தனியாக பவுலிங் போட்டு, தனியாக பேட்டிங் செய்து..., ஈஸியா ஜெயிச்சாரா சிவகார்த்திகேயன்?
ஒருவர் மிக வேகமாக வளர்ந்தால் ஒன்று சந்தேகம் வரும் அல்லது வயிற்றெரிச்சல் வரும். சிவா விஷயத்தில் இரண்டாவதுதான் அதிகம் நடந்தது. ஆனால் உண்மை என்னவென்பது சிவகார்த்திகேயனின் நெருக்கமானவர்களுக்கு நன்றாக தெரியும்.
2012 சிவா எதிர் நீச்சல் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். 3, மெரீனா, மனம் கொத்தி பறவை என்று நடிகராக ஃபார்மாகிவிட்டார். ஆனாலும் இந்த சமூகம் அதுவரை ஒரு ஹீரோ மெட்டீரியலாக ஏற்றுக்கொள்ளவில்லை. சிவாவை ஜாலி பேட்டி எடுங்கள் என்று சொன்னார்கள் வார இதழில். கேள்விகளை தயாரிக்கும்போது 'நீங்க ஆர்யா மாதிரி ப்ளேபாயா? இல்லை ராமராஜன் மாதிரி கவ்பாயா?' என்று ஒரு கேள்வி ஆசிரியர் குழுவிடம் இருந்து சேர்க்கப்பட்டது. கேட்டதற்கு சிவா 'ரெண்டுமே வேண்டாம். நான் ஏரியால ஏதோ புகை போடற பாய்னு வெச்சுக்குங்க...' என்றார்.
சமீபத்தில் சிவாவை ரஜினியுடன் பார்த்தேன். 'இப்போதைய சூப்பர் ஸ்டார் ப்ளஸ் அடுத்த சூப்பர் ஸ்டார் ரெண்டு பேர் கூடவும் சேர்ந்து ஒரு ஃபோட்டோ எடுத்துக்குறேன்' என்றேன். 'நமக்கு சூப்பர் ஸ்டார்கற பேர்லாம் வேண்டாம்ணே... அது அவர் ஒருத்தர்தான். எனக்கு சிவகார்த்திகேயன்கற பேர் போதும்' என்றார். ஆக, அவர் மாறவில்லை. நாம்தான் மாறிக்கொண்டிருக்கிறோம். சிவாவை சுற்றிலும் நின்று பார்க்கும் நாம் அவரது வளர்ச்சியை வைத்து அவரது கேரக்டரை பற்றிய பிம்பத்தை மாற்றிக்கொள்கிறோம். ஆனால் அது உண்மையில்லை.
இப்போதைய நிலையில் ஓப்பனிங்தான் ஒரு ஹீரோவின் பொசிஷனிங்கை தீர்மானிக்கிறது. தமிழ்நாட்டில் ஓப்பனிங் இருக்கும் ஹீரோக்கள் நான்கே பேர் தான். ரஜினி, விஜய், அஜித், சிவகார்த்திகேயன். எனவேதான் இந்த நான்கு பேரின் படங்களை மட்டும் எம்ஜி எனப்படும் மினிமம் கேரண்டி முறையில் வாங்கத் தயாராக இருக்கின்றனர் தியேட்டர் அதிபர்கள்.
இந்த வளர்ச்சிக்கு பின்னால் எத்தனை அவமானம், எத்தனை நிராகரிப்புகள், எத்தனை வேதனைகள் இருக்கிறது என்பது சிவாவை நெருக்கமாக அறிந்தவர்களுக்கு மட்டும்தான் தெரியும்.
சிவா செடியாக இருக்கும்போது வளர வேண்டும் தண்ணீர் ஊற்றியவர்களை விட கருக வேண்டும் என்று வெந்நீர் ஊற்றியவர்கள்தான் அதிகம். ஆனால் எல்லோரையும் சிறு புன்னகையோடே கடந்துகொண்டிருக்கிறார். சிவாவின் வளர்ச்சிக்கு தான்தான் காரணம் என்று மார் தட்டிக்கொள்ள துடிப்பவர்கள் கூட சிவாவின் ஏதாவதொரு கட்டத்தில் அவரை வளரவிடாமல் செய்ய துடித்திருக்கிறார்கள். யாரிடமும் பகைமை காட்டாமல் பழி வாங்கத் துடிக்காமல் ஒரு மனிதன் தன் வேலையில் மட்டுமே கவனம் செலுத்தி உழைத்தது மட்டும்தான் சிவாவின் வளர்ச்சிக்கு காரணம்.
அப்பாவுக்கு சிறையில் பணி என்பதால் குற்றவாளிகளை அவர்களது தண்டனை காலத்தில் பார்த்து வளர வேண்டிய சூழல் சிவாவுக்கு. குற்றவாளிகளை தண்டனை காலத்தில் பார்ப்பது எவ்வளவு பக்குவத்தை கொடுக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். ஒரு ஊரில் நண்பர்கள் செட் ஆவதற்குள்ளாகவே அடுத்த ஊருக்கு செல்ல வேண்டியிருக்கும். அதனால் நண்பர்கள் இல்லாமல் பல நேரம் தனியாக பவுலிங் போட்டு, தனியாக பேட்டிங் செய்து, தனியாக ஃபீல்டிங் செய்து விளையாண்டிருக்கிறார். பதின் பருவம் முடிந்து கல்லூரியில் கலாடி எடுத்து வைத்த சில மாதங்களுக்குள் அப்பாவை இழந்து குடும்ப பொறுப்பை ஏற்க வேண்டிய நிலைமை. தனக்குள்ளே இருந்த மிமிக்ரி என்னும் திறமையை வெளிக்கொணர அவர் பட்ட பாடுகள் கொஞ்சம் நஞ்சம் அல்ல. வெறும் கைதட்டலுக்காக ஒரு மணி நேரம் மிமிக்ரி செய்துவிட்டு வீட்டுக்கு வந்து அடுத்த இரண்டு நாட்கள் தொண்டை வலியோடு துடித்திருக்கிறார். அம்மாவிடமோ அக்காவிடமோ சொன்னால் மிமிக்ரிக்கு தடை விழுந்துவிடுமோ என்று அதையும் மறைத்திருப்பார்.
கலக்கப்போவது யாரு? டைட்டில் ஜெயித்தபிறகு அதே டிவியில் காம்பியரிங் பண்ண வாய்ப்பு வருகிறது. ஆனால் ரிஜெக்ட் செய்கிறார்கள். அன்று அவர் அடைந்த வேதனை. வளர்ந்துகொண்டிருக்கும்போதே திருமணம் செய்துகொள்ள வேண்டிய சூழ்நிலை. அம்மா பேச்சைத் தட்ட முடியாமல் சம்மதித்தால் கழுத்தை நெரிக்கிறது பொருளாதார சூழல். வரவேற்பு நிகழ்ச்சியில் எதிர்பாராத விதமாக அதிக கூட்டம் வந்துவிட அவர்களை சாப்பிட வைக்க அம்மாவுக்கே தெரியாமல் எங்கெங்கோ கடன் கேட்க வேண்டிய சூழல். அதை அடைக்க பட்ட பாடு... இது எல்லாமே சினிமாவுக்கு வருவதற்கு முன்பு மட்டும்தான்... சினிமாவுக்கு வந்த பின்னர் இதை போல பல கடினமான சூழ்நிலைகளை சந்தித்துக்கொண்டிருக்கிறார்.
இப்போது சிவாவை சந்தோஷப்படுத்துவது ஓப்பனிங் அல்ல. அவரது மகள் ஆராதனா. மனைவி ஆர்த்தி. அம்மா, அக்கா. இந்த நால்வர்தான் சிவாவின் சந்தோஷம். கடந்த 6 ஆண்டுகளாக சிவா தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை மாற்றவில்லை. 'கீப் யுவர் பேரண்ட்ஸ் ஹேப்பி... லைஃப் வில் பி தெ ஹேப்பியஸ்ட்...'
சினிமாவில் பார்ட்டி நடந்தால் ஒரு ஓரமாக நின்று மற்றவர்கள் குடிப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டு ஜுஸ் மட்டும் குடித்துக்கொண்டிருப்பார். அது அவர் அம்மாவுக்கு அவர் செய்து கொடுத்த சத்தியம்.
சிவாவின் வாழ்க்கை எப்போதுமே சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கான பாடம். உண்மையிலேயே எதிர் நீச்சல் அடித்துதான் இந்த நிலைக்கு வந்திருக்கிறார் சிவா. இன்னும் எதிர் நீச்சல்தான். அது இனிமேலும் தொடரும். சிவா முன்னேறிக்கொண்டே தான் இருப்பார்.