Friday 6 August 2021

தமிழ் ஊடகங்களில் பெண்கள்:

 சன் மியூசிக்கில் "மச்சான் பேரு மதுர, நீ நின்னு பாரு எதிர" பாடல் ஓடிக்கொண்டிருந்தது. இந்தப் பாட்ட மியூட் பண்ணிப் பாத்தீங்கனா 

 ஹீரோயினோடு விஜய் ஆடும்போது நடன அசைவுகள் கிட்டத்தட்ட பிட்டுப்படம் பார்க்கும் அனுபவத்தைக் கொடுக்கும். ஒரு Soft Porn கொடுக்கும் அதே அனுபவம்.




இது இன்று நேற்று அல்ல, எம்.ஜி.ஆர் காலத்தில் தொடங்கி சிவாஜி,ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், சிம்பு என கதாநாயகனோடு ஹீரோயின் நடனமாடும் பாடல்களை மியூட் பண்ணிப்பார்த்தால் இது தான் தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு, தமிழர்களின் கலை உணர்வு என்பது பாலியல் மன வக்கிரங்களின் நீட்சி.

இந்த எழவுக் கருமாந்திரத்தைத் தான் குடும்பத்தோடு தாத்தாப் பாட்டி அப்பா அம்மா பேரப்பிள்ளைகள் சகிதம் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம். 

இந்த பாலியல் அருவருப்பை, வக்கிரங்களை பார்த்து வளரும் ஆண் குழந்தைகள் அனைவரும் மனதளவில் ரேப்பிஸ்டுகளாகத் தான் வளர்வார்கள், வளர்ந்திருக்கிறார்கள். பெண்களுக்கு Resistance உணர்வு அதிகம் என்பதால் பெரும்பாலும் துணியமாட்டார்கள். அபூர்வமாகத்தான் அங்கொன்றும் இங்கொன்றும் அபத்தங்கள் நிகழும்.

ஆண்களுக்கு கட்டுப்படுத்தும் திறன் இயற்கையிலேயே மிகமிகக் குறைவு. அவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் இந்த இச்சையைப் போக்கிக் கொள்ள ஒரு வடிகால் தேவைப்படுகிறது. அந்த இச்சையை கையாளத் தெரியாதவர்கள் இந்த பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு மாட்டிக் கொள்கிறார்கள், சிலர் தப்பித்து விடுகிறார்கள், மீதமிருக்கும் பெரும்பாலனவர்கள் உத்தமர்கள் என்று எண்ணிவிட வேண்டாம், அவர்கள் கட்டுப்படுத்திக் கொள்கிறார்கள் இல்லை அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று அர்த்தம்.

பெண்களுக்கு எதிரான நம் சமூகக் குற்றங்கள் தனிமனிதக் குற்றங்கள் அல்ல, இது மெல்ல குழந்தைப்பருவத்தில் இருந்தே மீடியா மூலம் அது சினிமா, டிவி, பத்திரிக்கை, டிக் டாக், ஃபேஸ்புக், இன்ஸ்டா என எந்த ஊடகத்தை எடுத்தாலும் அங்கே பெண்கள் வெறும் உடலாகத் தான் முன் வைக்கப்படுகிறார்கள். நிர்வாணத்தின் அளவு மட்டும் தான் மாறுபடும் சினிமாவில் தூக்கலாக, டிவியில் கொஞ்சம் கம்மி, முகநூல், இன்ஸ்டாவில் இன்னும் கொஞ்சம் கம்மி. 

முகநூலில் கூட, தங்களை எழுத்தாளராக, அரசியல் ஆக்டிவிஸ்டாக, கவிஞராக, ஓவியராக, பாடகியாக அதாவது ஒரு துறையில் ஆளுமையாக முன்வைக்கும் பெண்கள் அபூர்வம். 

பெரும்பாலும் தங்களை வெறும் உடலாக, அழகாக, சதையாக, காட்டிக்கொள்ளாத பெண்களைக் அரிதினும் அரிது, அது எளிமையாக இருப்பதால் பெண்களும் அதைத்தான் செய்கிறார்கள், விரும்புகிறார்கள்.

Monday 7 June 2021

நடிகை மனோரமா

 1958ஆம் ஆண்டு மாலையிட்ட மங்கை என்ற படத்தில் நகைசுவை நடிகையாக அறிமுகம் ஆகி , 1963 ஆம் ஆண்டு கொஞ்சும் குமரி என்ற படத்தில் கதாநாயகியாக  ஆகி, அலங்காரி , பெரிய மனிதன் ஆகிய மேலும் இரண்டு படங்களில் கதாநாயகியாக நடித்து மீண்டும் காமெடிக்கு அவர்....... யார் இந்த மனோரமா? எப்படி வளர்ந்தது இந்தக் கலை ஆல மரம்.? எப்படி எங்கே வளர்ந்து விரிந்தது இது ? 




கவிஞர் கண்ணதாசன் 'மாலையிட்ட மங்கை' படத்தை தயாரிக்க ஆரம்பித்தார். 
நாடக நடிகையாக இருந்த மனோரமாவுக்கு ஏதாவது வேடம் தரவேண்டும் 
என்பதற்காக 'காமெடி' நடிகையாக ஒப்பந்தம் செய்தார். நகைச்சுவை 
நடிகையாக அதுவரையில் மனோரமா நடித்ததே இல்லை. 

பயந்து போன மனோரமா "இதற்கு முன் இப்படி வேஷத்தில் நடிச்சதில்லயே..." 
என்று கூற, அதற்கு கவிஞர் கண்ணதாசன், "பரவாயில்லை நடி எல்லாம் 
சரியாப்போகும் உன் திறமைக்கு இதில் நல்ல பேர் வரும்" என்று ஆறுதலும் 
தைரியமும் சொல்லி நடிக்க வைத்தார். அன்று அவர் சிரிப்பு நடிகையாக 
அறிமுகப்படுத்திய வாழ்க்கைதான் மனோரமாவுக்கு கடைசிவரை நிலைத்து
 நிற்கிறது. 

நகைச்சுவை நடிகையாக வலம் வந்த மனோரமாவை ஹீரோயினாக 
அறிமுகப்படுத்தியவர் டி.ஆர்.சுந்தரம். தனது மாடர்ன் தியேட்டர்ஸ் 
தயாரிப்பில் அவரே இயக்கிய ‘கொஞ்சும் குமரி’ படத்தில் மனோரமாவை 
நாயகியாக்கினார். இதில் ஹீரோவாக நடித்தது ஆர்.எஸ்.மனோகர். 

மனோரமாவை ஹீரோயினாக மக்கள் ஏற்றனர். படமும் ஓடியது. ஆனாலும்
 ஒரு சில படங்களுக்கு பிறகு அவரால் கதாநாயகியாக நீடிக்க முடியவில்லை. 
மீண்டும் நகைச்சுவை  வேடங்களுக்கே அழைத்தனர் . 

மனோரமா கண்ணதாசனிடம் "எல்லாம் உங்களாலதான் . கதாநாயகியாக 
நடிக்கும் லட்சியத்தில்  இருந்த என்னை நீங்கள் காமெடி நடிகையாக 
அறிமுகப்படுத்தியதால்தான் இப்ப எல்லோரும் காமெடிக்கு கூப்பிடறாங்க 
என்று செல்லமாகக் கோபித்துக் கொள்ள , 

அந்த மகா கவிஞன் தனக்கே உரிய கள்ளமில்லாச் சிரிப்போடு மனோரமாவிடம்  
 " அட பைத்தியமே... நீ கதாநாயகியாக மட்டும் நடித்தால் பத்து வருடம்தான் 
தாக்குப் பிடிப்பாய். அதே நகைச்சுவை நடிகையாகிவிட்டால் நீ விரும்பும் வரை
 நடித்துக் கொண்டே இருப்பாய்" . என்றார் . 

செல்லக் கோபம் குறையாமல்  "எனக்கு சாகும்வரை கூட நடிக்க ஆசைதான் " 
என்றார் மனோரமா . கவியரசர் மறுபடியும் சிரித்துக் கொண்டே "சரி" என்றார் . 
அந்த சரி என்ற வார்த்தையின் ஆயுள் 55 ஆண்டுகள் நீடித்து இப்போது 
அமரத்துவம் அடைந்து இருக்கிறது .

 டைரக்டர் கே. பாலசந்தர், " நான் நூற்றுக்கும்  மேற்பட்ட 
நட்சத்திரங்களை அறிமுகப் படுத்தியிருப்பதாகவும்,  கவியரசர் கண்ணதாசன் 
மனோரமாவை  மட்டுமே அறிமுகப்படுத்த முடிந்தது என்றும் கூறினார். நான் 
நூறு பேர்களை அறிமுகப்படுத்தியதும், அவர் மனோரமாவை 
அறிமுகப்படுத்தியதும் சமம். அந்த நூறு பேருக்கு சமமான திறமைசாலி 
மனோரமா" என்றார். 

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு கவிஞர் கண்ணதாசன் அமெரிக்காவிற்குப 
போகும்போது மனோரமாவிடம்,"யார் யாருக்கோ பாராட்டு விழா  
நடத்துகிறார்கள். உன்னைப் போன்ற நல்ல கலைஞர்களை தேடிப் பிடித்து 
விழாக்கள் நடத்துகிறார்களா என்றால்  இல்லை. நான்அமெரிக்காவில் இருந்து
வந்ததும் உனக்கு பெரிய அளவில் ஒரு பாராட்டு விழா நடத்தப் போகிறேன்" 
என்று கூறிவிட்டுச் சென்றார். 

ஆனால் உயிரும் உடலுமாகச் சென்ற கண்ணதாசன்  குடைசாய்ந்த தங்கத் 
தேர்போல பிணமாகத்தான்  இந்தியா வந்தார்.  இதன் பிறகு எத்தனையோ
பேர் பாராட்டுவிழா நடத்த அனுமதி கேட்டும் மனோரமா மறுத்து விட்டார்.


கவிமொழி இரவுக்ககாயிரம் கண்கள், ...

 கவிமொழி





இரவுக்ககாயிரம் கண்கள், ... 

இரவுக்ககாயிரம் கண்கள், 
பகலுக்கு ஒன்றேவொன்று - 

காலத்தை வென்ற கவிஞர் கண்ணாதாசன் ஆளுமை என்பதை தாண்டி, 

அவர் ஒரு அனுபவம். தனியொரு மனிதன் வாழ்ந்து கடக்க வேண்டிய அனுபவத்தை.... 

தீர்த்து கழிக்க வேண்டிய கர்மங்களை, 
பட்டும், பெற்றும் கிடைக்க வேண்டிய தெளிவை 
வெறும் வாசிப்பால் வழங்கிவிட வல்லது கவியரசு
கண்ணதாசனின் படைப்புகள். 

எளிமையான வரிகள் என்று வார்த்தையை மட்டும் ரசித்து கடக்கிற சிக்கல் அவர் படைப்புகளுக்கு உண்டென்ற போதும். ..

அதன் ஆழத்தை, அர்த்தத்தை நின்று நிதானித்து கடக்க வேண்டியது வாசகனுக்கு விடப்பட்ட சவால்!!  

மன்னனின் கௌரவம் சதுரங்கம் நடுவிலே 
மரிக்கின்ற சேனையோ பிள்ளையின் வடிவிலே 
ஆகட்டும் பார்க்கலாம் ஆட்டத்தின் முடிவிலே அறுபதை இருபது வெல்லுமா உலகிலே ...

இது திரைப்படத்தில் ஒரு மகனுக்கும் தந்தைக்கும் நடக்கிற கதைச்சூழலுக்கு பொருத்தமான வரிகள் என்றபோதும்.
 இந்த வரிகளை தனித்து படிக்கிற வேளையில்... பலவித தரிசனங்களை தர வல்ல வரிகள் இவை. 

"மன்னனின் கௌரவம் சதுரங்கம் நடுவிலே; மரிக்கின்ற சேனையோ பிள்ளையின் வடிவிலே" 

கலை, 
அரசியல், 
குடும்பம்

 என எந்த தளங்களை எடுத்து கொண்டாலும், அவற்றில் முந்தைய தலைமுறைக்கும் இன்றைய தலைமுறைக்கும் இடையே சமகாலத்தில் நிலவும் சூழலை சூட்சுமமாக சொல்லும் வரிகள்...  

முரண்களை பேசுவதில் முத்திரை பதித்தவர்,
 சுவை குன்றாமல், மொழியின் வளமை குறையாமல் கருத்தை ஆழமாக விதைப்பதில் வித்தகர்.

 பார்ப்பவன் குருடனடி, 
படித்தவன் மூடனடி என்று தொடங்கும் பாடலில் 

நேர்மையின் பக்கம் நிற்பதன் இயலாமையை சொல்ல முடிந்த அவரால் நன்னெறி வாழ்வதன் மூலம் இடையில் வரும் இடர்களை தாங்குவதன் மூலம் வெற்றிகள் 
நம் வசமே என்பதையும், அதற்கான காலமும், நேரமும், போதிய பொறுமையும் மனம் வழங்கவேண்டும் என்பதையும் உரக்க சொல்லி நம்பிக்கையை வளர ஒரு போதும் கவிஞர் தவறியதில்லை.

 மூடருக்கு மனிதர் போல முகமிருக்குதடா மோசம் நாசம் வேஷமெல்லாம் நிறைந்திருக்குதடா காலம் மாறும் வேஷம் கலையும் உண்மை வெல்லுமடா கதவு திறந்து பறவை பாடிச் செல்லுமடா.. என்றும் சொல்லும் போதும், 

"காலமகள் கண்திறப்பாள் சின்னையா

நாம் கண் கலங்கி கவலைப்பட்டு என்னையா? 

நாலுபக்கம் வாசலுண்டு சின்னையா 

நமக்கு அதிலே ஓர் வழியில்லையா சொல்லையா? 

என்று பாடலின் மூலம் அவர் கேள்வியெழுப்பும் போது, 

வாழ வழியில்லை என்று யாருக்கு தான் சொல்லத்தோன்றும். வாய்ப்புகள் நாலு திசையில் கொட்டி கிடப்பதையும், 

அதில் ஒன்றை கையிலேந்தி வெற்றியை நுகர எக்காலத்தவருக்கும் கவிஞர் நட்டு வைத்த வைட்டமின் வரிகள். 

 சாமானியனுக்கும் கவிதை அனுபவம் சாத்தியம் என்பதை உணர்த்திய வரிகள் கவிஞருடையது.... 

இரவின் கண்ணீர் பனித்துளி என்றார் முகிலின் கண்ணீர் மழையெனச் சொல்வார் 

இயற்கை அழுதால் உலகம் செழிக்கும் மனிதன் அழுதால் இயற்கை சிரிக்கும் இயற்கை சிரிக்கும் 

என்கிற வரிகளில் இருக்கும் 
எளிமை நடையும்... 
உவமை சுவையும் கேட்பவரின் மனதை விசாலப்படுத்துபவை.

 அதே சமானியனுக்கு உலக இலக்கியத்தை அறிமுகம் செய்தவரும் கவிஞர் தான் எனில் அது மிகையில்லை. .. 

பாடல் வெளிவந்த வேளையில் 
பெரிதும் பாரட்டப்பட்ட வரிகளான 

"இரவுக்கு ஆயிரம் கண்கள், பகலுக்கு ஒன்றே ஒன்று அறிவுக்கு ஆயிரம் கண்கள் உறவுக்கு ஒன்றே ஒன்று " 

என்ற போது அவர் உள்நாட்டு சாத்திரங்களை மட்டுமல்ல 
பிறநாட்டு 
நல்லறிஞர் சாத்திரங்களையும் சாமனிய இரசிகனுக்கும், வாசகனுக்கு கொண்டு சேர்த்தவர். மேல் வரிகளின் சாயல் ஆங்கில இலக்கியத்தில் 

"பிரான்சிஸ் வில்லியம் போர்டிலியன் எழுதிய 

"The night has thousand eyes, and the day but one: yet the light of the bright world dies with the dying sun" 

 என்றவரிகளில்
கவிஞர் சொல்வளம் மின்னுவதை காண முடியும். 

"கூட்டும் இசையும் கூற்றின் முறையும்; காட்டும் என்னிடம்" எனும் போது 

"தில்லையில் கூத்தனே" என்றும், 

"எதிலும் இயங்கும் இயக்கமும் நானே " என்ற வரிகளை கடக்கையில் 

"அனைத்துலகும் ஆக்குவாய் காப்பாய், அழிப்பாய் அருள்தருவாய் போக்குவாய் என்னைப் புகுவிப்பாய்" 

எனவும், "ஆடும் கலையின் நாயகன் நானே" என்ற வரியை ரசிக்கையில் 

நள்இருளில் நட்டம் பயின்றாடும் நாதனையும்
 மனம் இயல்பாகவே இணைத்து கொள்கிறது

. ஒரு கவிதை வரியின் வெற்றி இதுவே. 

அது பாடபெறுகிற சூழலை தாண்டி அதை 
வாசிப்பவன்/கேட்பவன் மனவிரிவை கொள்வானெனில்,... 

புதிய அனுபவங்களை பெறுவானெனில் அதுவே உயர் கவிதை.

படித்ததில்
பிடித்தது

Sunday 17 January 2021

போட்டிப் பாடல்களும் பாடகர்கள் போட்டியும்!

 போட்டிப் பாடல்கள் என்று திரைப்படங்களில் பலவிதமாக அமைவது உண்டு. சிறைச்சாலையில்– சன்னியாசமா, சம்சாரமா என்ற போட்டி வெடித்து, கைதிகள் தப்புவதற்கு ஒரு திரைப்பாடல் காரணமாக அமைகிறது (கணவனே கண்கண்ட தெய்வம்). சிரிப்பு நடிகர் பிரண்டு ராமசாமியின் பாட்டுக்குரலை நாம் அபூர்வமாகக் கேட்கும் பாடல் இது.



இதே கருத்திலான பாடல், சிரிப்புக்கும் சிந்தனைக்கும் வழிவகுக்கும் வகையில் ‘சந்திரோதயம்’ படத்தில், காசிக்குப் போகும் சன்னியாசி, என்று ஒலிக்கிறது. எம்.ஜி.ஆர்., நாகேஷ், மனோரமா ஆகியோரை வைத்துப் படமாக்கப்பட்ட மிக ரசமான வாலியின் பாடல்.
ஆணுக்கும் பெண்ணுக்கும் போட்டி என்ற கருத்தில் சில பாடல்கள் உண்டு. இந்த வகையில் அமைந்து, எப்படியும் பெண்தான் உயர்ந்தவள் என்று அழகாகக் கூறுகிற பாடல், ‘பெண்கள் இல்லாத உலகத்திலே’ (ஆடிப்பெருக்கு).
ஆணும் பெண்ணும் சண்டையிடாமல் சேர்ந்து வாழ்வதுதான் உசிதம் என்று முடிவுக்கு வரும் பாடல்களும் உண்டு. உதாரணத்திற்கு, சந்திரபாபு ஜிக்கியுடன் பாடும், ‘தில்லானா பாட்டுப் பாடிக் குள்ள தாரா’ (புதுமைப்பித்தன்).
சில பாடல்களில் ஒன்றன் பின் ஒன்றாக வாதங்கள் முன் வைக்கப்பட்டு, அவற்றில் தலைசிறந்தது வெல்வதாக கூறப்படும்.
உலகத்தில் சிறந்தது எது என்ற கேள்வி எழுப்பப்பட்டு வட்டி, காதல், தாய்மை என்ற பதில்கள் பாடலில் கொடுக்கப்படுகின்றன. தாய்மைதான் உலகத்தில் சிறந்தது என்ற முடிவு கூறப்படுகிறது. ‘பட்டணத்தில் பூதம்’ என்ற படத்தில் மிக நேர்த்தியாக ஒளி வீசும் பாடல் இது. (பாடல் – கண்ணதாசன், இசை – கோவர்த்தனம்).
இப்படித் தமிழ் சினிமாவில் பலவித போட்டிப் பாடல்களைக் கூறலாம். ஆனால் ‘திருவிளையாடல்’ திரைப்படத்தில், பாடல் போட்டி என்று கூறி ஒரு வித்தியாசமான சூழல் ஏற்படுகிறது. போட்டியே நடக்காமல் அரிய பாடல்களும் அவை தொடர்பான அற்புதமான விளக்கங்களும் கிடைக்கின்றன!
மதுரை மீனாட்சி கோயிலிலே மனமுருக சுந்தரேச பெருமானைப் பாடி வருபவர் பாணபத்திரர் (படத்தில் டி.ஆர். மகாலிங்கம்). ஏழ் இசையாய், இசைப்பயனாய் என்ற தேவாரத்திற்கு ஏற்ப, இசையை இறைவன் வடிவமாகவும் இசை மூலம் செய்யும் வழிபாட்டை வாழ்க்கையின் பயனாகவும் கருதுபவர் அவர்.
நமது ஆலயங்களில் இன்றைக்கும் இசைக்கும் ஓதுவார் மூர்த்திகளைப்போன்ற பாடகர் என்று கொள்ளலாம். தெய்வத்தமிழின் இனிமையும் பண்ணிசையின் மெருகும் கலந்த பாட்டு அவருடையது.
பக்தி மணம் கமழும் அவருடைய வாழ்க்கையும் பாட்டும் தெளிந்த நீரோடையைப் போல் சென்று கொண்டிருக்கும் போது...ஒரு நாள்....
ஹேமநாத பாகவதர் (டி.எஸ்.பாலையா) என்ற ஒரு பெரும் இசைப்புலவர் மதுரைக்குத் தன்னுடைய பரிவாரங்களுடன் வருகிறார். அவரை பாண்டிய மன்னன் வரகுணன் சிறந்த மரியாதைகளுடன் வரவேற்கிறான்.
ஹேமநாத பாகவதர் (பாலமுரளிகிருஷ்ணா குரலில்) ராஜசபையில் அற்புதமாக பாடுகிறார்.
‘ஒரு நாள் போதுமா?’ என்று பல்லவியில் அவர் கேட்கும் போது, போதாது என்று சொல்லத்தான் தோன்றுகிறது. அவருடைய குரலினிமையும் இசை வலிமையும் அப்படி.
மாண்டு என்ற ரசனைக்கு உகந்த ராகத்தில் தொடங்கும் பாடல், எழுந்தோடி தோடியை தொடுகிறது. ராஜசபையில் பாடுவதால் தர்பார் ராகத்தை அழைக்கிறது. மோகனத்தை இழைக்கிறது. என் பாட்டில் தேனடா என்று கானடாவை குழைக்கிறது. அபாரம், அதிசயம், அற்புதம்.
இசை சக்ரவர்த்தி என்று புகழப்பட்ட ஹேமநாதரின் இசையைக் கேட்டு வரகுண பாண்டியனும் மயங்கி விடுகிறான்.
ஆனால், அழகுக்குப் பின்னே ஆபத்து ஒளிந்து கொண்டிருக்கிறது. பாண்டிய நாட்டின் இசைப் புலவர்களைப் போட்டிக்கிழுக்கிறார் ஹேமநாதர். அவர்கள் தோற்றால் பாண்டிய நாடே தனக்கு அடிமையாம். அதன் பிறகு, யாரும் பாடவே கூடாதாம். முத்தமிழுக்கு வித்திட்ட இடம் என்ற பெருமையை மாமதுரை விட்டுவிடமுடியுமா?
இந்தத் தருணத்தில்தான், ஹேமநாதனின் அகங்காரம் பாணபத்திரனின் வாழ்க்கையில் குறுக்கிடுகிறது.
ஹேமநாதருடன் இசைப் போட்டியில் பாணபத்திரர் ஈடுபடவேண்டும் என்ற மன்னனின் கட்டளை வருகிறது.
பக்தி இசையில் தனது ஈடுபாட்டையும் சாஸ்திரிய இசையில் ஹேமநாதருக்கு இருக்கும் மிதமிஞ்சிய தேர்ச்சியையும் பார்க்கும் போது, பாணபத்திரருக்கு அச்சம் ஏற்படுகிறது. போட்டி எப்படி சாத்தியம் என்று பயப்படுகிறார்.
அவர் மனைவி திலகவதி (ஜி.சகுந்தலா) சரியான வழியைக் காட்டுகிறாள். ‘‘என்னால் எப்படிப் பாட முடியும், என்னால் எப்படிப் பாட முடியும் என்று சொல்கிறீர்கள். ஆனால், ‘நான்’, ‘எனது’ என்ற வார்த்தைகளே நமக்கு எதற்கு? நமக்கெல்லாம் மேலே ஒருவர் இருந்துகொண்டல்லவா நம்மை வாழவைக்கிறார்? அவரிடம் சென்று தாங்கள் முறையிட வேண்டியது தானே?’’ என்று அவள் கூறுகிறாள்.
இதுதான், சுந்தரேசரிடம் பாணபத்திரர் முறையிடும், ‘இசைத் தமிழ் நீ செய்த அரும் சாதனை’ என்ற அற்புதமான பாடலுக்கு வழிவகுக்கிறது.
பிரபல எஸ்.ஜி. கிட்டப்பாவின் வழியிலே வந்து, நாற்பது ஆண்டுகள் கோலோச்சிய டி.ஆர். மகாலிங்கம் பாடிய மிகச் சிறந்த பாடல்களில் ஒன்றாக ‘இசைத்தமிழ்’ பாடல் அமைகிறது. ஓர் உயர்ந்த மனிதன், ஊருக்காகப் படும் கவலை பாடல் வரியிலும், மெட்டமைப்பிலும் உன்னதமாக வெளிப்படுகிறது.
பீம்பிளாஸ் ராகத்தில் அமைந்த பாடல், சோதனையான காலத்தில் கடவுளின் திருவடியில் சரணடையும் தன்மையைக் காட்டுகிறது.
இதற்கு சிவபெருமான் எப்படி அருள் செய்வார்? அதுதான் திருவிளையாடல் புராணத்தில் வரும் விறகு விற்ற படலம் என்ற தலைப்பு. சிவாஜி விறகு விற்கும் சிவபெருமானாக வந்து, ‘பார்த்தா பசுமரம்’ என்று தெருவிலே பாமரரையும் கவரும் வகையில் பாடுகிறார்.
அதன் பிறகு, ஹேமநாதன் வீட்டுத் திண்ணையில் படுத்து, முதலில் குறட்டை விடுவதுபோல் சத்தம் செய்து, பிறகு ‘பாட்டும் நானே பாவமும் நானே’ என்று இசைக்கிறார் (டி.எம்.எஸ். குரலில்).
உச்சத்தில் எடுத்து, ஓங்கிய குரலில் தொடுத்து, ஸ்வரக் கலவைகளை அள்ளித்தெளிக்கும் பாடல். டி.எம்.எஸ்ஸின் நாதத்திலும் சிவாஜியின் நடிப்பிலும் வெளிவரும் பாடல், மனதைக் கவரத்தான் செய்கிறது. அது மட்டும் இல்லாமல், அசையும் பொருள் நிற்கச் செய்யும் பாடல் என்று முன்வைக்கப்படுகிறது.
யார் இந்தப் பாடலை பாடியது என்று ஹேமநாதர் கேட்கும் போது, பாணபத்திரரால் தேறாது என்று நிராகரிக்கப்பட்ட சீடன், சும்மா கத்தினேன் என்கிறான் விறகுவெட்டி!
வேண்டாம் என்று நீக்கிய சீடனே இப்படி என்றால், பாணபத்திரரின் இசை வல்லமை எப்படியோ என்று பயந்த ஹேமநாதர், தோல்வியை எழுதிவைத்துவிட்டு இரவோடு இரவாக ஓடிவிடுகிறார்!!
இந்த வகையில், பாட்டுப் போட்டி தொடர்பாக ‘திருவிளையாட’லில் நான்கு பாடல்கள் வருகின்றன. அவற்றின் வண்ணமும் வடிவமும் வெவ்வேறு. ஆனால் ஒவ்வொன்றும் தனிவிதத்தில் ஒளிவீசும் மணியாகத் திகழ்கிறது.
உயர்ந்த கர்நாடக சங்கீத வித்வான், எல்லோரும் ரசிக்கும் வகையில் தொடுக்கும் அருமையான பாடலாக ‘ஒரு நாள் போதுமா’ அமைகிறது.
இத்தகைய மேதையிடமா நான் போட்டியிடுவது என்று இறைவினிடம் சரண் புகும் பாடலாக, ‘இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை’ உள்ளது. ஒரு பக்திப் பாடகனின் உணர்ச்சிப் பெருக்கைத் தேக்கி வைக்கிறது.
சிவபெருமான் விறகு விற்கும் போது பாடுவதாக அமைந்த ‘பார்த்தா பசுமரம்’ சாதாரணர்களும் ரசிக்கக்கூடிய துள்ளல் பாணியில் அமைந்தது. அதே சமயம் வாழ்க்கையின் நிலையாமையை விளையாட்டாகக் கூறி மனிதனின் ஆணவத்தை அகற்றுகிறது.
‘பாட்டும் நானே பாவமும் நானே’ பாடலோ, சிவபெருமானே இசையில் திளைத்து வெளியிடுவதாக உள்ளது. பறைசாற்றுதலுக்கு உரிய கவுரி மனோகரி ராகத்தில் கம்பீரமாக ஒலிக்கிறது. முன் வைக்கப்படும் தெய்வத்தன்மையை உயர்த்திக் காட்டுவதில் அது வெற்றியடைகிறது.
போட்டி இல்லாமலேயே இப்படிப் பலவிதமாக வெளிவரும் சிறந்த பாடல்களின் வண்ணங்கள் நமக்கு ஒன்றைப் புலப்படுத்துகின்றன. மற்றவர்களோடு போட்டியிடுவதை நிறுத்திவிட்டு, தன்னோடு தானே போட்டியிட்டு தன்னை உயர்த்திக் கொண்டால், ஒவ்வொருவருடைய பாடலும் ஒவ்வொரு விதத்தில் வெற்றி பெறும்.

உன்னை காணாத பெண்ணும் ஒரு பெண்ணா?

 சினிமாவில் பொதுவாக பெண்களின் அழகைத்தான் கவிஞர்கள் வர்ணிப்பார்கள். ஆண்களின் அழகையும் வர்ணிக்க முடியும் என்றால் அது எம்.ஜி.ஆருக்குத்தான் பொருந்தும்.



‘குடும்பத் தலைவன்’ படத்தில் ‘கட்டான கட்டழகு கண்ணா, உன்னை காணாத பெண்ணும் ஒரு பெண்ணா?’

என்று எம்.ஜி.ஆரை வர்ணித்திருப்பார் கண்ணதாசன்.

எம்.ஜி.ஆரின் அழகை, ஆளுமையை ‘நீதிக்குப் பின் பாசம்’ படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலில், நாயகி பாடுவது போல கண்ணதாசன் விவரித்திருப்பார். அந்த வரிகள்…

‘தேக்கு மரம் உடலைத் தந்தது
சின்ன யானை நடையைத் தந்தது
பூக்கள் எல்லாம் சிரிப்பை தந்தது
பொன்னல்லவோ நிறத்தை தந்தது’
இந்த வரிகளை படித்தாலே நினைவுக்கு வருபவர் எம்.ஜி.ஆராகத்தான் இருக்க முடியும்.

எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்த கண்ண தாசன் பாடல் ‘மன்னாதி மன்னன்’ படத்தில் அவர் எழுதிய ‘அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா...’பாடல். காரில் எம்.ஜி.ஆர். செல்லும்போது அவர் கேட்டு ரசிக்கும் பாடல்களில் இந்த பாடல் தவறாமல் இடம் பெறும்.


''பஸ்ஸில் பிறந்தவன் இந்தக் கண்ணதாசன்!''

 புதுக்கோட்டையிலிருந்து 'திருமகள்' என்னும் ஓர் இலக்கியப் பத்திரிகை வெளிவந்துகொண்டு இருந்தது. மாதம் இருமுறை வெளிவந்த அந்தப் பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்தவர், பதினேழே வயதான ஓர் இளைஞர்.



அவர் அந்தப் பத்திரிகைக்கு ஆசிரியரானதே ஒரு கதை. அந்தப் பத்திரிகைக்கு விளம்பரம் சேகரிக்கும் வேலையில் போய்ச் சேர்ந்தார் அவர். ஒருநாள், பத்திரிகை ஆசிரியர் லீவில் இருந்தார். முதலாளி விளம்பர அதிகாரியைக் கூப்பிட்டு, ஏதாவது எழுதுமாறு பணித்தார். எழுத்து தாகம் கொண்ட அந்த இளைஞர், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, ஐ.என்.ஏ. படையைப் பற்றி அருமையான ஒரு தலையங்கம் தீட்டிவிட்டார். அது முதலாளிக்கு மிகவும் பிடித்துவிட்டது. அன்றே அவரைத் தம் பத்திரிகைக்கு ஆசிரியராக ஆக்கிவிட்டார். அந்த இளைஞரின் பெயர் முத்தையா.

இப்போது அவர் பெயர் முத்தையா அல்ல; கண்ணதாசன்.

ராமநாதபுரம் ஜில்லாவில் உள்ள சிறுகூடல் பட்டியில், தந்தைக்கு எட்டாவது பிள்ளையாகப் பிறந்த முத்தையா, எட்டாவது வரைதான் படித் தார். இவரது உடன்பிறந்தவர்கள் ஆறு சகோதரி கள், மூன்று சகோதரர்கள். படத் தயாரிப்பாளர் ஏ.எல்.சீனிவாசன், கண்ணதாசனின் தமையன்.

''பள்ளிக்கூடத்தை விட்டவுடன் அஜாக்ஸ் ஒர்க்ஸில் 'டெஸ்பாட்சிங் பாயா'கப் பணியாற்றி வந்தேன். வாரம் ஐந்து ரூபாய் கூலி. என் அண்ணா, ஏ.எல்.எஸ். அங்கே பிரதம காஷியர். சின்ன வயதிலிருந்தே எனக்கு எழுத்து தாகம் உண்டு. அஜாக்ஸ் கம்பெனியிலேயே உட்கார்ந்துகொண்டு கதை எழுதுவேன். 'கிரகலட்சுமி' என்ற பத்திரிகையில் 'நிலவொளியிலே' என்ற தலைப்பில் எழுதிய கதைதான் என் முதல் கதை.


அஜாக்ஸ் ஸ்தாபனத்தில் வேலை பிடிக்காமல் விட்ட பிறகு, சில காலம் எந்த வேலையும் செய்யவில்லை நான். பட்டினத்தார் சமாதியில் போய் உட் கார்ந்திருப்பேன். அங்கேயேதான் தூக்க மும். அதன் பிறகுதான் திருமகள் பத்திரி கையின் ஆசிரியரானேன். ஆனால், அதிலும் ஓராண்டுக் காலம்தான் நீடித் தேன். பின்னர் சென்னைக்கு வந்து 'திரை ஒலி' என்ற பத்திரிகையில் சில காலம் இருந்தேன். அதன் பின், மாடர்ன் தியேட்டர்ஸார் நடத்திய சண்டமாருதம் பத்திரிகைக்குப் போனேன். சண்டமாரு தம் சரியாக நடக்கவில்லை. பத்திரிகையை நிறுத்திவிட்டார்கள். அவர்களுடைய கதை இலாகாவில் என்னை எடுத்துக் கொண்டார்கள். இப்படித்தான் இலக் கிய உலகிலிருந்து சினிமா உலகுக்கு நான் வந்தேன்.''

இன்று தமிழ்நாட்டில் பிரபல கவிஞ ராக விளங்கி வரும் கண்ணதாசன், அந்தக் காலத்தில் அதிகமாக எழுதியது கதைகள்தான். கவிதை இரண்டாம் பட்சம்தான். மாடர்ன் தியேட்டர்ஸில் இவர் கதைகள்தான் எழுதிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

''நீங்கள் முதன்முதலில் பாட்டு எழுதிய படம் எது?''

''டைரக்டர் ராம்நாத். அவர்தான் என்னை ஏற்றுக்கொண்டார். ஜூபிட ரின் 'கன்னியின் காதலி'யில் ஆறு பாட்டு என்னுடையது. 'கலங்காதிரு மனமே, உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே' என்பதுதான் என் முதல் பாட்டு!''


'கண்ணதாசன்' பஸ்ஸில் பிறந்தவர். ஆமாம்! திருமகள் பத்திரிகைக்குக் கடிதம் எடுத்துக்கொண்டு போகிறபோது, தம்மை எப்படி அறிமுகப்படுத்திக் கொள்வது என்று புரியாமல் குழம்பினார் அவர்.

''வெறும் முத்தையா என்றால் மதிப்பிருக்காது என்று தோன்றியது. கவிஞன் என்பவனுக்கு ஒரு தனிப் பெயர், 'கவிதைப் பெயர்' தேவை என்று பட்டது. பஸ்ஸில் போகும் போது யோசித்தேன். எட் டாவது மகன் கண்ணன். நானும் எட்டாவது மகன். ஏன் கண்ணன் என்றே வைத்துக்கொள்ளக்கூடாது? அது, நல்ல பெயர்தான். ஆனால், வெறும் கண்ணனா? அந்தக் காலத்தில் பிரபல மான கவிஞர்கள் எல்லோ ரும் ஏதாவது தாசனாகவே இருந்தார்கள் - பாரதி தாசன், கம்பதாசன்... அவ்வளவுதான்! கண்ண தாசன் பிறந்துவிட்டான்.''


கல்லக்குடி போராட்டத்தில் சிறை சென்றுள்ள கண்ணதாசன், சிறைச்சாலை யிலிருந்தே திரைப்படத்துக் குக் கதை எழுதித் தந்திருக் கிறார். அப்படி அவர் எழுதி வெளிவந்த படம் தான், 'இல்லறஜோதி'.

1954 வரை கவிஞராகவும், அரசியல்வாதியாகவும் மட்டுமே இருந்த கவிஞர், 'தென்றல்' பத்திரிகை மூலம் தமிழ் மக்களுக்குப் பத்திரிகை ஆசிரியராக அறிமுகம் ஆனார்.

அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி போட்டவர், சினிமாத் துறையில் முழு மூச்சுடன் இறங்கினார். சொந்தமாகப் படம் தயாரித்தார். முதல் படம் 'மாலை யிட்ட மங்கை' நல்ல வெற்றி தந்தது. தொடர்ந்து பல படங்கள். சிவகங்கைச் சீமை, கவலையில்லாத மனிதன் எல்லாம் தோல்விகள்.

''இது ஒரு தொழிலே இல்லை. மற்ற தொழிலில் சம்பளம் கொடுப்பவன் முதலாளி, சம்பளம் வாங்குபவன் தொழிலாளி; இதில் நேர்மாறு. இந்த அவல நிலைக்குக் காரணம் ஜனங்கள் தான். நட்சத்திர மோகம் குறைந்தால்தான் சினிமாத் தொழில் உருப்படும்!'' என்கிறார் கண்ணதாசன்.

இவரே எழுதியதில் இவருக்கு மிகவும் பிடித்த சினிமாப்பாட்டு - 'போனால் போகட்டும் போடா!'

''இளையராஜா கொடுத்து வச்சவன்..!''


''அமெரிக்கா போவ தற்குச் சில நாட்களுக்கு முன்பு, இளையராஜாவின் இசையமைப்பில் நான்கு பாடல்கள் எழுதித் தருவதாக ஒப்புக்கொண்டிருந்தார் கவிஞர். பிரசாத் ஸ்டூடியோ வில் அவர் மூன்று பாடல் கள் எழுதி முடித்த பிறகு கிளம்பிவிட்டார். காரில் திரும்பிக்கொண்டிருந்த அவர், 'இளையராஜா கொடுத்து வச்சவன். ஏன்னா, அமெரிக்கா போய்த் திரும்பினப்புறம் நான் பாட்டு எழுதமாட் டேன்' என்று கூறினார். கவிஞர் அமெரிக்காவிலி ருந்து திரும்பி வரவும் இல்லை; கவிதை எழுதித் தரவும் இல்லை!''

- கவிஞர் கண்ணதாசனுக்கு நடைபெற்ற அஞ்சலியில் அவரது செயலாளர் இராம.கண்ணப்பன்




பாட்டெழுத இசைக் குழுவினரின் மத்தியில் அமர்ந் தாலும் சரி; கவிதை, கதை, கட்டுரை எழுத தனிமையில் அமர்ந்தாலும் சரி; கவியரசர் புறச்சூழல்களையும் தன்னையுமே மறந்து போவார், அவ்வேளைகளில் எந்தச் சூழலுக்கு எழுத வேண்டுமோ அந்தச் சூழலில் ஆட்பட்டு கதாபாத்திரமாகவே மாறி விடுவார்.
அட்டணைக் காலிட்டு, வலது கரத்தை உயர்த்தி ' சின்முத்திரை பிடித்தவாறு கவியரசர் திருவாய் மலர்ந்து மளமளவென்று சொல்லத் தொடங்கினால், அந்த வேகம் காண்போரை மலைக்கச் செய்யும். எழுதி மனப்பாடம் செய்து கொண்டு ஒப்புவிக்கிறாரோ என்று எண்ண வைக்கும். இது எப்படிச் சாத்தியம் என்று வியக்கத் தோன்றும்.

ஏன் அவரேகூட சில சமயங்களில் பிரமிப்படைந் திருக்கிறார்.

இது குறித்து அவரிடம் சிலர் வினவியபோது, தான் கல்லாதான் பெற்ற கருந்தனம்'' என்று பணிவோடும் மிகுந்த பரவசத்தோடும் பதிலிறுத்தார்.

எட்டாவது வகுப்புக் கல்வியறிவே உள்ள என்னால் இவ்வளவு எழுதிக் குவிக்க முடிகிறது. பேரும், புகழும் பெற முடிகிறதென்றால் அதற்குக் காரணம் என் அன்னை மலையரசிதான். நான் எதை எழுதுகிறபோதும் அதை தான் எழுதுவதாக எனக்குத் தோன்றுவதில்லை. மாறாக ஒரு சக்தி என் உள்ளிருந்து என்னை இயக்குவதாகவே உணருகிறேன். அந்த உள்ளொளியே அன்னை மலையரசி” என்றார்.

இந்த வாக்குமூலமே சத்தியமாகும்.
இராம. கண்ணப்பன்.

பாரதி பற்றி கவியரசர் கண்ணதாசன்

“பாரதியோடு பலர் என்னை ஒப்பிடும்போது எனக்கே மிகவும் வெட்கமாக இருக்கும்.
என் பாடல்களில் அவசரத்திற்காக எழுதப்பட்ட செயற்கைப் பாடல்களும் உண்டு.
பாரதி முழுக்க முழுக்கத் தன்னுணர்வுக் கவிஞன்..”
இப்படி மனம் திறந்து பாரதியை பாராட்டியவர் கண்ணதாசன் …
இதோ..இன்னும் கூட பாரதி பற்றி கண்ணதாசன்…
“இன்று என் பாடல்களை நான்கு கோடி மக்கள் இரசிக்கிறார்கள்; பாடுகிறார்கள். அதைக் கண்ணால் பார்க்கும்போதும், காதால் கேட்கும்போதும் எனக்கு உற்சாகம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
அதனால் மேலும் மேலும் நான் எழுதுகிறேன். அந்த வாய்ப்பே இல்லாமற் போனவன் பாரதி. தன் கவிதையை யார் இரசிக்கிறார்கள் என்று தெரியாமலேயே அவன் பாடினான்..
“காலம் எப்படி வரவேற்கும்; யார் எப்படி இரசிப்பார்கள்?” என்பது தெரியாமலேயே தனக்குத் தோன்றியதை எல்லாம் பாடினான். அதனால் எந்தக் கவிதையைப் பாடினாலும் தேன் வந்து பாய்கிறது காதுகளில்.
பாரதி
ஒரு ஜாதிக்கு, ஒரு மதத்துக்கு உரியவனல்ல;
அவன் சர்வ சமரசவாதி.
அவன் வங்காளத்தில் பிறந்திருந்தால் நோபல் பரிசு தாகூருக்குப் போயிருக்காது.
துர்பாக்கியம் பிடித்த தமிழகமே!
பாரதியைக் கொண்டாடு!
அதன் மூலம் பாரதத்தை நீ கொண்டாடுகிறாய்,
தேச பக்தியைக் கொண்டாடுகிறாய்,
தெய்வ பக்தியைக் கொண்டாடுகிறாய்,
தமிழ் மொழியைக் கொண்டாடுகிறாய்,
பாரதியைக் கொண்டாடாதவனுக்குத் தமிழன் என்று சொல்லிக் கொள்ள அருகதை இல்லை.”
[ கண்ணதாசன் இதழில்
கவிஞர் கண்ணதாசன்- செப்டம்பர் 1978]