Friday 25 December 2015

மறக்க முடியுமா - முதல்வன் உருவான கதை

அறுபது வயது முதியவரிடம் நீங்கள் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால், அறுபது வருட அனுபவம் உள்ளவரிடம் பேசுகிறோம் என பொருள். வாழ்ந்து கிடைக்கிற அனுபவங்களைவிட, இப்படியான அனுபவசாலிகளிடம் பேசி, அவர்களின் அனுவங்களை பெறுவது என்பது ஒரு கலை. ஒருவரது அறுபது வருட அனுபவத்தை அரைமணி நேர பேச்சில் அள்ளிக் கொள்ளலாம்.


 
 
திரையுலகில் இப்படியான அனுபவங்கள் பெருமளவில் கை கொடுக்கும். திரைப்படம் சார்ந்த சில பழைய நினைவுகள் இன்று புதிதாக வரும் இளைஞர்களுக்கு தெரியாதவை, ஆனால், அவர்களுக்கு உத்வேகம் தரக்கூடியவை.
 
இயக்குனர்கள் இன்று கதைக்காக முட்டி மோதுகிறார்கள். கதைக்கா எங்கும் ஓட வேண்டியதில்லை. நம்மைச் சுற்றி கதைகள் கொட்டிக் கிடக்கின்றன. தேவைப்படுவதெல்லாம், அதனை அடையாளம் கண்டு கொள்கிற திறமை மட்டுமே. ஷங்கரின் முதல்வன் படம் இதற்குச் சிறந்த உதாரணம்.
 
ஷங்கர் படங்களில் இந்தியனும், முதல்வன் திரைப்படமும் தான் அதிக ரசிகர்களால் விரும்பப்படுபவை. இரண்டுமே திரைக்கதைக்கு முக்கியத்துவம் தந்து உருவானவை. அதில் முதல்வன் படத்தின் கதை கிடைத்தது ஒரு சுவாரஸியமான சம்பவம்.
 
ஜீன்ஸ் படம் சுமாராக போன பிறகு ஒரு சூப்பர்ஹிட் படத்தை இயக்கியாக வேண்டிய நிலை ஷங்கருக்கு. அவர் விரும்பும் சமூக சீர்கேட்டை சரி செய்யும் ஹீரோ கதை யாரிடமும் இல்லை. கதையைப் பிடிங்க, திரைக்கதை எழுதி தருகிறேன் என்று சுஜாதா சொல்லிவிட்டார். எப்படி புரண்டுப் பார்த்தும் கதை அமையவில்லை. கடைசியில் அசிஸ்டெண்டுகளுடன் வெளியூர் பயணமானார்.

வெளியூர் வந்து சில தினங்கள் கழிந்தும் எதுவும் நகரவில்லை. யார் சொல்கிற ஐடியாவும் ஷங்கரை கவரவில்லை. இந்த நேரத்தில் பத்திரிகையில் ஒரு செய்தி வருகிறது. அமெரிக்காவின் ஒரு நகரத்தின் ஒருநாள் மேயராக இந்திய விஐபி ஒருவர் நியமிக்கப்பட்டது அந்த செய்தியில் உள்ளது. ஒருநாள் மேயராகிறவர், ஒரு பில்டிங்கையோ இல்லை வேறு எதையாவதையோ இடிக்கச் சொன்னால் என்னாகும்? ஒருநாள் மேயராகி என்னத்தான் செய்வார்கள்? இப்படி அரட்டை அடித்துக் கொண்டிருந்த வேளையில் திடீரென ஒரு பிளாஷ். இதேபோல் ஒருநாள் முதல்வர் தமிழகத்தில் சாத்தியமா?


 
 
உடனே சுஜாதாவுக்கு போன் பறக்கிறது. பெரும்பான்மையான எம்எல்ஏக்கள் ஒத்துக் கொண்டால், தேர்தலில் நிற்காமலேயே ஒருவரை ஒருநாள் முதல்வராக்கலாம் என்கிறார் சுஜாதா. சட்டத்தில் அதற்கு இடம் இருக்கிறது. சுஜாதா சொல்லி முடித்ததும் கதை தயார் என்கிறார் ஷங்கர்.
 
ஒருவனை ஏன் அனைத்து எம்எல்ஏ க்களும் சேர்ந்து முதல்வராக்க வேண்டும்? அப்படி முதல்வராகும் அவன் ஒருநாளில் என்னென்ன செய்ய முடியும்? 
 
அடுத்தடுத்த கேள்விகள், அதற்கான பதில்கள் என கொஞ்சம் கொஞ்சமாக உருவானதுதான் முதல்வன் என்ற மாபெரும் வெற்றிப்படம்.
 
பஜ்ரங்கி பைஜான் படத்தின் கதையும் இதேபோல் ஒரு செய்தித்தாளிலிருந்து எடுத்துக் கொண்டதே.
 
நீதி - செய்தித்தாளின் சின்னச் செய்திகளிலிருந்தும் ஒரு திரைப்படத்துக்கான கதை கிடைக்கும்.

புத்திர பாசத்தில் மீண்டும் புதைகுழியை நோக்கி ஏ.எம்.ரத்னம்...?

ஒருகாலத்தில் ஓஹோவென்றிருந்த ரத்னம் கடனாளியாகி கார், பங்களாவை தொலைத்து நாற்பதாயிரம் ரூபாய்க்கு மாதச் சம்பளத்துக்கு போகிற நிலைமைக்கு ஆளானார்.

 

 
நிலைமை தெரியாமல் அகலக்கால் வைத்தது ஒரு காரணம் என்றால், அப்பாவின் பணத்தில் பிள்ளை ஜோ‌தி கிருஷ்ணா படம் எடுக்கிறேன் என்று கோடிகளை தண்ணீராய் இறைத்தது இன்னொரு காரணம். இதில் புத்திர பாசத்தில் ரத்னம் இழந்த கரன்சிகள்தான் கணிசம்.
 
ரத்னம் மீண்டும் கரையேறுகிறவரை காத்திருந்த ஜோ‌தி கிருஷ்ணா மீண்டும் படம் எடுக்கிறேன் என்று களத்தில் இறங்கியிருக்கிறார். இந்த கரன்சி விளையாட்டுக்கு பைனான்சியர்... வேறு யார் ரத்னம்தான்.
 
தெலுங்கில் கோபிசந்தை வைத்து ஜோ‌தி கிருஷ்ணா ஒரு படம் இயக்கப் போகிறார். சினிமாவின் ஆனா ஆவன்னா தெரியாமலே பல படங்கள் இயக்கி காசை கரியாக்கியவர் இப்போது மட்டும் கரன்சியை கொட்டி கோடிகளா அள்ளப் போகிறார்? கடைசியில் கிடைக்கப் போவது வெறும் கரிதான் என்று இப்போதே முணுமுணுக்கிறது கோடம்பாக்கம்.
 
புத்திர பாசத்தில் இன்னொருமுறை தவறிழைத்தால் கைகொடுக்க அஜித் இருக்கிறார் என்ற தைரியமா ரத்னத்துக்கு?

Saturday 5 December 2015

நடிகைகளுடனான பந்தம் எதுவரை? மகேஷ் பாபு அதிரடி விளக்கம்!

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவுக்கு பெண் ரசிகைகள் தெலுங்கில் மட்டுமல்ல தமிழிலும் கூட அதிகம். அவர், பெரிய ஹீரோ தான் என்றாலும் நாட்டில் நடக்கும், பிரச்னைகள், அல்லது சினிமா உலகில் நடக்கும் சர்ச்சைகள் என எதற்கும் எந்தக் கருத்தும் அவ்வளவு சுலபமாகச் சொல்லிவிட மாட்டார். இந்நிலையில் கணவன் என்றால் எப்படி இருக்க வேண்டும் என கருத்து கூறியது பெண்கள் மத்தியில் இன்னும் மகேஷ் பாபுவுக்கான ரசிகர்களை அதிகப்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை என்றே கூறவேண்டும்.

அவர் கூறுகையில் “ ஒரு கணவன் என்பவன் முதலில் அவன் மனைவிக்கு பொறுப்பாளனாக இருக்க வேண்டும்.  தன் மனைவிக்குப் பொறுப்பாகச் செயல்படாத மனிதன் எப்பேர்ப்பட்டவனாக இருந்தாலும் அவன் முட்டாள் தான்.  நான் சென்னையில் படிக்கும் போது நான் பெரிய ஸ்டாரின் மகன் என்று யாருக்கும் தெரியாது.  என் நண்பர்கள், ஆசிரியர்களுக்குக் கூட நான் இன்னார் மகன் எனத் தெரியாது. ஆனால் என் அப்பா எங்கள் குடும்பத்துக்கு அவ்வளவு பொறுப்பாக நடந்துகொண்டார். என் அப்பாவிடம் படித்த பாடமே இந்த குடும்ப ஈடுபாடு.

பெரிய நடிகரானால் கண்டிப்பாக கிசுகிசுக்கள் வருவது சாதாரணம். ஆனால் நாமும் சில நேரங்களில் அதற்கு பொறுப்பாகிறோம். என்னைப் பொறுத்தவரை எனக்கும் என்னுடன் நடிக்கும் நடிகைகளுக்குமான பந்தம் ஷூட்டிங்குடன் முடிந்தது. படப்பிடிப்பு முடிந்துவிட்டால் நடிகைகள் போன் கால்களைக் கூட நான் எடுக்க மாட்டேன். ஏனெனில் என்னைக் குறித்து கிசுகிசுக்கள் வருவதை என்னாலும் சரி முக்கியமாக என் மனைவியாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும் ஒரு மனைவியாக இந்தக் கிசுகிசுக்களை ஏற்றுக்கொள்ளும் தேவையும் அவருக்கு இல்லை எனக் கூறியுள்ளார் மகேஷ் பாபு.

இதனால் பல நடிகர்கள் மகேஷ் பாபு குறித்து ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர்.