போட்டிப் பாடல்கள் என்று திரைப்படங்களில் பலவிதமாக அமைவது உண்டு. சிறைச்சாலையில்– சன்னியாசமா, சம்சாரமா என்ற போட்டி வெடித்து, கைதிகள் தப்புவதற்கு ஒரு திரைப்பாடல் காரணமாக அமைகிறது (கணவனே கண்கண்ட தெய்வம்). சிரிப்பு நடிகர் பிரண்டு ராமசாமியின் பாட்டுக்குரலை நாம் அபூர்வமாகக் கேட்கும் பாடல் இது.
இதே கருத்திலான பாடல், சிரிப்புக்கும் சிந்தனைக்கும் வழிவகுக்கும் வகையில் ‘சந்திரோதயம்’ படத்தில், காசிக்குப் போகும் சன்னியாசி, என்று ஒலிக்கிறது. எம்.ஜி.ஆர்., நாகேஷ், மனோரமா ஆகியோரை வைத்துப் படமாக்கப்பட்ட மிக ரசமான வாலியின் பாடல்.
ஆணுக்கும் பெண்ணுக்கும் போட்டி என்ற கருத்தில் சில பாடல்கள் உண்டு. இந்த வகையில் அமைந்து, எப்படியும் பெண்தான் உயர்ந்தவள் என்று அழகாகக் கூறுகிற பாடல், ‘பெண்கள் இல்லாத உலகத்திலே’ (ஆடிப்பெருக்கு).
ஆணும் பெண்ணும் சண்டையிடாமல் சேர்ந்து வாழ்வதுதான் உசிதம் என்று முடிவுக்கு வரும் பாடல்களும் உண்டு. உதாரணத்திற்கு, சந்திரபாபு ஜிக்கியுடன் பாடும், ‘தில்லானா பாட்டுப் பாடிக் குள்ள தாரா’ (புதுமைப்பித்தன்).
சில பாடல்களில் ஒன்றன் பின் ஒன்றாக வாதங்கள் முன் வைக்கப்பட்டு, அவற்றில் தலைசிறந்தது வெல்வதாக கூறப்படும்.
உலகத்தில் சிறந்தது எது என்ற கேள்வி எழுப்பப்பட்டு வட்டி, காதல், தாய்மை என்ற பதில்கள் பாடலில் கொடுக்கப்படுகின்றன. தாய்மைதான் உலகத்தில் சிறந்தது என்ற முடிவு கூறப்படுகிறது. ‘பட்டணத்தில் பூதம்’ என்ற படத்தில் மிக நேர்த்தியாக ஒளி வீசும் பாடல் இது. (பாடல் – கண்ணதாசன், இசை – கோவர்த்தனம்).
இப்படித் தமிழ் சினிமாவில் பலவித போட்டிப் பாடல்களைக் கூறலாம். ஆனால் ‘திருவிளையாடல்’ திரைப்படத்தில், பாடல் போட்டி என்று கூறி ஒரு வித்தியாசமான சூழல் ஏற்படுகிறது. போட்டியே நடக்காமல் அரிய பாடல்களும் அவை தொடர்பான அற்புதமான விளக்கங்களும் கிடைக்கின்றன!
மதுரை மீனாட்சி கோயிலிலே மனமுருக சுந்தரேச பெருமானைப் பாடி வருபவர் பாணபத்திரர் (படத்தில் டி.ஆர். மகாலிங்கம்). ஏழ் இசையாய், இசைப்பயனாய் என்ற தேவாரத்திற்கு ஏற்ப, இசையை இறைவன் வடிவமாகவும் இசை மூலம் செய்யும் வழிபாட்டை வாழ்க்கையின் பயனாகவும் கருதுபவர் அவர்.
நமது ஆலயங்களில் இன்றைக்கும் இசைக்கும் ஓதுவார் மூர்த்திகளைப்போன்ற பாடகர் என்று கொள்ளலாம். தெய்வத்தமிழின் இனிமையும் பண்ணிசையின் மெருகும் கலந்த பாட்டு அவருடையது.
பக்தி மணம் கமழும் அவருடைய வாழ்க்கையும் பாட்டும் தெளிந்த நீரோடையைப் போல் சென்று கொண்டிருக்கும் போது...ஒரு நாள்....
ஹேமநாத பாகவதர் (டி.எஸ்.பாலையா) என்ற ஒரு பெரும் இசைப்புலவர் மதுரைக்குத் தன்னுடைய பரிவாரங்களுடன் வருகிறார். அவரை பாண்டிய மன்னன் வரகுணன் சிறந்த மரியாதைகளுடன் வரவேற்கிறான்.
ஹேமநாத பாகவதர் (பாலமுரளிகிருஷ்ணா குரலில்) ராஜசபையில் அற்புதமாக பாடுகிறார்.
‘ஒரு நாள் போதுமா?’ என்று பல்லவியில் அவர் கேட்கும் போது, போதாது என்று சொல்லத்தான் தோன்றுகிறது. அவருடைய குரலினிமையும் இசை வலிமையும் அப்படி.
மாண்டு என்ற ரசனைக்கு உகந்த ராகத்தில் தொடங்கும் பாடல், எழுந்தோடி தோடியை தொடுகிறது. ராஜசபையில் பாடுவதால் தர்பார் ராகத்தை அழைக்கிறது. மோகனத்தை இழைக்கிறது. என் பாட்டில் தேனடா என்று கானடாவை குழைக்கிறது. அபாரம், அதிசயம், அற்புதம்.
இசை சக்ரவர்த்தி என்று புகழப்பட்ட ஹேமநாதரின் இசையைக் கேட்டு வரகுண பாண்டியனும் மயங்கி விடுகிறான்.
ஆனால், அழகுக்குப் பின்னே ஆபத்து ஒளிந்து கொண்டிருக்கிறது. பாண்டிய நாட்டின் இசைப் புலவர்களைப் போட்டிக்கிழுக்கிறார் ஹேமநாதர். அவர்கள் தோற்றால் பாண்டிய நாடே தனக்கு அடிமையாம். அதன் பிறகு, யாரும் பாடவே கூடாதாம். முத்தமிழுக்கு வித்திட்ட இடம் என்ற பெருமையை மாமதுரை விட்டுவிடமுடியுமா?
இந்தத் தருணத்தில்தான், ஹேமநாதனின் அகங்காரம் பாணபத்திரனின் வாழ்க்கையில் குறுக்கிடுகிறது.
ஹேமநாதருடன் இசைப் போட்டியில் பாணபத்திரர் ஈடுபடவேண்டும் என்ற மன்னனின் கட்டளை வருகிறது.
பக்தி இசையில் தனது ஈடுபாட்டையும் சாஸ்திரிய இசையில் ஹேமநாதருக்கு இருக்கும் மிதமிஞ்சிய தேர்ச்சியையும் பார்க்கும் போது, பாணபத்திரருக்கு அச்சம் ஏற்படுகிறது. போட்டி எப்படி சாத்தியம் என்று பயப்படுகிறார்.
அவர் மனைவி திலகவதி (ஜி.சகுந்தலா) சரியான வழியைக் காட்டுகிறாள். ‘‘என்னால் எப்படிப் பாட முடியும், என்னால் எப்படிப் பாட முடியும் என்று சொல்கிறீர்கள். ஆனால், ‘நான்’, ‘எனது’ என்ற வார்த்தைகளே நமக்கு எதற்கு? நமக்கெல்லாம் மேலே ஒருவர் இருந்துகொண்டல்லவா நம்மை வாழவைக்கிறார்? அவரிடம் சென்று தாங்கள் முறையிட வேண்டியது தானே?’’ என்று அவள் கூறுகிறாள்.
இதுதான், சுந்தரேசரிடம் பாணபத்திரர் முறையிடும், ‘இசைத் தமிழ் நீ செய்த அரும் சாதனை’ என்ற அற்புதமான பாடலுக்கு வழிவகுக்கிறது.
பிரபல எஸ்.ஜி. கிட்டப்பாவின் வழியிலே வந்து, நாற்பது ஆண்டுகள் கோலோச்சிய டி.ஆர். மகாலிங்கம் பாடிய மிகச் சிறந்த பாடல்களில் ஒன்றாக ‘இசைத்தமிழ்’ பாடல் அமைகிறது. ஓர் உயர்ந்த மனிதன், ஊருக்காகப் படும் கவலை பாடல் வரியிலும், மெட்டமைப்பிலும் உன்னதமாக வெளிப்படுகிறது.
பீம்பிளாஸ் ராகத்தில் அமைந்த பாடல், சோதனையான காலத்தில் கடவுளின் திருவடியில் சரணடையும் தன்மையைக் காட்டுகிறது.
இதற்கு சிவபெருமான் எப்படி அருள் செய்வார்? அதுதான் திருவிளையாடல் புராணத்தில் வரும் விறகு விற்ற படலம் என்ற தலைப்பு. சிவாஜி விறகு விற்கும் சிவபெருமானாக வந்து, ‘பார்த்தா பசுமரம்’ என்று தெருவிலே பாமரரையும் கவரும் வகையில் பாடுகிறார்.
அதன் பிறகு, ஹேமநாதன் வீட்டுத் திண்ணையில் படுத்து, முதலில் குறட்டை விடுவதுபோல் சத்தம் செய்து, பிறகு ‘பாட்டும் நானே பாவமும் நானே’ என்று இசைக்கிறார் (டி.எம்.எஸ். குரலில்).
உச்சத்தில் எடுத்து, ஓங்கிய குரலில் தொடுத்து, ஸ்வரக் கலவைகளை அள்ளித்தெளிக்கும் பாடல். டி.எம்.எஸ்ஸின் நாதத்திலும் சிவாஜியின் நடிப்பிலும் வெளிவரும் பாடல், மனதைக் கவரத்தான் செய்கிறது. அது மட்டும் இல்லாமல், அசையும் பொருள் நிற்கச் செய்யும் பாடல் என்று முன்வைக்கப்படுகிறது.
யார் இந்தப் பாடலை பாடியது என்று ஹேமநாதர் கேட்கும் போது, பாணபத்திரரால் தேறாது என்று நிராகரிக்கப்பட்ட சீடன், சும்மா கத்தினேன் என்கிறான் விறகுவெட்டி!
வேண்டாம் என்று நீக்கிய சீடனே இப்படி என்றால், பாணபத்திரரின் இசை வல்லமை எப்படியோ என்று பயந்த ஹேமநாதர், தோல்வியை எழுதிவைத்துவிட்டு இரவோடு இரவாக ஓடிவிடுகிறார்!!
இந்த வகையில், பாட்டுப் போட்டி தொடர்பாக ‘திருவிளையாட’லில் நான்கு பாடல்கள் வருகின்றன. அவற்றின் வண்ணமும் வடிவமும் வெவ்வேறு. ஆனால் ஒவ்வொன்றும் தனிவிதத்தில் ஒளிவீசும் மணியாகத் திகழ்கிறது.
உயர்ந்த கர்நாடக சங்கீத வித்வான், எல்லோரும் ரசிக்கும் வகையில் தொடுக்கும் அருமையான பாடலாக ‘ஒரு நாள் போதுமா’ அமைகிறது.
இத்தகைய மேதையிடமா நான் போட்டியிடுவது என்று இறைவினிடம் சரண் புகும் பாடலாக, ‘இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை’ உள்ளது. ஒரு பக்திப் பாடகனின் உணர்ச்சிப் பெருக்கைத் தேக்கி வைக்கிறது.
சிவபெருமான் விறகு விற்கும் போது பாடுவதாக அமைந்த ‘பார்த்தா பசுமரம்’ சாதாரணர்களும் ரசிக்கக்கூடிய துள்ளல் பாணியில் அமைந்தது. அதே சமயம் வாழ்க்கையின் நிலையாமையை விளையாட்டாகக் கூறி மனிதனின் ஆணவத்தை அகற்றுகிறது.
‘பாட்டும் நானே பாவமும் நானே’ பாடலோ, சிவபெருமானே இசையில் திளைத்து வெளியிடுவதாக உள்ளது. பறைசாற்றுதலுக்கு உரிய கவுரி மனோகரி ராகத்தில் கம்பீரமாக ஒலிக்கிறது. முன் வைக்கப்படும் தெய்வத்தன்மையை உயர்த்திக் காட்டுவதில் அது வெற்றியடைகிறது.
போட்டி இல்லாமலேயே இப்படிப் பலவிதமாக வெளிவரும் சிறந்த பாடல்களின் வண்ணங்கள் நமக்கு ஒன்றைப் புலப்படுத்துகின்றன. மற்றவர்களோடு போட்டியிடுவதை நிறுத்திவிட்டு, தன்னோடு தானே போட்டியிட்டு தன்னை உயர்த்திக் கொண்டால், ஒவ்வொருவருடைய பாடலும் ஒவ்வொரு விதத்தில் வெற்றி பெறும்.
No comments:
Post a Comment