அவர் நிராகரித்துக் கொண்டேயிருந்தார். தன் படைப்புகளின் ஆன்மாவை தமிழ் சினிமா சிதைத்து விடும் என்கிற ஜாக்கிரதையுணர்ச்சி அவருக்கு இருந்திருக்கிறது. என்றாலும் நண்பர்களின் அன்பு கலந்த வற்புறுத்தல் காரணமாகவும் அதன் பின்விளைவாக நிகழும் சிலபல சிக்கலான தருணங்களைக் கடந்து வரவும்தான் அவர் திரைப்படம் தொடர்பான சில பணிகளை மேற்கொண்டிருந்தார் என்பதாகத் தெரிகிறது. ஒரு காலக்கட்டத்தில் எழுத்தை நிறுத்திக் கொண்ட கம்பீரத்தைப் போலவே பணத்தை அள்ளியும் கிள்ளியும் தந்த திரைப்படத்துறையிலிருந்தும் அவர் அதே கம்பீரத்துடன் விலகிய ஆளுமைக்குணம் எத்தனை பேருக்கு அமையும்?

'சில நேரங்களில் சில மனிதர்கள்' உள்ளிட்ட அவரின் சில படைப்புகள் மற்றவர்களால் திரைப்படமாக உருவாகியிருந்தாலும் அவரே நேரடியாக இயக்கிய திரைப்படங்கள் மூன்று. உன்னைப் போல் ஒருவன், யாருக்காக அழுதான், புதுச்செருப்பு கடிக்கும். இதில் 'யாருக்காக அழுதான்' திரைப்படத்தின் பிரதி மாத்திரமே இன்று காணக் கிடைக்கிறது. உன்னைப் போல் ஒருவன் தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்பட்ட காலத்தில் பார்த்திருக்கிருக்கிறேன். அதில் பிரதான நடிகர்களாக நடித்த காந்திமதி மற்றும் வீராச்சாமி போன்ற நடிகர்களின் மங்கலான உருவங்கள் மட்டுமே இன்று எனக்கு நினைவில் நிற்கிறது. புதுச்செருப்பு கடிக்கும் திரைப்படத்தைப் பார்த்த பாக்கியவான்களில் ஒருவராவது தமிழகத்தில் எவரேனும் இருக்கிறார்கள் என்று சந்தேகமாக இருக்கிறது.  அவரது தோழர்கள் உருவாக்கிய 'பாதை தெரியுது பார்' திரைப்படத்தின் ஒரு காட்சியில் தற்செயலானதொரு தருணத்தில் ஜெயகாந்தன் நடித்திருக்கிறார். அவர் முன்பு செய்து வைத்திருந்த கறாரான தீர்மானத்திற்கு முற்றிலும் எதிரான காரியம் அது. எனவே மிக சாமர்த்தியமாக அந்தக் காட்சியை நீக்குவதற்கும் தாமே காரணமாக இருந்திருக்கிறார். அது நீக்கப்படாமலிருந்தால் ஜெயகாந்தனை தமிழ் திரையில் பார்க்குமொரு மகத்தான வாய்ப்பு இழக்கப்படாமலிருந்திருக்கும். 
இத்திரைப்படத்தில் அவர் எழுதிய பாடல் ஒன்றும் மிக பிரபலமானது. 'தென்னங்கீற்று ஊஞ்சலிலே. சிட்டுக்குருவி ஆடுது'. ஜெயகாந்தனின் எழுத்து பங்களிப்பில் உருவான திரைப்படங்கள் பலவற்றின் பிரதி இன்று நம்மிடமில்லை அல்லது கண்டுபிடிக்க இயலவில்லை. ஜெயகாந்தன் என்கிற ஆளுமையை சமகால வாசகர்கள் இன்னமும் விஸ்தாரமாக அணுக இத்திரைப்படங்களை காண முடியாது என்பது ஒரு சோகம். கலைகளை ஆவணப்படுத்துதலில் தமிழ் சமூகத்திற்கு இருக்கிற அலட்சியமும் அறியாமையும் இதன் மூலம் மறுபடியும் நிரூபணமாகிறது. என்றாலும் ரவி சுப்பிரமணியம் இயக்கியிருக்கும் ஜெயகாந்தன் குறித்த ஆவண்ப்படமானது ஒரு சிறந்த குறைந்தபட்ச ஆறுதல்.

***

ஒரு காலக்கட்டத்து கலையுலக அனுபவங்கள் வரை பதிவாகியிருக்கும் ஜெயகாந்தனின் நூலில் அவரால் இயக்கப்பட்ட முதல் இரண்டு திரைப்படங்களும் உருவான பின்னணிகள் சுவாரசியமாக விளக்கப்பட்டுள்ளன. வீனஸ் கிருஷ்ணமூர்த்தி என்கிற பிரபல தயாரிப்பாளர் ஜெயகாந்தனை தாமே அணுகி 'உங்களது படைப்பில் எதை வேண்டுமானாலும் திரைப்படமாக உருவாக்கலாம்' என்கிற நம்பிக்கையை விதைக்கிறார். என்றாலும் ஒரு திரைப்பட இயக்குநராவதற்கான அனுபவம் குறித்த போதாமைகளை தாமே உணர்ந்திருக்கிற ஜெயகாந்தன் 'என் மீதே அதற்கான நம்பிக்கை வரும் போது' இயக்குநர் ஆவதாக பதிலளிக்கிறார். என்றாலும் அந்த தயாரிப்பாளருடன் இரண்டு வங்காளித் திரைப்படங்களை தமிழில் உருமாற்றுவதற்கான பணிகளில் ஈடுபடுகிறார். ஆனால் சினிமாக்காரர்களின் அலட்சியமான மனோபாவமும் கலையை வணிகமாகவே பார்க்கும் போலித்தனமும் அங்கிருந்து அவரை விலகச் செய்கிறது. சில காலம் கழித்து இதே தயாரிப்பாளரை சந்தித்து தன் நம்பிக்கையை தெரிவிக்கிறார். திரைக்கதை உருவாக்கப்படுகிறது. ஆனால் திரைக்கதையை கேட்ட தயாரிப்பாளர் சட்டென்று ஒரு வணிகராக மாறி 'என்ன இது சமைப்பதும், சாப்பிடுவதும், தூங்குவதுமாய் வங்காளிப்படம் மாதிரி இருக்கிறதே' என்று அவநம்பிக்கையான கருத்தை தெரிவித்திருக்கிறார். தனது பிரத்யேக குணத்துடன் இதை எதிர்கொண்ட ஜெயகாந்தன் 'இதை நான் என் நண்பர்களுடன் இணைந்து உருவாக்கி காட்டுகிறேன்' என்று ஆவேசமாக சொல்லி விட்டு வெளியேறியிருக்கிறார். ஜவஹர்லால் நேரு என்கிற ஆளுமையின் மீதான மரியாதையின் பேரில் அதன் பிறகு உருவானது, 'ஆசிய ஜோதி பிலிம்ஸ்'.

ஜெயகாந்தன் இயக்கிய திரைப்படங்களைக் காணும் போது அவற்றிலுள்ள பல நேரடியான குறைகள் நம் கண்களில் உடனே பட்டாலும் அவற்றை தாங்கிப் பிடிப்பது அவரது எழுத்துக்களைப் போலவே திரைப்படத்திலும் இருந்த யதார்த்தமான காட்சிகளும் அவற்றிலிருந்த நேர்மையும்தான். வெகுசன சினிமாவின் அபத்தமான போக்கிற்கு உடன்படாமல் தனித்து நின்ற அவரது கம்பீரமான வேறுபாடே அவரது ஆளுமையை தனித்து நிற்கச் செய்கிறது. இந்தக் காரணத்தினாலேயே  'உன்னைப் போல் ஒருவன்' திரைப்படத்திற்கு 1965-ம் ஆண்டிற்கான  தேசிய அளவிலான  விருது கிடைத்திருக்கிறது. கொள்கைகளின் படி இரண்டாம் விருது ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட நிலையில் சத்யஜித்ரே இயக்கிய சாருலதாவிற்கும் இதற்கும்தான் போட்டி. ஆனால் ஒருவகையில் ஜெயகாந்தனுக்கு ஆதர்சமாயிருந்த ரேவின் படைப்பே தகுதியில் உயர்ந்தது என்கிற எண்ணம் ஜெயகாந்தனுக்கு இருந்ததால் மூன்றாம் பரிசு குறித்து அவருக்கு மகிழ்ச்சியே. ஆனால் இந்தச் செய்தியை தமிழக ஊடகங்கள் இருட்டடிப்பு செய்தது குறித்து வருத்தம். ஓர் எழுத்தாளரே இயக்குநர் அனுபவங்கள் ஏதுமல்லாது தன்னுடைய படைப்பை இயக்கி அதற்கு தேசிய அளவிலான விருது பெறுவது என்பது ஒரு மகத்தான சாதனை. உண்மையில் தமிழகமே திரண்டு இதைக் கொண்டாடியிருக்க வேண்டும். ஆனால் இத்திரைப்படத்தை வடஇந்திய பத்திரிகைகள் கொண்டாடியிருக்கின்றன.

திரைப்படம் காண்பதை வழக்கமல்லாததாக கொண்டுள்ள காமராஜ் இத்திரைப்படத்தைக் கண்டு "இந்தப் படத்தை அரசாங்கமே வாங்கி மக்களுக்கு இலவசமாக காட்ட ஏற்பாடு செய்ய வேண்டும். நம்முடைய பல கஷ்டங்களுக்குக் காரணம் நமது ரசனை கெட்டுப் போனதுதான்' என்று புகழுரை தந்திருக்கிறார். ஏவிஎம் செட்டியார் ஜெயகாந்தனை அணுகி "படம் மிக யதார்த்தமாக வந்திருக்கிறது. பெரிய நடிகர்களைப் போட்டு இதை மறுபடியும் உருவாக்கலாம், அதற்கான உரிமையைக் கொடுங்கள்" என்ற போது இதை வர்த்தகமாக மாற்றுவதற்கு உடன்படாத ஜெயகாந்தன் அதை மறுத்திருக்கிறார். இதை விநியோகஸ்தர்களின் மூலம் வழக்கமான திரையிடலாக வெளியிட முடியாமல், தனிக்காட்சிகளாக வெளியிட்டிருக்கிறார்கள். சில திரையரங்கங்கள் வசூல் இல்லை என பொய்க்காரணம் சொல்லி இதை மாற்ற முயன்ற போது ஜெயகாந்தனே தடியுடன் காவல்காரன் போல நின்று காட்சிகளை நடத்தச் செய்திருக்கிறார் என்பது சுவாரசியமான வரலாறு.

***

எதையும் தனக்கேயுரிய முரட்டுத்தனமான, கம்பீரமான அகங்காரத்துடன் அணுகும் ஜெயகாந்தன் திரைப்பட படப்பிடிப்பில் துவக்கத்தில் அடைந்த தடுமாற்றங்களையும் வெளிப்படையாக பதிவு செய்யத் தவறவில்லை. முதல் நாள் படப்பிடிப்பில் எல்லோரும் இயக்குநரின் உத்தரவிற்காக காத்து நின்ற போது தமது உதவியாளரை இயக்கச் சொல்லி அதன் மூலம் கற்றிருக்கிறார். 'நான் ஒரு டைரக்டர் என்று என்னை மாற்றிக் கொள்வதற்கு முன்னால் யாரிடமும் உதவியாளராக இருந்ததில்லை. எனவே எனது உதவியாளர்களிடமிருந்து நான் பயின்றேன். அது குறித்து எனக்கு மகிழ்ச்சியே' என்பது ஜெயகாந்தனின் கருத்து. இத்திரைப்படத்தின் உருவாக்கத்தின் போது எடுக்கப்பட்ட ஒரு காட்சி அனுபவத்தை அதில் பணிபுரிந்த ஒளிப்பதிவாளர் பகிர்ந்து கொண்டதை எங்கோ வாசித்த நினைவிருக்கிறது.  நடிகை காந்திமதி தனது தலைமுடியை சீப்பால் வாரிக் கொண்டேயிருந்த பிறகு அந்த சீப்பு உடைய வேண்டும் என்பது காட்சி. காந்திமதி தொடர்ந்து தலைவாரிக் கொண்டேயிருக்கிறார். ஆனால் சீப்பு உடையவில்லை. 'இங்கு கட் செய்து சீப்பு உடையும் காட்சியை தனியாக ஒளிப்பதிவு செய்து இணைத்துக் கொள்ளலாம்' என்று ஒளிப்பதிவாளர் ஆலோசனை சொன்னாலும் அதை மறுத்த ஜெயகாந்தன் தொடர்ந்து அதை பதிவு செய்யச் சொல்லியிருக்கிறார்.

'யாருக்கான அழுதான்' திரைப்படத்தை இன்று பார்க்கும் போது அதிலுள்ள நேரடியான குறைகள் கண்ணில் படுகின்றன. இவற்றை ஒப்புக் கொள்வதிலும் ஜெயகாந்தனுக்கு தயக்கமேதுமில்லை. பட விநியோகஸ்தர்களின் வற்புறுத்தல்களின் படி படத்தின் நீளத்திற்காக இணைக்கப்பட்ட பாடலும் (உருவத்திலே இவன் மனிதன், உள்ளத்திலே இவன் பறவை என்கிற அந்த அற்புதமான பாடலை எழுதியவர் ஜெயகாந்தனின் நண்பர் கண்ணதாசன்) சில காட்சிகளும் தாமே அறியாமையால் செய்த குறைகளும் படத்தை நீளமாக்கி நீர்த்துப் போகச் செய்திருககிறது என்பதை அவர் உணர்ந்திருக்கிறார். இத்திரைப்படத்தில் முதலில் நடிக்க சந்திரபாபு விரும்பியிருக்கிறார். நண்பர்தான் என்றாலும் படமாக்கி கெடுத்து விடுவார் என்கிற உணர்வு காரணமாக அவருக்கு கதைக்கான உரிமையைத் தர மறுத்திருக்கிறார் ஜெயகாந்தன். பின்பு இயக்குநர் ஸ்ரீதர் இயக்கத்தில் சிவாஜி, சாவித்திரி, ரங்காராவ் போன்ற நடிகர்களுடன் உருவாக்க திட்டமிடப்பட்டது. கதை பற்றி ஜெயகாந்தனுடன் ஸ்ரீதர் விவாதிக்கும் போது திரைக்கதைக்காக அதில் தாம் செய்யும் மாற்றங்களை விவரித்து 'இறுதிக் காட்சியில் சிலுவையின் முன்பு சோசப்பு விழுந்து இறந்து போகிறான்' என்று மெலோடிராமாக நீட்டிச் செல்லும் போது ஜெயகாந்தன் அதற்கு "எனில் படத்தின் தலைப்பை 'யாருக்காகச் செத்தான்" என்று மாற்றிக் கொள்ளுங்கள்' என்று தமக்கேயுரிய சினத்துடன் சொல்லியிருக்கிறார். ஆனால் வேறு சில காரணங்களால் அத்திரைப்படம் உருவாகாமல் நின்று போயிற்று. சில பல குறைகளுடன் உருவாகியிருந்தாலும் நாகேஷ் நடிப்பில் உருவான இறுதி வடிவமானது ஒரு நல்ல முயற்சி.

ஜெயகாந்தனின் திரைப்படங்கள் வணிகரீதியாகவும் வெற்றி பெற்றிருந்தால் காட்சி ஊடகத்தின் சாத்தியங்களை மேலதிகமாகக் கற்று அவர் ஒரு சிறந்த இயக்குநராக பரிணமிக்கும் அளவிற்கு காலம் மலர்ந்திருக்கும். ஆனால் காமராஜர் குறிப்பிட்டது போல அப்போது மட்டுமல்லாமல், இப்போதும் கூட தமிழ் சூழல் ரசனை என்பது மலினமான கேளிக்கைகளின் மீதே அமைந்திருப்பதால் அது சாத்தியப்படாமல் போவது இயல்புதான். ஜெயகாந்தனைப் போன்று இன்னமும் அதிகமான எழுத்தாளர்கள் திரைத்துறைக்குள் புழங்கவும் அவர்கள் வெற்றி பெறுவதுமான சூழல் சாத்தியப்படுவது ரசனை மாற்றம் எனும் விஷயத்தின் மூலம்தான் நடைபெற முடியும்.
- அம்ருதா - மே 2015-ல் வெளியான கட்டுரை. (நன்றி: அம்ருதா)

Friday 15 May 2015

ரஜினி பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்

இன்று தமிழ் நாட்டை மட்டுமல்லாமல் உலகத்தில் உள்ள பல மக்களை தன் காந்த சக்தியால் கட்டி போட்டு வைத்திருக்கும் அந்த மந்திரச் சொல் தான் "ரஜினி".  அவரைப் பற்றி சில தகவல்க உங்களுக்கு




1.ஜீஜாபாய் மற்றும் ராமோஜி ராவ் கெய்க்வாட் என்ற மஹாராஷ்ரிய தம்பதிகளுக்கு பிறந்த நான்காவது கடைக்குட்டி தான் 'சிவாஜி ராவ் கெய்க்வாட்' என்ற  'சூப்பர் ஸ்டார்'.

2.தன்னுடைய இளமை பருவத்தில் பல வேலைகளை செய்து வந்தார்.  கூலியாகவும். பேருந்தில் நடத்துனராகவும் பணியாற்றியுள்ளார். தன்னுடைய நண்பர் ராஜ் பகதூரின் தூண்டுதல் மற்றும் ஆதரவினால் தான் சென்னைக்கு நடிக்க வந்தார் ரஜினி.

 3.எதிர்மறையான பாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்தவர், மெல்ல குணச்சித்திர பாத்திரங்களில் நடித்தார். பின் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கினார். பைரவி நேர படத்தில் நடிக்கும் போது அதன் தயாரிப்பாளர் தானுவால் அவருக்கு வைக்கப்பட்ட பட்டமே சூப்பர் ஸ்டார்.

4.தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, பெங்காலி, ஆங்கிலம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார். "ப்ளட் ஸ்டோன்" என்று இவர் நடித்த ஆங்கில படம் 1988 ஆம் ஆண்டு வெளிவந்தது.

5.கமல் ஹாசனுடன் சேர்ந்து 18 படங்கள் சேர்ந்து நடித்துள்ளார். அவைகளில் 16 படங்கள் 1975-1979 வரை வெளிவந்தவை.

 6.ரஜினியை அறிமுகப்படுத்தியது பாலச்சந்தர் என்றாலும் கூட அவரை அதிகப்படங்களில் இயக்கியது எஸ்.பி.முத்துராமனே. ரஜினியை வைத்து அவர் இது வரை 25 படங்களை இயக்கியுள்ளார்.

7.ரஜினி, அமிதாப் பச்சனின் பல ஹிந்தி படங்களை ரீ-மேக் செய்து நடித்துள்ளார். பில்லா, தீ, படிக்காததவன், மிஸ்டர் பாரத், வேலைக்காரன், பாட்ஷா போன்ற படங்கள் இதில் அடங்கும்.

8.அவர் வள்ளி மற்றும் பாபா என இரு படங்களுக்கு கதை எழுதியுள்ளார். மேலும் மன்னன் மற்றும் கோச்சடையான் படங்களுக்காக தன் சொந்த குரலில் பாடலும் பாடியிருக்கிறார்.

9.அவருடைய ஒவ்வொரு படம் வெளிவந்த பின்பும் ஓய்வுக்காக இமயமலைக்கு செல்வது அவரின் பழக்கமாகும்.

10.ஸ்ரீ ராகவேந்திரர் அவருடைய நூறாவது படமாகும். படையப்பா அவருடைய நூற்றி ஐம்பதாவது படமாகும்.

11.அவர் நடித்த படங்களிலேயே அவருக்கு பிடித்த படம் 'முள்ளும் மலரும்'. அதை பார்த்து அவருடைய குருநாதர் திரு பாலசந்தர் அளித்த பாராட்டு கடிதத்தை இன்னமும் பத்திரமாக வைத்துள்ளார்.

12.ராக்கி பண்டிகையின் போது பௌர்ணமியன்று பாலச்சந்தரால் தான் சிவாஜி ராவ் என்ற நம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தாக மாறினார்.

13.ஆசியாவில் ஜாக்கி சானுக்கு அடுத்து அதிகப்படியாக சம்பளம் வாங்குபவர் நம் சூப்பர் ஸ்டாரே.

14.ஷூட்டிங்கின் இடைவேளையில் கேரவன் வண்டிக்குள் சென்று ஓய்வு எடுக்கும் பழக்கம் இல்லாதவர் ரஜினி. ஷூட்டிங் முடியும் வரை செட்டில் தான் இருப்பார். ஓய்வு எடுக்க வேண்டும் என்றால் செட்டிலேயே தலையில் ஒரு துண்டை போட்டு மூடி சற்று கண் அயர்வார்.

15.நீண்ட காலம் வரை பியட் மற்றும் அம்பாசடர் காரை மட்டுமே பயன்படுத்தி வந்தார். இப்போதும் கூட ஆடம்பர கார்களை பயன்படுத்தாத மிகவும் எளிய மனிதர்.

16.ஆன்மீகத்தில் அதிக நாட்டமுடையவர். ராகவேந்திரரின் பக்தரான இவர் பாபாஜியை வணங்குபவர். ஓய்வுக்கு இமையமலை செல்லும் இவர், அங்கே அனைவராலும் நுழைந்து விட முடியாத புகழ் பெற்ற பாபாஜி குகையில் தியானத்தில் ஈடுபடுவதுண்டு.

17.ஆன்மீகத்திற்கு அடுத்து அவர் அதிகமாக விரும்புவது சாதாரண மனிதனாக ஊர் சுற்றுவது. அவரை நகரின் சில பகுதியில் மாறு வேடத்தில் காண நேரிடலாம்.

18.தன்னுடைய ப்ரைவசியை தொலைத்து விட்டதால் சில நேரங்களில் சிறையில் அடைபட்ட கைதியை போல் உணர்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

19.தனக்கு மகளாகவும் ஜோடியாகவும் நடித்த ஒரே நடிகை மீனா மட்டுமே.

20.ரஜினியுடன் அதிகமாக ஜோடி சேர்ந்த நடிகை ஸ்ரீ ப்ரியா. 21. 2000-ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டாருக்கு பத்ம பூஷன் விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டார்.

21.இவர் முதன் முதலில் தயாரிப்பில் ஈடுபட்ட படம் மாவீரன். இதுவும் கூட அமிதாப் பச்சன் நடித்த ஹிந்தி படத்தின் ரீ-மேக்.

22.தன் படத்தினால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்துள்ளார் சூப்பர் ஸ்டார். அப்படி அவர் செய்தது பாபா மற்றும் குசேலன் ஆகிய படங்களுக்கு.

23.ரஜினிக்கு கருப்பு நிற உடைகளின் மீது ஆர்வம் அதிகம். ஆனால் சமீப காலமாக வெண்ணிற வேஷ்டி சட்டை மற்றும் காவி வேஷ்டியை அதிகமாக அணிகிறார்.

24.ஆன்மீகத்தில் தனக்கிருக்கும் ஈடுபாட்டை பற்றி அவர் இப்படி கூறியுள்ளார் - 'நான் ஆன்மிகவாதிதான். ஆனால், ஒரு கன்னத்தில் அறைந்தால், இன்னொரு கன்னத்தைக் காட்டும் அளவுக்கு ஆன்மிகத்தில் இன்னும் உயரவில்லை. அந்த மாதிரியான ஆன்மிகவாதியாக ஆவதற்கு எனக்கு விருப்பமும் இல்லை!'