Saturday 21 February 2015

ரஜினிக்கு தோல்வியா... 'யானை தும்மினாலும் அது ஏழூருக்கு சாரல்டா'!

புதையல் அரக்கனுக்கு சொட்டு ரத்தம் கொடுத்தா போதும், பொட்டி பொட்டியா தங்கம் நமக்குதான் என்கிற பேராசை இல்லாத மனுஷன் ஒருத்தன் இருந்தா, மற்ற எல்லாருடையை ஆசையையும் கொழுக்கட்டையா உருட்டி வச்சு படைக்கலாம் அவனுக்கு. 
 
 சினிமா, அரசியல், பொதுவாழ்க்கைன்னு எங்கு திரும்பினாலும், ‘எனக்கு தர்றீயா, இல்ல எடுத்துக்கட்டா...?'ங்கிற மனுஷங்கதான் அதிகம். இப்போதும் கூட ‘லிங்கா' படம் ஹிட்டா, இல்லையா என்கிற வாதங்களை மட்டும் சல்லடை போட்டு கழித்துவிட்டால் முகப் புத்தகமும் சரி, ட்விட்டரும் சரி. 
 
அவையெல்லாம் காலி ரேக்குகளாகதான் காட்சியளிக்கும். ‘பார்க்கிங் பணத்திலேயே பாதி வசூல் வந்தாச்சு. அவங்க கொடுத்ததெல்லாம் பொய் கணக்கு' என்கிறார்கள் ரஜினி ரசிகர்கள். ‘படம் ஓடலேன்னா பணம் ரிட்டர்ன் என்கிற விஷயத்தை தமிழ்சினிமாவில் அறிமுகப்படுத்தியதே அவர்தானேப்பா. இதே ஊர்ல இதுக்கு முன்னாடி எத்தனையோ படம் ஓடாம போய் விநியோகஸ்தர்களின் விலா எலும்பை பதம் பார்த்துருக்கு. யாராவது திருப்பிக் கொடுத்தாங்களா?' என்கிற குரல்களும் ஆவேசமாக ஒலிக்கிறது.
 
ரசிகர்கள் மத்தியில். ரஜினிக்கு தோல்வியா... 'யானை தும்மினாலும் அது ஏழூருக்கு சாரல்டா'! ‘ரஜினி இனி அப்பா வேடங்களில் மட்டும்தான் நடிக்கணும்' என்று கருத்துக்கணிப்பு நடத்தி முடிவு சொல்கிறது முன்னணி இணையதளம் ஒன்று. ‘தலைவர்னா மாஸ். மாஸ்னா தலைவர்தான். யாருகிட்ட?' என்று மார் தட்டுகிறது இன்னொரு இணையதளம். இப்படி ரஜினி படம் ரிலீஸ் ஆகும்போதெல்லாம் குடம் குடமா பால் ஆர்டர் பண்ணுது ஒரு கோஷ்டி. குடம் குடமா விஷமும் ஆர்டர் பண்ணுது இன்னொரு கோஷ்டி. 
 
சவுக்கு மரமோ, போதி மரமோ? இரண்டையும் நிழலா பாக்குறவன் ஞானி. விறகா பார்க்குறவன் வியாபாரி. எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார் ரஜினி. இதே கலகத்தையும் இதற்கு முன் சந்தித்தவர்தான் அவர். கொஞ்சம் ரிவர்ஸ்சில் போவோமா? ‘பாபா' படுதோல்வின்னு செய்தி வந்த பின்பு கோடம்பாக்கத்தில் சாயங்காலம் ஏழு மணிக்கு மேல் உற்சாகமாக கூடிய பார்ட்டிகளில், சப்பி உறிஞ்சப்பட்ட காலி பாட்டில்களை பொறுக்கி பழைய விலைக்கு போட்டிருந்தாலே, ஒரு பட்ஜெட் படத்தை தயாரிச்சிருக்கலாம். அந்தளவுக்கு எல்லாருமே குறி வச்ச நாற்காலி ரஜினியுடையது. 
 
 பாபா விஷயத்தில் கஷ்டம் பார்க்காம உழைச்சோம், உழைப்புக்கு பிறகும் கஷ்டம் பார்த்தோம்ங்கிற ஒரே நேர்க்கோட்டுல ஆறுதலை ஓடவிட்டுவிட்டு, வழக்கம் போல இமயமலைக்கு இடம் பெயர்ந்தார் ரஜினி. அவர் இல்லாமலே சினிமாக்கள் வந்தன. அவர் இல்லாமலே வெற்றிப்படங்களும் வந்தன. யார் யாரோ பொன்னாடைக்கு சொந்தக்காரர்கள் ஆனார்கள். செல்லாக் காசெல்லாம் ‘செக்'கில் சைன் போட்டது. அப்போதும் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டுதான் இருந்தார் ரஜினி. வருஷங்கள் ஓடின. ஆனால் அவர் தேடிய கதை கிடைக்கணுமே? சினிமா விழாக்களுக்கு வாங்க என்றார்கள். இலக்கிய விழாக்களுக்கும் அழைத்தார்கள். எல்லாவற்றுக்கும் மெல்லிய புன்னகையை அனுப்பிவிட்டு அர்ஜுனன் வித்தைக்கு ஆள் தேடிக் கொண்டிருந்தார் ரஜினி. அந்த நேரத்தில் விக்ரம் நடித்த ‘சாமி' படத்தை பார்த்தார் ரஜினி. அந்த கதையில் நாம் நடித்திருந்தால் எப்படியிருக்கும் என்கிற சிந்தனை ஓடாமலிருக்குமா? அந்த படத்தின் வெற்றிவிழாவில்தான் பெரிய இடைவெளிக்கு பிறகு கலந்து கொண்டார் அவர். அந்த மேடையில் ‘ஒண்ணுச்சாமி, ரெண்டுச்சாமி, மூணுச்சாமி... ஆறுச்சாமி' என்ற வசனத்தை ரஜினி அப்படியே பேசிக்காட்ட, பிய்த்துக் கொண்டது விசில். 
 
‘இனிமே நமக்கு சினிமா வேணுமா?' என்று கூட சமயங்களில் நினைத்து வந்தவருக்கு, ஆறுச்சாமி வந்துதான் ஆர்வத்தை துண்டினான். நடுவில் கே.எஸ்.ரவிகுமார் வந்து ‘ஜக்குபாய்' கதையை சொன்னார். மறுபடியும் ஒரு பீரங்கிக்கு குண்டுகள் நிரப்பப்பட்டது. சற்றே ஆர்வமானார் ரஜினி. ‘இறைவா.... எதிரிகளை நான் பார்த்துக் கொள்கிறேன். நண்பர்களிடமிருந்து என்னை காப்பாற்று' என்கிற பஞ்ச் வசனங்களோடு விளம்பரங்கள் வெளியிடப்பட்டன. 
 
இருந்தாலும் கற்பூர வெளிச்சத்துல காபி டம்ளரை சுட வச்ச மாதிரி, ஏனேதானோன்னு கதை இருக்கறதா மட்டும் அவருடைய உள் மனசு சொல்லிகிட்டேயிருந்திச்சு. ஒருபுறம் பட வேலைகள் கனஜோராக நடந்து கொண்டிருக்க, பெங்களூரில் ஒருமுறை தன் நண்பர்களோடு ‘ஆப்தமித்ரா' படம் பார்த்துக் கொண்டிருந்தார். விஷ்ணுவர்த்தன் ஹீரோவாக நடித்த படம் அது. சரக்கென்று பொறிதட்டியது அவருக்கு. இதுதான் நாம தேடிகிட்டு இருந்த படம் என்று. பி.வாசுதான் அந்த படத்தின் இயக்குனர். தமிழ்சினிமாவில் அவரது சகாப்தம் முடிந்த நேரம் அது. உடனே பி.வாசு அழைக்கப்பட்டார். 
 
‘ஜக்குபாய் ஓரமா இருக்கட்டும். இந்த கதையை பண்ணலாம்' என்றார் ரஜினி. மலையாளத்தில் மோகன்லால் நடித்த ‘மணிசித்திரத்தாழ்' என்ற படத்தின் ரீமேக்தான் இந்த ‘ஆப்தமித்ரா'. மணிசித்திரதாழ் படத்திற்கும் ஆப்தமித்ராவுக்கும் நடுவிலேயே நிறைய வித்தியாசங்களை கொடுத்திருந்தார் பி.வாசு. அதையும் இன்னும் மெருகேற்ற வேண்டும் என்றார் ரஜினி. ஒருமுறை ஒரு படத்தில் நுழைந்து கொண்டால், அதன் ஜீவன் முழுக்க தன் மூச்சென்று நினைப்பார் ரஜினி. எந்நேரமும் அதே சிந்தனைதான் ஓடிக்கொண்டிருக்கும் அவருக்குள். அந்த வேட்டையன் பாத்திரம் ரஜினி சொன்ன விஷயம். அதையெல்லாம் விட படத்தில் வரும் அந்த லக லக லக...! வழக்கம் போல இமயமலை சென்றிருந்தார் ரஜினி. 
 
அங்குள்ள மலைஜாதி மக்கள் சற்றே இருட்டிய பின் வரிசையாக நடந்து செல்வதை பார்த்தாராம். எதையோ முணுமுணுத்தபடியே அவர்கள் செல்வதை கவனித்த ரஜினி, ஒருவரை நிறுத்தி ‘என்ன முணுமுணுக்கிறீங்க?' என்று கேட்க, அவர்கள் சொன்னதுதான் இந்த லகலகலக... அப்படியென்றால்? பேய் பிசாசே தூரப்போ என்று அர்த்தமாம். மிக பொருத்தமாக அதை கொண்டுவந்து சந்திரமுகியில் நுழைத்தார் ரஜினி. 
 
அதுமட்டுமா? ரின் சோப் விளம்பரம் ஒன்றில் நடித்திருந்தார் அமிதாப்பச்சன். ஒரு சிறுவன் ரின் சோப் பற்றி அமிதாப்பிடம் புகழ்ந்து பேச பேச, நடுநடுவே அவர் கேட்கிற கேள்விதான், ‘நான் கேட்டேனா...?' என்பது. வடிவேலுவுக்கு பேய் கதை சொல்லும்போது, ‘நான் கேட்டேனா'வை பொருத்தமாக அங்கு நுழைத்தார் ரஜினி. சந்திரமுகியில் மட்டுமில்ல, அவர் நடித்த எல்லா படங்களிலும் ரஜினியின் நகாசு வேலைகள்தான் படத்தையே உச்சத்திற்கு கொண்டு போயிருக்கிறது. 
 
எந்திரன் கதையை கேட்டுவிட்டு, ‘அந்த ரோபோவுக்கு என்ன உருவம் கொடுப்பீங்க?' என்று கேட்டதால்தான், அதையும் ரஜினியாகவே நடிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் உருவானதாம் ஷங்கருக்கு.
 
 ‘நான் ஒரு தடவ சொன்னா நுறு தடவ சொன்ன மாதிரி' என்கிற பஞ்ச் வசனம், உதவி இயக்குனர் திருப்பதிசாமி என்பவர் சக உதவி இயக்குனரிடம் உரையாடிக் கொண்டிருந்த போது ரஜினியின் காதில் விழுந்த விஷயம். அதைதான் தட்டி தட்டி பட்டி பார்த்து அப்படியொரு பஞ்ச்சாக வடிவமைத்தார். அதற்கான சன்மானத்தை அந்த வசனம் டப்பிங் ஸ்டூடியோவில் பதிவாகும் முன்பாகவே திருப்பதிசாமிக்கு கொடுத்து திருப்தியடைந்தவர்தான் சூப்பர் ஸ்டார். 
 
தோல்வி தொடாத மனிதர்களே இல்லை. ஏன் கடவுளுக்கே அந்த நிலைமை வந்திருக்கிறது. லிங்கா தோல்விதான். விநியோகஸ்தர்களுக்கு ரிட்டர்ன் கொடுத்துருங்க என்று கூறிவிட்டார் ரஜினி. ஆனால் அதற்காக உலகம் அமைதியாகவா இருக்கிறது? ரஜினியின் அடுத்த படம் யாரோடு? இந்த கேள்வி இல்லாத தொலைக்காட்சிகள் இல்லை. மாத, வார, நாளிதழ்கள் இல்லை. இணையதளங்கள் இல்லை. ஷங்கருடன் எந்திரன் பார்ட் 2 தான் நெக்ஸ்ட் என்கிறார்கள் இவர்கள். இல்லையில்லை.... எஸ்.எஸ்.ராஜமவுலிதான் நெக்ஸ்ட் என்கிறார்கள் அடுத்த நாளே, ரஜினி சார் பி.வாசுகிட்ட கதை கேட்டுட்டாரே...? என்கிறார்கள் முன்பு சொன்னதையெல்லாம் யாரோ சொன்னதாக நினைத்துக் கொண்டு. இதுதான் ரஜினி. 
 
அவருக்கு தோல்வி வந்திருக்கலாம். 
 
இருந்தாலும், யானை தும்மினாலும் அது ஏழுருக்கு சாரல்டா...! 
 
-ஆர் எஸ் அந்தணன்

Thursday 19 February 2015

அஜித்தை நினைத்து போட்ட கணக்கு தாப்பா போச்சே

நாங்கள் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று என்று புலம்பி வருகின்றனர் அனேகன் படக்குழுவினர். அஜித் நடிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 5 ஆம் திகதி ரிலீஸான படம் என்னை அறிந்தால். முதலில் இப்படம் ஜனவரி கடைசியில் வெளியாக இருந்தது.

ajith

பின்னர் தியேட்டர் பிரச்சினை காரணமாக பிப்ரவரி 5 ஆம் திகதிக்கு மாற்றப்பட்டது. இதனால் அந்த நேரத்தில் வெளியாக இருந்த சில படங்களின் ரிலீஸ் தேதிகள் மாற்றி அமைக்கப்பட்டன.

ஆனால், என்னை அறிந்தால் ரிலீஸான அடுத்த வாரத்திலேயே தனுஷின் அனேகன் படம் களமிறங்கியது. அஜித் படம் வெளியாகி ஒரு வாரமாகி விட்டதாலும், படம் கலந்த விமர்சனங்களை பெற்றதாலும், நமக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று நினைத்தார்கள் அனேகன் படக்குழுவினர்.

ஆனால், என்னை அறிந்தால் படம் இன்னமும் ஓடிக்கொண்டிருப்பதால், அந்த படத்தை திரையிட்டிருக்கும் எந்த தியேட்டர்காரர்களும் அனேகன் படத்துக்கு தியேட்டர்கள் கொடுக்க தயாராக இல்லையாம். அதனால், தங்கள் படம் வெளியானதும் என்னை அறிந்தால் திரையிட்டிருக்கும் நிறைய தியேட்டர்கள் காலியாகி நம் பக்கம் திரும்பி விடும் என்று எதிர்பார்த்த ஏஜிஎஸ் நிறுவனத்தின் கணக்கு தவறாகி விட்டதாம்.

இப்போது வெறும் 207 தியேட்டர்களில் மட்டுமே (தமிழகத்தில்) அனேகனை திரையிட்டிருக்கும் அவர்கள் தியேட்டர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த முடியாமல் தவித்து வருகிறார்கள். இதனால் அவர்கள் எதிர்பார்த்த வசூல்கூட இன்னும் கைசேரவில்லையாம்.

Wednesday 11 February 2015

லிங்கா - சிவலிங்கா.. மாட்டி முழிக்கும் ரஜினி, வேடிக்கை பார்க்கும் மகள்..!

ரஜினி பிறந்த நாளை முன்னிட்டு கடந்த டிசம்பர் 12-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான படம் லிங்கா. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் உலகம் முழுவதும் 3 ஆயிரம் தியேட்டர்களுக்கு மேல் ரிலீஸானது. தமிழ் நாட்டில் 750 தியேட்டர்களில் திரையிட்டனர். ரஜினி 4 வருடங்களுக்குப் பிறகு நடித்து நேரடி படமாக வந்ததால் படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டினார்கள். ஆனால் படம் எதிர்பார்த்த வசூலை தரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் லிங்கா படத்தால் தாங்கள் பல கோடி நஷ்டமடைந்துவிட்டதாகச் சொல்லி போராட்டத்தில் ஈடுப்பட்டனர் விநியோகஸ்தர்கள்..

 
   மேலும் இப்பிரச்னையில் நடிகர் ரஜினிகாந்த் தலையிட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதற்கப்புறம் ரஜினியே அந்த பிரச்சனையில் நீர் ஊற்றி அணைத்த கதை இன்டஸ்ட்ரி அறிந்ததுதான். அதாவது நஸ்டத்தை திருப்பி தரேன் என்று ஒப்புக்கொண்டதுதான்.
ஆனால் லிங்கா படத்தால் சுமார் 33 கோடி ரூபாய் நஷ்டம் என்கிறார்கள் விநியோகஸ்தர்கள். அப்படியிருக்க ரஜினி தரப்பிலிருந்து தருவதாக ஒப்புக் கொண்டது பதினைந்துதானாம். இந்த பதினைந்தும் எப்போது வரும் என்று நகத்தை கடித்தப்படி காத்து கொண்டிருக்கிறார்களாம் விநியோகஸ்தர்கள். இருந்தாலும் இந்த முழு தொகையையும் ரஜினி எப்படி கொடுப்பார்? அல்லது நஷ்டத்தை அவர் ஒருவர் மட்டுமே ஏற்றுக் கொள்வது எவ்விதத்தில் சாத்தியம் என்ற கேள்விகள் எழாமல் இல்லை.


தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் கொஞ்சம், மொத்த விநியோகஸ்தரான ஈராஸ் கொஞ்சம், ரஜினி கொஞ்சமுமாக பிரித்துக் கொள்வதுதானே முறை? இதனால் பிரச்சனையை ஈராஸ் நிறுவனத்திடம் கொண்டு சென்றார்களாம். இது தொடர்பாக மும்பைக்கு போய் பேசிவிட்டு வந்தாராம் ராக்லைன் வெங்கடேஷ். அவரிடம், நாங்க திருப்பி கொடுக்கிற ஐடியாவே இல்ல. அதுமட்டுமல்ல, நாங்க கார்ப்பரேட் நிறுவனம். பேப்பர்ல என்ன இருக்கோ, அதன்படிதான் செயல்பட முடியும். பேப்பர்ல படம் நஷ்டமானா திருப்பி தர்றேன்னு எங்கயாவது போட்ருக்கோமோ என்றார்களாம்.

ஈராஸ் நிறுவனத்தின் தென்னிந்திய மேலாளர் பொறுப்பு வகிக்கும் ரஜினி மகள் செளந்தர்யா இதை கேள்விப்பட்டு கம்பெனி பக்கம் இருக்குறதா, அப்பா பக்கம் இருக்குறதா.. இல்ல நஷ்டப்பட்டவர்கள் பக்கமும் இருக்குறதா என்று சைலண்டாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறாம். பாவம் அவர் மட்டும் என்ன செய்ய முடியும்.

என்னை அறிந்தால்... லாபமா, சராசரி வியாபாரமா?

என்னை அறிந்தால் படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வந்து ஒருவழியாக ஓய்ந்துள்ளன. இப்போது படத்தின் பிஸினஸ் பற்றி பலரும் பலவிதமாக எழுத ஆரம்பித்துள்ளனர். 
 
 என்னை அறிந்தால்... லாபமா, சராசரி வியாபாரமா?
 
சிலர் படம் பிரமாதமான வெற்றி என்றும், சிலர் அப்படியெல்லாம் இல்லை... சராசரிதான் என்றும் கூறி வருகின்றனர். தயாரிப்பாளர் ஏஎம் ரத்னம் இதுபற்றி எதுவும் கூறாமல் அமைதி காக்கிறார். அவர் எப்போதுமே அப்படித்தான். பெரிய வெற்றி என்றாலும், தோல்வி என்றாலும் மவுனம்தான் அவர் பதில். 
 
என்னை அறிந்தால்... லாபமா, சராசரி வியாபாரமா? சரி படம் உண்மையில் எப்படிப் போகிறது? நன்றாகவே ஓடுகிறது. வசூலும் திருப்தியாக உள்ளது. என்னை அறிந்தால் படம், வெளியாகி ஒரு வாரம் முடிந்த நிலையில் ரூ 60 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது மொத்தமாக. 
 
இதில் தமிழகத்தில் மட்டும் ரூ 40 கோடி வரை இந்தப் படம் வசூலித்துள்ளது. இந்தப் படத்தின் பட்ஜெட்டை வைத்துப் பார்க்கும்போது, இது உண்மையிலேயே நல்ல வசூல்தான். வரி போக ரூ 28 கோடி வரை கிடைத்திருக்கிறது. 
 
பிற மாநிலங்களில் கேரளா, கர்நாடகாவில் நல்ல வசூலைப் பெற்றுள்ளது. சர்வதேச அளவில் அமெரிக்காவில் 4 லட்சம் டாலருக்கு மேல் வசூலித்துள்ளது .
 
இந்தப் படம். மொத்தமாக ரூ 60 கோடிக்கும் மேல் வசூலித்து, டீசன்டான வெற்றியைப் பெற்றுள்ளது என்னை அறிந்தால். தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம் சந்தோஷமாக அஜீத்தின் அடுத்த பட வேலைகளை ஆரம்பித்துவிட்டார்.

Tuesday 3 February 2015

என்னது.... பாலா கண்ணீர்விட்டாரா?

இந்த ஷாக்கிங் நியூஸ் கோடம்பாக்கத்தை ஸ்தம்பிக்க வைத்துள்ளது.
 
பாலா படத்தில் நடிப்பவர்கள் எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்கள். அப்படியொரு உருக்கு இதயம் இல்லையென்றால் சமாளிப்பது கஷ்டம். நான் கடவுள் படத்தின் நாயகி கண் தெரியாத பிச்சைக்காரி என்பதால், பூஜாவுக்கு முன்பு அந்த கதாபாத்திரத்துக்கு தேர்வான தூத்துக்குடி கார்த்திகாவை பிச்சைக்காரி வேஷம் போட்டு நிஜமாகவே பிச்சை எடுக்க வைத்தார் பாலா. இது படப்பிடிப்புக்கு முன் நடத்தப்பட்ட வெள்ளோட்டம்.
ரிகர்சலே இப்படியென்றால், நிஜமாக படப்பிடிப்பு நடக்கையில் கண்களை தோண்டிவிடுவார்களோ என்ற பயத்தில் மயக்கம் போட்டு விழுந்தவர், பாலா படத்திலிருந்து மட்டுமில்லை, திரையுலகிலிருந்தே ஓட்டம் பிடித்தார். அவருக்கும் இருக்காதா உயிர் ஆசை.
 
தாரை தப்பட்டையில் வரலட்சுமிக்கு பாலியல் தொழிலாளி வேடம் என்கிறது தாரை தப்பட்டை வட்டாரம். இதில் வரலட்சுமியின் நடிப்பைப் பார்த்து கண் கலங்கிய பாலா, அவருக்கு கைக்கடிகாரம், தங்க சங்கிலி ஆகியவை பரிசளித்ததாக தகவல். பரிசு முக்கியமில்லை. அப்படி என்ன காட்சியில் வரலட்சுமி நடித்தார்?
 
வில்லன்கள் வரலட்சுமியை சித்திரவதை செய்யும் காட்சியாம் அது. சாதாரண காட்சிக்கே நடிகர்களை நையப்புடைக்கும் பாலா இந்த பலாத்கார காட்சியை எப்படி எடுத்திருப்பார் என்பதை நினைக்கையில் குலை நடுங்குகிறது. இந்த காட்சியில் நடித்த போது வரலட்சுமியின் தோள்பட்டை எலும்பு விலகியதாம். இதற்கு மேல் என்ன சொல்ல.
 
பாலா எதற்கும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வரலட்சுமி ஆர்யா, சூர்யா மாதிரியில்லை. கரளை கரளையான மசில் கொண்ட சரத்குமார் என்ற அப்பா அவருக்கு இருக்கிறார்.

என்னை அழகாக மாற்றியவர் ஐஸ்வர்யா - மனைவியை புகழும் தனுஷ்

திருஷ்டி பரிகாரம் மாதிரி, வருடா வருடம் தனுஷ் - ஐஸ்வர்யாவுக்கு இடையே கருத்து வேறுபாடு என்று சர்ச்சை கிளம்பும். தனுஷும், எனக்கும் என் மனைவிக்கும் எந்தப் பிரச்சனையுமில்லை என, மனைவியின் அருமை பெருமைகளை பட்டியலிடுவார். இந்த வருடமும் கதை தொடர்கிறது.
தனுஷ் - ஐஸ்வர்யா கருத்துவேறுபாடு என்ற ஊடகங்களின் வதந்தியைத் தொடர்ந்து மனைவியின் தாராள குணத்தை தனுஷ் எடுத்துரைத்தார்.
 
"என்னை அழகாக மாற்றியவர் ஐஸ்வர்யா. அது மட்டுமின்றி வீட்டில் என் குடும்பத்தினரையும் நன்றாக கவனித்து கொள்கிறார். 
 
ஐஸ்வர்யா, எனது குழந்தைகள், சகோதரர், தந்தை உள்ளிட்டோருடன் சேர்ந்து வாழ்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. பிசியாக நடித்து விட்டு வீட்டுக்கு வரும்போது அமைதியும், சந்தோஷமும் கிடைக்கிறது. தொழில்ரீதியாக என்னால் அடிக்கடி வீட்டில் இருக்க முடியாது. அப்போது ஐஸ்வர்யா குடும்பத்தை கவனித்துக் கொள்கிறார். என் குழந்தைகள் மற்றும் குடும்பத்தில் உள்ளவர்களை பார்த்துக் கொள்கிறார். இதைவிட நான் என்ன எதிர்பார்க்க முடியும். 
 
ஐஸ்வர்யா துணிச்சலான பெண். அதோடு அழகான நல்ல தாயாகவும் இருக்கிறார். என் தாயிடமும் பாராட்டு பெற்றுள்ளார். எனது மூத்த மகனுக்கு எட்டு வயது. இளைய மகனுக்கு ஆறு வயது ஆகிறது. அவர்கள் என்னை மாதிரி இருக்கிறார்கள். 
 
நான் நடித்த சந்தோஷமான படங்களை அவர்களை பார்க்க வைப்பேன். சோகமாக முடியும் படங்களை காட்டுவது இல்லை. நான் பெருமைபடும்படி எதிர்காலத்தில் அவர்கள் வாழ்க்கை அமையும்."
 
வதந்தி கிளப்புகிறவர்கள், தனுஷின் இதுபோன்ற விளக்கங்களை கேட்காமலிருப்பதற்காவது வதந்தி கிளப்புவதை தயவு செய்து நிறுத்த வேண்டும்.