Sunday 24 June 2018

அது ஏன் "மே மே"ன்னு கண்ணதாசன் எழுதினார்னு தெரியுமா..?

'அன்பு நடமாடும் கலை கூடமே ஆசை மழை மேகமே.. என்ற பாடல் வாட்ஸ்அப்பில் தற்போது வைரலாக வருகிறது. இந்த பாடல் 1975-ம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன், மஞ்சுளா நடித்து வெளிவந்த 'அவன்தான் மனிதன்' என்ற படத்தில் இடம் பெறுவது.


இந்த பாடலின் அத்தனை அடிகளுமே "மே" என்றுதான் முடியும்...! கவியரசு கண்ணதாசனின் பாடல் வரிகளுக்கு உயிர்கொடுத்து உலவ விட்டிருப்பார் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன்.
இப்பாடலை இவ்வளவு காலம் இல்லாமல் மே மாத சிறப்பு பாடலாக வாட்ஸ் அப் வாசிகள் புகழ் பாடி வருகின்றனர். என்றாலும் "மே" என முடியும் வகையில் இந்த பாடலை கண்ணதாசன் ஏன் எழுதினார் என கேட்கும் ஆவல் ஏற்பட்டது.

அதற்கு கவியரசர் கண்ணதாசனின் மகனும், கண்ணதாசன் பதிப்பகத்தின் நிறுவனருமான காந்தி கண்ணதாசன் இவ்வாறு கூறுகிறார்: "இதற்கு முன்பு இந்த பாடலை மையப்படுத்தி சில கட்டுக்கதைகளையெல்லாம் பலமுறை அவிழ்த்துவிட்டிருக்கிறார்கள். அவை எதுவுமே உண்மை கிடையாது. கவியரசர் தன் மனதில் அந்த சமயத்தில் என்ன நினைப்பாரோ, அந்த நேரத்தில் என்ன தோன்றுமோ அதையே பாட்டாக எழுதிவிடுவார். அதுதான் அவரது சிறப்பே. அதுபோல்தான் இந்த பாடலும். 'அவன்தான் மனிதன்' படக்காட்சிக்காக படத்தின் தயாரிப்பாளர் ஏ.ராமாநுஜம் கேட்க, கவியரசும் பாட்டு எழுதி தர ஒப்புக்கொண்டார். ஆனால் படக்காட்சிகள் சிங்கப்பூரில் படமாக்க இருப்பதால், நடிகர், நடிகைகள் அனைவரும் வருகிற மே மாதம் சிங்கப்பூர் செல்லவிருக்கிறோம் என்று சொல்லவும், அதனை மையப்படுத்தியே கவியரசர் 'மே'-எழுத்தில் முடியுமாறு எழுதி கொடுத்தார்" என்றார்.

4 பேர் கூடினாலே கவிஞர் இருப்பார்


அதேபோல், திரைப்பட தயாரிப்பாளரும், கண்ணதாசனின் அண்ணன் ஸ்ரீநிவாசனின் மருமகளுமாகிய ஜெயந்தி கண்ணப்பன் இந்த பாடல் குறித்து நம்மிடம் பேசினார். அப்போது, "வாட்ஸ்அப்பில் கண்ணதாசனின் பாடல்கள் வலம் வருவது கேட்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நான்கு பேர் ஒன்று கூடி எதைப்பற்றி பேசினாலும், அங்கும் கண்ணதாசன்தான் இருப்பார். இந்த பாடல்களை இளைய தலைமுறைகள் கேட்பது இரட்டிப்பது மகிழ்ச்சி, இந்த பாடலை கண்ணதாசனை தவிர வேறு யாராலும் இவ்வளவு அழகாக எழுதியிருக்க முடியுமா என்று தெரியவில்லை" என்றார்.

அர்த்தம்-அழகு-இனிமை


உண்மைதான். ஒற்றை எழுத்து முடியுமாறு பாடல் எழுதுவது மிகவும் கடினம். பாடலின் முடிவில் ஏதோ ஒற்றை எழுத்து வந்தால் போதும் என எழுத முடியாது. அப்படியே எழுதினாலும் அதில் அர்த்தம் பொதிந்திருக்க வேண்டும், இசைக்கு பொருந்தி வரவேண்டும். பாடல் கேட்கும்போது இனிமை தரவேண்டும். இதையெல்லாவற்றையும் சேர்ந்து அளித்திருப்பார் கண்ணதாசன். இது ஒரு பாட்டு என்று மட்டுமல்ல, இதுபோன்ற ஏராளமான பாடல்களில் புது புது யுக்திகளில் வெளிப்படுத்திய அழியா கலைஞன் கண்ணதாசன். இன்றைய நாளில் இந்த பாட்டு ட்ரெண்டு என்பதைபோல், அனைத்து பாடல்களுமே ட்ரெண்ட் ஆனால் நன்றாக இருக்கும் என அடிமனதில் நினைக்க தோன்றுகிறது.

உலக இலக்கியம் - கண்ணதாசன்


அப்போதுதான் இளையதலைமுறைகளுக்கு, அக்கால வாழ்க்கை நெறிமுறைகளை தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக இருக்க முடியும். ஏனெனில் காதல், அன்பு, பாசம், தாய்மை, வீரம், மொழிப்பற்று, தேசப்பற்று, ஏக்கம், வெட்கம் என அனைத்தும் அன்றைய காலகட்டத்தில் எவ்வாறு சமூகத்தில் பின்னிப் பிணைந்திருந்தது என்பதற்கு சான்று கண்ணதாசனின் அனைத்து வகை பாடல்களுமே. சங்க இலக்கிய செழுமையும், யதார்த்த வாழ்வியலின் எளிமையும் பாமரனும் சென்றடைய எழுதிய பாங்கே கண்ணதாசனின் என்னும் மகாகவியின் வெற்றியின் ரகசியம் இதுவரை வெற்றிநடை போட்டு வருகிறது. வாழ்க்கையின் அனைத்து பக்கங்களையும் தெரிந்துகொள்ள உலக இலக்கியங்கள் தேவையில்லை-கண்ணதாசனின் பாடல்களே போதும். மெட்டுக்குள் கட்டுப்படுகிற வார்த்தைகளில் வாழ்வியலின் உணர்வுகள் அத்தனையும் தெறித்து அழகியல்நடை போடும் கவியரசரின் பாடல்களில். அதனால்தான் கண்ணதாசன் இன்றும் காலத்தின் பொற்கனியாய் இனித்து கொண்டிருக்கிறார்.

No comments:

Post a Comment