திரைப்படங்கள் ரசிகர்களின் மூளைக்குள் ஊடுருவி ரசாயன மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியவை. அவை சமூகம் அன்றாடம் சந்திக்கும் நிகழ்வுகளைத் தழுவி எடுக்கப்பட்டாலும், அதற்காக முன்வைக்கும் தீர்வுகளின் வழியாக, மாற்று சிந்தனைக்கான வழிகளை நம் மனதுக்குள் விதைக்கவல்லவை. அந்த வகையில் சமீபத்தில் வெளியான அறம் திரைப்படம் சாமானியர்களின் கலகக்குரலாக ஒலித்துக்கொண்டிருக்கிறது. வெகுஜனத்தைப் பாழாக்கும் வணிக அறிவியலை அப்படியே தோலுரித்துக் காட்டியிருக்கும் அந்தப் படத்தின் இயக்குனர் கோபி நயினார் நம்மிடம்,
முதல் படத்திலேயே அரசியல்வாதிகளையும், முதலாளிகளையும் எதிர்க்கும் ஒரு அரசியல் படத்தை எடுத்திருப்பதற்கு காரணம் இருக்கிறதா?
மக்களுக்கான படைப்பு என்பது மிகப்பெரிய எதிர்ப்பு நிலையில் இருந்துதான் உருவாகும். இது நீரையோ, விவசாயத்தையோ பற்றிய கதை கிடையாது. ஆனால் நீர், விவசாயம் ஆகியவற்றைச் சார்ந்திருப்பதால் ஏற்படுகிற மிகப்பெரிய பிரச்சனைகளைப் பேசியிருக்கிறோம். அதனடிப்படையில்தான் கதையும் வடிவமைப்பட்டது.
ஒரு கதாநாயகியை அரசியல் பேச வைத்திருப்பதற்கான நோக்கம் என்ன?
உலகம் முழுவதும் ஒடுக்கப்பட்ட இனமாக பெண்கள்தான் இருக்கிறார்கள். நீதி மறுக்கப்பட்ட ஒரு சமூகத்தில் இருந்து வந்த ஒரு பெண் நீதி பேசினால், அதுதான் பொது நீதியாக இருக்கும் என நம்புகிறவன் நான். அதனடிப்படையில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ஒரு அரசியல் நீதியை வழங்குகிற தகுதி பெண்ணுக்கு மட்டுமே இருப்பதாகவும் நான் நம்புகிறேன். அதனால்தான், இந்தக் கதை முழுக்க அந்தக் கதாப்பாத்திரம் நிறைய நீதி பேசும்.
படத்தில் ‘நீங்கள் அரசுக்கான அதிகாரியா? அரசுக்கு எதிரான அதிகாரியா?’ என ஒருவர் கேட்கிறார். அப்படியென்றால், மக்களுக்கான அதிகாரிகளை, அரசு வேலை செய்யவிடாமல் தடுக்கிறதா?
நாம் வாழுகிற இந்த நாடு, வணிக சந்தைகளால் கட்டமைக்கப்பட்டது. கிழக்கிந்தியக் கம்பெனி இந்த நாட்டை அடிமையாக்கி, பின் விட்டுச் சென்றாலும், ஒரு நாட்டை எப்படி ஆளவேண்டும் என்பதற்கான யுக்தியை மிகப்பெரிய வணிகர்களிடம் ஒப்படைத்துச் சென்றுவிட்டது. 1947ஆம் ஆண்டு நாம் விடுதலை பெற்றுவிட்டோம் என்று சொன்னாலும், வணிகர்களிடத்தில் இருந்து நாம் இன்னமும் விடுதலை பெறவில்லை. வணிகர்கள்தான் இந்த நாட்டின் மொத்த அரசையும் தீர்மானிக்கும் நபர்களாக இருக்கிறார்கள். சீரழிந்துவிட்ட இந்த நாட்டை செப்பனிடுவதற்கு எவ்வளவு பெரிய அதிகாரிகள் மனிதநேயத்தின் அடிப்படையில் வந்தாலும், வணிகர்களுக்கு எதிராக நடந்துவிட்டால் அவர்களை அரசுக்கு எதிரானவர்களாக வரையறுத்துவிடுவார்கள். இந்த நாடு நமக்கானது என மக்கள் நினைத்துக்கொண்டு ஓட்டு போடுகிறார்கள். ஆனால், அப்படி தேர்ந்தெடுத்த மக்களையே இந்த அரசு ஒடுக்குகிறது. ஒருவேளை ஜனநாயக அடிப்படையில் அவர்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்பு இல்லையென்றால், அரசு மக்களை நேரடியாகவே தாக்கும். அதைத்தான் படமும் சொல்லும்.
‘எந்தத் தலைவனும் இங்கு வரப்போவதில்லை’ எனச் சொல்லும் வசனமும் அதற்காகத்தானா?
இதுவரைக்கும் வரவில்லை என்பதுதானே உண்மை. நிறையபேர் தலைவர்களாக வந்தார்கள். ஆனால், அவர்களை யார் அனுப்பினார்களோ, அந்தக் கட்டமைப்பிற்கான வியாபாரத்தை முடித்துவிட்டு போய்விட்டார்களே.
இன்றைய அரசியல் சூழலில் அறம் அரசுக்கு எதிரான படமாக இருக்கிறதே?
யாருக்கும் எதிரானது கிடையாது இந்தப்படம். ஆனால், மிகப்பெரிய மாற்றத்தை இந்தப்படம் ஏற்படுத்தியிருப்பதாக நம்புகிறேன். யார் எதிரி என்று சொல்கிறீர்களோ, அவர்களையே நாம் மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அவர்களை மாற்றியமைக்காமல் நம்மால் எதுவும் செய்யமுடியாது.
மக்கள் வாழ்வில் முன்னேற்றம் அடையவேண்டும் என்பதற்காகத்தானே அரசு பல திட்டங்களைக் கொண்டுவருகிறது. அந்தத் திட்டங்களை மக்கள் விரோதம் என சொல்லிவிட முடியுமா?
தொழிற்சாலைகள் மட்டும்தான் வேலையைத் தரமுடியுமா? அப்படியென்றால் அதிகமான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் விவசாயத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? தொழிற்சாலைகள் வேலைவாய்ப்பைத் தருமென்றால் அதில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களைப் பற்றி கவலைப்படத் தேவையில்லையா? அந்த உற்பத்தி என்னை நோயாளியாக்கி, மருத்துவம் என்கிற இன்னொரு வணிகத்தின் மூலமாக என் உயிரைக் குடிக்கும் என்றால், அந்த உற்பத்தி எது என்ற கேள்வியை எழுப்புவது நியாயம்தானே? இந்த நாட்டில் விவசாயம் அழிந்துபோகவில்லை. ஆனால், அதைச் செய்வதற்கான ஆதாரங்கள் வேலைவாய்ப்பு, உற்பத்தி போன்ற பல காரணங்களைச் சொல்லி அபகரிக்கப்பட்டுவிட்டன. இந்தச் சூழலில்தான் ஒரு விவசாயி அநாதையாக்கப்பட்டிருக்கிறான்.
சினிமா எனும் பொழுதுபோக்கு தளத்தில் ரஜினி, விஜய், நயன்தாரா என யாரை வைத்து அரசியல் பேசினாலும் அதுவும் வணிகமாகத்தானே மாறுகிறது?
ஒரு பிராண்ட் எப்போதும் போராட்டமாக இருக்க முடியாது, ஒரு போராட்டம் நிச்சயம் பிராண்டாகவும் இருக்கமுடியாது. நீங்கள் சொன்ன எல்லோருமே பிராண்டாக இருக்கும்போது, எப்படி போராட்டமாக மாறும் என்று கேட்கும் கேள்வி நியாயமானது. நாம் ஒரு காரியத்தைச் செய்யும்போது, நம்முடைய பொருளை ஒரு நுகர்வோர் அதை வாங்கிக் கொள்ளாமல், ஆதரவாளராக மாறவேண்டும். என் பேச்சைக் கேட்டு ரசிக்கத் தொடங்கினால் அது நுகர்வாகிவிடும். அதற்குப் பதிலாக தடியை எடுத்துக்கொண்டு போராடக் கிளம்பினால், அவர்களை நான் போராளிகளாக மாற்றிவிட்டேன் என்று அர்த்தம். அதேசமயம், சினிமாக்களால் புரட்சி ஏற்பட்டுவிடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். புரட்சியை மக்களாலும், அரசியலாலும், தியாக உணர்வுள்ள உன்னதமான தலைவர்களாலும் மட்டுமே செய்யமுடியும். ஆனால், ஒரு கலைஞனால் அந்தப் போராட்டத்திற்கான கலகத்தை ஏற்படுத்த முடியும்.
No comments:
Post a Comment