Monday 20 March 2023

சார்லி

 கே டிவியில் எபோது போடபட்டாலும் பார்க்கும் திரைப்படங்களில் ஒன்று "வெற்றிக் கொடி கட்டு". இன்றைய நெகட்டிவிட்டி உலகில் பாசிட்டிவிட்டியை அள்ளி தரும் படம். பார்த்திபன், வடிவேலும் காமெடியை தாண்டி படத்தில் வரும் ஒரு காட்சியை மட்டும் தவறவிடவே மாட்டேன். வெளிநாடு செல்லும் ஆசையில் பண்த்தை தொலைத்தவர்களின் கதை. அதில் ஒருவரான சார்லி ஊர் ஊராக அலைந்து கொண்டிருப்பார். படத்தில் இடையில் பார்த்திபனை பார்க்க வந்து மனோரமா கையால் சாப்பிடுவார். பிறகு திரும்ப செல்லும்போது பார்த்திபனும் பேசிக்கொண்டேச் செல்லும் காட்சி தான் அது. பணத்தை தொலைத்த ஏமாற்றம், எதுவும் செய்ய முடியாத இயலாமை, எதிர்காலம் பற்றிய தெளிவின்மை எல்லாம் சேர்த்து கிட்டத்தட்ட அரைப்பைத்தியம் நிலையில் தான் சார்லியின் கேரக்டர் வடிவமைக்கப்பட்டிருக்கும். பார்த்திபன் உடன் ஆற்றாமையோடு பேசிக்கொண்டே வரும் போது, ஒரே நொடியில் " அவந் மட்டும் என் கையில கிடைச்சான், அவன் ரத்ததை குடிக்காம விட மாட்டேன்" என்று கடும் ஆவேசமாகி, அடுத்த நொடியில் அதே இயலாமை, ஏமாற்ற உணர்வை வெளிப்படுத்தும் அந்த காட்சி தான் சார்லி என்னும் யானைக்கு கிடைத்த சோளப்பொறி. நடந்து வரும் பார்த்திபன் ஒரு நொடி தடுமாறி நிற்பார். அடுத்தமுறை அந்த படத்தை பார்க்கும் போது, இந்த காட்சியை காணத் தவறாதீர்கள். 






நினைவு தெரிந்த நாளில் இருந்து இன்று திரையில் பார்த்துக் கொண்டே இருப்பதால் சார்லியின் மகத்துவம் நமக்கு தெரியவில்லை. வெளியில் இருந்து வருபவர்களை வரவேற்று, உபசரித்து,சேவகம் செய்யும் நாம் எப்போதும் வீட்டில் இருப்பவர்களை கண்டு கொள்ள மாட்டோம். அதே போல தான் சார்லியும் நம் வீட்டைச் சேர்ந்தவர் போன்ற ஒரு நபர். அவருக்கு இன்னும் பெரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பது என் விருப்பம். 

முரளி, சின்னி ஜெயந்துக்கு பிறகு தமிழ் சினிமாவில் நீண்ட காலம் காலேஜ் ஸ்டூண்டாக நடித்த பெருமை சார்லிக்கு உண்டு. மோதிரக்கையால் குட்டுப்பட்டவர் சார்லி. இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரால் திரையில் அறிமுகபடுத்தபட்டவர் தான் சார்லி. அதனால் அவரின் படங்களின் சார்லியின் பங்கு எப்போதும் இருக்கும். 1982ல் அறிமுகமான சார்லிக்கு தமிழ் சினிமாவில் இது 40வது வருடம். நகைச்சுவை நடிகனாக தனி ஆவர்த்தனம் செய்ததைவிட கும்பலாக இவர் நடித்தது தான் அதிகம் என்று நினைக்கிறேன். மற்ற நகைச்சுவை நடிகர்களுடன் சேர்ந்து நடிப்பதில் எந்த ஈகோவும் பார்க்காத நல்ல மனதுக்கரர். . சூப்பர் ஸ்டாருடன் தர்மத்தின் தலைவன் படத்தில் கரப்பான் பூச்சி காமெடி இன்றளவும் ரசிக்க வைக்கும். அதன் பிறகு தளபதி, வீரா படங்களில் இணைந்து நடித்திருப்பார். கமலுடன் சிங்காலவேலன் படம் தான் நினைவில் இருக்கிறது. 

சார்லிக்கு பெயர் சொல்லும் ஒரு படம் அது புது வசந்தம் தான். அந்த படத்தில் விகரமனுடன் ஏற்பட்ட நட்பு தான் அவருக்கு பூவே உனக்காக, உன்னை நினைத்து படங்களை பெற்றுத் தந்திருக்கும் என்று நினைக்கிறேன். ரஜினி, கமல், முரளி விஜய்காந்து என சீனியர் நடிகர்களுடன் நடித்தவர் அடுத்த தலைமுறை நடிகர்களான விஜய், அஜீத், பிரசாந்த் உடனும் கூட்டணி போட்டார். பாலச்சந்தர் பட்டறை என்பதால் இயக்குனர் சரண் படங்களிலும் தொடர்ந்து நடித்திருப்பார். 

இயக்குனர் வி.சேகரின் படங்கள் குறிப்பிட்டு சொல்ல வேண்டியவை. ஒன்னா இருக்க கத்துக்கனும், பொngகலோ பொங்கல். பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கனும், என தொடர்ந்து அவர் படங்களில் நடித்திருக்கிறார்.1980 களிலேயே சார்லிக்கு தனிப்பாடல் ஒன்று கிடைத்தது. நியாயத்தராசு படத்தில் "வெண்ணிலா என்னோடு வந்து ஆடவா" பாடலில் சார்லி தான் லீட் ஆர்டிஸ்ட். இணைந்த கைகள் படத்திலும் ஒரு பாடலுக்கு ஆடியிருப்பார். 

 2000த்துக்கு பிறகு வடிவேலுவுடன் கூட்டணி சேர்ந்து இவர் நடித்தது எல்லாமே அதிரிபுதிரி ஹிட். ப்ரெண்ட்ஸ், கோவில் இரண்டும் மணிமகுடம். சார்லி நல்ல நகைச்சுவை நடிகர் என்று சொல்வதை விட மிகச்சிறந்த குணச்சித்திர நடிகர் என்று சொல்லலாம். அதற்கான உதாரணம் தான் வெற்றிக் கொடி கட்டு படம். சமீபத்தில் மாநகரம், ஜீவா இரு படங்களும் சார்லியின் நடிப்புக்கு தீனி போட்டவை. சென்னையை பற்றி தவறாக பேசும் போது, "நாம கேட்ருக்கோமா சார்" என்று சார்லி கேட்கும் வசனம் யாராலும் மறக்க முடியாது. அதே போல் தான் ஜீவா படத்தில் அவரின் கேரக்டர். 

சார்லி கோவில்பட்டி அருகில் ஒரு கிராமத்தில் பிறந்தவர். காலேஜ் படிக்கும் போதே அவர் ஸ்டேஜ் ஆர்டிஸ்ட். நடிக்க வந்த பிறகும் மேல்படிப்பை முடித்திருக்கிறார். 2019 ம் ஆண்டு "தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு நகைச்சுவை நடிகர்களின் பங்கு" என்ற தலைப்பில் பி எச்டி செய்து டாக்டர் பட்டம் வாங்கியுள்ளார். 2004ல் கலைமாமணி விருதும் பெற்றுள்ளார். 800 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார்.