“வாழ்க்கை என்னும் நதி, மரணம் என்னும் கடலில் கலக்கும் வரை வெவ்வேறு திசைகளிலும் வெவ்வேறு மேடு பள்ளங்களிலும் ஓடவேண்டியிருக்கிறது.”
- நா.முத்துக்குமார்
- நா.முத்துக்குமார்
நண்பர்களே... நான் இப்போது தரமணி ரயில்வே
ஸ்டேஷனில் நின்றுகொண்டிருக்கிறேன். இங்கு என் முன்னால் ஒரு ரயில் வண்டி
நிறுத்தப்பட்டிருக்கிறது. அதில் `நா.முத்துக்குமார் எனும் பேரன்பு
எக்ஸ்ப்ரஸ்’ என எழுதப்பட்டிருக்கிறது. அந்த ரயில், ஓடிக் களைத்து நிற்கிறது
என்பது அதன் மெளனத்திலேயே உணர முடிகிறது. மெளனமாக இருப்பதால் அதன் பயண
இலக்கு என்னவென்பது யாருக்குமே தெரியவில்லை. ஆனால், அது இனிமேல் எங்கும்
பயணிக்காது என்ற உண்மை இங்கு உள்ள எல்லோருக்கும் தெரிந்தே இருக்கிறது. அந்த
ரயிலுக்கும்தான்! ஆனால், அந்த ரயிலுக்கு அதுகுறித்த எந்த வருத்தமும்
இருப்பதாகத் தெரியவில்லை. ஏனென்றால், இறப்பதற்கு முன்பே தன் இறப்பை அறிய
விரும்பி, அறிந்தும்கொண்ட ரயில் அது.
அது, தண்டவாளத்தில் ஓடக்கூடிய இரும்பு
ரயில் அல்ல; வண்ணத்துப்பூச்சிகளின் வண்ணங்கள் மிதக்கும் பனித்துளிகளால் ஆன
கடலுக்குள் பயணிக்கும் விசேஷ ரயில். ஆனாலும், அந்த ரயில் மிகமிகச்
சாதாரணமாக இருந்தது. ஓடாத ரயில் சாதாரணமாக இருப்பதில் ஆச்சர்யம் இல்லைதான்.
ஆனால், இது அசுர வேகத்தில் ஓடும்போதுகூட இதேபோல்தான் இருந்தது. அந்த
ரயிலில் கூட்டம் கும்மியபோதும், எல்லோரும் அதைப் பார்த்து வியந்தபோதும்,
சிலாகித்தபோதும், அதில் இடம்பிடிக்க பலர் அடித்துக்கொண்டபோதும், அது தன்
பாதையை நோக்கி கவிதை கூவியபடி ஓடிக்கொண்டிருந்ததேயொழிய அது வேறு எதுவும்
செய்யவில்லை. எத்தனையோ மனிதர்களை எங்கெங்கோ கூட்டிச்சென்ற அந்த ரயிலில் ஏறி
பார்க்க, யாருக்குதான் ஆசை வராது? எனக்கும் வந்தது, ஏறினேன்.
முதல் பெட்டியில் ‘தூசிகள்’ என்றும்
கடைசிப் பெட்டியில் ‘பேரன்பின் ஆதி ஊற்று’ என்றும் எழுதப்பட்டிருந்ததை என்
கண்கள் கவனித்தன. `மனதில் உள்ள தூசிகளை எல்லாம் தட்டினால்தான் பேரன்பின்
ஆதி ஊற்றை அடைய முடியுமோ?' என்ற கேள்வியை எனக்குள்ளே கேட்டுக்கொண்டேன்.
ஓராயிரம் பாடல்கள் அந்த ரயிலில் ஒன்றன் பின் ஒன்றாக ஒலிக்க ஆரம்பித்தன.
காதல், சிநேகம், காமம், ஏக்கம், துரோகம் என இருக்கும் எல்லா உணர்வுகளையும்
எளிய வரிகளாக்கிச் செய்யப்பட்ட அந்தப் பாடல்களில் பேரன்பு
வழிந்துகொண்டிருந்தது. அந்த அன்பின் அழுத்தத்துக்குத் தாக்குப்பிடிக்க
முடியாமல் தத்தளித்தேன். திடீரென ஒரு விரல் ஒரே அழுத்தில் அந்தப்
பாடல்களை நிறுத்தியது. நிமிர்ந்து பார்த்தால் யாருமில்லை! ஏதோ ஒரு
பெட்டியிலிருந்து பெரும் சத்தம்... அந்தப் பெட்டியை நோக்கி ஓடினேன்.
‘அணிலாடும் முன்றில்’ என எழுதப்பட்டிருந்த அந்தப் பெட்டியில், அம்மா,
அப்பா, அக்கா, தம்பி, ஆயா, தாய்மாமன், அத்தை, தாத்தா, சித்தி, அண்ணன்,
தங்கை, பங்காளிகள், பெரியம்மா, மாமன்கள், முறைப்பெண்கள், சித்தப்பா,
அண்ணி, மைத்துனன், மனைவி, மகன் என சகல உறவுகளின் பெயரிலும் தனித்தனி
அறைகள் இருந்தன.
தங்கை இல்லாதவன் என்கிற தவிப்பு எனக்கு
இயல்பிலேயே இருப்பதால், முதலில் `தங்கை' என எழுதப்பட்டிருந்த அறையைத்
திறந்தேன். “ஆஹா... அது எத்தனை அற்புதமான அறை! அதில் தங்கையின் சின்னச்
சின்ன அசைவுகளும் அத்தனை நுணுக்கமாக அல்லவா செதுக்கப்பட்டிருந்தது.
அண்ணன்மேல் தங்கைகொள்ளும் அன்பும் பாசமும் இத்தனை அலாதியானவையா? தங்கையுடன்
பிறக்காத அத்தனை அண்ணன்களும் துரதிர்ஷ்டசாலிகள் என்ற மெய் உணர்ந்த கணம்
அது. தங்கையின் அருமை பெருமைகளைச் சொல்லிவிட்டு, கடைசியில் கஷ்டப்பட்டுச்
சம்பாதித்து கல்யாணம் பண்ணித் தர மட்டுமா அக்காவும் தங்கையும்? அந்த அறை
கேட்ட ஒற்றைக் கேள்வி... அக்காவையும் தங்கையையும் சுமையாக நினைக்கும்
அண்ணன் தம்பிகளின் மனதை உலுக்கும் ஓராயிரம் கேள்விக்குச் சமம்.
அடுத்ததாக `அம்மா' என எழுதப்பட்ட அறையைத்
திறந்தேன். “மன்னிக்க... அந்த அனுபவத்தை என்னால் எழுத்தில் கொண்டுவர
முடியவில்லை. அங்கு பார்த்த அன்பின் எடை இந்தப் பிரபஞ்சத்தின் மொத்த
எடையையும்விட கூடுதலானது என்பதை மட்டும் என்னால் உறுதியாகச் சொல்ல
முடியும்.
அடுத்ததாக `அப்பா' என்ற அறையைத்
திறந்தேன், “காலம் காலமாக ஒளித்துவைக்கப்பட்டிருக்கும் அப்பாக்களின் முகம்,
அன்பு அப்பாக்களின் முகம், ஆசை அப்பாக்களின் முகம் அங்கு இருந்ததை என்னால்
உணர முடிந்தது. செத்துப்போன என் அப்பாவை ஒரு கணம் கும்பிட்டுக்கொண்டேன்.
அவருக்காக நான் ஒரு கடிதம் எழுத வேண்டும். அதில் அவரைப் பற்றிய அத்தனை
சித்திரங்களையும் கொண்டுவர வேண்டும் என்ற ஆசையும் அங்கே எனக்குள்
முளைத்தது.
இப்படியாக, நான் எல்லா உறவுகளின் அறையும்
திறந்துப் பார்க்கப் பார்க்க வியந்துபோனேன். `அட... இது எதையுமே நாம்
உணரவில்லையே... ரசிக்கவில்லையே! என்ன வாழ்க்கை வாழ்கிறோம்? பணம்
சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாகக்கொண்ட இந்த வாழ்க்கை, எத்தனை மோசமானது!
ரசனை இல்லாதது' என்பதும் `அப்படி வாழும் மனிதர்கள் முதுகெலும்பு இல்லாத
மனிதர்கள்' என்பதும் விளங்கிற்று. அந்த நொடி முதல் இருக்கும் உறவுகளின்
மீது தீராத பற்றும், இல்லாத உறவுகளின் மீது ஏக்கமும் பிறந்தது.
அணிலாடும் முன்றிலைப் பார்த்த பரவசத்தில்,
அடுத்தடுத்த பெட்டிகளைப் பார்க்க பேராவல்கொண்டேன்; துள்ளிக் குதித்து
ஓடினேன். “ `பட்டாம்பூச்சி விற்பவன்', `நியூட்டனின் மூன்றாம் விதி',
`குழந்தைகள் நிறைந்த வீடு', `அனா ஆவன்னா', `என்னைச் சந்திக்க கனவில் வராதே'
எனத் தங்கத்தால் ஆனா குட்டிக் குட்டி அறைகள் இருந்தன. ஒவ்வோர் அறையையும்
திறக்கும்போதுதான் தெரிந்தது, மேலே மட்டும்தான் தங்க முலாம்
பூசப்பட்டிருக்கிறது என்ற உண்மை. உள்ளே அத்தனை வேலைப்பாடுகளும் மயிலறகால்
செய்யப்படிருந்தன. பள்ளிக்கூடக் காதலிகள் அங்கே
சிறைபிடிக்கப்பட்டிருந்தார்கள். தன் மனதில் உள்ள அழுக்கை தூர்வாராமல்
கிணற்றைத் தூர்வாரும் அப்பாவின் தவறு அங்கே சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
கீழ் வீட்டுக்காரனைத் தொல்லை செய்யும் மேல் வீட்டுக்காரனுக்குப் பாடம்
எடுக்கப்பட்டுக்கொண்டிருந்தது, தன்னை காலம் முழுக்க தீண்டியவளின் பிரிவை
எண்ணி அழும் தையல் மெஷின்கள் அங்கு இருந்தன. கிழிந்து தேய்ந்துபோன சைக்கிள்
டயர், தான் கடந்து வந்த பாதைகளை காற்றோடுப் பேசிக்கொண்டிருக்கும்
அதிசயத்தை அங்கே பார்க்க முடிந்தது.
பிறந்த வீட்டை துறந்து புகுந்த வீட்டிற்கு
போகும் பெண்கள் தங்கள் அடையாளம் தெரியாமல் தவித்தார்கள். பனித்துளிகள்,
புற்களின் மீது தூங்கிக்கொண்டிருந்தன. இன்னும் இத்தியாதி... இத்தியாதி...
அவற்றை எல்லாவற்றையும் ஒருவன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான்.
‘பேரன்பின் ஆதி ஊற்றில்’ நனைந்ததால் எனக்கு அன்பின் நடுக்கம் தாங்கவில்லை.
அந்த ரயிலிலிருந்து குதிக்க ஆயத்தமானேன். “என் ப்ரிய நண்பா... பிணத்தை
எரித்துவிட்டு சுடுகாட்டிலிருந்து கிளம்புகிறவர்களிடம் சொல்வதைப்போல்
சொல்கிறேன். ‘திரும்பிப் பார்க்காமல் முன்னே நடந்து போ' ” என்றது ஒரு
குரல். அந்தக் குரலைக் கேட்ட மகிழ்ச்சியில் திரும்பிப் பார்க்காமல்
முன்னே சென்று குதித்தேன். அந்த ஓராயிரம் பாடல்களும் மீண்டும் ஒன்றன் பின்
ஒன்றாக ரயிலுக்குள் ஒலிக்கும் சத்தம் கேட்டது.
எம்.புண்ணியமூர்த்தி
No comments:
Post a Comment