Wednesday, 9 September 2020

கமல்ஹாசன்: ‘தேய்வழக்குகளை உதறியெரியும் பெருங்கலைஞன்’

 பொதுவாக  முன்னணி சினிமா நாயகர்களின் உண்மையான வயதிற்கும் அவர்கள் ஏற்கும் பாத்திரங்களின் வயதிற்கும் பல சமயங்களில் தொடர்பே இருக்காது. இது சார்ந்த கிண்டல்களும் நமட்டுச்சிரிப்புகளும் ரசிகர்களிடையே நெடுங்காலமாக உண்டு.





நடுத்தர வயதைத் தாண்டியும் ‘கல்லூரி மாணவனாகவே’ முரளி நடித்த திரைப்படங்கள் ஏராளம். இந்த நோக்கில் ரஜினி மீதான கிண்டல்களுக்கு பஞ்சமேயில்லை. தெலுங்கு நடிகர்கள் இந்த விஷயத்தில் செய்ததெல்லாம் மாபெரும் பாதகம் என்றே சொல்லலாம். நடிப்பில் சாதனைகள் புரிந்த சிவாஜி கணேசன் கூட ஒரு காலக்கட்டத்திற்குப் பிறகு கோட், சூட் அணிந்து ஸ்ரீதேவி போன்ற இளம் நடிகைகளுடன் மூச்சு வாங்க டூயட் பாடிய அநியாயமெல்லாம் நடந்தது.

இந்த வரிசையில் கமலும் விதிவிலக்கல்ல. நடுத்தர வயதைத் தாண்டியும் மரத்தைச் சுற்றி டூயட் பாடி, நாயகியுடன் மறைவில் சென்று உதட்டைத் துடைத்துக் கொண்டே வரும் அபத்தத்தை அவரும் செய்திருக்கிறார். ஆனால் ரஜினி போல தொடர்ந்து அடம்பிடிக்காமல் ஒரு காலக்கட்டத்திற்குப் பிறகு தன் வயதுக்கேற்ற பாத்திரங்களை ஏற்க அவர் தயங்கியதில்லை. ‘கடல் மீன்கள்’ ‘ஒரு கைதியின் டைரி’ போன்ற திரைப்படங்களில் வயதான தோற்றத்தில் நடித்த போது அவருடைய வயது முப்பதுக்கும் குறைவாகத்தான் இருந்தது.

தன் வயதுக்கேற்ற பாத்திரங்களை கமல்ஹாசன் ஏற்றாரா என்னும் நோக்கில், 2000-ம் ஆண்டிலிருந்து அவர் நடித்த திரைப்படங்கள், அதிலுள்ள சிறப்பம்சங்கள், தோல்விகள் போன்ற விஷயங்களைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். 
 
**
 
சராசரியான திரைப்படங்களைத் தாண்டி கலையம்சமுள்ள படங்களைத் தேடும் ரசிகர்களால் இன்றும் கூட சிலாகிக்கப்படுகிற “ஹேராம்’2000-ம் ஆண்டில் வெளியானது.

உடம்பு சுருங்கி இறுதிப் படுக்கையில் கிடக்கும் கிழவர் பாத்திரம், காதல் பொங்கி வழியும் கணவன், சாமியார் கோலத்தில் குற்றவுணர்வுடன் இரண்டாம் திருமணத்திற்கு அரைமனதுடன் சம்மதிக்கும் ஆசாமி, முறுக்கு மீசையுடன் புது மனைவியுடன் ஐக்கியமாகத் துவங்கும் நபர், அனைத்தையும் துறந்து விட்டு பழிவாங்கப் புறப்படும் கோபக்காரர் என்று ஐந்து விதமான தோற்றங்களில் ‘சாஹேத்ராமனாக’ விதம் விதமாக அவதாரம் எடுத்தார் கமல்.

ஒப்பனை என்கிற சமாச்சாரம் வெறுமனே அழகைக் கூட்டுவதற்காக என்பது அல்லாமல் ஒரு கதாபாத்திரத்தை அதன் மூலம் எப்படியெல்லாம் வேறுபடுத்திக் காட்ட முடியும் என்பதற்கு இந்தத் திரைப்படம் ஒரு கச்சிதமான உதாரணம். அத்தனை தோற்றங்களிலும் கமல் ‘நச்’சென்று பொருந்தினார்.

இதே ஆண்டில்தான் ‘தெனாலி’ திரைப்படம் வெளியானது. போர் சூழல் காரணமாக மனநிலை பாதிக்கப்பட்டிருந்தவராக கமல் நடித்திருந்தார். ஈழத்தமிழ் பேசி அவர் நடித்திருந்தது சிறப்பான அம்சமாக பார்க்கப்பட்டது. ‘எதைக் கண்டாலும் பயம்’ என்பதுதான் இந்தக் கதாபாத்திரத்தின் பலவீனம். ஆனால் அதன் நல்லியல்புகள் காரணமாக இதே பலவீனம்தான் அதன் பலமாகவும் பல காட்சிகளில் வெளிப்படுகிறது. இந்த சுவாரசியமான முரணை அடிப்படையாகக் கொண்ட காட்சிகள் சுவாரசியமாக வெளிப்பட்டிருக்கும். இவற்றைத் தாண்டி இதுவொரு வணிகநோக்குத் திரைப்படமே.

கமலின் சில சிறந்த திரைப்படங்கள், தாமதமாகத்தான் அங்கீகரிக்கப்படும், பாராட்டப்படும் என்றொரு பரவலான கருத்து உண்டு. அதற்கு பொருத்தமான திரைப்படங்களுள் ஒன்றான ‘ஆளவந்தான்’ 2001-ல் வெளியானது.

திடகாத்திரமும் மூர்க்கமும் மொட்டைத் தலையும் கொண்ட ‘நந்து’ பாத்திரம் ரசிகர்களை பெருமளவு ஈர்த்தது. சித்தியின் கொடுமையினால் பாதிக்கப்படும் ஒரு சிறுவன் பிறகு எப்படி மனப்பிறழ்வு கொண்டவனாகவும் பெண் வெறுப்பாளனாகவும் மாறுகிறான் என்பதை தனது மிரட்டலான நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியிருந்தார் கமல்.

இதில் வரும் விபரீதமான காட்சியொன்றில், வன்முறையின் தீவிரத்தைக் குறைத்துக் காட்ட அனிமேஷன் வடிவில் படமாக்கப்பட்டது. இந்த உத்தியைப் பார்த்து பிரமித்து தன்னுடைய திரைப்படம் ஒன்றில் பயன்படுத்திக் கொண்டதாக ஹாலிவுட் இயக்குநர் க்வென்டின் டரான்டினோ ஒரு நேர்காணலில் கூறியிருந்தார். ஹாலிவுட் படங்களில் இருந்து கமல் நிறைய உருவியிருக்கிறார் என்று கூறப்பட்டிருந்த புகார்களுக்கு மாற்றாக நிகழ்ந்த விஷயம் இது.

பம்மல் கே சம்பந்தம், பஞ்ச தந்திரம் போன்ற திரைப்படங்களை சாய்ஸில் விட்டுவிடலாம். அபாரமான நகைச்சுவைத் திரைப்படங்கள் என்பதைத் தாண்டி குறிப்பிட்டுச் சொல்லுமளவிற்கு அவற்றில் எந்த வித்தியாசமும் நிகழ்வில்லை. 
 
 
**

2003-ல் வெளியான ‘அன்பே சிவம்’, கமலின் பயணத்தில் ஒரு முக்கியமான படம். ‘தன் அழகான தோற்றத்தை கோரமாக்கிக் கொண்டு நடிக்க முன்வருபவனே சிறந்த நடிகன்’ என்று சிவாஜி அடிக்கடி கூறுவாராம். அந்த வகையில் ‘குணா’ முதற்கொண்டு பல பரிசோதனை முயற்சிகளை கமல் துணிந்திருக்கிறார். அன்பே சிவமும் அதில் ஒன்று. சோடாபுட்டி கண்ணாடி, தழும்புகளால் நிறைந்திருக்கும் அவலட்சணமான முகம், சார்லி-சாப்ளினை லேசாக நினைவுப்படுத்தும் உடை என்று வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருந்தார் கமல். இதன் எதிர்முனையில் தோற்றத்திலும் சிந்தனையிலும் ஒரு நவீன இளைஞனை பிரதிபலிக்கும் பாத்திரத்தில் மாதவன் நடித்திருந்தார். இந்த முரண் படத்தின் சுவாரசியத்திற்கு அடிப்படையாக அமைந்திருந்தது.

படம் முழுக்க ‘வித்தியாசமான தோற்றத்திலேயே’ வந்தால் ரசிகர்கள் விரும்பமாட்டார்களோ என்கிற தயக்கம் எப்போதுமே நடிகர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இருக்கும் போல. எனவே பிளாஷ் பேக்கில் முறுக்கு மீசையும் இடதுசாரி சிந்தனையும் கொண்ட தெரு நாடகக் கலைஞனாகவும் வந்து நாயகியுடன் ‘ரொமான்ஸ்’ செய்து இதை சமன் செய்தார் கமல். இந்த உத்தியை பல திரைப்படங்களில் காணலாம்.

2004-ல் வெளியான ‘விருமாண்டி’யும் கமலின் முக்கியமான திரைப்படங்களில் ஒன்று. நெற்றியில் விபூதிப்பட்டை, குங்குமம், முரட்டு மீசை, அலட்சியமாக வாரப்பட்ட தலைமுடி, முன்கோபம் என்று தென்மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நடுத்தர வயது ஆசாமியை மிக கச்சிதமாக கண் முன்னால் நிறுத்தியிருந்தார் கமல். பல்வேறு கோணங்களில் வெளியாகும் வாக்குமூலங்களைக் கொண்டு ‘உண்மை என்பது எது? என்பதைத் தத்துவார்த்தமாக தேடிய ‘ரஷோமான்’ திரைப்பட உத்தி இதில் பயன்படுத்தப்பட்டிருந்தது. மதுரையின் வழக்கு மொழியை கமல் சிறப்பாக கையாண்டிருந்தார்.

2005-ல் வெளியான ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ வணிகரீதியாக தோல்வியடைந்த படம் என்றாலும் ஒருவிதத்தில் மிக முக்கியமானது. ‘பிளாக் ஹியூமர்’ என்னும் அவல நகைச்சுவையை அடிப்படையாகக் கொண்ட முதல் தமிழ் சினிமா என்று இதை அடிக்கோடிட்டு குறிப்பிட வேண்டும்.

‘சூப்பர் ஹீரோக்களுக்கு’ நிகரான ‘அந்தர்பல்டி’ சாகசங்களை இதர நாயகர்கள் செய்து கொண்டிருக்கும் போது, காது கேட்பதில் குறைபாடு உள்ள இயல்பான நடுத்தர வயது ஆசாமியாக இதில் வருவார் கமல். படம் முழுவதும் இம்சைகளை ஏற்படுத்தும் மென்மையான நகைச்சுவைக் காட்சிகள் வந்து கொண்டேயிருக்கும்.

ஒரு காவல்துறை அதிகாரிக்கு வைப்பாட்டியாக இருக்கும் இன்னொரு நடுத்தர வயதுள்ள பாத்திரம்தான் இந்தத் திரைப்படத்தின் நாயகி. பதினெட்டு வயதிற்கு குறையாத இளம் பெண்களுடன் டூயட் பாடிக் கொண்டிருக்கும் இதர நாயகர்களின் திரைப்படங்களுக்கு இடையில் இது வியப்பூட்டும் அம்சம் எனலாம். மூன்று அமெச்சூர் திருடர்கள், தவறுதலாக வேறொரு சிறுவனை கடத்தி வந்து விட்டு படும் பாடுதான் இந்தத் திரைப்படத்தின் மையம். (இதே விஷயம் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘மாநகரம்’ திரைப்படத்திலும் ஒரு பகுதியாக வரும்).

தனது பிரத்யேக ஸ்டைலில் திரைப்படங்களை உருவாக்குபவர் கெளதம் வாசுதேவ மேனன். ரொமான்ஸ் + ஆக்ஷன் என்பதுதான் இவரது பாணி. இவரும் கமலும் ‘வேட்டையாடு விளையாடு’ (2006) என்கிற திரைப்படத்தில் இணைந்த போது அது புதிய வண்ணத்தில் அமைந்தது. துப்பறியும் அதிகாரியை நாயகனாகக் கொண்டு பல ஹாலிவுட் திரைப்படங்கள் வந்திருக்கின்றன. தமிழ் சினிமாவில் அப்படியொரு பாணியில் வந்த முயற்சியாக ‘வேட்டையாடு விளையாடு’ (2006) அமைந்தது.

கணவனால் குடும்ப வன்முறைக்கு ஆளாகும் ஒரு பெண்தான் இதில் நாயகி. அந்தச் சூழலில் இருந்து அவரை விடுவித்து நாயகன் மறுமணம் புரிவார். பொதுவாக ஹீரோக்களுக்கு ஒவ்வாத இது போன்ற விஷயங்களையெல்லாம் கமல் இயல்பாகச் செய்து கொண்டிருந்தார்.

சிவாஜியின் ‘நவராத்திரி’யை தாண்டிச் செல்லும் நோக்கும் நோக்கத்திலோ, என்னவோ.. கமல் பத்து வேடங்களில் நடித்த ‘தசாவதாரம்’ (2008) ஒரு முக்கியமான முயற்சி. இதில் ஒவ்வொரு பாத்திரத்திற்கும் பிரத்யேகமான தோற்றங்களை உருவாக்கி, அதை திரையில் சித்தரிப்பதற்காக கமல் மிகவும் மெனக்கெட்டிருந்தார். ரங்கராஜ நம்பி, பல்ராம் நாயுடு, வின்செட் பூவவராகன் என்று ஒவ்வொரு பாத்திரத்திற்கும் ஒவ்வொரு வழக்கு மொழி, பாணி, பின்னணி என்று ரகளையாக நடித்திருந்தார் கமல். குறிப்பாக கிழவி பாத்திரத்தில் அவரது உடல்மொழியும் வசன உச்சரிப்பும் அபாரம்.

ஆனால் இவற்றை தனித்தனியாக பார்க்கிற போது சுவாரசியமாக இருந்ததே ஒழிய, ஒட்டு மொத்த சித்திரமாகப் பார்க்கிற போது பொழுதுபோக்கு சினிமா என்கிற அளவைத் தாண்டி இதில் விசேஷமாக எதுவும் இல்லை. ‘தன் திரைப்படங்களில் தன்னை மிகவும் முன்நிறுத்திக் கொள்வார்’ என்று கமல் மீது பொதுவாக சொல்லப்படும் விமர்சனத்தை ஆழமாக உறுதிப்படுத்துவதாக ‘தசாவதாரம்’ அமைந்தது. பத்து வேடங்களிலும் கமல் இருக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு எழுதப்பட்ட திரைக்கதை என்பதால் செயற்கையாகத் தெரிந்தது.
 
 
**

இதர மாநிலங்களில் உருவான சிறந்த திரைப்படம் என்றால் அதை தமிழில் ரீமேக் செய்ய கமல் எப்போதும் தயங்கியதில்லை என்பதற்கு ‘குருதிப்புனல்’ முதற்கொண்டு பல உதாரணங்கள் இருக்கின்றன.  அந்த வகையில் 2009-ல் வெளியான திரைப்படம் ‘உன்னைப் போல் ஒருவன்’. மத தீவிரவாதத்தை அரசு இயந்திரமானது ஆதாய அரசியலோடும் மெத்தனத்தோடும் கையாளும் போது ஒரு சராசரி மனிதனுக்கு எழும் கோபத்தின் வெளிப்பாடுதான் இந்தத் திரைப்படத்தின் மையம். குறுந்தாடியுடன் ஒரு கல்லூரி பேராசிரியரின் நடுத்தரவர்க்க தோற்றத்தில் நடித்திருந்தார் கமல். அசல் வடிவத்தை ஏறத்தாழ சிதைக்காமல் தமிழில் கொண்டு வந்தது பாராட்டுக்குரியது. இதிலும் அவரின் வயதுக்கேற்ற பாத்திரம்தான்.

2015-ல் வெளியான ‘உத்தம வில்லன்’ திரைப்படத்தை, ஏறத்தாழ கமலின் Mini Bio-graphical version எனலாம். அந்த அளவிற்கு அவருடைய அசல் வாழ்க்கையின் தடயங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்தத் திரைப்படத்தில் நிறைந்திருந்தன. மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் ஒரு நடிகன், அபத்தங்களால் நிறைந்திருந்த தன் அதுவரையான வாழ்க்கையை சிறிதாவது அர்த்தபூர்வமானதாக ஆக்க பாடுபடுகிறான். ‘மனோரஞ்சன்’ என்னும் நடிகனாக கமல் நடித்த சில காட்சிகள், அவர் எத்தனை திறமையான நடிகர் என்பதை உறுதிப்படுத்துவதாக அமைந்தன.

‘Spy Thriller’ எனப்படும் வகைமையான அதுவரையான தமிழ் சினிமாவில் மிக அமெச்சூராகத்தான் கையாளப்பட்டது. இதை ஏறத்தாழ ஹாலிவுட் தரத்திற்கு கொண்டு சென்ற திரைப்படம் ‘விஸ்வரூபம்’ I & II. முதல் பகுதியில் இருந்த இடைவெளிகளுக்கான பதில்கள் இரண்டாம் பகுதியில் இருக்கும் அளவிற்கு அபாரமான திரைக்கதையால் கட்டப்பட்டவை. இந்திய உளவாளி ஒருவன் சர்வதேச தீவிரவாதத்தை எதிர்கொள்வதுதான் இதன் மையம்.

பெண்மையின் சாயல் கொண்ட விஸ்வநாதன், எரிமலையின் ஆற்றலோடு விஸாமாக வெளிப்படும் காட்சி, தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க ஆக்ஷன் காட்சிகளுள் ஒன்றாக இருக்கும். ‘படம் புரியவில்லை’ என்கிற பரவலான கருத்து இதன் மீது எழுந்தது. ஆனால் நிதானமாகப் பார்த்தால் எத்தனை நுட்பமான விஷயங்களை இவற்றில் அடுக்கியிருக்கிறார் என்பது புரியும்.

கமலின் ரீமேக் வரிசையில் இன்னொரு அபாரமான முயற்சி ‘பாபநாசம்’ (2015).  மலையாளத்தில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ‘திரிஷ்யம்’ தமிழில் திருநெல்வேலியை பின்னணியாகக் கொண்டு வெளியானது. அன்பான மனைவி, இரண்டு மகள்கள் கொண்ட நடுத்தர வயது பாத்திரத்தில் ‘சுயம்புலிங்கமாக’ கமல் நடித்திருந்தார். இதில் அவர் வழக்கம் போல் தன் அபாரமான நடிப்பாற்றலை வெளிப்படுத்தியிருந்தாலும் மலையாளத்தில் மோகன்லால் செய்தததோடு ஒப்பிட்டால் கமல் சற்று பின்தங்கியிருப்பார் என்றுதான் சொல்ல வேண்டும்.

டூயட், காமெடி, ஆக்ஷன் என்று ஒரு தேய்வழக்கு திரைக்கதையுடன் நெடுங்காலமாக இயங்கிக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாவின் நிறத்தை தொடர்ந்து மாற்றிக் கொண்டு வருவதில் கமல்ஹாசனுக்கு பிரதான பங்குண்டு. அந்த வகையில் ‘தூங்காவனம்’ (2015) ஒரு அற்புதமான முயற்சி. பிரெஞ்சு திரில்லர் திரைப்படத்தின் ரீமேக். தமிழ் வடிவத்திற்காக அசட்டு மசாலாக்கள் எதுவும் திணிக்கப்படாமல் யோக்கியமாக உருவாக்கப்பட்டதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

ஒரு முன்னணி நாயகனுக்குரிய தேய்வழக்குகளை கமல் கொண்டிருந்தாலும் ஒரு காலக்கட்டத்திற்குப் பிறகு இவற்றிலிருந்து அவர் தொடர்ந்து மீற முயற்சித்துக் கொண்டே இருப்பதை கவனிக்க முடியும்.

‘மகாநதி’ திரைப்படத்தில் அவர் இரண்டு பிள்ளைகளுக்கு தகப்பனாக நடிப்பதைக் கண்ட ஒரு சீனியர் நடிகர் ‘இவ்வாறெல்லாம் நடித்தால் உன் இமேஜ் போய்விடும்’ என்று எச்சரித்தாராம். ஆனால் கமலின் சிறந்த திரைப்படங்களை கணக்கெடுத்தால் ‘மகாநதி’ அதில் உறுதியாக இடம்பெறும் என்பதுதான் வரலாறு. இந்த தொலைநோக்குப் பார்வையும் துணிச்சலும் பாத்திரத்திற்காக தன்னை மாற்றிக் கொள்ளும் மெனக்கெடலும் கமலிடம் எப்போதும் இருந்திருக்கிறது.

No comments:

Post a Comment