Tuesday 14 April 2015

நடிகர், இயக்குனர்களின் சொந்தப்பட முடிவு ஏன்?

நடிகர்களும், இயக்குனர்களும் சொந்தப்பட தயாரிப்பில் ஆர்வம் காட்டுகின்றனர். கடந்த சில வருடங்களில் தயாரிப்பாளர்களான இயக்குனர்களின் எண்ணிக்கை இரண்டு டஜனை தொடுகிறது.
 


படம் தயாரிப்பது தற்கொலைக்கு சமமாக மாறிவரும் சூழலில் நடிகர்கள், இயக்குனர்கள் மட்டும் படத்தயாரிப்பில் ஆர்வம் காட்டுவது ஏன்?
 
பாலா தனது பி ஸ்டுடியோஸ் சார்பில் பிசாசு படத்தை தயாரித்தார். மிஷ்கின் படங்களுக்கு மினிமம் ஐந்து கோடி வியாபாரமிருக்கிறது. புதுமுகம் நடித்திருந்தாலும். பிசாசு மூன்றரை கோடியில் தயாரானது. அதனை ஐந்தரை கோடிக்கு அவர் ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸுக்கு தந்தார். உட்கார்ந்த இடத்தில் இரண்டு கோடி லாபம். பாலா என்ற பெயருக்கு இருக்கும் விளம்பர வெளிச்சத்தால் அவரால் இரண்டு கோடி சம்பாதிக்க முடிந்தது. 
 
சுசீந்திரன், ஆதலால் காதல் செய்வீர் படத்தை பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் தயாரித்தார். அதாவது, ஒரு கதையைச் சொல்லி, அதனை படமாக்க ஐந்து கோடியோ இல்லை பத்து கோடியோ ஆகும். அதற்குள் படத்தை முடித்துவிடுவேன் என்று ஒப்பந்தம் போட்டு, தயாரிப்பாளரிடமிருந்து பணத்தை வாங்கி படமெடுத்து முதல் காப்பியை தயாரிப்பாளரிடம் தருவது. ஒப்பந்தத்தைத் தாண்டி பட்ஜெட் எகிறினால் அது தயாரிப்பாளரின் கவலையில்லை, பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் படத்தை எடுத்துத்தர முன்வந்தவர்தான் அப்பணத்துக்கு பொறுப்பு.
 
சுசீந்திரன், ஆதலால் காதல் செய்வீர் படத்தை பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் எடுத்துத் தருவதாக பெரிய தொகை ஒன்றை வாங்கி, மிகக்குறைந்த பட்ஜெட்டில் படத்தை முடித்தார். அந்தவகையில் அவருக்கு மூன்று கோடிக்கு மேல் லாபம் பார்த்ததாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. 
 
இப்போது பல இயக்குனர்கள் பர்ஸ்ட் காப்பி அடிப்படையில்தான் படம் இயக்குகின்றனர். யுடிவு தொடர் தோல்விகளை சந்தித்தபின், படத்தை இயக்குகிறவர்களை தயாரிப்பில் துணைக்கழைத்துக் கொள்கிறது. ஆரம்பம் படத்தில் விஷ்ணுவர்தன், அஞ்சானில் லிங்குசாமி, புறம்போக்கில் ஜனநாதன். இயக்குனரையும் ஒரு தயாரிப்பாளராக சேர்த்துக் கொள்ளும்போது யுடிவியின் ரிஸ்க் குறைகிறது.
 
குறித்த நேரத்தில் படம் வெளியாகாத கோபத்தில் விஷால் தயாரிப்பாளரானார். அவர் தயாரித்த இரு படங்களும் குறித்த நேரத்தில் வெளியாயின. விஷாலே ஒரு தயாரிப்பாளர் எனும் போது, அவரை வைத்து படம் தயாரிக்க படநிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன.
 
சூர்யா, கார்த்தி படங்கள் பல கோடிகள் லாபம் சம்பாதிப்பதால் அவர்களே படத்தை தயாரிக்க ஆரம்பித்தனர். அதனால்..
 
சம்பளத்துடன், ஒரு தயாரிப்பாளருக்கு கிடைக்கும் லாபமும் அவர்களை சென்றடைகிறது.
 
சிவ கார்த்திகேயனும் இனி சொந்தப் படங்கள் தயாரிப்பது என்ற முடிவை எடுத்திருக்கிறார். அவர் ஒரு படம் தயாரிப்பார். அதனை யார் அதிக விலைக்கு கேட்கிறார்களோ, அவர்கள் படத்தை வெளியிட்டுக் கொள்ளலாம்.
 
ஏன் இப்படியொரு முடிவு?
 
சிவ கார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான படம் காக்கி சட்டை. கதையாகப் பார்த்தால் சுமாரான படம். ஆனால் வசூல்? 14 கோடியில் தயாரான படம் 50 கோடிக்கு மேல் வசூலித்ததாக சிவ கார்த்திகேயனே ட்விட்டரில் கூறினார். 50 கோடி வசூலித்த படத்துக்கு - தனுஷ் தயாரிப்பாளர் என்பதால் - ஐந்து கோடி அளவுக்கே சம்பளம் வாங்கியிருப்பார் சிவ கார்த்திகேயன். வெளி தயாரிப்பாளர் என்றால், எட்டு கோடிவரை கிடைக்கும். 
 
சிவ கார்த்திகேயன் இதே காக்கி சட்டையை அவரது சம்பளம் போக பத்து கோடியில் தயாரித்திருந்தால், குறைந்தபட்சம் 30 கோடிகளுக்கு விற்றிருக்கலாம். லாபம் 20 கோடிகள். 
 
சிவ கார்த்திகேயன் படம் என்றால் பத்து கோடி சேட்டிலைட் உரிமையே போகிறது. திரையரங்கு வியாபாரம் வெளிநாட்டு உரிமை என்று முப்பது கோடி உறுதி. நடிகர்கள் தயாரிப்பாளராகும் போது நடிகராக சம்பாதிப்பதைவிட மூன்று மடங்கு ஒரே படத்தில் சம்பாதிக்கலாம்.
 
ஒன்றுக்கு மேற்பட்ட தொழில் இருந்தால் அதுவே ஒரு பலம். சன் பிக்சர்ஸ் படம் தயாரித்தால் சன் தொலைக்காட்சியில் புரமோட் செய்யலாம். இதுவே வேறு ஒருவர் என்றால் விளம்பரத்துக்கே கோடிகள் அழவேண்டும். நடிகரோ, இயக்குனரோ தயாரிப்பில் இறங்கும் போது தயாரிப்பின் ரிஸ்க் குறைகிறது. அதனை இன்றைய தலைமுறை அறுவடை செய்ய முயல்வதன் விளைவே நடிகர்கள், இயக்குனர்களின் தயாரிப்பு அவதாரம்.
 

No comments:

Post a Comment