Thursday 17 May 2018

``தன் இறுதிக்காலத்தை முன்பே உணர்ந்த சித்தர் பாலகுமாரன்" - நெகிழும் எழுத்தாளர்கள்!

ழுத்து சித்தர் பாலகுமாரன் காலமாகிவிட்டார். இது அவரது வாசகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. தனது எழுத்தின்மூலம் ஆயிரக்கணக்கான இதயங்களைக் கொள்ளையடித்தவர்.  வாழ்க்கையை அணுகுவதில் பலருக்கு முன்மாதிரியாக இருந்தவர். 


``இலக்கியத்தில் தொடர்ச்சியாக 40 ஆண்டுகள் இயங்கியவர் பாலகுமாரன். பொதுவாக ஒரு 10 ஆண்டுகள்தான் ஒரு எழுத்தாளர் தீவிரமாக எழுதுவார். அடுத்த பத்து ஆண்டுகளில் அந்த வீச்சு குறைந்துபோய்விடும். அவர்களுடைய வாசகப் பரப்பே இடம் மாறிப்போய்விடும். இந்தச் சமூக வாழ்க்கையில் அதே முனைப்போடு ஒருவர் தொடர்ந்து இயங்குவது மிக மிகக் கடினம். ஆனால், பாலகுமாரனுடைய வீச்சு நாற்பது ஆண்டுகாலம் தொடர்ச்சியாக இருந்தது. அவருடைய முதல் படைப்பான ‘மௌனமே காதலாக’,  தொடங்கி, கடைசியாக அவர் எழுதிய பத்திகள் வரைக்கும் எழுத்தின் மீதும் சமூகப் பரப்பின்மீதும் செலுத்திய ஆதிக்கம் குறையவேயில்லை. அதுதான் பாலகுமாரனின் மிகச் சிறந்த ஆளுமையாக நினைக்கிறேன். இனியொரு நாற்பது ஆண்டுகள் இப்படியொரு எழுத்தாளர் நம் சமூகத்துக்கு கிடைப்பாரா? என்பது தெரியவில்லை. 
1970-ம் ஆண்டுகளிலேயே எழுதத் தொடங்கியவர் பாலகுமாரன். அந்தத் தருணத்தில் தீவிர இலக்கியத் தன்மையோடு 'கணையாழி' இதழ் வந்து கொண்டிருந்தது. அதில் எழுதுபவர்கள் ஆற்றல்மிக்கவர்களாக இருந்தார்கள். அந்தப் பத்திரிகை சார்பில் மாதந்தோறும் இலக்கியக் கூட்டங்கள் நடக்கும். அப்போது இளைஞர்களாக இருந்த பாலகுமாரன், சுப்பிரமண்ய ராஜு போன்றவர்கள் அந்தக் கூட்டங்களில் பங்கேற்று, அதன் வழியாக எழுத்துலகில் நுழைந்தார்கள். இதையெல்லாம் பாலகுமாரனே தன்னுடைய படைப்புகளில் குறிப்பிட்டுள்ளார். அதையெல்லாம் வாசித்துதான் என்னைப் போன்ற பலர் 1990-களில் இலக்கியத்துக்கு வந்தார்கள். கணையாழியின் வழியே, மறைந்த கவிஞர் ஞானக்கூத்தனால் வளர்த்தெடுக்கப்பட்டவர் பாலகுமாரன். 'அடுத்தது என்ன?' என்ற கேள்வி தோன்றியபிறகுதான் அவர் வெகுசன பத்திரிகைகளில் சிறுகதைகள் எழுதத் தொடங்கினார். ‘ஆனந்த விகடன்’ போன்ற இதழ்களில் வெளியாகும் அவரது படைப்புகள் வாசகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டன. 
சமூக இறுக்கங்களை உடைத்தெறிந்த எழுத்து பாலகுமாரனுடையது. பெண்ணியம் சார்ந்து, அவர்களுடைய வெளிப்பாடுகள் சார்ந்து நிறைய எழுதினார். அது தன்னியல்பாகவே அவருடைய எழுத்தில் வெளிப்பட்டது. பெண்களுக்கான விடுதலை உணர்ச்சியை அப்போதே விதைத்தார் பாலகுமாரன். 

இப்போதெல்லாம் காதல், இயல்பான ஒரு சமூக விஷயமாகப் பார்க்கப்படுகிறது. அன்றைய காலகட்டத்தில் காதல் என்பது கெட்டவார்த்தையாக, சமூகக்கோளாறாக, நோய்மையாகக் கருதப்பட்டது. காதலிப்பவர்களை வீட்டை விட்டு ஒதுக்கி வைக்கும் சம்பவங்கள் எல்லாம் நடந்தேறின.  அதுகுறித்த பல மனத்தடைகளை தன் எழுத்தின் மூலம் உடைத்தெறிந்து, சமூகத்துக்குப் புத்துணர்ச்சி அளித்தவர் பாலகுமாரன். 
மறைந்த பிரபல இயக்குநர் பாலசந்தரிடம், ‘புன்னகை மன்னன்’, ‘சிந்து பைரவி’ போன்ற படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். ஒரு படத்தின் திரைமொழி என்பது சொற்கள் தான். ஒரு படத்தில் பாலகுமாரன் வசனம் எழுதினால், அந்தப் படமே அவருடைய பாணிக்கு மாறிவிடும். இயக்குநரின் பாணியில் இருக்காது. ‘குணா’, ‘ஜென்டில்மேன்’, ‘காதலன்’, ‘ஜீன்ஸ்’, ‘மன்மதன்’, ‘உல்லாசம்’ போன்ற படங்களில் அதை நீங்கள் கவனிக்கலாம். பாட்ஷாவில் “நான் ஒரு தடவை சொன்னா.. நூறு தடவை சொன்ன மாதிரி..”, காதலனில் “சந்தோஷமோ.. துக்கமோ.. பத்து நிமிஷம் தள்ளிப்போடு.. நிதானத்துக்கு வருவ..” என அவர் எழுதிய எல்லா வசனங்களிலும் ஒரு தனித்தன்மை இருக்கும். காதலர்களுக்கு இடையே நடக்கும் உரையாடல்கள், அவரின் நாவலில் வருகிற பாத்திரங்கள் பேசுவது போலவே இருக்கும். திரைமொழியை தன்னுடைய கட்டுக்குள் கொண்டு வந்த எழுத்தாளர் என்றால் அது பாலகுமாரன்தான். 
தமிழின் தொடர்ச்சியான ஒருபெருங்கன்னி அறுந்துவிட்டது. அது பேரிழப்பு தான். அவர் இன்னும் பத்து ஆண்டுகாலம் வாழ்ந்திருக்கலாம். தமிழுக்கு இன்னும் நிறையப் படைப்புகள் கிடைத்திருக்கும்” என்று நெகிழ்ச்சியாக பேசுகிறார் மகுடேசுவரன் 


பாலகுமாரனுக்கும் தனக்குமான நட்பு பற்றி பேசுகிறார் எழுத்தாளர் சாருநிவேதிதா..
``யோகியைச் சந்தித்ததில் இருந்தே பாலகுமாரனின் பாதை வேறு மாதிரி ஆகிவிட்டது. வாசகர்களும் இதை ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைக்கிறேன். அவருடைய,  'இதுபோதும்' என்ற நூலை எனக்கு வாசிக்கக் கொடுத்தார். 'இந்த நூலைக் கண்டிப்பாக வாசித்தே ஆகணும்'னு என்னிடம் கேட்டுக்கொண்டார். யோகியிடம் கற்றுக்கொண்ட விஷயங்களை அந்தப் புத்தகத்தில் சாரமாகக் கொடுத்திருப்பார். அவர் எழுதியதில் முக்கியமான புத்தகம் அது. 
தன்னுடைய இறுதிக்காலத்தை முன்கூட்டியே உணர்ந்த சித்தர் அவர். போன வருடம் முகநூலில் தன்னுடைய இறப்பு குறித்து, ஒரு ஸ்டேட்டஸ் போட்டிருந்தார். எல்லா மனிதனையும் சமமாகப் பாவித்தவர். பெண்கள், பாலகுமாரனிடம் பழகும்போது, கிடைக்கிற சுதந்திரத்தை, வேறு யாரிடமும் உணரமுடியாது. நிபந்தனையற்ற அன்பு கொண்டவர். அன்பின் சொரூபம் அவர். அதனால்தான் பெண்களுக்கு அவரை அதிகம் பிடித்திருந்தது.

சினிமாவில் வித்தியாசமான படங்களுக்கு அவர் வசனம் எழுதியிருக்கிறார். ‘நாயகன்’, ‘பாட்ஷா’வை எல்லோருக்கும் தெரியும். ‘புதுப்பேட்டை’ போன்ற ஹார்ட் பிரேக்கிங் படத்துக்கும் அவர் எழுதியுள்ளார். அவருடைய இடத்தில் இருந்து,  தரைமட்டமான ஒரு இடத்துக்கு எழுதியிருப்பது ஆச்சர்யமான விஷயம். வசனத்தில் இளங்கோவன், கருணாநிதிக்கு இணையாக எழுதியவர் பாலகுமாரன். 

சினிமாவில் வசனத்தை மிகுந்த உயரத்துக்குக் கொண்டுபோனதில் அவரின் பங்கும் அளப்பரியது. இலக்கியத்தில் எதிர்காலம் குறித்து எழுதியவர் சுஜாதா. இலக்கியத்தை வரலாறு நோக்கி நகர்த்தியவர் பாலகுமாரன். அவரைப்போல அன்பான மனிதனைப் பார்ப்பது கஷ்டம்!” என்று, கண்ணீர் தளும்ப பேசினார் எழுத்தாளர் சாரு நிவேதிதா
.

Sunday 13 May 2018

அஜித் குமார்: சில பதிவுகள்....

பிறந்தநாள் : 01 May 1971


வயது : 47






அஜித் குமார் தென்னிந்திய தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். அமர்க்களம் திரைப்படத்தில் நடிக்கும் போது நடிகை ஷாலினியைக் காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனோஸ்கா என்ற பெண் குழந்தை உள்ளது. அஜித் குமாரின் ரசிகர்கள் அவரை "அல்டிமேட் ஸ்டார்" என்றும் "தல" என்றும் பட்டப்பெயர்களுடன் அழைக்கிறார்கள். அஜித் குமார், கார் பந்தய வீரராகவும் அறியபடுகின்றார்.

 அஜித் குமார், இந்தியாவின் ஐதராபாத் நகரில் ஒரு தமிழ் தந்தைக்கும் ,ஒரு சிந்தி தாயிற்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தார். இவர் திரைப்படங்களில் நடிப்பதன் மூலமே தமிழ் பேச கற்றுக்கொண்டார். 1986 இல் உயர்தர கல்வியைப் பூர்த்தி செய்யாமலே கல்வியை இடைநிறுத்தினார். தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகும் முன்னர், 1992 இல் பிரேம புஸ்தகம் என்ற தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமானார்.

இதன் பின்னர் தான் அமராவதி என்ற தமிழ்த் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதல் படம் வெற்றி இல்லை. அடுத்த ஆண்டில் பாசமலர்கள், பவித்ரா, ராஜாவின் பார்வையிலே ஆகிய திரைப்படங்களில் நடித்தார். இதில் பவித்ரா திரைப்படம் இவருக்குக் குறிப்பிடத்தக்க திரைப்படமாக அமைந்தது.

அஜித் குமாரின் முதல் வெற்றித் திரைப்படம் ஆசை திரைப்படமாகும். இடையில் மோட்டார் பந்தயம் ஒன்றில் போட்டியிட்டுப் படுகாயமடைந்தார். இதனால் நடிப்பில் தடை ஏற்பட்டது. அதன் பின்னர் சரணின் காதல் மன்னன் எனும் திரைப்படத்தில் நடித்தார்.

இவர் பல நல்ல காரியங்களுக்கு உதவிகள் செய்துள்ள இவர், 2014ஆம் ஆண்டு தனது வீட்டில் வேலை செய்பவர்கள் 12 பேருக்கு வீடுகள் கட்டிக்கொடுத்து உதவி செய்துள்ளார். 

பாதுகாப்பான பயணத்தை வலியுறுத்தி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் 2013 ஆகஸ்டு 18 அன்று சென்னை முதல் பெங்களூர் வரையிலான இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றார்.


2014-ம் ஆண்டு புனே முதல்  சென்னை வரையிலான இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றார்.