Saturday, 26 September 2020

பன்முகத் திறன் கொண்ட எஸ்.பி.பாலசுப்ரமணியன் பற்றிய சில முக்கிய தகவல்கள்...

 1.ஆந்திரப் பிரதேசத்தில் இருக்கும் நெல்லூர் மாவட்டத்தில் பிறந்தவர் எஸ் பி பாலசுப்ரமணியம் தந்தை இசைக்கலைஞர். காலஹஸ்தி பள்ளியில் எஸ்எஸ்எல்சியும் ஆர்ட்ஸ் கல்லூரியில் பி.யூ.சி முடித்தார். பாலசுப்பிரமணியம் தனது இளம் வயதிலேயே பாடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.
2.தெலுங்கு சங்கம் நடத்திய பாட்டுப்போட்டி 3 ஆண்டுகள் முதல் பரிசு வென்றவர்களுக்கு வெள்ளிக் கோப்பை வழங்குவது வழக்கமாக கொண்டிருந்தனர். முதல் இரண்டு ஆண்டுகள் பாலசுப்பிரமணியம் முதல் பரிசைப் பெற மூன்றாம் ஆண்டு வெற்றி பெற்றால் வெள்ளிக் கோப்பை கொடுக்க வேண்டி வரும் என வேண்டுமென்றே இரண்டாவது பரிசை அறிவித்தனர். ஆனால் அப்போட்டியில் தலைமை தாங்கிய பிரபல பின்னணி பாடகியான எஸ் ஜானகி பாலசுப்பிரமணியம் தான் அனைவரையும் விட நன்றாகப் பாடினார் என வாதாடி முதல் பரிசைப் பெற்றுக் கொடுத்தார்.

3.சென்னை பொறியியல் கல்லூரியில் தனக்கு இடம் கிடைக்காததால் தொழில் கல்வியை பயின்றார். 1966ஆம் ஆண்டு கோதண்டபாணி இசைத்த தெலுங்கு படத்தில் பாலசுப்ரமணியம் முதன்முதலாக பாடினார். அதனைத் தொடர்ந்து பல பாடல்களை அவர் பாடத் தொடங்கினார்.

4.தமிழில் இவர் முதன்முதலாக பாடல் பாடியது சாந்தி நிலையம் என்ற திரைப்படத்தில் தான். ஆனால் அத்திரைப்படம் வெளிவரும் முன்னரே எம்ஜிஆர் நடிப்பில் வெளிவந்த அடிமைப்பெண் படத்தில் இவர் பாடிய ஆயிரம் நிலவே வா பாடல் வெளி வந்துவிட்டது.


5.ஏராளமான வாய்ப்புகள் குவிய இளையராஜா, எம் எஸ் விஸ்வநாதன், யுவன்சங்கர், எஆர் ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ் உட்பட அனைத்து இசையமைப்பாளர்களின் இசையிலும் பாலசுப்பிரமணியம் பாடியுள்ளார்.
6.கர்நாடக இசையை முறையாக பயிலாத பாலசுப்பிரமணியம் சங்கராபரணம் படத்தில் கர்நாடக இசையில் அமைந்த பாடல்களை மிகவும் சிறந்த முறையில் பாடி உலகம் முழுவதிலும் பிரபலமானவர் ஆனார் அத்திரைப்படத்திற்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார்.


7.தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட இவர் எந்த மொழியில் பாடல் பாடினாலும் இயல்பான உச்சரிப்புடன் பாடுவதே இவரது சிறப்பு அம்சம்.

8.40 ஆயிரம் பாடல்களுக்கும் அதிகமாக பாடி உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் தனது பெயரை பதித்தவர். சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதை ஆறு முறை பெற்றவர்.

9.கர்நாடக தமிழக அரசுகளின் பல விருதுகளையும் ஆந்திர அரசின் நந்தி விருதினை 25 முறை பெற்றவர். தமிழக அரசின் கலைமாமணி விருது வாங்கியவர்.

10.1981 ஆம் ஆண்டு பெங்களூரில் இருந்த ரெக்கார்டிங் தியேட்டரில் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை 21 கன்னட பாடல்களை இசையமைப்பாளர் உபேந்திர குமார் என்பவருக்காக பாடி சாதனை புரிந்தார். 19 பாடல்களை தமிழில் ஒரே நாளில் பாடிய சாதனையும் இவருக்கு உண்டு. ஆறு மணி நேரத்தில் 16 ஹிந்தி பாடல்களை பாடியவர் இவர்.

11.ரஜினி கமல் பாக்யராஜ் உட்பட பலருக்கும் பல மொழி படங்களில் பின்னணி குரல் கொடுத்தவர் பாலசுப்ரமணியம்.

12.தென்னிந்திய மொழிகளில் 70க்கும் அதிகமான படங்களில் தனது நடிப்புத் திறனையும் வெளிப்படுத்தியுள்ளார் கன்னடம் தெலுங்கு தமிழ் இந்தி ஆகிய மொழிகளில் 45க்கும் அதிகமான படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

13.நான்கு தலைமுறை நடிகர்களுக்கு பின்னணி பாடிய ஒரே பாடகர் என்ற பெருமை எஸ்.பி.பாலசுப்ரமணியத்தை சேரும். 


திரையுலகம் முதல் இசை ரசிகர்கள் வரை அனைவரையும் கண்ணீர் சிந்த வைத்துவிட்டு, தற்போது மீளா துயில் கொண்டிருக்கிறார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். அவரைப் பலரும் அறியாத 5 தகவல்களை தற்போது பார்க்கலாம்..

அந்த 5 தகவல்கள் :-

1. ரஜினியின் துடிக்கும் கரங்கள் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றியவர் எஸ்.பி.பி.

2. இசையில் மட்டுமில்லாது, கிரிக்கெட்டிலும் எஸ்.பி.பி-க்கு மிகுந்த ஆர்வம் இருந்துள்ளது. இதன்காரணமாக, சச்சின் தான் கையெழுத்திட்ட கிரிக்கெட் மட்டையை, எஸ்.பி.பி-க்கு பரிசளித்திருக்கிறார்.

3. இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிப்பெற்ற திரைப்படம் முதல் மரியாதை. இந்த படத்தில், சிவாஜிக்கு பதில் நடிக்க வேண்டியவர் எஸ்.பி.பி தான். கால்ஷீட் பிரச்சனை காரணமாக, நடிக்க முடியாமல் போனது.

4. பாடுவதில் மட்டும் தான் SPB வல்லவர் என்று அனைவரும் நினைத்துக்கொண்டு இருக்கிறோம். ஆனால், புல்லாங்குழல் வாசிப்பதிலும், ஓவியம் வரைவதிலும் மிகுந்த திறமைக்கொண்டவர் எஸ்.பி.பி.

5. எஸ்.பி.பியின் பள்ளித் தோழரான விட்டல், ஆரம்பம் முதல் இன்றுவரை அவருடன் இருக்கிறார். எஸ்.பி.பியின் கால்ஷீட், உணவு, உடல்நலம் உள்ளிட்ட முக்கியமான விஷயங்களை பார்த்துக்கொள்பவர் அவர் தான்.

உலகம் முழுவதும் இசைக்கச்சேரிகளை நடத்திய எஸ்.பி.பி, ரஷ்யாவில் மட்டும் தான் ஒரு முறை கூட கச்சேரியை நடத்தவில்லை..


சுவாரசிய சம்பவம்.. முதல் படத்திலேயே.. MGR-க்காக SPB பாடியபோது..

ஆரம்பத்தில் எஸ்.பி.பி தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் மட்டுமே பாடல்களை பாடி வந்தார். இந்த சம்பவத்திற்கு பிறகு தான், எம்.ஜி.ஆரின் அடிமைப்பெண் படத்தில் பாடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது…

எம்.ஜி.ஆர் படத்தின் தெலுங்கு டப்பிங்கிற்காக, ஸ்டுடியோ ஒன்றில் எஸ்.பி.பி பாடிக்கொண்டு இருந்தார். அப்போது, எஸ்.பி.பியின் குரலைக் கேட்ட எம்.ஜி.ஆர், தனது அடுத்த படத்தில் எஸ்.பி.பி பாட வேண்டும் என்று நினைத்திருக்கிறார்.

இதையடுத்து, எஸ்.பி.பி பற்றி இசையமைப்பாளர் கே.வி. மகாதேவனிடம் எம்.ஜி.ஆர் கூறியிருக்கிறார். பிறகு எஸ்.பி.பி வீட்டிற்கு சென்ற கே.வி. மகாதேவன், சின்னவர் ( எம்.ஜி.ஆர்) தனது படத்தில் நீங்கள் பாட வேண்டும் என விரும்புகிறார் என்று கூறியிருக்கிறார்.

உடனே, மகிழ்ச்சியடைந்த எஸ்.பி.பி, எம்.ஜி.ஆரின் ராமாபுரம் தோட்டத்திற்கு சென்றுள்ளார். ஆரம்பத்தில் தயக்கமாக இருந்தாலும் பிறகு சுசீலாவுடன் இணைந்து ஆயிரம் நிலவே வா பாடலை பாடிப் பயிற்சி எடுத்தார். பாடலை ஒலிப்பதிவு செய்வதற்குள் எஸ்.பி.பி-க்கு டைஃபாய்ட் காய்ச்சல் ஏற்பட்டதால், பாடலை முழுவதுமாக ஒலிப்பதிவு செய்ய முடியவில்லை.

ஒரு வாரத்தில் அந்த பாடலுக்கான படப்பிடிப்பு தொடங்க இருப்பதால், எஸ்.பி.பி மிகவும் வருந்தியுள்ளார். எம்.ஜி.ஆர் படத்தில் பாட இருந்த வாய்ப்பை தவறவிட்டுவிட்டேன் என்று நினைத்திருக்கிறார். மீண்டும் உடல் நலம் தேறிய பிறகு, எஸ்.பி.பிக்கு அழைப்பு வந்துள்ளது.

அதில், மீண்டும் பாடல் பாட வாருங்கள் என்று கூறியிருக்கிறார்கள். இதனைக்கேட்டு ஆச்சரியமடைந்த எஸ்.பி.பி, அந்த பாடலை பாடிக்கொடுத்தார். பிறகு அவர் பாடியதைக் கேட்டு எம்.ஜி.ஆரும் பாராட்டியுள்ளார். ஆர்வம் தாங்காமல் இந்தப் பாடலைத் தன்னையே பாட வைத்தது ஏன் எனக் கேட்டுள்ளார் எஸ்.பி.பி.

இதற்கு பதில் அளித்த எம்.ஜி.ஆர், என்னுடைய படத்துக்குப் பாடுகிறேன் என நண்பர்களிடம் சொல்லியிருப்பீர்கள்.

இப்போது உங்களுக்குப் பதிலாக வேறொரு பாடகரைப் பாட வைத்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? எனக்கு உங்களின் குரல் பிடிக்கவில்லை என்பதால் தான் பாடகரை மாற்றிவிட்டேன் என வெளியே செய்தி வரும். இந்தத் துறையில் நீங்கள் முன்னேறுவதற்கு அது தடையாக அமையும்.

எனவே தான் நீங்கள் தேறி வரும் வரை படப்பிடிப்பை தள்ளி வைத்துவிட்டேன் என்று கூறியுள்ளார் எம்.ஜி.ஆர். இதைக் கேட்டு மிகவும் உணர்ச்சிவசப்பட்டு எம்.ஜி.ஆரிடம் ஆசிர்வாதம் வாங்கியிருக்கிறார் எஸ்.பி.பி.

SPB பெற்ற விருதுகள் என்னென்ன..? ஓர் பார்வை..!


பாடகர், நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என்று பன்முகத்தன்மைக் கொண்டவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். 16 மொழிகளில், இதுவரை 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய இவர், கின்னஸ் சாதனைகளையும் படைத்திருக்கிறார். இதுவரை 6 முறை தேசிய விருது வென்ற இவர், பல்வேறு என்னனெற்ற விருதுகளை பெற்றிருக்கிறார். அந்த விருதுகள் பற்றிய முக்கிய தொகுப்பை தற்போது பார்க்கலாம்..

எஸ்.பி.பி பெற்ற முக்கியமான விருதுகளின் தொகுப்பு..

இந்திய அரசின் முக்கிய விருது :-

1. பத்மஸ்ரீ விருது – 2001-ஆம் ஆண்டு

2. பத்ம பூஷன் – 2011-ஆம் ஆண்டு

தேசிய விருது :-

1. சங்கராபரணம் – தெலுங்கு – 1979 ஆம் ஆண்டு

2. ஏக் துஜே கேலியே – இந்தி – 1981 ஆம் ஆண்டு

3. சாகார சங்கமம் – தெலுங்கு – 1983 ஆம் ஆண்டு

4. ருத்ரவீணா – தெலுங்கு – 1988 ஆம் ஆண்டு

5. சங்கீத சாகரா கணயோகி பஞ்சக்ஷரா காவாய் – கன்னடா – 1995 ஆம் ஆண்டு

6. மின்சார கனவு – தமிழ் – 1996 ஆம் ஆண்டு

தமிழக அரசு விருது :-

1. அடிமைப்பெண், சாந்தி நிலையம் – சிறந்த பாடகருக்கான தமிழக அரசு விருது – 1969 ஆம் ஆண்டு

2. நிழல்கள் – சிறந்த பாடகருக்கான தமிழக அரசு விருது – 1980 ஆம் ஆண்டு

3. கேளடி கண்மணி – சிறந்த பாடகருக்கான தமிழக அரசு விருது – 1990 ஆம் ஆண்டு

4. ஜெய் ஹிந் – சிறந்த பாடகருக்கான தமிழக அரசு விருது – 1994 ஆம் ஆண்டு

5. ஒட்டுமொத்த பங்களிப்பிற்காக 1981-ஆம் ஆண்டு கலைமாமணி விருது பெற்றார்.

அஜித் நடிப்பதற்கு காரணமே SPB தான்..! குட்டியாக ஒரு பிளாஷ்பேக்..!


பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு குறித்து பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அஜித் நடிப்பதற்கு SPB காரணமாக இருந்த விஷயம் பற்றிய குட்டி பிளாஷ்பேக்கை பார்க்கலாம்..

நடிகர் அஜித் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று வாய்ப்புகளை தேடி வந்துக்கொண்டிருந்த காலம் அது. அப்போது, சில விளம்பரப் படங்களில் நடித்துக்கொண்டிருந்தார்.

அந்த சமயத்தில், அஜித்திற்கு ஹேமா என்ற விளம்பரப்பட ஒருங்கிணைப்பாளருடன் பழக்கம் ஏற்பட்டது. இவ்வாறு நடந்துக்கொண்டிருக்க, ஒரு நாள் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை பார்க்க சென்ற ஹேமா, தல அஜித்தின் புகைப்படத்தை அவரிடம் கொடுத்துள்ளார்.

“என்னுடைய நண்பர் தான் இவர். சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு ஏதேனும் இருந்தால் கூறுங்கள்” என்று கேட்டிருக்கிறார் ஹேமா. “சரி” என்று புகைப்படத்தை கையில் வாங்கிக்கொண்டார் எஸ்.பி.பி. அடுத்த நாள், தனது நண்பரும், தெலுங்கு சினிமா தயாரிப்பாளருமான பூர்ணசந்திர ராவை சந்திக்க சென்றார் எஸ்.பி.பி.

அப்போது, “எனது புதிய படத்திற்கு ஹீரோ கிடைக்கவில்லை. பார்ப்பதற்கு மிகவும் அழகான முகமாக இருக்க வேண்டும். அப்படியொரு ஹீரோ இன்னும் கிடைக்கவில்லையே” என்று புலம்பியிருக்கிறார் அந்த தயாரிப்பாளர்.

இந்த சமயத்தில் தான் அஜித்தின் புகைப்படம் எஸ்.பி.பி-க்கு தோன்றியிருக்கிறது. அந்த தயாரிப்பாளரிடம் புகைப்படத்தை எடுத்துக்காட்டினார். உடனே பிடித்துப்போக, அஜித்தையே ஹீரோவாக மாற்றிவிட்டார் அந்த தயாரிப்பாளர். அந்த படம் தான், அஜித் அறிமுகமாகிய பிரம்ம புஸ்தகம்..

அந்த படத்தைத் தொடர்ந்து தான், அஜித் தமிழில் அமராவதி படத்தில் அறிமுகமாகினார். அஜித்தின் பல்வேறு பாடல்களுக்கு குரல் கொடுத்துள்ள எஸ்.பி.பாலசுப்பிரமணியம், உல்லாசம் என்ற படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்துள்ளார்.

No comments:

Post a Comment