Monday 10 June 2019

கிரிஷ் கர்னாட்: ஓய்ந்தது இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும், மொழி உரிமைக்கும் ஒலித்த குரல்

நாடக ஆசிரியர், நடிகர், இயக்குனர்,இலக்கியவாதி, தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் என பல முகங்கள் கொண்ட கிரிஷ் கர்னாட், தனது 81 வது வயதில் இன்று காலமானார். தமிழ் திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரமாக வலம் வந்த இவர், வில்லன் நடிகர் என்ற வட்டத்திற்குள் சுருக்கிவிடக் கூடியவர் அல்ல, இந்திய சினிமா உலகில் ஒரு குறிப்பிடத் தகுந்த இடத்தைப் பெற்றவர்.




பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன் போன்ற அரசு விருதுகளையும், பிலிம் பேர் போன்ற திரைத்துறைகள் சார்ந்து பல விருதுகளும் பெற்றவர். இதிகாச, வரலாற்று கதைகளை நவீன சிக்கல்களோடு தொடர்புபடுத்தி நிறைய நாடகங்களை எழுதியவர். இந்திய இலக்கிய உலகில் மிகப்பெரிய அங்கீகாரமாக கருதப்படும் ஞான பீட விருதினை பெற்ற எழுத்தாளர்.
 
மஹாராஷ்டிராவில் உள்ள மாதேரன் என்னும் மலைப்பிரதேசத்தில் பிறந்தவர். பள்ளிப்பருவம் வரை மராட்டிய மாநிலத்தில் படித்த கிரிஷ் பின்பு கர்நாடகாவிற்கு வந்தவர். கர்நாடக பல்கலைக்கழகத்தில் கணிதம் மற்றும் புள்ளியலில் இளங்கலைப்பட்டமும் , ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் தத்துவப்படிப்பில் முதுகலைப்பட்டமும் பெற்றார்.
 
1963ம் ஆண்டில் ஆக்ஸ் போர்ட் யூனியனின் தலைவராக இருந்தார். ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழக பதிப்பகத்தில் எழுத்தாளராகவும் இருந்தார். கர்நாடகாவிற்கு வந்த பிறகு நாடக குழுக்களோடு இணைந்து செயல்பட ஆரம்பித்த இவர், கன்னட மொழியில் பல நாடகங்களை எழுதியுள்ளார். 1961ல் தனது 23வது வயதில் யயாதி என்னும் நாடகத்தினை எழுதி வெளியிட்டார். இவரது திப்பு சுல்தான் கதை இன்று வரை புகழ் பெற்றதாய் இருக்கிறது. இவரது எழுத்துக்கள் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.



 
1970 ல் , சம்ஸ்காரா என்னும் கன்னட சினிமாவில் தொடங்கியது இவரது திரைப்பயணம், அப்படத்தின் திரைக்கதை ஆசிரியராகவும் இருந்தார் கிரிஷ் கர்னாட். திரைப்படம் குடியரசுத்தலைவரின் தங்கத் தாமரை விருதினை பெற்றது. அதன் பிறகு பல தென்னிந்திய மொழிகளிலும், இந்தி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தமிழில், ரட்சகன், நான் அடிமை இல்லை, காதலன், மின்சாரக் கனவு மற்றும் சில படங்களில் நடித்துள்ளார்.
 
இந்தியில் 2012ல் வெளியான ஏக்தா டைகர் திரைப்படத்தில் டாகட்ர் செனாய் என்னும் பெயரில் தலைமை உளவுத் துறை அதிகாரியாக நடித்து இருந்தார், அப்படத்தின் இரண்டாம் பாகமான டைகர் ஜிந்தா ஹை 2017ல் வெளியானது. அதிலும் டாக்டர் செனாய் ஆக நடித்துள்ளார் கிரிஷ் கர்னாட், இதுவே இவரது கடைசித் திரைப்படம் ஆனது.
 
கிரிஷ் கர்னாட், ஒற்றை தேசக் கொள்கைகளுக்கு எதிரானவர். இந்துத்துவா அமைப்புகளையும் , செயல்பாடுகளையும் தொடர்ந்து விமர்சித்து வந்தவர். இந்தியா என்பது பல வேறு பண்பாடுகளையும், பல மொழி பேசும் மக்களையும் கொண்டது, அந்த பன்முகதன்மையினையும், மொழிகளையும் இழக்க முடியாது என்ற கருத்தினை வலியுறுத்தி வந்தார். எழுத்தாளர் கல்புர்கி கொலையினை தொடர்ந்து , கருத்துரிமைக்காக தொடர்ந்து குரல் வந்தார். கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட பொழுது, இவரும் வலதுசாரி அமைப்புகளால் குறிவைக்கப்பட்டிருந்தார் என்று கூறப்பட்டது.
 
வலது சாரி இந்துத்துவ அமைப்புகள், இந்துத்துவாவிற்கு எதிராக செயல்படுகின்ற எழுத்தாளர்களை குறிவைத்துள்ளதாகவும், அதில் முக்கியமாக இடம் பெற்றுள்ள நபர் கிரிஷ் கர்னாட் எனவும் செய்திகள் வெளியாயின. ஆனால், அச்சுறுத்தல்களுக்கு நான் பயப்பட மாட்டேன் என்று கூறும் விதமாக , கௌரி லங்கேஷின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி கூட்டத்திற்கு 'Me Too Urban Naxal' என்று பொறிக்கப்பட்ட அட்டையினை கழுத்தில் அணிந்து கலந்து கொண்டார்.
 
கிரிஷ் கர்னாட் வாழ்ந்த சிர்ஸியில் வசிக்கும், செயல்பாட்டாளர் பாண்டு ரங்கே ஹெக்டே , கிரிஷ் கர்னாட்டின் எழுத்துக்கள் குறித்து பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார். கிரிஷ் கர்னாட் , எப்பொழுதும் தனது எழுத்துப் பயணத்தின் அடித்தளம் அமைந்த இடம் இதுதான் என்று சிர்ஸியினை பற்றி கூறுவார். இங்குள்ள வட்டார நாடக குழுக்களின் மூலமாகவே அவரது நாடக பயணங்கள் வலுவடைந்தது. அவரது எழுத்துக்கள் புதிய சிந்தனைகளை வெளிப்படுத்தும் விதமாக அமைந்து இருக்கும், வரலாற்று புதினங்கள், நாட்டார் வழக்குகளில் உள்ள கதாபாத்திரங்களை எடுத்து , நவீன சூழல்களில் பொருத்தி ஆழமான கருத்துக்களை எளிய வடிவில் , மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் வல்லவர். அவரது எழுத்துக்கள் மிக எளிமையானவை, எளிய மனிதர்கள் பயன்படுத்தும் மொழியினையே அதிகம் பயன்படுத்துவார்.பிராந்திய மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதில் வலிமையான கருத்துடையவர் கிரிஷ் கர்னாட் . அவர், மிக சிறப்பான ஆங்கிலப்புலமையுடையவர் எனினும் , பெரும்பான்மை படைப்புகள் கன்னடத்தில் தான் இருக்கும். மராத்தி சமேதானத்திலும் தலைவராக இருந்துள்ளார்.
 
பண்பாட்டு பன்முகத்தன்மையும் , பன்மொழிதன்மையும் தான் இந்தியாவின் அடித்தளமாய் இருக்க வேண்டும் என்று கிரிஷ் கர்னாட் அடிக்கடி கூறுவார் என்கிறார் பாண்டு ரங்கே ஹெக்டே.
 
கிரிஷ் கர்னாட்டின் மறைவிற்கு கர்னாடக அரசு ஒரு நாள் விடுமுறையும், மூன்று நாள்கள் அரசுமுறைத் துக்கமும் அறிவித்துள்ளது.

வெறும் மோகன் ‘கிரேஸி’ மோகன் ஆனது எப்படித் தெரியுமா?

தமிழ்த் திரையுலகில் கதை-வசன கர்த்தாவாகவும், நடிகராகவும் முத்திரை பதித்த கிரேஸி மோகன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 67.
நாடக ஆசிரியரான இவர் பல மேடை நாடகங்களை இயக்கி நடித்துள்ளார். மெக்கானிக் எஞ்சினியரிங் படித்தவர். ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தபோதே, நடுநடுவே நாடகங்களை போடுவார்.
அப்படி இவரது நாடகத்தை பார்க்க வந்த, இயக்குனர் சிகரம் பாலசந்தர் பாராட்டி தள்ளி விட்டார். அதுதான் சினிமாவுக்குள் கிரேஸியை உள்ளே புகுத்தியது. பொய்க்கால் குதிரை படம் மூலம் சினிமா பயணம் தொடங்கியது.


மோகன் ரங்காச்சாரி எனும் இயற்பெயரைக் கொண்டவர், கிரேஸி மோகனாக மாறிய கதை மிகவும் சுவாரஸ்யமானது.
பொய்க்கால் குதிரையில் ஆரம்பித்து, இன்று வரை தமிழ் சினிமாவின் சிரிப்பு மருந்தாக திகழ்ந்தவர் கிரேஸி மோகன். நாடகங்கள், சினிமாக்கள், தொலைக்காட்சி என எல்லாவற்றிலும் சிரிப்பு ராஜ்ஜியம் நடத்தியவர் இவர்.
மோகன் ரங்காச்சாரி என்பது தான் கிரேஸி மோகனின் இயற்பெயர். மெக்கானிக் எஞ்சீனியரிங் படித்த மோகன், எழுத்துறைக்கு வந்த கதைச் சுவாரஸ்யமானது. வெறும் மோகனாக இருந்த அவரது பெயருக்கு முன்னால் கிரேஸி என்ற பெயர் ஒட்டிக் கொள்ள காரணமாக இருந்தது ஒரு நாடகம் தான்.


கல்லூரிக் காலங்களில் ஸ்கிட் எனப்படும் குட்டி குட்டி நாடகங்களைப் போட்டு வந்தவர் மோகன். படித்து முடித்ததும், நல்ல வேலை கிடைத்தது. ஆனால், எழுத்தின் மீது இருந்த தீராக்காதலால் நாடகம் போடும் முயற்சியில் ஈடுபட்டார்.
எஸ்.வி.சேகர் இவருக்கு பள்ளியில் சீனியர். அந்த நட்பில் அவரிடம் வாய்ப்பு கேட்டுள்ளார். அப்படித்தான் அவரது முதல் நாடகமான கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம் மேடையேறியது. பயங்கர ஹிட்டான அந்த நாடகத்தின் பிரபல வசனங்கள் வார இதழில் தொடராக வந்து மக்கள் மத்தியில் இன்னும் பிரபலமானது.
இதுவரை சுமார் 1000க்கும் மேற்பட்ட முறை கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம் அரங்கேற்றம் ஆகியுள்ளது. அந்த நாடகத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தான் சினிமாவுக்குச் சென்றார் மோகன். ஆனால், சினிமாவில் வசனம் எழுதிய போதும், தொடர்ந்து நாடகங்கள் நடத்துவதிலும் ஆர்வம் காட்டி வந்தார்.



முதல் வெற்றி எப்போதும் பெயரோடு ஒட்டிக் கொள்வது வழக்கம் தானே. அப்படித்தான் சி.மோகன், கிரேஸி மோகன் ஆனார். அந்த நாடகத்திற்குப் பிறகு அவர் எவ்வளவோ நாடகங்கள் எழுதியபோதும், கிரேஸி மட்டும் அவரது பெயரோடே சிரிப்பு பசையால் ஒட்டிக் கொண்டது. கிரேஸி என்பது அவரது அடையாளமாகவே மாறிப் போனது. பலருக்கும் அவரது மோகன் என்ற பெயரைவிட கிரேஸி என்பது தான் மனதில் பதிந்து போயுள்ளது.
"டேக் திங்ஸ் ஈஸி... லைஃப் இஸ் கிரேஸி.." இதுதான் கிரேஸி மோகனின் தாரக மந்திரம். அது அவரது பேச்சு, எழுத்து எல்லாவற்றிலும் பிரதிபலிக்கும். படங்களில் காமெடி இருக்கும். ஆனால் காமெடியையே ஒரு முழு படமாக எழுதும் திறமை கிரேஸிக்கு மட்டுமே உண்டு. இதனை மிக சரியாக பயன்படுத்தி கொண்டவர் கமல்ஹாசன்தான்!


இதற்கு அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், பஞ்ச தந்திரம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு கதை-வசன கர்த்தாவாக பணியாற்றியதே சாட்சி!

லட்சக்கணக்கானோர் மனதுக்கு பிடித்தமான கிரேஸி மோகன் அற்புதமான மனிதர் மட்டுமல்ல.. காயம்பட்ட இதயத்துக்கு மருந்தானவரும்கூட. ரொம்ப வேகமாக வேகமாக பேசுவார்.. எப்பவுமே இவரது பேச்சில் ஒரு ஸ்பிரிட் இருக்கும். வெத்திலை - பாக்கு - சீவல்தான் இவரது ட்ரேட் மார்க்!

ஒரு காமெடியை பார்த்து சிரித்து முடிப்பதற்கு முன்பேயே இன்னொரு காமெடி வந்து நம்மை திக்குமுக்காட செய்வதுதான் கிரேஸியின் டச் & பஞ்ச்! கடந்த சில வருடங்களாக இவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக சொல்லப்பட்டது. எனினும் எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கு கொள்ளாமல் இருந்தார்.



இந்நிலையில், தீவிர கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டதால், உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் கவலைக்கிடமான நிலையில் அவர் உள்ளதாகவும் தகவல்கள் பரவின. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரபலங்களும், பொதுமக்களும் கிரேஸி மோகன் உடல்நலம் பெற்று வர வேண்டும் என்று இணையத்தில் ட்வீட்கள், கமெண்ட்கள் போட்டு பிரார்த்தனை செய்து வந்தனர். எனினும், தீவிர சிகிச்சை அளித்தும் அது பலனின்றி கிரேஸி மோகன் காலமானார். இந்த தகவலை கேட்டதும், சினிமா, நாடக உலகமே பெரும் சோகம் அதிர்ச்சியில் ஆழ்ந்து உள்ளது.



Saturday 25 May 2019

பேட்டி கிடையாது; பார்ட்டி கிடையாது. கவுண்டமணி அந்தக் காலத்து அஜித்!

100 ஆண்டுகால வரலாற்றைக் கொண்டுள்ள தமிழ் சினிமாவைக் கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு காலம், தன்னுடைய நக்கல் பேச்சுகளாலும், நய்யாண்டித்தன நகைச்சுவையாலும் ஆட்சி செய்தவர், நடிகர் கவுண்டமணி.  வயது பேதமில்லாமல், எல்லோராலும் கொண்டாடப்பட்ட வெகுசில கலைஞர்களில் ஓர் அதிசயக் கலைஞர் அவர். இன்று 80-வது பிறந்தநாளைக் கொண்டாடும் கவுண்டமணி பற்றிய சில தகவல்கள் இவை.
இளம் வயதிலேயே நாடகங்கள், திரைப்படங்களில் தலைகாட்டியிருந்தாலும், கிட்டத்தட்ட நடுத்தர வயதை எட்டும்போதுதான் கவுண்டமணிக்கு சரியான வாய்ப்புகள் வரத்தொடங்கின. நாகேஷ் நடித்த `சர்வர் சுந்தரம்' படத்தில் அறிமுகமாகியிருந்தாலும், எம்.ஜி.ஆர் நடித்த `கண்ணன் என் காதலன்’ படத்தின் மூலம்தான் திரையில் `நட ஸ்டேஷனுக்கு!' என்ற தனது முதல் வசனத்தைப் பதிவு செய்தார், கவுண்டமணி. கமல்ஹாசன், ரஜினிகாந்த் என தமிழ் சினிமாவின் இருபெரும் துருவங்களைப் புகழ் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்த '16 வயதினிலே' படம்தான் கவுண்டமணியையும் தமிழ் உலகுக்கு அடையாளம் காட்டியது. அதில், அவர் பேசிய 'பத்த வெச்சிட்டியே பரட்ட' வசனம் கொண்டாடப்பட்டது. பிறகுதான், கவுண்டமணிக்காகவே தனியாக காமெடி டிராக்ஸ் உருவாக்கப்பட்டது.



கவுண்டமணியோடு இணைந்து நடிக்கும் கதாநாயகர்களெல்லாம் தவறாது சொல்லும் ஒரு விஷயம், கவுண்டமணியின் டைமிங் சென்ஸ். காட்சியைப் படமாக்கிக்கொண்டிருக்கும்போது கவுண்டமணியின் டைமிங் சென்ஸ் அந்தளவிற்குக் கச்சிதமாக இருக்குமாம். அதேசமயத்தில், எப்பேர்ப்பட்ட கதாநாயகர்களுக்கும் கவுண்டமணியுடன் நடிப்பதென்றால் சற்று பயம்தான்.  காரணம், காட்சி படமாகிக் கொண்டிருக்கும்போதே கவுண்டமணி  ஏதாவது கவுன்டர் அடித்துவிட, கதாநாயகர்களும் அடக்க முடியாமல் சிரித்து விழ, அந்த ஷாட் மீண்டும் மீண்டும் எடுக்கவேண்டிய சூழல் ஏற்பட்டுவிடுமாம். கூடவே, கவுண்டமணி என்னதான் வயதில் மூத்தவராக இருந்தாலும், எல்லா இளம் கதாநாயகர்களுக்கும் ஈடுகொடுத்து நடிக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். ஒருவகையில் பார்த்தால், அதுதான் கவுண்டமணியின் வெற்றி.




பலருடன் நடித்திருந்தாலும், சத்யராஜூடன் கூட்டணி சேரும்போது மட்டும் கவுண்டமணியின் `லொள்ளு' கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும். இந்தக் கூட்டணி முதன்முறையாக இணைந்து நடித்த `வேலை கிடச்சிடுச்சு' முதல் `பொள்ளாச்சி மாப்பிள்ளை' வரை சினிமாவில் இவர்கள் இருவரும் அடித்த லூட்டிகளுக்கு அளவில்லை. 

ஒரு படத்தில் ஒப்பந்தமாகிவிட்டால், படப்பிடிப்பிலிருந்து டப்பிங் வரை... சொன்ன தேதியில் சொன்ன நேரத்தில் வந்துவிடுவாராம், கவுண்டமணி. சில நேரங்களில், துணை இயக்குநர்களை அழைத்துக்கொண்டு டப்பிங் பேசிவிட்டு வந்துவிட, அதன் பிறகுதான் படத்தின் இயக்குநருக்கே கவுண்டமணி டப்பிங் பேசிய விஷயம் தெரியவருமாம். அந்தளவிற்கு, தனது வேலைகளைச் சிரமெடுத்து முடிப்பார்.




ஆரம்ப காலங்களில் தனியாகவே நகைச்சுவை செய்து கொண்டிருந்த இவர், பின்னாள்களில் செந்திலுடன் இணைந்து பட்டையைக் கிளப்பினார். 80, 90-களிலிருந்து, இன்றுவரை... கவுண்டமணி - செந்தில் கூட்டணி தமிழ் சினிமாவின்  பொக்கிஷக் கூட்டணியாக இருக்கிறது. கதாநாயகர்களைத் தாண்டி, இவர்களது கூட்டணி மிகப்பெரிய வியாபார வாய்ப்பாகப் பார்க்கப்பட்ட காலமும் இருக்கிறது. 80-களிலிருந்து, 90-களின் இறுதிவரை பல படங்களின் பெயர்கள், தற்போதைய இளவட்டத்தின் நினைவுகளில் தேங்கியிருக்கிறதென்றால், அதற்குக் காரணம் இந்தக் கூட்டணிதான். நல்லவேளையாக, கமல் - ரஜினி எடுத்த முடிவுபோல `பிரிந்து நடிப்போம்' என்ற முடிவை இந்தக் கூட்டணி எடுக்கவில்லை.

செந்திலை அடித்து, உதைத்து, திட்டித்தான் கவுண்டமணி பிரபலமானார்  என்ற விமர்சனம் இன்றுவரை இருக்கிறது. உண்மையில், அவர் செந்தில் மீது ஆதிக்கம் செலுத்துபவராக இருந்ததால்தான், மக்களுக்கு அவரை அதிகம் பிடித்துப்போனது. இவர்களது காலத்தில் புகழ்பெற்ற நடிகர்களாக இருந்தவர்களையெல்லாம், அடுத்த தலைமுறை மறந்துவிட்டது அல்லது கேலிக்கு உள்ளாக்கி வருகிறது. ஆனால், கவுண்டமணியை மட்டுமே `நக்கல் மன்னன்’ என்ற அடைமொழியுடன் போற்றிக்கொண்டிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், செந்தில் இல்லாமல் `மேட்டுக்குடி', `மன்னன்' போன்ற பல திரைப்படங்களில் தனியாக நடித்து தன்னை நிரூபித்தும் காட்டியிருக்கிறார், கவுண்டமணி.




செந்திலை அடித்து, உதைத்து, திட்டித்தான் கவுண்டமணி பிரபலமானார்  என்ற விமர்சனம் இன்றுவரை இருக்கிறது. உண்மையில், அவர் செந்தில் மீது ஆதிக்கம் செலுத்துபவராக இருந்ததால்தான், மக்களுக்கு அவரை அதிகம் பிடித்துப்போனது. இவர்களது காலத்தில் புகழ்பெற்ற நடிகர்களாக இருந்தவர்களையெல்லாம், அடுத்த தலைமுறை மறந்துவிட்டது அல்லது கேலிக்கு உள்ளாக்கி வருகிறது. ஆனால், கவுண்டமணியை மட்டுமே `நக்கல் மன்னன்’ என்ற அடைமொழியுடன் போற்றிக்கொண்டிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், செந்தில் இல்லாமல் `மேட்டுக்குடி', `மன்னன்' போன்ற பல திரைப்படங்களில் தனியாக நடித்து தன்னை நிரூபித்தும் காட்டியிருக்கிறார், கவுண்டமணி.

செந்திலை அடித்து உதைத்து நடித்துக்கொண்டிருந்த அதே காலத்தில்தான், தான் ஏமாறும்படியான வேடத்திலும் மனமுவந்து நடித்தார். அதற்கு சிறந்த உதாரணம், `சேதுபதி ஐ.பி.எஸ்' திரைப்படம். நம்பியாரிடம் எடுத்தெறிந்து பேசிவிட்டு, செந்திலிடம் சென்று வேலை பற்றிக் கேட்க, அவர் வேலை பற்றிச் சொல்ல, கவுண்டமணி அடையும் ஏமாற்றம் அதகள சிரிப்பு.  

நகைச்சுவை மட்டுமல்ல, சில படங்களில் 'பகீர்' கிளப்பும் வில்லனாகவும் வருவார். திடீரென குணச்சித்திர கதாபாத்திரமாக மனதில் நிற்பார். தமிழ் சினிமாவின் ஹிட் படங்களையெல்லாம் ஆராய்ச்சி செய்து வடிகட்டிப் பார்த்தால், அதில் பல படங்களின் வெற்றிக்கும், அள்ளிய வசூலுக்கும் காரணமாக தன் பெயரைப் பதிந்து வைத்திருப்பார், அவர். 

கவுண்டமணி ஒரு வித்தியாசமான மனிதரும்கூட!. பெரும்பாலும் எந்தப் படத்திற்காகவும், எந்த நிகழ்ச்சிக்காகவும் தொலைக்காட்சிகளின் பக்கம் தலைகாட்டியதில்லை. ஆனால், இன்றைக்கு இருக்கின்ற எல்லாத்  தொலைக்காட்சிகளிலும் கவுண்டமணியின் நகைச்சுவைக் காட்சிகள் இடம்பெறாத நாள்களே இல்லை. அந்தளவிற்குப் பலதரப்பட்ட மக்களையும் வாய்விட்டுச் சிரிக்க வைத்துக்கொண்டிருக்கிறார், இந்த நகைச்சுவை வள்ளல். முதல் மகளின் திருமணத்தின்போதுதான், இவருக்கு கல்யாண வயதில் பெண் இருக்கும் விவரமே வெளியுலகத்துக்குத்  தெரியவந்தது. அந்தளவுக்கு மீடியாவை விட்டு விலகியே இருக்கிறார். அதேபோல, விழாக்கள், பார்ட்டிகள் என எதிலும் கலந்துகொள்ளும் வழக்கமும் இவருக்குக் கிடையாது. இந்த விஷயத்தைக் குறிப்பிட்டு, `இவர் அந்தக் காலத்து அஜித்குமார்' என ஒரு நிகழ்ச்சியில் கவுண்டமணியை வைத்தே கலாய்த்தார், சந்தானம். 

`தமிழ்ப் படங்கள் தவிர்த்து வேறு எந்த மொழிப் படங்களிலும் நடிக்கமாட்டேன்' என்று சொன்னதோடு, அதை நிகழ்த்தியும் காட்டியவர், கவுண்டமணி. `கிழக்கே போகும் ரயில்' படத்தில் தனக்குக் கொடுக்கப்பட்ட வசனத்தோடு, எக்ஸ்ட்ரா இரண்டு வசனங்கள் சேர்த்துப் பேசிவிட, இயக்குநர் பாரதிராஜாவிடம் கன்னத்தில் அடிவாங்கினார், கவுண்டமணி. அப்படியே காலங்கள் சுழல பின்னாளில், ஒரு நாளைக்குப் பல லட்சங்கள் கொடுக்கத் தயாராக இருந்தும், கவுண்டமணியின் கால்ஷீட் கிடைக்காமல் பல முண்ணனி இயக்குநர்கள் தவம் கிடக்கும் நிலையைத் தனது உழைப்பின் மூலம் உருவாக்கினார் இவர். 

இவர் நடிக்க வந்த புதிதில் ஷூட்டிங் முடிந்தவுடன் பெரிய நடிகர்களை நல்ல காரில் அனுப்பி வைப்பார்களாம். கவுண்டமணி போன்ற துணை நடிகர்களைக் கூட்டத்தோடு கூட்டமாக ஒரு வண்டியில் ஏற்றிவிடுவார்களாம். ஒருநாள் நேரம் கூடிக்கொண்டேபோக, துணை நடிகர்கள் செல்லும் வண்டி கிளம்பவில்லை. உடனே, நடக்க ஆரம்பித்துவிட்டார் கவுண்டமணி. இதைப் பார்த்த ரஜினி, காரிலிருந்து இறங்கி இவருடன் நடந்து, 'ஒரு நாள் பாருங்க.. நீங்க வாரத்திற்கு ஏழு விதமான காரில் படப்பிடிப்பிற்கு வருவீங்க' என்றாராம், ரஜினி. அவர் சொன்னது அப்படியே நடந்தது. 

கவுண்டமணியின் சிறப்பம்சம், அவரது தனித்துவம்தான். அவரிடம், எந்த நடிகரின் சாயலும் இல்லை. எவரையும் முன்மாதிரியாகக் கொண்டு நடிக்கவில்லை. சினிமாவுக்காக தனது நகைச்சுவை நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும், அவர் மனிதர்களின் யதார்த்தத்தை உணர்த்தும் வகையில் நடிக்கத் தவறவில்லை. அவர் பேசும் வசனங்கள் மற்றவர்களை ஏளனமாகப் பேசுவதாக இருந்தாலும், உண்மையை உணர்த்துவதாக இருந்தது. அதனால்தான் ரசிகர்கள் இவரது நகைச்சுவைகளைப் பெரிதும் ரசித்தனர்; வரவேற்றனர்.  

இவர் நகைச்சுவை நடிகர் மட்டும்தானா... கிடையவே கிடையாது. `சின்னக்கவுண்டர்' படத்தில் விஜயகாந்த் மீது பழிசொல்லும் ஊரார்கள் துணியை இனி துவைக்க மாட்டேன் என்று சொல்லும் அந்தக் காட்சியில், கதைக்குள் பயணிக்கும் பாத்திரமாக மாறி நெஞ்சங்களை நெகிழச் செய்தார். 

வாட்ஸ் அப் ஃபார்வேர்டுகளிலும், ஊடங்களிலும் கவுண்டமணி இறந்துவிட்டதாகச் செய்திகள் வரும்போது, `ஏன்டா, ஒரு மனுஷன எத்தனவாட்டிடா சாகடிப்பீங்க?’ என அதையும் நகைச்சுவையாகவே எடுத்துக்கொண்டார். ஒருமுறை படப்பிடிப்புக்காக வெளியூரில் இருந்த சிவாஜி, `மனசு சரியில்ல, யாராவது கவுண்டமணியின் நகைச்சுவை கேஸட்டை வாங்கி வாங்கப்பா' எனச் சொன்னதைக் கேட்டு, கலங்கிவிட்டாராம்.  

ட்விட்டரில் முன்னனி நடிகர்களின் பிறந்தநாளின்போது மட்டும்தான் ரசிகர்கள் வாழ்த்துகளை அள்ளிக்குவித்து டிரெண்ட் ஆக்குவார்கள். முதல்முறையாக நகைச்சுவை நடிகர் ஒருவரின் பெயர் இந்திய அளவில் டிரெண்ட் ஆனது, கவுண்டமணிக்குத்தான்!. தற்போது சினிமாவில்  நடிக்காவிட்டாலும், இன்று மீம்ஸ்களின் நாயகனாக வலம் வருகிறார், கவுண்டமணி. இணையதளத்தில் நுழைந்தால் இவரது படத்தையும், வசனத்தையும் வைத்து வராத மீம்ஸ்களே இல்லை. இப்பொழுது புகழ் வெளிச்சத்திலிருந்து ஒதுங்கியிருந்தாலும், ரசிகர்கள் இவரை தினம்தினம் கொண்டாடித் தீர்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஏனெனில், ரசிகர்கள் மனதில் கவுண்டமணி என்றைக்குமே கதாநாயகன்தான்!

Thursday 2 May 2019

’தன்னைத் தானே செதுக்கியவன்’ – அஜித்

சிலரின் வாழ்க்கையைத் திரும்பி பார்த்தால் அவர்கள் இருக்கும் இடத்தை அடைய அவர்கள் மிகத் தெளிவாகத் திட்டமிட்டு அதற்காக கடினமாக உழைத்து இப்போது இருக்கும் இடத்தை அடைந்திருப்பார்கள். ஆனால் சிலரின் வாழ்க்கை எதிர்பாராத சில விபத்துகளால் தடம்புரண்டு அவர்கள் நினைக்காத ஏதோ ஒரு இடத்தின் உச்சத்தில் அவர்களைக் கொண்டுவந்து வைத்திருக்கும்.



நடிகர் அஜித் இதில் இரண்டாவது ரகம். சினிமாவில் நடிக்கவேண்டும் என்பது அவரது ஆசை அல்ல. ரேஸ்களில் கலந்துகொள்வதற்கும் தனக்குப் பிடித்த பைக்குகள் மற்றும் கார்கள் போன்றவற்றை வாங்குவதற்கும் தேவையானப் பணத்திற்காக மாடலிங் துறையில் பணியாற்றிக்கொண்டிருந்த அவருக்கு எதிர்பாராமல் பிரேம புஸ்தகம் எனும் தெலுங்கு சினிமாவில் வாய்ப்புக் கிடைக்கிறது. அதையடுத்து உடனடியாக தமிழில் அமராவதி வாய்ப்புக் கிடைக்கிறது.


அப்போதெல்லாம் சினிமாவில் நாம் தொடர்ந்து நடிக்கப்போகிறோம் என அஜித்துக்கு துளியும் நம்பிக்கையில்லை. படவாய்ப்புகள் கிடைக்கும் வரை சம்பாதித்துவிட்டு தனக்குப் பிடித்த பைக் ரேஸ் துறையில் ஈடுபடவேண்டும் என்பதே அவரது ஆசை. 



அதெல்லாம் ஆசை, காதல் கோட்டை, காதல் மன்னன் போன்ற படங்கள் வெளியாகும் வரைதான். அந்தப் படங்களின் வெற்றி ரசிகர்கள் மனதில் அழியாத இடத்தை அஜித்திற்குக் கொடுத்தது. இடையில் ரேஸ் பந்தயங்களில் ஈடுபட்டு சில விபத்துகளை சந்தித்ததால் சில மாதங்கள் படுத்த படுக்கையாக இருக்க வேண்டிய சூழல் உருவானது. அடுத்து என்ன செய்வது ?...


இதனால் பழையபடி மீண்டும் ரேஸ்களில் ஈடுபடுவதில் பிரச்சனைகள் எழுந்தன. தமிழ் சினிமாவிலும் தவிர்க்க முடியாத கதாநாயகனாக உருவாக ஆரம்பித்து அவருக்கென்று ரசிகர்கள் வட்டம் உருவாக ஆரம்பித்து வருகிறது. என்ன செய்வதேன யோசித்த தனது கனவான பைக் ரேஸிங்கை சில மாதங்களுக்கு ஒத்திவைக்கிறார். தொடர்ந்து படங்களில் நடிக்கிறாட். சில படங்கள் வெற்றி… சில படங்கள் தோல்வி… ஆனால் ரசிகர்களின் எண்ணிக்கைக் கூடிக்கொண்டே போகிறது.



தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய் என சொல்லப்பட்ட அஜித் தனது அடுத்த அவதாரத்தை நோக்கி செல்கிறார். தீனா, வில்லன் போன்ற ஆக்‌ஷன் படங்களில் நடித்து மாஸ் ஹீரோவாகிறார். முதலில் கிடைத்த பெரும் வெற்றி போகப்போக கிடைக்கவில்லை தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பெரிய வெற்றிகள் எதுவும் இல்லாமல் தோல்விப் படங்களாகவே கொடுக்கிறார். தனது சக நடிகர்கள் எல்லோரும் ஹிட் படங்களாக கொடுத்து மேலே மேலே போகின்றனர். போட்டி நடிகர்களின் ரசிகர்கள் அஜித் ரசிகர்களைக் கேலி செய்ய ஆரம்பிக்கின்றனர்.


ஆனாலும் அஜித்தும் அவர் ரசிகர்களும் அவர் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். ஒரே ஒரு வெற்றிக்காக காத்திருக்கின்றனர். தொடர் தோல்வி படங்களுக்குப் பிறகு அஜித்தின் வரலாறு படம் வெளியாகிறது. மூன்று கதாபாத்திரங்களில் அஜித் நடிப்பில் பிரமாதப்படுத்த அஜித் ரசிகர்கள் கொண்டாடி தீர்க்கின்றனர்.



அதன் பின்னர் பில்லா, மங்காத்தா, ஆரம்பம் என இளைஞர்களைக் குறிவைத்து அஜித்தின் படங்கள் வெளியாக பெண்கள் மற்றும் குடும்ப ரசிகர்கள் வருவது குறைகிறது. அந்த குறையைப் போக்க அஜித் சிறுத்தை சிவாவோடுக் கைகோர்க்கிறார். வீரம், வேதாளம் மற்றும் விஸ்வாசம் என பிளாக்பஸ்டர் ஹிட்களைக் கொடுக்கிறது இந்த காம்போ. அதிலும் கடைசியாக ரிலிஸான விஸ்வாசம் தமிழ்நாடு ஆல்டைம் பிளாக்பஸ்டர்களில் ஒன்றாக கிரிடம் சூடியுள்ளது.




எல்லாம் ஒருபுறமிருக்க அஜித்தின் சினிமா வாழ்க்கையை ஒருநிமிடம் திரும்பிப் பார்த்தோமானால் வெற்றியை விட தோல்விகளே அதிகம்….  விருதுகளை விட அவமானங்களே அதிகம்… ஆனால் அஜித் என்றும் தோல்விகளால் துவண்டதில்லை. விழும்போதெல்லாம் எழுவார்… எழுந்து வேகமாக ஓடுவார்… அவரின் ஒவ்வொரு சிறு முன்னேற்றத்தையும் அவரது ரசிகர்கள் கொண்டாடித் தீர்க்கின்றனர்.

Tuesday 2 April 2019

மகேந்திரன்... சாகாவரக் கலைஞன்!

தமிழ் சினிமாவில் எத்தனையோ இயக்குநர்கள் இருந்திருக்கிறார்கள். எத்தனையோ இயக்குநர்கள் இருக்கிறார்கள். இன்னும் எத்தனையோ இயக்குநர்கள் வருவார்கள். ஆனால், இத்தனை நீண்ட நெடிதான பட்டியலில், ஒரு சிலருக்கு மாற்றே இல்லை. அந்த இயக்குநர்களின் இடத்தை இட்டு நிரப்ப, எந்த இயக்குநர்களாலும் இயலாது. ‘இவர் படத்தைப் பார்த்துவிட்டுத்தான் இயக்குநராக வேண்டும் என விரும்பினேன்’ என போனவாரம் படம் தந்த இயக்குநர் வரைக்கும் சொல்லலாம். ஆனால், அப்படி எவரும் இவரைப் போல இதுவரை இயக்கியதே இல்லை. அந்த அவர்... மகேந்திரன்.




கதைகள் குறித்த புரிதலும் சினிமா மொழி தொடர்பான சிந்தனைகளும் மகேந்திரனுக்குள் மாறுபட்டிருந்தன. அது, நம் தமிழ் சினிமாவுக்கு வெகுதூரத்தில் இருந்தது. ‘நாம படம் எடுத்தா இப்படித்தான் எடுக்கணும்’ என்று உள்ளுக்குள் சொல்லிக்கொண்டே இருந்தது மகேந்திர நெருப்பு. ஆனால் அவரிடம் கதை கேட்க வந்தவர்களுக்கு, தன் சிந்தனைகளைத் திணிக்காமல், அவர்கள் கேட்டமாதிரியெல்லாம் கொடுத்து வெற்றிப்படங்களைத் தந்திருக்கிறார். ஆக, படைப்புகளில் சமரசப்படுத்திக்கொண்டார் மகேந்திரன்.

சிவாஜியின் ‘நிறைகுடம்’ அந்தக் காலகட்டத்தில் வந்த படங்களைப் போலவும் இருக்கும். சிவாஜி படம் மாதிரியாகவும் இருக்கும். அதனால்தான் மகேந்திரன் எழுதி, நடிகர் செந்தாமரை டிஎஸ்பி.செளத்ரியாக நடித்த ‘தங்கப்பதக்கம்’ நாடகத்தை, சினிமாவாக்க முன்வந்தார் சிவாஜிகணேசன். சொந்தப்படமாகத் தயாரித்து, பி.மாதவனைக் கொண்டு இயக்கச் செய்தார். மகேந்திரன் கதை, திரைக்கதை, வசனம் எழுதினார். தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த போலீஸ் படங்களுள், மிக முக்கியமான படம் என்று இன்றைக்கும் பேசப்படுகிறது, ‘தங்கப்பதக்கம்’.



சினிமா மீது ஆசையோ அதில் சாதிக்கவேண்டும் என்கிற வெறியோ ஒருபோதும் இருந்ததில்லை மகேந்திரனிடம். ஆனால், நல்ல படைப்பு குறித்த அக்கறையும் கவலையும் தொடர்ந்துகொண்டே இருந்தது.  
ஜெய்சங்கர் நடித்த ‘சபாஷ் தம்பி’ படத்துக்கு கதை எழுதினார். கமல் நடித்த ‘மோகம் முப்பது வருஷம்’ படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதினார். எஸ்.பி.முத்துராமன் கமலையும் ரஜினியையும் வைத்து இயக்கிய ‘ஆடுபுலிஆட்டம்’ படத்தின் கதையும் வசனமும் இவர்தான். சுஜாதா நடித்த ‘வாழ்ந்து காட்டுகிறேன்’, ‘வாழ்வு என் பக்கம்,’ சிவாஜியின் ‘ரிஷிமூலம்’ ‘ஹிட்லர் உமாநாத்’ என பல படங்களில் கதாசிரியராகவும் வசனகர்த்தாவாகவும் பணியாற்றினார். மலையாளப் படத்தின் ரீமேக் படமான ‘பருவமழை’ படத்துக்கு, கமல் அழைத்து எழுதவைத்தார். இவையெல்லாம், மகேந்திரன் பணியாற்றிய படங்கள்தான் என்றாலும் அவை, மகேந்திரன் படங்களில்லை.



நடுவே, அவர் வாழ்வில் எடுத்த முடிவுகள் இன்னும் இன்னும் அவரின் குணங்களுக்குச் சான்று. எந்த நிர்ப்பந்தமும் பெரிய அவமானங்களும் நேர்ந்திருக்காது. திடீரென, ‘காரைக்குடிக்கே போயிடலாம்’ என பலமுறை முடிவெடுத்து, கிளம்பிச் சென்றிருக்கிறார்.
அப்படியெல்லாம் மகேந்திரனை விட்டுவிடவில்லை காலம்.
78ம் ஆண்டு, ஆகஸ்ட் 15ம் தேதி மொத்த திரையுலகமும் தமிழ் உலகமும் திரும்பிப் பார்த்தது. எல்லார் உதடுகளும் ‘மகேந்திரன்... மகேந்திரன்’ என உச்சரித்தன. அன்று முதல், மகேந்திரன் எனும் பெயர், மந்திரச்சொல்லானது. 1978ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதிதான் ‘முள்ளும் மலரும்’ ரிலீஸான நாள். அதுதான் மகேந்திரனின் முதல் படம். மகேந்திரன் படம். தான் நினைத்த சினிமாவை மகேந்திரன் எடுத்திருந்தார்.



அதுவரை தமிழ் சினிமாவின் கதை சொல்லும் பாணி வேறு.கேமிரா நகரும் விதம் வேறு. பின்னணி இசையின் வேலை வேறுவிதம். நடிகர்களின் நடிப்புத்திறனைக் காட்டும் உத்தி வேறு மாதிரியாக இருந்தது. ஆனால் ‘முள்ளும் மலரும்’ என்கிற ஒரே படம், ரஜினி முதற்கொண்டு பலரையும் அவர்களுக்கும் உலகுக்கும் அறியச் செய்தது. அதனால்தான் மகேந்திரனை இன்றைக்கும் கொண்டாடிக் கொண்டிருக்கிறது திரையுலகம்!
நாவலை, சினிமாவாக்கியவர்கள் பலர் உண்டு. நாவலுக்குக் கெட்டபெயர் வந்துவிடக்கூடாது. சினிமாவும் அதன் மொழியினூடே கலந்திருக்கவேண்டும். எழுத்தாளர் உமாசந்திரனின் நாவலைத்தான் படமாக்கினார் மகேந்திரன்.
அதுமட்டுமா? எழுத்தாளர் புதுமைப்பித்தனின் ‘சிற்றன்னை’ ‘உதிரிப்பூக்கள்’ படமானது. சிவசங்கரியின் படைப்பு ‘நண்டு’ என்றானது. பொன்னீலனின் கதை’ பூட்டாதபூட்டுக்கள்’ என வந்தது. இதிலொரு சுவாரஸ்யம்... 20 படங்களுக்கும் மேலே கதையும் வசனமும் எழுதிய மகேந்திரன், தான் இயக்குநரான போது, எழுத்தாளர்களின் படைப்புகளை சினிமாவாக்கினார். எழுத்து, இலக்கியம், திரைப்படம் ஆகியவற்றுக்கு ஒரு கோடு போட்டு, ரோடு போட்டு, பாலமும் அமைத்த பெருமை, மகேந்திரனுக்கு உரியது. இதில் ‘மட்டும்’ கூட சேர்த்துக்கொள்ளலாம், தப்பில்லை.



’’கதையின் கரு ஏதேனும் செய்யவேண்டும். ஒருநிமிடம்... அந்த நிமிடத்துக்குள் இதயத்துக்குள் புகுந்து என்னவோ செய்யும். அதை திரைமொழியாகக் கொண்டுவரவேண்டும். அது அடுத்தவேலை. அந்தத் திரைமொழிக்கு இசையின் பங்கு மிக முக்கியம்’’ என்று பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ள மகேந்திரன், ‘என் நண்பர் இளையராஜா இல்லாமல், என்னால் படங்களே பண்ணமுடியாது. என் மெளனத்தை இளையராஜா நன்கறிவார். என் உணர்வுகளையும் பாத்திர மாந்தர்களின் உளவியலையும் இளையராஜா புரிந்து உணர்ந்து வாத்தியங்களால், ரசிகர்களுக்குக் கடத்துவார்’’ என்று சொல்லும் மகேந்திரனுக்கு, சினிமாவில் வருகிற பாடல் காட்சிகள் மீது, ஒரு வருத்தமும் கோபமும் உண்டு. அப்படி வருத்தப்பட்டு கோபப்பட்ட மகேந்திரன் படத்தின் பாடல்கள் எல்லாமே, நம் மனசுக்குள் ஊடுருவிச் சென்று ஏதோ செய்யும் மாயங்கள் கொண்டவை.
‘முள்ளும் மலரும்’ படத்தில் கழைக்கூத்தாடிக்கான பின்னணி இசைதான், அண்ணன் தங்கைக் காட்சிகளுக்கு பின்னணியாக வந்துகொண்டே இருக்கும். ‘பாசமலர்’ படத்துக்குப் பிறகு குறிப்பிடத்தக்க, மிக யதார்த்தமான அண்ணன் தங்கை, காளியும் வள்ளியுமாகத்தான் இருப்பார்கள்.
சரத்பாபுவுக்கு ரஜினியை பிடிக்கவே பிடிக்காது. ஒருகட்டத்தில் தங்கையை மணம் செய்து கொள்கிற விருப்பத்தைத் தெரிவிப்பார். ‘நாளைக்கி டீக்கடைக்கு வந்துருங்க’ என்பார். அதேபோல் சரத்பாபு வந்திருப்பார். ரஜினி குறுக்கும்நெடுக்குமாக போவார். யார்யாரிடமோ பேசுவார். ‘டீ சாப்பிடுறீங்களா சார்’ என்று கேட்பார். தடக்கென்று வேறொரு முடிவு எடுத்துவிட்டு, சரத்பாபுவை அவமானப்படுத்துவார். அப்படியொரு அவமானங்களைத்தான், சமூகத்தில் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அதைத்தான் காட்சிப்படுத்தி, கைத்தட்டல் வாங்கியிருப்பார் மகேந்திரன்.

இப்பவும் சொல்றேன் சார். உங்களை எனக்குப் புடிக்கலை’ என்று சொல்லிவிட்டு, தங்கையை அவர் திருமணம் செய்துகொள்ள அனுப்புவார்.
‘முள்ளும் மலரும்’ படத்தில் இருந்து தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில், ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ளமுடிந்தது. மகேந்திரன் படங்களில், பெண்களின் உணர்வுகளும் குழந்தைகளின் எதிர்காலம் குறித்த கேள்விகளுமாகவே கதைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
சண்டைக் காட்சிகளைப் பார்த்து, விசிலடித்து, கைத்தட்டிப் பார்த்தவர்கள்தானே நாம். ‘உதிரிப்பூக்கள்’ படத்தில் மனைவியுடன் சேர்ந்து வாழச் சொல்லி, விஜயனிடம் பேசுவதற்கு ஆற்றங்கரைக்கு வருவார் சரத்பாபு. இருவருக்கும் சண்டை. அதைக் காட்சிப்படுத்தியிருக்கமாட்டார் மகேந்திரன். அங்கே சலனமே இல்லாமல் ஆற்று நீர் ஓடிக்கொண்டிருக்கும். அதுவொரு ஷாட். எல்லாவற்றுக்கும் வளைந்துகொடுக்கிற நாணல் புற்கள் க்ளோஸப். அதுவொரு ஷாட். கரையில் ஒய்யாரமாகப் படுத்துக்கொண்டிருக்கும் யாரோ ஒரு சிறுவன் தலைதூக்கிப் பார்ப்பான். அதுவொரு ஷாட். அடுத்து, சரத்பாபு ஆற்றுநீரில் கைமுகமெல்லாம் கழுவுவார். முகமெல்லாம் காயம். சட்டெயெல்லாம் அழுக்கு. கீழே கிடக்கும் கண்ணாடியை போட்டுக்கொண்டு, துண்டை எடுப்பார். அதை விஜயனுக்குத் தருவார். ‘நீங்க அடிச்சதை அப்படியே வாங்கிகிட்டேன். திருப்பி அடிக்கலியேனு நினைக்கலாம். உங்க மனைவி விதவையாவறதை நான் விரும்பல’ என்று சொல்லிவிட்டுச் செல்வார். இப்படியான காட்சிகளை, இந்த நூற்றாண்டு கண்ட சினிமாவில், பார்த்திருக்கவே முடியாது.

‘உதிரிப்பூக்கள்’ படத்தில் விஜயன், அஸ்வினியின் அந்த இரண்டு குழந்தைகளே பிரதானம். மிக மோசமான, சாடிஸ்ட் குணம் கொண்ட விஜயனிடம் அவர் மனைவியின் தங்கை வந்து, ‘நாளைக்கி கல்யாணம். கூப்புட வரலை. உங்க ஆசீர்வாதமும் எனக்குத் தேவையில்ல. கல்யாணம் முடிஞ்சு ஊருக்குப் போறேன். பசங்க ரெண்டுபேரையும் எங்கூட விட்ரு. நான் கூட்டிட்டுப் போறேன்’ என்பார்.
அப்போது கதவைச் சாத்துவார் விஜயன். அந்தப் பெண்ணின் புடவை, பாவாடை, ரவிக்கை என எல்லாத்துணிகளையும் கழற்றி எறிவார். அந்தப் பெண் குறுகிக்கதறுவாள். ‘பயப்படாதே. நான் உன்னைத் தொடமாட்டேன். உன்னை இப்படிப் பாத்த முத ஆள் நானா இருக்கணும். அதான் என் ஆசை. இனிமே ஒவ்வொரு நாளும் என் நெனப்பு வரணும் உனக்கு. இதுதான் நான் கொடுக்குற ஆசீர்வாதம்’ என்பார்.
கடைசியில் ஊரே சேர்ந்து அப்படியொரு முடிவு எடுக்கும். ’இந்த ஊர் இனிமே நிம்மதியா இருக்கணும்னா, நீயே உன் முடிவை எடு’ என்று ஆற்றில் மூழ்கி இறக்கச் சொல்லும். ‘இதுவரைக்கும் நான் கெட்டவனா இருந்தேன். இப்ப இந்த முடிவை நீங்க எடுத்திருக்கீங்க. உங்க எல்லாரையும் என் பக்கம் கொண்டுவந்துட்டேன். நான் செஞ்சதுலயே இதான் பெரிய தப்பு’ என்பார்.
குழந்தைகளுக்கு முத்தம் கொடுத்துவிட்டு, ‘நல்லாப்படிக்கணும். நல்லபேரு எடுக்கணும். அப்பா குளிக்கப் போறேன்’ என்று சொல்லிவிட்டு திரும்புவார். அந்த ஆறு சலனமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும். ஊரே இறுக்கமாகும். நல்லவர்கள் தடுக்கப் பாய்வார்கள். ஆனால் அவர்களை தடுத்துவிடுவார்கள். மீண்டும் அந்த ஆறு சலனமே இல்லாமல் தன் பயணத்தைத் தொடர்ந்துக்கொண்டே இருக்கும்.
மெளனம்... மெளனம்... மெளனம். நண்டும்சிண்டுமாக இருக்கிற அந்த இரண்டு குழந்தைகளும், ஆற்றங்கரையில், தண்ணீரைப் பார்த்துக்கொண்டே ஓடிக்கொண்டே இருப்பார்கள். பின்னணியில் அந்த இசை நம்மைச் சாகடிக்கும். படம் முடியும். ஆனாலும் அந்த சோகம் இத்தனை வருடங்கள் கழித்தும் மனதுள் ஓர் உருளையாய் சுற்றிக்கொண்டே இருக்கின்றன. அதுதான் மகேந்திரன் படைப்பாளியின் ஆளுமை.

‘உதிரிப்பூக்கள்’ போலவே ’நண்டு’ படத்திலும் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருப்பார். ‘மெட்டி’ படத்தின் சிக்கலான கதையையும் பெண்களின் வெவ்வேறுபட்ட உணர்வுப்பாடுகளையும் மகேந்திரனால் மட்டுமே அப்படிக் கவிதையாகவும் கதையாகவும் காட்சிமைப்படுத்தமுடியும்.
அவரின் எந்தப் படமாக இருந்தாலும் ‘இது மகேந்திரன் படம்’ என்று பெருமையாகச் சொல்லுகிறோம். அப்பேர்ப்பட்ட மகேந்திரன், தன் எல்லாப் படங்களிலும் கதை எழுதிய உமாசந்திரன், புதுமைப்பித்தன், பொன்னீலன், சிவசங்கரி என படைப்பாளிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து டைட்டிலில் பதிவிட்டிருப்பார்.

ஏதேனும் ஒருவரின் வாழ்க்கை, அதில் நடந்த அழுத்தமான சம்பவம் என்பதுதானே கதையாகும். ஆனால் மகேந்திரன் எனும் மகாபடைப்பாளி ஊடுருவும் ஆற்றல் கொண்டவர். இதற்கு உதாரணம் ஒன்று... மும்பையில் ஒருவேலையாகப் போயிருந்த மகேந்திரன், அதிகாலையில் மாடியில் இருந்து பார்த்துக்கொண்டிருக்க, சாலையில் ஒரு பெண், ஜாக்கிங் போய்க்கொண்டிருந்தாள். உடனே அவர் மனதுள் கேள்வி. பல கேள்விகள். ‘ஒரு பெண் தன் வாழ்நாளில், எதுஎதுக்கெல்லாம் ஓடவேண்டியிருக்கு’ என யோசித்தார். அதிலிருந்து வந்ததுதான் ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’.
‘முள்ளும் மலரும்’ ஷோபா, ‘உதிரிப்பூக்கள்’ அஸ்வினி, ‘மெட்டி’ ராதிகா, ‘கைகொடுக்கும் கை’ ரேவதி, ‘நண்டு’ அஸ்வினி, ‘பூட்டாதபூட்டுகள்’ சாருலதா, ‘ஜானி’ ஸ்ரீதேவி, தீபா, என பெண் கதாபாத்திரங்கள், நமக்குள் ஏற்படுத்துகிற தாக்கம், நம் வாழ்க்கைப் பயணம் போலவே நீண்ட நெடியதானது.
‘நண்டு’ படத்தில் ஓர் பாடல்..
’அள்ளித்தந்த பூமி அன்னையல்லவா...
சொல்லித்தந்த வானம் தந்தையல்லவா’
தமிழ் சினிமாவில் தாயும் தந்தையுமாக இருந்து மகேந்திரன் சொல்லித்தந்திருப்பது, இன்னும் பல நூற்றாண்டுகள் கடந்து வருகிற பிள்ளைகளுக்கும் சத்தான பாடம்; வேதம்!
தமிழ் சினிமாவில் சிறந்த படங்களின் பட்டியலிலும் இந்திய சினிமாவின் சிறந்த படங்களின் பட்டியலிலும் மகேந்திரனின் படங்கள், முக்கியமான இடத்தில் இருக்கின்றன. தமிழ் ரசிகர்களின் மனதிலும் மகேந்திரன் அப்படியொரு இடத்தில், ஸ்தானத்தில் இருக்கிறார்; எப்போதும் இருப்பார்.
‘சீதக்காதி’ படத்தில் நீதிபதியாக வரும் மகேந்திரன் சொல்லுவார்... ‘’கலைக்கும் சரி, கலைஞனுக்கும் சரி... சாவு கிடையாது. ஏதோவொரு தருணத்தில் அவை வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும். கலைஞன் வெளிப்பட்டபடியே இருப்பான்.
மகேந்திரன் எனும் கலைஞன்... சாகாவரம் பெற்ற உணர்வுபூர்வக் கலைஞன்! உன்னதப் படைப்பாளி. மகேந்திரனுக்கு மரணமே இல்லை!