Friday, 23 January 2015

'ஐ' - வெறும் ஷங்கர் படம் அல்ல ; 'அதுக்கும் மேல' !

நான் எந்தளவு ‘ஐ’-யை எதிர்பார்த்தேனோ அதில் ‘கால் இன்ச்’ கூட குறையாமல் முழுமையாக என்னைக் கவர்ந்தது. மெய்யாலுமே மெர்சலாகி விட்டேன். முதல் காரணம், எளிமையான ஒரு கதைக்கு ஷங்கர் அமைத்திருந்த சுவாரஸ்யமான நான்-லீனியர் திரைக்கதை ! மேக்கிங், மேக்அப், விக்ரம், ஒளிப்பதிவு, பின்னணி இசை என்று அடுத்தடுத்து வரிசை கட்டுகின்றன படத்துக்கான ப்ளஸ்கள். கல்யாண மண்டபத்திலிருந்து ஒரு பாழடைந்த பங்களாவுக்கு தியாவை கூனன் சாதுர்யமாக கடத்திக் கொண்டு போய் சிறை வைக்கும் அறிமுகக் காட்சியிலிருந்தே படம் கியர் தட்டிப் பறக்கிறது.

 

அதன் பிறகு ப்ளாஷ்பேக்கில் லிங்கேசன் காட்சிகளும், நிகழ்காலத்தில் கூனன் காட்சிகளுமாக மாறி, மாறிப் பயணிக்கும் படத்தில் எவ்வித குழப்பமும் இன்றி நம்மால் ஒன்றிப் போக முடிகிறது. மிஸ்டர்.தமிழ்நாடு ஆவதை குறிக்கோளாக கொண்டிருக்கும் லிங்கேசன், மாடல் அழகி தியாவின் தீவிர ரசிகனாகி செய்யும் கிறுக்குத்தனங்கள் ரசிப்பவையாக இருக்கின்றன. டூ பீஸில் தியாவைப் பார்த்து ‘பொத்’தென்று மயங்கி விழுவதும், அவளுடன் எடுத்துக் கொண்ட போட்டோவை வைத்துக் கொண்டு ‘மெர்சலாயிட்டேன்’ என்று பாடுவதுமாக லிங்கேசன் எபிசோடுகள் சுவாரஸ்யமாகக் கடக்கின்றன !
சீனா அத்தியாயங்கள் ஆங்காங்கே கொஞ்சம் மெதுவாக நகர்ந்தாலும், இடையிடையே வரும் கூனன் காட்சிகள் படத்தின் வேகத்தை சீராக உயர்த்தி விடுகின்றன. நிஜத்தை சொல்ல வேண்டுமெனில், இந்தப் படத்தின் உயிர்நாடியாக செயல்படுவதே கூனன் கதாபாத்திரம்தான். இவன் இல்லையேல் ‘ஐ’-யின் வெற்றி கேள்விக்குறியாகி இருக்கும். ஒரு கட்டத்துக்கு மேல் ஆடியன்ஸும் கூனனுடன் கைகோர்த்துக் கொண்டு ‘அதுக்கும் மேல’ என்று ‘பன்ச்’ அடித்து தியேட்டரையே அமர்க்களப்படுத்தும் அளவுக்கு கூனன் கதாபாத்திரம் அனைவரது நெஞ்சிலும் நீங்காத இடம் பிடித்து விடுகிறது.தான் நேசித்த காதலியை அருகில் வைத்துக் கொண்டு தன்னை யார் என்று காட்டிக் கொள்ளாமல் தவிக்கும்போதும், காதலியின் கையாலேயே பிச்சை பெறும் போதும் நமக்கு அவன் மீது அளவு கடந்த பரிதாபம் எழுகிறது. தியேட்டரில் பலர் அவனுக்காக கண்ணீர் விட்டு, துடைத்துக் கொண்டதையும் காண முடிந்தது. அதனாலேயே அவனுடைய இந்த நிலைக்கு காரணமானவர்களை ஒவ்வொருவராக அவன் பழிவாங்கும்போது ஆடியன்ஸும் சேர்ந்து குதூகலம் அடைகிறார்கள். அந்தளவு மிகவும் அழுத்தமான கதாபாத்திரமாக ‘கூனன்’ ஷங்கரால் படைக்கப்பட்டிருக்கிறான் !
தியாவாக வரும் எமி ஜாக்ஸன் தன்னால் இயன்றளவு படத்துக்காக உழைத்திருப்பது பாராட்டத்தக்கது. தற்போதைய சூழ்நிலையில் மாடலாக நடிப்பதற்கு எமியை விட்டால் கச்சிதமான ஆள் இண்டஸ்ட்ரியில் யாரும் இல்லை என்றே எனக்கும் தோன்றுகிறது. சந்தானம் இந்தப் படத்துக்கு அவசியம் தேவைப்பட்டிருக்கிறார். லிங்கேசன் கூனனாக ஆன பிறகு நல்ல நண்பேன்டாவாக ஆறுதல் சொல்லி அவனுக்கு தோள் கொடுப்பதோடு, துரோகிகளைப் பழிவாங்குவதற்கும் சந்தானம்தான் கூனனுக்கு பெரும் உதவி செய்கிறார்.

பவர்ஸ்டாருடன் அவர் செய்யும் காமெடிகள் அநாவசியம் எனினும் ரிலாக்ஸ் ரகம். க்ளைமாக்ஸில் - கூனனால் உருக்குலைக்கப்பட்ட துரோகிகளை ஒவ்வொருவராக அவர் பேட்டி காணும் போது தியேட்டரில் ஆரவார அப்ளாஸ் ! சுரேஷ்கோபி, ராம்குமார், உபேன் பட்டேல், ஓஜஸ் ரஜனி ஆகியோர் தங்களுக்கு அளிக்கப்பட்ட பாத்திரங்களை சரியாக செய்திருக்கிறார்கள். ‘மெர்சலாயிட்டேன்’, ‘என்னோடு நீ இருந்தால்’ இரண்டு பாடல்களும் மிகவும் அவசியமான இடத்தில் வருவதால் கூடுதல் ஈர்ப்பை ஏற்படுத்துகின்றன.
படம் ஆரம்பிக்கப்பட்ட சில நிமிடங்களில் வரும் ‘லேடியோ’ பாடல் ஹீரோயின் அறிமுகத்துக்கும், அவளுடைய அழகையும் மற்றும் தொழில் பின்னணியையும் விளக்குவதற்கு உதவுகிறது. ‘பூக்களே சற்று ஓய்வெடுங்கள்’, ‘ஐலா ஐலா’ பாடல்கள் சுவாரஸ்யமாக போய்க் கொண்டிருக்கும் கதையோட்டத்தில் கொஞ்சம் தொய்வை உண்டாக்கினாலும் விஷுவல் ரீதியாக பாஸ்மார்க் வாங்கி விடுகின்றன. ஷங்கர் பிராண்ட் பாடல்கள் !

படத்தின் டெக்னிக்கல் சமாச்சாரங்களில் P.C.ஸ்ரீராமின் ஒளிப்பதிவுக்கு தான் முதலிடம். ‘ஐ’-யின் முதல் ப்ரேம் முதல் கடைசி ப்ரேம் வரை ஒவ்வொன்றும் நம்முடைய புருவத்தை உயர்த்தச் செய்யும் அளவுக்கு அசாத்திய உழைப்பு. படு நேர்த்தியான ஒளிப்பதிவுக்காகவே இரண்டு தடவை தியேட்டருக்குப் போய் ‘ஐ’-யைப் பார்த்து வியந்தேன். 3 மணி நேரம் 8 நிமிடங்கள் ஓடும் படத்தை மைக்ரோ விநாடி கூட பிசிறு தட்டாமல் எடிட்டிங் பண்ணியிருக்கும் ஆண்டனியின் திறமையையும், உழைப்பையும் எம்புட்டு பாராட்டினாலும் தகும். பாழடைந்த பங்களா, லிங்கேசனின் வீடு, கேரவன், மனிதமிருகத்தின் இருப்பிடம் என்று படத்தின் பல லொகேஷன்களை யதார்த்தத்துக்கு நெருக்கத்தில் கொண்டு வந்த வகையில் T.முத்துராஜின் கலை இயக்கம் ‘சபாஷ்’ போட வைக்கிறது.

பாடிபில்டர்களுடன் விக்ரம் மோதும் அனல் பறக்கும் சண்டை மற்றும் ரயில் மீதான கூனன் சண்டை இரண்டிலும் 'அனல் அரசு' அமைத்திருக்கும் ஸ்டண்ட்கள் பட்டையை கிளப்பியிருக்கின்றன. பீட்டர் பெங் அமைத்த சைக்கிள் சண்டைக்காட்சி செம ஸ்டைலிஷ் ஸ்டண்ட். ஷங்கர் படம் என்பதால் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரண்டிலும் வழக்கம்போல் இரட்டிப்பாக வேலை செய்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான் ! அவதார், லார்டு ஆப் தி ரிங்ஸ் போன்ற ஹாலிவுட் படங்களுக்கு பணிபுரிந்திருக்கும் Weta Workshop ‘ஐ’-யில் பண்ணியிருக்கும் மேக்அப் நிஜமாகவே உலகத்தரம். அவர்களுடைய அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் பல பிரம்மாண்ட ஹாலிவுட் படங்களுக்கு மத்தியில் ‘ஐ’ போஸ்டரையும் பார்க்கும்போது மிகவும் பெருமையாக உள்ளது. தமிழ் சினிமாவுக்கு அத்தகைய பெருமையை தேடிக் கொடுத்த ‘ஐ’ டீமுக்கு பாராட்டுகள் பல !

பலரும் சொல்வது போல் வாத்தியார் ‘சுஜாதா’ இல்லாத ஷங்கரின் படமாக பார்க்கும்போது வசனங்கள் சராசரியாக இருந்தாலும், இந்தப் படத்துக்கு இத்தகைய வசனங்களே போதுமானவையாக எனக்குத் தோன்றுகிறது. Finally, ‘ஐ’-யின் பிரம்மாண்டத் தூண்கள் இரண்டு. ஷங்கர் மற்றும் விக்ரம் ! சில விஷயங்கள் பணத்திற்கு அப்பாற்பட்டவை. விக்ரமின் ஈடுபாடும், உழைப்பும் அத்தகையதுதான்.

என்னதான் கோடிகளில் சம்பளம் வாங்குபவராக இருந்தாலும் கடுமையான உழைப்பின் கஷ்டம், வலி அனைவருக்கும் ஒன்றுதானே ? அந்த வகையில் ‘ஐ’-க்காக விக்ரம் நல்கியிருக்கும் மெனக்கெடல் அவசியம் பாராட்டுக்குரியது. அவருக்கு கிடைத்திருக்கும் புகழில் ஷங்கருக்கும் நிச்சயம் கணிசமான பங்கு இருக்கிறது. படத்தில் விக்ரம் கொடுத்திருக்கும் சில முகபாவனைகளைப் பார்க்கும்போது அடர்த்தியான ஒப்பனைகளைக் கடந்து, ஒரு நடிகரிடமிருந்து இந்தளவு நடிப்பை ஷங்கரால் அன்றி வேறு எந்த தமிழ் சினிமா இயக்குநராலும் வெளிக்கொண்டு வந்திருக்க முடியாது என்பது என் உறுதியான எண்ணம் ! ‘தரை டிக்கெட்’ முதல் ‘எலைட் டிக்கெட்’ வரை அனைவருக்கும் திருப்திகரமான ஒரு கமர்ஷியல் ஹிட் கொடுத்த வகையில் இந்த ‘ஐ’, ஷங்கரின் ஏனைய படங்களுடன் ஒப்பிடும்போது நிச்சயம் ‘அதுக்கும் மேல’ தான்....!!!

Thursday, 15 January 2015

அனுஷ்காவை விட அதிகமாக சம்பளம் கேட்ட நிகழ்ச்சி தொகுப்பாளினி !

கேப்டன் டிவியில் தினமும் இரவு 11 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி சமையல் மந்திரம். ரகசிய கேள்வி பதில் மற்றும் சமையல் குறித்த செய்தியும் இதில் இடம் பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. இதற்கு காரணம் டாக்டர் அருள் சின்னையா என்றாலும் முக்கிய காரணமாக இருப்பவர் தொகுப்பாளினி கிரிஜா ஸ்ரீதான். இவர் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதும் டாக்டர் பேசும் போது கொடுக்கும் முக பாவனைகளும் அப்பப்பா… அடேங்கப்பா. கிரிஜா ஸ்ரீக்கு முன்பு நந்தினி என்பவம் சமையல் மந்திரம் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வந்தார். அவரை ஓரம் கட்டிவிட்டுதான் கிரிஜா ஸ்ரீக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள்.

 

கிரிஜா ஸ்ரீயின் நிகழ்ச்சித் தொகுத்து வழங்கும் திறமையைப் பார்த்த சிலர் வேறு சில தனியார் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்க அழைக்கிறார்களாம். ஆனால் அவற்றை எல்லாம் ரொம்பவே நாசூக்காக தவிர்த்துவிடுகிறாராம் கிரிஜா. இவற்றில் உச்சகட்டமாக இவரை சினிமாவில் நடிக்க வைக்க முடியுமா என்று தொகுப்பாளினிக்கு வேண்டியவர்கள் மூலமாக தயாரிப்பாளர் ஒருவர் விசாரித்துப் பார்த்திருக்கிறார். ஆனால் அவர் கேட்ட சம்பளத்தைக் கேட்டதும் தயாரிப்பாளருக்கு மயக்கமே வந்துவிட்டதாம். 'அனுஷ்காவுக்கே இவ்வளவு சம்பளம் கொடுக்க மாட்டோம், அதை விட அதிகமாக கேட்குறீங்களே’ என்று சொல்லிக் கொண்டு எஸ்கேப் ஆகியிருக்கிறார் தயாரிப்பு. சினிமாவில் நடிக்க கிரிஜா ஸ்ரீக்கு ஆர்வம் இல்லை என்பதாலேயே இது போன்று வரும் வாய்ப்புகளைத் தவிர்த்துவிடுகிறார் என்கிறார்கள்.

ஆம்பள விமர்சனம் – சுந்தர் சியின் காமெடி மசாலா மிக்ஸ் படம்!

பல படங்களில் வந்த கதையையே தனது படங்களில் சொன்னாலும் அதையும் ரசிக்கிற மாதிரி சொல்லுவதில் கெட்டிக்காரர் சுந்தர் சி. அதே வரிசையில் ஆம்பள படமும் அவரது ‘அக்மார்க்’ படைப்பாக உருவாகியிருக்கிறது.

 

பிரிஞ்சிருந்த குடும்பத்தை ஹீரோ ஒண்ணு சேர்க்கிறதை பல படங்களில் பார்த்திருப்போம். இதுதான் இந்தப் படத்தின் ஒன்லைனும் கூட. ஆனால் சுந்தர் சி தனது கைவண்ணத்தில் மசாலாவை மிக்ஸ் செய்து ரசிகர்கள் ரசிக்கிற மாதிரி ஆம்பள படத்தை இயக்கியிருக்கிறார்.

தனது அப்பாவை கொன்றுவிட்டார் என்று நினைத்து பிரபுவை அவரது தங்கைகள் அவரை வெறுத்து குடும்பத்தை விட்டே ஒதுக்கி வைத்துவிடுகிறார்கள். பிரபு மகன் விஷால் பிரிஞ்சிருக்கும் இந்த உறவுகளை எப்படி ஒண்ணு சேர்க்கிறார்…? என்பதுதான் படத்தின் கதை.

படத்தின் தொடக்கத்தில் இருந்தே சிரிக்க வைக்கும் காட்சிகளுடன் ஜாலியாக நகருகிறது படம். இடைவேளைக்கு பிறகு வரும் அரசியல் சம்பந்தப்பட்ட காட்சிகளில் சில இடங்களில் மட்டும் கொஞ்சம் ப்ரேக் ஆகி மீண்டும் வேகம் எடுக்கிறது திரைக்கதை.

விஷால், ஹன்ஸிகா நடிப்பு கேரியர் எண்ணிக்கையில் இந்தப் படமும் ஒன்று அவ்வளவுதான். அரசியல் கூட்டங்களுக்கு ஆள் சேர்க்கும் வேலை பார்க்கிறார் விஷால். கதாநாயகிகளைக் கவர்ச்சி பதுமைகளாக காட்டும் சுந்தர் சி படத்திற்கு இந்தப் படமும் விதிவிலக்கல்ல. கதாநாயகி ஹன்ஸிகா படம் முழுக்க அரைகுறை உடையிலேயே அலைகிறார். பாடல்களுக்கான நடனங்களில் சொல்லவே வேண்டாம்… உடம்பில் ஆடை எங்கதான் ஒட்டிக்கிட்டு இருக்கிறது என்று தேட வைத்துவிடுகிறார்கள். ஹன்ஸிகாவின் சகோதரிகளாக நடித்திருக்கும் இரண்டு நடிகைகளும் ஒப்புக்கு வந்து போகிறார்கள். விஷாலின் அப்பா ஆளவந்தான் கேரக்டரில் நடித்திருக்கிறார் பிரபு. விஷாலின் அத்தையாக நடித்திருக்கிறார்கள் ரம்யா கிருஷ்ணன், ஐஸ்வர்யா, கிரண். நல்ல வேளை அத்தை என்பதால் இவர்களை சேலையில் அலைய வைத்திருக்கிறார்கள். இல்லையென்றால் இவர்களுக்கும் கதாநாயகியின் காஸ்ட்யூம்தான் கொடுத்திருப்பார்களோ என்னவோ…! வைபவ் மற்றும் சதீஷ் விஷாலின் தம்பிகளாக நடித்திருக்கிறார்கள்.

சந்தானம் வரும் காட்சிகளில் கொஞ்சம் கூடுதலாக சிரிக்க முடிகிறது. படத்தின் முதலில் வரும் காட்சிகளில் அவர் படிப்படியாக வேலையை இழப்பது குபீர் சிரிப்பு என்றால் மீண்டும் வேலைக்கு சேர்ந்த சந்தானம் விஷாலுடன் சேர்ந்து நடித்திருக்கும் காட்சிகள் வெடிச்சிரிப்பு. அதுவும் கிரண், சந்தானம் காம்பினேஷன் காட்சிகள் ‘ஒரு மாதிரி’யாக இருந்தாலும் ரசிகர்களிடத்தில் அந்த காட்சிகளுக்கு செம ரெஸ்பான்ஸ். ஹிப் ஹாப் தமிழாவின் பாடல்கள் எல்லாமே கொஞ்சம் அதிகப்படியாகவே ஆட்டம் போட வைக்கின்றன. காமெடி பொழுது போக்கு படத்திற்கு தேவையான பின்னணி இசையை கொடுத்திருக்கிறார். படத்தை இயக்கியிருக்கிறார் சுந்தர் சி. தியேட்டருக்கு போனோமா… படத்தை பார்த்தோமா… ஜாலியா திரும்பி போனோமா… என்று இருக்கும் ரசிகர்களுக்கான படமாக ஆம்பள படத்தை இயக்கியிருக்கிறார் சுந்தர் சி.

ஐ விமர்சனம் – இனிமே எந்தப் படத்தைப் பார்த்தாலும் பிஸ்கோத்து மாதிரிதான் தெரியும்!

டீசர் டிரைலரைப் பார்க்கும் போதே… படம் எப்படா ரிலீஸ் ஆகும் எனும் எதிர்பார்ப்பை உருவாக்கி காத்திருக்க வைத்துவிட்ட ஐ, ரசிகர்களின் எதிர்பார்ப்பை எந்த அளவுக்கு நிறைவு செய்கிறது…?


விளம்பர மாடல் எமியின் தீவிர ரசிகர் விக்ரம். பாடி பில்டிங்கில் மிஸ்டர் இந்தியாவாகிவிட வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டு அதற்காக தினமும் பயிற்சி செய்து வருகிறார். அந்த நேரத்தில் எமியுடன் விளம்பரத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு வருகிறது. அதை பயன்படுத்திக் கொள்ளும் விக்ரம் மளமளவென மாடலிங்கில் முதலிடம் பிடிக்கிறார். இந்த நிலையில் திடீரென ஒருநாள் விக்ரமின் உருவமே மாறுகிறது. அகோர வடிவத்தை அடையும் விக்ரம், அதற்கு காரணமானவர்கள் யார் என்பதை கண்டுபிடித்து கொஞ்சம் வித்தியாசமான முறையில் பழிவாங்குவதுதான் இந்தப் படத்தின் கதை.

திருமண நாளில் மணப்பெண் எமியை கடத்திச் செல்லும் காட்சியில் ஆரம்பிக்கிறது படம். எமியை கூடையில் வைத்து ரயிலில் கடத்திச் சொல்லும் காட்சியில் துவங்கிறது படத்தின் விறுவிறு திரைக்கதை. ஆள் அரவமற்ற பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டில் எமியை அடைத்து வைக்கிறார் விக்ரம். தன்னை அந்த நிலைக்கு ஆளாக்கியவர்கள் ஒவ்வொருவரையும் தேடிக் கண்டுபிடித்து பழி வாங்க ஆரம்பிக்கிறார். விக்ரம் பழிவாங்கும் காட்சிகளை தனியாக சொல்லாமல் ப்ளாஷ்பேக்கையும் அவ்வப்போது சொல்லியிருப்பது ரசிக்க வைக்கிறது.

படத்தின் ஹீரோ விக்ரம்… என்று ஒற்றை வரியில் சொல்லி விட்டுப் போய்விட முடியாது. ஒவ்வொரு ப்ரேமிலும் விக்ரமின் உழைப்பு படம் முழுக்க அவரை ஆச்சரியமாய் பார்க்க வைக்கிறது. பாடி பில்டிங் காட்சிகளில் ஆரம்பித்து கூன் விழுந்த உடம்புடன் படம் முழுக்க வலம் வரும் விக்ரம், விக்ரமுக்கு இணையான நடிகர்… விக்ரம்தான் என்று சொல்ல வைக்கிறது. எமி… வெறும் கதாநாயகியாக இல்லாமல் கதையின் நாயகியாக வருகிறார் எமி. விளம்பர மாடலான இவர், தன்னுடன் பணியாற்றும் விளம்பர மாடலின் டார்ச்சர் தாங்க முடியாமல் அவஸ்தை படும் காட்சிகளில் இயல்பாக நடித்திருக்கிறார். எமியின் சினிமா கேரியரில் ஐ முக்கியமான படமாக இருக்கும். காமெடியும் குணச்சித்திரமும் கலந்த வேடத்தில் நடித்திருக்கிறார் சந்தானம். இவர் வரும் காட்சிகளில் சிரிக்க வைத்திருக்கிறார். சந்தானம் பவர் ஸ்டார் வரும் காட்சிகள் படத்திற்கு அவசியமில்லை என்றாலும் சிரிப்பை வரவழைக்க சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன.

சைடு எடுத்து தலையை வாரின உடனே அவனை சரத்பாபுன்னு நெனச்சிட்டியா…? என்று வரும் வசனத்திற்கு ஏற்ப டாக்டராக வரும் சுரேஷ் கோபி அத்தனை வேலை பார்க்கிறார். இவரது கேரக்டர் ரொம்பவே சஸ்பென்ஸாக நகருகிறது. தொழிலதிபராக நடித்திருக்கும் ராம்குமார் கேரக்டர் நிஜ தொழிலதிபரை நினைவுபடுத்துகிறது. மாடலாக வரும் உபென் படேல்… வில்லத்தனத்தை நிறைவாக செய்திருக்கிறார்.

ஷங்கர், சுபாவின் திரைக்கதை வசனத்தில் கிண்டலான வசனங்களும் சரி சீரியஸான வசனங்களும் சரி… ரொம்பவே ரசிக்க வைக்கின்றன. நான் என்னடா… பண்ணினேன்… என்னை ஏண்டா இப்படி பண்ணுனீங்க… என்று வில்லன் கோஷ்டிகளிடம் விக்ரம் கேட்கும் காட்சி செம டச்சிங். இது போன்ற மனதைத் தொடும் காட்சிகள் படம் முழுக்க அவ்வப்போது வந்து போகின்றன.
ஆன்டனியின் செம க்ரிப்பான எடிட்டிங் படத்தின் விறுவிறுப்புக்கு கைகொடுத்திருக்கிறது. பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு. எப்படித்தான் ஒளிப்பதிவு பண்ணியிருப்பாங்களோ… என்று ஆச்சரியப்பட வைக்கிறது ஒவ்வொரு ஷாட்டும். சீனாவில் வரும் சண்டைக்காட்சிகள்… பாடல் காட்சிகள்… என படம் முழுக்க பிசி ஸ்ரீராமின் காமிரா கைவண்ணம். மெர்சலாயிட்டேன்… உன்னோடு… முணுமுணுக்க வைக்கும் பாடல்கள். பின்னணி இசையிலும் ரஹ்மான் முத்திரை பதித்திருக்கிறார். படத்தை இயக்கியிருக்கிறார் ஷங்கர். ஷங்கரின் பிரமாண்ட… ஹிட் படங்களின் வரிசையில் ஐக்கும் ஒரு சீட்…!

Monday, 12 January 2015

ஐ படத்தில் சண்டை, காமெடி, நடனம் என அனைத்திலும் அசத்திய எமி ஜாக்சன்

எமி ஜாக்சன் நடிப்பில் வரும் ஜன.14-ந் தேதி வெளியாகவிருக்கும் பிரம்மாண்ட படம் ‘ஐ’. இப்படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கியிருக்கிறார். விக்ரம்-பி.சி.ஸ்ரீராம்-ஏ.ஆர்.ரகுமான்-ஆஸ்கார் ரவிச்சந்திரன் என பெரிய கூட்டணி இணைந்திருக்கும் இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகை எமிஜாக்சன்  வாசகர்களுக்காக பகிர்ந்துகொண்டார்.

 


எமிஜாக்சனிடம் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்து பேசியதாவது:-

1. அதிக எதிர்பார்ப்புகளை கொண்ட ‘ஐ’ திரைப்படம் வெளியாகவிருப்பது குறித்து எப்படி உணர்கிறீர்கள்?

‘ஐ’ படம் ரிலீஸ் ஆவது ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏனென்றால், இது இரண்டரை ஆண்டு கால பயணம். இப்படம் இப்போது வெளியாவது எனக்கு உற்சாகத்தை கொடுப்பதோடு பயத்தையும் கொடுக்கிறது.

2. ‘ஐ’ படம் முடிந்தபிறகு, அதை முதல்முறை திரையில் பார்த்தபோது எப்படி உணர்ந்தீர்கள்?

உண்மையை சொல்ல வேண்டும் என்றால், நான் இன்னும் படத்தை பார்க்கவே இல்லை. அதனால் சிறிது பதற்றமாகவே இருக்கிறது, படத்தில் ஒரு சில காட்சிகளை பார்த்திருக்கிறேன் ஆனால், முழு படமாக பார்க்கவில்லை. ஜனவரி 14 ஆம் தேதி ‘ஐ’ எனக்கு வியப்பாகத்தான் இருக்கப்போகிறது.

3. ‘ஐ’ படத்தில் உங்கள் கதாபாத்திரத்தை பற்றி சொல்லுங்கள்

இப்படத்தில் என் கதாபாத்திரத்தின் பெயர் தியா. சர்வதேச மாடலாக இருக்கும் தமிழ் பெண்தான் தியா. நடிப்பதற்கு அதிக வாய்ப்புகளை கொண்ட கதாபாத்திரத்தை ஷங்கர் சார் எனக்கு கொடுத்துள்ளார்.

இப்படத்தில் எனக்கு சண்டை காட்சிகள், காதல் காட்சிகள் மற்றும் நகைச்சுவை காட்சிகளும் உள்ளன. இது வெறும் கவர்ச்சி மற்றும் அழகு சார்ந்தது மட்டுமாகவே இருக்காது, மிக வலிமையானதாக இருக்கும்.
அருமையான தமிழ் வசனங்கள், அழகான நடன அசைவுகள் எல்லாம் இப்படத்தில் இருக்கிறது. இதுதான் நான் இதுவரை ஏற்றுள்ள கதாபாத்திரத்தில் சிறந்தது.

4. எந்த காட்சியில் நடிக்க அதிக நேரம் எடுத்துக்கொண்டீர்கள்?

சீனாவில் படமாக்கப்பட்ட ஒரு காட்சியில் நானும் விக்ரமும் நடித்துள்ளோம். அக்காட்சியில் இடம்பெற்றுள்ள வசனம் சென்னை தமிழில் இருந்தது. ‘என்னப்பா லிங்கேசா, வூடு கட்டி அடிச்சு தூள் கிளப்பிட்ட போலகிது’ என்னும் வசனம் இடம்பெறும் அக்காட்சி எனக்கு சவாலானதாக இருந்தது. இதுதான் இப்படத்தில் எனக்கு மிகவும் பிடித்த காட்சி.

5. விக்ரம், ஷங்கர் போன்ற புகழ்பெற்றவர்களுடன் பணிபுரிந்தது பற்றி?

விக்ரம், ஷங்கர், பி.சி.ஸ்ரீராம், ஏ.ஆர்.ரகுமான் ஆகியோருடன் பணிபுரிந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. இவர்கள் நான்கு பேருடன் ஒரே படத்தில் இணைவது எப்போதும் நடக்கும் என்று எதிர்பார்க்கமுடியாது. அவர்கள் அனைவருமே மேதைகள்.

ஷங்கரின் அழகான கற்பனை, யோசிக்கும் திறன் மற்றும் விக்ரமின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு அனைவரும் அறிந்ததே. பி.சி. ஸ்ரீராம் கைகளில் கேமரா வித்தைகளை காட்டும். அவரது கேமராவின் முன் நடிக்கவேண்டும் என்பது அனைத்து கதாநாயகிகளின் கனவாகும்.

ஏ.ஆர்.ரகுமானின் இசை, பாடல் வரிகள், இசையமைப்பு ஆகிய அனைத்தும் மிக எளிமையாக நடிக்கக்கூடிய உணர்வை அளித்தது. இது எனக்கு சிறந்த அனுபவமாக இருந்தது. ‘ஐ’ படத்தில் பணிபுரிந்தது என் அதிர்ஷ்டம். இப்படத்திற்காக நான் முழுமனதுடன் வேலை செய்துள்ளேன். நிச்சயமாக ‘ஐ’ இந்திய சினிமாவில் ஒரு மைல்கல்லாக இருக்கும்.

6. ‘ஐ’ படத்தில் உங்கள் விருப்பமான பாடல்

‘என்னோடு நீ இருந்தால்’ பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். ஒவ்வொருமுறை அந்த பாடல் கேட்கும் போதும் என் மெய்சிலிர்க்கிறது. அந்த பாடலை படமாக்க எங்களுக்கு 2 வாரங்கள் ஆனது. இந்த பாடலில் விக்ரம் மிருக தோற்றத்தில் தோன்றுகிறார். நான் ஒரு இளவரசியை போல தோற்றமளிப்பேன்.
எனது அறிமுக பாடலான ‘லேடியோ’ பாடலும் எனக்கு மிகவும் பிடித்தமான பாடல். இது என்னுடைய சோலோ பாடல் என்பதால் எனக்கு இப்பாடல் மிகவும் பிடிக்கும்.

7. ‘ஐ’ படம் உங்களுக்கு என்ன கொடுத்துள்ளது?

இந்த படம் எனக்கு நிறைய நல்ல அனுபவங்களை கொடுத்திருக்கிறது. நிறைய நண்பர்கள், அறிவுரைகள், ஷங்கர் இயக்கத்தில் நடித்தது என அனைத்தும் என் வாழ்நாள் முழுவதும் நினைவில் நிற்கும்.

8. ஒரு பெண்ணாக இருப்பதில் எதை சிறப்பானதாக கருதுகிறீர்கள் ?

அழகான, வித்தியாசமான உடைகளை அணிந்துகொள்ள வாய்ப்பிருப்பதை தான் சிறப்பாக கருதுகிறேன்.

9. நீங்கள் அதிகம் உணர்ச்சி வசப்படும் ஒரு நபரா?

இல்லை. நான் உணர்ச்சிவசப்பட நேர்ந்தால் அந்த தருணத்தில் அமைதியாகிவிடுவேன். நான் சோகமாக இருந்தால் என் அம்மாவிற்கு தெரிந்துவிடும். ஏனென்றால் அப்போது நான் பேசாமல் இருப்பேன். நான் எப்போதும் சத்தம் போட்டு கோபத்தை வெளிப்படுத்தியது இல்லை.

10. இந்திய சினிமா துறையில் உங்களுக்கு மிகவும் பிடித்தது?

இந்திய சினிமா துறை உலகெங்கிலும் புகழ்பெற்றது. 100 ஆண்டுகள் பாரம்பரியமிக்க இந்திய சினிமா துறை வளர்ந்துகொண்டே இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் இங்கு வெளியான படங்களில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் மிக்க கதாப்பாத்திரங்கள் வழங்கப்பட்டதால் பெண்களின் பங்களிப்பு வலுவானதாக மாறிவருகிறது.

11. உங்கள் ட்ரீம் டேட் யாருடன் இருக்க வேண்டுமென விருப்பம்?

நான் பாரக் ஒபாமாவுடன் டேட்டிங் செல்ல விரும்புகிறேன்.

12. உங்கள் அடுத்த படங்களைப்பற்றி சொல்லுங்கள்

அடுத்து நான் உதயநிதி ஸ்டாலினுடன் ஒரு படத்தில் நடிக்கிறேன். இதில் கிராமத்து பெண்ணாக வருகிறேன். நீளமான ஜடை, தாவணி, சுடிதார், புடவை என இதுவரை இல்லாத புதிய தோற்றத்தில் நடிக்கிறேன். இந்த படத்திற்கு பின் உடனடியாக தனுஷுடன் ஒரு படத்தில் நடிக்கிறேன். இதில் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் இருக்கும் பெண்ணின் வேடம். இந்த படத்தில் நடிக்க மிகவும் ஆர்வமாக இருக்கிறேன்.

13. தமிழ் திரைத்துறையில் உங்களுக்கு பிடித்த நடிகர் யார்? வருங்காலத்தில் யாருடன் நடிக்க வேண்டுமென்ற விருப்பம் உள்ளது.

குறிப்பிட்டு ஒருவரை மட்டும் சொல்ல முடியாது. திறமை மிக்க நிறைய பேர் இங்கு உள்ளனர். நான் கடந்த ஆண்டு ‘ராஜா ராணி’ படம் பார்த்தேன். அப்படத்தின் இயக்குனர் மிகவும் பிரஷ்ஷாகவும், புதுமையாகவும் அப்படத்தை இயக்கியிருந்தார்.

நடிகர்களை பொருத்தவரை உதயநிதி, தனுஷ் போன்றவர்களுடன் நடிப்பதை அதிர்ஷ்டமாக கருதுகிறேன். மாஸ் படத்தில் சூர்யாவுடன் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. விரைவில் சூர்யாவுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Thursday, 1 January 2015

2014 - இல் தமிழ் சினிமா - சிறந்த படங்களும், வசூல் படங்களும்

அனைத்துத் திரைப்படங்களும் ஏதோவொரு நோக்கத்திற்காகதான் எடுக்கப்படுகின்றன. அந்த நோக்கத்தை அவை நிறைவு செய்தனவா என்பதை வைத்தே அதன் வெற்றி கணக்கிடப்பட வேண்டும்.
 
  
2014 -இல் தமிழில் 207 திரைப்படங்கள் திரைக்கு வந்தன. அதில் 99 சதவீதப் படங்களின் நோக்கம் வசூல்ரீதியாக வெற்றி பெற வேண்டும் என்பதே. மீதி ஒருசதவீதம், வசூலுடன் நல்ல படம் என்ற பெயரும் வேண்டும் என்ற நோக்கில் எடுக்கப்பட்டவை.
 
வசூல்ரீதியாக வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கில் எடுக்கப்பட்ட படங்களில் 95 சதவீதப் படங்கள் தங்கள் நோக்கத்தில் தோல்வியையே கண்டன.
 
அந்தவகையில் முந்தைய ஆண்டைப் போலவே தமிழ் சினிமா மண்ணை கவ்வியது என்றுதான் சொல்ல வேண்டும். வெற்றி பெற்றவை சொற்பப் படங்கள்.
 
இந்த சொற்ப எண்ணிக்கையில் அஜீத், விஜய், ரஜினி போன்ற மாஸ் ஹீரோக்களின் படங்களை கழித்துவிடலாம். அவர்களின் படங்கள் எவ்வளவு வசூலிக்கின்றன, யாருக்கு எவ்வளவு லாபம் என்பதெல்லாம் ஆழம் காண முடியாத ரகசியங்கள். 
 
உதாரணமாக, மாஸ் ஹீரோவின் படம் ஓடும் திரையரங்கின் டிக்கெட் கட்டணம் 50 ரூபாய் என்றால், திரையரங்கில் 500 ரூபாய்க்கு விற்கிறார்கள்.
 
கணக்கில் வருவது 50 ரூபாய் மட்டுமே. டிக்கெட் கட்டணத்தில் தயாரிப்பாளருக்கு இவ்வளவு, திரையரங்குக்கு இவ்வளவு என்று ஷேர் செய்து கொண்டாலும் யாருக்கு எவ்வளவு லாபம் என்பதை வெளியிலிருந்து ஒருவரால் கணக்கிட முடியாது.
 
எனவே ஜில்லா, வீரம், கோச்சடையான், கத்தி, லிங்கா ஆகிய படங்களை நமது பட்டியலில் இருந்து நீக்கிவிடலாம். மிஞ்சுவது கோலிசோடா, யாமிருக்க பயமே, மஞ்சப்பை, முண்டாசுப்பட்டி, அரிமாநம்பி, சதுரங்க வேட்டை, வேலையில்லா பட்டதாரி, அரண்மனை, பிசாசு, வெள்ளக்காரதுரை ஆகிய படங்கள்.
 
இதில் மஞ்சப்பை...
 
யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு லாபத்தை பெற்றுத் தந்தது. அதற்கு காரணம், படத்தின் மிகக்குறைவான பட்ஜெட். இன்னொரு படம் கோலிசோடா.
 
தனுஷின் வேலையில்லா பட்டதாரியும் மிக அதிகம் வசூலித்தது. சென்னை மாநகரில் கத்திக்கு அடுத்த இடத்தில் வேலையில்லா பட்டதாரி உள்ளது. லிங்கா இன்னும் இப்படத்தின் சென்னை வசூலை  தாண்டவில்லை.
 
மேலே உள்ள படங்கள் தவிர வேறு சில படங்களும் நஷ்டமடையாமல் தப்பித்தன. தெகிடி, மான் கராத்தே, சலீம், சிகரம் தொடு, மெட்ராஸ், திருடன் போலீஸ், நாய்கள் ஜாக்கிரதை ஆகியவை.
 
சமீபத்தில் வெளியான மீகாமன், கயல், கப்பல் படங்களும் இந்த பட்டியலில் இடம்பெறும் சாத்தியமுள்ளது. வாயை மூடி பேசவும், ஜிகிர்தண்டா ஆகிய படங்களும் முதலுக்கு மோசம் செய்யவில்லை. இவை தவிர்த்த பிற படங்கள் தங்கள் நோக்கத்தில் தோல்வி கண்டவை.
 
வசூலுடன் பெயரும் வேண்டும் என்ற நோக்கில் எடுக்கப்பட்டது இனம், ராமானுஜன், காவியத்தலைவன் ஆகிய படங்கள். இந்த மூன்றுமே தங்களின் இரு நோக்கங்களிலும் தோல்வியை கண்டன. முப்பதுகளின் நாடக உலகம் என்ற கமர்ஷியல் வேல்யூ குறைவான ஒரு கதைக்கு வசந்தபாலன் 24 கோடிகள் செலவளித்தது, பெரும் பின்னடைவு என்றுதான் சொல்ல வேண்டும். 
 
வசூலை தள்ளி வைத்து 2014 -இல் வெளியான சிறந்த படங்களைப் பட்டியலிட்டால் சின்ன படங்களே முதலில் வருகின்றன. கோலிசோடா, சதுரங்க வேட்டை, சலீம், ஜிகிர்தண்டா, மெட்ராஸ் மற்றும் பிசாசு.
 
தலித் அரசியலை முன்னிறுத்தி மெட்ராஸை சிலர் தூக்கிப் பிடித்தாலும் அதன் சட்டகம் கமர்ஷியல் சினிமாவுக்குள்பட்டே இருந்தது. சுவர் என்ற குறியீடும், வடசென்னை மக்களின் பேச்சு வழக்கை இயல்பாக காட்டியதும், நடிகர்களை யதார்த்தமாக நடிக்க வைத்ததும் இந்தப் படத்துக்கு புதியதொரு வண்ணத்தை தந்தது. ஆனால் உள்ளடக்கம் நாம் பார்த்து பழகியது.
 
மேலே உள்ள ஆறு படங்களில் ஜிகிர்தண்டா, சதுரங்க வேட்டை இரண்டையுமே முதன்மைப்படுத்தி பேச வேண்டியுள்ளது. இந்த இரு படங்களும் வழக்கமான தமிழ் சினிமா சட்டகத்துக்குள்ளிலிருந்து கொஞ்சமேனும் மாறுபடுபவை. இவ்விரு படங்களை முன்மாதிரியாகக் கொண்டு இந்த ஆண்டு சில படங்களாவது வருமாயின் அது தமிழ் சினிமாவுக்கு ஆரோக்கியமானதாக அமையும்.
 

ஜோதிகா படத்துக்கு சூர்யா போட்ட ஆர்டர்!

2009ல் சீதா கல்யாணம் என்ற மலையாள படத்திற்கு பிறகு எந்த படத்திலும் நடிக்கவில்லை ஜோதிகா. சில வாய்ப்புகள் தேடிவந்தபோதுகூட இப்போது நடிப்பதாக இல்லை என்று தவிர்த்து வந்தார். ஆனால் நல்ல கதையில் மீண்டும் ரீ-என்ட்ரியாக வேண்டும் என்பதற்காக கதை கேட்பதை தொடர்ந்து வந்தார். ஆனால் அவர் எதிர்பார்த்தபடி தமிழில் கதைகளில் கிடைக்காத நிலையில், மலையாளத்தில் மஞ்சுவாரியர் நடித்த ஹவ் ஓல்டு ஆர் யூ படம் இருந்ததால் அந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் தற்போது நடித்துக்கொண்டிருக்கிறார்.

 
 
இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மாஜி ஹீரோ ரகுமான் நடிக்கிறார். முதல்கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடந்தது. அதையடுத்து இப்போது சென்னையிலுள்ள பின்னி மில்லில் அப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த முறை, சில கமர்சியல் நடிகர்-நடிகைகளும் நடித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஜோதிகா முன்பு நடித்த படங்களில் நடிப்பவர்களுக்கு இடைவெளி கொடுப்பார்கள். ஒரு காட்சியில் நடித்து முடித்ததும் ஓய்வெடுப்பார்கள். ஆனால். இப்போது அப்படி எதுவும் கொடுக்கப்படவில்லையாம். 
 
அடுத்தடுத்து அவர்களுக்கான காட்சிகளை படமாக்குகிறார்களாம். இதனால் அவசரத்துக்கு ஒரு செல்போன்கூட பேச முடியவில்லையாம். அந்த அளவுக்கு ஜோதிகா தவிர மற்றவர்களின் காட்சிகளை சில நாட்களிலேயே படமாக்கி அவர்களை அனுப்புவதற்காக வேகம் காட்டுகிறார்களாம். இதற்கு காரணம், இந்த படததை தயாரிக்கும் சூர்யா பட்ஜெட்டை அதிகப்படுத்தினால் வியாபாரம் செய்வது கடினம் என்று சொல்லி, குறைவான நாட்களிலேயே படப்பிடிப்பை நடத்தி முடித்து விட வேண்டும் என்று ஆர்டர் போட்டுள்ளாராம்.