Wednesday 15 June 2022

ஈ வி சரோஜா

 தமிழ்த் திரையில் பத்மினி வைஜெயந்திமாலா எல் விஜயலட்சுமி போன்ற பல நடிகைகள் நடனத்தில் ஜாம்பவான்களாக கலக்கி இருக்கின்றனர்.


ஆனால் இவர்களை எல்லாம் தனது துள்ளல் நடனத்தால் மிஞ்சும் ஒருவர் இருக்கிறார் என்றால் அது ஈ வி சரோஜா ஒருவர் தான்.




ஈ வி சரோஜாவின் நடனத்தில் உள்ள துள்ளல், நளினம் இரண்டுமே கவனத்தை ஈர்க்கக் கூடியவை.

நடிகர்கள் சந்திரபாபு, கே.ஏ.தங்கவேலு, நாகேஷ் என்று நகைச்சுவை நடிகர்களுக்கும் இணையாக நடித்தவர். அதிலும் குறிப்பாக சந்திரபாபுவுடன், அவரின் வேகமெடுக்கும் பாடல்களுக்கு ஏற்ப அதே துரித கதியில் ஆடுவதும் அசாத்தியமானதுதான்.
மான் குட்டியைப் போல் துள்ளிக் குதிப்பதில் ஆகட்டும், கால் தரையில் படாமல் அந்தரத்தில் மிதப்பது போல் மிக வேகமாகக் கால்களை மாற்றி சில நடனங்களை அவரால் எளிதாக ஆடிக் காண்பிக்க முடிந்திருக்கிறது.
‘புதுமைப்பித்தன்’ படத்தில் அரண்மனை அடிமைப்பெண்களில் ஒருத்தியான அபராஜிதாவாக ஆடிய ஆட்டங்கள் நினைவில் நிற்பவை.
என் தங்கை’ படத்தின் பிரதான பாத்திரமான தங்கை மீனாவாகக் கண்டுபிடிக்கப்பட்டவர்தான் ஈ.வி. சரோஜா.
கண் பார்வையற்ற தங்கை மீனாவாக, சோக ரசம் சொட்டச் சொட்ட அறிமுகப் படத்திலேயே தன் நடிப்பால் அனைவரையும் கண் கலங்க வைத்தார் ஈ.வி.சரோஜா. அவரைச் சுற்றியே படத்தின் கதையும் பின்னப்பட்டிருந்தது.
கண் பார்வையில்லாமல் ஒரு பெண் இந்த உலகில் வாழ்வது எவ்வளவு கடினம் என்பதைக் கதை விவரித்தது.
நடிப்பின் வழியாக அறியப்பட்டதை விட நடனங்கள், பாடல்கள் வாயிலாகவே பெரிதும் மக்களால் அடையாளம் காணப்படுபவராக இருக்கிறார் ஈ.வி.சரோஜா.
‘தில்லானா பாட்டுப் பாடி குள்ளத்தாரா…’
‘குல்லா போட்ட நவாப்பு…. செல்லாது உங்க ஜவாப்பு...’
வாங்க மச்சான் வாங்க…. வந்த வழியப் பாத்துப் போங்க…’
‘தேன் மதுவை வண்டினம் தேடி வரும்…’
‘அழகைப் பார்… நீ பழகிப் பார், எனதன்பே என்னைப் பார்’
என எத்தனை பாடல்கள், அதற்கான நளினம் மிகு நடனங்கள்.
‘மதுரை வீரன்’ படத்தில் மானைத் துரத்தி வரும் வேடனாக எம்.ஜி.ஆர். பெண்களின் அந்தப்புர நந்தவனத்துக்குள் நுழைந்துவிட, அவரிடம் எகத்தாளமாகப் பேசி நையாண்டி செய்வதில் ஆரம்பித்து,
கேலியும் கிண்டலுமாகத் தொடரும் ‘வாங்க மச்சான் வாங்க…. வந்த வழியப் பார்த்துப் போங்க….’ பாடலில் தரையிலிருந்து இரண்டடி உயரத்துக்கு மேலாக அவர் துள்ளிக் குதிப்பது, மான் துள்ளலாகவே இருக்கும்.
‘பட்டணந்தான் போகலாமடி பொம்பள, பணங்காசு தேடலாமடி’ ரேடியோ காலத்திலிருந்து இன்றைய யூடியூப் காலம் வரை அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட பாடல்.
நாடோடிகளாகத் தெருவில் ஆடிப் பாடிப் பிழைக்கும் ஒரு ஜோடி பாடுவதாக அமைந்த இப்பாடல் ‘எங்க வீட்டு மகாலட்சுமி’ படத்தில் இடம்பெற்று பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது.
ஈ.வி.சரோஜாவுக்கு நடிப்பதற்கான அற்புதமான வாய்ப்பையும் வழங்கியபடம் மணப்பந்தல்.
‘உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன். அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே’
என்ற பாடல் இந்தப்படத்தில் ஈ.வி.சரோஜாவுக்குக் கிடைத்த அற்புதமான பாடல்களில் ஒன்று.
‘படிக்காத மேதை’ படத்தில் பணக்காரக் குடும்பத்துச் செல்லப் பெண்ணாக
அந்தச் செல்லப் பெண் பாத்திரம் ஈ.வி.சரோஜாவுக்கு இயல்பாய் அமைந்தது.
சிவாஜி இவரை கேலி செய்து பாடும் ‘சீவி முடிச்சு சிங்காரிச்சு, சிவந்த நெத்தியில் பொட்டும் வச்சு…’ பாடலும் திருமண வீடுகளில் அந்நாட்களில் போடப்படும் ரெக்கார்டுகளில் முதன்மை பெற்ற ஒன்று.
ஈ.வி.சரோஜாவின் திரைப் பாத்திரங்களில் சற்றே வித்தியாசமானது ‘வீரத்திருமகன்’ படத்தில் ஏற்ற வீரமங்கை பாத்திரம்.
கொடுங்கோலாட்சி நடக்கும் மன்னராட்சியில், அதை எதிர்த்து நிற்கும் புரட்சிகரக் குழுவில் ஒருத்தியாகவும், அதே நேரத்தில் தளபதி ரவீந்திரன் மீது ஒருதலையாகக் காதல் கொள்பவளாகவும் நடித்திருப்பார்.
ரவீந்திரனாக நடித்த ஆனந்தன், தன் காதலி தான் மறைவில் நிற்கிறாள் என்றெண்ணி ‘பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்’ என
சரோஜாவிடம் இந்தப் பாடலைப் பாடுவார்.
பாக்கியலட்சுமி திரைப்படத்தில் எக்காலத்திலும் எல்லோர் மனதையும் மயக்கும் ‘மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி’ பாடல் காட்சியில் ஈ.வி.சரோஜாவும் தோன்றுவார்.
எம்.ஜி.ஆருடன் இணையாக நடித்த ஒரே படம் ‘கொடுத்து வைத்தவள்’. இப்படத்தைத் தயாரித்தவர் சரோஜாவின் சகோதரர் ஈ.வி.ராஜன்.
சொந்தப் படத்தில் எம்.ஜி.ஆரின் நாயகியாகும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. தன் நாட்டிய வகுப்புத் தோழியான எல்.விஜயலட்சுமிக்கு இரண்டாவது நாயகி வாய்ப்பையும் அளித்தார்.ஆனால், படம் பெரிதாகப் பேசப்படவில்லை.
எம்.ஜி.ஆரின் தங்கையாக அறிமுகமானவர் அவரது இணையாக நடிக்கும் வாய்ப்பைப் பெற்றதுடன் படவுலகை விட்டும் ஒதுங்கினார். தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் 100 படங்களுக்கும் குறைவாகவே நடித்தார்.
என் தங்கை, நீதிபதி, விளையாட்டு பொம்மை, பெண்ணரசி, மதுரை வீரன், அமரதீபம், மணப்பந்தல், கொடுத்து வைத்தவள், நல்லவன் வாழ்வான்.
குலேபகாவலி, புதுமைப்பித்தன், நன்னம்பிக்கை, மறுமலர்ச்சி, ரம்பையின் காதல், பாசவலை, மணாளனே மங்கையின் பாக்கியம்.
எங்க வீட்டு மகாலட்சுமி, நீலமலைத்திருடன், கடன் வாங்கிக் கல்யாணம், குடும்ப கௌரவம், உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்.
பிள்ளைக் கனியமுது, சுமங்கலி, தங்கப்பதுமை, மனைவியே மனிதனின் மாணிக்கம், ஆட வந்த தெய்வம், படிக்காத மேதை, கைதி கண்ணாயிரம்.
பாட்டாளி யின் வெற்றி, விடிவெள்ளி, இரத்தினபுரி இளவரசி, ராணி லலிதாங்கி, வீரத்திருமகன், நல்லதங்காள்.
போன்றபடங்கள் அவர் நடிப்பில் குறிப்பிடத்தக்கவை.
2002 ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதியிடமிருந்து முத்தமிழ்ப் பேரவையின் ‘நாட்டியச் செல்வம்’ விருது பெற்றார்.
திரைத்துறையில் நிகழ்த்திய வாழ்நாள் சாதனைக்காக 2002 ஆம் ஆண்டுக்கான ‘எம்.ஜி.ஆர். விருது’ 2004 ஆம் ஆண்டு தமிழக அரசால் இவருக்கு வழங்கப்பட்டது.
இயக்குநர் ராமண்ணா ஏற்கனவே நடிகை பி.எஸ்.சரோஜாவை மணந்து கொண்டவர். இரண்டாவதாக ஈ.வி.சரோஜாவையும் இரண்டாவது மனைவியாக ஏற்றுக் கொண்டார்.
மனைவியர் இருவருமே ஒரே பெயரைக் கொண்டவர்கள் என்பது அரிதிலும் அரிது. இவர்களுக்கு ஒரு மகள் உண்டு. 2006 ஆம் ஆண்டு உடல் நலக் குறைவால் தம் 70 வது வயதில் காலமானார். ஓயாமல் ஆடிய பாதங்கள் நிரந்தர ஓய்வு பெற்றன.

இயக்குனர் மணிவண்ணன்.

 தமிழ் சினிமாவின் முக்கியமான ஆளுமைகளில் ஒருவர் இயக்குனர் மணிவண்ணன். கதாசிரியராக இயக்குனராக நடிகராக என அனைத்திலும் கொடி கட்டி பறந்தவர். தனக்கென ஒரு அரசியல் பார்வையோடு திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தவர். ஒரு முறை இயக்குனர் கரு.பழனியப்பன் சொன்னது, ஒரு இயக்குனர்ன்னா அது மணிவண்ணன் மாதிரி இருக்கனும் அவர் 50 படம் பண்ணிட்டாரு ஆனா ஒவ்வொன்னும் ஒவ்வொரு ஜானர் மணிவண்ணன் சாரோடு முத படத்தை வச்சு அடுத்த படம் இப்படிதான் இருக்கும்ன்னு ஜட்ஸ் பண்ணிட முடியாதுன்னு, அது உண்மைதான். மற்ற இயக்குனர்களை போல எந்த ஒரு வட்டத்துக்குள்ளயும் சிக்காதவர். இயக்கத்துல மட்டும் இல்லை. நடிப்புலயும் அப்படிதான் வில்லனா தொடங்கி நகைச்சுவை குணச்சித்திரம்ன்னு பட்டையை கிளப்புனவரு.



அவர் கடைசியா நடிச்ச இளைஞன் படத்துல ஏற்பட்ட விபத்து, அதுக்கு நடந்த சிகிச்சையில பிழைன்னு அவர் நடக்க முடியாம இருந்தப்பவும் தீவிரமான வாசிப்புலயும் முக்கிய நிகழ்வுகளிலும் தவறாம பங்கெடுத்துக்கிட்டவர். அந்த ஓய்வு காலத்துல பலருக்கும் உபயோகமா தன்னை அர்ப்பணிச்ச காலகட்டத்துலதான் நான் அவரை சந்திச்சேன்.

2011 தி சண்டே இந்தியன் பத்திரிகை நடத்துன ஒரு செமினார்ல, தமிழ் சினிமாவும் டிஜிட்டல் புரட்சியோ ஏதோ ஒரு தலைப்பு, அதுக்கு பாலு மகேந்திரா சார், மணி சார், வெற்றிமாறன், பிரபு சாலமன் மற்றும் ஆண்மை தவறேல் குழந்தை வேலப்பன் கலந்துகிட்டாங்க.

பாலு சார் ரொம்ப சீனியர், மறந்துட்டேன் பூ சசியும் வந்திருந்தாரு. பாலு சாரை மணி சாரே அப்பான்னுதான் சொல்லுவாரு. இதை ஏன் சொல்றேன்னா பாலு சார் தினமும் க்ளாஸ் எடுத்து பழக்கம், அன்னைக்கும் அவர் நல்ல சினிமான்னா என்ன கெட்ட சினிமான்னா என்னங்குறதுக்கு கொடுத்த விளகத்தை எப்பவும் மறக்க மாட்டேன். அவர் எப்பவும் போல வெறுங்கையோடு வந்து பேசலாம். ஆனா மத்தவங்க எல்லாம் கொடுத்த தலைப்பை மறந்துட்டும் இன்னும் சொல்ல போனா நமக்கு தெரியாததா பாத்துக்கலான்னு ஒரு அலட்சியத்தோடதான் அங்க வந்துருந்தாங்க. அதை அவங்களே கூட ஒத்துப்பாங்க.

ஆனா, மணிவண்ணன் சார், அவர் முறை வந்ததும் அவர் தலைப்புக்கான தயாரிப்புகளை எடுத்து காட்டுனப்ப ஒரு பிரமிப்பு எனக்கு மட்டுமில்ல எல்லோருக்குமே. ஒரு விஸ்காம் ஸ்டூடண்ட் கூட அப்படி ரெடி பண்ணி க்ளாஸ்க்கு வரத நான் பாத்ததில்ல.

அதை தயார் பண்ண அவர் 3 நாட்களை செலவிட்டுருந்தாரு. ரொம்ப ஜாலியான ஆள்ன்னு தெரியும்,ஆனா இவ்வளவு சின்சியரான ஆளுன்னு அப்பதான் தெரிஞ்சுகிட்டேன். அவரோட செமினார் தமிழ் சினிமா உலக சினிமாவில் அரசியல்ன்னு நினைக்கிறேன். அரசியல் பத்தின அவரோட செமினார் மறக்க முடியாதது.

அப்ப அவருக்கே உரித்தான நகைச்சுவையில் சமகாலத்து தமிழ் சினிமா போக்கை விமர்சிக்கவும் செஞ்சாரு. அதுல மறக்க முடியாதது. ஜெயா டிவில ஹாசினி பேசும் படம்ன்னு அப்ப சுஹாசினியோட விமர்சனம் பத்தி அவர் சொன்னது, "இப்ப சுஹாசினி ஒரு விமர்சனம் பண்ணுது, அதுல இப்ப ஏதோ ஒரு படம் வந்துச்சுல்ல என்னது பதினெட்டோ நூத்திஎட்டோன்னு ( அது சித்தார்த் நடிச்ச 180 ன்னு அவருக்கே தெரியும்) உடனே நாங்கெல்லாம் சார் அது 180 ன்னோம். உடனே அவரு " ஏதோ ஒன்னு, அந்த படத்த விமர்சனம் பண்றன்ன பண்ணிட்டு போக வேண்டியதுதான, அந்த அம்மா அதுல சொல்லுது, யப்பா எவ்வளவு நாளாச்சு தமிழ் சினிமாவுல இப்படி ஒரு அழகா ஹேன்ட்ஸம்மா ஒரு ஹீரோவ பாத்து, ஏன்னா, இப்பல்லாம் தமிழ் சினிமாவுல ஹீரோன்னாலே அழுக்கு லுங்கியும் தாடியும் பரட்டை தலையும்ன்னு, இல்ல நான் கேக்குறேன் ஏன் ஹீரோன்னா அது நீங்க சொல்ற ஆளுகதான் இருக்கனுமா?! என் ஊர்ல அப்படிதான் இருப்பான்" அப்படி பேசிட்டு எங்கள பாத்து சொன்னாரு, அந்த அம்மாவை எங்கயாச்சும் பாத்தா அவங்க்கிட்ட சொல்லுங்க நான் இப்படி சொன்னதா, நானே போன் அடிச்சேன் அந்தம்மா எடுகலன்னு சொல்லிட்டு, அடுத்து டைரக்டர் ஷங்கரை வார போனவரு முடிச்சுட்டு அப்ப சொன்னாரு, இதை போய் சங்கர்ட்ட யாரும் சொல்லிடாதிங்க, மணிவண்ணன் உங்களை இப்படி பேசுனாருன்னு, ஏதோ அவரு நமக்கு அப்ப அப்ப சின்ன வேஷம் கொடுக்குறாரு அதுல வேட்டு வச்சுட்டு போயிடாதிங்கன்னப்ப அந்த காமெடியை லைவா அங்க இருந்தப்ப எப்படி உணர்ந்துருப்போன்னு பாருங்க. இப்படி நிறைய பேசிட்டு, இந்த டிஜிட்டல் டெக்னாலாஜிக்கு வந்து ஒரு கேள்வி கேட்டாரு பாருங்க, அது வேற லெவல்.


என்னான்னா, " சார் இப்ப நான் பழைய கார்ல என் வீட்டுலருந்து எக்மோர் வர ஒன் ஹவர் ஆகுது, புது கார் வாங்குறேன் அதுல நான் எவ்வளவு நேரத்துல வரனும், அதுல பாதி நேரம் குறைய வேண்டாம் கொஞ்சம் காவாசி நேரமாச்சும் குறையனும்ல்ல, ஆனா, பாருங்க புது கார்ல வர ஒன் ஹவர்க்கு இப்ப 2ஹவர் ஆகுது அப்ப எதுக்கு புது காரு எனக்குன்னவரு. தன்னோட நூறாவது நாள் படத்தை ரீரெக்கார்டிங்கோடு சேத்து பதினாறரை நாள்ல அவர் முடிச்ச விஷயத்தை அவர் சொன்னப்ப அந்த எக்ஸாம்பிள் எங்களை பிரம்மிக்க மட்டும் இல்லை யோசிக்கவும் வச்சுது.