தமிழ்த்திரையுலகு தந்த நடிகர்களில் இரகுவரனுக்குத் தனியிடமுண்டு. தோற்றத்தால் விளங்கிய உயரத்தை நடிப்பிலும் தொட்டவர் அவர். இந்தி நடிகர் திலீப்குமார் பார்த்து வியந்த தமிழ் நடிகர். உடைந்து தடுமாறுவதைப் போன்ற குருத்துக்குரலை வைத்துக்கொண்டு எதிர்நாயகப் பரப்பில் வன்மையான நடிகராக வலம்வந்தார். சத்தியராஜ், நிழல்கள் இரவி, இரகுவரன் ஆகிய மூவரும் எதிர்நிலை, இடைநிலை வேடங்களில் தொடர்ந்து நடித்தபடி முன்னேறியவர்கள். மூவரும் கோவைப்பின்னணி கொண்டவர்கள். வாட்ட சாட்டமானவர்கள்.
அம்மூவரில் சத்யராஜ் தொடர்ந்து சந்தை மதிப்பு தளராதவராயிருந்தார். நிழல்கள் இரவிக்கு நாயகப் படங்கள் பல அமைந்தாலும் அவரால் முன்னணி இடத்தைப் பெறமுடியவில்லை. இரவி நாயகனாக நடித்த "அம்மன் கோவில் திருவிழா, நான் புடிச்ச மாப்பிள்ளை" ஆகிய படங்கள் வெளிவந்தபோது திரையரங்குகளின் முன்னே கூடிய கூட்டம் நினைவிருக்கிறது. தம்மை வைத்துத் தொடர்ச்சியாகப் படமெடுக்கும் முதலாளிகளும் இயக்குநர்களும் அமையப்பெற்ற நடிகர் முன்னணி இடத்தைப் பிடிக்கிறார். நிழல்கள் இரவி பாரதிராஜாவின் அறிமுகம். அப்பெயரின் முன்னொட்டு அவர் அறிமுகமான படத்தைக் குறிப்பதுதான்.
அம்மூவரும் பல படங்களில் ஒன்றாக நடித்தனர் என்றாலும் இரகுவரனைத் தனித்துக் காட்டிய படம் ஒன்றுண்டு. 'மக்கள் என் பக்கம்' என்பது அப்படத்தின் பெயர். சாம்ராஜ் என்னும் கள்ளக்கடத்தல் தொழிலதிபர் வேடம் சத்தியராஜுக்கு. அவருடைய இரண்டு உதவியாளர்கள் இரகுவரனும் நிழல்கள் இரவியும். அரசியல்வாதிவாக வரும் இராஜேஷின் நோக்கம் சாம்ராஜினை அழித்துவிடவேண்டும் என்பது. இராஜேஷைக் கொன்றுவிட வேண்டும் என்று சாம்ராஜ் வகுத்த திட்டப்படி இரகுவரனும் நிழல்கள் இரவியும் இராஜேஷின் மகிழுந்து வரும் வழியை மறித்து துப்பாக்கிச் சூட்டில் ஈடுபடுவார்கள். அம்முயற்சியில் இரவி இறந்துவிட, படுகாயங்களோடு தப்பி வரும் இரகுவரன் சத்தியராஜின் மடியில் தம்முயற்சித் தோல்வியை நடிப்பால் சொல்லியபடி உயிர்விடுவார். அந்தக் காட்சியில் மட்டுமில்லை, அந்தப் படத்திலும்கூட இரகுவரனுக்கு உரையாடல்கள் பெரிதாய் இல்லை. ஆனால், துடிதுடித்து உயிர்விடும் காட்சியில் அவர் நடிப்பைப் பார்த்த பார்வையாளர்கள் திகைத்துப் போய்விட்டனர். இரகுவரன் திறமையான நடிகர் என்பது அன்று நிறுவப்பட்டது.
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பத்திரண்டாம் ஆண்டில் 'ஏழாவது மனிதன்' என்ற திரைப்படத்தில் அறிமுகமானபோதும் இரகுவரனை அடையாளங்காட்டிய முதற்படம் 'சம்சாரம் அது மின்சாரம்'. அம்மையப்ப முதலியாரும் அவருடைய மூத்த மகன் சிதம்பரமும் வீட்டுக்குள் மோதிக்கொள்ளும் காட்சியை இன்றைக்கு நினைத்தாலும் பதைபதைக்கிறது. உரையாடல்களை மடித்துத் தெறித்துப் பேசுவதில் வல்லவரான விசுவோடு நேர்நிகராக எதிர்த்து நடித்தார். உறவுகளின் பெற்றி அறியாமல் காசுக் கணக்கு பார்க்கும் பலரும் இரகுவரனின் உருவில் தம்மை உணர்ந்தனர். இரகுவரனின் பெயர் பரவத் தொடங்கியது. அவ்வாண்டிலேயே 'மிஸ்டர் பாரத்' என்ற படத்தில் அடிதடிக் காட்சி. எல்லா வகையானும் நடிக்கக் கூடியவர் என்பதைத் திரையுலகம் ஏற்றுக்கொண்டது.
மந்திரப் புன்னகை, ஊர்க்காவலன் போன்ற பெரிய படங்களில் இரகுவரனே எதிர்நாயகன். அதனால் சிறிய படங்களின் நாயகனாகும் வாய்ப்பு இரகுவரனைத் தேடி வந்தது. ஆர்.சி. சக்தி இயக்கிய "கூட்டுப் புழுக்கள்" என்ற திரைப்படம் வெற்றியும் பெற்றது. வேலையில்லாக் கொடுமையால் நிறைவேறாக் காதலோடு தளர்ந்து நிற்பவன். அவ்வேடத்திற்கு இரகுவரன் பிசிறின்றிப் பொருந்தினார். கைநாட்டு, மைக்கேல்ராஜ் போன்ற படங்கள் அவரை நாயகனாகத் தூக்கி நிறுத்தத் தவறின. அவ்வமயம் எதிர்நிலை, இடைநிலை வேடங்கள் அவர்க்கு வந்து குவியத் தொடங்கின.
இரகுவரனின் நடிப்புக்குத் தீனி போட்ட இரண்டு படங்கள் பாசில் இயக்கியவை. "பூவிழி வாசலிலே..." என்ற படத்தைப் பார்க்காதவர்கள் இப்போதே பாருங்கள். கொலையைப் பார்த்த குழந்தையைக் கொல்லும் முயற்சியில் ஈடுபடும் பெருந்தனக்காரன் வேடம் இரகுவரனுக்கு. அமைதித் திருவுருவாக இருந்தவாறே அவர் செய்கின்ற தீச்செயல்கள் உள்ளத்தை நடுங்க வைக்கும். பாசிலின் இன்னொரு படம் "என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு". தத்துக்கொடுக்கப்பட்ட குழந்தையைத் தேடி வரும் தந்தை. கெஞ்சாமல் கதறாமல் தன் மகளை வேண்டித் திரியும் தந்தையாக அப்படத்தில் வேறு உயரத்தைத் தொட்டார்.
"புரியாத புதிர்' என்ற திரைப்படத்தில் இரகுவரனுக்கு மனச்சிதைவுற்ற கணவன் வேடம். மனைவியை ஐயுற்றுத் துன்புறுத்துபவர். "ஐ நோ.. ஐ நோ... டேய் நோ... ஐ நோ..." என்று இரண்டு சொற்களை வைத்துக்கொண்டு அவர் ஆடிய ஆட்டத்தை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். இராம்கோபால் வர்மாவின் முதற்படமான சிவா 'உதயம்' என்ற பெயரில் தமிழுக்கு வந்தது. இரகுவரன் நடிப்புக்கு அப்படம் கொடுமுடி. ஆங்கிலப் படங்களில்தான் அப்படிப்பட்ட நடிப்பைப் பார்க்க முடியும். 'பவானி'யாக மிரட்டினார். அந்த வரிசையில் காதலன், பாட்சா, முத்து என்று அவர் வென்றாடிய வேடங்கள் பல.
பாலசேகரன் இயக்கிய 'லவ் டுடே' என்னும் திரைப்படத்திலிருந்து இரகுவரன் நடிப்பின் மூன்றாம் பாகம் தொடங்குகிறது. பாசத்திற்குரிய தந்தையாக அவர் நடித்தது பார்த்தோரின் கண்ணீரைப் பிழிந்தது. உல்லாசம் என்ற படத்தில் நல்லவனை வளர்த்துத் தரும் தீயவன் வேடம். அமர்க்களம் என்னும் படத்தினையும் மறந்திருக்க முடியாது. அவருடைய கடைசிக் காலப் படங்களில் ஒன்றான யாரடி நீ மோகினியிலும் அவர் முத்திரை பதிக்கத் தவறவில்லை.
வெறும் இருபத்தைந்தாண்டுகளில் முந்நூறு படங்கள் நடித்தார் இரகுவரன். கூடுதலாக முப்பதாண்டுகள் வாழ்ந்திருந்தால் மேலும் முந்நூறு படங்கள் நடித்திருக்கக் கூடும். அவற்றால் அவர் பன்மடங்கு உயரத்திற்குச் சென்றிருக்கலாம். ஒருவர் என்னவாக வேண்டுமோ அவ்வாறு ஆகாதபடி வீழ்த்துவது போதைப் பழக்கமாகத்தான் இருக்க முடியும். பெருங்கலைஞர்கள் பலரும் வீழ்ந்த அந்தப் படுகுழியில் இரகுவரனும் வீழ்ந்தார். அவருடைய நடிப்பு மட்டுமில்லை, வாழ்க்கையும் இக்காலத்தவர்க்கு ஒரு படிப்பனைதான்.
வெளியூர்க் கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர்குழாம் இருப்பூர்தியில் சென்னை திரும்பிக்கொண்டிருந்ததாம். இருப்பூர்திப் பெட்டி முழுவதும் கலைஞர்கள் நிரம்பியிருந்தனராம். திரையுலகில் அறிமுகமாகியும் பெயர்பெற முடியாத நிலையில் மனம் வெதும்பியிருந்த நடிகர் சூர்யாவும் இரகுவரனும் அப்பெட்டியில் அடக்கம். அப்போது இரகுவரனின் போதைக்குரல் சூர்யாவைக் கடுமையாய் அழைத்ததாம். "டேய் சூர்யா... முடியலல்ல... நீ எதுவுமே ஆக முடியலல்ல... எல்லாம் பண்ணிப் பார்த்தும் எதுவுமே நடக்கலல்ல... வெறுப்பா இருக்குமே... செத்துடலாம்போல இருக்குமே... எனக்கும் அப்படித்தான்டா இருந்துச்சு... மாத்துடா... எல்லாத்தையும் மாத்து... இதென்னடா முடி... இதை மாத்துடா... உடம்ப மாத்துடா.. பார்க்கிறது நடக்கிறது எல்லாத்தையும் மாத்துடா... அப்புறம் பார்றா... எல்லாமே மாறும்..." என்று அறிவுரை கூறினாராம். இரகுவரனின் அவ்வறிவுரையை தெய்வ வாக்காக ஏற்றுக்கொண்டு தம் நடை உடை பாவனைகளை மாற்றிக்கொண்டார் நடிகர் சூர்யா. அதன் பிறகு அவரடைந்த ஏற்றங்களை நாடறியும்.
No comments:
Post a Comment