Thursday 21 May 2015

டி.ராஜேந்தர் மீது அடுக்கடுக்காகப் புகார் சொல்லும் பாண்டிராஜ் தரப்பு.

இதுநம்மஆளு படத்தை முடித்துக்கொடுக்கவேண்டும் என்று இயக்குநர் பாண்டிராஜ் மீது டி.ராஜேந்தர் புகார் செய்ததாகச் செய்திகள் வந்தன. ஆனால் பாண்டிராஜோ அவர்கள் படமெடுக்கப்பாடலையும் படப்பிடிப்பு நடத்த பணத்தையும் கொடுத்தால் உடனே படத்தை முடித்துத் தரத்தயார் என்று சொல்லியிருக்கிறார்.



உண்மையில் என்னதான் நடக்கிறது? என்று பார்த்தால், தயாரிப்பாளரான டி.ராஜேந்தர் மீது அடுக்கடுக்கான புகார்கள் சொல்லப்படுகின்றன. இந்தப்படத்தை முதல்பிரதி அடிப்படையில் தயாரித்துத் தர ஒப்புக்கொண்டு படத்தைத் தொடங்கியிருக்கிறார் பாண்டிராஜ். அப்போதே தமிழில் எடுக்கும் போது தெலுங்கிலும் எடுக்கலாம் என்று சிம்புவும் பாண்டிராஜூம் முடிவு செய்திருக்கிறார்கள். இதனால் தமிழுக்கு மட்டுமின்றி தெலுங்குக்கென்று தனியாகப் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார் பாண்டிராஜ், அதற்குத் தனியாகப் பணம் எதுவும் தரவில்லையென்பதால் அதில் பாண்டிராஜூக்குப் பல இலட்சங்கள் அதிகப்படியான செலவு ஏற்பட்டிருக்கிறதாம். அந்தப்பணத்தைப் பற்றிக்கூடக் கவலைப்படாமல் படப்பிடிப்புக்குப் பணம் கேட்டால் அதற்கும் பணம் தராமல் இழுத்தடிக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

இந்தப்படத்தில் மொத்தம் ஆறுபாடல்களாம். அவற்றில் மூன்றுபாடல்களை மட்டுமே குறளரசன் போட்டுக்கொடுத்திருக்கிறார். இன்னும் மூன்றுபாடல்கள் கொடுக்கவே இல்லையாம். அதைக் கொடுத்தால் தான் படப்பிடிப்பு நடத்தமுடியும் என்று இயக்குநர் தரப்பில் சொல்லப்படுகிறது.

2014 மே 27 அன்று இந்தப்படத்தின் டப்பிங் தொடங்கியது என்று பசங்கபுரொடக்ஷனஸ் டிவிட்டரில் இருக்கிறது. நயன்தாரா டப்பிங் பேசிக்கொண்டிருப்பது போலப்படமும் இருக்கிறது. அப்போது தொடங்கிய டப்பிங்கில் படத்தில் நடித்த எல்லோரும் பேசிவிட்டார்களாம். இன்னும் சிம்பு மட்டும் பேசவில்லை என்று சொல்லப்படுகிறது. சிம்புவுக்காகப் படமுறை டப்பிங் தியேட்டரை ஒப்பந்தம் செய்து வைத்துக் காத்திருப்பார்களாம் அவர் வரமாட்டாராம். அதனால் வெட்டியாகப் பணம் கொடுத்துவிட்டு வருவார்களாம். இப்படிப் பலமுறை நடந்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு இருக்கிறதென்று சொல்லி நயன்தாராவிடம் தேதி வாங்குவார்களாம். டி.ராஜேந்தர் பணம் தராததால் படப்பிடிப்பு நடத்தமுடியாது என்பதால் அவரிடம் வாங்கிய தேதிகள் வீணாகுமாம். இப்படி ஐந்துமுறை நடந்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.

டி.ராஜேந்தர் இப்போது எல்லாவற்றிற்கும் சோதிடம் பார்க்கத் தொடங்கிவிட்டார் என்றும் அதன் காரணமாகவே இந்தநாளில் படப்பிடிப்பு நடத்தினால் ஆகாது என்பதால் பணம் தாராமல் விட்டுவிடுவார் என்றும் சொல்லப்படுகிறது.

பாண்டிராஜ் ஒரு படத்தைத் தொடங்கினால் ஐந்து அல்லது ஆறு மாதங்களுக்குள் முடித்துவிடுவார் என்பதுதான் அவருடைய முந்தைய படங்களில் நடந்திருக்கிறது. இதுநம்மஆளு படம்தான் அவருக்கு மிகவும் தாமதமான படமென்றும் சொல்கிறார்கள். இந்தப்படத்தைத் தொடங்கிப் பல மாதங்கள் கழித்துத் தொடங்கப்பட்ட ஹைகூ படத்தின் படப்பிடிப்பையே அவர் முடித்துவிட்டார். அதற்கடுத்து அவர் விஷால் நடிக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கப்போகிறார் என்றவுடன்தான் இந்தப்படத்தை முடித்துக்கொடுக்கவேண்டும் என்று டி.ராஜேந்தர் வந்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

எல்லாத் தவறுகளையும் தங்கள் பக்கம் வைத்துக்கொண்டு டி.ராஜேந்தர் எப்படி எங்கள் மீது புகார் தரமுடியும் என்று பாண்டிராஜ் தரப்பில் கேட்கப்படுகிறது. படத்தைப் பற்றி மிகநல்லவிதமான கருத்து திரையுலகில் இருக்கிறது. எனவே படம் தயாராகி வெளியே வந்தால் பாண்டிராஜ் மற்றும் சிம்பு ஆகிய இருவருக்குமே மிகநல்லபெயர் கிடைக்கும் என்றும் சொல்கிறார்கள்.

No comments:

Post a Comment