Tuesday, 2 April 2019

மகேந்திரன்... சாகாவரக் கலைஞன்!

தமிழ் சினிமாவில் எத்தனையோ இயக்குநர்கள் இருந்திருக்கிறார்கள். எத்தனையோ இயக்குநர்கள் இருக்கிறார்கள். இன்னும் எத்தனையோ இயக்குநர்கள் வருவார்கள். ஆனால், இத்தனை நீண்ட நெடிதான பட்டியலில், ஒரு சிலருக்கு மாற்றே இல்லை. அந்த இயக்குநர்களின் இடத்தை இட்டு நிரப்ப, எந்த இயக்குநர்களாலும் இயலாது. ‘இவர் படத்தைப் பார்த்துவிட்டுத்தான் இயக்குநராக வேண்டும் என விரும்பினேன்’ என போனவாரம் படம் தந்த இயக்குநர் வரைக்கும் சொல்லலாம். ஆனால், அப்படி எவரும் இவரைப் போல இதுவரை இயக்கியதே இல்லை. அந்த அவர்... மகேந்திரன்.




கதைகள் குறித்த புரிதலும் சினிமா மொழி தொடர்பான சிந்தனைகளும் மகேந்திரனுக்குள் மாறுபட்டிருந்தன. அது, நம் தமிழ் சினிமாவுக்கு வெகுதூரத்தில் இருந்தது. ‘நாம படம் எடுத்தா இப்படித்தான் எடுக்கணும்’ என்று உள்ளுக்குள் சொல்லிக்கொண்டே இருந்தது மகேந்திர நெருப்பு. ஆனால் அவரிடம் கதை கேட்க வந்தவர்களுக்கு, தன் சிந்தனைகளைத் திணிக்காமல், அவர்கள் கேட்டமாதிரியெல்லாம் கொடுத்து வெற்றிப்படங்களைத் தந்திருக்கிறார். ஆக, படைப்புகளில் சமரசப்படுத்திக்கொண்டார் மகேந்திரன்.

சிவாஜியின் ‘நிறைகுடம்’ அந்தக் காலகட்டத்தில் வந்த படங்களைப் போலவும் இருக்கும். சிவாஜி படம் மாதிரியாகவும் இருக்கும். அதனால்தான் மகேந்திரன் எழுதி, நடிகர் செந்தாமரை டிஎஸ்பி.செளத்ரியாக நடித்த ‘தங்கப்பதக்கம்’ நாடகத்தை, சினிமாவாக்க முன்வந்தார் சிவாஜிகணேசன். சொந்தப்படமாகத் தயாரித்து, பி.மாதவனைக் கொண்டு இயக்கச் செய்தார். மகேந்திரன் கதை, திரைக்கதை, வசனம் எழுதினார். தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த போலீஸ் படங்களுள், மிக முக்கியமான படம் என்று இன்றைக்கும் பேசப்படுகிறது, ‘தங்கப்பதக்கம்’.



சினிமா மீது ஆசையோ அதில் சாதிக்கவேண்டும் என்கிற வெறியோ ஒருபோதும் இருந்ததில்லை மகேந்திரனிடம். ஆனால், நல்ல படைப்பு குறித்த அக்கறையும் கவலையும் தொடர்ந்துகொண்டே இருந்தது.  
ஜெய்சங்கர் நடித்த ‘சபாஷ் தம்பி’ படத்துக்கு கதை எழுதினார். கமல் நடித்த ‘மோகம் முப்பது வருஷம்’ படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதினார். எஸ்.பி.முத்துராமன் கமலையும் ரஜினியையும் வைத்து இயக்கிய ‘ஆடுபுலிஆட்டம்’ படத்தின் கதையும் வசனமும் இவர்தான். சுஜாதா நடித்த ‘வாழ்ந்து காட்டுகிறேன்’, ‘வாழ்வு என் பக்கம்,’ சிவாஜியின் ‘ரிஷிமூலம்’ ‘ஹிட்லர் உமாநாத்’ என பல படங்களில் கதாசிரியராகவும் வசனகர்த்தாவாகவும் பணியாற்றினார். மலையாளப் படத்தின் ரீமேக் படமான ‘பருவமழை’ படத்துக்கு, கமல் அழைத்து எழுதவைத்தார். இவையெல்லாம், மகேந்திரன் பணியாற்றிய படங்கள்தான் என்றாலும் அவை, மகேந்திரன் படங்களில்லை.



நடுவே, அவர் வாழ்வில் எடுத்த முடிவுகள் இன்னும் இன்னும் அவரின் குணங்களுக்குச் சான்று. எந்த நிர்ப்பந்தமும் பெரிய அவமானங்களும் நேர்ந்திருக்காது. திடீரென, ‘காரைக்குடிக்கே போயிடலாம்’ என பலமுறை முடிவெடுத்து, கிளம்பிச் சென்றிருக்கிறார்.
அப்படியெல்லாம் மகேந்திரனை விட்டுவிடவில்லை காலம்.
78ம் ஆண்டு, ஆகஸ்ட் 15ம் தேதி மொத்த திரையுலகமும் தமிழ் உலகமும் திரும்பிப் பார்த்தது. எல்லார் உதடுகளும் ‘மகேந்திரன்... மகேந்திரன்’ என உச்சரித்தன. அன்று முதல், மகேந்திரன் எனும் பெயர், மந்திரச்சொல்லானது. 1978ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதிதான் ‘முள்ளும் மலரும்’ ரிலீஸான நாள். அதுதான் மகேந்திரனின் முதல் படம். மகேந்திரன் படம். தான் நினைத்த சினிமாவை மகேந்திரன் எடுத்திருந்தார்.



அதுவரை தமிழ் சினிமாவின் கதை சொல்லும் பாணி வேறு.கேமிரா நகரும் விதம் வேறு. பின்னணி இசையின் வேலை வேறுவிதம். நடிகர்களின் நடிப்புத்திறனைக் காட்டும் உத்தி வேறு மாதிரியாக இருந்தது. ஆனால் ‘முள்ளும் மலரும்’ என்கிற ஒரே படம், ரஜினி முதற்கொண்டு பலரையும் அவர்களுக்கும் உலகுக்கும் அறியச் செய்தது. அதனால்தான் மகேந்திரனை இன்றைக்கும் கொண்டாடிக் கொண்டிருக்கிறது திரையுலகம்!
நாவலை, சினிமாவாக்கியவர்கள் பலர் உண்டு. நாவலுக்குக் கெட்டபெயர் வந்துவிடக்கூடாது. சினிமாவும் அதன் மொழியினூடே கலந்திருக்கவேண்டும். எழுத்தாளர் உமாசந்திரனின் நாவலைத்தான் படமாக்கினார் மகேந்திரன்.
அதுமட்டுமா? எழுத்தாளர் புதுமைப்பித்தனின் ‘சிற்றன்னை’ ‘உதிரிப்பூக்கள்’ படமானது. சிவசங்கரியின் படைப்பு ‘நண்டு’ என்றானது. பொன்னீலனின் கதை’ பூட்டாதபூட்டுக்கள்’ என வந்தது. இதிலொரு சுவாரஸ்யம்... 20 படங்களுக்கும் மேலே கதையும் வசனமும் எழுதிய மகேந்திரன், தான் இயக்குநரான போது, எழுத்தாளர்களின் படைப்புகளை சினிமாவாக்கினார். எழுத்து, இலக்கியம், திரைப்படம் ஆகியவற்றுக்கு ஒரு கோடு போட்டு, ரோடு போட்டு, பாலமும் அமைத்த பெருமை, மகேந்திரனுக்கு உரியது. இதில் ‘மட்டும்’ கூட சேர்த்துக்கொள்ளலாம், தப்பில்லை.



’’கதையின் கரு ஏதேனும் செய்யவேண்டும். ஒருநிமிடம்... அந்த நிமிடத்துக்குள் இதயத்துக்குள் புகுந்து என்னவோ செய்யும். அதை திரைமொழியாகக் கொண்டுவரவேண்டும். அது அடுத்தவேலை. அந்தத் திரைமொழிக்கு இசையின் பங்கு மிக முக்கியம்’’ என்று பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ள மகேந்திரன், ‘என் நண்பர் இளையராஜா இல்லாமல், என்னால் படங்களே பண்ணமுடியாது. என் மெளனத்தை இளையராஜா நன்கறிவார். என் உணர்வுகளையும் பாத்திர மாந்தர்களின் உளவியலையும் இளையராஜா புரிந்து உணர்ந்து வாத்தியங்களால், ரசிகர்களுக்குக் கடத்துவார்’’ என்று சொல்லும் மகேந்திரனுக்கு, சினிமாவில் வருகிற பாடல் காட்சிகள் மீது, ஒரு வருத்தமும் கோபமும் உண்டு. அப்படி வருத்தப்பட்டு கோபப்பட்ட மகேந்திரன் படத்தின் பாடல்கள் எல்லாமே, நம் மனசுக்குள் ஊடுருவிச் சென்று ஏதோ செய்யும் மாயங்கள் கொண்டவை.
‘முள்ளும் மலரும்’ படத்தில் கழைக்கூத்தாடிக்கான பின்னணி இசைதான், அண்ணன் தங்கைக் காட்சிகளுக்கு பின்னணியாக வந்துகொண்டே இருக்கும். ‘பாசமலர்’ படத்துக்குப் பிறகு குறிப்பிடத்தக்க, மிக யதார்த்தமான அண்ணன் தங்கை, காளியும் வள்ளியுமாகத்தான் இருப்பார்கள்.
சரத்பாபுவுக்கு ரஜினியை பிடிக்கவே பிடிக்காது. ஒருகட்டத்தில் தங்கையை மணம் செய்து கொள்கிற விருப்பத்தைத் தெரிவிப்பார். ‘நாளைக்கி டீக்கடைக்கு வந்துருங்க’ என்பார். அதேபோல் சரத்பாபு வந்திருப்பார். ரஜினி குறுக்கும்நெடுக்குமாக போவார். யார்யாரிடமோ பேசுவார். ‘டீ சாப்பிடுறீங்களா சார்’ என்று கேட்பார். தடக்கென்று வேறொரு முடிவு எடுத்துவிட்டு, சரத்பாபுவை அவமானப்படுத்துவார். அப்படியொரு அவமானங்களைத்தான், சமூகத்தில் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அதைத்தான் காட்சிப்படுத்தி, கைத்தட்டல் வாங்கியிருப்பார் மகேந்திரன்.

இப்பவும் சொல்றேன் சார். உங்களை எனக்குப் புடிக்கலை’ என்று சொல்லிவிட்டு, தங்கையை அவர் திருமணம் செய்துகொள்ள அனுப்புவார்.
‘முள்ளும் மலரும்’ படத்தில் இருந்து தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில், ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ளமுடிந்தது. மகேந்திரன் படங்களில், பெண்களின் உணர்வுகளும் குழந்தைகளின் எதிர்காலம் குறித்த கேள்விகளுமாகவே கதைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
சண்டைக் காட்சிகளைப் பார்த்து, விசிலடித்து, கைத்தட்டிப் பார்த்தவர்கள்தானே நாம். ‘உதிரிப்பூக்கள்’ படத்தில் மனைவியுடன் சேர்ந்து வாழச் சொல்லி, விஜயனிடம் பேசுவதற்கு ஆற்றங்கரைக்கு வருவார் சரத்பாபு. இருவருக்கும் சண்டை. அதைக் காட்சிப்படுத்தியிருக்கமாட்டார் மகேந்திரன். அங்கே சலனமே இல்லாமல் ஆற்று நீர் ஓடிக்கொண்டிருக்கும். அதுவொரு ஷாட். எல்லாவற்றுக்கும் வளைந்துகொடுக்கிற நாணல் புற்கள் க்ளோஸப். அதுவொரு ஷாட். கரையில் ஒய்யாரமாகப் படுத்துக்கொண்டிருக்கும் யாரோ ஒரு சிறுவன் தலைதூக்கிப் பார்ப்பான். அதுவொரு ஷாட். அடுத்து, சரத்பாபு ஆற்றுநீரில் கைமுகமெல்லாம் கழுவுவார். முகமெல்லாம் காயம். சட்டெயெல்லாம் அழுக்கு. கீழே கிடக்கும் கண்ணாடியை போட்டுக்கொண்டு, துண்டை எடுப்பார். அதை விஜயனுக்குத் தருவார். ‘நீங்க அடிச்சதை அப்படியே வாங்கிகிட்டேன். திருப்பி அடிக்கலியேனு நினைக்கலாம். உங்க மனைவி விதவையாவறதை நான் விரும்பல’ என்று சொல்லிவிட்டுச் செல்வார். இப்படியான காட்சிகளை, இந்த நூற்றாண்டு கண்ட சினிமாவில், பார்த்திருக்கவே முடியாது.

‘உதிரிப்பூக்கள்’ படத்தில் விஜயன், அஸ்வினியின் அந்த இரண்டு குழந்தைகளே பிரதானம். மிக மோசமான, சாடிஸ்ட் குணம் கொண்ட விஜயனிடம் அவர் மனைவியின் தங்கை வந்து, ‘நாளைக்கி கல்யாணம். கூப்புட வரலை. உங்க ஆசீர்வாதமும் எனக்குத் தேவையில்ல. கல்யாணம் முடிஞ்சு ஊருக்குப் போறேன். பசங்க ரெண்டுபேரையும் எங்கூட விட்ரு. நான் கூட்டிட்டுப் போறேன்’ என்பார்.
அப்போது கதவைச் சாத்துவார் விஜயன். அந்தப் பெண்ணின் புடவை, பாவாடை, ரவிக்கை என எல்லாத்துணிகளையும் கழற்றி எறிவார். அந்தப் பெண் குறுகிக்கதறுவாள். ‘பயப்படாதே. நான் உன்னைத் தொடமாட்டேன். உன்னை இப்படிப் பாத்த முத ஆள் நானா இருக்கணும். அதான் என் ஆசை. இனிமே ஒவ்வொரு நாளும் என் நெனப்பு வரணும் உனக்கு. இதுதான் நான் கொடுக்குற ஆசீர்வாதம்’ என்பார்.
கடைசியில் ஊரே சேர்ந்து அப்படியொரு முடிவு எடுக்கும். ’இந்த ஊர் இனிமே நிம்மதியா இருக்கணும்னா, நீயே உன் முடிவை எடு’ என்று ஆற்றில் மூழ்கி இறக்கச் சொல்லும். ‘இதுவரைக்கும் நான் கெட்டவனா இருந்தேன். இப்ப இந்த முடிவை நீங்க எடுத்திருக்கீங்க. உங்க எல்லாரையும் என் பக்கம் கொண்டுவந்துட்டேன். நான் செஞ்சதுலயே இதான் பெரிய தப்பு’ என்பார்.
குழந்தைகளுக்கு முத்தம் கொடுத்துவிட்டு, ‘நல்லாப்படிக்கணும். நல்லபேரு எடுக்கணும். அப்பா குளிக்கப் போறேன்’ என்று சொல்லிவிட்டு திரும்புவார். அந்த ஆறு சலனமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும். ஊரே இறுக்கமாகும். நல்லவர்கள் தடுக்கப் பாய்வார்கள். ஆனால் அவர்களை தடுத்துவிடுவார்கள். மீண்டும் அந்த ஆறு சலனமே இல்லாமல் தன் பயணத்தைத் தொடர்ந்துக்கொண்டே இருக்கும்.
மெளனம்... மெளனம்... மெளனம். நண்டும்சிண்டுமாக இருக்கிற அந்த இரண்டு குழந்தைகளும், ஆற்றங்கரையில், தண்ணீரைப் பார்த்துக்கொண்டே ஓடிக்கொண்டே இருப்பார்கள். பின்னணியில் அந்த இசை நம்மைச் சாகடிக்கும். படம் முடியும். ஆனாலும் அந்த சோகம் இத்தனை வருடங்கள் கழித்தும் மனதுள் ஓர் உருளையாய் சுற்றிக்கொண்டே இருக்கின்றன. அதுதான் மகேந்திரன் படைப்பாளியின் ஆளுமை.

‘உதிரிப்பூக்கள்’ போலவே ’நண்டு’ படத்திலும் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருப்பார். ‘மெட்டி’ படத்தின் சிக்கலான கதையையும் பெண்களின் வெவ்வேறுபட்ட உணர்வுப்பாடுகளையும் மகேந்திரனால் மட்டுமே அப்படிக் கவிதையாகவும் கதையாகவும் காட்சிமைப்படுத்தமுடியும்.
அவரின் எந்தப் படமாக இருந்தாலும் ‘இது மகேந்திரன் படம்’ என்று பெருமையாகச் சொல்லுகிறோம். அப்பேர்ப்பட்ட மகேந்திரன், தன் எல்லாப் படங்களிலும் கதை எழுதிய உமாசந்திரன், புதுமைப்பித்தன், பொன்னீலன், சிவசங்கரி என படைப்பாளிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து டைட்டிலில் பதிவிட்டிருப்பார்.

ஏதேனும் ஒருவரின் வாழ்க்கை, அதில் நடந்த அழுத்தமான சம்பவம் என்பதுதானே கதையாகும். ஆனால் மகேந்திரன் எனும் மகாபடைப்பாளி ஊடுருவும் ஆற்றல் கொண்டவர். இதற்கு உதாரணம் ஒன்று... மும்பையில் ஒருவேலையாகப் போயிருந்த மகேந்திரன், அதிகாலையில் மாடியில் இருந்து பார்த்துக்கொண்டிருக்க, சாலையில் ஒரு பெண், ஜாக்கிங் போய்க்கொண்டிருந்தாள். உடனே அவர் மனதுள் கேள்வி. பல கேள்விகள். ‘ஒரு பெண் தன் வாழ்நாளில், எதுஎதுக்கெல்லாம் ஓடவேண்டியிருக்கு’ என யோசித்தார். அதிலிருந்து வந்ததுதான் ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’.
‘முள்ளும் மலரும்’ ஷோபா, ‘உதிரிப்பூக்கள்’ அஸ்வினி, ‘மெட்டி’ ராதிகா, ‘கைகொடுக்கும் கை’ ரேவதி, ‘நண்டு’ அஸ்வினி, ‘பூட்டாதபூட்டுகள்’ சாருலதா, ‘ஜானி’ ஸ்ரீதேவி, தீபா, என பெண் கதாபாத்திரங்கள், நமக்குள் ஏற்படுத்துகிற தாக்கம், நம் வாழ்க்கைப் பயணம் போலவே நீண்ட நெடியதானது.
‘நண்டு’ படத்தில் ஓர் பாடல்..
’அள்ளித்தந்த பூமி அன்னையல்லவா...
சொல்லித்தந்த வானம் தந்தையல்லவா’
தமிழ் சினிமாவில் தாயும் தந்தையுமாக இருந்து மகேந்திரன் சொல்லித்தந்திருப்பது, இன்னும் பல நூற்றாண்டுகள் கடந்து வருகிற பிள்ளைகளுக்கும் சத்தான பாடம்; வேதம்!
தமிழ் சினிமாவில் சிறந்த படங்களின் பட்டியலிலும் இந்திய சினிமாவின் சிறந்த படங்களின் பட்டியலிலும் மகேந்திரனின் படங்கள், முக்கியமான இடத்தில் இருக்கின்றன. தமிழ் ரசிகர்களின் மனதிலும் மகேந்திரன் அப்படியொரு இடத்தில், ஸ்தானத்தில் இருக்கிறார்; எப்போதும் இருப்பார்.
‘சீதக்காதி’ படத்தில் நீதிபதியாக வரும் மகேந்திரன் சொல்லுவார்... ‘’கலைக்கும் சரி, கலைஞனுக்கும் சரி... சாவு கிடையாது. ஏதோவொரு தருணத்தில் அவை வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும். கலைஞன் வெளிப்பட்டபடியே இருப்பான்.
மகேந்திரன் எனும் கலைஞன்... சாகாவரம் பெற்ற உணர்வுபூர்வக் கலைஞன்! உன்னதப் படைப்பாளி. மகேந்திரனுக்கு மரணமே இல்லை!

Saturday, 13 October 2018

தோற்றத்தாலும் நடிப்பாலும் உயர்ந்த நடிகர் - இரகுவரன்

தமிழ்த்திரையுலகு தந்த நடிகர்களில் இரகுவரனுக்குத் தனியிடமுண்டு. தோற்றத்தால் விளங்கிய உயரத்தை நடிப்பிலும் தொட்டவர் அவர். இந்தி நடிகர் திலீப்குமார் பார்த்து வியந்த தமிழ் நடிகர். உடைந்து தடுமாறுவதைப் போன்ற குருத்துக்குரலை வைத்துக்கொண்டு எதிர்நாயகப் பரப்பில் வன்மையான நடிகராக வலம்வந்தார். சத்தியராஜ், நிழல்கள் இரவி, இரகுவரன் ஆகிய மூவரும் எதிர்நிலை, இடைநிலை வேடங்களில் தொடர்ந்து நடித்தபடி முன்னேறியவர்கள். மூவரும் கோவைப்பின்னணி கொண்டவர்கள். வாட்ட சாட்டமானவர்கள்.


அம்மூவரில் சத்யராஜ் தொடர்ந்து சந்தை மதிப்பு தளராதவராயிருந்தார். நிழல்கள் இரவிக்கு நாயகப் படங்கள் பல அமைந்தாலும் அவரால் முன்னணி இடத்தைப் பெறமுடியவில்லை. இரவி நாயகனாக நடித்த "அம்மன் கோவில் திருவிழா, நான் புடிச்ச மாப்பிள்ளை" ஆகிய படங்கள் வெளிவந்தபோது திரையரங்குகளின் முன்னே கூடிய கூட்டம் நினைவிருக்கிறது. தம்மை வைத்துத் தொடர்ச்சியாகப் படமெடுக்கும் முதலாளிகளும் இயக்குநர்களும் அமையப்பெற்ற நடிகர் முன்னணி இடத்தைப் பிடிக்கிறார். நிழல்கள் இரவி பாரதிராஜாவின் அறிமுகம். அப்பெயரின் முன்னொட்டு அவர் அறிமுகமான படத்தைக் குறிப்பதுதான்.

அம்மூவரும் பல படங்களில் ஒன்றாக நடித்தனர் என்றாலும் இரகுவரனைத் தனித்துக் காட்டிய படம் ஒன்றுண்டு. 'மக்கள் என் பக்கம்' என்பது அப்படத்தின் பெயர். சாம்ராஜ் என்னும் கள்ளக்கடத்தல் தொழிலதிபர் வேடம் சத்தியராஜுக்கு. அவருடைய இரண்டு உதவியாளர்கள் இரகுவரனும் நிழல்கள் இரவியும். அரசியல்வாதிவாக வரும் இராஜேஷின் நோக்கம் சாம்ராஜினை அழித்துவிடவேண்டும் என்பது. இராஜேஷைக் கொன்றுவிட வேண்டும் என்று சாம்ராஜ் வகுத்த திட்டப்படி இரகுவரனும் நிழல்கள் இரவியும் இராஜேஷின் மகிழுந்து வரும் வழியை மறித்து துப்பாக்கிச் சூட்டில் ஈடுபடுவார்கள். அம்முயற்சியில் இரவி இறந்துவிட, படுகாயங்களோடு தப்பி வரும் இரகுவரன் சத்தியராஜின் மடியில் தம்முயற்சித் தோல்வியை நடிப்பால் சொல்லியபடி உயிர்விடுவார். அந்தக் காட்சியில் மட்டுமில்லை, அந்தப் படத்திலும்கூட இரகுவரனுக்கு உரையாடல்கள் பெரிதாய் இல்லை. ஆனால், துடிதுடித்து உயிர்விடும் காட்சியில் அவர் நடிப்பைப் பார்த்த பார்வையாளர்கள் திகைத்துப் போய்விட்டனர். இரகுவரன் திறமையான நடிகர் என்பது அன்று நிறுவப்பட்டது.



ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பத்திரண்டாம் ஆண்டில் 'ஏழாவது மனிதன்' என்ற திரைப்படத்தில் அறிமுகமானபோதும் இரகுவரனை அடையாளங்காட்டிய முதற்படம் 'சம்சாரம் அது மின்சாரம்'. அம்மையப்ப முதலியாரும் அவருடைய மூத்த மகன் சிதம்பரமும் வீட்டுக்குள் மோதிக்கொள்ளும் காட்சியை இன்றைக்கு நினைத்தாலும் பதைபதைக்கிறது. உரையாடல்களை மடித்துத் தெறித்துப் பேசுவதில் வல்லவரான விசுவோடு நேர்நிகராக எதிர்த்து நடித்தார். உறவுகளின் பெற்றி அறியாமல் காசுக் கணக்கு பார்க்கும் பலரும் இரகுவரனின் உருவில் தம்மை உணர்ந்தனர். இரகுவரனின் பெயர் பரவத் தொடங்கியது. அவ்வாண்டிலேயே 'மிஸ்டர் பாரத்' என்ற படத்தில் அடிதடிக் காட்சி. எல்லா வகையானும் நடிக்கக் கூடியவர் என்பதைத் திரையுலகம் ஏற்றுக்கொண்டது.

மந்திரப் புன்னகை, ஊர்க்காவலன் போன்ற பெரிய படங்களில் இரகுவரனே எதிர்நாயகன். அதனால் சிறிய படங்களின் நாயகனாகும் வாய்ப்பு இரகுவரனைத் தேடி வந்தது. ஆர்.சி. சக்தி இயக்கிய "கூட்டுப் புழுக்கள்" என்ற திரைப்படம் வெற்றியும் பெற்றது. வேலையில்லாக் கொடுமையால் நிறைவேறாக் காதலோடு தளர்ந்து நிற்பவன். அவ்வேடத்திற்கு இரகுவரன் பிசிறின்றிப் பொருந்தினார். கைநாட்டு, மைக்கேல்ராஜ் போன்ற படங்கள் அவரை நாயகனாகத் தூக்கி நிறுத்தத் தவறின. அவ்வமயம் எதிர்நிலை, இடைநிலை வேடங்கள் அவர்க்கு வந்து குவியத் தொடங்கின.
இரகுவரனின் நடிப்புக்குத் தீனி போட்ட இரண்டு படங்கள் பாசில் இயக்கியவை. "பூவிழி வாசலிலே..." என்ற படத்தைப் பார்க்காதவர்கள் இப்போதே பாருங்கள். கொலையைப் பார்த்த குழந்தையைக் கொல்லும் முயற்சியில் ஈடுபடும் பெருந்தனக்காரன் வேடம் இரகுவரனுக்கு. அமைதித் திருவுருவாக இருந்தவாறே அவர் செய்கின்ற தீச்செயல்கள் உள்ளத்தை நடுங்க வைக்கும். பாசிலின் இன்னொரு படம் "என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு". தத்துக்கொடுக்கப்பட்ட குழந்தையைத் தேடி வரும் தந்தை. கெஞ்சாமல் கதறாமல் தன் மகளை வேண்டித் திரியும் தந்தையாக அப்படத்தில் வேறு உயரத்தைத் தொட்டார்.
"புரியாத புதிர்' என்ற திரைப்படத்தில் இரகுவரனுக்கு மனச்சிதைவுற்ற கணவன் வேடம். மனைவியை ஐயுற்றுத் துன்புறுத்துபவர். "ஐ நோ.. ஐ நோ... டேய் நோ... ஐ நோ..." என்று இரண்டு சொற்களை வைத்துக்கொண்டு அவர் ஆடிய ஆட்டத்தை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். இராம்கோபால் வர்மாவின் முதற்படமான சிவா 'உதயம்' என்ற பெயரில் தமிழுக்கு வந்தது. இரகுவரன் நடிப்புக்கு அப்படம் கொடுமுடி. ஆங்கிலப் படங்களில்தான் அப்படிப்பட்ட நடிப்பைப் பார்க்க முடியும். 'பவானி'யாக மிரட்டினார். அந்த வரிசையில் காதலன், பாட்சா, முத்து என்று அவர் வென்றாடிய வேடங்கள் பல.
பாலசேகரன் இயக்கிய 'லவ் டுடே' என்னும் திரைப்படத்திலிருந்து இரகுவரன் நடிப்பின் மூன்றாம் பாகம் தொடங்குகிறது. பாசத்திற்குரிய தந்தையாக அவர் நடித்தது பார்த்தோரின் கண்ணீரைப் பிழிந்தது. உல்லாசம் என்ற படத்தில் நல்லவனை வளர்த்துத் தரும் தீயவன் வேடம். அமர்க்களம் என்னும் படத்தினையும் மறந்திருக்க முடியாது. அவருடைய கடைசிக் காலப் படங்களில் ஒன்றான யாரடி நீ மோகினியிலும் அவர் முத்திரை பதிக்கத் தவறவில்லை.
வெறும் இருபத்தைந்தாண்டுகளில் முந்நூறு படங்கள் நடித்தார் இரகுவரன். கூடுதலாக முப்பதாண்டுகள் வாழ்ந்திருந்தால் மேலும் முந்நூறு படங்கள் நடித்திருக்கக் கூடும். அவற்றால் அவர் பன்மடங்கு உயரத்திற்குச் சென்றிருக்கலாம். ஒருவர் என்னவாக வேண்டுமோ அவ்வாறு ஆகாதபடி வீழ்த்துவது போதைப் பழக்கமாகத்தான் இருக்க முடியும். பெருங்கலைஞர்கள் பலரும் வீழ்ந்த அந்தப் படுகுழியில் இரகுவரனும் வீழ்ந்தார். அவருடைய நடிப்பு மட்டுமில்லை, வாழ்க்கையும் இக்காலத்தவர்க்கு ஒரு படிப்பனைதான்.
வெளியூர்க் கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர்குழாம் இருப்பூர்தியில் சென்னை திரும்பிக்கொண்டிருந்ததாம். இருப்பூர்திப் பெட்டி முழுவதும் கலைஞர்கள் நிரம்பியிருந்தனராம். திரையுலகில் அறிமுகமாகியும் பெயர்பெற முடியாத நிலையில் மனம் வெதும்பியிருந்த நடிகர் சூர்யாவும் இரகுவரனும் அப்பெட்டியில் அடக்கம். அப்போது இரகுவரனின் போதைக்குரல் சூர்யாவைக் கடுமையாய் அழைத்ததாம். "டேய் சூர்யா... முடியலல்ல... நீ எதுவுமே ஆக முடியலல்ல... எல்லாம் பண்ணிப் பார்த்தும் எதுவுமே நடக்கலல்ல... வெறுப்பா இருக்குமே... செத்துடலாம்போல இருக்குமே... எனக்கும் அப்படித்தான்டா இருந்துச்சு... மாத்துடா... எல்லாத்தையும் மாத்து... இதென்னடா முடி... இதை மாத்துடா... உடம்ப மாத்துடா.. பார்க்கிறது நடக்கிறது எல்லாத்தையும் மாத்துடா... அப்புறம் பார்றா... எல்லாமே மாறும்..." என்று அறிவுரை கூறினாராம். இரகுவரனின் அவ்வறிவுரையை தெய்வ வாக்காக ஏற்றுக்கொண்டு தம் நடை உடை பாவனைகளை மாற்றிக்கொண்டார் நடிகர் சூர்யா. அதன் பிறகு அவரடைந்த ஏற்றங்களை நாடறியும்.


Saturday, 6 October 2018

மழை பாடல் கொண்டாட்டம்

மழைக்காலம் தொடங்கிவிட்டதால் மழை தொடர்பான சில பாடல்களை ரசிக்கலாம்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது. வெயில் வாட்டி எடுக்கும் சென்னை தற்போது ஊட்டி போன்று குளிராக உள்ளது.
வெளியே மழை பெய்யும் இந்த நேரத்தில் மழையை கொண்டாடும் பாடல்களை கேட்கலாமே.


மழை


மழை வருவதற்கு முன்பு மேகங்கள் காட்டும் தோரணை, பறவைகளின் முன்னேற்பாடு, வறண்ட நிலத்தின் ஏக்கம் என இயற்கையின் பல செயல்பாடுகளை கரிசனமாகக் கையாண்டவர் இளையராஜா. மழை வருது மழை வருது குடை கொண்டு வா.. மானே உன் மாராப்பிலே.. என்ற பாடலில் இறுதிவரை மழை வராது. ஆனால் மழை வரும் முன்பு இயற்கை ஆயத்தமாகும் உணர்வைக் கொடுத்திருப்பார் இளையராஜா. "வெயில் வருது.. வெயில் வருது... குடை கொண்டுவா.. கண்ணா உன் பேரன்பிலே... உன் தோளிலே பிள்ளை போலே உறங்க வேண்டும் கண்ணா வா.." என பெண் பாடினாலும், அவளின் மாராப்புதான் குடையாக வேண்டுமென ஆண் செல்லமாக அடம்பிடிப்பது போல பாடலை இயற்றிய பெருமை கவிஞர் வாலிக்கே சேரும்.


வைரமுத்து


இளையராஜாவும் மழையும் என டைட்டில் வைத்தால் ஒரு பட்டிமன்றமே நடத்தலாம். அதனால், 90 கிட்ஸ்களுக்கு பரிட்சயமான இசையமைப்பாளர்களில் யார் சிறப்பான மழைப்பாடல்கள் போட்டிருக்கிறார்கள் என்று பார்க்கும்போது, மழை திரைப்படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்த "நீ வரும்போது நான் மறைவேனா.." பாடல் முக்கியமானது. பாடல் மட்டுமல்லாமல் படத்திலும் மழைக்கே முக்கியத்துவம். இப்படல் மழை என்ற ஒற்றை வார்த்தை தரும் ஆனந்தத்தையும் கொண்டாட்டத்தையும் சொன்ன பாடல். மழை ஒருவரின் சிறுவயதை திரும்பத்தரும் என்ற அடிப்படையில் எழுதப்பட்ட வரிகள் இவை. "கொள்ளை மழையே கொட்டி விடுக.. பிள்ளை வயதே மறுபடி வருக... நிற்க வேண்டும் சொற்பமாக... தாவனியெல்லாம் வெப்பமாக..." நகரத்திலுள்ள இளைஞி ஒருவள் சிறுமியாக மாறி ஆடைகளைக் களைந்து மழையோடு மழையாக மழையைக் கொண்டாட விரும்பும் உணர்வைக வரிகளில் காட்சிப்படுத்தியிருப்பார் வைரமுத்து. ஸ்ரேயாவை மறந்து நீங்கள் இந்த பாட்டை ரசித்தீர்கள் என்றால் நிச்சயம் நீங்கள் ஐ.எஸ்.ஐ முத்திரை குத்தப்பட்ட இசை ரசிகர்தான்.



கண்ணதாசன்


அது என்ன பெண்கள் மட்டும்தான் மழையைக் கொண்டாடுவாங்களா? ஆண்கள் என்ன பாவம் செய்தார்கள் அவங்களும் மழையை கொண்டாடலாம் என ஜெமினிகணேசனைக் கொண்டாட வைத்தவர் கவியரசர் கண்ணதாசன். அவளுக்கென்ன ஒரே மனம் திரைப்படத்தில், மழையில் நனைந்து கொண்டு ஆனந்த ஆட்டம் போட்டிருப்பார் நம் காதல் மன்னன். " ஆயிரம் கனவு காணுது மனது ஓஹோ... பெண்ணை தொட்ட உள்ளம் எங்கும் இன்ப வெள்ளம்.. எங்கே அந்த சொர்க்கம் ஹா... எங்கே அந்த சொர்க்கம் ... என்று துள்ளிக்குதிப்பார் ஜெமினி. "மூடி வைத்த தட்டில் இன்று மோக சின்னங்கள் ஆடு தொட்டில் போடும் எந்தன் காதல் எண்ணங்கள்.. கை கொள்ளாத வண்ணம் அவள் சுகம் கொடுத்தாளோ... " என காதல் கைகூடிய இளைஞனின் கொண்டாட்ட மனநிலையை மழையும் சேர்ந்து கொண்டாடுவது போல பாடல் அமைத்திருப்பார். இப்பாடலுக்கு இசையமைத்தவர் எம்.எஸ்.வி, துள்ளலாகப் பாடுவதற்காக எஸ்பி.பாலசுப்பிரமணியத்தைப் பாடவைத்தார். கேட்டுப் பாருங்க... புதுமையான அனுபவமாக இருக்கும்.



ஏஆர்.ரஹ்மான்


ரஹ்மானும் வைரமுத்துவும் இணைந்தால் ஹிட் ஆகாத பாடல் ஏது? அப்படிப்பட்ட ஒரு கொண்டாட்டமான பாடல்தான் குரு படத்தில் வரும் "வெண்மேகம் வெட்ட வெட்ட.." வீட்டை விட்டு வெளியேறும் ஒரு இளைஞிக்கு இருக்கும் ஆசைகளை மழையோடு பகிர்ந்துகொள்வாள். மழை பெய்யும்போது மேகக்கூட்டத்தினால் ஏற்படும் மெல்லிய இருட்டையும் விடாமல் மழையோடு மணிரத்னம் காட்சிப்படுத்தியிருப்பார். வெகுளித்தனமாக மாறியிருக்கும் ஷ்ரேயா கோஷலின் குரல் வைரமுத்துவின் வரிகளுக்கு உயிருட்டியிருக்கும். தற்போது வெளியான மழைக்குருவி பாடல் நம்ம ஊரில் பிறந்த சிட்டுக்குருவி வெளிநாட்டுக்கு போய் பிற கலாச்சாரங்களையும் மொழிகளையும் கற்றுக்கொண்டு, ஏதோ ஒரு நாட்டில் மழையைப் பார்த்த அனுபவத்தில் ஒரு பாட்டை பாடி அதை நம்ம ஊர் மழைக் காலத்துடன் ஒப்பிட முயல்வது போல இருந்தது.



அடடா மழைடா...


யுவன் ஷங்கர் ராஜாவின் அடடா மழைடா பாடலும் மழையின் கொண்டாட்ட உணர்வை ஏற்படுத்தக்கூடியதுதான். பாசமாக பக்கத்தில் உட்கார்ந்து கணக்கு சொல்லி கொடுக்கும் மூன்றாம் வகுப்பு டீச்சரைப் போல், மிக எளிமையான வரிகளையே கையாண்டிருப்பார் நா.முத்துக்குமார். தமன்னாவை பிக்கப் செய்ய வேண்டுமென்ற நோக்கில் கார்த்தி காரில் பிக்கப் செய்து போகும்போது இருவரையும் மழை ஒன்றிணைப்பதால் அவர் மழைக்கு நன்றி சொல்வதைப் போல பாடல் அமைந்திருக்கும். " பின்னி பின்னி மழையடிக்க.. மின்னல் வந்து குடை பிடிக்க வானம் ரெண்டாச்சு பூமி துண்டாச்சு என் மூச்சு காத்தால மழ கூட சூடாச்சு" போன்ற வரிகள் மூலம் மழை மற்றும் காதலின் பிரம்மாண்டத்தை கையாண்டிருப்பார் நா.முத்துக்குமார். வழக்கம்போல யுவன் முத்துக்குமார் மேஜிக்கில் கலக்கிய பாடல்.

டி.ராஜேந்தர்


கிளிஞ்சல்கள் திரைப்படத்தில் வரும் "அழகினில் விளைந்தது மழையினில் நனைந்தது" பாடல் இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட மழைப்பாடல். ஐயய்யோ மழையில் மாட்டிகிட்டேனே என கதாநாயகி நினைக்கும் நேரத்தில் சுகமான தொல்லையாக காதலன் தோன்றுவது. மறுக்க நினைத்தாலும் முடியாமல் காதலி அதை ஏற்றுக்கொண்டு டூயட் பாடுவது போன்ற ஒரு சூழலில் அமைந்திருக்கும். "என்னைவிட்டு எங்கேயும் போகமுடியாது, நீ இந்த மழைபோல் என்னையும் ஏற்றுக்கொள்" என்று கதாநாயகன் லவ் டார்ச்சர் செய்வதுபோலவே பாடல் வரிகளையும், பாடலுக்கான இசையையும் அமைத்திருப்பார் டி.ராஜந்தர். மைக் மோகன் குடைபிடித்து பாடிய பாடல். மிஸ் பண்ணிடாதீங்க!

Tuesday, 24 July 2018

தன் விழியழகால், பண்பட்ட நடிப்பால் அனைவரையும் ஈர்த்த ஸ்ரீவித்யா!

தன் விழியழகால், பண்பட்ட நடிப்பால் அனைவரையும் ஈர்த்த ஸ்ரீவித்யாவின் பிறந்தநாள் இன்று.



தமிழ்த்திரையுலகில் எத்தனையோ அம்மாக்கள் தோன்றியிருக்கிறார்கள். பண்டரிபாய், எம்.வி.ராஜம்மா, கண்ணம்பா என்று பலர் பல படங்களில் நடித்திருக்கிறார்கள். ஆனால் இவர்களுக்கும் ஸ்ரீவித்யாவிற்கும் சில வேறுபாடுகள் உண்டு. மற்ற அம்மா நடிகைகள் எல்லாம் உண்மையிலேயே அம்மாவுக்குரிய வயதும் தோற்றமும் உடையவர்கள். ஆனால் 23 வயதிலேயே அதாவது ஒரு சராசரி கதாநாயகியைவிட குறைவான வயதிலேயே அம்மாவாக நடித்தவர்தான் ஸ்ரீவித்யா. அதுவும் ஒரு கைகுழந்தைக்கோ, சிறுமிக்கா அல்ல, வயது வந்த ஜெயசுதாவிற்கு "அபூர்வராகங்க"ளில்.

கொடிகட்டி பறந்தார்





1970களில் தொடங்கி 2000 வரை என சுமார் 30 ஆண்டுகள் மிகத் துல்லியமான நடிப்பு, நேர்த்தியான வசன உச்சரிப்பு, பேசும் விழிகளாலும், தென்னிந்திய சினிமா ரசிகர்களையே தன்னகத்தே வைத்திருந்தார் ஸ்ரீவித்யா. கர்நாடக இசையின் தேவகானக்குயில் எனப்படும் எம்.எல்.வசந்தகுமாரியின் மகள். இசை, நாட்டியம், இரண்டையும் கற்ற ஸ்ரீவிதியா சினிமா உலகினரால் வித்தி என அன்போடு அழைக்கப்பட்டார். "திருவருட்செல்வர்" படத்தில் நடிப்பின் பிள்ளையர் சுழி போட, சிறிது காலத்திலேயே புகழில் கொடிகட்டி பறக்க தொடங்கினார்.

கம்பீரமாக நடைபோட்டார்





நாட்டியம், நடிப்பு, இசை என அசாத்திய திறமைகளை ஒருசேரப்பெற்று, திரைத்துறையில் கம்பீரமாக நடைபோட்டவர்கள் ஒருசிலரே. அதில் முக்கிய இடம் ஸ்ரீவித்யாவுக்குத்தான் போய்சேரும். தங்கையாய், காதலியாய், மனைவியாய், தாயாய், அண்ணியாய், தோழியாய், பாட்டியாய் என்று ஒரு பெண்ணின் அனைத்து முக்கிய பரிணாமத்தையும் படங்களில் குறைவின்றி வெளிப்படுத்தியவர்.

மணவாழ்க்கையில் கசப்பு





கபடமற்ற, எதையும் நல்லதாகவே நம்பும் குழந்தை மனமே அவரது வாழ்க்கையை புரட்டி போட வைத்தது. 35 வயதுக்கு பின்னர், மணவாழ்க்கையில் விதி விளையாட துவங்கியது. மண வாழ்க்கையில் சறுக்கி விழுந்தார். 9 வருட கால போராட்டத்துக்கு பின்னர் தனித்து வாழ்ந்தாலும், காலை சுற்றின பாம்பு கூடவே இருந்தது. குழந்தையிலிருந்து ஸ்ரீவித்யாவுக்கு இருக்கும் ஆன்மீக ஈடுபாடு அவரை பண்படுத்தின. பக்குவப்படுத்தியது. பல கதாபாத்திரங்களை துணிந்து ஏற்று நிறைவாக நடித்தார். தளபதி, காதலுக்கு மரியாதை, புன்னகை மன்னன் போன்ற படங்களில் அவரது சாந்தமான முகம்-கைகூப்பி வணங்ககூடிய எழிலார்ந்த தோற்றம், இயல்பான நடிப்பு, பக்குவமான உணர்வு போன்றவை மறக்க முடியாதது.

நம்பி ஒப்படைத்த சொத்துக்கள்


ஆனால் காலம் கொடுத்த சம்மட்டி அடியான புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அழகிய ஓவியம் அலங்கோலமாக தொடங்கியது. வடித்து வைத்த சிலை ஒன்றினை கறையான் அரிக்க துவங்கியது. பெற்றவர்கள் இன்றி, உற்றார் உறவுகளின்றி, தவித்தார். எல்லாமே சூன்யமாகி போனது. அனைத்து சொத்துக்களையும் என்ன செய்வது? வசதியும் ஆதரவும் அற்ற கலை ஆர்வம் கொண்ட ஏழை குழந்தைகளின் வளமான எதிர்காலத்திற்காக கோடிக்கணக்கான சொத்துக்களை உயில் எழுதி கொடுத்தார். நம்பி ஒருவரிடமும் ஒப்படைத்தார். ஆனால் அதில் எள்ளளவும் அந்த குழந்தைகளுக்கு போய்ச் சேரவில்லை. சொத்துக்களின் கதி இதுவரை என்னவென்றும் தெரியவில்லை.

காலத்தின் கோலம்


திரைத்துறையில் எப்பேர்பட்ட பிரபலங்களாக இருந்தாலும் தனிப்பட்ட வாழ்வில் அவர்கள் சிக்குண்டு போய்விடுகிறார்கள் என்பதும், காலம் அவர்களை ஒரு புரட்டு புரட்டியே போட்டு தன்னுடன் அழைத்து சென்றுவிடுகிறது என்பதற்கும் ஸ்ரீவித்யா உதாரணம். அவர் எந்த அளவிற்கு விசால மனம் படைத்தவர் என்பதற்கும், அவரது மாபெரும் மனித நேயத்திற்கும், நாட்டியக்கலை மீது இருந்த பற்றுக்கும் அவர் எழுதி வைத்த உயிலே சாட்சியாகும். இதமான இதயத்தை அது பிரதிபலித்தது. இதைக்கூட புரிந்து கொள்ளாத ஒருவன் அவருக்கு கணவராக இருந்தது காலத்தின் கோலம் என்றுதான் சொல்ல வேண்டும். தாய்மையடைந்த போதெல்லாம் அந்த வாய்ப்பு தட்டிப் பறிக்கப்பட்ட இந்த திரைத்தாயினால் கடைசிவரை நிஜத்தாயாக வாழமுடியாமல் போனது துரதிர்ஷ்டமே!

Sunday, 24 June 2018

கண்ணதாசன் வர்ணித்த ஆணழகன்

M.G.R. -க்கு உள்ள தனிப்பட்ட சிறப்பு தன்னைப் போற்றுவோருக்கு மட்டுமின்றி, கடுமையாக தூற்றுவோருக்கும் உதவிகள் செய்வார். சொல்லப் போனால், தன் மீது கல் வீசுவோருக்கு கனி தரும் மரம் போல, தன்னைக் கடுமையாக தாக்கிப் பேசுவோருக்கு அதிகமாகவே உதவுவார். அவர்கள் திறமையாளர்களாக இருந்துவிட்டால் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கிவிட்டு, அவர்களின் திறமைக்கு உரிய கவுரவமும் அங்கீகாரமும் அளிப்பார்.



எம்.ஜி.ஆர். நடித்த சூப்பர் டூப்பர் ஹிட் படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’. படத்தின் க்ளைமாக்ஸுக்கு முன் ஒரு பாடல். அடிமை முறையை ஒழித்து சுதந்திர சமுதாயம் காணப் புறப்பட்ட ஒரு புரட்சி வீரன் பாடுவது போன்ற பாடல்.அந்தக் காட்சிக்கு பலர் பாடல் எழுதியும் எம்.ஜி.ஆருக்கு திருப்தி ஏற்படவில்லை.
அப்போது ஒரு கவிஞர் ஏற்கெனவே எம்.ஜி.ஆருக்கு நெருக்கமாக இருந்தவர்தான். அரசியல் கருத்து வேறுபாடுகள் காரணமாக எம்.ஜி.ஆரை மேடைகளில் கடுமையாக விமர்சித்து வந்தார். ஆனாலும், அந்தக் கவிஞர் என் படங்களில் பாடல் எழுதக் கூடாது என்று எம்.ஜி.ஆர். கூறிய தில்லை. எம்.ஜி.ஆர். படங்களுக்கு நான் பாடல் எழுத மாட்டேன் என்று அந்த கவிஞரும் சொன்ன தில்லை. மேடைப் பேச்சுக்கள் ஏற்படுத்திய தர்ம சங்கடத்தால் எம்.ஜி.ஆர் படங்களின் தயாரிப்பாளர் களும் இயக்குநர்களும் கவிஞரை அணுகத் தயங் கினர். அதனால், எம்.ஜி.ஆரின் சில படங்களில் அவர் பாடல்கள் இடம்பெறவில்லை.
‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் மேலே குறிப் பிட்ட காட்சிக்கான பாடலுக்காக பல கவிஞர்கள் எழுதியும் திருப்தி ஏற்படாத நிலையில், எம்.ஜி.ஆரை விமர்சிக்கும் அந்தக் கவிஞரை விட்டே அந்த பாடலை எழுதச் சொன்னால் என்ன? என்ற யோசனை பிறந்தது. படக்குழுவினர் கவிஞரி டம் விஷயத்தைச் சொல்ல, அவரும் எழுதிக் கொடுத்தார். எம்.ஜி.ஆருக்கு அந்தப் பாடல் மிக வும் பிடித்துப் போனதுடன் கவிஞரின் திறமையை பாராட்டி அந்தப் பாடலை ஓ.கே. செய்தார்.
அந்தப் பாடல்தான் காலத்தால் அழியாத
‘அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்…’
அந்தப் பாடலை எழுதியவர் கவியரசு கண்ண தாசன். அவர் கடுமையாக தாக்கிப் பேசுவாரே தவிர, மனதில் ஒன்றும் கிடையாது என்பதும் எம்.ஜி.ஆருக்குத் தெரியும்.
எம்.ஜி.ஆர். நடித்த வெள்ளிவிழா படமான ‘மாட்டுக்கார வேலன்’ படத்தில்,
‘பூ வைத்த பூவைக்கு பூக்கள் சொந்தமா?’
என்ற இனிமை யான பாடலை எழுதியவர் கண்ணதாசன். நாயகி யைப் பார்த்து எம்.ஜி.ஆர். பாடும் வரிகளில்
‘பள்ளிக் கணக்கு கொஞ்சம் சொல்லிப் பழக்கு, நீ இல்லையென்றால் நான் தொடுப்பேன் காதல் வழக்கு’
என்று வரும்.
பதிலுக்கு நாயகி, ‘போடுங்கள்.. கூண்டில் ஏற்றுங்கள்.. நான் போதும் என்று சொல்லும் வரை நீதி சொல்லுங்கள்’
என்று பாடுவதுபோல எழுதியிருந்தார் கண்ணதாசன். நாயகி பாடும் வரிகள் எம்.ஜி.ஆருக்கு திருப்தி இல்லை. கண்ணதாசனிடம் சொல்லி அந்த வரிகளை மாற்றச் சொன்னார்.
கண்ணதாசன் உடனே மாற்றிக் கொடுத்த வரிகள்தான்,
‘போடுங்கள் கூண்டில் ஏற்றுங்கள், உங்கள் பொன்மனத்தை சாட்சி வைத்து வெற்றி கொள்ளுங்கள்’.
நட்பு ஒருபுறம் இருந்தாலும், எம்.ஜி.ஆரின் மனதை பொன்மனம் என்று வர்ணித்தாலும், அரசியல் கருத்து வேறுபாடுகள் காரணமாக எம்.ஜி.ஆர் முதல்வரான பிறகும் அவரை தாக்கி பேசுவதை கண்ணதாசன் நிறுத்தவில்லை.
ஒருநாள், முதல்வர் வீட்டில் இருந்து கண்ணதாசன் வீட்டுக்கு தொலைபேசி அழைப்பு. தனது மகன் திருமண விஷயமாக கண்ணதாசன் வெளியூர் சென்றிருந்தார். இப்போதுபோல அப்போது செல்போன் எல்லாம் கிடையாது. தீவிர முயற்சிக்குப் பிறகு, கண்ணதாசனை தொடர்பு கொண்ட எம்.ஜி.ஆர்., அவரை உடனே புறப்பட்டு சென்னை வரச் சொன்னார்.
எதற்காக வரச் சொல்கிறார் என்பது புரியாமலே தன்னை சந்தித்த கண்ணதாசனுக்கு எம்.ஜி.ஆர். இன்ப அதிர்ச்சி அளித்தார். ‘‘தங்களை தமிழக அரசின் அரசவைக் கவிஞராக நியமிக்க முடிவு செய்திருக்கிறேன். சம்மதம் என்ற ஒரே வார்த்தையை மட்டுமே உங்களிடம் எதிர்பார்க்கிறேன்’’ என்றார். எம்.ஜி.ஆரின் அன்பிலும் மகிழ்ச்சியிலும் திக்குமுக்காடிப் போனார் கண்ணதாசன்.
‘அரசவைக் கவிஞர்’ பட்டமளிக்கும் விழாவில் உணர்ச்சிவசப்பட்ட கண்ணதாசன், ‘‘நான் இறந்துவிட்டால் எனக்கு அரசு மரியாதை கிடைக்கும். இந்த சிறப்பை எனக்கு வழங்கிய எம்.ஜி.ஆருக்கு முன்கூட்டியே நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.
அவர் கூறியது போலவே நடந்தது. அமெரிக் காவுக்கு சிகிச்சைக்காக சென்ற கண்ணதாசன் வெறும் உடலாகத்தான் திரும்பினார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்குப் பின் இறுதி ஊர்வலத்துக்குத் தயாரானது. கண்ணதாசன் உடல் வாகனத்தில் ஏற்றப்பட்ட பின், யாரும் எதிர்பாராத வகையில் முதல்வர் எம்.ஜி.ஆர். மின்னலாய் அந்த வாகனத்தின் மீது ஏறிவிட்டார். கண்ணதாசன் உடலை சற்று உயர்த்தி சிறிய ஸ்டூல் மீது அவரது தலையை பொருத்தி கட்டி விட்டு கீழே இறங்கிய எம்.ஜி.ஆர்., ‘‘இப்போது, கவிஞரின் முகம் பொதுமக்கள் பார்க்க வசதியாக நன்றாக தெரிகிறது’’ என்றார்.
எம்.ஜி.ஆர்… அதிலும் தமிழகத்தின் முதல்வர். கண்ணசைத்தால் காரியம் செய்ய காத்திருப்போர் ஆயிரம் பேர். என்றாலும் கண்ணதாசனின் முகத்தை பொதுமக்கள் இறுதியாக பார்த்து அஞ்சலி செலுத்த வேண்டும் என்பதற்காக, தானே வேன் மீது ஏறினார் என்றால், கவிஞர் மீது அவர் கொண்டிருந்த அன்பும், எதையும் மக்களின் கோணத்தில் இருந்தே பார்க்கும் எம்.ஜி.ஆரின் நுண்ணறிவும் பிரமிக்கத்தான் வைக்கும்.
சினிமாவில் பொதுவாக பெண்களின் அழகைத்தான் கவிஞர்கள் வர்ணிப்பார்கள். ஆண்களின் அழகையும் வர்ணிக்க முடியும் என்றால் அது எம்.ஜி.ஆருக்குத்தான் பொருந்தும்.
‘குடும்பத் தலைவன்’ படத்தில் ‘கட்டான கட்டழகு கண்ணா, உன்னைக் காணாத பெண்ணும் ஒரு பெண்ணா?’
என்று எம்.ஜி.ஆரை வர்ணித்திருப்பார் கண்ணதாசன்.
எம்.ஜி.ஆரின் அழகை, ஆளுமையை ‘நீதிக்குப் பின் பாசம்’ படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலில், நாயகி பாடுவது போல கண்ணதாசன் விவரித்திருப்பார். அந்த வரிகள்…
‘தேக்கு மரம் உடலைத் தந்தது
சின்ன யானை நடையைத் தந்தது
பூக்கள் எல்லாம் சிரிப்பை தந்தது
பொன்னல்லவோ நிறத்தை தந்தது’
இந்த வரிகளைப் படித்தாலே நினைவுக்கு வருபவர் எம்.ஜி.ஆராகத்தான் இருக்க முடியும்.
எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்த கண்ண தாசன் பாடல் ‘மன்னாதி மன்னன்’ படத்தில் அவர் எழுதிய ‘அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா...’பாடல். காரில் எம்.ஜி.ஆர். செல்லும்போது அவர் கேட்டு ரசிக்கும் பாடல்களில் இந்த பாடல் தவறாமல் இடம் பெறும்.

தாழையாம் பூ முடிச்சு.. தடம் பார்த்து நடை நடந்து.. இது யாரை நினைத்து கவியரசர் எழுதினார் தெரியுமா?

கவிஞர் கண்ணதாசன் கலையுலகத்திற்கு வழங்கிய பாடல்கள் அனைத்துமே அற்புதம்தான்.
ஆனால் அவற்றில் சில பாடல்கள் தன் குடும்பத்தினரை மையப்படுத்தியும், மனதில் வைத்தும் எழுதினார் என்று கேள்விப்படும்போது கவிஞரின் தன் குடும்பத்தினரிடம் அளவு கடந்த பிரியம் எவ்வளவு வைத்திருந்திருக்கிறார் என்பது புலப்படுகிறது.
கண்ணதாசனின் மூத்த மகள் அலமேலு கண்ணதாசன் அதை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார். படியுங்கள் வாசகர்களே.

பூ முடிப்பாள்.. இந்த பூங்குழலி


நான் மூத்த பெண் என்பதால், என் மேல ரொம்ப பாசமா இருப்பாரு. என்னை டாக்டராக்கனும்னு அப்பா ரொம்ப ஆசைப்பட்டாரு. அது முடியாம போச்சு. எனக்கு கல்யாணம் செய்யறதுக்காக அப்பா மாப்பிள்ளை பாத்துட்டு இருந்தார். அந்த சமயத்தில் எழுதிய பாட்டுதான் "பூ முடிப்பாள்.. இந்த பூங்குழலி" என்ற பாடல். அந்த பாட்டை எழுதிமுடித்துவிட்டு வீட்டுக்கு வந்த அப்பா என்னிடம், உனக்கு சீக்கிரமா கல்யாணம் நிச்சயம் ஆயிடும்"ம்மா என்றார். அது மாதிரியே நிச்சயமும் ஆகி கல்யாணமும் செஞ்சு வச்சார். எங்களுக்கு நிறைய புத்திமதிகள் சொல்லிக் கொடுப்பார்.

என் பையன் மேல அவ்ளோ ஆசை


என் 2-வது பையனுக்கு அவருடைய பேர் வைக்கணும்னு ஆசைப்பட்டேன். அதுக்கு அப்பா சொன்னார், "நீ கண்ணதாசன்னு வெச்சுக்கோ. ஆனா கிருஷ்ணர் அடிக்கடி என் கனவில வர்றார். அதனால் நீ கிருஷ்ணா"னுதான் கூப்பிடணும் னு சொன்னார். எவ்வளவு பெரிய மீட்டிங்கா நடந்துட்டு இருந்தாலும் சரி, என் பையனைதான் மடிமேல தூக்கி வச்சிப்பார். அவனுக்கு பத்மா சேஷாத்ரி ஸ்கூல்லகூட அப்பாதான் சீட் வாங்கி கொடுத்தாரு. அவ்வளவு ப்ரியம் அவன்மேல.

தாழையாம் பூ முடிச்சு..


"தாழையாம் பூ முடிச்சு தடம் பாத்து நடை நடந்து.. வாழை இலை போல வந்த பொன்னம்மா.. என்வாசலுக்கு வாங்கி வந்தது என்னம்மா"ன்னு ஒரு பாட்டு வருமே.. அது எங்க அம்மாவுக்காகவே எழுதின பாடல். எங்க அம்மா பொன்னம்மா. எங்க அம்மாவுக்காக ஒரு கவிதை கூட எழுதியிருக்காரு. அப்பாவுக்கு எங்க அம்மா சமையல்ன்னா ரொம்ப பிடிக்கும். அதுவும் அம்மா செஞ்ச தக்காளி பச்சடியும், வெல்ல பணியாரத்தையும் ரொம்ப ருசிச்சு சாப்பிடுவார். அது கவிஞரின் கவிதை தொகுப்பில் கூட வெளிவந்திருக்கு. அப்பாவோட அர்த்தமுள்ள இந்து மதம் படிச்சிட்டு என்கிட்டேயே நிறைய பார் பாராட்டுவாங்க. எழுத்தாளர் லட்சுமிகூட என்னிடம் சொன்னாங்க "எப்பவுமே ஒரு எம்.எஸ்,விஸ்வநாதன்தான்.. ஒரு சுசிலாதான்.. ஒரு கண்ணதாசன்தான்... ஒரு டி.எம்எஸ்.தான்"னு.

நிறைய பாட்டுக்களை எழுதிட்டு வந்து வீட்டில எங்ககிட்ட அதை பத்தி சொல்லுவார். அம்பிகை அழகு தரிசனம் என்ற பாடல் எனக்கு ரொம்ப பிடிச்ச பாடல். அதேபோல, கந்தசஷ்டி கவசம் போலவே கிருஷ்ண கவசம் எழுதியிருப்பார் அப்பா. அதுவும் நான் அடிக்கடி விரும்பி படிக்கும் புத்தகம். நாளாம் நாளாம் திருநாளாம், கங்கைகரைதோட்டம் இந்த பாட்டெல்லாம் ரொம்ப விரும்பி அடிக்கடி கேப்பேன். அவர் உயிரோட இருந்திருந்தா, இலக்கியங்கள் நிறைய எழுதியிருப்பார். அப்பா இன்னும் கொஞ்ச நாள் உயிருடன் இருந்திருக்க கூடாதான்னு அடிக்கடி நினைச்சிப்போம்.

Tuesday, 12 June 2018

நாட்டிய பேரொளி பத்மினி..

கலையே குடும்பம், கலையே வாழ்க்கை, கலையே மூச்சு, கலையே சகலமும் என்று வாழ்ந்தவர்  நாட்டிய பேரொளி பத்மினி .


சிறந்த நடனமங்கையாக இருந்தவரை திரையுலகில் கதாநாயகியாக அறிமுகம் செய்தது கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்தான். தாய்மொழி மலையாளம் என்றாலும் இன்றைய தமிழர்களால் கூட பேச முடியாத அளவிற்கு நீண்டநெடிய வசனங்களை மனப்பாடம் செய்து - ஏற்ற இறக்கத்துடன் - பிசிறில்லாமல் - உச்சரிப்பு மாறாமல் - உணர்ச்சிப் பெருக்குடன் பேசிய அவரது அற்புதமான ஆற்றல் சாதாரணமானதல்ல.
இன்றைய இரண்டாம் தர, மூன்றாம்தர நடிகைகள் போல கதாநாயகிகள் என்று சொல்லிக் கொண்டு ஆபாச படமாகவும், அரை நிர்வாண ஓடமாகவும் - பின்னணி குரலில் ஒழுங்காக வாயசைக்கக்கூட முடியாமல் நடனம் என்ற பெயரில் வலிப்பு வந்தவர்போல் பேயாட்டம் போட்ட நடிகை அல்ல பத்மினி.
பரதநாட்டியம், கதகளி, குச்சிப்புடி என்று இந்தியாவின் பெரும்பான்மையான நடன உத்திகளை நுட்பமாக பயின்றவர். பரதம் உள்ளிட்ட அனைத்து நடனங்களையும் கற்றுத்தேர்ந்து கதாநாயகியாகவும் நடித்த நடிகைகள் இரண்டே பேர்கள்தான். ஒருவர் பத்மினி, இன்னொருவர் வைஜெயந்திமாலா.

சபாஷ் சரியான போட்டி!





"வஞ்சிக்கோட்டை வாலிபன்" படத்தில் இவர்கள் இணைந்து அரங்கேற்றிய போட்டி நடனம் வெள்ளித்திரையில் வரலாறாகிவிட்டது. பாடலின் நடுவே வரும் "சபாஷ்... சரியான போட்டி" என்ற அந்த வசனம்கூட இன்றைய இளையதலைமுறைகளால் பெரிதும் ரசிக்கப்படுபவை. இனி அது போன்ற நடனத்தை எக்காலத்திலும் நாம் பார்க்க முடியாது. இந்திய படங்களிலேயே மிகச்சிறந்த போட்டி நடனம் எது என்றால் இந்த பாடலை துணிச்சலோடும் கர்வத்தோடும் பெருமையோடும், சொல்லலாம். அமரதீபம், எதிர்பாராதது, தெய்வப்பிறவி, சித்தி, புனர்ஜென்மம், தில்லானா மோகனாம்பாள் போன்ற பல படங்கள் பத்மினியின் பண்பட்ட நடிப்பில் காவியங்களாயின.

தபால்தலை வெளியீடு


அதனால்தான் அவருக்கு தபால் தலையை வெளியிட்டு சோவியத் யூனியன் பல்லாண்டுகளுக்கு முன்பே பெருமைப்படுத்தியது. ஒரு கலைஞர் - அதிலும் குறிப்பாக ஒரு பெண் கலைஞர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்தவர் பத்மினி. தான்தோன்றித்தனமாக உளறிக் கொட்டாமல் - காட்டுக் கூச்சல் போட்டு அமர்க்களம் செய்யாமல் - அரை வேக்காட்டுத்தனமாக அலட்டிக் கொள்ளாமல் தன்னடக்கம் கொண்ட நடிகையாக அவர் வாழ்ந்தார். அரசியல் ரீதியாக, ஒரே சமயத்தில் கருணாநிதியையும், எம்ஜிஆரையும், ஜெயலலிதாவையும் மதித்து போற்றிய அவரது பெருந்தன்மையை இன்றைய திரைப்பட நடிகைகள் கற்றுக் கொள்வது அவசியம்.

பக்குவப்பட்ட நடிகை


விரும்பி நேசித்த இளைஞனை திருமணம் செய்து கொள்ள முடியாமல். அவனது தந்தையையே மணந்து வாழ வேண்டிய அவலத்திற்கு நடுவில் - காதலனே மகனாக திரும்பி வந்த பிறகு - ஒரு பெண்ணின் இதயம் எந்த அளவிற்கு வேதனையால் வதைபடும் என்பதை "எதிர்பாராதது" படத்தில் அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கும் பதமினியின் நடிப்பு அபாரமானது.கணவனின் சந்தேகத்திற்கு இரையாகி தன் மீதான பழியை துடைக்க போராடும் ஒரு பெண்ணின் மன உணர்வு எவ்வாறு இருக்கும் என்பதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கியது .
"தெய்வப்பிறவி".நாட்டியத்தையும் நடிப்பையும் சரிபாதியாக கலந்து ஒரு சிறந்த பொழுது போக்கு படைப்பின் வெற்றிக்கு முக்கிய காரணியாக திகழ்ந்த திரைப்படம் தில்லானா மோகனாம்பாள்.. பல படங்களில் குணச்சித்திர நடிப்பை பதித்திருந்தாலும், தன்னால் கதாநாயகியாக மட்டுமல்ல பாட்டியாகவும் நடித்து தான் ஒரு பக்குவப்பட்ட நடிகை என்பதை "பூவே பூச்சூடவா" படத்தில் நிரூபித்தார்.

எந்த நிலையிலும் மரணமில்லை


கோடி கோடியாய் சம்பாதித்தாலும் - சொர்க்க பூமி என்று போற்றப்படும் அமெரிக்காவிலேயே வாழும் வாய்ப்பு கிடைத்தாலும் - தாய் நாட்டில்தான் வாழ்வேன் - தமிழ்நாட்டில்தான் சாவேன் என்று கூறி அதேபோல தமிழ் மண்ணில் தன்னை கரைத்து கொண்ட தன்னிகரற்ற தேசபக்தர்தான் நடிகை பத்மினி. அவர் மறைந்தபோது நடிகர் கமலஹாசன் தனது இரங்கல் செய்தியில், "தொலைக்காட்சிகள் ஒரு வரப்பிரசாதம். பத்மினி அம்மா இறந்து போனார்கள் என்கிற உணர்வு கூட இல்லாமல் அவர் நடித்த படங்களையும், ஆடிய நடனங்களையும் நாம் பார்.த்து கொண்டு இருக்கலாம்" என்றார்.
மக்கள் மனதில் ஆழப்பதிந்து போன யாராக இருந்தாலும் அவர்களுக்கு கவியரசு கண்ணதாசன் பாடியபடி "எந்த நிலையிலும் மரணமில்லை"தான். இது நாடு போற்றும் நாட்டிய பேரொளி பத்மினிக்கும் பொருந்தும்.