Monday, 7 June 2021

நடிகை மனோரமா

 1958ஆம் ஆண்டு மாலையிட்ட மங்கை என்ற படத்தில் நகைசுவை நடிகையாக அறிமுகம் ஆகி , 1963 ஆம் ஆண்டு கொஞ்சும் குமரி என்ற படத்தில் கதாநாயகியாக  ஆகி, அலங்காரி , பெரிய மனிதன் ஆகிய மேலும் இரண்டு படங்களில் கதாநாயகியாக நடித்து மீண்டும் காமெடிக்கு அவர்....... யார் இந்த மனோரமா? எப்படி வளர்ந்தது இந்தக் கலை ஆல மரம்.? எப்படி எங்கே வளர்ந்து விரிந்தது இது ? 




கவிஞர் கண்ணதாசன் 'மாலையிட்ட மங்கை' படத்தை தயாரிக்க ஆரம்பித்தார். 
நாடக நடிகையாக இருந்த மனோரமாவுக்கு ஏதாவது வேடம் தரவேண்டும் 
என்பதற்காக 'காமெடி' நடிகையாக ஒப்பந்தம் செய்தார். நகைச்சுவை 
நடிகையாக அதுவரையில் மனோரமா நடித்ததே இல்லை. 

பயந்து போன மனோரமா "இதற்கு முன் இப்படி வேஷத்தில் நடிச்சதில்லயே..." 
என்று கூற, அதற்கு கவிஞர் கண்ணதாசன், "பரவாயில்லை நடி எல்லாம் 
சரியாப்போகும் உன் திறமைக்கு இதில் நல்ல பேர் வரும்" என்று ஆறுதலும் 
தைரியமும் சொல்லி நடிக்க வைத்தார். அன்று அவர் சிரிப்பு நடிகையாக 
அறிமுகப்படுத்திய வாழ்க்கைதான் மனோரமாவுக்கு கடைசிவரை நிலைத்து
 நிற்கிறது. 

நகைச்சுவை நடிகையாக வலம் வந்த மனோரமாவை ஹீரோயினாக 
அறிமுகப்படுத்தியவர் டி.ஆர்.சுந்தரம். தனது மாடர்ன் தியேட்டர்ஸ் 
தயாரிப்பில் அவரே இயக்கிய ‘கொஞ்சும் குமரி’ படத்தில் மனோரமாவை 
நாயகியாக்கினார். இதில் ஹீரோவாக நடித்தது ஆர்.எஸ்.மனோகர். 

மனோரமாவை ஹீரோயினாக மக்கள் ஏற்றனர். படமும் ஓடியது. ஆனாலும்
 ஒரு சில படங்களுக்கு பிறகு அவரால் கதாநாயகியாக நீடிக்க முடியவில்லை. 
மீண்டும் நகைச்சுவை  வேடங்களுக்கே அழைத்தனர் . 

மனோரமா கண்ணதாசனிடம் "எல்லாம் உங்களாலதான் . கதாநாயகியாக 
நடிக்கும் லட்சியத்தில்  இருந்த என்னை நீங்கள் காமெடி நடிகையாக 
அறிமுகப்படுத்தியதால்தான் இப்ப எல்லோரும் காமெடிக்கு கூப்பிடறாங்க 
என்று செல்லமாகக் கோபித்துக் கொள்ள , 

அந்த மகா கவிஞன் தனக்கே உரிய கள்ளமில்லாச் சிரிப்போடு மனோரமாவிடம்  
 " அட பைத்தியமே... நீ கதாநாயகியாக மட்டும் நடித்தால் பத்து வருடம்தான் 
தாக்குப் பிடிப்பாய். அதே நகைச்சுவை நடிகையாகிவிட்டால் நீ விரும்பும் வரை
 நடித்துக் கொண்டே இருப்பாய்" . என்றார் . 

செல்லக் கோபம் குறையாமல்  "எனக்கு சாகும்வரை கூட நடிக்க ஆசைதான் " 
என்றார் மனோரமா . கவியரசர் மறுபடியும் சிரித்துக் கொண்டே "சரி" என்றார் . 
அந்த சரி என்ற வார்த்தையின் ஆயுள் 55 ஆண்டுகள் நீடித்து இப்போது 
அமரத்துவம் அடைந்து இருக்கிறது .

 டைரக்டர் கே. பாலசந்தர், " நான் நூற்றுக்கும்  மேற்பட்ட 
நட்சத்திரங்களை அறிமுகப் படுத்தியிருப்பதாகவும்,  கவியரசர் கண்ணதாசன் 
மனோரமாவை  மட்டுமே அறிமுகப்படுத்த முடிந்தது என்றும் கூறினார். நான் 
நூறு பேர்களை அறிமுகப்படுத்தியதும், அவர் மனோரமாவை 
அறிமுகப்படுத்தியதும் சமம். அந்த நூறு பேருக்கு சமமான திறமைசாலி 
மனோரமா" என்றார். 

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு கவிஞர் கண்ணதாசன் அமெரிக்காவிற்குப 
போகும்போது மனோரமாவிடம்,"யார் யாருக்கோ பாராட்டு விழா  
நடத்துகிறார்கள். உன்னைப் போன்ற நல்ல கலைஞர்களை தேடிப் பிடித்து 
விழாக்கள் நடத்துகிறார்களா என்றால்  இல்லை. நான்அமெரிக்காவில் இருந்து
வந்ததும் உனக்கு பெரிய அளவில் ஒரு பாராட்டு விழா நடத்தப் போகிறேன்" 
என்று கூறிவிட்டுச் சென்றார். 

ஆனால் உயிரும் உடலுமாகச் சென்ற கண்ணதாசன்  குடைசாய்ந்த தங்கத் 
தேர்போல பிணமாகத்தான்  இந்தியா வந்தார்.  இதன் பிறகு எத்தனையோ
பேர் பாராட்டுவிழா நடத்த அனுமதி கேட்டும் மனோரமா மறுத்து விட்டார்.


No comments:

Post a Comment