பெரிய நடிகர்கள், கலைஞர்களைப் பங்கேற்கச் செய்து வணிகச் சந்தைக்கான
பொழுதுபோக்கு வெற்றித் திரைப்படங்களைத் தொடர்ந்து இயக்கியவர் எஸ்.பி.
முத்துராமன். எளிமையான கதைச் சுற்றுகளுடன் கூடிய தொய்வில்லாத தெளிவான
படங்கள் அவருடையவை. அவருடைய நேர்காணல் ஒன்றில் தம்மைக் கவர்ந்த அருமையான
பொழுதுபோக்குப் படங்கள் என்று சிலவற்றைக் கூறினார். அப்பட்டியலில் ஆண்
பாவம் என்ற படம் இருந்தது. சிறு வயதில் பார்த்திருந்த அப்படம் கலகலப்பாக
இருந்தது என்பதுதான் நினைவு. முத்துராமன் கூறிய பிறகு பின்னொரு வாய்ப்பில்
ஆண் பாவம் திரைப்படத்தைப் பார்த்தேன். தெள்ளத் தெளிவாக, எடுப்பு சுத்தமாக,
களிகூறுகளின் தொகுப்பாக ஆக்கப்பட்ட தமிழ்த் திரைப்படம் ஆண் பாவம்.
இன்றைக்கும் எந்தத் தொலைக்காட்சியில் அப்படம் காட்டப்பட்டாலும் தளர்வாக
அமர்ந்து புன்னகை மாறாத முகத்தோடு காணலாம். நாம் நம்புவதற்குக் கடினமான
இளமை அகவையிலேயே அப்படத்தை எடுத்து முடித்திருந்தார் பாண்டியராஜன்.
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பத்தொன்பதில் பிறந்தவரான பாண்டியராஜன்
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பத்தைந்தாம் ஆண்டில் ஆண்பாவம் திரைப்படத்தை
வெளியிட்டார். அதற்கும் ஓராண்டு முன்னதாக அவருடைய முதற்படம் கன்னிராசியை
எடுத்து முடித்திருந்தார். இருபதாம் அகவைத் தொடக்கங்களில் படங்களை இயக்கி
வெற்றி பெற்றுத் தொடர்ந்து பயணித்தவர்களில் ஸ்ரீதரும் பாண்டியராஜனுமே
தலையாயவர்கள்.
திரையுலகில் நுழைவதற்கே ஆண்டுக்கணக்கில் காத்திருக்க நேர்ந்த
அக்காலத்தில் இவர்கள் செய்ததைச் செயற்கரிய செயல் என்றே சொல்ல வேண்டும். தம்
இருபத்தைந்தாம் அகவையில் இப்படத்தை எடுத்து முடித்த பாண்டியராஜன் அதற்கும்
முன்பாகவே சில ஆண்டுகளாக உதவி இயக்குநராகவும் பணியாற்றினார். ஸ்ரீதர்
பணக்கார வீட்டுப் பிள்ளை. தம் சொந்தப் பொருளையே முதலீடாக்கி முதற்படம்
எடுத்தவர். ஆனால், பாண்டியராஜன் குமுகாயத்தின் கடைத்தட்டு வாழ்வினர்.
சென்னையைச் சேர்ந்த வெள்ளந்தி மக்களின் பிள்ளை. அத்தகைய
பின்புலத்திலிருந்து திரைத்துறைக்குள் நுழைந்து ஒரு முதலீட்டாளரைப்
பிடித்துப் படமெடுத்து வென்றது வியப்புக்குரியதுதான். பாண்டியராஜனைப் போன்ற
ஒருவர் இளமையிலேயே தொழில் கற்று வெற்றி பெற்றதற்கு அவருடைய ஆசான்
பாக்யராஜின் சந்தை மதிப்பும் ஒரு காரணம்.
பாண்டியராஜனை நான் எளிமையாக மதிப்பிட்டிருந்தேன். அவருடைய நேர்காணல்
ஒன்றைப் படித்த பிறகுதான் அதை மாற்றிக்கொண்டேன். திரைத்துறையில் நுழைந்து
ஓர் உதவி இயக்குநராகப் பணியாற்றிப் படமியக்கும் வாய்ப்பைப் பெறுவது
குறித்து அவர் தெளிவான வரையறை ஒன்றைச் சொன்னார்.
நினைவிலிருந்து அதைச் சொல்கிறேன் : "சினிமாவில நீங்க உதவி இயக்குநராகச்
சேர்ந்துட்டீங்கன்னா தொழில்நுட்பம் சார்ந்து கத்துக்கிறதுன்னு ஒரு பகுதி
இருக்கு. அதைக் கத்துக்கிறதுக்கு மூன்று நான்கு படங்கள் போதுமானது. ஓர்
உதவி இயக்குநராக மூன்று நான்கு படங்களுக்கு மேல் நீங்க கத்துக்கறதுக்குப்
பெரிசா எதுவுமிருக்காது. அந்த மூன்று நான்கு வருசத்துக்குள்ள நாலைஞ்சு படம்
வேலை செஞ்சிருப்பீங்க. அது போதும். வேண்டியதைக் கத்துக்கிட்டாச்சு. அந்த
இடத்திலிருந்து உங்க உதவி இயக்குநர் வாழ்க்கைய விட்டு வெளிய வரப்
பார்க்கணும். நீங்க படம் இயக்குறதுக்கு முயற்சி பண்ணனும். அந்தச் சரியான
நேரத்தை விட்டுட்டீங்கன்னா உங்க வாழ்க்கை உதவி இயக்குநராகவே கழிஞ்சிடும்.
பத்து வருசம் இருபது வருசம் போறதே தெரியாது. கடைசி வரைக்கும் படமியக்கும்
வாய்ப்பு கிடைக்காமப் போய்விடலாம்."
இந்தத் தெளிவுதான் பாண்டியராஜனை இளமையிலேயே படமியக்கச் செய்தது.
ஆண்பாவத்தின் வெற்றிதான் பாண்டியன் என்ற நடிகரை மேலும் இன்னொரு சுற்று
வரவைத்தது. அக்காலப் பெரியம்மாக்கள் தம் மகனுக்குச் சீதாவைப் போன்ற
பெண்ணைத் தேடினார்கள். கொல்லங்குடி கறுப்பாயி என்ற பாட்டியம்மா தமிழகம்
அறிந்தவரானார். பாண்டியராஜனுக்கும் ஒரு நடிகராக வரவேற்பு கிடைத்தது.
இயக்கத்துக்கு அப்பால் அவர் நாயகனாகவும் நடிக்கலானார்.
பாண்டியராஜனிடம், "உங்கள் தேதிகளை வாங்க வேண்டுமென்றால் நான் என்ன செய்ய
வேண்டும் ?" என்று தயாரிப்பாளர் ஒருவர் கேட்டாராம். அப்போது
வெளியாகியிருந்த பகல்நிலவு என்ற படத்தின் வழியாக மணிரத்னம் என்ற புதியவர்
சிறிய சலனத்தை ஏற்படுத்தியிருந்தார். "மணிரத்னம் என்னும் இயக்குநர் நன்கு
படமெடுக்கிறார். அவரை இயக்குநராக அமர்த்தி என்னை வைத்துப் படமெடுப்பதானால்
சொல்லுங்கள். உடனே தேதிகளைத் தருகிறேன்" என்று அந்தத் தயாரிப்பாளரிடம்
பாண்டியராஜன் கூறினாராம். அவர்கள் இருவரும் ஒரு படத்திலேனும் இணையும்
வாய்ப்பு அமையவில்லை. ஆனால் இந்நிகழ்வை மணிரத்னம் ஒரு விழாவில் நன்றியோடு
கூறியமர்ந்தார். பாண்டியராஜனுக்குத் திரைப்போக்குகளைப் பற்றிய நுண்ணுணர்வு
இருந்தமையால்தான் அவர் அப்போதே மணிரத்னத்தைக் கணித்தார்.
பாண்டியராஜன் நடித்தவற்றில் 'ஏட்டிக்குப் போட்டி' என்ற படம் எனக்குப்
பிடித்த படம். அக்காலத்து ஊர்ப்புறத்து இளைஞன் ஒருவனுக்கும் அவன் வாழ்வில்
எதிர்பாராத விதமாக வரும் நகரத்துப் பள்ளி மாணவிக்கும் இடையில் தோன்றும்
காதல்தான் அப்படத்தின் கதை. பாண்டியராஜனின் கிராமத்துக்குச் சாரணர் இயக்க
மாணவியர் குழுவொன்று சேவை முகாமுக்காக வரும். அக்குழுவில் ஒரு மாணவி
காட்டுக்குள் காணாமல் போய்விடுவார். மாணவியைக் காணாத சாரணர் குழு
தேடிப்பார்த்துவிட்டுச் சென்று விடும். அம்மாணவியைத் தற்செயலாகக்
கண்டுபிடித்து தம் வீட்டுக்கு அழைத்து வருவார் பாண்டியராஜன். வீட்டுக்கு
வந்தவுடன் அம்மாணவி பூப்பெய்திவிடுவாள். யார் வீட்டுப் பெண்ணாயினும் தம்
வீட்டில் பூப்பெய்தினால் அவ்வீட்டுக்கு நன்னிகழ்வுதானே ?
பாண்டியராஜனின்
வீட்டார் அப்பெண்ணுக்கு உரிய சடங்குகளைச் செய்து ஓலை கட்டி அமர்த்தி
வைப்பார்கள். இடையில் நாயகியைத் தேடி பெண் வீட்டார் வருவதும், சடங்கு
முடியாமல் அனுப்ப மாட்டோம் என்று ஊரார் வாதிடுவதுமாக அக்கதை நகரும்.
காணமற்போன நாளிலிருந்து தன்னைக் கண்ணாகக் கவனித்துக்கொள்ளும் பாண்டியராஜன்
குடும்பத்தார் மீது அவளுக்குப் பாசம் தோன்றிவிடும். அது நாயகன் மீது காதலாக
மாறிவிடும்.
எதிர்ப்புகளை வென்று காதலர்கள் எவ்வாறு சேர்கிறார்கள் என்பது
மீதக்கதை. என் நினைவிலிருந்து படக்கதையைக் கூறியிருக்கிறேன். ஏட்டிக்குப்
போட்டி படத்திற்குத் திரைக்கதை வசனம் எழுதியவர் பாண்டியராஜன்தான்.
இயக்கியவர் ஆர். கோவிந்தராஜன். இணையத்தில் இப்படம் இருக்கிறது. எண்பதுகளின்
கலகலப்பான நாட்டுப்புறப் படங்களை விரும்புவீர்கள் என்றால் கட்டாயம்
பார்க்கலாம்.
பாண்டியராஜன் இயக்கிய நெத்தியடி என்ற படத்தின் முதற்பாதியில் 'தமிழ்த்
திரைப்படங்களில் ஆக்கப்பட்ட மிகச்சிறந்த நகைச்சுவைப் பகுதி' இருக்கிறது.
பாண்டியராஜனின் படங்களில் ஜனகராஜ், ஈரோடு சௌந்தர், திடீர் கண்ணையா ஆகியோர்
நல்ல கதைப் பாத்திரங்களில் வெளிப்பட்டனர். மூத்த நடிகர்கள் வீகே இராமசாமி,
தங்கவேலு (மனைவி ரெடி) ஆகியோரையும் பாண்டியராஜன் நன்கு பயன்படுத்தினார்.
தொண்ணூறுகளின் தொடக்கத்தில் அகல் திரைப்படங்களும் பொருட்செலவுப் படங்களும்
போக்குகளைத் தீர்மானம் செய்தன. அப்போதுதான் பாண்டியராஜனின் திரைப்படங்கள்
பின்தங்கின. ஆனால், பாண்டியராஜனின் முப்பதுக்கும் மேற்பட்ட படங்கள்
இன்றைக்குப் பார்த்தாலும் களிப்பூட்டத் தவறாதவை. கதைக்குள் நிகழ்த்தப்படும்
நகைச்சுவைக்கு எப்போதும் தனிச்சுவை உண்டு. அதை விரும்புவோர்க்குப்
பாண்டியராஜனின் படங்கள் இப்போதும் பிடிக்கும்.
- கவிஞர் மகுடேசுவரன்