Monday 10 June 2019

கிரிஷ் கர்னாட்: ஓய்ந்தது இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும், மொழி உரிமைக்கும் ஒலித்த குரல்

நாடக ஆசிரியர், நடிகர், இயக்குனர்,இலக்கியவாதி, தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் என பல முகங்கள் கொண்ட கிரிஷ் கர்னாட், தனது 81 வது வயதில் இன்று காலமானார். தமிழ் திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரமாக வலம் வந்த இவர், வில்லன் நடிகர் என்ற வட்டத்திற்குள் சுருக்கிவிடக் கூடியவர் அல்ல, இந்திய சினிமா உலகில் ஒரு குறிப்பிடத் தகுந்த இடத்தைப் பெற்றவர்.




பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன் போன்ற அரசு விருதுகளையும், பிலிம் பேர் போன்ற திரைத்துறைகள் சார்ந்து பல விருதுகளும் பெற்றவர். இதிகாச, வரலாற்று கதைகளை நவீன சிக்கல்களோடு தொடர்புபடுத்தி நிறைய நாடகங்களை எழுதியவர். இந்திய இலக்கிய உலகில் மிகப்பெரிய அங்கீகாரமாக கருதப்படும் ஞான பீட விருதினை பெற்ற எழுத்தாளர்.
 
மஹாராஷ்டிராவில் உள்ள மாதேரன் என்னும் மலைப்பிரதேசத்தில் பிறந்தவர். பள்ளிப்பருவம் வரை மராட்டிய மாநிலத்தில் படித்த கிரிஷ் பின்பு கர்நாடகாவிற்கு வந்தவர். கர்நாடக பல்கலைக்கழகத்தில் கணிதம் மற்றும் புள்ளியலில் இளங்கலைப்பட்டமும் , ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் தத்துவப்படிப்பில் முதுகலைப்பட்டமும் பெற்றார்.
 
1963ம் ஆண்டில் ஆக்ஸ் போர்ட் யூனியனின் தலைவராக இருந்தார். ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழக பதிப்பகத்தில் எழுத்தாளராகவும் இருந்தார். கர்நாடகாவிற்கு வந்த பிறகு நாடக குழுக்களோடு இணைந்து செயல்பட ஆரம்பித்த இவர், கன்னட மொழியில் பல நாடகங்களை எழுதியுள்ளார். 1961ல் தனது 23வது வயதில் யயாதி என்னும் நாடகத்தினை எழுதி வெளியிட்டார். இவரது திப்பு சுல்தான் கதை இன்று வரை புகழ் பெற்றதாய் இருக்கிறது. இவரது எழுத்துக்கள் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.


 
1970 ல் , சம்ஸ்காரா என்னும் கன்னட சினிமாவில் தொடங்கியது இவரது திரைப்பயணம், அப்படத்தின் திரைக்கதை ஆசிரியராகவும் இருந்தார் கிரிஷ் கர்னாட். திரைப்படம் குடியரசுத்தலைவரின் தங்கத் தாமரை விருதினை பெற்றது. அதன் பிறகு பல தென்னிந்திய மொழிகளிலும், இந்தி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தமிழில், ரட்சகன், நான் அடிமை இல்லை, காதலன், மின்சாரக் கனவு மற்றும் சில படங்களில் நடித்துள்ளார்.
 
இந்தியில் 2012ல் வெளியான ஏக்தா டைகர் திரைப்படத்தில் டாகட்ர் செனாய் என்னும் பெயரில் தலைமை உளவுத் துறை அதிகாரியாக நடித்து இருந்தார், அப்படத்தின் இரண்டாம் பாகமான டைகர் ஜிந்தா ஹை 2017ல் வெளியானது. அதிலும் டாக்டர் செனாய் ஆக நடித்துள்ளார் கிரிஷ் கர்னாட், இதுவே இவரது கடைசித் திரைப்படம் ஆனது.
 
கிரிஷ் கர்னாட், ஒற்றை தேசக் கொள்கைகளுக்கு எதிரானவர். இந்துத்துவா அமைப்புகளையும் , செயல்பாடுகளையும் தொடர்ந்து விமர்சித்து வந்தவர். இந்தியா என்பது பல வேறு பண்பாடுகளையும், பல மொழி பேசும் மக்களையும் கொண்டது, அந்த பன்முகதன்மையினையும், மொழிகளையும் இழக்க முடியாது என்ற கருத்தினை வலியுறுத்தி வந்தார். எழுத்தாளர் கல்புர்கி கொலையினை தொடர்ந்து , கருத்துரிமைக்காக தொடர்ந்து குரல் வந்தார். கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட பொழுது, இவரும் வலதுசாரி அமைப்புகளால் குறிவைக்கப்பட்டிருந்தார் என்று கூறப்பட்டது.
 
வலது சாரி இந்துத்துவ அமைப்புகள், இந்துத்துவாவிற்கு எதிராக செயல்படுகின்ற எழுத்தாளர்களை குறிவைத்துள்ளதாகவும், அதில் முக்கியமாக இடம் பெற்றுள்ள நபர் கிரிஷ் கர்னாட் எனவும் செய்திகள் வெளியாயின. ஆனால், அச்சுறுத்தல்களுக்கு நான் பயப்பட மாட்டேன் என்று கூறும் விதமாக , கௌரி லங்கேஷின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி கூட்டத்திற்கு 'Me Too Urban Naxal' என்று பொறிக்கப்பட்ட அட்டையினை கழுத்தில் அணிந்து கலந்து கொண்டார்.
 
கிரிஷ் கர்னாட் வாழ்ந்த சிர்ஸியில் வசிக்கும், செயல்பாட்டாளர் பாண்டு ரங்கே ஹெக்டே , கிரிஷ் கர்னாட்டின் எழுத்துக்கள் குறித்து பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார். கிரிஷ் கர்னாட் , எப்பொழுதும் தனது எழுத்துப் பயணத்தின் அடித்தளம் அமைந்த இடம் இதுதான் என்று சிர்ஸியினை பற்றி கூறுவார். இங்குள்ள வட்டார நாடக குழுக்களின் மூலமாகவே அவரது நாடக பயணங்கள் வலுவடைந்தது. அவரது எழுத்துக்கள் புதிய சிந்தனைகளை வெளிப்படுத்தும் விதமாக அமைந்து இருக்கும், வரலாற்று புதினங்கள், நாட்டார் வழக்குகளில் உள்ள கதாபாத்திரங்களை எடுத்து , நவீன சூழல்களில் பொருத்தி ஆழமான கருத்துக்களை எளிய வடிவில் , மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் வல்லவர். அவரது எழுத்துக்கள் மிக எளிமையானவை, எளிய மனிதர்கள் பயன்படுத்தும் மொழியினையே அதிகம் பயன்படுத்துவார்.பிராந்திய மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதில் வலிமையான கருத்துடையவர் கிரிஷ் கர்னாட் . அவர், மிக சிறப்பான ஆங்கிலப்புலமையுடையவர் எனினும் , பெரும்பான்மை படைப்புகள் கன்னடத்தில் தான் இருக்கும். மராத்தி சமேதானத்திலும் தலைவராக இருந்துள்ளார்.
 
பண்பாட்டு பன்முகத்தன்மையும் , பன்மொழிதன்மையும் தான் இந்தியாவின் அடித்தளமாய் இருக்க வேண்டும் என்று கிரிஷ் கர்னாட் அடிக்கடி கூறுவார் என்கிறார் பாண்டு ரங்கே ஹெக்டே.
 
கிரிஷ் கர்னாட்டின் மறைவிற்கு கர்னாடக அரசு ஒரு நாள் விடுமுறையும், மூன்று நாள்கள் அரசுமுறைத் துக்கமும் அறிவித்துள்ளது.

வெறும் மோகன் ‘கிரேஸி’ மோகன் ஆனது எப்படித் தெரியுமா?

தமிழ்த் திரையுலகில் கதை-வசன கர்த்தாவாகவும், நடிகராகவும் முத்திரை பதித்த கிரேஸி மோகன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 67.
நாடக ஆசிரியரான இவர் பல மேடை நாடகங்களை இயக்கி நடித்துள்ளார். மெக்கானிக் எஞ்சினியரிங் படித்தவர். ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தபோதே, நடுநடுவே நாடகங்களை போடுவார்.
அப்படி இவரது நாடகத்தை பார்க்க வந்த, இயக்குனர் சிகரம் பாலசந்தர் பாராட்டி தள்ளி விட்டார். அதுதான் சினிமாவுக்குள் கிரேஸியை உள்ளே புகுத்தியது. பொய்க்கால் குதிரை படம் மூலம் சினிமா பயணம் தொடங்கியது.


மோகன் ரங்காச்சாரி எனும் இயற்பெயரைக் கொண்டவர், கிரேஸி மோகனாக மாறிய கதை மிகவும் சுவாரஸ்யமானது.
பொய்க்கால் குதிரையில் ஆரம்பித்து, இன்று வரை தமிழ் சினிமாவின் சிரிப்பு மருந்தாக திகழ்ந்தவர் கிரேஸி மோகன். நாடகங்கள், சினிமாக்கள், தொலைக்காட்சி என எல்லாவற்றிலும் சிரிப்பு ராஜ்ஜியம் நடத்தியவர் இவர்.
மோகன் ரங்காச்சாரி என்பது தான் கிரேஸி மோகனின் இயற்பெயர். மெக்கானிக் எஞ்சீனியரிங் படித்த மோகன், எழுத்துறைக்கு வந்த கதைச் சுவாரஸ்யமானது. வெறும் மோகனாக இருந்த அவரது பெயருக்கு முன்னால் கிரேஸி என்ற பெயர் ஒட்டிக் கொள்ள காரணமாக இருந்தது ஒரு நாடகம் தான்.


கல்லூரிக் காலங்களில் ஸ்கிட் எனப்படும் குட்டி குட்டி நாடகங்களைப் போட்டு வந்தவர் மோகன். படித்து முடித்ததும், நல்ல வேலை கிடைத்தது. ஆனால், எழுத்தின் மீது இருந்த தீராக்காதலால் நாடகம் போடும் முயற்சியில் ஈடுபட்டார்.
எஸ்.வி.சேகர் இவருக்கு பள்ளியில் சீனியர். அந்த நட்பில் அவரிடம் வாய்ப்பு கேட்டுள்ளார். அப்படித்தான் அவரது முதல் நாடகமான கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம் மேடையேறியது. பயங்கர ஹிட்டான அந்த நாடகத்தின் பிரபல வசனங்கள் வார இதழில் தொடராக வந்து மக்கள் மத்தியில் இன்னும் பிரபலமானது.
இதுவரை சுமார் 1000க்கும் மேற்பட்ட முறை கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம் அரங்கேற்றம் ஆகியுள்ளது. அந்த நாடகத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தான் சினிமாவுக்குச் சென்றார் மோகன். ஆனால், சினிமாவில் வசனம் எழுதிய போதும், தொடர்ந்து நாடகங்கள் நடத்துவதிலும் ஆர்வம் காட்டி வந்தார்.


முதல் வெற்றி எப்போதும் பெயரோடு ஒட்டிக் கொள்வது வழக்கம் தானே. அப்படித்தான் சி.மோகன், கிரேஸி மோகன் ஆனார். அந்த நாடகத்திற்குப் பிறகு அவர் எவ்வளவோ நாடகங்கள் எழுதியபோதும், கிரேஸி மட்டும் அவரது பெயரோடே சிரிப்பு பசையால் ஒட்டிக் கொண்டது. கிரேஸி என்பது அவரது அடையாளமாகவே மாறிப் போனது. பலருக்கும் அவரது மோகன் என்ற பெயரைவிட கிரேஸி என்பது தான் மனதில் பதிந்து போயுள்ளது.
"டேக் திங்ஸ் ஈஸி... லைஃப் இஸ் கிரேஸி.." இதுதான் கிரேஸி மோகனின் தாரக மந்திரம். அது அவரது பேச்சு, எழுத்து எல்லாவற்றிலும் பிரதிபலிக்கும். படங்களில் காமெடி இருக்கும். ஆனால் காமெடியையே ஒரு முழு படமாக எழுதும் திறமை கிரேஸிக்கு மட்டுமே உண்டு. இதனை மிக சரியாக பயன்படுத்தி கொண்டவர் கமல்ஹாசன்தான்!

இதற்கு அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், பஞ்ச தந்திரம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு கதை-வசன கர்த்தாவாக பணியாற்றியதே சாட்சி!

லட்சக்கணக்கானோர் மனதுக்கு பிடித்தமான கிரேஸி மோகன் அற்புதமான மனிதர் மட்டுமல்ல.. காயம்பட்ட இதயத்துக்கு மருந்தானவரும்கூட. ரொம்ப வேகமாக வேகமாக பேசுவார்.. எப்பவுமே இவரது பேச்சில் ஒரு ஸ்பிரிட் இருக்கும். வெத்திலை - பாக்கு - சீவல்தான் இவரது ட்ரேட் மார்க்!

ஒரு காமெடியை பார்த்து சிரித்து முடிப்பதற்கு முன்பேயே இன்னொரு காமெடி வந்து நம்மை திக்குமுக்காட செய்வதுதான் கிரேஸியின் டச் & பஞ்ச்! கடந்த சில வருடங்களாக இவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக சொல்லப்பட்டது. எனினும் எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கு கொள்ளாமல் இருந்தார்.


இந்நிலையில், தீவிர கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டதால், உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் கவலைக்கிடமான நிலையில் அவர் உள்ளதாகவும் தகவல்கள் பரவின. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரபலங்களும், பொதுமக்களும் கிரேஸி மோகன் உடல்நலம் பெற்று வர வேண்டும் என்று இணையத்தில் ட்வீட்கள், கமெண்ட்கள் போட்டு பிரார்த்தனை செய்து வந்தனர். எனினும், தீவிர சிகிச்சை அளித்தும் அது பலனின்றி கிரேஸி மோகன் காலமானார். இந்த தகவலை கேட்டதும், சினிமா, நாடக உலகமே பெரும் சோகம் அதிர்ச்சியில் ஆழ்ந்து உள்ளது.