Saturday, 29 December 2018

2018இல் அதிக திரைப்படங்களில் நாயகனாக நடித்தவர் விஜய் சேதுபதி :

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக திரைப்படங்களில் நடித்துவரும் விஜய் சேதுபதி,  2018இல் அதிக திரைப்படங்களில் நடித்த நடிகர்களில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.


தமிழ் சினிமா திரைப்படங்களில் மிகவும் குறைந்தளவு கதாநாயகர்களே காணப்படுகின்றனர். அதிலும் 10 நடிகர்கள் மாத்திரமே முன்னணி கதாநாயகர்களாக விளங்குகின்றனர். தெலுங்கு திரையுலகத்துடன் ஒப்பிடுகையில் இது மிக குறைந்த எண்ணிக்கையாகும்.
இந்த ஆண்டு தமிழ் திரைப்படங்களாக 171 படங்கள் வெளியாகி உள்ளன. கதாநாயகர்களில் விஜய் சேதுபதி அதிக எண்ணிக்கையாக ஏழு திரைப்படங்களில் நடித்துள்ளார். இதில் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், ஜூங்கா, செக்கச்சிவந்த வானம், 96, சீதக்காதி ஆகியவை கதாநாயகனாக நடித்தவை. டிராபிக் ராமசாமியும், இமைக்கா நொடிகளும் கௌரவத் தோற்றத்தில் நடித்த படங்கள் ஆகும்.
விஜய் சேதுபதிக்கு அடுத்த நிலையில், பிரபுதேவா, கௌவுதம் கார்த்திக், விக்ரம் பிரபு, விதார்த் ஆகியோர்  மூன்று படங்கள் விகிதமும், ரஜினிகாந்த், விக்ரம், தனுஷ், விஷால், ஜெயம் ரவி, விஷ்ணு விஷால், அரவிந்த்சாமி, அதர்வா, விஜய் ஆண்டனி, ஜெய், விமல், ஜி.வி.பிரகாஷ், தினேஷ் ஆகியோர் இரண்டு படங்கள் விகிதமும் நடித்துள்ளனர். கமல்ஹாசன், விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், உதயநிதி, சிம்பு, கார்த்தி, ஜீவா, ஆர்யா ஆகியோர்  ஒரு திரைப்படத்தில் மாத்திரம் நடித்துள்ளனர்.

Monday, 24 December 2018

சிம்புவுக்கு வசன பேப்பரை எடுத்துக் கொடுக்கும் வேலையை செய்தார் சிவகார்த்திகேயன்

வேட்டை மன்னன் படத்தில் சிம்புவுக்கு வசன பேப்பரை எடுத்துக் கொடுக்கும் வேலையை செய்தார் சிவகார்த்திகேயன் என்று அருண்ராஜா காமராஜ் தெரிவித்துள்ளார்.


பாடல் ஆசிரியராக மாஸ் காட்டி வரும் அருண்ராஜா காமராஜ் கனா படம் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். படத்தை பார்த்தவர்கள் அவரை பாராட்டி வருகிறார்கள்.
அவர் இயக்குனராகியுள்ள படத்தை அவரின் நண்பன் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார்.

பெண்கள் கிரிக்கெட், விவசாயம் மற்றும் குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ள கனா படம் பெண்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. குடும்ப ரசிகர்களை கவர்ந்துவிட்டார் அருண்ராஜா. நண்பனுக்காக சிவகார்த்திகேயன் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தது வீண் போகவில்லை.

அருண்ராஜா காமராஜும், சிவகார்த்திகேயனும் இயக்குனர் நெல்சன் திலீப்குமாரிடம் உதவியாளர்களாக இருந்துள்ளனர். நெல்சன் சிம்புவை வைத்து எடுத்த வேட்டை மன்னன் படத்தில் இருவரும் வேலை செய்துள்ளனர். சிம்புவுக்கு வசன பேப்பரை கொடுக்கும் வேலை சிவகார்த்திகேயனுக்கு. டயலாக் பேப்பர் கொடுத்தவர் தற்போது கோலிவுட்டின் முன்னணி ஹீரோவாக உள்ளார்.

வேட்டை மன்னன் படம் துவங்கிய வேகத்தில் நின்றதற்கான காரணம் தங்களுக்கே இதுவரை தெரியவில்லை என்கிறார் அருண்ராஜா காமராஜ். அந்த படம் நின்ற பிறகு நொந்துபோன அருண்ராஜா வேறு ஏதாவது வேலை பார்க்கலாம் என்று யோசித்த நிலையில் தான் பாடல் எழுதும் வாய்ப்பு கிடைத்து அந்த பக்கம் சென்றுள்ளார்.

படம் இயக்க வேண்டும் என்ற அருண்ராஜா காமராஜின் ஆசை சிவகார்த்திகேயனுக்கு தெரியும். கனா படம் மூலம் அவரின் ஆசையை நிறைவேற்றி வைத்துள்ளார். சினிமாவில் வளர்ந்து பெரிய ஆளாகி நண்பனின் ஆசையை நிறைவேற்றி வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த படத்தை தயாரிக்கும் வேலையில் பிசியாகிவிட்டார் சிவா.

உதவி இயக்குனராக இருந்து, ஹீரோவுக்கு நண்பனாக நடித்து பின்னர் ஹீரோவான சிவகார்த்திகேயனை சினிமா ஆசையுடன் சென்னைக்கு வருபவர்கள் இன்ஸ்பிரேஷனாக நினைக்கிறார்கள். அதிகாலை காட்சி வைக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார் என்றால் சும்மாவா?

Friday, 21 December 2018

திறக்கப்பட்ட தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகம்... விஷாலின் அதே கேள்வியை போலீஸாரிடம் முன்வைத்த நீதிமன்றம்

தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை உடனே அகற்றும்படி சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிற்பித்துள்ளது.

விஷால் பேட்டி:தயாரிப்பாளர்கள் சங்கத்திற்குள் அதன் தலைவர் விஷாலுக்கு எதிரான குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது. தி.நகரில் அமைந்துள்ள அந்த சங்க அலுவலகத்தின் முன்பு  கடந்த புதன்கிழமை (19.12.18) கூடிய டி.சிவா, கே.ராஜன், ஏ.எல்.அழகப்பன், ஜே.கே.ரித்திஷ், எஸ்.வி.சேகர், உள்ளிட்ட தயாரிப்பாளர்கள், விஷாலை கண்டிக்கும் வகையில் சங்கத்திற்கு பூட்டு போட்டனர்.
அந்த பூட்டை  நேற்று  காலை திறக்க முயன்ற தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களை போலீசார் கைது செய்தனர். காலையில் கைது செய்யப்பட்ட அவர்கள் அனைவரும் நேற்று மாலை விடுதலை செய்யப்பட்டனர்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், “மிகவும் வேடிக்கையாக உள்ளது. செய்யாத குற்றத்திற்கு தண்டனை அனுபவித்தேன். தவறு செய்தவர்களின் மீது புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் தவறு செய்யாத எங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நீதித்துறையை நான் நம்புகிறேன். நீதிமன்றம் சென்று இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்போம். நிச்சயமாக இளையராஜாவுக்கு இசை விழாவை நடத்துவோம்.என்ன தடை வந்தாலும் அதை மீறி நடத்துவோம். அதில் வரும் நிதியை வைத்து சிறு, நலிந்த தயாரிப்பாளர்களுக்கு அரை கிரவுண்டு நிலம் கண்டிப்பாக கொடுப்போம். சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றுவோம்
சங்கத்தில் கணக்கு கேட்க வேண்டும் என்றால் முறையாக கேட்க வேண்டும், அதற்கென தனி விதி உள்ளது. நலிவடைந்த தயாரிப்பாளர்களுக்கு நிதி கொடுக்கப்பட்டு வருகிறது, அதற்கான கணக்கும் உள்ளது.
ஒவ்வொரு மாதம் இ.சி. மீட்டிங்கில் கணக்கு காட்டப்படும். முறையாக கேட்டால் கொடுப்போம். முறை தெரியாமல் முறைகேடு நடப்பதாக சொல்கிறார்கள்.தயாரிப்பாளர் சங்கத்தில் இல்லாதவர்கள் எங்கள் மீது புகார் கொடுத்துள்ளனர்.
அலுவலகத்துக்கு செல்ல அனுமதி இல்லை என்கிறார்கள். நாங்கள் என்ன ரவுடியா?. நாங்கள் தயாரிப்பாளர்கள். சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கிறோம். எங்களுக்கு எந்த நோட்டீசும் வழங்காமல் பூட்டி இருக்கிறார்கள்.
நல்லது செய்வதற்குப் பெயர் முறைகேடு என்றால் அதை செய்வேன், தொடர்ந்து செய்வேன். நல்லது நடக்கக்கூடாது என்று நினைப்பவர்கள் அனைவரும் அவர்களுக்கு பின்னால் தான் இருக்கிறார்கள். நான் தொடர்ந்து நல்லது செய்து கொண்டே இருப்பேன்.” என தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு சீல்:

தயாரிப்பாளர் சங்கத்திற்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர்  விஷால் முறையீடு செய்தார்.  சீல் வைக்கப்பட்டதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் விஷால் முறையீடு செய்த வழக்கு இன்று மதியம் 2. 15 மணிக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது காவல் துறை தரப்பில் ஆஜராகி இருந்த வழக்கறிஞர், பாதுகாப்பு கோரி தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து கோரிக்கை மனு வந்ததாகவும் அதன் அடிப்படையில் தான் தாங்கள் அங்கு சென்றேம். சங்கத்தின் உள்ளே இரு தரப்பினருக்கு இடையே நடைபெறும் பிரச்சனைகள் தங்களுக்கு தெரியாது. சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படும் அளவிற்கு நிலைமை சென்றதால் அலுவலகத்தை சீல் வைத்ததாக தெரிவித்தார். சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் இல்லாமல் பாதுகாப்பு அளிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கபட்டதாக தெரிவித்தார்.
அப்போது நீதிபதி,
தேர்வாகி உள்ள நிர்வாகிகள் உங்களுக்கு பிடிக்குதோ, இல்லையோ.. ஆனால் அவர்கள்தான் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அவர்கள் பணியை செய்ய பாதுகாப்பளிப்பது தானே உங்கள் கடமை. ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தேர்தல் அதிகாரியாக இருந்து நடைபெற்ற தேர்தலில் தேர்வானவர்களை பணி செய்ய விடாமல் தடுத்தால், நீதித்துறை மீது மக்கள் என்ன நினைப்பார்கள்? என கேள்வி எழுப்பினார்.
ராதாகிருஷ்ணன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தற்போதைய நிர்வாகிகள் முறையாக செயல்படலை. நாங்கள் பிரச்சினை செய்யவில்லை. அவர்கள் முறைகேடாக செயல்படுகின்றனர். சங்கத்தின் வைப்பு தொகை 7 கோடி ரூபாய் முறைகேடில் ஈடுபட்டுள்ளனர். முறைகேடு தொடர்பாக ஆவணங்களை அழிக்க முயன்று வருகின்றனர். எனவே தான் சங்கத்தை பூட்டியதாக தெரிவித்தார்.
அப்போது நீதிபதி – தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் தவறு செய்தால் நீதிமன்றத்தை நாடுங்கள். உரிய வழக்கை தாக்கல் செய்யுங்கள். அதனை விடுத்து சங்கத்தை பூட்டுவது அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் பணி செய்ய விடாமல் தடுப்பது சட்டப்படியான உரிமையா? என கேள்வி எழுப்பினார்.
காவல் துறை இந்த விஷயத்தில் எப்படி 145 சட்டப் பிரிவு நடைமுறையை கையாண்டீர்கள்? இந்த விவகாரத்தில் தலையிட காவல் துறைக்கு என்ன முகாந்திரம் உள்ளது? இதே போன்ற வேறு நிகழ்வுகளில் காவல்துறை இவ்வாறு செயல்படுமா? என கேள்வி எழுப்பினார்.
காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்- ஏற்கனவே சங்கத்தின் தரப்பில் பாதுகாப்பு கோரி புகார் கொடுக்கப்பட்டதன் அடிப்படையிலேயே 145 பிரிவில் நடவடிக்கை எடுக்கபட்டதாக தெரிவித்தார்.
நீதிபதி- தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை எப்படி தடுப்பீர்கள்?
காவல்துறை தரப்பு – நாங்கள் தலையிடவில்லை.
நீதிபதி – இதை பதிவு செய்துகொள்ளட்டுமா? தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மீது அதிருப்தி என்றால் புகார் கொடுங்கள் அல்லது நீதிமன்றம் போங்கள். அதைவிட்டு சங்கத்தை பூட்டுவீர்களா?? இது முறையல்ல என தெரிவித்தார்.
ஆவணங்கள் இருக்கும் அறையை மட்டும் பூட்டிவிடலாம். மற்ற பகுதிகளில் நிர்வாகிகள் வந்து செல்ல எவ்வித இடையூறும் கூடாது. கூட்டுறவு சங்க துணை பதிவாளர் ஆஜராகட்டும் அவரிடம் விளக்கம் கேட்கலாம் என தெரிவித்தார்.
இதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதி, காவல்துறை உடனடியாக தயாரிப்பாளர் சங்க கட்டிடத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள 145 சட்டப் பிரிவை விலக்கிக்கொள்ள வேண்டும். தயாரிப்பாளர் சங்கத்திற்கு வைக்கப்பட்ட சீலை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் மற்றும் ஆர்.டி.ஓ அகற்ற வேண்டும். சங்கங்களின் துணை பதிவாளர் நாளை தயாரிப்பாளர் சங்கத்திற்கு செல்ல வேண்டும். அங்குள்ள அனைத்து அசல் ஆவணங்களையும் துணை பதிவாளரிடம் ஒப்படைத்து விட்டு நகல்களை இரு தரப்பினரும் வைத்து கொள்ளலாம். அனைத்து உறுப்பினர்களும் சங்கத்திற்குள் நுழைய அனுமதிக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்தும் உறுப்பினர்கள் மீது உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை 4 வாரத்திற்கு தள்ளிவைத்தார்.

Friday, 7 December 2018

2.0 வசூல் பற்றிய உண்மை என்ன?: எழுத்தாளர் ஜெயமோகன் விளக்கம்

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்த 2.0 படம் உலக அளவில் ரூ. 500 கோடி வசூல் செய்துள்ளது. இந்நிலையில் வசூலை லைகா நிறுவனம் மிகைப்படுத்திக் கூறுவதாக பேச்சு கிளம்பியுள்ளது.


இது குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் கூறியிருப்பதாவது

பல கேள்விகள் 2.0 வின் வசூல் பற்றிய ஐயங்கள். ரசிகர்கள் இதைப்பற்றி ஏன் கவலைப்படுகிறார்கள் என எனக்குப் புரியவில்லை. சினிமா செயல்படும் விதமே வேறு. இதழ்களோ, சமூகவலைத்தளங்களோ முற்றிலும் சம்பந்தமில்லாத திசையில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவை வெறும் செய்திக் கேளிக்கைகள் மட்டுமே. 2.0 படம் நவம்பர் 29 அன்று காலை வெளியாகியது. சுமார் பத்து மணிக்கு அதன் தோராயமான மொத்த வசூலை கணக்கிட்டுவிட்டார்கள். அதற்கான எல்லா சூத்திரங்களும் வேறு எந்தத் தொழிலையும்போல இதிலும் உண்டு.

இந்திய வரலாற்றில் ஒரு சினிமா ஈட்டும் உச்சவசூல் 2.0 வுக்குத்தான். ஏனென்றால் 2.0 உலகமெங்கும் வெளியாகியது. முதல் ஐந்து நாட்களிலேயே நாநூறு கோடியை தாண்டி விட்டது வசூல் என லைக்கா அறிவித்துள்ளது [ எந்த நிறுவனமும் வசூலை மிகையாக அறிவிக்காது] மொத்தத்தில் இந்திய அளவில் வசூலில் அதன் இரண்டாமிடத்தில் இருக்கும் படத்தை விடஒரு மடங்குக்கு மேல் கூடுதல் வசூலாகலாம். முதலீட்டை விட இருமடங்கு வசூல். பதினொன்றரை மணிக்கே ஷாம்பேன் உடைத்துக் கொண்டாடிவிட்டார்கள். அதன் பின்னர் தான் இங்கே இணையத்தில் சம்பந்தமில்லாதவர்கள் வசூல் கணக்குகளை அலச ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் எவரிடமும் தகவல்கள் இல்லை. சினிமாவுக்கும் அந்தச் செய்திகளுக்கும் சம்பந்தமில்லை. 2.0 வெளிவந்த பின்னரும் சர்க்கார் அரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த ஆண்டின் இரு முதன்மை வெற்றிப்படங்கள் இவை தான்.

இது அடிப்படையில் தமிழ்ப்படம் அல்ல. இதன் வருவாயில் 20 சதம்கூட தமிழகத்தில் இல்லை. 50 சதம்கூட இந்தியாவிலிருந்து அல்ல. இது சர்வதேச ரசிகர்களுக்கான கதை. குறிப்பாகச் சொல்லப்போனால் மூன்றாமுலக நாடுகளுக்கான படம். உலகமெங்கும் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட அரங்குகளில் வெளியாகியது. சீனாவில் வரும் மேமாதம் பத்தாயிரம் அரங்குகளில் வெளியாகவிருக்கிறது. ஆகவே தான் எந்திரனில் இருந்த குடும்ப அம்சங்கள், காமெடி டிராக், காதல் போன்றவை இதில் இல்லை. கதையின் உணர்ச்சிகள் நாடகத்தனம் குறைவாக அளவோடு உள்ளன. ஆரா போன்ற மதம்சாராத ஆன்மிகச் சாயல்கொண்ட கருத்துக்கள் கீழைநாட்டு ரசிகர்களுக்கு மிக உகந்தவை.

இந்தப்படத்தின் திரைக்கதை அமைப்பு உலகளாவிய இளையதலைமுறை ரசிகர்களுக்குரியது. அவர்களின் ரசனையை கணக்கில் கொண்டது. ஆகவேதான் பாடல்கள் இல்லை. வழக்கமான தமிழ்ப்படம் முதலில் நெடுநேரம் விளையாட்டாக அலையும், அதன்பின்னரே முதல்முடிச்சு விழும். இதில் இரண்டாவதுகாட்சியிலேயே முதல் முடிச்சு விழுந்துவிடுகிறது. அதன்பின் நகைச்சுவை, குடும்பக்காட்சி எதற்கும் இடமில்லை. உணர்ச்சிகரக் காட்சிகள் அளவோடு உள்ளன.

வழக்கமான தமிழ்ப்பட அளவுகோல்களைக்கொண்டு இதை மதிப்பிட்டவர்கள் இதன் மலைக்கச் செய்யும் உலகளாவிய வசூலை எண்ணிப் பார்க்க வேண்டும். இனி இந்த வகைப் படங்கள் கூடுதலாக வரும் என்றும் புரிந்துகொள்ள வேண்டும். அத்துடன் இது முப்பரிமாணப் படம். அதில் ஓர் அளவுக்குமேல் காட்சிகளை வசனங்களாக நீட்ட முடியாது. ஏனென்றால் முப்பரிமாணம் கொண்டு நின்றிருக்கும் பொருட்கள் கவனச்சிதறலை உருவாக்கும்.


Wednesday, 5 December 2018

கடாரம் கொண்டான்: கமல்ஹாசன் தயாரிப்பில் விக்ரம் கமிட்மென்ட் எப்படி?

நடிகர் விக்ரம் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் படம் கடாரம் கொண்டான். ராஜேஷ் செல்வா இயக்கத்தில், கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிக்கும் படம்.

ஜாம்பவான் இயக்குநர் ஸ்ரீதரால் அறிமுகப்ப‌டுத்தப்பட்ட பெருமைக்குரியவர் விக்ரம்! இடையில் மிகவும் தொய்வடைந்து டப்பிங் கலைஞராக பணியாற்றிக் கொண்டிருந்த அவர், பாலாவின் அதிரடி ஹிட் சேதுவால் ஹைஜம்பாக எகிறினார்.
அன்றைய கமல், விஜயகாந்த் மார்க்கெட்டை தாண்டி இரண்டாம் இடத்திற்கு வந்தார். அப்போதே 20 படங்களுக்கு மேல் நடித்திருந்த விஜய், அஜித் உட்பட பலரும் விக்ரமின் வெற்றியால் சற்றே நிலை குலைந்தனர். சேது, தில், தூள், காசி, பிதாமகன் மற்றும் கமர்ஷியல் மாஸ் ஹிட்டான ஜெமினி, சாமி வெற்றியை அன்றைய பல ஹீரோக்களால் தொடவே முடியவில்லை.
நடிகர் கமல்ஹாசன் கேரக்டருக்காக தன்னை உருமாற்றிக்கொள்பவர் என பெயர் பெற்றிருந்தார். ஆனாலும் அவரால் வசூல்ரீதியாக தொடர் வெற்றிகளை பெறமுடியாத காலத்தில் விக்ரம் புயல் போல் வந்ததும், வந்தவேகத்தில் மாஸ் ப்ளஸ் ஆக்டிங் ஸ்பேஸில் இறங்கி அடித்ததும் சாதாரண விஷயமல்ல.
இவரது வருகையால் முன்னணி கதாநாயகர்கள் பலர் சறுக்கினர். அதில் கமல்ஹாசனும் ஒருவர். கமல்ஹாசன், விக்ரம் ஆகிய இருவரும் பரமக்குடி காரர்கள் என்றாலும், இந்த போட்டி காரணமாக இருவருக்குள்ளும் ஒரு நிழல் யுத்தம் நடந்து வந்ததாக தகவல்கள் உண்டு.
பின்பு அந்நியன் படத்திற்காக விக்ரம் கொடுத்த 2 வருடம் இடைவெளியும், அதே நேரத்தில் அப்படம் பெரிய வசூல் வெற்றியை பெறாமல் போனதும் விக்ரமுக்கு பின்னடைவு. அதை அவரால் சரிசெய்யமுடியவில்லை. அதை தொடர்ந்து அவர் முதல்நிலை கதாநாயகர்கள் பட்டியலில் இல்லாமலிருந்தாலும் கமெர்ஷியல் ஹீரோக்கள் பட்டியலில் இருக்கிறார்.
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் சமீபகாலமாக தொடர்ந்து படம் எடுக்கவில்லை. இந்தச் சூழலில் விக்ரமுடன் கமல் மகள் ஸ்ருதி ஹாசனை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவைத்து கடாரம் கொண்டானை தயாரிக்கிறது ராஜ்கமல் பிலிம்ஸ். கமல்ஹாசனின் தூங்காவனம் படத்தை இயக்கிய கமல்ஹாசனின் உதவியாளர் ராஜேஷ் செல்வா படத்தை இயக்குகிறார்.
அரசியலைப்போல் சினிமாவிலும் நிரந்த பகைவர்கள் இல்லை என்னும் கூற்றை நிரூபித்துள்ளது கடாரம் கொண்டான்.

உலக நாயகன் படத்தில் முதல் முறையாக தோன்ற இருக்கும் காஜல் அகர்வால்

2.0 படத்தை தொடர்ந்து உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் சங்கர் இயக்க இருக்கும் இந்தியன் 2 படத்தில் நடிகை காஜல் அகர்வால் நடிக்கி போகிறார் என்பது தான் இன்றைய சூடான செய்தி.

இயக்குநர் சங்கரின் கனவு பிராஜெக்டுகளில் ஒன்று இந்தியன் 2. இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிகை நயந்தாரா நடிக்க இருக்கிறார் என்று பல தகவல்கள் வலம் வந்தாலும், இப்போது அதே படத்தில் நடிக்க இருப்பதாக உறுதி செய்துள்ளார் காஜல் அகர்வால்.
தெலுங்கு திரைப்படம் கவசம் ஆடியோ வெளியீடு நிகழ்ச்சியில் பேசிய காஜல், “அடுத்ததாக கமல் சாருடன் ஒரு படம் நடிக்க போகிறேன். அவருடன் இணைந்து நடிக்க இருக்கும் அந்த நாளுக்காக காத்திருக்கிறேன்” என்று ஆவலுடன் தெரிவித்தார்.
உலக நாயகன் கமல் பிறந்தநாளன்று, லைகா நிருவனம் ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அந்த அறிவிப்பில், 1996ம் ஆண்டு பெரிய பிளாக் பஸ்டர் படமாக அமைந்த இந்தியன் படத்தின் பாகம் 2 உருவாக உள்ளது என்றும், இப்படத்தில் மீண்டும் கூட்டணி போடுகிறார்கள் சங்கர் – கமல் ஹாசன் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தியன் 2 அப்டேட்

சில தகவல் வட்டாரங்கள், இப்படத்தின் ஷூட்டிங் டிசம்பர் 14ம் தேதி தொடங்கும் என்றும், இதற்காக ஃபோட்டோ ஷூட் அனைத்தும் கமல் ஹாசனை வைத்து நடந்து முடிந்துள்ளதாகவும் தெரிவித்திருந்தது. மேலும் நீண்ட வருடங்களுக்கு பிறகு கமலை சேனாதிபதி கதாப்பாத்திரத்தில் பார்த்து இயக்குநர் சங்கர் மகிழ்ச்சியில் உரைந்து போனதாகவும் தெரிவித்தனர். அதுவும், கமல் வைத்திருக்கும் முறுக்கு மீசை எல்லாம் ஷேவ் செய்து அப்படியே சேனாதிபதி போல் மாறியுள்ளாராம்.
இப்படத்தின் ஷூட்டிங் துவங்க அனைத்து வேலைகளும் மும்முரமாக நடந்து வருகிறது. கலை இயக்குநர் முத்துராஜ் படத்திற்கான செட் அமைக்கும் வேலைகளை துவக்கி விட்டார். இப்படத்திற்கான ஷூட்டிங் செட்கள் சென்னையிலேயே அமைக்கப்படுகிறது. இதை தவிற, ஆந்திரா பிரதேசம், தெலுங்கானா மற்றும் தாய்லாந்து நாட்டிலும் ஷூட்டிங் நடக்க திட்டமிட்டுள்ளனர்.
இந்தியன் – 2 படத்திற்கு அனிருத் ரவிசந்தர் இசையமைக்க மற்றும் ஒளிப்பதிவு வேலைகளை பாலிவுட் ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் மேற்கொள்கிறார். மேலும் முதல் பாகத்தில் சிபிஐ அதிகாரியாக நடித்த நெடுமுடி வேணு இப்படத்திலும் நடிக்கிறார்.
இந்நிலையில், இப்படத்தில் துல்கர் சல்மானும் நடிக்க இருக்கிறார். இவருக்கு ஜோடியாக தான் காஜல் அகர்வாலை நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும், இன்னும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வர காத்திருப்பதாகவும் காஜல் தெரிவித்தார். மேலும் இதே படத்தில் சிம்புவும் நடிக்க உள்ளார் என்ற தகவலும் வேகமாக பரவி வந்தது. இருப்பினும் இது உண்மை இல்லை என்று சில தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
சமீபத்தில் வெளியான பேட்டி ஒன்றில் இயக்குநர் சங்கர் கூறுகையில், “இந்தியன் – 2 படத்தை நான் கடமைக்காக எடுக்கவில்லை. இத்தனை வருடங்களில் என்னென்னவோ நடந்துவிட்டது, அதெல்லாம் இப்படத்தில் பார்க்க முடியும். இதுவரை பல படங்களை இயக்கி இருந்தாலும், இந்தியன் – 2 தான் எனது ஃபேவரைட். ஒவ்வொரு முறையும் ஒரு படத்தை முடிக்கும்போதெல்லாம் இந்தியன் பாகம் 2 எடுக்க வேண்டும் என்ற சிந்தனை இருந்துக் கொண்டே இருக்கும், இறுதியாக அது இப்போது பலித்துவிட்டது.” என்று பெருமிதம் கொண்டார்.

Monday, 3 December 2018

பிரபல நடிகரின் மகன் மற்றும் தீவிர ரசிகனுக்கு சர்பிரைஸ் கொடுத்த தளபதி

பிரபல நடிகரின் மகனும், விஜய்யின் தீவிர நடிகருமான ஃபைஸல் பிறந்தநாளில் கேக் வெட்டி சர்பிரைஸ் கொடுத்த நடிகர் விஜய் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


ரசிகர்கள் என்று வந்துவிட்டால் அன்பை பாகுபாடின்றி அள்ளி கொட்டும் குணம் கொண்டவர் நடிகர் விஜய். இந்த குணத்திற்காகவே அவருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளது. இப்படிப்பட்ட இவர், கடந்த டிசம்பர் 1ம் தேதி பிரபல நடிகரின் கனவு ஒன்றை நிறைவேற்றியுள்ளார்.
பல திரைப்படங்களில் நாயகனாகவும், வில்லனாகவும் நடித்திருப்பவர் நடிகர் நாசர். இவரின் மகன் ஃபைசல், தீவிர விஜய் ரசிகர். கடந்த 2014ம் ஆண்டு நடந்த ஒரு பயங்கர விபத்தில், ஃபைசலுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு தீவிர சிகிச்சை மேற்கொண்டு வந்தார். தற்போது நன்கு குணமாகியிருக்கும் நிலையில், தனது இல்லத்தில் ஓய்வு எடுத்து வருகிறார்.

நாசர் மகன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் விஜய்

ஃபைசலுக்கு கடந்த டிசம்பர் 1ம் தேதி பிறந்தநாள் கொண்டாட்டப்பட்டது. அந்த கொண்டாட்டத்தில் சற்றும் எதிர்பாராத வகையில் சரிபிரைஸ் கொடுத்தார் தளபதி விஜய். ஃபைசலுக்கு நீண்ட நாட்களாக தனது பிறந்தநாளை விஜய்யுடன் கொண்டாட வேண்டும் என்ற விருப்பம் இருந்ததாகவும் அந்த ஆசை தற்போது நிறைவேறிவிட்டதாகவும், நாசர் மனைவி கமீலா ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
மேலும் கமீலா அவரது ட்விட்டரில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தளம் முழுவதும் வைரலாகி வருகிறது. குறிப்பாக, ஃபைசல் மெழுகுவர்த்தி ஊத, அந்த கேக்கை அவர் வெட்டுவதற்காக தனது கையில் விஜய் பிடித்து நிற்கும் ஃபோட்டோ ரசிகர்கள் மத்தியில் சர்கார் அளவிலான ஹிட்.

Saturday, 1 December 2018

இந்தியன் 2 படத்தை தொடர்ந்து ஷங்கர் இயக்கம் இரண்டாம் திரைப்படம்! ஹீரோவாகும் விஜய்!

தமிழ் சினிமாவில், பல இயக்குனர்கள் வியர்த்து பார்க்கும் அளவிற்கு தன்னுடைய தரமான கதைகள் மூலம் தமிழ் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் ஷங்கர். இதனாலேயே இவருக்கு பிரமாண்ட இயக்குனர் என்கிற பெயரும் உள்ளது.
எப்படி இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலாவது நடிக்க வேண்டும் என பல ஹீரோக்கள் மற்றும் ஹீரோயின்கள் நினைக்கிறார்களோ... அதே போல் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்கிற கனவும் பல நடிகர்களுக்கு உண்டு. மிக பிரமாண்டமாக உருவாகியுள்ள  2 . ௦  படம்  வெளியான   நிலையில். அடுத்ததாக இந்தியன் இரண்டாம் பாகம் எடுப்பதில் பிஸியாக இறங்கி விட்டார் ஷங்கர். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.


இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலில், இந்தியன் 2 படத்தை தொடர்ந்து. முதல்வன் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளாராம். இந்த படத்தில் நடிகர் விஜய் ஹீரோவாக நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதற்க்கு முக்கிய காரணம் முதல்வன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் விஜய் தான். ஆனால் ஒரு சில காரணங்களால் இந்த படம் டிராப் ஆனது. இதை தொடர்ந்து நடிகர் அர்ஜுன் இந்த படத்தில் நடித்தார்.
இதுகுறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் இவரிடம் முதல்வன்-2 எடுப்பீர்களா? என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதற்க்கு பதில் அளித்த ஷங்கர். 'அதற்க்கு தகுந்த போல் ஒரு கதை உருவாக வேண்டும், அந்த கதை யாரை தேடுகிறதோ அவருடன் பணியாற்றுவேன், அது விஜய் என்றால் ஓகே தான்' என்று கூறியுள்ளார். 

ஏற்கனவே இந்தியன் பார்ட் 2 பற்றி கேள்வி எழுப்பிய போது இதே போன்ற பதிலை தான் ஷங்கர் தெரிவித்தார். எனவே ஷங்கரின் அடுத்த திரைப்படம் முதல்வன் 2 வாக இருக்கலாம் என கூறப்படுகிறது. அதே போல் இதில் விஜய் ஹீரோவாக நடிக்கவும் வாய்ப்புகள் அதிகம் என தகவல் வெளியாகியுள்ளது.