Sunday 12 July 2015

தமிழோடு விளையாடும் கமல்ஹாசன்...!

தங்கள் அபிமான ஹீரோக்கள் நடித்து ஒரு படம் வெளிவந்து விட்டால் போதும், அவருடைய ரசிகர்கள் தங்களது மனம் கவர்ந்த ஹீரோக்களைப் பற்றி புதிது புதிதாக பல விஷயங்களை சமூக வலைத்தளங்களில் பரவவிடுகிறார்கள். அப்படிப் பார்க்கும் போதுதான் அந்த ஹீரோக்கள் செய்த சில பல நல்ல விஷயங்களும் மற்றவர்களுக்கும் தெரிய வருகிறது. அந்த அளவிற்கு தங்களது ஹீரோக்களின் திறமைகளை அவர்களது ரசிகர்கள் கூர்ந்து கவனித்துப் பார்த்து வருகிறார்கள். ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய் ஆகியோருடைய தீவிர ரசிகர்களில் பலரை இப்படிக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.



கமல்ஹாசன் நடித்துள்ள 'பாபநாசம்' படம் வெளிவந்த சில நாட்களுக்குள்ளேயே இப்படி ஒரு சாதனை விஷயத்தை கமல்ஹாசன் ரசிகர்கள் பரவவிட்டுள்ளார்கள். கமல்ஹசான் 'பாபநாசம்' படத்தில் நெல்லைத் தமிழ் பேசி நடித்துள்ளார். அவர் பேசி நடிக்கும் அந்த நெல்லைத் தமிழ் அவருடைய உச்சரிப்பாலும் இனிமையாகவே உள்ளது. அந்த அளவிற்குப் பொருத்தமாக நடித்திருக்கிறார் என்று நெல்லைக்காரர்களே கண்டிப்பாகச் சொல்வார்கள்.

இதேப்போல் கமல்ஹாசன் இதற்கு முன் பலவிதமான தமிழ் பேசி நடித்துள்ள கதாபாத்திரங்களைப் பற்றி அவருடைய ரசிகர்கள் பெருமையாகப் பகிர்ந்து வருகிறார்கள். உன்னைப் போல் ஒருவன் - பொதுவான தமிழ், விருமாண்டி - மதுரைத் தமிழ், தெனாலி - இலங்கைத் தமிழ், தசாவதாரம் - களியக்காவிளைத் தமிழ், சதிலீலாவதி - கோவைத் தமிழ், மகராசன் - சென்னைத் தமிழ், மைக்கேல் மதன காமராஜன் - பாலக்காட்டுத் தமிழ், என அவர் பேசி நடித்துள்ள தமிழ் எத்தனையோ உண்டு. இவற்றில் தசாவதாரம் - பல்ராம் நாயுடு பேசும் தெலுங்குத் தமிழையும் சேர்த்துக் கொள்ளலாம். இதிலிருந்தே கமல்ஹாசன் ஒரு வழக்கமான நடிகர் அல்ல வித்தியாசமான நடிகர் என்பதைப் புரிந்து கொள்ளலாம். வேறு எந்த ஹீரோவாவது தமிழிலேயே இந்த அளவிற்கு விளையாடியிருக்கிறார்களா ?

No comments:

Post a Comment