Tuesday, 25 August 2020

விஜயகாந்த்

 *1. விஜயகாந்தின் சொந்த ஊர் மதுரை. சொந்தமாக ரைஸ் மில் உள்ள பணக்கார குடும்பத்தில் பிறந்தார். வருடம், 25 ஆகஸ்ட் 1952.*




*2. விஜயகாந்தின் இயற்பெயர் விஜய்ராஜ; அழகர்சாமி.*

*3. சின்ன வயதிலேயே சினிமாவில் ஆர்வம். சினிமாவுக்காக விஜயராஜ் என்ற 
பெயரை விஜயகாந்த் என்று மாற்றினார்.*

*4. விஜயகாந்தின் முதல் படம் இனிக்கும் இளமை. 1979 இல் வெளியானது. 
ஆனால், படம் சரியாகப் போகவில்லை.*

*5. விஜயகாந்தின் முதல் பிரேக், 1980 இல் வெளியான தூரத்து இடிமுழக்கம். 
அவரை தமிழ் ரசிகர்கள் ஒரு நாயகனாக அங்கீகரித்த படம்.*

*6. 1981 இல் வெளியான சட்டம் ஒரு இருட்டறை விஜயகாந்தின் முதல் மாஸ் 
ஹிட். எஸ்.ஏ.சந்திரசேகரன் படத்தை இயக்கியிருந்தார். மலையாளம், 
கன்னடம், இந்தி, தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் இப்படம் ரீமேக் 
செய்யப்பட்டது. இந்தப் படத்திலிருந்து விஜயகாந்த் – எஸ்.ஏ.சந்திரசேகரன்
காம்பினேஷன் கொடிகட்டிப் பறந்தது.*

*7. இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் 
முதலில் திரையிடப்பட்ட விஜயகாந்தின் படம், தூரத்து இடிமுழக்கம்.*

*8. ஆரம்பகாலத்தில் விஜயகாந்தின் கதாபாத்திர பெயர் பெரும்பாலும் விஜய் 
என்றே இருக்கும். இதுவரை பத்தொன்பது படங்களில் அவரது 
கதாபாத்திரத்துக்கு விஜய் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.*

*9. கம்யூனிச சித்தாந்தத்தின் மீது அப்போது அவருக்கு ஈடுபாடு இருந்தது. 
வெள்ளை புறா ஒன்று படத்தில் அவர் அணிந்திருக்கும் செயினில் சுத்தியல் 
அரிவாள் நட்சத்திர டாலர் இருப்பதை பார்க்கலாம்.*

*10. 1984 விஜயகாந்தின் திரைவாழ்க்கையில் முக்கியமான வருடம். அந்த 
வருடம்தான் விஜயகாந்தின் வைதேகி காத்திருந்தாள் படம் வெளியானது.*

*11. 1984 இல் வைதேகி காத்திருந்தாள், நூறாவது நாள், வேங்கையின் மைந்தன்,
சபாஷ் உள்பட 18 படங்கள் வெளியாயின. இவை அனைத்திலும் விஜயகாந்த்
நாயகனாக நடித்திருந்தார். நாயகனாக ஒரு நடிகரின் படம் ஒரு வருடத்தில் 18 
வெளியானது, இன்றுவரை முறியடிக்கப்படாத சாதனையாக உள்ளது.*

*12. ஆரம்பத்தில் விஜயகாந்தின் கறுப்பு நிறம் காரணமாக முன்னணி 
நடிகைகள் அவருடன் ஜோடியாக நடிக்க மறுத்தனர். தொடர் வெற்றிகளுக்குப்
 பிறகு விஜயகாந்துடன் நடிக்க ஒருகாலத்தில் புறக்கணித்தவர்களே போட்டி 
போட்டனர்*

*13. தமிழின் முதல் 3டி படமான அன்னை பூமி விஜயகாந்த் நடித்ததுதான்.*

*14. ஆக்ஷன் படங்களில் தொடர்ச்சியாக நடித்தவர் நானே ராஜா நானே மந்திரி
 படத்தில் முதல்முதலாக காமெடி காட்சிகளில் நடித்தார். நகைச்சுவையை 
மையப்படுத்தி வந்த முதல் விஜயகாந்த் படம் இது.*

*15. விஜயகாந்தின் எவர்கிரீன் படங்களில் ஒன்றான அம்மன் கோவில் 
கிழக்காலே 1985 இல் வெளியானது. இந்தப் படம் தமிழகத்தில் 20 
திரையரங்குகளில் 200 நாள்களை கடந்து ஓடி சாதனைப் படைத்தது.*

*16. அம்மன் கோவில் கிழக்காலே படத்துக்காக விஜயகாந்த் சிறந்த 
நடிகருக்கான தனது முதல் ஃபிலிம்பேர் விருதை பெற்றார்.*

*17. நாயகனாகவும், கம்யூனிஸ்டாகவும் நடித்து வந்த விஜயகாந்த் நம்பினோர்
கெடுவதில்லை பக்திப் படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்தார்.*

*18. புதியவர்கள், பிலிம் இன்ஸ்டிட்யூட் மாணவர்கள் விஜயகாந்தையே 
அப்போது நம்பியிருந்தனர். அவர்களின் படங்களில் விஜயகாந்த் தொடர்ந்து 
நடித்தார். பிலிம் இன்ஸட்டிட்யூட் மாணவர்களின் உருவாக்கத்தில் விஜயகாந்த்
நடித்த ஊமைவிழிகள் இன்றும் பேசப்படும் படமாக உள்ளது.*

*19. விஜயகாந்தும், சிவாஜியும் இணைந்து நடித்த படம் வீரபாண்டியன்.*

*20. ராஜசேகர் இயக்கத்தில் தாணு தயாரிப்பில் விஜயகாந்த் நடித்த படம் 
கூலிக்காரன். அன்றைய காலகட்டத்தில் மிகப்பிரமாண்டமாக தயாரான படம்
இது.*

*21. விஜயகாந்தின் நெருங்கிய நண்பர் இப்ராஹிம் ராவுத்தர். இருவரும் 
ஒரேநேரத்தில் சினிமாவுக்கு வந்தனர். அப்போதெல்லாம் கதை 
சொல்லப்போனால் இப்ராஹிமை பாருங்கள் என்றே விஜயகாந்த் சொல்வார். 
சம்பளம் முதற்கொண்டு அனைத்தையும் இப்ராஹிம் ராவுத்தாரே கவனித்து 
வந்தார்.*

*22. 1987 இல் விஜயகாந்தின் உழவன் மகன் வெளியானது. தமிழ் சினிமாவில் 
முதல்முதலில் ரேக்ளா காட்சிகள் பிரமாண்டமாக படமாக்கப்பட்ட படம் இது.*

*23. 1988 இல் வெளியான பூந்தோட் காவல்காரன் படத்துக்காக சிறந்த 
நடிகருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது விஜயகாந்துக்கு கிடைத்தது.*

*24. அதே 1988 இல் வெளியான செந்தூரப்பூரே மாபெரும் வெற்றிப் 
படமானதுடன், சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் விருதையும் 
விஜயகாந்துக்கு பெற்றுத் தந்தது.*

*25. எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த படம், நல்லவன். 
தாணு படத்தை தயாரித்திருந்தார். ஏரியில் விஜயகாந்த் வில்லன்களுடன் 
மோதும் காட்சியை மிகுந்த பொருட்செலவில் எடுத்திருந்தனர்.*

*26. 1990 விஜயகாந்தின் திரைவாழ்க்கையில் மறக்க முடியாத வருடம். இந்த 
வருடத்தில் தான் செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த 
புலன்விசாரணை வெளியானது. விஜயகாந்தின் லெக் பைட் இந்தப் படத்தில் 
பெரிதும் பேசப்பட்டது.*

*27. விஜயகாந்தின் எவர்கிரீன் படங்களில் ஒன்றான சத்ரியனும் இந்த வருடமே 
வெளியானது. மணிரத்னத்தின் ஆலயம் புரொடக்ஷன்ஸ் இந்தப் படத்தை 
தயாரித்தது.*

*28. பொதுவாக நடிகர்களின் 100 வது படம் சுமாரான வெற்றியாகவே அமையும்.
ரஜினியின் 100 வது படம் ராகவேந்திரா. கமலின் 100 வது படம் ராஜபார்வை. 
முன்னது தோல்வி. பின்னது விமர்சனரீதியாக பாராட்டப்பட்டாலும் அவ்வளவாக
வசூலிக்கவில்லை. ஆனால், விஜயகாந்தின் 100 வது படமான கேப்டன் 
பிரபாகரன் மாபெரும் வெற்றி பெற்றது.*

*29. ரஜினி, கமலை வைத்து ஆர்.உதயகுமார் படம் இயக்குவதற்கு விஜயகாந்தை 
வைத்து அவர் இயக்கிய சின்ன கவுண்டர் படத்தின் வெற்றியே காரணமாக 
அமைந்தது.*

*30. எஸ்.ஏ.சந்திரசேகரன் தனது மகன் விஜய்யை நாயகனாக்கி எடுத்த நாளைய
 தீர்ப்பு தோல்வியடைந்தது. தனது மகனை விஜயகாந்துடன் நடிக்க வைத்தால் 
பட்டிதொட்டியெல்லாம் கொண்டு சேர்க்கலாம் என்று விஜயகாந்திடம் கூற, 
மறுப்பேதும் சொல்லாமல் விஜயகாந்த் நடித்த படம், செந்தூரப்பாண்டி. படம் 
ஹிட். விஜய்க்கு இதுதான் முதல் வெற்றிப் படம்.*

*31. தனது கார் டிரைவராக இருந்த சுப்பையாவுக்காக விஜயகாந்த் நடித்துத் 
தந்த படம்தான் பெரியண்ணா*

*32. பாரதிராஜா இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த ஒரேயொரு படம், தமிழ் 
செல்வன்.*

*33. விக்ரமன் இயக்கத்தில் விஜயகாந்த் இரு வேடங்களில் நடித்த 
வானத்தப்போல 250 நாள்களை கடந்து ஓடியது.*

*34. வானத்தப்போல படத்துக்கு இரண்டு தமிழக அரசு விருதுகளும், சிறந்த 
பொழுதுப்போக்கு திரைப்படத்துக்கான தேசிய விருதும் கிடைத்தன.*

*35. முருகதாஸ் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த ரமணா ஹிட்டானது. இந்தக் 
கதை என்னுடையது என்று இயக்குனர் நந்தகுமரன் பிரச்சனை செய்ய, 
அவருக்கு உதவும்வகையில் தென்னவன் படத்தில் நந்தகுமரன் இயக்கத்தில் 
விஜயகாந்த் நடித்தார்*

*36. விஜயகாந்த் தென்னிந்திய நடிகர் சங்க தலைவராக இருந்தபோது 
மலேசியாவில் கலைநிகழ்ச்சிகள் நடத்தி சங்கத்தின் பல வருட கடனை 
அடைத்தார். முதல்முறையாக அவரது முயற்சியிலேயே ரஜினி, கமல் 
கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். விஜயகாந்தின் நிர்வாகத்திறனுக்கு 
இன்னும் இந்த நிகழ்வு சான்றாக உள்ளது.*

*37. அரசியல் கட்சி தொடங்கிய பிறகு விஜயகாந்த் படங்களில் நடிப்பதை 
குறைத்து, ஒருகட்டத்தில் முழுமையாக நடிப்பதையே நிறுத்தினார். அவர் 
நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் விருதகிரி.*

*38. தமிழன் என்று சொல் என்ற படத்தை விஜயகாந்தை வைத்து 
தொடங்கினார்கள். ஆனால், அது முடிவடையவில்லை*

*39. அடுத்த வருடம் விஜயகாந்தை வைத்து ஒரு படம் இயக்கப் போவதாக 
அறிவித்திருக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகரன்*.

*40. பிற மொழிகளில் நடிக்க மாட்டேன் என்று கூறியதை விஜயகாந்த் 
கடைசிவரை காப்பாற்றினார். அவர் நடித்த 150 க்கும் மேற்பட்ட படங்களில் 
ஒன்றுகூட பிறமொழி கிடையாது*
--




Sunday, 12 July 2020

இளமை காதல், மரபை உடைத்த `புரட்சி' க்ளைமாக்ஸ்... 80-களில் புதிய அலையை உண்டாக்கிய `அலைகள் ஓய்வதில்லை!'

18 ஜூலை 1981 அன்று வெளியான `அலைகள் ஓய்வதில்லை’, அந்தக் காலத்தில் மகத்தான வெற்றியையும் கவனத்தையும் பெற்ற ஒரு cult திரைப்படம். குறிப்பாக, இதன் பரபரப்பான க்ளைமாக்ஸுக்காக அதிக சர்ச்சைகளையும் அதே சமயத்தில் முற்போக்குவாதிகளிடமிருந்து பாராட்டுகளையும் பெற்றது. இவற்றைத் தாண்டி பொதுஜனம் இந்தப் படத்தை ஏற்றுக் கொண்டதுதான் இதன் உண்மையான வெற்றி.


"காதலுக்கு குறுக்கே மதம் வரும்போது அதைத் தூக்கி எறி” என்று மதத்தைப் பின்னுக்குத் தள்ளி காதலுக்கு முக்கியத்துவம் தந்த காரணத்தால் இளைய தலைமுறை ரசிகர்கள் இதைக் கொண்டாடியதில் ஆச்சர்யமில்லை.
இதன் பிரமாண்டமான வெற்றிக்கு மணிவண்ணனின் புத்துணர்ச்சியான கதை - வசனம், பாரதிராஜாவின் பிரத்யேக அழகியல் பாணி இயக்கம், B.கண்ணனின் அழகான ஒளிப்பதிவு, இளையராஜாவின் அற்புதமான இசை போன்றவை அடிப்படைக் காரணங்களாக இருந்தன.

ஆனால், என்னளவில் இந்தத் திரைப்படம் குறித்தான சில எதிர்மறை அம்சங்களும் இருக்கின்றன. அவற்றைப் பிற்பாடு பார்ப்போம்.
தமிழ் சினிமாக் கதைகளின் முக்கியமான கச்சாப்பொருளில் ஒன்று காதல். காதலின் குறுக்கே சாதி, மதம், வர்க்கம், சமூக அந்தஸ்து உள்ளிட்டவை குறுக்கே வந்து உக்கிரமாக மறித்து நிற்கும். காதலர்கள் அவற்றுடன் போராடுவார்கள். சில பல சம்பவங்களுக்குப் பிறகு காதலை மறித்தவர்கள் மனம் மாறுவார்கள். இதுவே அதுவரையான காதல் திரைப்படங்களின் பொதுவான அம்சம்.

இதில் வர்க்கம் என்பது கையாள்வதற்கு எளிதான விஷயம். ஏழையின் காதலை உன்னதப்படுத்தி பணக்காரர்களைத் திட்டி பல ஆவேசமான வசனங்களை எழுதிவிடலாம். ஆனால் சாதி, மதம் போன்றவை வரும்போது அவற்றில் கைவைப்பது எரிமலையில் கைவைப்பதுபோல. எந்தவொரு பேனாவும் நடுங்கும்.


சினிமா என்பது ஒரு சமூகத்தின் அனைத்து விதமான பார்வையாளர்களை நம்பி இயங்கும் ஒரு வணிக சமாசாரம் என்பதால் அவர்களின் ஆதாரமான உணர்வுகளை கையாள்வதில் சினிமாக்காரர்கள் கவனமாக இருப்பார்கள். ``இவையெல்லாம் ஆடியன்ஸுக்குப் புரியாது” என்று பல கிளிஷேக்களை அப்படியே வைத்திருப்பது போல ``இதெல்லாம் ஆடியன்ஸ் ஏத்துக்க மாட்டான் சார்... பிரச்னை வரும்... படம் அடி வாங்கும்” என்று அவர்களாகவே முடிவு செய்துகொண்டு பாதுகாப்பான திசையை நாடிச் செல்வார்கள். இந்த மரபை உடைத்து எறிந்த இயக்குநர்களும் கதாசிரியர்களும் மிகக் குறைவே.
இந்த வரிசையில், "உண்மையான காதலின் இடையில் மதம் குறுக்கே வருமானால் அந்த மத அடையாளத்தைத் தூக்கி எறிய தயங்காதே” என்கிற புரட்சிகரமான கருத்தை துணிச்சலுடன் `அலைகள் ஓய்வதில்லை’ முன்வைத்தது. ஒருவகையில் இது விஷப் பரீட்சைதான். ஆனால், பெரும்பான்மையான பார்வையாளர்கள் இந்த `முற்போக்கான’ கருத்தை ஏற்றுக் கொண்டதால் படம் வெற்றியடைந்தது. இதை அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் பின்பற்றுவார்களோ, இல்லையோ, குறைந்தபட்சம் ஒரு நிழல் வாழ்க்கையில் நடந்த முடிவை ஒப்புக் கொண்டதே நல்ல முன்னேற்றம்தான்.

சுதந்திர இந்தியாவுக்குப் பின்னான இந்தியா என்பது பலவகைகளிலும் முன்னேற்றப் பாதையில் நடந்துகொண்டிருந்த சமயம். பிற்போக்கான சடங்குகளுக்கும் சம்பிரதாயங்களுக்கும் எதிரான தீவிரமான பிரச்சாரங்கள் முற்போக்கு கருத்துக்களைக் கொண்ட தலைவர்களால் முன்வைக்கப்பட்டன. இந்த நோக்கில் பெரியார் ஒரு நல்ல உதாரணம்.

எனவே திரைப்படம், இலக்கியம், ஓவியம் போன்ற கலை சார்ந்த விஷயங்களிலும் இவ்வகையான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு மக்களின் மனமாற்றத்துக்கு காரணமாக இருந்தன. இன்று ஒரு திரைப்படத்தில் ஒரு பிரதான பாத்திரம் என்ன மாதிரியான சமூகத்தைச் சார்ந்தவர் என்பதை நேரடியாகவோ மறைமுகமாகவோ துல்லியமான நுண்விவரங்களுடன் படைத்து விட முடியும். ஆனால், முந்தைய திரைப்படங்களில் அப்படியில்லை. இயக்குநர்களுக்கு இவ்வகையான துணிச்சலைத் தந்த முன்னோடி திரைப்படங்களுள் ஒன்று `அலைகள் ஓய்வதில்லை.’



இந்த இடத்தில் ஒரு சுவாரஸ்யமான தகவலையும் சொல்ல வேண்டும். இதில் வரும் கிறிஸ்துவப் பெண் பாத்திரத்தை இஸ்லாமியச் சமூகத்தைச் சார்ந்த பெண்ணாக வைத்துதான் முதலில் கதை எழுதப்பட்டிருந்ததாம். ஆனால், இதற்கு அப்போது நிறைய எதிர்ப்பு வரும் என்று யூகிக்கப்பட்டதால் பாத்திரத்தின் மதம் மாற்றப்பட்டது.

`இங்கு ரெண்டு ஜாதி மல்லிகை, தொட்டுக் கொள்ளும் காமன் பண்டிகை, கோயிலில் காதல் தொழுகை’ என்று வைரமுத்து முன்பே எழுதிவிட்ட வரிகளே இதற்கு சாட்சி. `கோயிலில் காதல் தொழுகை’ என்பது இந்து - முஸ்லிம் பாத்திரங்களையொட்டி எழுதப்பட்டது.

ஆக... பின்னாளில் மணிரத்னத்தின் `பம்பாய்’ போன்ற திரைப்படங்கள் வருவதற்கான முற்போக்குப் பாதையை துணிச்சலாக அமைத்தது `அலைகள் ஓய்வதில்லை’ போன்ற முன்னோடித் திரைப்படங்கள்தான் என்றால் மிகையாகாது.
அது சிறுகதையோ, நாவலோ, திரைப்படமோ… ஒரு படைப்பு எதைப் பற்றி உரையாடப் போகிறது... அதன் மையம் என்ன..? என்பதை முதலிலேயே பார்வையாளர்களுக்கு தெளிவுப்படுத்தி விடுவது ஒரு நல்ல படைப்பாளிக்கு அழகு. அந்த வகையில் `அலைகள் ஓய்வதில்லை’யின் தொடக்க காட்சிகள் சிறப்பாக அமைந்திருந்தன. ஒரு பிராமணச் சிறுவனுக்கு பூணூல் அணிவிக்கப்படும் சடங்கு ஒருபுறம் காண்பிக்கப்படும். இன்னொரு புறம், கிறிஸ்துவ மதத்தைச் சார்ந்த ஒரு சிறுமிக்கு ஞானஸ்நானம் அருளப்படும் காட்சி காண்பிக்கப்படும்.

ஆக... இந்தப் பையனும் சிறுமியும் இவர்கள் சார்ந்திருக்கும் மதமும் இந்தக் கதைக்கு முக்கியமான விஷயங்களாக அமையப் போகின்றன என்பதை தொடக்கத்திலேயே பாரதிராஜா உணர்த்திவிடுவார்.


பிரதான பாத்திரங்களில் நடித்த கார்த்திக், ராதா ஆகிய இருவருமே இந்தத் திரைப்படத்தில்தான் அறிமுகமானார்கள். ஸ்டார் நடிகர்களை விடுத்து எவ்வித அனுபவமும் இல்லாத புதிய நபர்களை அறிமுகப்படுத்தி அந்தப் படத்தை சூப்பர் ஹிட் ஆக்குவதென்பது இயக்குநரின் திறமையையும் தன்னம்பிக்கையையும் காட்டுகிறது. அது பாரதிராஜாவிடம் ஏராளமாக இருந்தது.

விச்சு என்கிற பிராமண இளைஞனின் பாத்திரத்துக்கு முதலில் தேர்வு செய்யப்பட்டவர் நடிகர் சுரேஷ். வாக்குறுதி அளித்திருந்தபடி `பன்னீர் புஷ்பங்களில்’ நடிக்க சுரேஷ் சென்றுவிட்டதால் நடிகர் முத்துராமனின் மகனான கார்த்திக்கை இறுதி நேரத்தில் அழைத்தார்கள். எவ்வித தயக்கமும் இன்றி ஒரு துணிச்சலுடன் ஒப்புக் கொண்டார் கார்த்திக்.பின்னாள்களில் கார்த்திக் ஒரு வசீகரமான, பெண்களுக்குப் பிடித்த கதாநாயகனாக மாறினாலும் முதல் படத்தில் அவரது தோற்றமும் நடிப்பும் சுமாரானதாகத்தான் இருந்தது. எந்தவொரு முதிராத அறிமுக நாயகனைப் போலவே இயக்குநர் சொல்லித் தந்ததை இயன்ற அளவுக்கு அப்படியே பிரதிபலிக்க முயன்றார். கார்த்திக்குக்கு பின்னணி குரல் தந்தவர் பாடகர் எஸ்.என்.சுரேந்தர்.

`அலைகள் ஓய்வதில்லை’ வெளியாகி பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நட்சத்திர விழா மேடையில் இந்தத் திரைப்படத்தில் நடித்த அனுபவங்களைக் கார்த்திக்கும் ராதாவும் பகிர்ந்து கொண்டார்கள். இருவருமே பாரதிராஜாவிடம் எந்தவொரு திட்டும் அடியும் வாங்காமல் சமர்த்தாக நடித்து முடித்தார்களாம்.




இந்த மேடையில் கார்த்திக் சொன்ன ஒரு டைமிங் காமெடி அருமை. ஒரு காட்சியில் காதலனின் வருகைக்காகக் காதலி நீண்ட நேரம் காத்திருப்பாள். அவன் வந்தவுடன் "ஏன் லேட்டு?” என்று கேட்பாள். இதுதான் இவர்கள் இருவரையும் எடுத்து பதிவு செய்யப்பட்ட முதல் காட்சி.

``பாருங்க... `ஏன் லேட்டு?’ என்ற வசனத்தை வைத்துதான் வந்த முதல் நாளே பாரதிராஜா என்னை நடிக்க வெச்சார். ஆக... சூட்டிங்குக்கு லேட்டா வர்றதுக்கு நான் பொறுப்பில்ல" என்பது போல் கார்த்திக் சொல்ல கீழே அமர்ந்திருந்த பாரதிராஜா உள்ளிட்ட பலரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். படப்பிடிப்புகளுக்கு வராமல் இருப்பது அல்லது மிகத் தாமதமாக வரும் கார்த்திக்கின் வழக்கம் தெரிந்தவர்கள் இதிலுள்ள நகைச்சுவையை உணர முடியும்.

`அலைகள் ஓய்வதில்லை’ படத்தின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணம் ராதாதான் என்பதை கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்ய அந்தக் காலத்து இளைஞர்கள் தயாராக இருந்தார்கள். அப்படியொரு பேரழகியாக அனைத்துக் காட்சிகளிலும் தென்பட்டார் ராதா.

தென்னிந்தியப் பெண்களுக்கே உரிய பளபளப்பான மாநிறம், மிக அழகான கரிய விழிகள், சற்று மேடேறிய நெற்றி, சற்று ஓவர் டோஸாக எட்டிப் பார்க்கும் மூக்கு, எந்த ஆடையும் பொருந்திப் போகும் கச்சிதமான உடல்வாகு என்று ஒரு தேவதையைப் போலவே படம் பூராவும் உலவினார் ராதா. B.கண்ணனின் ரசனையான கோணங்களும் ஷாட்களும் இவரைப் பேரழகியாகக் காட்டின. இவருக்கு குரல் தந்தவர் பிரபல `டப்பிங் ஆர்ட்டிஸ்ட்’ அனுராதா.



வெங்காயத்தை இரண்டாக அரிந்து கக்கத்தில் வைத்துக் கொண்டால் உத்தரவாதமாகக் காய்ச்சல் வரும் என்கிற அரிய மருத்துவத் தகவல் இந்தப் படத்தில்தான் தெரிவிக்கப்பட்டது. இந்தத் திரைப்படத்தைப் பிற்பாடு தொலைக்காட்சியில் பார்க்க நேர்ந்தபோது, தேர்விலிருந்து தப்பிக்க நானும்கூட இந்த உத்தியை முயன்று பார்த்தேன். ம்...ஹூம் காய்ச்சல் வரவில்லை. ராதாவையே பார்த்துக்கொண்டிருந்ததால், அது பெரிய வெங்காயமா... சின்ன வெங்காயமா என்பதை கவனிக்கத் தவறி விட்டேன். ஆனால், காய்ச்சல் வந்தது, ராதாவைப் பார்த்துதான் என்பதென்னமோ உண்மை.

`காதல் ஓவியம்’ திரைப்படத் தோல்வியின் காரணத்தினால் `இதானே உங்களுக்கு வேண்டும்?’ என்கிற கோபத்தில் `வாலிபமே... வா... வா...’ என்கிற கவர்ச்சியான படத்தை இயக்கிய பாரதிராஜா, அந்தக் கோபத்தை முன்பே இந்தப் படத்தில் ரிகர்சல் பார்த்துவிட்டாரோ என்னமோ!
`அலைகள் ஓய்வதில்லை’ திரைப்படத்துக்கு முன்பு பாரதிராஜா இயக்கிய படமான `நிழல்கள்’ சரியான வரவேற்பைப் பெறாததால், அடுத்த படைப்பை எப்படியாவது வெற்றிப் படைப்பாக்கி விட வேண்டும் என்கிற நெருக்கடியை உருவாக்கிக் கொண்டாரோ... என்னமோ. இதன் காட்சிகளிலும் பாடல்களிலும் கவர்ச்சியான அம்சங்கள் கூடுதலாக இருந்தன. அதிலும் `ஆயிரம் தாமரை மொட்டுக்களே’ பாடலில் `ஆதாம் ஏவாள்’ கோலத்தில் கார்த்திக்கும் ராதாவும் பூக்களின் நடுவில் படுத்திருந்த காட்சியானது பல இளைஞர்களின் தூக்கத்தைக் கலைக்கும் காட்சியாக அப்போது இருந்திருக்கும்.

அது போலவே ஒரு சிறுமியும் சிறுமியும் அம்மா அப்பா விளையாட்டு விளையாடுவது, இன்னொரு காட்சியில் சிறார்கள் முத்தமிட்டுக் கொள்வது, ஆற்றங்கரையில் குளிக்கும் பெண்களிடம் கார்த்திக் டீம் குறும்பு செய்யும்போது வெளிப்பட்ட இரட்டை அர்த்த வசனங்கள் போன்றவை முகஞ்சுளிக்க வைத்தன.


`கிழக்கே போகும் ரயில்’ திரைப்படத்தில் காதலர்களுக்கிடையே ரயிலைத் தூது போக வைத்த பாரதிராஜா, இந்தத் திரைப்படத்தில் அதற்காக ஹார்மோனியத்தைப் பயன்படுத்திக் கொண்டார். காதலர்களின் சந்திப்பு தடைபடும்போது ஹார்மோனியத்தில் கடிதங்களை ஒளித்து வைப்பார் கார்த்திக். (ஏன்... இவர்கள் சந்திக்கும் போதே... அடுத்த முறை எப்படி சந்திப்பது என்பதை பேசிக்கொள்ள மாட்டார்களா? ரிஸ்க் எடுத்து ஏன் ஹார்மோனியத்தில் கடிதம் வைக்க வேண்டும் என்றெல்லாம் லாஜிக் பார்க்கக்கூடாது).

`அலைகள் ஓய்வதில்லை’ திரைப்படத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இன்னொரு நடிகர் தியாகராஜன். இவருக்கு நடிப்பதில் எந்தவொரு ஆர்வமும் இருந்ததில்லை. அதற்கான முயற்சிகளும் எடுத்ததில்லை. தயாரிப்பாளர் பாஸ்கரின் நண்பரான இவரை ஒரு முறை சந்தித்தபோது நீண்ட நேரம் கூர்ந்து பார்த்திருக்கிறார் பாரதிராஜா. `ஏன் இவரையும் நடிக்க வைக்கப் போகிறீர்களா?” என்று பாஸ்கர் கேட்க, ``ஆமாம்... இந்தப் படத்துல வில்லன் பாத்திரத்துக்கு” என்று சொன்ன பாரதிராஜா, தியாகராஜனை வில்லனாக ஒப்பந்தம் செய்துவிட்டார்.

கூலிங்கிளாஸும் சரிகை வேட்டியும் வெள்ளை நிற ஜிப்பாவும் கைகளில் காப்பும், கழுத்தில் தங்கச் சங்கிலி மின்ன, என்பீல்ட் பைக்கில் `டபடபவென்ற சத்தத்துடன் வலம் வரும் தியாகராஜனைப் பார்த்து அந்த ஊரே அஞ்சும். முதற்காட்சியிலேயே தியாகராஜனின் குணாதிசயத்தை வலுவாகப் பதிவு செய்துவிடுவார் பாரதிராஜா.



முதற்படத்தில் எப்படியோ ஒப்பேற்றிவிட்டாலும் இன்று வரை தியாகராஜனை நடிக்க வைக்க எந்தவொரு சூப்பர் இயக்குநராலும் முடியவில்லை என்பதே காலம் நிரூபித்த உண்மை. முகத்தில் எவ்வித உணர்ச்சிகளும் வெளிப்படாமல் நடிப்பதில் தியாகராஜன் ஒரு தனிப்பாதையை வகுத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தில் இவருக்கு குரல் தந்தவர் பாரதிராஜா.


இந்தப் படத்தின் இனிய ஆச்சர்யம் என்று `சில்க்’ ஸ்மிதாவைச் சொல்லலாம். இந்தத் திரைப்படத்துக்கு முன்னரும் பின்னரும் சரி, பெரும்பாலும் கவர்ச்சி பிம்பமாகவே அறியப்பட்ட ஸ்மிதாவை குணச்சித்திர நடிகையாக சிந்திக்க ஒரு துணிச்சல் வேண்டும். அது இயக்குநர் பாரதிராஜாவுக்கு இருந்தது.
இதில் நாயகியின் அண்ணியாக நன்கு நடித்திருந்தார் ஸ்மிதா. முதலில் கணவனுக்கு ஆதரவாக நின்றாலும், அவர் தனக்குச் செய்யும் துரோகத்தை அறிந்து காதலர்களுக்கு ஆதரவாக மாறுவது நல்ல திருப்பம்.

இது தொடர்பான காட்சிகள் மிக அருமையாக இயக்கப்பட்டிருக்கும். தங்கள் வீட்டில் பணியாற்றும் பட்டியலின சமூகத்தைச் சார்ந்த பெண்ணின் வீட்டுக்குள் தன் கணவன் நுழைந்துவிடுவதை அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருப்பார் ஸ்மிதா. அந்தச் சமயத்தில் வேலைக்காரியின் கணவன் வரும்போது என்ன செய்வது என்று தெரியாத திகைப்புடன் அவனை அப்புறப்படுத்துவதில் அவசரம் காட்டுவார். என்றாலும் பிறகு உண்மை அம்பலப்பட்டுவிடும்.

செல்வாக்கு மிகுந்த தியாகராஜனை எதிர்க்க முடியாமல் அந்த வேலைக்காரரின் குடும்பம் துயரத்துடன் புறப்படும். "எங்கடா போற?” என்கிற தியாகராஜனின் கேள்விக்கு "மனுஷங்க இருக்கற ஊருக்கு” என்று அசத்தலாகப் பதில் சொல்வார் அந்தப் பணியாளர். அவர்களிடம் பணத்தை எறிவார் தியாகராஜன். ``நான் விசுவாசமாக இருந்ததுக்கு நீங்கதான் நல்ல கூலி கொடுத்திட்டீங்களே எஜமான். இந்தக் கூலி உங்க சம்சாரத்துக்குதான் சேரணும்… ஏன்னா.. அவங்கதானே கஷ்டப்பட்டு உங்களுக்காக காவல் காத்தாங்க” என்று சொல்லி விட்டு சென்றுவிடுவார் அந்தப் பணியாள்.


முகத்தில் அறைவது போல் உணர்ச்சிகரத்துடன் வசனம் எழுதுவது எப்படி என்பதற்கான சிறந்த உதாரணம் இது. பணியாளின் இந்தக் கேள்வி ஸ்மிதாவை பல விதங்களில் சுட்டெரிக்கும். அந்தக் கோபத்தை கணவரிடம் சிறப்பாக வெளிப்படுத்துவார். கணவரின் எதிர்ப்பையும் மீறி காதலர்களை இணைக்கவும் துணிவார். ஸ்மிதாவின் நடிப்பை அப்போதைய தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர் மிகவும் சிலாகித்து பாராட்டினதாக ஒரு தகவல் உண்டு.

தந்தையில்லாத ஒரு வீட்டின் பொருளாதாரச் சுமையை தன் உழைப்பால் தூக்கிப் பிடிக்கும் ஒரு தாயின் நடிப்பை அருமையாகத் தந்திருப்பார் கமலா காமேஷ். தியாகராஜன், வீட்டுக்கு வந்து மிரட்டும்போது தன் கையறு நிலையைச் சொல்லி புலம்புவதும் கதறுவதும் நல்ல நடிப்பு.

`அடுத்த வீட்டுக் குழந்தையையே... மிக அன்புடனும் பாசத்துடனும் கவனித்துக் கொள்ளும் ஒரு தாய், தன் வீட்டு குழந்தை என்னும்போது கூடுதல் பாசம் காட்டாமலா போவாள்..?’ இது இளையராஜாவின் குடும்ப தயாரிப்பு என்பதால் பாடல்களிலும் சரி, பின்னணி இசையிலும் சரி, தன் அசாதாரணமான இசைத்திறமையை அளவின்றி கொட்டியிருப்பார் இளையராஜா.

இதில் வரும் அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட். இன்றைக்கும் கேட்பதற்கு இனிமையாக உள்ள தேன்குடங்கள். கிராமங்களில் பெண்கள் பாடும் கும்மிப்பாடலின் மெட்டை அப்படியே `ஆயிரம் தாமரை மொட்டுக்களே’வாக மாற்றினார் இளையராஜா.

இந்தப் பாடலின் வரியை வாசித்த அடுத்த கணத்தில் மிருதங்க சத்தம் உங்கள் மூளைக்குள் தன்னிச்சையாக ஒலித்ததென்றால் நீங்கள் ராஜாவின் மிகச்சிறந்த ரசிகர் என்று பொருள். மிருதங்கம் என்னும் வாத்தியம் மிக மிக அசத்தலாகப் பயன்படுத்தப்பட்ட பாடல்களில் ஒன்று `ஆயிரம் தாமரை மொட்டுக்களே.’


புல்லாங்குழல், வயலின், கோரஸ் உள்ளிட்ட அனைத்துமே மிக ரசிக்கும் வகையில் இந்தப் பாடலில் பயன்படுத்தப்பட்டிருக்கும். எஸ்.பி.பியும் ஜானகியும் அருமையாகப் பாடியிருப்பார்கள். குறிப்பாக ஜானகியின் ஹம்மிங்கும் ராதாவின் பரவசமான க்ளோசப்களும் அத்தனை அருமையாகப் பொருந்தியிருக்கும்.

ஒரு பாடலில் வைரமுத்து இருப்பதை சொல்லாமலேயே அவரது எழுத்தின் ரசிகர்கள் மிக எளிமையாகக் கண்டுபிடித்துவிடலாம். அந்த அளவுக்கு மிக பிரத்யேகமான முத்திரை வரிகளை செதுக்குவதில் வல்லவர் வைரமுத்து. `புல்வெளியின் மீது ரெண்டு பூமாலை, ஒன்றை ஒன்று சூடும் இது பொன் மேடை’ போன்ற அபாரமான வரிகள் எல்லாம் வைரமுத்துவின் மேதமையையும் இருப்பையும் அடையாளம் காட்டும்.

இந்த ஆல்பத்தின் இன்னொரு அட்டகாசமான பாடல் `காதல் ஓவியம்... பாடும் காவியம்.’ நம்பவே முடியாதவகையில் மிக இனிமையான குரலில் வசீகரம் காட்டியிருப்பார் ராஜா. ஜென்ஸியின் குரல் எப்போதுமே பிரத்யேகமானது. யாருமில்லாத வனாந்தரத்தில் ஏக்கத்துடன் குரலெழுப்பும் குயிலின் இனிமைச் சோகத்துடன் ஜென்ஸியின் குரலை ஒப்பிடலாம். இந்தப் பாடலில் ராஜாவுடன் இணைந்து இனிமையைக் கூட்டியிருப்பார் ஜென்ஸி. `தென்றலிலே மிதந்துவரும் தேன் மலரே...’ போன்ற வரிகளில் ரொமான்ஸின் உச்சத்துக்கே சென்றிருப்பார் வைரமுத்து.

`விழியில் விழுந்து இதயம் நுழைந்து, உயிரில் கலந்த உறவே’ என்கிற இன்னொரு அருமையான பாடலில் `இரவும் பகலும் உரசிக் கொள்ளும், அந்திப் பொழுதில் வந்து விடு’ என்பது போன்ற அற்புதமான வரிகளை இணைத்திருப்பார்.

`நீ சிரிக்கும்போது பௌர்ணமி நிலவு அத்தனை திசையும் உதிக்கும், நீ மல்லிகை பூவைச் சூடிக்கொண்டால் ரோஜாவுக்கு காய்ச்சல் வரும், நீ பட்டுப் புடவை கட்டிக்கொண்டால் பட்டுப்பூச்சிகள் மோட்சம் பெறும்’ போன்ற காதலுணர்வு பொங்கி வழியும் வைரமுத்துவின் வரிகளை மேற்கோள் காட்டினால் எந்தப் பெண்ணையும் கவர்ந்துவிடலாம்.

`வாடி என் கப்பங்கெழங்கே...’ என்கிற நையாண்டிப் பாடல் அந்தச் சமயத்தில் இளசுகளின் தேசிய கீதமாக இருந்தது. இந்தப் படத்தின் நாயகிக்காக அலைந்து திரிந்து ராதாவைக் கண்டுபிடித்து ராஜாவின் முன் நிறுத்தியவுடன் "ஓ... இவர்தான் அந்தக் கப்பங்கெழங்கா” என்று கேட்டு சிரித்தாராம் ராஜா. படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே உருவாகிவிட்ட பாடல் இது. இதைக் கேட்டு புரியாமல் விழித்தாராம் ராதா. இந்தப் பாடலை எழுதியவர் கங்கை அமரன்.

கிறிஸ்துவப் பள்ளியில் படித்தவன் என்கிற காரணத்தினால் ‘ஸ்தோத்திரம் பாடியே’ என்கிற பாடல் அப்போதே என் மனதுக்கு நெருக்கமானதொன்று. வைரமுத்து, கங்கை அமரன் எழுதியது தவிர இதர பாடல்களை எழுதியவர் இளையராஜாவேதான்.

ராஜாவின் மிகச் சிறந்த பாடலை பயன்படுத்தாமல் விட்டுவிடுவதென்பது பாரதிராஜாவின் கெட்ட வழக்கங்களில் ஒன்று. `நிழல்கள்’ திரைப்படத்தில் `தூரத்தில் நான் கண்ட முகம்’ பாடலை விட்டு விட்டார் என்றால், இதில் `புத்தம் புது காலை.’

இது நாயகியை அறிமுகப்படுத்தும் பாடலாக இருந்திருக்க வேண்டும். பாடலை மிக அழகாகப் படம் பிடித்து, படத்தில் இணைத்தும் விட்டிருக்கிறார்கள். ஆனால், படத்தின் நீளம் காரணமாக வேறு வழியேயின்றி இதை நீக்க வேண்டியிருந்ததாக சமீபத்திய வீடியோ ஒன்றில் ஆதங்கம் வழிய சொல்லியிருக்கிறார் பாரதிராஜா.

ஆனால், ஆறுதல் தரும் வகையில் இதே பாடல், ராஜாவின் நவீன இசையில் `மேகா’ படத்தில் இடம் பெற்றது. இந்தப் படத்தின் பின்னணி இசையிலும் பல இடங்களில் கலக்கியிருப்பார் ராஜா. `ஆயிரம் தாமரை மொட்டுக்களே’ பாடலுக்கு முன்பு வரும் இசை இதற்கு சிறந்த உதாரணம். போலவே ஈரல் வறுவலை எடுத்துக்கொண்டு கார்த்திக், ராதாவைத் தேடிச் செல்லும் காட்சியில் ஒலிக்கும் வயலின் இசையை ஒரு மினி `சிம்பொஃனி’ விருந்து எனலாம்.


இந்தப் படத்தின் இன்னொரு ஹீரோ என்று ஒளிப்பதிவாளர் B.கண்ணனைச் சொல்ல வேண்டும். ஒவ்வொரு பாடல் காட்சியிலும் இவர் வைத்த, கோணங்கள், ஃபிரேம்கள் அனைத்துமே பார்வையாளனுக்கு கொண்டாட்ட மனநிலையை ஏற்படுத்தும்.

இது அடிப்படையில் காதல் திரைப்படம் என்பதால் காதலர்களுக்கிடையே உள்ள நெருக்கம், பிரிவு, ஏக்கம் போன்றவற்றை பொருத்தமான கோணங்களில் பதிவு செய்திருப்பார்.

பாடல் காட்சிகள் என்றல்ல, இதர காட்சிகளிலும் B.கண்ணனின் முத்திரை அழுத்தமாகப் பதிந்திருக்கும். உதாரணத்துக்கு தியாகராஜனின் அறிமுகக்காட்சியில், அவரது வீட்டின் முன் ஏழை மீனவர்கள் நின்றிருக்க, இவர் பைக்கில் வந்தபடியே அவர்களைப் பார்க்கும் காட்சி பதிவு செய்யப்பட்டிருக்கும் விதம் அற்புதமானது.

கன்னியாகுமரியில் உள்ள முட்டம் கிராமத்தில் இதன் பெரும்பான்மையான காட்சிகள் மிகுந்த அழகியலுடன் படமாக்கப்பட்டிருக்கின்றன. அங்குள்ள அழகான சர்ச்சும், கடற்கரையும் அலையும், மணலும், பாறையும், சாயங்காலத்தின் மஞ்சள் வெளிச்சமும்... என ஒவ்வொரு காட்சியையும் ஓவியம் போல அலங்கரித்திருப்பார் கண்ணன்.

இளமை பொங்க காதலைச் சொன்ன விதத்திலும் சரி, புத்துணர்ச்சியுடன் காட்சிகளைப் பதிவாக்கியதிலும் சரி, மரபை உடைத்த அந்த க்ளைமாக்ஸும் சரி... 80-களில் உருவான புதிய அலைத் திரைப்படங்களின் ஒரு முக்கியமான படம் என்று `அலைகள் ஓய்வதில்லை’ படத்தைச் சொல்லலாம்.

ஆனால், விடலைப் பருவத்தின் காதலை மிக அதிகமாக ரொமாண்டிசைஸ் செய்த விதத்தில் இயக்குநரின் பொறுப்பற்ற தன்மையையும் சுட்டிக் காட்டியாக வேண்டும். இனக்கவர்ச்சி காரணமாக இளமைப்பருவத்தில் பரஸ்பரமான பாலியல் ஈர்ப்பு ஏற்படுவது சகஜமே. அந்தச் சமயத்தில் இளைஞர்களுக்கு வானத்தை வில்லாக வளைத்துப் பார்க்கும் வீரமெல்லாம் ஏற்படும். ஆனால், எதார்த்தம் என்பது வேறானது.

அது உண்மையான காதல்தானா அல்லது தற்காலிக ஈர்ப்பா என்பதை அறிய மிகப் பொறுமை வேண்டும். பெரியவர்களின் வழிகாட்டுதல் வேண்டும். ஓர் உண்மையான காதல் என்பது அதன் பொறுமையிலும் முதிர்ச்சியிலும்தான் இருக்கிறது. இதில் வரும் காதலர்கள், சினிமா வழக்கப்படி முதலில் சற்று முட்டிக்கொண்டு பிறகு உடனே பிரிக்க முடியாத காதலில் எளிதில் விழுந்து விடுவார்கள். உடனே `நம்தனநம்தன’ தான்!

மதம் அவர்களைத் தடுக்கும்போது அந்த மரபுச் சுவரை உடைத்துக் கொண்டு அவர்கள் முன்னேறுவது சரிதான். சாதி ஒழிப்புக்கு காதல் திருமணம் ஒரு முக்கியமான காரணி என்பதே முற்போக்கு அறிஞர்களின் கருத்தாக இருக்கிறது. ஆனால், அந்த ஊரை விட்டுச் சென்ற பின் சோற்றுக்கு என்ன செய்வார்கள்? முத்தத்தால் மட்டுமே பசியாறி விட முடியுமா? பாதுகாப்பாக எங்கு தங்குவார்கள்? இப்படி நடைமுறை எதார்த்தம் எழுப்பும் பல கேள்விகளுக்கு அவர்களிடம் பதில் இருக்கிறதா?

இந்தப் படத்தை முன்னுதாரணமாகக் கொண்டு, எவ்வித திட்டமிடலும் இல்லாமல் வீட்டை விட்டு ஓர் இளம் ஜோடி வெளியேறி சில ஆபத்துக்களைச் சந்தித்தால் அதற்கு இது போன்ற திரைப்படங்களை இயக்குபவர்கள்தானே பொறுப்பாவார்கள்?

இதே காலகட்டத்தில் வெளிவந்த `பன்னீர் புஷ்பங்கள்’ இந்த விஷயத்தை பக்குவமாக அணுகியது. அதுவும் விடலைப் பருவத்தின் காதல் கதைதான். ஆனால், துளிகூட விரசமின்றி காதலைச் சொன்ன அதே சமயத்தில், ஓடிப் போகும் காதலர்களுக்கு உள்ள ஆபத்தையும் எடுத்துச் சொன்னது. இந்த வகையில் பாரதிராஜாவைவிடவும் பாரதி-வாசு மேலே நிற்கிறார்கள் என்றே சொல்லத் தோன்றுகிறது.

இதே ராதாவை வைத்து நடுத்தர வயதைத் தாண்டிய ஒரு காதலை மிக முதிர்ச்சியாகவும் கண்ணியமாகவும் படமெடுத்தார் பாரதிராஜா. அந்த `பாரதிராஜா’தான் நமக்கு அதிகம் தேவையானவர்.
இது போன்ற விமர்சனங்களைத் தாண்டி, இளம் காதலர்களின் முன் நிற்கும் சமூகப் பிரச்னைகளை மிக சுவாரஸ்யமாகவும் அழகியல் உணர்ச்சியுடனும் சொன்ன விதத்தில் `அலைகள் ஓய்வதில்லை’ ஒரு முன்னோடித் திரைப்படம் என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக, மரபை உடைத்த இதன் க்ளைமாக்ஸ்.
எனவேதான் இந்தத் திரைப்படம்… சிறந்த படம், சிறந்த இயக்குநர்... என்று தமிழ்நாடு அரசின் எட்டு விருதுகளை அந்தச் சமயத்தில் வென்றது. பிற்பாடு தெலுங்கிலும் (1981), இந்தியிலும் (1983) இதே இயக்குநரால் ரீமேக் செய்யப்பட்டது.