Sunday 12 July 2015

பாகுபலி சொல்லும் செய்திகள்!

பாகுபலி படத்தை பார்த்தபிறகு அப்படம் சினிமாவில் பலருக்கும் நிறைய பாடங்களைக் கற்றுக் கொடுத்துள்ளது. நிறைய செய்திகளைச் சொல்லியுள்ளது. தான் சாதாரண ஆள் ஷங்கர் அளவுக்கு இல்லை என்று ராஜமௌலி கூறினாலும்,.பிரமாண்டம் என்றால் அது ஷங்கரால் மட்டுமே முடியும் என்கிற நம்பிக்கையை பாகுபலி தகர்த்துள்ளது என்றே கூறவேண்டும், பாகுபலியின் நிலவரம் பற்றி ஷங்கர் விசாரித்து வருகிறாராம், அவரது விசாரிப்பில் அவரது பதற்றம் புரிகிறதாம்.தென்னிந்திய மொழிகளில் 250 கோடி பட்ஜெட்டில் படம் என்கிற வரலாற்றைப் பாகுபலி சாத்தியமாக்கியுள்ளது.



பாகுபலி ஒரு தெலுங்கு டப்பிங் படம் என்று ஒரு கருத்து பேசப்பட்டாலும் சிலரால் பரப்பப்பட்டாலும் உழைப்பில், உருவாக்கத்தில் தெலுங்கு உழைப்பு என்ன, தமிழ் உழைப்பு என்ன இயக்குநரின் கடின உழைப்பை மதிக்க வேண்டும் என்று பார்வையாளர்களை எண்ண வைத்துள்ளது.

பாகுபலி ஒரு இயக்குநரின் படமாகவே அறியப்படுகிறது,பேசப்படுகிறது, இதில் பணியாற்றியுள்ள நவீன தொழில் நுட்பக்கலைஞர்கள் பெரும்பாலும் நம்நாட்டின் உள்ளூர் கலைஞர்கள்தான்.

ராஜமௌலி நட்சத்திரங்களை உயர்த்திப் பிடிக்கும் இயக்குநர் ரகமல்ல என்பது அவர் டைட்டில் கார்டு போடும்போதே தெரிகிறது.படம் ஆரம்பிக்கும் முன் தொழில் நுட்பக்கலைஞர்களின் பெயர்களைத்தான் முதலில் போடுகிறார், படம் முடிந்தபின்தான் நடிகர்களின் பெயர்களைப் போட்டுள்ளார். இதிலிருந்து ராஜமௌலி பின்னணியில் முகம் காட்டாது இயங்கும் உழைக்கும் கலைஞர்களை மதிப்பவர் என்பது புரிகிறது. இது நட்சத்திர நிழலில் குளிர்காயும் நம் இயக்குநர்களுக்கு வராத தெளிவு, துணிவு,

இதுவரை பிரமாண்டத்துக்கு என்றால் ஷங்கரையே அடையாளம் காட்டினார்கள், இனி அப்படிக்காட்ட முடியாது - ராஜமௌலி வந்துவிட்டார். வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு அல்லவா? இதை ஒப்புக்கொள்ளத்தானே வேண்டும்?

தமிழோடு விளையாடும் கமல்ஹாசன்...!

தங்கள் அபிமான ஹீரோக்கள் நடித்து ஒரு படம் வெளிவந்து விட்டால் போதும், அவருடைய ரசிகர்கள் தங்களது மனம் கவர்ந்த ஹீரோக்களைப் பற்றி புதிது புதிதாக பல விஷயங்களை சமூக வலைத்தளங்களில் பரவவிடுகிறார்கள். அப்படிப் பார்க்கும் போதுதான் அந்த ஹீரோக்கள் செய்த சில பல நல்ல விஷயங்களும் மற்றவர்களுக்கும் தெரிய வருகிறது. அந்த அளவிற்கு தங்களது ஹீரோக்களின் திறமைகளை அவர்களது ரசிகர்கள் கூர்ந்து கவனித்துப் பார்த்து வருகிறார்கள். ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய் ஆகியோருடைய தீவிர ரசிகர்களில் பலரை இப்படிக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.



கமல்ஹாசன் நடித்துள்ள 'பாபநாசம்' படம் வெளிவந்த சில நாட்களுக்குள்ளேயே இப்படி ஒரு சாதனை விஷயத்தை கமல்ஹாசன் ரசிகர்கள் பரவவிட்டுள்ளார்கள். கமல்ஹசான் 'பாபநாசம்' படத்தில் நெல்லைத் தமிழ் பேசி நடித்துள்ளார். அவர் பேசி நடிக்கும் அந்த நெல்லைத் தமிழ் அவருடைய உச்சரிப்பாலும் இனிமையாகவே உள்ளது. அந்த அளவிற்குப் பொருத்தமாக நடித்திருக்கிறார் என்று நெல்லைக்காரர்களே கண்டிப்பாகச் சொல்வார்கள்.

இதேப்போல் கமல்ஹாசன் இதற்கு முன் பலவிதமான தமிழ் பேசி நடித்துள்ள கதாபாத்திரங்களைப் பற்றி அவருடைய ரசிகர்கள் பெருமையாகப் பகிர்ந்து வருகிறார்கள். உன்னைப் போல் ஒருவன் - பொதுவான தமிழ், விருமாண்டி - மதுரைத் தமிழ், தெனாலி - இலங்கைத் தமிழ், தசாவதாரம் - களியக்காவிளைத் தமிழ், சதிலீலாவதி - கோவைத் தமிழ், மகராசன் - சென்னைத் தமிழ், மைக்கேல் மதன காமராஜன் - பாலக்காட்டுத் தமிழ், என அவர் பேசி நடித்துள்ள தமிழ் எத்தனையோ உண்டு. இவற்றில் தசாவதாரம் - பல்ராம் நாயுடு பேசும் தெலுங்குத் தமிழையும் சேர்த்துக் கொள்ளலாம். இதிலிருந்தே கமல்ஹாசன் ஒரு வழக்கமான நடிகர் அல்ல வித்தியாசமான நடிகர் என்பதைப் புரிந்து கொள்ளலாம். வேறு எந்த ஹீரோவாவது தமிழிலேயே இந்த அளவிற்கு விளையாடியிருக்கிறார்களா ?

ராஜமௌலிக்குப் பாராட்டு, தவிக்கும் பாலிவுட் இயக்குனர்கள்

'பாகுபலி' படம் கதை ரீதியாக ரசிகர்களிடையே மிகப் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் உருவாக்கத்தில் இந்தியத் திரையுலகின் அனைத்து இயக்குனர்களிடத்திலும் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இம்மாதிரியான ஒரு படத்தை ஹாலிவுட்டில் உருவாக்க வேண்டுமென்றால் 'பாகுபலி'படத்திற்கு ஆன செலவை விட பல மடங்கு அதிகமாகும். ஆனால் 200 கோடி ரூபாய்க்குள் ஒரு சாதனையை ராஜமௌலி நிகழ்த்திக் காட்டியிருக்கிறார். இது அவரைப் போன்ற திறமையான இயக்குனர்களைப் பாராட்ட வைத்துள்ளது. தமிழ்த் திரையுலகின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் ஏற்கெனவே ராஜமௌலிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.




ஹிந்தித் திரையுலகின் முக்கியமான இயக்குனரான சேகர் கபூர் ராஜமௌலியை மிக அதிகமாகப் பாராட்டி ஹிந்தித் திரையுலகின் முன்னணி இயக்குனர்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டுள்ளார். சேகர் கபூர் இரண்டு நாட்களுக்கு முன் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், “வாழ்த்துக்கள் ராஜமௌலி, உங்கள் படத்திற்கு மிகப் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. லாஸ் ஏஞ்சல்சில் படம் பார்க்க ஆவலுடன் காத்துள்ளேன். தென்னிந்திய இயக்குனர்கள் வட இந்திய இயக்குனர்களை விட துணிவு மிக்கவர்கள். ராஜமௌலி போன்ற துணிவு மிக்க இயக்குனர்கள் மும்பையில் இல்லையே,” என்ற அவருடைய வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இது சில முன்னணி பாலிவுட் இயக்குனர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதாம். மேலும் கரண் ஜோஹர் இந்தப் படத்தை ஹிந்தியில் வெளியிட்டு ஒரு தென்னிந்திய இயக்குனருக்கு ஹிந்தித் திரையுலகிலும் ஒரு அடையாளத்தை ஏற்படுத்துவதை சிலர் விரும்பவில்லை என்றும் பாலிவுட்டிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. - 

கவுண்டமணிக்கு பாட்டு பாடிய பிரபல இசையமைப்பாளர்

கடந்த 90கள் மற்றும் 2000ஆம் ஆண்டுகளில் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி நடிக்காத படங்களே இல்லை என்று கூறும் அளவுக்கு தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். இடையில் சில வருடங்கள் திரையுலகில் இருந்து விலகியிருந்த கவுண்டமணி, தற்போது மீண்டும் ரீ எண்ட்ரி ஆகி, ஒருசில படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒரு படம் 'எனக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை' என்ற படம். இந்த படத்தில் கவுண்டமணி ஹீரோவாக நடிக்கின்றார்.




கோலி சோடா' படத்திற்கு இசையமைத்த எஸ்.என்.அருணகிரி இசையமைத்துள்ள இந்த படத்தை இயக்குனர் சுசீந்திரனிடம் உதவி இயக்குனராக இருந்த கணபதி பாலா இயக்கி வருகிறார்

சமீபத்தில் விஜய்-அட்லி படத்திற்காக ஒரு பாடலை பாடிய பிரபல இசையமைப்பாளர் தேவா, இந்த படத்தில் கவுண்டமணிக்காக ஒரு கானா பாடலை பாடியுள்ளாராம். இந்த பாடலுக்கு கவுண்டமணி சூப்பராக நடனமாடியதாகவும் கூறப்படுகிறது. இந்த வயதிலும் நடனம், சண்டைக்காட்சி என ஒரு ஹீரோவுக்குள்ள அனைத்து அம்சங்களுடன் ரீ எண்டிரி ஆகும் கவுண்டமணிக்கு இந்த படம் திருப்புமுனையை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

Thursday 2 July 2015

தனிமை எனக்கு இனிமை! - கோவை சரளா

பள்ளி மாணவியாக 9ம் வகுப்பு படிக்கும்போதே திரைப்படங்களில் பயணிக்க தொடங்கியவர், கிட்டத்தட்ட 30 வருடங்களாக தமிழ், தெலுங்கு சினிமாவில் தன் மண்ணுக்கேத்த பேச்சாலும், மனதைத் தொடும் நடிப்பாலும், 750 படங்களில் கோவை சரளா என்ற முத்திரையை படைத்து விட்டார். ரசிகர்களின் பாராட்டை பெற்றவர் கோவை சரளா, 'முந்தானை முடிச்சு, சதிலீலாவதி, கரகாட்டக்காரன்' என்ற இவரின் வெற்றி பட்டியல், 'கொம்பன், காஞ்சனா' என்று இன்றும் தொடர்கிறது. காமெடி குயினாக தமிழ் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கும், கோவை சரளாவிடம் பேசியதிலிருந்து...



* வெற்றி உங்களை தேடி வருகிறதா.? இல்லை வெற்றி படத்தை தேடிபோய் நீங்க நடிக்கிறீர்களா.?

நான் 30 வருடமாக சினிமாவில் இருக்கேன். ஹிட் படங்களில் மட்டும் தான் நான் இருந்திருக்கிறேன் என்று சொல்ல முடியாது. நிறைய ஓடாத படங்களும் இருக்கும். நான் எதையும் உள் காரணம் வைத்து பார்ப்பது இல்லை. என் வேலையை செய்கிறேன். இப்போது எனக்கு நேரம் கொஞ்சம் நல்லா இருக்கு, அதனால் நிறைய வெற்றிகள் அமையுது.

இன்றைய சினிமா எப்படி இருக்கு?

நிறைய மாறியிருக்கு. ஒரு படம் வெற்றி அடைந்து விட்டது என்ற தகவல் வந்தால், அந்த படத்தில் நடிக்காவிட்டாலும், நமக்கே சந்தோஷமாக இருக்கு. இப்போது, கொம்பன், 50வது நாள் போஸ்டர் பாக்குறோம்; இதெல்லாம் சந்தோஷத்தை தருது. வெற்றிகரமான 2வது நாள் என்று போஸ்டர் அடிக்கும் நிலையில், இந்த மாதிரியான வெற்றி ஆச்சரியத்தை தருது.

பயந்து அல்லது வியந்து நடித்த படங்கள் எதுவும் இருக்கா?

அப்படி சொல்லணும்ன்னா சதிலீலாவதி படம் பற்றி சொல்லலாம். கமல் சாருடன் நடிக்கும் இந்த படம் வெற்றி அடைந்தே ஆக வேண்டும் என்ற பயம், படம் முடிக்கிற வரை இருந்தது. அந்த படம் ஓடவில்லை என்றால், கமல் சாரை திட்டுவாங்க; காமெடி நடிகையை ஜோடி சேர்த்ததால் தான் படம் தோல்வி அடைந்தது என, எல்லாரும் சொல்லிடுவாங்களோ என்ற பயம் இருந்தது. சதிலீலாவதி வெற்றின்னு கேள்விப்பட்ட பின் தான், எனக்கு உயிரே வந்ததுன்னு சொல்வேன்.

லாங்வேஜ், பாடி - லாங்வேஜ் எது உங்களுக்கு பிளஸ்?

எனக்கு இரண்டுமே பிளஸ்ன்னு நினைக்கிறேன். இது இரண்டும் இருந்தால் தான், நாம சினிமாவில் நிற்க முடியும்; திரையில் நான் வரும்போது, உங்களை அறியாமல் சிரிப்பு வரணும். ஒருத்தரை சிரிக்க வைக்கிறது, அவ்ளோ ஈசியான விஷயம் இல்லை.

நடிகைகளுக்குள் அவ்வளவாக நட்பு இல்லையே?

அது உண்மை தான்; யார்கிட்டேயும் இப்போது நட்பு இல்லை. கேரவன் கலாசாரம் ஆகிடுச்சி. படப்பிடிப்பின் போது, மரத்தடி, திண்ணை, தெரு, தரையில் உட்கார்ந்து ஒருத்தருக்கொருத்தர் மனம் விட்டு பேசிக்கிற நிலை போயிடுச்சு. டெக்னாலஜி வளர வளர, எல்லாமே மாறிட்டு வருது. முதல்ல இருந்த சினிமா உலகம் இப்ப இல்லை; நடிகைகள் பலரும் மாறிட்டாங்க. பல ஆண்டுகளுக்கு அப்புறம் கிட்டத்தட்ட, 15, 20 ஆண்டுகள் கழித்து, இப்ப தான் நான் கல்பனாவை பார்க்கிறேன். நாங்க இப்போது, இட்லி படத்தில் நடிக்கிறோம். இப்படி எல்லாரும் ஒரு வகையில் பிசியா இருக்காங்க; ஹலோ சொல்லிக்க எல்லாம் நேரம் இல்லை.

உங்களுக்கு பின், காமெடியில் எந்த நடிகையும் பேர் எடுக்கவில்லையே ஏன்?

பெண்கள் காமெடியில் நீடிக்கிறது, ரொம்ப கஷ்டம்.உள்ளுக்குள் காமெடி உணர்வு இயல்பா இருக்க வேண்டும். ஆச்சி மனோரமா காலத்தில், அவங்களுக்காக எழுதிய எழுத்தாளர்கள் இருந்தாங்க. நான் வரும்போது, எந்த எழுத்தாளர்களும் இல்லை; பல குட்டிக்கரணம் போட்டு தான் வந்தேன். எனக்கே இந்த நிலைமை என்றால், எனக்கப்புறம் வரப்போறவங்க நிலைமை எப்படி இருக்கும்?

காமெடி நடிகர்களுக்கு உரிய அங்கீகாரமோ, தேசிய விருதோ கிடைப்பதில்லையே ஏன்?

இதை நினைத்தால் கொஞ்சம் வருத்தமாகத் தான் இருக்கு. காமெடி நடிகர்களுக்கு ஏன் விருது கொடுக்க மறுக்கின்றனர் என்பது புரியவில்லை. நான் மட்டும் பேசினால் போதாது; பலரும் பேச வேண்டும்.

தெலுங்கில் உங்களுக்கு நிறைய சுதந்திரம் கிடைக்குதா?

தெலுங்கில் ஒரு படத்தில், 50 காமெடி நடிகர்கள் கூட நடிக்கலாம்; எந்த பிரச்னையும்

வர்றதில்லை. தமிழில், இரண்டு காமெடி நடிகர்கள் சேர்ந்து நடிக்கச் சொல்லுங்கள் பார்க்கலாம்? அங்குள்ள ஒற்றுமை, இங்கே இல்லை. நமக்கு போட்டியாக, அந்த நடிகர் வந்து விடுவாரோ, இந்த நடிகர் வந்து விடுவாரோ என்ற பயம் தான் இதற்கு காரணம். இந்த பயமே தேவை இல்லை; நமக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பு, கண்டிப்பாக கிடைக்கும்.

சினிமா தவிர?

சினிமாவை தவிர, வேற எதுவும் எனக்கு தெரியாது; அப்படி வாய்ப்பும் வந்ததில்லை. எனக்கான வேலைகள் எல்லாத்தையும் நானே பார்த்துக்கிறேன். நான் எதுக்காகவும், எந்த காரணத்துக்காகவும் யாரையும் நம்பி வாழ முடியாது; வாழ மாட்டேன். ஒருத்தரை நம்பி வாழ ஆரம்பித்தால், எந்த ஒரு சின்ன விஷயமா இருந்தாலும் கூட, அய்யோ, அவங்க இல்லையே என்ற வருத்தம் வர ஆரம்பிச்சிடும். அதனால், எப்பவும், நான் நானாகவே இருப்பேன்.

தனிமை வாழ்க்கையில் ரொம்ப பழகிட்டீங்க போல?

தனிமை எனக்கு இனிமை தான். நிறைய பேர் தனிமையைவிரக்தி என்று சொல்லுவாங்க. ஆனால், அதை அனுபவித்து பார்க்கும்போது தான் தெரியும்; அதில்எவ்வளவு சுகம் உள்ளது என்று. எனக்கு, இந்த தனிமை ரொம்பவே பழகி போயிடுச்சு.
- See more at: http://cinema.dinamalar.com/cinema-news/32220/special-report/Single-is-very-happy-says-Kovai-Sarala.htm#sthash.yoEViXES.dpuf

தமிழ்த் திரையுலகில் கேரள வரவுகள்!

தமிழ்த் திரையுலக நடிகைகளில் மலையாள வரவுகளின் எண்ணிக்கை எப்போதும் கணிசமான அளவில் இருந்தே வந்திருக்கிறது .



சிந்து நதியின் மிசை நிலவினிலே சேர நன்னாட்டிளம் பெண்களுடனே சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைக்க பாரதி கண்ட கனவு திரையுலகின் மூலம்தான் நிறைவேறி வருகிறது. தமிழ்க் கதாநாயகர்கள் பல்வேறு காலக்கட்டங்களில் அவ்வப்போது சேர நன்னாட்டிளம் பெண்களுடனே டூயட் பாடியே வந்திருக்கிறார்கள் ; வளர்ந்திருக்கிறார்கள்.

இது பற்றிய ஒரு பின்னோக்கிய பார்வை பார்த்தோமானால், அந்தக் காலத்து வி.என்.ஜானகி, லலிதா,பத்மினி,ராகினி

எல்லாம் மலையாள வரவுகளே. இடைக் காலத்தை எடுத்துக் கொண்டால்,கே.ஆர்.விஜயா,, சுஜாதா போன்ற சிலரும் கேரள வரவுகளே.

ரஜினி, கமல் காலத்தை எடுத்துக் கொண்டால் மலையாள நாயகிகள் ராதா, அம்பிகா என்று கொடி கட்டிப் பறந்தனர். இவர்கள் இருவருமே அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்து வெற்றி நாயகிகளாக, வெற்றி நட்சத்திரங்களாக வலம் வந்தனர்.

ராதா, அம்பிகா சகோதரிகளில் இப்போதும் ராதாவின் மகள்கள் கார்த்திகாவும். துளசியும் நடித்து வருகின்றனர்.

கார்த்திகா கோ முதல் புறம்போக்கு வரை பல படங்களில் நடித்தார். துளசி மணிரத்னத்தின் கடல் முதல் நீர்ப்பறவை என்று நடித்தவர் மேலும் நடித்து வருகிறார்.,பிறகு பெரிய வரவேற்பைப் பெற்ற நதியா மும்பையில் பிறந்தவர் என்றாலும் இவரும் ஒரு மலையாள குடும்பத்தைச் சேர்ந்தவரே.

ஒருகாலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தது இந்த மலையாள நடிகைகள் வரவு. போகப்போக அதிகமாகி அதிகரிக்கத் தொடங்கி தற்காலத்தில் மலையாள நடிகைகள் ஆக்கிரமித்து வருகின்றனர்.மும்பை மோகம் மாறத்தொடங்கியுள்ளது ஒரு மாற்றமாகும்.கேரளத்து .நடிகைகளில் தமிழில் நிலைத்து நின்ற, நிலைத்து நிற்கும் சிலரைப் பார்ப்போம்.



லிசி

மலையாளத்தில் மோகன்லாலுடன் 19 படங்கள் மம்முட்டியுடன் 23 படங்கள் நடித்தவர் லிசி. தமிழில் கமலுடன் விக்ரம் படத்தில் நடித்தார். சில படங்களில் நடித்தவர் பிறகு மலையாளத்தில் மட்டுமே கவனம் செலுத்தினார். இயக்குநர் பிரியதர்ஷனை திருமணம் செய்து கொண்டார்.

சீமா

ஐ வி. சசியைத் திருமணம் செய்த சீமா மலையாளத்தில் பிரபலம் தமிழில் குணச்சித்திர வேடத்தில் வந்தார். இப்போது தமிழில் டிவி தொடர்களில் வருகிறார்.



ஊர்வசி

காலம் கடந்து நிற்பவர் ஊர்வசி, முந்தானை முடிச்சு படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர் நூற்றுக் கணக்கான படங்களில் நடித்தவர் அனைத்து முன்னணி நாயகர்களுடன் இணைந்தவர். ஒரு கட்டத்தில் கதாநாயகியிலிருந்து நகைச்சுவைக்கு மாறி இன்றும் நடிப்பில் கலகலப்பூட்டி வருகிறார்.

மீனா

மலையாள வரவுகளில் அம்பிகா, ராதாவுக்குப் நிலைத்து நின்றவர் மீனா.கன்னூர் மாவட்டம் இவரது பூர்வீகம்.. .தமிழ்நாடு அரசின் 4 விருதுகள்,மற்றும் ஆந்திரஅரசின் நந்திவிருதுகள் 2ம் பெற்றவர்.

இவர் தமிழில் ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், சரத் என பலருடன் இணைந்து நடித்தவர். மம்முட்டி மோகன்லால், வெங்கடேஷ், பாலகிருஷ்ணா, விஷ்ணுவர்தன் என்று தென்னிந்திய நாயகர்களுடன் வலம் வந்தவர். திருமணமான பின்னும் மோக

ன்லாலுடன் இவர் நடித்த த்ரிஷ்யம் படம் பெரிய வெற்றிவெற்றது இன்றும் மதிப்புள்ள நடிகையாக வலம் வருகிறார்.

அசின்

குடும்பப் பாங்கு தவிர்த்து சற்று கவர்ச்சியில் தாராளம் காட்டி அறிமுகமான அசின், தமிழில் கமலுடன் தசாவதாரம் பட வாய்ப்பு பெற்றதும் உயரே சென்றார்.

விஜய், அஜித்,சூர்யா,ஆர்யா, ஷாம் என்று என்று நடித்தவர் அதன் பிறகு இந்தியில் நுழைந்து அங்கும் ஓரிடத்தைப் பெற்றார். அதிகப் பணவரவு என்று இந்திக்குப் போன போது தமிழில் இடைவெளி விழவே இங்கு படங்கள் இல்லை. வெற்றிடத்தைக் காற்று நிரப்புவது போல வேறு நடிகைகள் அவர் இடத்தை நிரப்பிக் கொண்டார்கள்.



அபிராமி

திருவனந்தபுரத்துக்காரரான அபிராமி தான் ஒரு தமிழ்ப்பெண் என்று கூறுவார். குழந்தை நட்சத்திரமாக 7 படங்களில் நடித்துவிட்டு வளர்ந்ததும் நாயகியானவர். வானவில், மிடில் கிளாஸ் மாதவன், சமஸ்தானம், சார்லி சாப்ளின் என்று நடித்தவர், கமலுடன் விருமாண்டியில் நடித்ததும் பல படிகள் மேலேறினார். சமீபத்தில் வந்த 36 வயதினிலே படத்தில் கூட நடித்துள்ளார்.

ஷாலினி

பேபி ஷாலினியாக கலக்கிய இவர் பேபியாகவே 35 படங்கள் நடித்தவர். நாயகியாக முதல் படம் அனியத்தி பிராவு மலையாளப்படம் ..பிறகு விஜய்யுடன் காதலுக்கு மரியாதையில் நடித்தார் அமர்க்களம் படத்தில் அஜித்துடன் நடித்த போது அவரது காதலுக்கு மரியாதை செய்தார் மீண்டும் விஜய்யுடன் கண்ணுக்குள் நிலவு, மாதவனுடன் அலைபாயுதே, பிரசாந்துடன் பிரியாத வரம் வேண்டும என நடித்து அஜித்தை திருமணம் செய்து கொண்டு திரையுலகிற்கு விடைகொடுத்து விட்டார்.

கோபிகா

இந்த திருச்சூர்க்கார கோபிகா 4 த பீப்பிள் மூலம் பிரலமானார்.சேரனின் ஆட்டோகிராப் மூலம் தமிழுக்கு வந்தார் பிறகு கனா கண்டேன், பொன்னியின் செல்வன், தொட்டி ஜெயா, அரண், எம்டன் மகன் வெள்ளித்திரை என்று நடித்தவர் இரண்டாம் கட்ட நடிகர்களுடன் மட்டும் நடித்தவர் என்ற நிலையில் திருமணம் செய்து கொண்டு போய்விட்டார்.

அஞ்சு அரவிந்த்

பூவே உனக்காக படத்தில் விஜய்யுடன் நடித்தவர் மூக்கும் முழியுமாக வசீகரமான குடும்பப் பாங்கான முகம்தான். அதன்பின் அவர் ஏற்ற படங்கள் அவரை உயர்த்த வில்லை அருணாசலத்தில் ரஜினியின் தங்கையாக நடித்தார். ஆனாலும் எனக் கொரு மகன் பிறப்பான், ஒன்ஸ்மோர், சூர்ய வம்சம், குருப்பார்வை போன்ற படங்களில் நடித்தும் முக்கியத்துவம் பெறாததால் காணாமல் போனார்.

மோனிகா

குழந்தை நட்சத்திரமாக 15 படங்களில் நடித்த இவர் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருது வாங்கியுள்ளவர். குமரியானதும்அழகி படம் மூலம் குடும்பப் பாங்கான அடையாளம் பெற்றார்.பிறகு நடித்த சிலபடங்கள் பெரிதாக கை கொடுக்க வில்லை. இவர். இம்சைஅரசன் ,சிலந்தி போன்ற படங்களில் தரம் இறங்கினார். . இப்போது முஸ்லிமாக மாறித் திருமணம் செய்து கொண்டு விட்டார்.

பாவனா

திருச்சூர்காரரான பாவனா, மிஷ்கினின் சித்திரம் பேசுதடியில் தமிழுக்கு அறிமுகமானார். பிறகு கிழக்கு கடற்கரை சாலை, வெயில், தீபாவளி, கூடல் நகர், வாழ்த்துகள். என்று இரண்டாம் நிலை நடிகர்களுடன் நடித்தார். என்ன பிரச்சினையோ தெரியவில்லை.பிறகு மேலே வரமுடியவில்லை.

மீராஜாஸ்மின்

துறு துறு முகம் குடும்பப் பாங்கான தோற்றம் என்றிருக்கும் மீராஜாஸ்மின் தேசிய விருது, தமிழ்நாடு அரசு விருது, 3 பிலிம்பேர்விருதுகள், 4 ஆசியாநெட்விருதுகள் என பல விருதுகளை அள்ளியவர். ரன்னில் மாதவனுடன் அறிமுகமானார் விஜய்யுடன் புதிய கீதையிலும் அஜித்துடன் ஆஞ்சநேயாவிலும் நடித்தவர். விஷாலுடன் சண்டக் கோழி, தனுஷுடன் பரட்டை என்கிற அழகு சுந்தரம், பரத்துடன் நேபாளி, பிரசாந்துடன் மம்பட்டியான் என்று நடித்தவர். கவர்ச்சியாக நடிப்பவரல்ல தேர்ந்தெடுத்து நடிப்பவர் என்கிற பெயர் பெற்று தனக்கென ஓரிடம் பெற்றவர்.

ஜோதிர்மயி

தமிழில் இதயத்திருடன்அறிமுகம். முதல் படம் நடிக்கும் முன்பே மலையாளத்தில் 16 படங்கள் முடித்தவர். தலைநகரம், பெரியார், சபரி, நான் அவனில்லை, வெடிகுண்டு முருகேசன் போல கலந்துகட்டி நடித்தார். இவருக்கு பெரிய இடம் கிட்ட வில்லை.

மல்லிகா

ஆட்டோகிராபில் அறிமுகமாகி ஆட்டோகிராப் மல்லிகா என்றழைக்கப்பட்டவர். திருப்பாச்சியில் விஜய் தங்கையானார். திருப்பதியில் சுமாரானவேடம் தோட்டா, சென்னையில் ஒரு நாள் என சிறு சிறு பங்களிப்புகள் பியாரி மொழியில் படமொன்றில் நடித்து தேசியவிருது பெற்று விட்டவர், வணிகரீதியாக வளரவில்லை..

அமலாபால்

மைனா படம் மூலம் புகழ் பெற்ற இவர் தமிழ், தெலுங்கு கன்னடம் என்று 35 படங்களில் நடித்தவர். விஜய்யுடன் தலைவா வில் நடித்த போது படத்தில் கேமராவுக்கு முன் விஜய்யுடனும் பின் இயக்குநர் விஜய்யுடன் டூயட் பாடியவர் . நிஜ க்ளைமாக்ஸில்இயக்குநர் விஜய்யை திருமணம் செய்து கொண்டு விட்டார்.

அனன்யா

நாடோடிகள் மூலம் அறிமுகமான அனன்யா தமிழ், தெலுங்கு, மலையாளம் என 35 படங்கள் முடித்தாலும் சீடன், எங்கேயும் எப்போதும், புலிவால், அதிதி, இரவும் பகலும் என்று நடித்தாலும் மேலேவர போராடும் நிலையில்தான் இருக்கிறார்.

பூர்ணா

படங்களில் பூர்ணா என்கிற பெயரில் நடிக்கும் ஷாம்னா காசிம் கன்னூர்க்காரர். முனியாண்டி விலங்கியல் 3 ஆம் ஆண்டு கொடைக்கானல், துரோகி, ஆடுபுலி, வித்தகன், தகராறு என்று நடித்தவர்,ஜெயம்ரவியுடன் அப்பா டக்கர் நடிக்கும் வரை மிதமான வெற்றிகளால் போராடினார். இவர் கையில் உள்ள படம் படம் பேசும் வாய்ப்பு.

அனுமோல்

பாலக்காட்டுக்காரரன அனுமோல் ஒரு பொறியியல் பட்டதாரி. தேர்ந்தெடுத்து நடிப்பவர் கண்ணுக்குள்ளே, ராமர் சூரன் படங்களைத் தொடர்ந்து திலகரில் நடித்துள்ளார். பாத்திரம்அறிந்துமட்டுமே நடிப்பவர்.

நஸ்ரியா

குறுகிய காலத்தில் பரபரப்பாகி திடுதிப்பென திருமணம் செய்து கொண்டவர் நஸ்ரியா. இந்த நஸ்ரியாவுக்கு அந்தக்கால நதியா போல வியர்க்க வைக்கும் விசிறிகள் பெருகினர். நேரம் இவரது முதல்படம். பிறகு தனுஷுடன் நய்யாண்டி, ஆர்யாவுடன் ராஜா ராணி, ஜெய்யுடன் திருமணம் எனும் நிக்காஹ் என்று நடித்தவர் பரபரப்பானார். ஆனால் மதிப்பு மார்க்கெட் இருக்கும் போதே திருமணம் செய்து கொண்டுவிட்டார்.

ஓவியா

வாய்ப்புகளைத் தேடி அடைவது ஒருரகம். வருவதை ஏற்பது இன்ொரு ரகம் என்றால் ஒவியா இரண்டாவது ரகம். களவாணியில் அறிமுகம் ஆனார் பிறகு முத்துக்கு முத்தாக, மன்மதன் அம்பு, மெரினா, கலகலப்பு யாமிருக்க பயமே என்று நடித்தார்.சரத்துடன் நடித்த சண்டமாருதம். இவருக்கு 12 வது படம். .அந்த அளவுக்கு வருவதை ஏற்றுக் கொண்டு நடித்தார். இப்போது அகராதி, சீனி என நடிக்கிறார்.

நயன்தாரா

ஐயாவில் சரத்துடன் அறிமுகமானாலும் பிறகு நடித்த ரஜினி படம் சந்திரமுகி, சூர்யாவுடன் கஜினி, விஜய்யுடன் சிவகாசி என்று நடித்தார். முக்கியத்துவம் இல்லாத பாத்திரங்கள் என்றாலும் வெற்றிப்பட ராசி வந்தது. பிறகு விஜய்யுடன் வில்லு, அஜித்துடன் பில்லா,ஆரம்பம், தனுஷுடன் யாரடிநீ மோகினி ,சூர்யாவுடன் மாஸ் என்று விஸ்வருப மெடுத்தார். அவ்வப்போது கிசுகிசுக்களில் காதல் வளர்த்து பரபரப்பும் விளம்பரம் தேடிக் கொண்டு இன்று 3 கோடி சம்பளம் வரை போனவர். இப்போதும் ஜீவா, சிம்பு, கார்த்தி என்று இணைந்து வருபவர் இன்றும் தமிழில் கைநிறைய படங்களுடன் இருக்கிறார்.

லட்சுமி மேனன்

கும்கியில் அறிமுகமானார். பிறகு இவர் காட்டில் மழை விக்ரம்பிரபுவுடன் இவன் வேறமாதிரி விஷாலுடன் பாண்டியநாடு, கார்த்தியுடன் கொம்பன், சசிகுமாருடன் சுந்தரபாண்டியன் என நடித்தவர் வெற்றிப் படங்கள் மூலம்தன் மதிப்பைக் கூட்டிக் கொண்டார். இப்போது அஜித் படம் உள்பட பல படங்கள் இவர்கையில்

ஸ்ரீதிவ்யா வருத்தப்படாத வாலிபர் சங்க வெற்றிக்குப் பின் வெள்ளக்காரதுரை நடித்து இன்று வேகமாக வளர்ந்து வருபவர்.

மேனகாவின் மகளான கீர்த்தி சுரேஷ் ரஜினிமுருகன், இது எனன மாயம், பாம்பு சட்டை என தமிழிலும் தென்னக மொழிகளிலும் நடித்து நம்பிக்கை தருகிறார்.இப்படி நம்பிக்கை தரும் நல்வரவுகள் சிலருண்டு.



மலையாள நடிகைகளில் நல்ல எதிர்பார்ப்பு இருந்தும் சரியாக பயன்படுத்திக் கொண்டு வளராதவர் சித்தாரா.சில படங்களுடன் ஆளே காணவில்லை..

சபாஷ் கண்ணன் வருவான், வேதம், என்று நடித்த திவ்யா உன்னிக்கு பாளையத்து அம்மனில் பக்தி சொட்டச் சொட்ட நடித்தும் திருப்புமுனை அமையவில்லை சரியான வெற்றி கிடைக்காதவர்கள், வெற்றிக்குப் போராடிவர்கள் வரிசையில் மம்தா மோகன்தாஸ், தேசியவிருது, பத்ம விருது பெற்றும் தமிழில் காலூன்ற முடியாமல் தவிக்கும் வித்யாபாலன், ,குடும்பப் பாங்காக நடித்தும் உயரம் தொட முடியாத நவ்யாநாயர் இந்த வரிசையில் நிற்கும் சிந்து மேனன், ரேஷ்மிமேனன், பார்வதிநாயர் போன்றவர்களும் குறிப்பிடத்தக்கவர்கள்.

மிட்டாய், திருப்பூர், அறியாதவன் புரியாதவன் போன்ற படங்களில் நடித்த உன்னிமாயாவும் உயரவில்லை.

என்மன வானில், நம்நாடு, திண்டுக்கல் சாரதி, மகிழ்ச்சி, என்று நடித்த கார்த்திகாவால் மேலே வர முடியவில்லை.

சூரியன் சட்டக் கல்லூரி, காவலன், புத்தனின் சிரிப்பு என்று நடித்த மித்ரா குரியன் கையில் நந்தனம் என்கிற ஒரு படம்தான் உள்ளது.

மலையாளத்தில் 20 படங்கள் நடித்தாலும் மனதோடு மழைக்காலம் நாயகி நித்யாதாஸுக்கு தமிழில் நல்ல காலம் அமையவில்லை.

தனக்கென தனியான இடமில்லாமல் தவிக்கும் இனியா இன்னும் போராடுகிறார்.தேர்ந்தெடுத்து நடித்தும் மணிரத்னத்தின் ஒகே கண்மணியில் நடித்தும் வெற்றியை கொடுக்க முடியாத நித்யாமேனன்.இன்னொருவர்.

இப்படி காவ்யாமாதவன், ஹிமாநாயர் என்று பலரும் போராடி வருகிறார்கள்.

சினிமாவில் அழகு திறமை, வரவேற்பு என்பவை வெற்றியை வைத்தே தீர்மானிக்கப் படுகின்றன. வெற்றிக்குப் பின்தான் மற்றவை. எனவே நடிகைகளின் படவெற்றிகள் என்கிற அளவு கோலின்படியே அவரவர்களுக்கான இடம் அமைகிறது. ஓரிடத்திலிருந்து போராடி மேலே வர முயற்சிகள் நடக்கின்றன. எப்படியாயினும் மலையாள வரவுகள். வந்து கொண்டேதான் இருக்கிறார்கள்..

இடையிடையே மும்பை வரவுகளின் படையெடுப்புகள் இருந்தாலும் அவர்களில் குஷ்பூ ,சிம்ரன்,ஜோதிகா போல சிலர் நிலைத்து நின்றாலும் மலையாள முகங்களுக்கான ஆதரவும் வரவேற்பும் இருந்துதான் வந்திருக்கிறது.இன்று தமிழ் நடிகைகளுக்கான வெவ்வேறு வகையான போட்டி அடுக்குகளில் மலையாள வரவுகள் களத்தில் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

மும்பை முகங்களை பளபள நிறத்துக்காக கவர்ச்சிக்காக ரசிக்கலாம் ஆனால் அவர்களை ரசிகர்கள் தம்மில் ஒருவராக நினைக்கத் தயங்குகிறார்கள். என்பதே உண்மை.




வசீகரமான நிறம், நமக்கு நெருக்கமான முகம், உடல் தோற்றம் இருப்பதால் மலையாள நடிகைகளை தமிழ் பாத்திரங்களில் அமர வைப்பது எளிது ஆகிறது. ஆயிரம் இருந்தாலும் மலையாள மரபில் இருப்பது தென்னக,திராவிட வேரல்லவா?

எனவே அவர்களது தோற்றம் காலமாற்றத்தால் இன்று பரவலாக ஏற்றுக் கொள்ளப் படுகிறது. என்பதை இதன் பின்னுள்ள உளவியல் உண்மையாகக் கூறுகிறார்கள்.