Wednesday 20 December 2017

`படம் 100 நாள் ஓடின பிறகுதான் டென்ஷன் வந்தது!' - கே.பாக்யராஜ்

கே.பாக்யராஜ் நடிகர், இயக்குநர், பத்திரிகையாளர்... எனப் பன்முகத்தன்மை கொண்ட மிகச் சிறந்த ஆளுமை. சீரியஸான  பல விஷயங்களை இயல்பான நகைச்சுவையுடன் சொல்வது இவரது தனித்தன்மை. இந்தியாவில் விரல்விட்டு எண்ணக்கூடிய சிறந்த திரைக்கதையாசிரியர்களில் இவரும் ஒருவர். இவரது திரைக்கதைக்காகவே பல படங்கள் இந்தியில் வெற்றி பெற்றன. இவர் தனக்கு ஸ்ட்ரெஸ் எதனால் எற்படும், அதற்கு அவர் என்னவிதமாக ரிலீஃப் தேடுவார் என்பதைப் பற்றி விவரிக்கிறார் இங்கே...
''குழந்தையாக இருந்தவங்க குழந்தையாகவே இருந்துட்டோம்னா, நமக்கு பிரச்னையில்லை. வளர ஆரம்பிச்சிட்டாலே, 'எனக்கு இது வேணும் எனக்கு அது வேணும்'னு கேட்க ஆரம்பிச்சிடுவோம். அங்கேயே நமக்கு ஸ்ட்ரெஸ் ஆரம்பிச்சிடுது. 

நாம் கேட்டதை நம்ம அப்பா வாங்கித் தருவாரா, அம்மா ஏதாவது சொல்வாங்களா, வாத்தியார் எதாவது சொல்லுவாரோனு நினைக்க ஆரம்பிச்சோம் பாருங்க. அப்பவே டென்ஷன் ஆரம்பிச்சிடுச்சு. சில பேர் அது கிடைக்கலேன்னாலும் ஸ்போர்ட்டிவா எடுத்துக்கிட்டு, 'சரி ஓகே'னு போயிடுவாங்க. சில பேர் அதையே நினைச்சுக்கிட்டு இருப்பாங்க. 
  

நான் ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆக இருந்தேன்னா, `ஒண்ணு நடந்துடுச்சுன்னா அதையே ஏன் நெனைச்சுக்கிட்டு இருக்கே. அப்படி இருக்கிறதாலா என்னாகப் போகுது? அதுல இருந்து வெளியில வர்றதுக்கு என்ன வழினு யோசி’னு சொல்லுவாங்க. 
சின்ன வயசுல சினிமாவுக்குப் போகக் கூடாதுனு வீட்டுல சொல்லுவாங்க. ஆறு மணி ஷோவுக்குப் போயிட்டு வந்தாலே, ராத்திரி மணி பத்தரை ஆகிடும். ஆனா, அதையும் மீறி, அடிக்கடி நைட் ஷோ போயிடுவேன். 
படம்விட்டு வீட்டுக்கு வர்றப்போ மெயின் ரோடு வரைக்கும் லைட் இருக்கும். அங்கேயிருந்து கோவை பாரதிபுரத்துல இருக்கிற எங்க வீட்டுக்குப் போகணும்னா அங்க லைட் இருக்காது. கும்முனு இருட்டா இருக்கும். ஒண்ணும் தெரியாது. பேய், பூதம்னு சொல்லிவெச்சிருப்பாங்க, இல்லையா. ரொம்ப பயமா இருக்கும். அப்போ அது பெரும் டென்ஷனாக இருக்கும். 
அதுக்காக அங்கேயேவா இருக்க முடியும்? ஏதாச்சும் பாட்டு பாடிக்கிட்டுப் போய் சேர்ந்துடுவோம்னு பாடிக்கிட்டே வீட்டுக்குப் போயிடுவேன்.

சினிமாவுக்கு வந்ததுக்கப்புறம் அசிஸ்டென்ட் டைரக்டரா வேலை பார்க்கும்போது ஏற்படுற டென்ஷன்... அது ஒரு பக்கம் இருந்தாலும், புரொட்யூஸர் கிடைக்கறது இருக்கு பாருங்க... அதுதான் பெரிய டென்ஷன். 

நாம சொல்ற கதை தயாரிப்பாளருக்குப் பிடிக்கணும். தயாரிப்பாளருக்குப் பிடிச்சாலும், அடுத்து ஹீரோவுக்குப் பிடிக்கணும். இப்போ ரெண்டு நாளைக்கு முன்னாடிகூட 'அருவி' படம் பார்த்தேன். அப்படிப்பட்ட வித்தியாசமான கதையை ஏத்துக்கிட்டு தயாரிப்பாளர் தயாரிக்கிறதுதான் பெரிய விஷயம். 



என் விஷயத்துல நான் `கிழக்கே போகும் ரயில்’ படத்தில் வேலை பார்க்கும்போதே, எனக்கு படம் இயக்க வாய்ப்பு வந்துச்சு. நான்தான் இன்னும் கொஞ்சம் கத்துக்கிட்டு பண்ணலாம்னு தள்ளிப்போட்டேன். அதுக்கப்புறம் எங்க டைரக்டர் மூணாவது படம் ஆரம்பிச்சிட்டார். அப்புறம் நாலாவது படம் `புதிய வார்ப்புகள்’ல என்னையே ஹீரோவாக்கிட்டார். 

நான் தனியா படம் பண்ணும்போது டென்ஷன் இல்லாமதான் 'சுவரில்லாத சித்திரங்கள்' படத்தை இயக்கினேன். இளையராஜாவின் அறிமுகம் இருந்தாலும், கங்கை அமரனே போதும்னு ரொம்ப ரிலாக்ஸாகத்தான் பண்ணினேன். அதனால எனக்கு யாருகிட்ட கதை சொல்லி ஓ.கே வாங்கணும்கிற டென்ஷனும் இல்லை. படம் டைரக்ட் பண்ணும்போதும் சிரமம் இல்லை. ஆனால், அந்தப் படம் வெளிவந்து வெற்றி பெற்ற பிறகுதான் எனக்குக் கொஞ்சம் டென்ஷன் ஏற்பட்டுச்சு.
அதன் பிறகு நான் இயக்கிய 'ஒருகை ஓசை', 'மௌன கீதங்கள்', 'இன்று போய் நாளை வா', 'விடியும் வரை காத்திரு'னு தொடர்ந்து வெற்றி பெறவும்தான் டென்ஷனானேன். அதுக்கப்புறம், 'அந்த 7 நாட்கள்' படம் பண்ணும்போதுதான் டென்ஷன் குறைய ஆரம்பிச்சுது.

'முந்தானை முடிச்சு' நாங்க எதிர்பார்த்ததைவிட மிகப் பெரிய வெற்றி. அது ஒரு நூறு நாள் படமாகத்தானிருக்கும்னு நெனைச்சோம். ஆனா, ஊரு ஊருக்கு குடும்பங்கள் வண்டி கட்டிக்கொண்டு போனதைப் பார்த்தபோது ரொம்ப சந்தோஷமாகவும் டென்ஷனாகவும் இருந்துச்சு..  

ஒவ்வொரு முறையும் கடைசியா வந்த எனது படத்தை எனது அடுத்த படம் தாண்டிடணும்னு ஒரு பெரிய ரிஸ்க் ஏற்பட்டுச்சு.  அதுக்காக கதை பண்ணும்போது காட்சிகள் சிறப்பா வரணும்ங்கிறதுக்காக மண்டைய உடைச்சிக்குவோம். 'மற்றவங்க சிரிக்கிறதுக்காக நாம கதவைச் சாத்திக்கிட்டு அழவேண்டி இருக்கு' என்று என் அசிஸ்டென்ட்களிடம் வேடிக்கையாகச் சொல்வேன். 
நான் பாரதிராஜா சார்கிட்ட இருந்து வந்ததால, இன்னிக்கு ஷூட்டிங்குல என்ன எடுக்கணும்னு மனசுலயே ஒரு கணக்குப் போட்டு ஷூட் பண்ண ஆரம்பிச்சிடுவேன். டயலாக்கூட ஸ்பாட்டுல போய்தான் எழுதுவேன்.

 'தூறல் நின்னுப் போச்சு' படத்துல சுலக்‌ஷனா வீட்டைவிட்டு ஓடிப் போய்விட்டு திரும்ப வீட்டுக்கு வந்ததும்,  சுலக்‌ஷனாவோட அப்பா செந்தாமரை கேட்பார். 'ஏண்டி... அவ வாசப்படி மட்டும்தான் தாண்டினாளா, இல்லை வயித்தையும் நிரப்பிக்கிட்டு வந்துட்டாளானு கேளுடி'ம்பார். 
சுலக்‌ஷனாவும் அவங்க அம்மாவும், 'அய்யய்யோ'னு அப்படியே ஷாக் ஆகிடுவாங்க. 'ஏங்க அவ நம்ம பொண்ணுங்க’னு சொல்லி டயலாக் பேசுவார். சுலக்‌ஷனா போயி எரிகிற கொள்ளிக்கட்டையை எடுத்து அது மேல நின்னுடுவாங்க. 
இப்படி எல்லா சீனும் எடுத்துக்கிட்டு இருந்தேன். ஆனா, இதுக்குப் பதில் தர்ற மாதிரி செந்தாமரை பேசுற டயலாக் மட்டும் தோணவே இல்லை. நானும் இங்கிட்டு அங்கிட்டு நடந்துக்கிட்டுப் போறேன். டயலாக் தோணவே இல்ல. சிகரெட்டா பத்தவெச்சுக்கிட்டு இருக்கேன். எதுவும் தோணவே இல்லை. 

கடைசியில, ஷாட் ரெடி பண்ணச் சொல்லிட்டேன். லைட்டிங் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. கவுன்ட்டர் டயலாக் சொல்லணும்.. 'யாருடி பைத்தியக்காரியா இருக்கே... அத்துக்கிட்டுப்போற மாடு தெற்கு வடக்குனு பார்த்துக்கிட்டா ஓடும்?'னு டயலாக் வெச்சேன். எனக்கும் பெரிய சேட்டிஸ்பேக்‌ஷன். யூனிட்லயும் பாராட்டுனாங்க. தியேட்டர்லயும் அந்த டயலாக் கிளாப்ஸ் வாங்கிச்சு.
எங்களை மாதிரி சினிமாக்காரங்களுக்கு நாம கிரியேட் பண்ற விஷயம் சரியா ஜனங்களுக்குப் போய்ச் சேரணும்னு ஒரு ஸ்ட்ரெஸ் இருந்துகிட்டேதான் இருக்கும்" என்றவரிடம், "உங்களுடைய  ஸ்ட்ரெஸ் ரிலீஃப்க்கு என்ன பண்ணுவீங்க?" எனக் கேட்டோம். 

''ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொண்ணு பிடிக்கும்.ஒரு சிலருக்கு கார்ட்ஸ் ஆடுறது பிடிக்கும். ஒரு சிலருக்கு ரேஸுக்குப் போறது பிடிக்கும். எனக்கு புத்தகம் படிக்கிறது ரொம்பப் பிடிக்கும். புத்தகப் புழுவாக இருப்பேன். எப்போ வெளியூர் போனாலும் சூட்கேஸ்ல புக்ஸ் எடுத்துக்கிட்டுப் போவேன்.
அப்புறம் `பாக்யா’ பத்திரிகைக்காக வித்தியாசமான நிறைய புத்தகங்கள் படிப்பேன். அந்த அனுபவம் என் வாழ்க்கைக்கும் பயன்படுது" என்றவரிடம்,  'நடிகர், இயக்குநர், பத்திரிகையாளர், இயக்குநர் பயிற்சிக் கல்லூரி விரிவுரையாளர் எனப் பலவித வேலைகளை எப்படி பேனல்ன்ஸ் பண்ணிக்கிறீங்க?' என்று கேட்டோம்.
நமக்குப் பிடிச்ச வேலையை லயிச்சு செய்யும்போது நமக்கு அலுப்பே வராது. நேரம் போறதே தெரியாது. வேலையை வேலையா நெனைச்சா ஸ்ட்ரெஸ் தானா வந்துடும். சினிமாவைப் பொறுத்தவரை அதை நான் வேலையா நெனைக்கிறதில்லை'' என்று கூறி விடைகொடுத்தார்.

Sunday 19 November 2017

சினிமாவால் ஒருபோதும் புரட்சி ஏற்பட்டுவிடாது!

திரைப்படங்கள் ரசிகர்களின் மூளைக்குள் ஊடுருவி ரசாயன மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியவை. அவை சமூகம் அன்றாடம் சந்திக்கும் நிகழ்வுகளைத் தழுவி எடுக்கப்பட்டாலும், அதற்காக முன்வைக்கும் தீர்வுகளின் வழியாக, மாற்று சிந்தனைக்கான வழிகளை நம் மனதுக்குள் விதைக்கவல்லவை. அந்த வகையில் சமீபத்தில் வெளியான அறம் திரைப்படம் சாமானியர்களின் கலகக்குரலாக ஒலித்துக்கொண்டிருக்கிறது. வெகுஜனத்தைப் பாழாக்கும் வணிக அறிவியலை அப்படியே தோலுரித்துக் காட்டியிருக்கும் அந்தப் படத்தின் இயக்குனர் கோபி நயினார் நம்மிடம்,


முதல் படத்திலேயே அரசியல்வாதிகளையும், முதலாளிகளையும் எதிர்க்கும் ஒரு அரசியல் படத்தை எடுத்திருப்பதற்கு காரணம் இருக்கிறதா?
மக்களுக்கான படைப்பு என்பது மிகப்பெரிய எதிர்ப்பு நிலையில் இருந்துதான் உருவாகும். இது நீரையோ, விவசாயத்தையோ பற்றிய கதை கிடையாது. ஆனால் நீர், விவசாயம் ஆகியவற்றைச் சார்ந்திருப்பதால் ஏற்படுகிற மிகப்பெரிய பிரச்சனைகளைப் பேசியிருக்கிறோம். அதனடிப்படையில்தான் கதையும் வடிவமைப்பட்டது.
ஒரு கதாநாயகியை அரசியல் பேச வைத்திருப்பதற்கான நோக்கம் என்ன?
உலகம் முழுவதும் ஒடுக்கப்பட்ட இனமாக பெண்கள்தான் இருக்கிறார்கள். நீதி மறுக்கப்பட்ட ஒரு சமூகத்தில் இருந்து வந்த ஒரு பெண் நீதி பேசினால், அதுதான் பொது நீதியாக இருக்கும் என நம்புகிறவன் நான். அதனடிப்படையில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ஒரு அரசியல் நீதியை வழங்குகிற தகுதி பெண்ணுக்கு மட்டுமே இருப்பதாகவும் நான் நம்புகிறேன். அதனால்தான், இந்தக் கதை முழுக்க அந்தக் கதாப்பாத்திரம் நிறைய நீதி பேசும்.
படத்தில் ‘நீங்கள் அரசுக்கான அதிகாரியா? அரசுக்கு எதிரான அதிகாரியா?’ என ஒருவர் கேட்கிறார். அப்படியென்றால், மக்களுக்கான அதிகாரிகளை, அரசு வேலை செய்யவிடாமல் தடுக்கிறதா?
நாம் வாழுகிற இந்த நாடு, வணிக சந்தைகளால் கட்டமைக்கப்பட்டது. கிழக்கிந்தியக் கம்பெனி இந்த நாட்டை அடிமையாக்கி, பின் விட்டுச் சென்றாலும், ஒரு நாட்டை எப்படி ஆளவேண்டும் என்பதற்கான யுக்தியை மிகப்பெரிய வணிகர்களிடம் ஒப்படைத்துச் சென்றுவிட்டது. 1947ஆம் ஆண்டு நாம் விடுதலை பெற்றுவிட்டோம் என்று சொன்னாலும், வணிகர்களிடத்தில் இருந்து நாம் இன்னமும் விடுதலை பெறவில்லை. வணிகர்கள்தான் இந்த நாட்டின் மொத்த அரசையும் தீர்மானிக்கும் நபர்களாக இருக்கிறார்கள். சீரழிந்துவிட்ட இந்த நாட்டை செப்பனிடுவதற்கு எவ்வளவு பெரிய அதிகாரிகள் மனிதநேயத்தின் அடிப்படையில் வந்தாலும், வணிகர்களுக்கு எதிராக நடந்துவிட்டால் அவர்களை அரசுக்கு எதிரானவர்களாக வரையறுத்துவிடுவார்கள். இந்த நாடு நமக்கானது என மக்கள் நினைத்துக்கொண்டு ஓட்டு போடுகிறார்கள். ஆனால், அப்படி தேர்ந்தெடுத்த மக்களையே இந்த அரசு ஒடுக்குகிறது. ஒருவேளை ஜனநாயக அடிப்படையில் அவர்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்பு இல்லையென்றால், அரசு மக்களை நேரடியாகவே தாக்கும். அதைத்தான் படமும் சொல்லும்.
‘எந்தத் தலைவனும் இங்கு வரப்போவதில்லை’ எனச் சொல்லும் வசனமும் அதற்காகத்தானா?
இதுவரைக்கும் வரவில்லை என்பதுதானே உண்மை. நிறையபேர் தலைவர்களாக வந்தார்கள். ஆனால், அவர்களை யார் அனுப்பினார்களோ, அந்தக் கட்டமைப்பிற்கான வியாபாரத்தை முடித்துவிட்டு போய்விட்டார்களே.
இன்றைய அரசியல் சூழலில் அறம் அரசுக்கு எதிரான படமாக இருக்கிறதே?
யாருக்கும் எதிரானது கிடையாது இந்தப்படம். ஆனால், மிகப்பெரிய மாற்றத்தை இந்தப்படம் ஏற்படுத்தியிருப்பதாக நம்புகிறேன். யார் எதிரி என்று சொல்கிறீர்களோ, அவர்களையே நாம் மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அவர்களை மாற்றியமைக்காமல் நம்மால் எதுவும் செய்யமுடியாது.
மக்கள் வாழ்வில் முன்னேற்றம் அடையவேண்டும் என்பதற்காகத்தானே அரசு பல திட்டங்களைக் கொண்டுவருகிறது. அந்தத் திட்டங்களை மக்கள் விரோதம் என சொல்லிவிட முடியுமா?
தொழிற்சாலைகள் மட்டும்தான் வேலையைத் தரமுடியுமா? அப்படியென்றால் அதிகமான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் விவசாயத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? தொழிற்சாலைகள் வேலைவாய்ப்பைத் தருமென்றால் அதில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களைப் பற்றி கவலைப்படத் தேவையில்லையா? அந்த உற்பத்தி என்னை நோயாளியாக்கி, மருத்துவம் என்கிற இன்னொரு வணிகத்தின் மூலமாக என் உயிரைக் குடிக்கும் என்றால், அந்த உற்பத்தி எது என்ற கேள்வியை எழுப்புவது நியாயம்தானே? இந்த நாட்டில் விவசாயம் அழிந்துபோகவில்லை. ஆனால், அதைச் செய்வதற்கான ஆதாரங்கள் வேலைவாய்ப்பு, உற்பத்தி போன்ற பல காரணங்களைச் சொல்லி அபகரிக்கப்பட்டுவிட்டன. இந்தச் சூழலில்தான் ஒரு விவசாயி அநாதையாக்கப்பட்டிருக்கிறான்.
சினிமா எனும் பொழுதுபோக்கு தளத்தில் ரஜினி, விஜய், நயன்தாரா என யாரை வைத்து அரசியல் பேசினாலும் அதுவும் வணிகமாகத்தானே மாறுகிறது?
ஒரு பிராண்ட் எப்போதும் போராட்டமாக இருக்க முடியாது, ஒரு போராட்டம் நிச்சயம் பிராண்டாகவும் இருக்கமுடியாது. நீங்கள் சொன்ன எல்லோருமே பிராண்டாக இருக்கும்போது, எப்படி போராட்டமாக மாறும் என்று கேட்கும் கேள்வி நியாயமானது. நாம் ஒரு காரியத்தைச் செய்யும்போது, நம்முடைய பொருளை ஒரு நுகர்வோர் அதை வாங்கிக் கொள்ளாமல், ஆதரவாளராக மாறவேண்டும். என் பேச்சைக் கேட்டு ரசிக்கத் தொடங்கினால் அது நுகர்வாகிவிடும். அதற்குப் பதிலாக தடியை எடுத்துக்கொண்டு போராடக் கிளம்பினால், அவர்களை நான் போராளிகளாக மாற்றிவிட்டேன் என்று அர்த்தம். அதேசமயம், சினிமாக்களால் புரட்சி ஏற்பட்டுவிடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். புரட்சியை மக்களாலும், அரசியலாலும், தியாக உணர்வுள்ள உன்னதமான தலைவர்களாலும் மட்டுமே செய்யமுடியும். ஆனால், ஒரு கலைஞனால் அந்தப் போராட்டத்திற்கான கலகத்தை ஏற்படுத்த முடியும்.

Monday 25 September 2017

பாண்டியராஜன்... எளிய கதைகளில் வலிய நகைச்சுவை நிகழ்த்தியவர்!

பெரிய நடிகர்கள், கலைஞர்களைப் பங்கேற்கச் செய்து வணிகச் சந்தைக்கான பொழுதுபோக்கு வெற்றித் திரைப்படங்களைத் தொடர்ந்து இயக்கியவர் எஸ்.பி. முத்துராமன். எளிமையான கதைச் சுற்றுகளுடன் கூடிய தொய்வில்லாத தெளிவான படங்கள் அவருடையவை. அவருடைய நேர்காணல் ஒன்றில் தம்மைக் கவர்ந்த அருமையான பொழுதுபோக்குப் படங்கள் என்று சிலவற்றைக் கூறினார். அப்பட்டியலில் ஆண் பாவம் என்ற படம் இருந்தது. சிறு வயதில் பார்த்திருந்த அப்படம் கலகலப்பாக இருந்தது என்பதுதான் நினைவு. முத்துராமன் கூறிய பிறகு பின்னொரு வாய்ப்பில் ஆண் பாவம் திரைப்படத்தைப் பார்த்தேன். தெள்ளத் தெளிவாக, எடுப்பு சுத்தமாக, களிகூறுகளின் தொகுப்பாக ஆக்கப்பட்ட தமிழ்த் திரைப்படம் ஆண் பாவம். இன்றைக்கும் எந்தத் தொலைக்காட்சியில் அப்படம் காட்டப்பட்டாலும் தளர்வாக அமர்ந்து புன்னகை மாறாத முகத்தோடு காணலாம். நாம் நம்புவதற்குக் கடினமான இளமை அகவையிலேயே அப்படத்தை எடுத்து முடித்திருந்தார் பாண்டியராஜன். 
 
 
 
 
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பத்தொன்பதில் பிறந்தவரான பாண்டியராஜன் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பத்தைந்தாம் ஆண்டில் ஆண்பாவம் திரைப்படத்தை வெளியிட்டார். அதற்கும் ஓராண்டு முன்னதாக அவருடைய முதற்படம் கன்னிராசியை எடுத்து முடித்திருந்தார். இருபதாம் அகவைத் தொடக்கங்களில் படங்களை இயக்கி வெற்றி பெற்றுத் தொடர்ந்து பயணித்தவர்களில் ஸ்ரீதரும் பாண்டியராஜனுமே தலையாயவர்கள்.


திரையுலகில் நுழைவதற்கே ஆண்டுக்கணக்கில் காத்திருக்க நேர்ந்த அக்காலத்தில் இவர்கள் செய்ததைச் செயற்கரிய செயல் என்றே சொல்ல வேண்டும். தம் இருபத்தைந்தாம் அகவையில் இப்படத்தை எடுத்து முடித்த பாண்டியராஜன் அதற்கும் முன்பாகவே சில ஆண்டுகளாக உதவி இயக்குநராகவும் பணியாற்றினார். ஸ்ரீதர் பணக்கார வீட்டுப் பிள்ளை. தம் சொந்தப் பொருளையே முதலீடாக்கி முதற்படம் எடுத்தவர். ஆனால், பாண்டியராஜன் குமுகாயத்தின் கடைத்தட்டு வாழ்வினர். சென்னையைச் சேர்ந்த வெள்ளந்தி மக்களின் பிள்ளை. அத்தகைய பின்புலத்திலிருந்து திரைத்துறைக்குள் நுழைந்து ஒரு முதலீட்டாளரைப் பிடித்துப் படமெடுத்து வென்றது வியப்புக்குரியதுதான். பாண்டியராஜனைப் போன்ற ஒருவர் இளமையிலேயே தொழில் கற்று வெற்றி பெற்றதற்கு அவருடைய ஆசான் பாக்யராஜின் சந்தை மதிப்பும் ஒரு காரணம். 
 
 பாண்டியராஜனை நான் எளிமையாக மதிப்பிட்டிருந்தேன். அவருடைய நேர்காணல் ஒன்றைப் படித்த பிறகுதான் அதை மாற்றிக்கொண்டேன். திரைத்துறையில் நுழைந்து ஓர் உதவி இயக்குநராகப் பணியாற்றிப் படமியக்கும் வாய்ப்பைப் பெறுவது குறித்து அவர் தெளிவான வரையறை ஒன்றைச் சொன்னார். 
 
நினைவிலிருந்து அதைச் சொல்கிறேன் : "சினிமாவில நீங்க உதவி இயக்குநராகச் சேர்ந்துட்டீங்கன்னா தொழில்நுட்பம் சார்ந்து கத்துக்கிறதுன்னு ஒரு பகுதி இருக்கு. அதைக் கத்துக்கிறதுக்கு மூன்று நான்கு படங்கள் போதுமானது. ஓர் உதவி இயக்குநராக மூன்று நான்கு படங்களுக்கு மேல் நீங்க கத்துக்கறதுக்குப் பெரிசா எதுவுமிருக்காது. அந்த மூன்று நான்கு வருசத்துக்குள்ள நாலைஞ்சு படம் வேலை செஞ்சிருப்பீங்க. அது போதும். வேண்டியதைக் கத்துக்கிட்டாச்சு. அந்த இடத்திலிருந்து உங்க உதவி இயக்குநர் வாழ்க்கைய விட்டு வெளிய வரப் பார்க்கணும். நீங்க படம் இயக்குறதுக்கு முயற்சி பண்ணனும். அந்தச் சரியான நேரத்தை விட்டுட்டீங்கன்னா உங்க வாழ்க்கை உதவி இயக்குநராகவே கழிஞ்சிடும். பத்து வருசம் இருபது வருசம் போறதே தெரியாது. கடைசி வரைக்கும் படமியக்கும் வாய்ப்பு கிடைக்காமப் போய்விடலாம்."
 
இந்தத் தெளிவுதான் பாண்டியராஜனை இளமையிலேயே படமியக்கச் செய்தது. ஆண்பாவத்தின் வெற்றிதான் பாண்டியன் என்ற நடிகரை மேலும் இன்னொரு சுற்று வரவைத்தது. அக்காலப் பெரியம்மாக்கள் தம் மகனுக்குச் சீதாவைப் போன்ற பெண்ணைத் தேடினார்கள். கொல்லங்குடி கறுப்பாயி என்ற பாட்டியம்மா தமிழகம் அறிந்தவரானார். பாண்டியராஜனுக்கும் ஒரு நடிகராக வரவேற்பு கிடைத்தது. இயக்கத்துக்கு அப்பால் அவர் நாயகனாகவும் நடிக்கலானார். 
 
பாண்டியராஜனிடம், "உங்கள் தேதிகளை வாங்க வேண்டுமென்றால் நான் என்ன செய்ய வேண்டும் ?" என்று தயாரிப்பாளர் ஒருவர் கேட்டாராம். அப்போது வெளியாகியிருந்த பகல்நிலவு என்ற படத்தின் வழியாக மணிரத்னம் என்ற புதியவர் சிறிய சலனத்தை ஏற்படுத்தியிருந்தார். "மணிரத்னம் என்னும் இயக்குநர் நன்கு படமெடுக்கிறார். அவரை இயக்குநராக அமர்த்தி என்னை வைத்துப் படமெடுப்பதானால் சொல்லுங்கள். உடனே தேதிகளைத் தருகிறேன்" என்று அந்தத் தயாரிப்பாளரிடம் பாண்டியராஜன் கூறினாராம். அவர்கள் இருவரும் ஒரு படத்திலேனும் இணையும் வாய்ப்பு அமையவில்லை. ஆனால் இந்நிகழ்வை மணிரத்னம் ஒரு விழாவில் நன்றியோடு கூறியமர்ந்தார். பாண்டியராஜனுக்குத் திரைப்போக்குகளைப் பற்றிய நுண்ணுணர்வு இருந்தமையால்தான் அவர் அப்போதே மணிரத்னத்தைக் கணித்தார்.
 
 
பாண்டியராஜன் நடித்தவற்றில் 'ஏட்டிக்குப் போட்டி' என்ற படம் எனக்குப் பிடித்த படம். அக்காலத்து ஊர்ப்புறத்து இளைஞன் ஒருவனுக்கும் அவன் வாழ்வில் எதிர்பாராத விதமாக வரும் நகரத்துப் பள்ளி மாணவிக்கும் இடையில் தோன்றும் காதல்தான் அப்படத்தின் கதை. பாண்டியராஜனின் கிராமத்துக்குச் சாரணர் இயக்க மாணவியர் குழுவொன்று சேவை முகாமுக்காக வரும். அக்குழுவில் ஒரு மாணவி காட்டுக்குள் காணாமல் போய்விடுவார். மாணவியைக் காணாத சாரணர் குழு தேடிப்பார்த்துவிட்டுச் சென்று விடும். அம்மாணவியைத் தற்செயலாகக் கண்டுபிடித்து தம் வீட்டுக்கு அழைத்து வருவார் பாண்டியராஜன். வீட்டுக்கு வந்தவுடன் அம்மாணவி பூப்பெய்திவிடுவாள். யார் வீட்டுப் பெண்ணாயினும் தம் வீட்டில் பூப்பெய்தினால் அவ்வீட்டுக்கு நன்னிகழ்வுதானே ?
 
 பாண்டியராஜனின் வீட்டார் அப்பெண்ணுக்கு உரிய சடங்குகளைச் செய்து ஓலை கட்டி அமர்த்தி வைப்பார்கள். இடையில் நாயகியைத் தேடி பெண் வீட்டார் வருவதும், சடங்கு முடியாமல் அனுப்ப மாட்டோம் என்று ஊரார் வாதிடுவதுமாக அக்கதை நகரும். காணமற்போன நாளிலிருந்து தன்னைக் கண்ணாகக் கவனித்துக்கொள்ளும் பாண்டியராஜன் குடும்பத்தார் மீது அவளுக்குப் பாசம் தோன்றிவிடும். அது நாயகன் மீது காதலாக மாறிவிடும். 
 
எதிர்ப்புகளை வென்று காதலர்கள் எவ்வாறு சேர்கிறார்கள் என்பது மீதக்கதை. என் நினைவிலிருந்து படக்கதையைக் கூறியிருக்கிறேன். ஏட்டிக்குப் போட்டி படத்திற்குத் திரைக்கதை வசனம் எழுதியவர் பாண்டியராஜன்தான். இயக்கியவர் ஆர். கோவிந்தராஜன். இணையத்தில் இப்படம் இருக்கிறது. எண்பதுகளின் கலகலப்பான நாட்டுப்புறப் படங்களை விரும்புவீர்கள் என்றால் கட்டாயம் பார்க்கலாம். 
 
பாண்டியராஜன் இயக்கிய நெத்தியடி என்ற படத்தின் முதற்பாதியில் 'தமிழ்த் திரைப்படங்களில் ஆக்கப்பட்ட மிகச்சிறந்த நகைச்சுவைப் பகுதி' இருக்கிறது. பாண்டியராஜனின் படங்களில் ஜனகராஜ், ஈரோடு சௌந்தர், திடீர் கண்ணையா ஆகியோர் நல்ல கதைப் பாத்திரங்களில் வெளிப்பட்டனர். மூத்த நடிகர்கள் வீகே இராமசாமி, தங்கவேலு (மனைவி ரெடி) ஆகியோரையும் பாண்டியராஜன் நன்கு பயன்படுத்தினார். 
 
தொண்ணூறுகளின் தொடக்கத்தில் அகல் திரைப்படங்களும் பொருட்செலவுப் படங்களும் போக்குகளைத் தீர்மானம் செய்தன. அப்போதுதான் பாண்டியராஜனின் திரைப்படங்கள் பின்தங்கின. ஆனால், பாண்டியராஜனின் முப்பதுக்கும் மேற்பட்ட படங்கள் இன்றைக்குப் பார்த்தாலும் களிப்பூட்டத் தவறாதவை. கதைக்குள் நிகழ்த்தப்படும் நகைச்சுவைக்கு எப்போதும் தனிச்சுவை உண்டு. அதை விரும்புவோர்க்குப் பாண்டியராஜனின் படங்கள் இப்போதும் பிடிக்கும்.

- கவிஞர் மகுடேசுவரன்

Thursday 7 September 2017

நடிகர் திலகம்... ஏற்காத வேடமில்லை!

தமிழ்க் கலையுலகில் நாடக நடிகராக நுழைந்து, திரைப் படத்துறைக்குள் சாதாரண நடிகராக அடி வைத்து, 'பராசக்தி' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் விசி கணேசன் எனும் சிவாஜி கணேசன். 
 
 
 
 
பல்வேறு சவாலுக்குரிய வேடங்களை ஏற்று ஈடுஇணையற்ற முறையில் இந்திய திரையுலகமே திரும்பிப் பார்த்து ஆச்சரியம் கொள்கின்ற அளவிற்கு தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தி 'நடிகர் திலக'மாக ஜொலித்தவர் சிவாஜி கணேசன்.
 
அவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை என்று சொல்லலாம். சிவாஜி, தான் ஏற்றுக் கொள்ளும் கதாபாத்திரங்களை சரியான முறையில் உள்வாங்கி அந்த கதாபாத்திரத்தின் போக்குப்படி சிரிப்பது, நடப்பது, கோபப்படுவது, கண்ணீர் விடுவது என்று அனைத்தையும் தனது முகபாவங்களினாலும், உடல் அசைவுகளினாலும் அப்படியே செய்து காட்டுவதில் உலகத் திரைப்படக் கலைஞர்களின் வரிசையில் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் முதன்மையானவர், நிகரற்றவர். 
 
 
 
 
சிவாஜிக்கு நடிப்பதற்கு கிடைத்த கதாபாத்திரங்களைப்போல் வேறு எந்த நடிகருக்கும் ஏன் இந்தியத் திரைப்பட அளவில் உள்ள எந்த கலைஞர்களுக்கும் அமையவில்லை. 
 
 'நவராத்திரி' படத்தில் அப்பாவியாக, முரடனாக, டாக்டராக, குடிகாரனாக, தொழுநோயாளியாக, விவசாயியாக, கூத்துக் கட்டுபவராக, காட்டிலாகா அதிகாரியாக, காவல்துறை அதிகாரியாக இப்படி ஒன்பது விதமான வேடங்களை எந்த விதமான கிராபிக்ஸ் வேலைகள் இல்லாமல், மேக்கப்பின் மூலம் எந்த மேஜிக்கும் செய்யாமல் ஒவ்வொரு வேடத்திற்கும் வெவ்வேறுவிதமான வேறுபாடுகளை காண்பித்து நடிப்பினால் மட்டும் வித்தியாசத்தை காட்டி நடித்து சாதனைப் புரிந்த ஒரே நடிகர் உலகத்திலேயே நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஒருவர் தான் என்றால் அது மிகையான செய்தி அல்ல.
 
 
 

'ராஜபார்ட் ரங்கதுரை' படத்தில் நாடக நடிகராக அர்ஜீனன், நந்தனார், ஸ்ரீமுருகன், ஹரிச்சந்திரன், ஹாம்லட், பகவத்சிங், திவான்பகதூர், கிறிஸ்துமஸ் தாத்தா, கொடிக் காத்த திருப்பூர் குமரன் இப்படி ஒன்பதுவிதமான நாடகங்களில் ஒன்பது விதமான வேடங்களை ஏற்று நடித்து சிறப்பித்தவர் நடிகர் திலகம். 'தெய்வமகன்' படத்தில் அப்பா, பெரியமகன், சிறிய மகன் என்று மூன்று விதமான கதாபாத்திரங்களில் வித்தியாசம் காட்டி நடித்து படம் பார்த்தவர்களை பிரம்மிக்க வைத்தவர் நடிகர் திலகம். 
 
இதற்காக இந்தப் படம் ஆஸ்கர் விருதுக்காக முதன்முதலில் போட்டியில் கலந்துக் கொண்டது என்பது அனைவரும் அறிந்த செய்தியாகும். தேர்வுக் குழுவிலிருந்த பலரும், இந்த மூன்று வேடங்களையும் ஒரே நடிகர் நடித்தார் என்பதை முதலில் நம்பவில்லை. 
 
 
 
 
 'உத்தமபுத்திரன்' படத்தில் இரட்டை வேடம் ஏற்றார். 'கௌரவம்' படத்திலும் இரட்டை வேடத்தில் நடித்தார். 'மனிதனும் தெய்வமாகலாம்' படத்தில் ஆத்திகன் & நாத்திகன் என்று இரட்டை வேடத்தில் நடித்தார். 'பாட்டும் பரதமும்' படத்தில் பாட்டையும், பரதத்தையும் இணைக்கும் இருவிதமான கதாபாத்திரம். 'திரிசூலம்' படத்தில் தந்தை, மூத்தமகன், இளையமகன் என்று மூன்றுவிதமான கதாபாத்திரத்தில் நடிப்பும் மூன்றுவிதமாக இருந்தது. அதனால் படமும் ஹிட்டாகி வசூலையும் தந்தது.

'எமனுக்கு எமன்' படத்தில் எம தர்மராஜனாக, எதிர்க்கும் இளைஞனாக இரண்டு கதாபாத்திரங்களில் நடிப்பாற்றலை சிறப்பாக வெளிப்படுத்தினார். 'வெள்ளை ரோஜா' படத்தில் புனிதமான கிறிஸ்துவ பாதிரியாராகவும், போலீஸ் அதிகாரியாகவும் மாறுபட்டட நடிப்பை வெளிப்படுத்தினார். 
 
'சந்திப்பு' படத்திலும் இரட்டை வேடமேற்றார். 'எங்க ஊர் ராஜா', 'என் மகன்', 'சிவகாமியின் செல்வன்', 'புண்ணியபூமி', 'விஸ்வரூபம்', போன்ற படங்களில் இரட்டை வேடமேற்று நடித்தார். 'பலே பாண்டியா' படத்தில் 3 வேடங்கள். 
 
ஒவ்வொரு படத்திலும் மாறுபட்ட வேடமேற்று நடிகர் திலகம் சாதனைப் புரிந்தார். ஒரு வேடத்தை ஏற்றிருந்த படங்களிலும், ஒப்பற்ற நடிப்பாற்றலை வெளிப்படுத்தி நடித்தார். முதல் படமான 'பராசக்தி'யில் சீர்திருத்தம் பேசும் இளைஞராக நடித்த சிவாஜி, 'திரும்பிப்பார்' படத்தில் பெண்பித்து பிடித்தவராக வந்தார். 
 
'மனோகரா'வில் சங்கிலியால் பிணைக்கப்பட்ட வீரனாக அனல் தெறிக்கும் வகையில் வசனம் பேசி அந்நாளில் ரசிகர்களை ஈர்த்தார். 'அந்த நாள்' படத்தில் தேசத் துரோகியாக துணிச்சலாக வேடமேற்று நடித்தார். 'சபாஷ்மீனா', 'கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி' படங்களில் முழுநீள காமெடி வேடங்களில் நடித்தார்.
 
 
 
'வணங்காமுடி' படத்தில் முரட்டுத்தனமான வேடத்தில் நடித்தார். 'துளிவிஷம்' படத்தில் வில்லன் வேடம் ஏற்று வீர்யமாக நடித்திருந்தார். 'கூண்டுக்கிளி' யில் எம்.ஜி.ஆருடன் இணைந்து வில்லன் போன்ற கதாபாத்திரத்தில் துணிச்சலுடன் நடித்தார். 'முதல் தேதி' படத்தில் தற்கொலை செய்துக் கொள்ளும் கோழையாக, 'தெனாலிராமனில்' நகைச்சுவை கலந்த அறிவாளி வேடத்தில், 'ரங்கோன் ராதா' படத்தில் வில்லன் தன்மை கலந்த கதாபாத்திரமாக வாழ்ந்தார். 'மக்களைப் பெற்ற மகராசி'யில் முதன்முறையாக கொங்குநாட்டு தமிழ் பேசும் விவசாயியாக நடித்தார். 
 
'தங்கமலை ரகசியம்' படத்தில் காட்டுவாசியாகவும் குரூரமான வேடத்திலும் நடித்தார். 'அம்பிகாபதி' படத்தில் அம்பிகாபாதியாக நடித்தார். 'சம்பூர்ண ராமாயணம்' படத்தில் பரதனாக நடித்து முதறிஞர் ராஜாஜியின் பாராட்டைப் பெற்றார். 'காத்தவராயன்'' படத்தில் காவல்தெய்வமாக நடித்தார். 
 
'வீரபாண்டிய கட்டபொம்மன்' படத்தில் கட்டபொம்மனாக ஆங்கிலேயரை மிரட்டிய வரலாற்று கதாபாத்திரத்தில் நடித்தார். 'பாகப் பிரிவினை' யில் ஊனமுற்ற இளைஞர்.'தெய்வப் பிறவி'யில் தெய்வப் பிறவியாகவே மாறியிருந்தார். 'படிக்காத மேதை'யில் மனித நேயமிக்க மகத்தான கதாபாத்திரம். 'பாவை விளக்கு' படத்தில் எழுத்தாளராக நடித்தார். 
 
'பாவமன்னிப்பு' படத்தில் இந்துவாக பிறந்து இஸ்லாமியரால் வளர்க்கப்பட்டு கிறிஸ்துவப் பெண்ணை மணக்கும் மதநல்லிணக்க கதாபாத்திரத்தில் நடித்தார். 'பாசமலர்' படத்தில் அன்பான அண்ணன் வேடத்தில் நடித்தார். 'பாலும் பழமும்' படத்தில் மருத்துவர் வேடத்தில் நடித்தார். 'கப்பலோட்டிய தமிழன்' படத்தில் இந்திய சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சியாக மாறி, இன்றுவரை வஉசி என்றால் சிவாஜியின் முகமே நினைவுக்கு வரும் அளவுக்கு சிறப்புச் சேர்த்தார். 'ஆலயமணி' படத்தில் வில்லன் தன்மை கலந்த ஹீரோ பாத்திரம் அவருக்கு. 'இருவர் உள்ளம்' படத்தில் பிளேபாய் வேடம். 'பார்மகளே பார்' படத்தில் சுயகௌரவம் பார்க்கும் ஜமீந்தார் வேடத்தில் நடித்தார். 
 
'கர்ணன்' படத்தில் மகாபாரதத்தின் மாபெரும் கதாபாத்திரமான கர்ணனாகவே காட்சி தந்தார். 'புதிய பறவை' கணவனாக, காதலனாக, புதுவிதமானன கதாபாத்திரத்தில் தோன்றினார். 'ஆண்டவன் கட்டளை' கல்லூரிப் பேராசிரியராக நடித்தார். 'திருவிளையாடல்' புராணக் கதையில் சிவபெருமனாகவே மாறியிருந்தார். 'மோட்டார் சுந்தரம் பிள்ளை' படத்தில் வயது வந்த 3 பிள்ளைகளுக்கு தந்தையாக வாழ்ந்தார்.
 
 
'மகாகவி காளிதாஸ்' படத்தில் காளியின் அருள்பெற்ற கவி காளிதாஸாக நடித்தார். 'சரஸ்வதி சபதம்' கவிஞர் வித்யாபதி, நாரதர் என்று இருவிதமான கதாபாத்திரத்தில் நடித்து கவர்ந்தார். 'கந்தன் கருணை'யில் முருகப்பெருமானின் தோழன் வீரபாகுவாகவும், 'திருவருட்செல்வர்' படத்தில் அப்பராக, சங்கரராக, திருமலை மன்னனாகவும், 'திருமால் பெருமை' திருமாலின் புகழைப் பரப்பும் தொண்டராகவும், 'தில்லானா மோகனாம்பாள்' படத்தில் நாதஸ்வர வித்வானாகவும், 'மிருதங்க சக்கரவர்த்தி' யில் மிருதங்க வித்வானாகவும், 'தங்கச் சுரங்கம்' படத்தில் ஜேம்ஸ்பாண்ட் வேடத்திலும், 'வியட்நாம்வீடு' படத்தில் பிரிஸ்டிஜ் பத்மநாபன் என்ற ஐயர் வேடத்திலும், 'ராமன் எத்தனை ராமனடி'யில் சாப்பாட்டு ராமன் - நடிகர் விஜயகுமார் என இரு வேடங்களில் கலக்கினார். 'குலமா குணமா' படத்தில் நாட்டாமையாக, நல்ல அண்ணனாக வந்தவர், 'சவாலே சமாளி' படத்தில் சுயமரியாதை கலந்த விவசாய இளைஞராக நடித்து மனம் கவர்ந்தார்.
 
 'பாபு' படத்தில் கை ரிக்ஷா இழுப்பவராக நடித்திருப்பார். ராஜா படத்தில் கடத்தல்காரனாகவும், 'ஞானஒளி' படத்தில் சந்தர்ப்ப சூழ்நிலையில் தவறு செய்துவிட்டு தவிப்பராகவும், 'பட்டிக்காடா பட்டணமா' படத்தில் தமிழ்பண்பாட்டை போற்றும் மூக்கையாவாக, 'தவப்புதல்வன்' படத்தில் மாலைக் கண்நோயாளியாக, 'வசந்த மாளிகை'யில் ஜமீன்வாரிசாக, 'பாரதவிலாஸ்' படத்தில் ஜாதி மத, மொழி பேதமற்றவராக, 'ராஜாராஜசோழன்' படத்தில் ராஜராஜ சோழன் என்ற சரித்திர கதாபாத்திரத்தில் வாழ்ந்து காட்டி, அந்தப் பாத்திரங்களை இன்னும் மறக்க முடியாமல் செய்துள்ளார். 
 
 
'தங்கப்பதக்கம்' படத்தில் எஸ்.பி.சௌத்ரியாக கம்பீரமாக வந்த சிவாஜியைப் பார்த்து தாங்களும் அப்படி மாற நினைத்தவர்கள் பலர். 'அவன்தான் மனிதன்' படத்தில் அடுத்தவருக்கு அள்ளித்தருபவராக, 'டாக்டர் சிவா' படத்தில் தொழுநோயாளியை குணப்படுத்தும் டாக்டராக, 'நாம் பிறந்த மண்' படத்தில் சுதந்திர போராட்ட வீரராக, 'கல்தூண்' படத்தில் நடிப்பில் தூணாக வெளிப்பட்டார். 
 
எண்பதுகளின் மத்தியில் தன் வயதுக்கேற்ற வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார் நடிகர் திலகம். அவற்றுள் முக்கியமானது 'முதல் மரியாதை' படத்தில் ஊரே மதிக்கும், ஆனால் சொந்த வாழ்க்கையில் நிம்மதி இழந்த ஊர்ப் பெருசு வேடம். சிவாஜின் வாழ்க்கையில் காவியப் படமாக நின்றது. நடிகர் திலகத்தின் நடிப்பும், இசைஞானி இளையராஜாவின் இசையும் அந்தப் படத்துக்கு காவிய அந்தஸ்தைத் தந்தன.
 
 
 ரஜினியுடன் ஆரம்பத்தில் சிவாஜி கணேசன் படங்களில் கவுரவ வேடங்களில் வந்தவர் ரஜினி. ஜஸ்டிஸ் கோபிநாத், நான் வாழவைப்பேன் போன்ற படங்கள். எண்பதுகளில் ரஜினியின் படங்களில் முக்கிய வேடத்தில் நடித்தார் சிவாஜி. அவற்றில் முக்கியமானவை விடுதலை. படிக்காதவன். விடுதலை படத்தில் யாருக்கு முக்கியத்துவம், ரஜினிக்கா.. சிவாஜிக்கா? என இரு தரப்பு ரசிகர்களுக்குள் எழுந்த மோதலால் பெரும் கலவரமே ஏற்பட்டது .
 
தியேட்டர்களில். 'படிக்காதவன்' படத்தில் மீண்டும் ரஜினியுடன், அவரது பாசமிகு அண்ணனாக வந்தபோது அதே ரசிகர்கள் படத்தைக் கொண்டாடினர். வெள்ளி விழா கண்ட படம் அது. சிவாஜிக்கு கடைசி படமாக அமைந்தது ரஜினியின் படையப்பாதான். 
 
கமலுடன் சிவாஜி கணேசனின் நடிப்பு வாரிசு என்று அழைக்கப்படும் கமல் ஹாஸனுடனும் சிவாஜி கணேசன் நடித்துள்ளார். ஆனால் ரஜினியுடன் நடித்த அளவுக்கு இல்லை. இருவரும் இணைந்து நடித்தவை மூன்று படங்கள்தான். ஆரம்ப நாட்களில் நாம் பிறந்த மண் படத்தில் சிவாஜியின் வில்லத்தனம் கொண்ட மகனாக கமல் நடித்தார். பின்னர் சத்யம் படத்தில் சிவாஜியின் தம்பியாக கமல் நடித்திருப்பார். சிவாஜி - கமல் சேர்ந்து நடித்த மூன்றாவது படம் தேவர் மகன். சிவாஜிக்கு தேசிய விருது பெற்றுத் தந்த படம். படத்தின் தரமும் சிவாஜி நடிப்பும் தேசிய விருதுக்கு மரியாதை சேர்த்தன என்றால் மிகையல்ல.
 
 'அன்புள்ள அப்பா', 'பசும்பொன்' படங்களில் மகள் மீது அழ்ந்த பாசம் கொண்ட ஒரு தந்தையாக வாழ்ந்திருப்பார் சிவாஜி. குறிப்பாக பசும்பொன் படத்துக்காக இன்னொரு தேசிய விருதே அவருக்குத் தந்திருக்க வேண்டும். 
 
இன்றைய தலைமுறை நடிகரான விஜய்யுடன் இணைந்து 'ஒன்ஸ்மோர்' படத்தில் நடித்து அசத்தியிருப்பார் சிவாஜி. 'என் ஆச ராசாவே' படத்தில் குதிரையாட்டம், ஒயிலாட்டம் கலைஞராகவும், 'பூப்பறிக்க வருகிறோம்' படத்தில் காதலர்களைச் சேர்த்து வைக்கும் மூத்தவராகவும் நடித்திருப்பார். 
 
இப்படி எண்ணிக்கையில் அடங்காத எண்ணற்ற கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் சினிமாவின் தலைச்சிறந்த கலைஞராக இன்றுவரையிலும் ஈடு இணையாற்றவராக அனைவராலும் போற்றப்பட்டு வருகிறார். 
 
அண்ணா எழுதிய சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் நாடகத்தில் சிவாஜியாக நடித்தால் தந்தை பெரியாரால் வி.சி.கணேசனாக இருந்தவர் சிவாஜி கணேசனாக்கப்பட்டார். வியட்நாம் வீடு நாடகத்தைப் பார்த்து ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன் கண்ணீர் விட்டு கதறினார். 'என் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை நினைவுப்படுத்துவது போல் நடித்தீர்கள்' என்று சிவாஜியைப் பாராட்டினார். சிவாஜி படங்களை ரீமேக் செய்யும்போது 'சிவாஜி நடிக்கின்ற கதாபாத்திரங்களில் எங்களால் நடிக்க முடியாது' என்று இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் அனைத்து மொழிப் பட உலகைச் சேர்ந்த மாபெரும் கலைஞர்கள் அறிவித்தார்கள். 
 
இன்றைய கலைஞர்களுக்கு நடிப்பின் பெட்டகமாக இன்றுவரை திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் திலகம் சிவாஜிகணேசன். மார்லன் பிராண்டோ போன்ற ஹாலிவுட் நடிகர்கள் இவரது படங்களைப் பார்த்து பிரமித்துப் போனார்கள். 'எங்களால் நம்பவே முடியவில்லை இப்படியெல்லாம் ஒருவரால் நடிக்க முடியுமா? அபாரம், அற்புதம் இதுபோன்று வேறு எவராலும் நடிக்க முடியாது. எங்களைப் போல் உங்களால் நடிக்க முடியும், உங்களைப் போல் எங்களால் நடிக்க முடியாது,' என்று ஆச்சரியப்பட்டு நடிகர் திலகத்தை மனம் திறந்து பாராட்டினார்கள். அவருடன் இணைந்து படமெடுத்துக் கொண்டு மகிழ்ந்தார்கள்.
 
 
சிவாஜியைப் பாராட்டிய மேலும் சில பிரபலங்கள்... 
 
தன்னுடைய கைவிரல் அசைப்பின் மூலமே நம்மையெல்லாம் கவர்ந்துவிட்ட சிவாஜிகணேசன் ஓர் உலகப் பெரு நடிகர்.
 
 - முதறிஞர் ராஜாஜி 
 
உலகிலேயே சிறந்த நடிகரான சிவாஜிகணேசன் தமிழ்நாட்டில் இருப்பது நாம் பெற்ற பாக்கியமாகும். 
 
 - தந்தை பெரியார் 
 
நடிப்பிற்கு இலக்கணம் வகுத்தவரே நடிகர் திலகம் சிவாஜி கணேசன்தான். நம் பாரத நாட்டிற்கு அவர் தம் நடிப்பின் மூலம் மகத்தான பெயரைத் தேடித் தந்திருக்கிறார். அவரைப் பெற்றதால் இந்த நாடே பெருமையடைகிறது. பாரதத் தாய் பூரிப்படைகிறாள். 
 
 - பெருந்தலைவர் காமராஜர் 
 
 எனது திரைக்கதை, உரையாடல்களுக்கு உயிரோட்டம் தந்தவர் என்றும் தமிழாக, தமிழ் உரை நடையாக வாழக்கூடியவர் எனது நண்பர் சிவாஜி கணேசன். 
 
- கலைஞர் மு. கருணாநிதி. 
 
 தமிழகம் பெருமைப்படும் வகையில், தனது திறமையின் மூலம் புகழ்பெற்று வாழ்பவர் அறிஞர் அண்ணா போற்றிய என் அன்புத் தம்பியான கணேசன். 
 
- புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். 
 
சிவாஜியின் நடிப்பாற்றலை 'சம்பூர்ண ராமாயணம்' படத்தில் இணைந்து நடிக்கும்போது பார்த்தேன், தலைச்சிறந்த கலைஞரோடு நான் நடித்தது எனது பாக்கியம். 
 
- என்.டி. ராமாராவ் 
 
 புதிய தலைமுறை நடிகர் நடிகையர் நடிப்பைப் பற்றித் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்றால் சிவாஜி அவர்கள் நடித்த படங்களைப் பார்த்தாலே போதும். ஒரு பல்கலைக் கழகத்தில் பயின்றது போன்ற ஒரு உணர்வு ஏற்படும்.
 
- புரட்சித் தலைவி செல்வி. ஜெ.ஜெயலலிதா
 
 எங்கள் ஏவிஎம் நிறுவனம் தயாரித்த 'உயர்ந்த மனிதன்' படத்தில் நடிகர் திலகமும், நடிகர் அசோகனும் இணைந்து நடித்தார்கள். ஒரு காட்சியில் நடிப்பதற்கு அசோகன் பல டேக்குகள் வாங்கினார். அங்கிருந்த சிவாஜி அவரை இப்படி நடிக்கச் சொல்லுங்கள் என்று எங்களுக்கு நடித்துக் காட்டினார். அதில் பத்து பர்சன்ட்தான் அசோகனால் நடிக்க முடிந்தது. அந்த 10% நடிப்பிற்கே அவ்வளவு பாராட்டுக்கள் வந்து குவிந்தது. 10 பர்சன்டுக்கே இவ்வளவு பாராட்டுக்கள்... அவர் சொல்லிக் கொடுத்தபடி 100 சதவீதம் நடித்திருந்தால்...? நாங்கள் வியந்துபோனாம். 
 
- ஏவிஎம் சரவணன்.


-பெரு துளசிபழனிவேல்

 


 




எம்என் நம்பியார்.. வில்லனல்ல, ஹீரோ!

ஏதோ ஒரு ஊரில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் படம் ஓடிக்கொண்டிருந்தது. அந்தப் படத்தில் எம்.ஜி.ஆரும் எம்.என்.நம்பியாரும் மோதிக்கொண்டிருந்தார்கள். இருவரும் உருண்டு புரண்டு வாள் சண்டைப்போட்டுக் கொண்டிருந்தார்கள். அப்படி நடந்துக் கொண்டிருக்கின்ற சண்டையில் எம்.ஜி.ஆர் வாளை நம்பியார் தட்டிவிடுவார். எம்.ஜி.ஆர். நிராயுதபாணியாக ஆபத்தில் சிக்கிக் கொள்வார். அப்போது டெண்ட்டு கொட்டகையில் படம் பார்த்துக்கொண்டிருந்த ஒருவர் 'தலைவரே இந்தாங்க கத்தி... பிடித்துக் கொள்ளுங்கள்' என்று தன்னிடம் உள்ள கத்தியை, ஒடிக்கொண்டிருப்பது படம் என்றுகூட தெரியாமல் திரையின் மீது வீசி எறிந்தார். கத்திப்பட்டதும் இறுக்கமாககட்டப்பட்டிருந்த துணியால் ஆனதிரை கிழிந்துவிட்டது.
 
 
 

அதே போல் எம்.ஜி.ஆர் தேர்தலுக்காக ஒட்டுக் கேட்டு வரும்போது ஒரு வயதானபாட்டி கற்பூரம் ஏற்றிஆரத்தி எடுத்திருக்கிறார். அப்போது நீங்க அந்தப் பாவி நம்பியாரிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்க தம்பி என்றுச் சொல்லி நெற்றியில் பொட்டு வைத்தாராம். 
 
இந்த இரண்டுமே பின்னாளில் திரையில் காட்சிகளாகவும் வந்துவிட்டன. இப்படித்தான் டைரக்டர் வி.சேகரின் 'நீங்களும் ஹீரோதான்' படத்தில் நடிப்பதற்காகநம்பியார் ஒரு கிராமத்திற்கு வந்து தங்கியிருக்கிறார். இவரைப் பார்த்த வயதான ஊர்ப் பெண்கள், "ஐயோ இவனா... படங்களில் பல பெண்களைக் கற்பழித்தவனாச்சே...", என்று பயந்து ஒடியிருக்கிறார்கள். 
 
இப்படி பல படங்களில் வில்லனாக நடித்து படம் பார்த்தவர்களையே பயமுறுத்தி நிஜம் என்று நம்பும்படி தனது நடிப்பாற்றலை சிறப்பாக வெளிப்படுத்தி படம் பார்த்தவர்களுக்கெல்லாம் நிஜமாகவே எதிரி போல் தெரிந்தவர் எம்.என்.நம்பியார்.




எம்.ஜி.ஆர். படம் பார்த்த அத்தனை ரசிகர்களுக்கும் இவர் விரோதியாகவே தெரிந்தார். குறிப்பாக எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கு இவர் பரம விரோதியாகவே அறியப்பட்டார். அந்த அளவிற்கு இவரது வில்லன் நடிப்பு எம்.ஜி.ஆர். படங்களில் கொடூரமாகவே இருக்கும். இவர் நடித்த பலபடங்களில் குடிப்பார். பெண்களை துரத்தி துரத்திகற்பழிப்பார். ஹீரோவை அடிப்பார், குழந்தைகளை, முதியோர்களை துன்புறுத்துவது போல் நடிப்பார். இந்த நடிப்பைப் பார்த்துதான் கெட்டவர்களை பார்த்தால் 'நீ என்ன பெரிய நம்பியாராடா' என்று கேட்டபார்கள். அப்படிப்பட்ட வில்லன் வேடங்கள் அவருக்கு அமைந்தன. 
 
நிஜ வாழ்க்கையில் தெய்வப்பக்தி கொண்டவராகவும் நல்ல பழக்க வழக்கங்களை கடைப்பிடிப்பவராகவும் இருந்தார். சைவ உணவைத் தவிரஅசைவ உணவை அறவே வெறுத்து 60 வருடங்களாக சபரிமலைக்கு புனிதயாத்திரை மேற்கொண்டவர். ஒரே மனைவியுடன் இறுதிவரை உண்மையான அன்புடன் வாழ்ந்த இவரை இறக்கும் வரை படங்களில் பார்த்த காட்சிகளை மனதில் வைத்துக் கொண்டு அவரை நிஜமான வில்லனாக சிலர் பார்த்தார்கள். அதுதான் மிகவும் கொடுமை. அந்த அளவிற்கு சினிமாவை நேசித்தார். தான் ஏற்றுக் கொண்ட வேடங்களில் ஈடுபாடு காட்டி நடித்தவர் எம்.என். நம்பியார்.

இவரது கலைப் பயணம் நாடகத் துறையிலிருந்து தொடங்கியது. அதுவும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதே தொடங்கியது. நவாப் ராஜமணிக்கம், ஸ்ரீ மதுரை தேவி வினோத பாலகான சபாக்களிலும் 12 வருடங்களாக நாடக நடிகராக பணியாற்றியிருக்கிறார். 
 
சக்தி நாடகச் சபா தயாரித்த 'கவியின் கனவு' நாடகம் இவருக்கு நல்லப் பெயரை பெற்றுத் தந்தது. இவர் நடித்த 'பக்த ராமதாஸ்' நாடகம் படமாக்கப்பட்ட போது நாடகத்தில் இவர் ஏற்று நடித்த மந்திரி மாதண்ணா, வேடத்தை படத்திலும் ஏற்று நடித்து தமிழ் சினிமாவுக்கும் புதுமுக நடிகராக அறிமுகமானார்.
 
 'திகம்பரசாமியார்' படத்தில் 11 விதமான கெட்டப்பில் தோன்றி அசத்தினார். அந்த வகையில் சிவாஜ், கமலுக்கெல்லாம் முன்னோடி நம்பியார்.
 
 'கல்யாணி கஞ்சன்', 'நல்லதங்கை' போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்தார். 'கவிதா', 'வித்யாபதி', 'ராஜகுமாரி', 'மர்மயோகி', 'மோகினி', 'தூறல் நின்னுப்போச்சு' போன்ற படங்களில் காமெடி கலந்த வேடங்களில் நடித்திருக்கிறார். கொடூரமான வில்லனாக நடித்த இவர் 'ரகசிய போலீஸ 115', 'கண்ணே பாப்பா', 'சுபதினம்', 'பாசமலர்', 'மக்களைப் பெற்ற மகராசி', 'வேலைக்காரி' போன்ற படங்களில் நல்லவராகவும் நடித்திருக்கிறார்.
 
 
 
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருடன் 'ராஜகுமாரி' முதல் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' வரை எம்.என்.நம்பியார் இணைந்து நடித்திருக்கிறார். இதில் 'மந்திரிகுமாரி', சர்வாதிகாரி', 'எங்க வீட்டு ப்பிள்ளை', 'குடியிருந்த கோயில்', 'நான் ஆணையிட்டால்', 'புதிய பூமி', 'ஆயிரத்தில் ஒருவன்', 'திருடாதே', 'வேட்டைக்காரன்', 'படகோட்டி', 'உலகம் சுற்றும் வாலிபன்' போன்ற படங்களில் வில்லனாக நடித்தார். 
 
 நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் 'தங்கப் பதுமை', 'ராஜபக்தி', 'அன்னை இல்லம்', 'தெய்வமகன்', 'லட்சுமி கல்யாணம்', 'நிச்சயதாம்பூலம்', 'குலமா குணமா', ' சிவந்தமண்', 'திரிசூலம் போன்ற படங்களிலும் வில்லனாக நடித்திருக்கிறார். 
 
தொடர்ந்து ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சரத்குமார் ஆகியோரின் படங்களிலும் வில்லனாக நடித்திருக்கிறார். 'தேவதாஸ்', மிஸ்ஸியம்மா', போன்ற படங்களிலும் 'நெஞ்சம் மறப்பதில்லை', படத்தில் திகிலூட்டும் வகையில் வில்லத்தனம் காட்டியிருப்பார். எம்.என்.நம்பியார் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என்று பிறமொழிப் படங்கள் சிலவற்றிலும் நடித்திருக்கிறார். 'ஜங்கிள்' என்ற ஆங்கிலப் படத்திலும், 'தேவதா' என்ற இந்திப் படத்திலும் நடித்திருக்கிறார்.
 
 
'பக்த ராமதாஸ்' (1935) முதல் விஜயகாந்த் நடித்த 'சுதேசி' (2006) வரை 750 படங்களுக்குமேல் நடித்து முடித்திருக்கிறார். நீண்ட நெடுநாளைய கலைப் பயணமிருந்தும் இவரைப்பற்றி எந்த கிசு கிசுவும் பத்திரிகைகளில் வந்ததில்லை. 
 
இவர் தமிழக முதல்வர்கள் பேரறிஞர் அண்ணா திரைக்கதை, வசனம் எழுதிய 'வேலைக்காரி', 'நல்லவன் வாழ்வான்' படங்களிலும், கலைஞர் மு.கருணாநிதி வசனம் எழுதிய 'அபிமன்யூ', 'அரசிளங்குமாரி', 'ராஜகுமாரி', போன்ற படங்களிலும், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருடன் பலபடங்களிலும், வி.என்.ஜானகியுடன் 'வேலைக்காரி', மோகினி' ஆகியப் படங்களிலும் புரட்சித்தலைவி ஜெ.ஜெயலலிதாவுடன் பல படங்களிலும் பணியாற்றியிருக்கிறார். ஆந்திரா முதல்வர் என்.டி.ராமாராவுடனும் நடித்திருக்கிறார். 
 
தமிழக அரசிடமிருந்து 1967ஆம் ஆண்டு கலைமாமணி வருது, 1990ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் விருது, 1992 ஆம் ஆண்டு ஜெயலலிதா விருது என்றபல விருதுகளைப் பெற்றிருக்கிறார். 
 
எம்.என்.நம்பியார் 5.3.1919 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள கண்ணனூர் தாலுக்காவில் மஞ்சேரி என்ற சிற்றூரில் பிறந்தார். மஞ்சேரி நாராயணன் நம்பியார் என்ற தனது பெயரை சுருக்கி எம்.என்.நம்பியார் என்று வைத்துக் கொண்டார். 1946ஆம் ஆண்டு ருக்குமணி என்ற பெண்மணியை திருமணம் செய்துக் கொண்டார். இவருக்கு சுகுமாரன், மோகன் என்ற 2 மகன்களும், சிநேகலதா என்ற ஒரு பெண்ணும் உண்டு. 
 
திரைப்படத் துறையில் 71 ஆண்டுகள் தனது கலைப்பயணத்தைத் தொடர்ந்த எம்.என்.நம்பியார்,  19.11.2008 ஆம் ஆண்டு தனது கலைப்பயணத்தை முடித்துக்கொண்டு இறைவனடி சேர்ந்தார். நம்பியாரின் மூத்த மகன் சுகுமாறன் நம்பியார் 2012-ல் காலமானார். எம்.என்.நம்பியார் போன்ற தலைச்சிறந்தகலைஞர்கள் அதிலும் பன்முகம் கொண்ட கலைஞர்கள் தமிழ் சினிமாவிற்கு இனி கிடைப்பார்களா? கிடைக்க மாட்டார்கள் அதுதான் காலகாலத்துக்கும் நமக்குள் இருக்கப் போகிற ஏக்கமும் ஏமாற்றமும்!


- பெரு துளசிபழனிவேல்

எம்.ஜி.ஆரை திரையுலகின் முடிசூடா மன்னனாக்கிய படங்கள்!

தமிழ்த் திரையுலகில் துணை நடிகராக நுழைந்து 'சதிலீலாவதி' (1936) முதல் ஸ்ரீமுருகன், சுலோச்சனாவரை சுமார் 15 படங்களில் சிறிய வேடங்களில் தோன்றி வளர்ந்து வந்த எம்.ஜி.ஆர், 'ராஜகுமாரி' (1947) படத்தின் மூலம் கதாநாயகனாக உயர்ந்தார். பின்னர் புரட்சி நடிகரானார்... மக்கள் திலகமானார். அவர் புரட்சித் தலைவராக புகழ்பெற்று, கடைசியாக நடித்த படம் 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் (1978)'. அந்தப் படம் வெளியாவதற்குள் தமிழகத்தின் முதல்வராகிவிட்டார் (1977). 
 
 
 
 
 115 படங்கள்வரை கதாநாயகனாக நடித்து தமிழ்த் திரையுலகில் வெற்றி நாயகனாக உலாவந்தவர் எம்.ஜி.ஆர். அவர் கதாநாயகனாக நடித்த பெரும்பாலான படங்களும் வெற்றிப் படங்களாகவும், வசூலை வாரிக்கொடுத்த படங்களாகவும் அமைந்தன. 100 நாட்கள் ஓடாத அவரது சில படங்களும் கூட தோல்விப் பட லிஸ்டில் சேர்ந்ததில்லை. 
 
 
 
 எம்.ஜி.ஆர். தமிழ்த் திரையுலகில் 42 ஆண்டுகள் வெற்றிகரமாக உலாவந்தாலும் அதற்கு இடைப்பட்ட காலங்களில் பலசோதனைகளையும் வேதனைகளையும் சந்தித்தார். அப்படிப்பட்ட சோதனைகளும், வேதனைகளும் எம்.ஜி.ஆரை நெருங்கி நிலைகுலைய வைத்த போது திரையுலகைச் சேர்ந்தவர்களில் சிலர் 'எம்.ஜி.ஆரின் திரையுலகப் பயணம் இத்தோடு முடிந்தது இனி அவரால் கதாநாயகனாக வெற்றி பெற முடியாது. மக்களும் அவரை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்' என்று அவரது காதுபடவே கேலியும், கிண்டலுமாக பேசினார்கள். ஆனால் அதையெல்லாம் மீறி அவர் நடித்த சிலப டங்கள் அவருக்கு சோதனையான காலகட்டத்திலும் மக்களைக் கவரும் மாபெரும் வெற்றிப் படங்களாக அமைந்து அவரது திரையுலக வாழ்க்கைகே திருப்பு முனையாகத் திகழ்ந்தன. எம்.ஜி.ஆரை நம்பி படம் எடுக்கவந்தவர்களுக்கு பணத்தை அள்ளிக் கொடுத்தன. சோதனையான வேதனையான காலகட்டத்தில் அவரது சினிமா மார்க்கெட் வீழ்ந்து விடாமல் தூக்கி நிறுத்தி வெற்றி நாயகனாக அவரை வலம் வர வைத்த சில படங்களை இந்தக் கட்டுரையில் பார்ப்போம். 
 
 ராஜகுமாரி (1947) 
 
எம்.ஜி.ஆருக்கு சிறிய வேடங்களில் நடிப்பதற்கு மட்டும் வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டிருந்த காலம் அது. கதாநாயனாக நடிக்க வேண்டும் என்ற எம்.ஜி.ஆரின் கனவை, இலட்சியத்தை 1947ஆம் ஆண்டு வெளிவந்த ஜூபிடர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த ‘ராஜகுமாரி' படம் தான் நிறைவேற்றிக் கொடுத்தது. மாலதி என்ற நடிகை ஜோடியாக நடித்தார். ஏ.எஸ்.ஏ.சாமி படத்தை இயக்கினார். இந்தப் படத்தில் உதவி வசனம் என்று மு.கருணாநிதி பெயர் போடப்பட்டது. துணை நடிகராக வலம் வந்துக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர். கதாநாயகனாக உயர்ந்தார். எம்.ஜி.ஆரின் திரையுலக வாழ்க்கைக்கு முதல் திருப்புமுனையை ஏற்படுத்தியது இந்த ‘ராஜகுமாரி' படம்தான். 
 
மருதநாட்டு இளவரசி (1950) 
 
 கோவிந்தன் கம்பெனி மூலம் தயாரிக்கபட்ட படம் ‘மருதநாட்டு இளவரசி'. ஏ.காசிலிங்கம் இயக்கிய இந்தப் படத்திற்கு வசனம் மு.கருணாநிதி என்று முதல் முதலில் டைட்டிலில் பெயர் வந்தது. கதாநாயகியாக எம்.ஜி.ஆருடன் முதன்முறையாக இணைந்து நடித்தார் வி.என். ஜானகி. 133 நாட்கள் ஓடி அதிக வசூலை கொடுத்ததால் இந்தப்படத்திற்கு பிறகு எம்.ஜி.அரை தொடர்ந்து கதாநாயகனாக நடிக்க வைத்து படங்களை தயாரிக்கலாம் என்ற நம்பிக்கையை தயாரிப்பாளர்களுக்கு கொடுத்தது ‘மருதநாட்டு இளவரசி' படம். எம்.ஜி.ஆரின் திரையுலக வாழ்க்கைக்கு மட்டுமல்ல, இல்வாழ்க்கையிலும் திருப்பத்தைத் தந்த படம் இது. 
 
மர்மயோகி (1951) 
 
 ஜூபிடர் பிலிம்ஸ் நிறுவனம் கே.ராம்நாத் இயக்கத்தில் தயாரித்த படம் ‘மர்மயோகி' 151 நாட்கள் ஓடி வெற்றி விழா கொண்டாடியது. இந்தப் படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக மாதுரி தேவி நடித்தார். வசனத்தை ஏ.எஸ்.ஏ. சாமி எழுதினார். எம்.ஜி.ஆரை அன்றிருந்த கதாநாயகர்களின் வரிசையில் முதல் வரிசையில் கொண்டுபொய் உட்கார வைத்த படம் ‘மர்மயோகி'. ஏழை எளியவர்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளுக்காக போராடுகின்ற நாயகன் எம்.ஜி.ஆர்தான் நல்ல என்ற நல்ல பெயரை மக்களிடம் பெறுகின்ற அளவிற்கு அமைந்தது ‘மர்மயோகி'. 
 
மலைக் கள்ளன் (1954) 
 
 ஸ்ரீராமுலு நாயுடு பக்ஷிராஜா பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து இயக்கிய படம் ‘மலைக்கள்ளன்'. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, சிங்களம் என்று பல்வேறு மொழிகளில் தயாரிக்கப்பட்டது. தமிழில் எம்.ஜி.ஆருடன் இணைந்து ஜோடியாக நடித்தவர் பி.பானுமதி. ஸ்ரீராமுலு நாயுடு நாமக்கல் கவிஞரின் நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தை உருவாக்கியிருந்தார். 150 நாட்கள் ஓடி எல்லா மொழிகளிலும் வசூலை அள்ளிக் கொடுத்து முதல்வரிசையில் இருந்த எம்.ஜி.ஆரை திரையுலக பாக்ஸ் ஆபீஸில் வசூல் சக்கரவர்த்தியாக மாற்றிய படம் ‘மலைக் கள்ளன்'. 
 
நாடோடி மன்னன் (1958) 
 
எம்.ஜி.ஆர். இரட்டை வேடத்தில் நடித்து தனது எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்து இயக்கிய முதல் படம் ‘நாடோடி மன்னன்'. இவருக்கு ஜோடியாக பி.பானுமதி, சரோஜா தேவி நடித்திருந்தார்கள். கவியரசர் கண்ணதாசன் படத்திற்கான வசனத்தை எழுதியிருந்தார். படம் வெளியாவதற்கு முன் 'இந்தப் படம் ஓடினால் நான் மன்னன் இல்லை என்றால் நாடோடி' என்று பத்திரிகைகளுக்கு எம்.ஜி.ஆர். பேட்டிக் கொடுத்திருந்தார். இந்தப்படம் 200 நாட்களுக்கு மேல் ஓடி வசூலை வாரிக்குவித்து நல்ல தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் மட்டுமில்லாமல் இரட்டை வேடத்தை ஏற்று சிறப்பாக நடிக்க கூடிய நடிகராகவும் மக்கள் ஏற்றுக் கொண்டாடிய படம். மக்கள் மனதில் இன்று வரை மன்னனாக எம்.ஜி.ஆர் அமர்ந்துக் கொண்டிருப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்த படம் ‘நாடோடி மன்னன்'. 
 
திருடாதே (1961) 
 
 ஏ.எல்.எஸ்.புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஏ.எல். சீனிவாசன் ப.நீலகண்டன் இயக்கத்தில் தயாரித்த படம் ‘திருடாதே'. வசனத்தை கவியரசர் கண்ணதாசன் எழுதியிருந்தார். எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக சரோஜாதேவி நடித்து முதல் முதலில் ‘திருடாதே' படம் எடுக்கப்பட்டாலும், எம்.ஜி.ஆருக்கு கால் முறிவு ஏற்பட்டு தாமதமானதால் படம் தாமதமாக வந்தது. ‘நாடோடி மன்னன்' சீக்கிரமாக வெளிவந்துவிட்டது. அதுவரையில் சரித்திர படங்களில் நடித்துக் கொண்டிருந்த எம்.ஜி.ஆரால் சமூகப் படங்களிலும் சிறப்பாக நடிக்க முடியும் என்பதை நிரூபித்த படம் ‘திருடாதே'. 161 நாள் ஓடி வெற்றி விழா கொண்டாடியதால் தொடர்ந்து பல சமூகப் படங்களில் எம்.ஜி.ஆர் நடிப்பதற்கான திருப்பு முனையை ஏற்படுத்தித் தந்த படம் ‘திருடாதே'. 
 
தாய் சொல்லைத் தட்டாதே (1961) 
 
 ‘திருடாதே' படத்தை எடுத்து முடிக்க சந்தர்ப்ப சூழ்நிலையால் பல மாதங்கள் ஆனதால் எம்.ஜி.ஆரை வைத்துப் படம் எடுத்தால் வெளிவருவதற்கு பல மாதங்கள் ஆகும் என்ற ஒரு அவப்பெயர் எம்.ஜி.ர் மீது சுமத்தப்பட்டது. அந்தப் அவப் பெயரை நீக்கிய படம் ‘தாய் சொல்லைத் தட்டாதே' சாண்டோ சின்னப்ப வேரின் தேவர் பிலிம்ஸ் நிறுவனத்தால் குறுகிய காலத்தில் எடுத்து முடிக்கப்பட்டு விரைவாக வெளிவந்த படம். ஆரூர்தாஸ் வசனம் எழுதியிருந்தார். எம்.ஏ.திருமுகம் இயக்கிய இந்தப் படத்தில் சரோஜா தேவி ஜோடியாக நடித்தார். 133 நாட்கள் ஓடி வசூலை வாரித் தந்தது. 
 
எங்க வீட்டுப் பிள்ளை (1965) 
 
எம்.ஜி.ஆர் ஒரே மாதிரியான கதைகள் கொண்ட படங்களில் நடிக்கிறார் என்ற குற்றச்சாட்டை நீக்கிய படம் ‘எங்க வீட்டுப்பிள்ளை'. 236 நாட்கள் ஓடி மாபெரும் வெற்றிப் படமாக விழா கொண்டாடிய படம். 1965, ஜனவரியில் வெளியானது. பி.நாகிரெட்டியாரின் விஜயா வாஹினி நிறுவனம் தயாரிப்பில், சாணக்கியா இயக்கத்தில் வெளி வந்து தமிழ்த்திரையுலகிற்கே திருப்புமுனையை தந்தபடம். இதில் சரோஜாதேவியும், புதுமுக நடிகை ரத்னாவும் ஜோடியாக நடித்தார்கள். வசனத்தை சக்தி கிருஷ்ணாசாமி எழுதியிருந்தார். 13 தியேட்டர்களில் 100 நாட்கள், 7 அரங்குகளில் 175 நாட்கள், 3 அரங்குகளில் 236 நாட்கள் ஓடிய படம் இது. 
 
ஆயிரத்தில் ஒருவன் (1965) 
 
 எம்ஜிஆர் கிட்டத்தட்ட சரித்திரப் படங்களில் நடிப்பதை நிறுத்தியிருந்த நேரத்தில், ஒப்புக் கொண்ட சரித்திரப் படம் ஆயிரத்தில் ஒருவன். சிவாஜியின் ஆஸ்தான இயக்குநராக இருந்த பிஆர் பந்துலு, கர்ணன் படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தைத் தொடர்ந்து எம்ஜிஆரிடம் கால்ஷீட் கேட்டு வந்தார். மறுப்பேதும் சொல்லாமல் எம்ஜிஆரும் நடித்துக் கொடுத்தார். எங்க வீட்டுப் பிள்ளை என்ற ப்ளாக்பஸ்டர் வெளியான அதே 1965-ம் ஆண்டு, ஜூலையில் ஆயிரத்தில் ஒருவன் படம் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்றது. இப்படி ஒரு வெற்றி வேறு எந்த நடிகருக்கும் அமையாது எனும் அளவுக்கு பிரமாண்ட வெற்றிப் பெற்ற படம் ஆயிரத்தில் ஒருவன். இனி எம்ஜிஆரை மிஞ்ச ஒரு நடிகர் திரையுலகில் இல்லை என்று அழுத்தமாக உணர வைத்த படம் ஆயிரத்தில் ஒருவன். முதல் வெளியீட்டில் வெள்ளி விழா கண்ட இந்தப் படம், 50 ஆண்டுகளுக்குப் பிறகு 2014-ல் மீண்டும் வெளியிடப்பட்டபோது, 190 நாட்கள் ஓடி கோடிகளை அள்ளி, எம்ஜிஆர் என்ற ஆளுமையின் பெருமையை உணர வைத்தது. 
 
காவல்காரன் (1967) 
 
ஆர்.எம்.வீரப்பன் சத்யா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரித்த படம் ‘காவல்காரன்'. எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக செல்லி ஜெயலலிதா நடித்திருந்தார். ப.நீலகண்டன் படத்தை இயக்கியிருந்தார். வித்வான் வே.லட்சுமணன் வசனத்தை எழுதியிருந்தார். துப்பாக்கியால் சுடப்பட்டு மருத்துவமனையிலிருந்து வந்த பிறகு எம்.ஜி.ஆர். தனது சொந்தக் குரலில் பேசி நடித்தப் படம் ‘காவல்காரன்'. குண்டடிப்பட்டு பாதிக்கப்பட்டு பேசிய எம்.ஜி.ஆரின் சொந்தக் குரலை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்று அனைவரும் சந்தேகத்தை கிளப்பிய போது, ஏற்றுக் கொள்வோம் என்று மக்கள் ‘காவல்காரன்' படத்தையே மாபெரும் வெற்றிப் படமாக்கி 160 நாள் வெற்றிகரமாக ஓடவைத்து வசூலிலும் சாதயைப் படைக்க வைத்தார்கள். எம்ஜிஆரின் திரையுலக வாழ்க்கையே காவல்காரனுக்கு முன், காவல்காரனுக்குப் பின் என்றாகிவிட்டது. 
 
குடியிருந்த கோயில் (1968) 
 
ஜி.என். வேலுமணியின் சரவணா பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்த படம் ‘குடியிருந்த கோயில்.' இதிலும் மாறுபட்ட இரு வேடங்களில் எம்.ஜி.ஆர். சிறப்பாக நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக செல்வி ஜெயலலிதா, ராஜஸ்ரீ நடித்திருந்தனர். கே.சங்கர் படத்தை இயக்கியிருந்தார். வசனம் கே.சொர்ணம், சிறந்த நடிருக்கான விருதை தமிழ்நாடு அரசிடமிருந்து முதன் முதலில் எம்.ஜி.ஆருக்கு பெற்றுத் தந்தபடம். 146 நாட்கள் ஓடி பெரிய வசூலைத் தந்தது. 
 
ஒளிவிளக்கு (1968) 
 
எஸ்.எஸ்.வாசனின் ஜெமினி பிக்சர்ஸ் நிறுவனம் எம்.ஜி.ஆரை மாறுபட்ட கதாபாத்திரத்தில் துனிச்சலாக நடிக்க வைத்து எடுத்த படம் ‘ஒளிவிளக்கு'. இது எம்.ஜி.ஆருக்கு 100வது படம். படத்தை சாணக்யா இயக்கியிருந்தார். கே.சொர்ணம் வசனம் எழுதியிருந்தார். செல்வி ஜெயலலிதா ஜோடியாக நடித்திருந்தார். இதுவரை நடித்திராத முரட்டுத்தனம், திருட்டுத்தனம் கொண்ட குடிகாரன் கதாபாத்திரத்தில் எம்.ஜி.ஆர் நடித்திருந்தார். இப்படிப்பட்ட படங்களில் எம்.ஜி.ஆர் நடிப்பதை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? என்ற சந்தேகத்தைப் போக்கி 176 நாட்கள் ஓடி வெள்ளி விழா கொண்டாடியப் படம் ‘ஒளி விளக்கு'. 
 
அடிமைப் பெண் (1969) 
 
எம்.ஜி.ஆர் வித்தியாசமான கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடித்து, தனது எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்து, டைரக்டர் கே.சங்கர் இயக்கத்தில் உருவாக்கிய படம் ‘அடிமைப் பெண்'. செல்வி ஜெயலலிதா இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். சொந்தக் குரலில் ‘அம்மா என்ற அன்பு....' என்று ஒரு பாடலையும் பாடியிருந்தார். வசனத்தை கே.சொர்ணம் எழுதியிருந்தார். இந்தப் படத்தின் கதை வரலாற்று கதையுமல்லாமல், சமூக கதையுமல்லாமல், மந்திர ஜாலங்களைக் கொண்ட கதையுமில்லாமல், ஆனால் எல்லாம் கலந்த கதையாக இருந்தது. இப்படி ஒரு கதையை வெற்றிப் பெற வைப்பது அவ்வளவு சுலபமான வேலையில்லை. அப்படிப்பட்ட படத்தை மக்கள் ஏற்றுக் கொண்டு 176 நாட்கள் ஓட வைத்து வெற்றி விழா கொண்டாட வைத்தார்கள். 
 
மாட்டுக்கார வேலன் (1970) 
 
 எம்.ஜி.ஆர் இரட்டை வேடத்தில் நடித்த படம். செல்லி ஜெயலலிதா, லட்சுமி ஜோடியாக நடித்திருந்தார்கள். ப.நீலகண்டன் இயக்கத்தில் ஜெயந்தி பிலிம்ஸ் நிறுவனம் படத்தைத் தயாரித்தது. ஏ.எல். நாராயணன் வசனம் எழுதியிருந்தார். முதலில் இந்தப் படத்தை டி.ஆர். ராமண்ணா இயக்குவதாக இருந்தது பிறகு அவருக்கு அதிக வேலைகள் இருந்ததால், ப.நீலகண்டன் படத்தை இயக்கினார். இந்த டைரக்டர் படத்தை இயக்குவார் என்று சொல்லிவிட்டு வேறொரு டைரக்டரை வைத்துப் படத்தை எடுக்கும் போது படம் சரியாக வருமா, வெற்றி பெறுமா? என்று விநியோகஸ்தர்கள், பத்திரிகையாளர்கள் சந்தேகத்தை எழுப்பியதால் படத்திற்கு சிக்கல் வந்தது. ஆனால் எல்லா சிக்கலையும் மீறி இந்தப் படத்தை சிறப்பாக தயாரித்தார் தயாரிப்பாளர் கனகசபை. மக்களும் ஏற்றுக் கொண்டு 177 நாட்கள் ஒட வைத்தார்கள். வசூலிலும் சாதனைப் படைத்தது. 
 
ரிக்ஷாக்காரன் (1971)
 
 எம்.ஜி.ஆர். ரிக்ஷா தொழிலாளியாக நடித்த படம் ‘ரிக்ஷாக்காரன்' ஆர். எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் நிறுவனம் படத்தை தயாரித்திருந்தது. எம்.கிருஷ்ணன் படத்தை இயக்கியிருந்தார். ஆர்.கே.சண்முகம் வசனத்தை எழுதியிருந்தார். புதுமுக நடிகையான மஞ்சுளா எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக கதாநாயகியாக நடித்து அறிமுகமானார். இந்தப் படம் எடுக்கும்போது சிலர் ஒடாது, வெற்றி பெறாது என்று ஆரூடம் சொன்னார்கள். ஆனால் படம் வெளிவந்து 167 நாட்கள் ஓடி வசூலில் மாபெரும் சாதனைப் புரிந்தது. ‘ரிக்ஷாக்காரன்' எம்.ஜி.ஆருக்கு சிறந்த நடிகருக்கான பாரத் விருதினைக் கொடுத்து கௌரவித்தது இந்திய அரசு. ரிக்ஷாவில் இருந்துக் கொண்டே எம்.ஜி.ஆர் சிலம்பு சண்டைப் பேட்டது அனைவராலும் பேசப்பட்டது, பாராட்டப்பட்டது. 
 
 
உலகம் சுற்றும் வாலிபன் (1973) 
 
எம்.ஜி.ஆர். இரட்டை வேடமேற்று நடித்து தனது எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து இயக்கிய படம். ‘உலகம் சுற்றும் வாலிபன்'. லதா, மஞ்சுளா, சந்திரகலா, தாய்லாந்து நடிகை ரூங்ரேட்டா கதாநாயகிகளாக நடித்திருந்தார்கள். கே.சொர்ணம் வசனம் எழுதினார். இந்தப்படம் வெளிவருவதற்கு பல தடைகள் ஏற்பட்டன. அதை எல்லாம் முறியடித்து வெளிவந்து மாபெரும் வெற்றிப் பெற்றது. எம்.ஜி.ஆர் நடித்த படங்களில் அதிக வசூலை அள்ளிக் குவித்து சாதனைப் புரிந்த படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்' அன்றைய காலகட்டத்தில் 3 கோடிக்கு ‘இன்றைய கால கட்டத்தில் (300 கோடி) மேல் வசூலை தந்து அரசாங்கத்திற்கு 1.25 கோடிக்கு வரியைக் கட்ட வைத்த முதல் தென்னகப் படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்'.

-பெரு துளசிபழனிவேல்

Tuesday 15 August 2017

ரோஜா... ஏ.ஆர்.ரஹ்மான் இசைப்ரியர்களிடம் கொடுத்த கோல்டன் விசிட்டிங் கார்ட்! #25YearsOfRoja

பொதுவான நண்பர் ஒருவரது பார்ட்டியில் ஏ.ஆர்.ரஹ்மான் எனும் இளைஞரை சந்திக்கிறார் மணிரத்னம். ஏ.ஆர்.ரஹ்மான் அப்போது வாய்ப்பு தேடிக்கொண்டிருக்கும் இசையமைப்பாளர் என்று பொத்தாம்பொதுவாகச் சொல்லிவிட முடியாது. விளம்பரங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்தார். விளம்பர ஜிங்கிள்ஸில் பிஸியும் கூட. ‘ரோஜா படத்துக்கு அவருக்குக் கிடைத்த சம்பளம் 25000. அதை மூன்று நாட்களில் விளம்பரத்துக்கு இசையமைத்து சம்பாதிக்கும் நிலையில்தான் அவர் இருந்தார். இதை அவரே ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். அவரது லியோ காபி (என்ன ஒரு ஒற்றுமை. அதில் நடித்திருந்தவர் அரவிந்த்சாமி!) விளம்பர ஜிங்கிள்ஸுக்காக , விளம்பர உலகில் பெரும் பாராட்டுகள், விருதுகள் ஏ.ஆர்.ரஹ்மானை வந்து சேர்ந்து கொண்டிருந்த நேரம் அது.



மணிரத்னத்தை தனது ரெகார்டிங் ஸ்டூடியோவுக்கு அழைக்கிறார் ரஹ்மான். அவ்வளவு பெரிய டைரக்டர். வருவாரா என்று தெரியாது. ஆனால், வருகிறார் மணிரத்னம். ஒன்றிரண்டு ட்யூன்களை வாசிக்கச் சொல்கிறார்.
“நான் அசந்துபோனேன். ஒரு கார்ஷெட்டை, ரெகார்டிங் ஸ்டூடியோவாக மாற்றியிருந்தார் ரஹ்மான். இந்த இடத்தில் இருந்து இப்படி அசத்தலான ட்யூன்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறாரா என்று வியந்தேன். அத்தனை வசீகரிக்கற இசைத்துணுக்குகளை அந்த இடத்தில் நான் எதிர்பார்க்கவில்லை” என்கிறார் மணிரத்னம்.

“அந்த சமயம் நான் விளம்பரங்களுக்கெல்லாம் இசையமைத்துக் கொண்டிருந்த காலம். அங்கே 100 ட்யூன் போட்டால், அவற்றிலிருந்து ஒன்றிரண்டுதான் தேர்வாகும். ஆகவே நான் ஒரு ஜென் நிலையில்தான் இருந்தேன். அவருக்கு என் ட்யூன்ஸ் பிடிக்குமா என்றெல்லாம் எதிர்பார்க்கவில்லை. ஆனால் நடந்தது வேறு!” -என்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.

 மேகங்களையெல்லாம் தொட்டுவிட ஆசை.


சோகங்களையெல்லாம் விட்டுவிட ஆசை


கார்குழலில் உலகைக் கட்டிவிட ஆசை


தி
ருப்பூரில் பாளையக்காடு FC குடோனில் ஒரு கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தேன் நான்.  ‘செகண்ட் ரயில்வே கேட்’ அருகே  கவுண்டர் மெஸ் என்றொரு கடை இருந்தது. டோக்கன் வாங்கிக்கொண்டு க்யூவில் அமர்ந்து, நம் வரிசை வரும்போதுதான் போய் சாப்பிட முடியும். அங்கே, வெளியில் இருக்கும் பெட்டிக்கடையிலிருந்துதான் இந்த வரிகளை முதன்முதலில் கேட்டேன். சின்ன வயதிலிருந்தே பாடல்களின் பைத்தியமாக இருந்தேன்.  இளையராஜாவின் தீவிர ரசிகனான (இன்றும்) எனக்கு, ‘இது ராஜா ம்யூசிக் இல்லையே’ என்று தோன்றியது. போய்ப் பார்த்தபோது ‘ரோஜா’ கேசட்டைக் காண்பித்தார் கடைக்காரர். பாலசந்தர் தயாரிப்பு. மணிரத்னம் படம். ஏ.ஆர்.ரஹ்மான் இசை.

இரண்டாம் இடையிசையில், கோலாட்டம் போல ஆரம்பித்து, ‘ஏலேலோ.. ஏலே.. ஏலேலோ’ அப்படி ஈர்த்தது.  இந்தப் பாடலின் மூலம் தமிழர்களின் வீடெங்கும் தன் இசையைப் படரவிட்ட ரஹ்மான், அதன்பின் அடைந்த உயரங்கள், இமயத்தைத் தாண்டிய சிகரங்கள். “அந்தப் பாட்டைக் கேட்டதுமே அழுதுட்டேன். ஏன்னா, சினிமாவுக்குப் போட்ட முதல் பாட்டில்லையா?” என்றார் அவரது அம்மா. படத்தின் தயாரிப்பாளர், கே.பாலசந்தர், இந்தப் பாடலைக் கேட்டதும்  மணிரத்னத்தை அழைத்துச் சொன்னது ‘Its going To Be Song of The Decade". ஆனால் அந்தப் பாடலைப் பற்றி இரண்டு  Decades கடந்தும் பேசிக் கொண்டிருக்கிறோம்.. பேசுவோம்.
என்னைக் கவர்ந்தது அந்தப் பாடலில் பல உண்டு. பல்லவி முடிந்ததும் தனியே ஒலிக்க ஆரம்பிக்கும் வயலின், ஒரு இடத்தில் ‘சின்னச் சின்ன ஆசை’யைத் தொடர்ந்து ஒலிக்கும் வயலின், அந்த ‘ஏலேலோ’க்களுக்கு இடையே ஒலிக்கும் வீணை, ‘மீன்பிடித்து மீண்டும் ஆற்றில்விட ஆசை’யைத் தொடர்ந்து ஒலிக்கும் புல்லாங்குழல், மொத்தப்பாடலும் முடியும்போது  ‘ஆசை!’ என்று சட்டென்று முடியும் இடம் என்று நிறைய.
தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ள இந்தக் கலைஞன், என் போன்ற இசைப்ரியர்களிடம் நீட்டிய கோல்டன் விசிட்டிங் கார்ட் இந்தப் படத்தின் பாடல்கள்!

ரஹ்மான் அப்போது செய்தது, இசையை விட ஒலித்தரத்தில் மேஜிக். துல்லிய ஒலித்தரம் என்பது அவரது ஸ்பெஷாலிட்டி. 6 வயது முதல் அப்பாவுடன் ரெகார்டிங் ஸ்டூடியோவுக்கு செல்வார் ரஹ்மான். 9 வயதில் தந்தை இறந்துவிடுகிறார். ரஹ்மானுக்கு பள்ளிக் காலம்தொட்டே எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர் இவற்றின்மீது மோகம் அதிகம். அவை சார்ந்த துறைகள்மீதுதான் ஆவல். ஆனால், தந்தை இறந்துவிட்டதால், ‘கொஞ்சம் இசை தெரியுமே உனக்கு.. தெரிந்த தொழிலைச் செய்’ என்ற அன்னையின் கட்டளைப்படிதான் அவர் இசைக்கூடங்களுக்குச் செல்கிறார். சின்னச் சின்ன ஆர்கஸ்ட்ரைசேஷன் வேலைகள், செய்கிறார். கீபோர்ட் வாசிக்கிறார்.  இசை சார்ந்த தொழில்நுட்ப அறிவை வளர்த்துக் கொண்டே இருக்கிறார். அதனால் அவருக்கு Sounding மீது மிகப்பெரும் அறிவும், ஆவலும் உண்டு.

ரோஜா  இசையமைத்து பாடல்களெல்லாம் ஹிட் ஆனாலும், தியேட்டரில் அவற்றைக் கேட்கும்போது மிகவும் மனம் தளர்ந்து போகிறார் ரஹ்மான். Sounds குறித்த அறிவு வாய்க்கப்பெற்ற அவருக்கு, தியேட்டர்களின் ஒலித்தரம் ஏமாற்றமளித்தது.  “இப்படியா கேட்கும் தியேட்டர்களில்? இப்படியானால் நான் சினிமாவுக்கு இசையமைக்க மாட்டேன்” என்கிறார். மணிரத்னம், சவுண்ட் இஞ்சினியர் ஸ்ரீதர் இருவரும்தான் ‘இந்த நிலை மாறும்’ என்று நம்பிக்கையளித்தவர்கள். அதன்பிறகே சமாதானமாகிறார்.

ரஹ்மானின் இந்த ‘சவுண்ட் க்வாலிட்டி கறார்த்தனம்’ பற்றி சவுண்ட் இஞ்சினியர் ஸ்ரீதர் சொன்னது முக்கியமானது: “புல்லாங்குழலில் வரும் காற்று மட்டும்தான் வேண்டும். அந்த ’Base' பாடலில் கேட்கக்கூடாது ” என்பாராம். கீழுள்ள வீடியோவில் 1.25ல் கேளுங்கள்.

பல்லவி முடிந்து, முதல் இடையிசையில் ‘லலலல லலலா’ எனும் பெண்குரலுக்கு முன் வரும் புல்லாங்குழலிசையைக் கேட்டால் அது புரியும். அந்த ஷார்ப் - துல்லியம் - ரஹ்மானிசம்! காதல் ரோஜாவே பாடலின் இன்னொரு ஸ்பெஷாலிட்டி, சோகத்தை அத்தனை எளிமையாகக் கடத்துகிற மெட்டு. மனைவியைப் பிரிந்தவன் ஏற்கெனவே பெரும் சோகத்தில் இருப்பான். அவன் சோகத்தை ராகங்களாகும்போது,

சிக்கல்களில்லாத எளிமை மிக முக்கியம் என்று ரஹ்மான் நினைத்திருக்க வேண்டும். அத்தனை எளிய மெட்டு. (அதாவது கேட்பதற்கு. இசையமைக்க அல்ல!)


வீசுகின்ற தென்றலே வேலையில்லை நின்றுபோ
பேசுகின்ற வெண்ணிலா பெண்மையில்லை ஓய்ந்து போ
பூ வளர்த்த தோட்டமே கூந்ததில்லை தீர்ந்து போ
பூமி பார்க்கும் வானமே புள்ளியாக தேய்ந்துபோ
பாவையில்லை பாவை... தேவையென்ன தேவை...
ஜீவன்போன பின்னே.. சேவையென்ன சேவை
முள்ளோடுதான் முத்தங்களா சொல்.. சொல்!
ஏமாற்றத்தையும் சோகத்தையும் இயலாமையையும் ஒருசேரக்கடத்துகிற எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் குரல். அத்தனை எளிமையாகவும் அழுத்தமாகவும் அமைந்த வைரமுத்துவின் வரிகள் என்று அது ஒரு கம்ப்ளீட் பேக்கேஜ்!

‘புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது’ பாடலைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஒரு சந்தேகம் வரும். மதுபாலாவின் கண்களை மூடியிருக்கும் தன் கைகளை, அரவிந்த்சாமி விடுவிக்கும் தருணத்திலிருந்து பாடல் தொடங்கும். அதன்பின் 10 நொடிகளுக்குப் பிறகு கண்ணாடி உடைவதைப் போன்ற ஒரு ஃப்யூஷன். அதன்பின் மெலிதான கோரஸ். தொடர்ந்து வயலினின் ஒரு இழுப்பு. இதற்குப் பிறகுதான் ‘புது வெள்ளை மழை’ என்று சுஜாதாவின் குரல் தொடங்கும். படத்தைக் காட்சி வடிவில் பார்க்கும்போதெல்லாம், இந்த விஷுவல்ஸ்குப் பிறகு அமைத்த இசையோ என்று தோன்றும். அந்த அளவுக்கு, காஷ்மீரின் அழகை மதுபாலா வியந்து பார்ப்பதை, கண்ணை மூடி நாம் கேட்டாலும் உணர்ந்து கொள்ளும் அளவுக்கு இசையாகக் கொடுத்திருப்பார் ரஹ்மான்.

நீ அணைக்கின்ற வேளையில் உயிர்ப்பூ திடுக்கென்று மலரும்
நீ வெடுக்கென்று ஓடினால் உயிர்ப்பூ சருகாக உலரும்
இரு கைகள் தீண்டாத பெண்மையை உன் கண்கள் பந்தாடுதோ
மலர் மஞ்சம் சேராத பெண்நிலா எந்தன் மார்போடு வந்தாடுதோ



பாடல் முழுவதுமே ஒரு நேர்கோட்டில், ஒரே மாதிரியான ஒரு இசை பின் தொடர ஒலித்துக் கொண்டே இருக்கும். ‘உந்தன் காதோடு யார் சொன்னது’ எனும் வரிகளில் ஒரு அருவி விழுவதை உணரலாம்.

‘ருக்குமணி ருக்குமணி அக்கம் பக்கம் என்ன சத்தம்’ இந்த ஆல்பத்தின் மற்ற பாடல்களைவிட, குறைந்த அளவு பேசப்பட்ட பாடல். ஆனாலும் அதன் ஆர்க்கஸ்ட்ரைசேஷன்.. அபாரம். பெரும்பாலும், பாடகர்களை வைத்தே - A cappella பாணியில் பல இடங்களில் மேஜிக் நிகழ்த்தியிருப்பார். ஜுகல்பந்தி பாணியில் தபேலாவும், ட்ரம்ஸும் போட்டிபோடும் இரண்டாம் இடையிசையும் டாப்.

ரோஜாவுக்குப் பின் ஒன்றிரண்டு படங்கள்  வந்த புதிதில், பேட்டிகளில் உங்களுக்குப் பிடித்த உங்கள் பாடல் எது என்று ரஹ்மானிடம் கேட்கப்பட்டால் ‘தமிழா தமிழா’, ‘சின்னச் சின்ன ஆசை’ என்றுதான் டக்கென்று பதில் வரும்.  தாய் மண்ணே வணக்கம், செம்மொழிப் பாடல் என்று தொடங்கி  ஆஸ்கர் பெற்றுத் தந்த ஜெய்ஹோ வரை இந்த மாதிரியான ஜானர் பாடல்களில் தனி முத்திரை பதிப்பதற்கான ஆரம்பப் புள்ளி இந்தப் பாடல் எனலாம்.
உனக்குள்ளே இந்திய ரத்தம் உண்டா இல்லையா
ஒன்றான பாரதம் உன்னைக் காக்கும் இல்லையா

படத்தில் ஒரு ஆல் டைம் ஃபேவரைட் பாடலாக இந்தப் பாடல் அமைந்தது. ‘தமிழா தமிழா’. பல்லவி, இடையிசை, சரணம் என்ற வகைக்குள் இதை அடக்க முடியாது. ஹரிஹரனின் மென்குரலில் ‘தமிழா தமிழா’ என்று ஆறுதல் வரிகளோடு வரும் பாடலில், நாடி நரம்பை உசுப்பேற்றும் இசையும், ‘இம்மண்ணிலா பிளவென்பது?’ என்று முறுக்கேற்றும் வரிகளுமாய்.. ஒரு புதிய அனுபவம் தந்தது இந்தப் பாடல்.
25 வருடங்களுக்கு முன், இதே ஆகஸ்ட் 15ல் வெளியான 'ரோஜா' படம் பல்வேறு சாதனைகளைப் படைத்தது. மணிரத்னம் எனும் கலைஞனை இந்தியா முழுமைக்கும் கொண்டு சேர்த்தது. இந்தியிலும் ரோஜா படமும், பாடல்களும் ஹிட்டடிக்க ஏ.ஆர்.ரஹ்மான் அங்கும் பிரபலமானார். மூன்று இந்திப் படங்கள் ஒப்பந்தமாக அவற்றில் முதலில் வெளியான ‘ரங்கீலா’ வடக்கத்தியவர்களைப் பித்துப் பிடிக்க வைத்தது. அதற்கெல்லாம் அடித்தளம் அமைத்தது ரோஜா தான்.

ரோஜா என்ற திரைப்படம்தான்... ரஹ்மானுக்கு ஃப்லிம்ஃபேர் விருது, மாநில அரசின் விருது என்று துவங்கி தேசிய விருதுவரை பெற்றுத் தந்தது.  வைரமுத்துவுக்கு தேசிய விருதைப் பெற்றுத் தந்தது. மணிரத்னத்திற்கு மாநில அரசின் சிறந்த இயக்குநர் விருதைப் பெற்றுத்தந்தது. அரவிந்த்சாமிக்கு விருதைப் பெற்றுத் தந்தது. சரி... ரசிகர்களுக்கு?

ஏ.ஆர். ரஹ்மான் எனும் பெருங்கலைஞனை அடையாளம் காட்டியது! எத்தனை கொடுத்தாலும் பத்தாத இசைப்ரியர்களெனும் யானைகளுக்கு  ‘ரஹ்மானிசம்’ என்ற மதம்பிடிக்க வைத்தது!


பரிசல் கிருஷ்ணா

இன்னும் வாழ்வதை அறியாமல் இறந்து போனவன்! - நா.முத்துக்குமார் நினைவுதினக் கட்டுரை

“வாழ்க்கை என்னும் நதி, மரணம் என்னும் கடலில் கலக்கும் வரை வெவ்வேறு திசைகளிலும் வெவ்வேறு மேடு பள்ளங்களிலும் ஓடவேண்டியிருக்கிறது.”
  - நா.முத்துக்குமார்




நண்பர்களே... நான் இப்போது தரமணி ரயில்வே ஸ்டேஷனில் நின்றுகொண்டிருக்கிறேன். இங்கு  என் முன்னால் ஒரு ரயில் வண்டி நிறுத்தப்பட்டிருக்கிறது. அதில் `நா.முத்துக்குமார் எனும் பேரன்பு எக்ஸ்ப்ரஸ்’ என எழுதப்பட்டிருக்கிறது. அந்த ரயில், ஓடிக் களைத்து நிற்கிறது என்பது அதன் மெளனத்திலேயே உணர முடிகிறது. மெளனமாக இருப்பதால் அதன் பயண இலக்கு என்னவென்பது யாருக்குமே தெரியவில்லை. ஆனால், அது இனிமேல் எங்கும் பயணிக்காது என்ற உண்மை இங்கு உள்ள எல்லோருக்கும் தெரிந்தே இருக்கிறது. அந்த ரயிலுக்கும்தான்! ஆனால், அந்த ரயிலுக்கு அதுகுறித்த எந்த வருத்தமும் இருப்பதாகத் தெரியவில்லை. ஏனென்றால், இறப்பதற்கு முன்பே தன் இறப்பை அறிய விரும்பி, அறிந்தும்கொண்ட ரயில் அது.  

அது, தண்டவாளத்தில் ஓடக்கூடிய இரும்பு ரயில் அல்ல;  வண்ணத்துப்பூச்சிகளின் வண்ணங்கள் மிதக்கும் பனித்துளிகளால் ஆன கடலுக்குள் பயணிக்கும் விசேஷ ரயில். ஆனாலும்,   அந்த ரயில் மிகமிகச் சாதாரணமாக இருந்தது. ஓடாத ரயில் சாதாரணமாக இருப்பதில் ஆச்சர்யம் இல்லைதான். ஆனால், இது அசுர வேகத்தில் ஓடும்போதுகூட இதேபோல்தான் இருந்தது. அந்த ரயிலில் கூட்டம் கும்மியபோதும், எல்லோரும் அதைப் பார்த்து வியந்தபோதும், சிலாகித்தபோதும், அதில் இடம்பிடிக்க பலர் அடித்துக்கொண்டபோதும், அது தன் பாதையை நோக்கி கவிதை கூவியபடி ஓடிக்கொண்டிருந்ததேயொழிய அது வேறு எதுவும் செய்யவில்லை. எத்தனையோ மனிதர்களை எங்கெங்கோ கூட்டிச்சென்ற அந்த ரயிலில் ஏறி பார்க்க, யாருக்குதான் ஆசை வராது? எனக்கும் வந்தது, ஏறினேன்.

முதல் பெட்டியில்  ‘தூசிகள்’ என்றும் கடைசிப் பெட்டியில்  ‘பேரன்பின் ஆதி ஊற்று’ என்றும் எழுதப்பட்டிருந்ததை என் கண்கள் கவனித்தன. `மனதில் உள்ள தூசிகளை எல்லாம் தட்டினால்தான் பேரன்பின் ஆதி ஊற்றை அடைய முடியுமோ?' என்ற கேள்வியை எனக்குள்ளே கேட்டுக்கொண்டேன்.  ஓராயிரம் பாடல்கள் அந்த ரயிலில் ஒன்றன் பின் ஒன்றாக  ஒலிக்க ஆரம்பித்தன. காதல், சிநேகம், காமம், ஏக்கம், துரோகம் என இருக்கும் எல்லா உணர்வுகளையும் எளிய வரிகளாக்கிச் செய்யப்பட்ட அந்தப் பாடல்களில் பேரன்பு வழிந்துகொண்டிருந்தது. அந்த அன்பின் அழுத்தத்துக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் தத்தளித்தேன்.  திடீரென ஒரு  விரல்   ஒரே அழுத்தில் அந்தப் பாடல்களை நிறுத்தியது. நிமிர்ந்து பார்த்தால் யாருமில்லை! ஏதோ ஒரு பெட்டியிலிருந்து பெரும் சத்தம்... அந்தப் பெட்டியை நோக்கி ஓடினேன்.  ‘அணிலாடும் முன்றில்’ என எழுதப்பட்டிருந்த அந்தப் பெட்டியில்,  அம்மா, அப்பா,  அக்கா, தம்பி, ஆயா, தாய்மாமன், அத்தை, தாத்தா, சித்தி, அண்ணன், தங்கை, பங்காளிகள், பெரியம்மா, மாமன்கள், முறைப்பெண்கள்,  சித்தப்பா, அண்ணி, மைத்துனன், மனைவி, மகன்  என சகல உறவுகளின் பெயரிலும் தனித்தனி அறைகள் இருந்தன.

தங்கை இல்லாதவன் என்கிற தவிப்பு எனக்கு இயல்பிலேயே இருப்பதால், முதலில் `தங்கை' என எழுதப்பட்டிருந்த அறையைத் திறந்தேன். “ஆஹா... அது எத்தனை அற்புதமான அறை! அதில் தங்கையின் சின்னச் சின்ன அசைவுகளும் அத்தனை நுணுக்கமாக அல்லவா செதுக்கப்பட்டிருந்தது.  அண்ணன்மேல் தங்கைகொள்ளும் அன்பும் பாசமும் இத்தனை அலாதியானவையா? தங்கையுடன் பிறக்காத அத்தனை அண்ணன்களும் துரதிர்ஷ்டசாலிகள் என்ற மெய் உணர்ந்த கணம் அது.  தங்கையின் அருமை பெருமைகளைச் சொல்லிவிட்டு, கடைசியில் கஷ்டப்பட்டுச் சம்பாதித்து கல்யாணம் பண்ணித் தர மட்டுமா அக்காவும் தங்கையும்? அந்த அறை கேட்ட ஒற்றைக் கேள்வி... அக்காவையும் தங்கையையும் சுமையாக நினைக்கும் அண்ணன் தம்பிகளின் மனதை உலுக்கும் ஓராயிரம் கேள்விக்குச் சமம். 

அடுத்ததாக `அம்மா' என எழுதப்பட்ட அறையைத் திறந்தேன்.  “மன்னிக்க... அந்த அனுபவத்தை என்னால் எழுத்தில் கொண்டுவர முடியவில்லை. அங்கு பார்த்த அன்பின் எடை இந்தப் பிரபஞ்சத்தின் மொத்த எடையையும்விட கூடுதலானது என்பதை மட்டும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.  

அடுத்ததாக `அப்பா' என்ற அறையைத் திறந்தேன், “காலம் காலமாக ஒளித்துவைக்கப்பட்டிருக்கும் அப்பாக்களின் முகம், அன்பு அப்பாக்களின் முகம், ஆசை அப்பாக்களின் முகம் அங்கு இருந்ததை என்னால் உணர முடிந்தது. செத்துப்போன என் அப்பாவை ஒரு கணம் கும்பிட்டுக்கொண்டேன். அவருக்காக நான் ஒரு கடிதம் எழுத வேண்டும். அதில் அவரைப் பற்றிய அத்தனை சித்திரங்களையும் கொண்டுவர வேண்டும் என்ற ஆசையும் அங்கே எனக்குள் முளைத்தது.

இப்படியாக, நான் எல்லா உறவுகளின் அறையும் திறந்துப் பார்க்கப் பார்க்க  வியந்துபோனேன். `அட... இது எதையுமே நாம் உணரவில்லையே... ரசிக்கவில்லையே! என்ன வாழ்க்கை வாழ்கிறோம்? பணம் சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாகக்கொண்ட இந்த வாழ்க்கை, எத்தனை மோசமானது! ரசனை இல்லாதது' என்பதும் `அப்படி வாழும் மனிதர்கள்  முதுகெலும்பு இல்லாத மனிதர்கள்' என்பதும் விளங்கிற்று. அந்த நொடி முதல் இருக்கும் உறவுகளின் மீது தீராத பற்றும், இல்லாத உறவுகளின் மீது ஏக்கமும் பிறந்தது.
அணிலாடும் முன்றிலைப் பார்த்த பரவசத்தில், அடுத்தடுத்த பெட்டிகளைப் பார்க்க பேராவல்கொண்டேன்; துள்ளிக் குதித்து ஓடினேன். “ `பட்டாம்பூச்சி விற்பவன்', `நியூட்டனின் மூன்றாம் விதி', `குழந்தைகள் நிறைந்த வீடு', `அனா ஆவன்னா', `என்னைச் சந்திக்க கனவில் வராதே' எனத்  தங்கத்தால் ஆனா குட்டிக் குட்டி அறைகள் இருந்தன. ஒவ்வோர் அறையையும் திறக்கும்போதுதான் தெரிந்தது, மேலே மட்டும்தான் தங்க முலாம் பூசப்பட்டிருக்கிறது என்ற உண்மை. உள்ளே அத்தனை வேலைப்பாடுகளும் மயிலறகால் செய்யப்படிருந்தன. பள்ளிக்கூடக் காதலிகள் அங்கே சிறைபிடிக்கப்பட்டிருந்தார்கள்.  தன் மனதில் உள்ள அழுக்கை தூர்வாராமல் கிணற்றைத் தூர்வாரும் அப்பாவின் தவறு அங்கே சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. கீழ் வீட்டுக்காரனைத் தொல்லை செய்யும் மேல் வீட்டுக்காரனுக்குப் பாடம் எடுக்கப்பட்டுக்கொண்டிருந்தது, தன்னை காலம் முழுக்க தீண்டியவளின் பிரிவை எண்ணி அழும் தையல் மெஷின்கள் அங்கு இருந்தன. கிழிந்து தேய்ந்துபோன சைக்கிள் டயர், தான் கடந்து வந்த பாதைகளை காற்றோடுப் பேசிக்கொண்டிருக்கும் அதிசயத்தை அங்கே பார்க்க முடிந்தது. 

பிறந்த வீட்டை துறந்து புகுந்த வீட்டிற்கு போகும் பெண்கள் தங்கள் அடையாளம் தெரியாமல் தவித்தார்கள். பனித்துளிகள், புற்களின் மீது தூங்கிக்கொண்டிருந்தன. இன்னும் இத்தியாதி... இத்தியாதி... அவற்றை எல்லாவற்றையும் ஒருவன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். ‘பேரன்பின் ஆதி ஊற்றில்’ நனைந்ததால் எனக்கு அன்பின் நடுக்கம் தாங்கவில்லை. அந்த ரயிலிலிருந்து குதிக்க ஆயத்தமானேன். “என் ப்ரிய நண்பா... பிணத்தை எரித்துவிட்டு சுடுகாட்டிலிருந்து கிளம்புகிறவர்களிடம் சொல்வதைப்போல் சொல்கிறேன். ‘திரும்பிப் பார்க்காமல் முன்னே நடந்து போ' ” என்றது ஒரு குரல்.  அந்தக் குரலைக் கேட்ட மகிழ்ச்சியில்  திரும்பிப் பார்க்காமல் முன்னே சென்று குதித்தேன். அந்த ஓராயிரம் பாடல்களும் மீண்டும் ஒன்றன் பின் ஒன்றாக ரயிலுக்குள் ஒலிக்கும் சத்தம் கேட்டது.

எம்.புண்ணியமூர்த்தி

Sunday 23 July 2017

தமிழ் சினிமா நகைச்சுவை நடிகர்கள் : எட்டி உதைப்பதும் எகத்தாளமாகப் பேசுவதும்!

- கவிஞர் மகுடேசுவரன் 
 
 
 
 
நண்பர்களுடன் சுற்றுலா செல்கையில் பல்வேறு பொருள்களில் நாங்கள் கலந்துரையாடுவது வழக்கம். அவ்வாறு ஒருநாள் பேசப்பட்ட பொருள் தமிழ் நகைச்சுவை நடிகர்கள். தமிழ்த்திரைப்பட நகைச்சுவை நடிகர்களில் ஒரேயொருவர் பெயரைச் சொல்ல வேண்டுமென்றால் யாரைச் சொல்வீர்கள் என்பது கேள்வி. பலரும் பலரைச் சொல்கையில் நான் கவுண்டமணி பெயரைச் சொன்னேன். 
 
கவுண்டமணியின் நகைச்சுவையில் என்ன சிறப்பு என்று கேட்டார்கள். 
எப்போதும் நம்மை ஓர் உயர்ந்த இடத்தில் வைத்துக்கொண்டு பிறரைத் தாழ்த்திப் பேசிக்கொண்டிருப்போமே, அவ்விடத்திலிருந்து எழும் நகைச்சுவை அவருடையது, அதுதான் எல்லாருக்குமானது, அதனால்தான் அவர் சிறந்த நகைச்சுவை நடிகர் என்று கூறினேன். 
 
ஒரு பணக்காரன் இவ்வுலகையும் பிறரையும் எப்படி ஏளனமாகப் பார்ப்பானோ அதை பார்வையில்தான் ஒரு பிச்சைக்காரனும் பார்ப்பான். இருவரும் தம்மிடத்திலிருந்து பிறரை எள்ளலோடு காண்பதைத்தான் குணப்பாங்காகக் கொண்டிருக்கிறார்கள். அதுதான் மனித இயல்பும்கூட. பொதுமனிதப் பாங்காகிய அதை இறுக்கிப் பிடித்துக்கொண்டமைதான் கவுண்டமணி அடைந்த வெற்றிக்குக் காரணம். 
 
 
 
எட்டி உதைப்பதையும் எகத்தாளமாகப் பேசுவதையும் பிறர் கூறுவதைப்போல எளிமையாக விளங்கிக்கொள்ளக் கூடாது. உரிய வாய்ப்பு கிடைக்குமானால் நாம் பிறரை எட்டி உதைக்கவும் எடுத்தெறிந்து பேசவும் தயங்குவதேயில்லை. 
 
நகைச்சுவை நடிகர்களில் வேறு யார்க்குமே கிட்டாத ஓர் அரிய வாய்ப்பு கவுண்டமணிக்குக் கிட்டியது. ஏறத்தாழ நாற்பதாண்டுகள் அவர் தமிழ்த்திரையைக் கட்டி ஆண்டுவிட்டார். அவருடைய நகைச்சுவைக்கு மூன்று தலைமுறைச் சுவைஞர்கள் இருக்கிறார்கள். நகைச்சுவை நடிகராக இவ்வளவு பெருங்காலம் நின்று நீடித்தவர் கவுண்டமணியாகத்தான் இருக்க முடியும். 
 
பதினாறு வயதினிலே திரைப்படம்தான் அவர்க்கு முதற்படம் என்று ஒரு கணக்குக்கு வைத்துக்கொள்ளலாம். அதில் அவருடைய இயற்கையான தோற்றத்தில் தோன்றினார். முதற்படத்திலேயே தம் குரலாட்சியால் பார்வையாளர்களையும் சொல்ல வைத்தார் : "பத்த வைச்சிட்டியே பரட்டை...". அப்போதைய உடல் தோற்றத்தை வைத்துப் பார்க்கையில் அவர்க்கு நடுத்தர வயது இருக்கலாம் என்றே தோன்றுகிறது. 
 
வாழ்வின் பிற்பாதியில் வெற்றி கண்டவர்களை ஒருபோதும் தோற்கடிக்க முடியாது. அவர்களுக்கு ஓய்வுப்பேறு என்பதே இராது. கவுண்டமணி உள்பட்ட பலர்க்கும் அஃதே நடந்தது.
 
 
 
 பதினாறு வயதினிலே திரைப்படத்தை அடுத்து கிழக்கே போகும் இரயில். அதில் நாயகியின் அக்கா கணவர் பாத்திரம். "பாஞ்சாலி... நான் உன்னத் தூக்கிவுடுவனாம்... நீ அதை எடுத்துக் குடுப்பியாம்..." என்று நாயகியைப் பரண்மீது ஏற்றிவிடும் வேடம். அதற்கடுத்து வந்த புதிய வார்ப்புகள் திரைப்படத்தில் அமாவாசை என்ற பெயரில் ஊர்த்தலைவரின் அடிப்பொடியாக உடனொட்டி வரும் பாத்திரம். "என்ன அமாவாசை ?" என்றதும் "ஐயா... உள்ளதச் சொல்றீங்க..." என்று ஒத்தூதும் வசனம். இம்மூன்று படங்களும்தான் கவுண்டமணி என்னும் நடிகரை மக்கள் மனத்தில் பதிய வைத்தவை. 
 
பாரதிராஜா அறிமுகப்படுத்திய நகைச்சுவை நடிகர்கள் பெரும்பாலும் சோடை போனதில்லை. கவுண்டமணியை நன்கு வெளிச்சம்போட்டுக் காட்டிய படம் 'சுவரில்லாத சித்திரங்கள்.' நாயகி வீட்டுக்கு எதிரிலிருக்கும் ஒரு பெட்டிக்கடைத் தையற்காரர். அக்கடையைச் சாக்காக வைத்துக்கொண்டு அங்கே வரும் நாயகனிடமே தன் பராக்கிரமங்களைக் கூறுகின்ற வெள்ளந்தி. "அந்தப் பொண்ணுக்கு என்மேல ஒரு கண்ணு" என்று கதைவிடுபவர். 
 
பாக்யராஜுக்குத் தொடக்கக் காலங்களில் அறைத்தோழராக இருந்தவர் கவுண்டமணி. கல்லாப்பெட்டி சிங்காரம், கவுண்டமணி இருவரில் யாரைத் தம் படங்களில் நகைச்சுவை வேடத்திற்குத் தேர்வது என்ற குழப்பம் பாக்யராஜுக்கு வந்திருக்கிறது. முதிர்ச்சியின் அடிப்படையில் கல்லாப்பெட்டி சிங்காரத்துக்கே அவ்வாய்ப்புகளை வழங்கினார் பாக்யராஜ். 
 
பிறகு பாக்யராஜின் படங்களில் கவுண்டமணி நடிக்கவில்லை.  அவர்தான் கவுண்டமணி என்று நான் அறிந்துகொண்டது மலையூர் மம்பட்டியான் திரைப்படத்தில்தான். கவுண்டமணி சின்ன பண்ணையாக நடித்த அப்படத்தில் செந்திலுக்கும் ஒரு வேடம். 
 
மம்பட்டியானிடம் அடிபட்டு கிழிகோலத்தில் வரும் சின்ன பண்ணையை ஒரு காவலர் விசாரிப்பார். "யோவ்... யாருய்யா நீ ?" "நான் யாருன்னு எனக்கே தெரியலயேப்பா..." "அதெல்லாம் இருக்கட்டும்... மூஞ்சில என்னய்யா சோறு ?" "அடிக்கணும்னு நினைக்கறவன் கையைக் கழுவிட்டு வந்தா அடிப்பான்... நினைச்சான் அடிச்சான்... முடிஞ்சு போச்சு..." இப்படம் வெளியாகையில் நான் இரண்டாம் வகுப்புச் சிறுவன். கவுண்டமணியின் இந்நகைச்சுவைக்கு விழுந்து விழுந்து சிரித்தோம். இன்றைக்கு மலையூர் மம்பட்டியான் திரைப்படத்தைப் பற்றி ஒருவர்க்கும் தெரியாது. ஆனால், எண்பதுகளின் மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்று அது. அப்படத்தில் இடம்பெற்ற எல்லாருமே பிற்பாடு பெரிய வளர்ச்சியை அடைந்தார்கள். 
 
 இடையிடையே ஆகாயகங்கை, குடும்பம் ஒரு கதம்பம் போன்ற படங்களில் பல்வேறு வேடங்களில் கவுண்டமணி நடித்தார். 
 
அவற்றிலெல்லாம் அவருடைய முழுத்திறனுக்குப் போதிய வாய்ப்புகள் இல்லை. கவுண்டமணியை இன்றுள்ள கவுண்டமணியாக மாற்றியதில் முதல் அடியை எடுத்து வைத்தவர் இயக்குநர் சுந்தரராஜன். இருவரும் கோவை மாவட்டத்தவர்கள். சுந்தரராஜன் உருவாக்கிய நகைச்சுவைப் பாத்திரங்களை மேலும் ஒரு சுற்று வனைந்தெடுப்பதில் கவுண்டமணி வெற்றிபெற்றார்.
 
 
வாடகை வீட்டு முதலாளியாகப் "பயணங்கள் முடிவதில்லை" திரைப்படத்தில் ஒரு வாய்ப்பு. "இந்தச் சென்னை மாநகரத்திலே..." என்னும் அவருடைய இழுப்பே ஒரு நகைச்சுவை. 
 
அடுத்த வந்த படம்தான் கவுண்டமணியைக் கவுண்டமணியாக்கியது. வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தில் ஆல் இன் ஆல் அழகுராஜா. "டேய்... எனக்கிருக்கிற அறிவுக்கும் அழகுக்கும் நான் அமெரிக்காவுல பொறந்திருக்க வேண்டியவன்டா... என் நேரம் இந்த ஊர்ல வந்து பழனியப்பன் சைக்கிளுக்குப் பஞ்சர் ஒட்டறேன்..." என்று அவர் கிளப்பிய நகைச்சுவைப் புயற்காற்று பிறகு ஓயவேயில்லை. 
 
அதற்கடுத்த படம் 'நான் பாடும் பாடல்'. பாலுக்குக் காசு கேட்கும் பால்காரனிடம் "பாதிதான் கொடுப்பேன், மீதியை முனிசிபாலிடில கொண்டுபோய்க் கட்டிடறேன்..." என்று தண்ணீர்ப் பாலுக்குச் சொல்கிற அந்த எடுத்தெறிவும் எகத்தாளமும் பிறகு குறையவேயில்லை. கவுண்டமணி தம் நகைச்சுவையில் கொடிகட்டிப் பறந்த காலகட்டம் கரகாட்டக்காரனுக்குப் பிறகு தொடங்குகிறது.

Saturday 15 July 2017

மகத்தான படங்களை இயக்கிய மகேந்திரன்!

இயக்குநர் மகேந்திரனைப் பற்றிப் பேசாமல் தமிழ்த் திரைப்படங்களைப் பற்றிய எவ்வோர் உரையாடலோ கட்டுரைத் தொடரோ முழுமை பெற்றுவிடாது. தம் படங்களின் வழியாக வாழ்வின் மன நடுக்கோட்டைப் பிடித்துச் சென்றவர் மகேந்திரன். அவருடைய படங்கள் வெளியான காலகட்டத்தில் அவற்றின் பொருண்மை குறித்து தமிழ்ச் சமூகத்தில் போதுமான உரையாடல்கள் நிகழ்ந்தனவா என்பது நமக்குத் தெரியவில்லை. 
 
 



 
 
இல்லை என்றே தோன்றுகிறது. ஆனால், அவர் முனைந்து செயல்பட்ட காலத்திற்குப் பிறகு அவருடைய படங்களின் மதிப்பு மேன்மேலும் உயர்ந்துகொண்டே செல்கிறது. ஏன் மகேந்திரன் இன்றியமையாத ஓர் இயக்குநராக அறியப்படுகிறார் ? அவரைவிடவும் சிறப்பாக இயக்கியவர்கள் பலர் இருக்கின்றார்களே. ஆம், மகேந்திரனை விடவும் சிறப்பான இயக்குநர்கள் இருக்கிறார்கள்தாம். ஆனால், இங்கே மகேந்திரன் முன்னிற்கவில்லை. மகேந்திரன் இயக்கிய படங்கள் முன்னிற்கின்றன. 
 
கதை மாந்தர்களின் ஆழ்மனத்தைக் காட்சிப்படுத்தி, அதையே கலையாக்கி அவர் தம் படங்களில் வைத்துச் சென்றுள்ளார். கதை மாந்தர்களின் மனங்களை நமக்கு அடையாளம் காணத் தெரிந்துவிட்டது. 
 
 
 
 எழுதத் தெரிந்தவர் இயக்குநராய் வடிவெடுப்பதில் பலப்பல அருமைகள் வாய்க்கும் என்பதற்கு மகேந்திரன் நல்ல எடுத்துக்காட்டு. ஒரு கதைக்கு என்ன நியாயம் செய்ய வேண்டும் என்பதுதான் இயக்குநரின் வேலையே. தொடக்கத்தில் பல்வேறு படங்களுக்குக் கதையும் உரையாடலும் எழுதித் தந்தவர் மகேந்திரன். 
 
சிவாஜி கணேசனின் உரக்கப் பேசும் உரையாடல்களுக்குப் பெயர் பெற்ற தங்கப்பதக்கம் படத்திற்கு எழுதியவர். அவ்வரிசையில் ரிஷிமூலம், ஆடுபுலி ஆட்டம், காளி, பகலில் ஒரு இரவு என எண்ணற்ற படங்கள்.
 
 'முள்ளும் மலரும்' மூலம் இயக்குநர் ஆனார். முள்ளும் மலரும், உதிரிப் பூக்கள், பூட்டாத பூட்டுகள், ஜானி, நண்டு, மெட்டி, நெஞ்சத்தைக் கிள்ளாதே ஆகிய படங்கள் அவருடைய இயக்கத்தில் வரிசையாக வந்தன. 
 
 
 
ஒவ்வொன்றும் ஒன்றையொன்று விஞ்சும் தரத்திலானவை. தற்காலத்தினர் இப்படங்களைத் தவறவிடாமல் பார்க்க வேண்டும். ஓர் எழுத்தாளராக மகேந்திரன் தம் படங்களை இயல்பு குலையாமல் எடுப்பதற்குத்தான் தீர்மானம் செய்திருப்பார். கதை மாந்தர்களின் வாழ்க்கையை உள்ளது உள்ளவாறே உரைத்தல் என்பதே அவருடைய இயக்கம். வாழ்க்கைச் சுழலில் சிக்கிக் கிடக்கும் பாத்திரங்களின் எளிய தோற்றங்களையும், நினைப்புக்கும் வாழ்க்கைக்குமுள்ள இடைவெளியையும், துயரத்தின் கனத்த அமைதியையும், கையறு நிலையில் வெறுமனே பார்த்து நிற்றலையும் அவர் காட்சிப்படுத்துவதன் வழியாகவே பார்வையாளர்களுக்குள் ஒரு கலையுணர்ச்சியை வருவிக்கிறார். அவற்றையே அவர் தம் திரைமொழியாக ஆக்கிக்கொண்ட பிறகு மேலும் இரண்டு வித்தகங்கள் அவர் படங்களுக்குத் தோள்கொடுக்கின்றன. ஒளிப்பதிவும் இசையமைப்பும்தாம் அவ்விரண்டு. 
 
மகேந்திரனின் படங்களை இளையராஜாவின் இசை கலைச்செப்பம் செய்து தந்தது. முள்ளும் மலரும் பின்னணி இசையில் இளையராஜா விட்டுச் சென்ற மௌனப் பொழுதுகள்தாம் பார்வையாளர்களைத் திரையை நோக்கி உற்றுப் பார்க்க வைத்தன. அந்த உற்று நோக்கலே உணர்வுகளைக் கட்டிவிட்டது. 
 
உதிரிப் பூக்களின் கருவிசை (தீம் மியூசிக்) இளையராஜாவின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்று. நெஞ்சத்தைக் கிள்ளாதே படத்திலும் இசைக்கே முதலிடம். மகேந்திரன் படங்களில் இளையராஜா செய்து காட்டிய வித்தகங்கள் என்றே தனிப்பொருளில் எழுதிச் செல்லலாம். பின்னணி இசையோடு நிறுத்திக்கொண்டோம், பாடல் வளங்களை நாளெல்லாம் பேசிக்கொண்டிருக்கலாம். 'சங்கம் காணாதது தமிழும் அல்ல... தனை அறியாதவள் தாயும் அல்ல...' என்பதுதான் தாய்மைக்கே இலக்கணம். 
 
மகேந்திரன் படங்களுக்கு வாய்த்த இன்னொரு வித்தகம் ஒளிப்பதிவு. முள்ளும் மலரும் பாலுமகேந்திராவின் கலைவண்ணம். கிட்டத்தட்ட அப்படத்தைத் தம் படம்போன்ற மொழியில் பாலுமகேந்திரா கையாண்டிருப்பதைக் காணலாம். உதிரிப் பூக்களில் அசோக்குமார். தமிழ்த் திரையுலகின் புகழ் பாடப்படாத நாயகர்களின் பட்டியலில் அசோக்குமாரைச் சேர்க்கலாம். மகேந்திரன் எடுக்க நினைத்தது அசோக்குமாரின் கோணத்தில் அருமையான சுடுவுகளாக அமைந்தன. 
 
இன்றைக்கும் உதிரிப் பூக்கள் படமாக்கப்பட்ட மேட்டுப்பாளையம் பவானி ஆற்றுத் திக்கம் நான் அடிக்கடி செல்வதுண்டு. அந்தப் பகுதியே உதிரிப்பூக்கள் நிகழ்ந்த களமாகத்தான் எனக்குத் தென்படுகிறது. பெருவெள்ளம் சுழித்தோடும் பவானி ஆற்றங்கரையில் தாய்தந்தையற்ற இரண்டு மழலைச் செல்வங்கள் நடந்து செல்வதைப்போன்ற காட்சிப்பிழை அங்கே ஏற்படுவதுண்டு. அருமையாய் எடுக்கப்பட்ட எண்ணற்ற தமிழ்ப்படங்கள் வெற்றி பெறாமல் தோற்றுப் போயிருக்கின்றன. அதற்கு எதைக் காரணம் காட்டுவது ? கடவுளின் இருப்பு இல்லாமையைப் போன்றே விடை தெரியாத ஒன்று அது. அப்படித் தோற்றுப் போன படங்களில் தலையாயது என்று மகேந்திரனின் 'பூட்டாத பூட்டுகள்' படத்தைத்தான் சொல்வேன். மகேந்திரன் எடுத்த எந்தப் படத்தையும் விட்டுக்கொடுப்பேன். 
 
பூட்டாத பூட்டுகளை என்னால் விட்டுக்கொடுக்கவே இயலாது. அது எழுத்தாளர் பொன்னீலனின் கதை. திருமணமான பெண்ணொருத்தியின் மனத்தை அவ்வூர்க்கு வரும் ஓர் இளைஞன் கவர்ந்துவிடுவான். பிறகு ஊரைவிட்டு வெளியேறுவான் அவ்விளைஞன். தானுற்ற உணர்வுகளை உண்மையென்று நம்பும் அப்பெண் தன் வீட்டைத் துறந்து அவ்விளைஞனின் வீட்டுக்கே சென்று நிற்பாள். அங்கே அவளுக்கு வரவேற்பிருக்காது. இளைஞனும் புறக்கணிப்பான். "இங்கே எதுக்கு வந்தே ?" என்றுதான் கேட்பான். "நம்மப் பத்தி ஊர்ல எல்லாருக்கும் தெரிஞ்சி போச்சு. இனிமே உங்களோட வாழ்றதைத்தவிர வேற வழியே இல்லை" என்பாள் அவள். 
 
"உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு குடும்பம் நடத்த முடியுமா ? பழகினோம் கொண்டோம்னா அது வேற விசயம். முதல்ல ஊர் போய்ச் சேரு... உன்னோட நிக்கறத மத்தவங்க பார்த்தாங்கன்னா என் பேரு கெட்டுப்போயிடும்..." என்பான் அவன். உயிரைத் துறக்கும் வலிவற்ற அப்பெண் தன் கணவனிடமே திரும்பிவிடுவாள். ஓரளவுக்கு நினைவிலிருந்து எழுதியுள்ளேன், இந்தக் கதையை மகேந்திரனின் இயக்கத்தில் ராஜாவின் பின்னணியிசையில் எண்ணிப் பாருங்கள். 
 
மகேந்திரன் எழுத்தாளர்களின் ஆக்கங்களிலிருந்து ஓரிழையை எடுத்துக்கொண்டு திரைக்கதை எழுதுபவர். கடைசியாக அவர் எடுத்த சாசனம் திரைப்படத்திற்கும் கந்தர்வனின் சாசனம் கதைக்கும் ஏதொரு தொடர்பையும் காண முடியவில்லை. அவர் ஒரு கதையில் தோன்றும் பாத்திரங்களால் கவரப்படுகிறார். அவர்களைக்கொண்டு தமக்கான திரைக்கதையை வடித்தெடுக்கிறார். நண்டு என்னும் படம் மட்டும் சிவசங்கரியின் எழுத்தை ஓரளவு ஒட்டியதாக அமைந்திருக்கக்கூடும். நம் கதைக் களஞ்சியங்களில் அவ்வளவு மனிதர்கள் நகமும் தசையுமாக நடமாடுகிறார்கள். அவற்றில் பட்டு நூலெடுத்து வித்தை செய்யும் மாபெரும் கலைஞராக மகேந்திரன் ஒருவரே தென்படுகிறார்.