Saturday 13 October 2018

"கைப்புள்ளயா நொண்டுனது நடிப்புன்னா நினைச்சீங்க?" -- வடிவேலு ஸ்பெஷல்

ங்கிலிஷ் கலக்காம தமிழ் பேச முடியலைனு நிறைய பேர் சொல்றதைப் பார்க்க முடியும். ஆனா, இன்னைக்குப் பலரால வடிவேலுவின் காமெடி பன்ச் பேசாம அன்றாடம் பேசவே முடியிறதில்ல.

‘என்ன! சின்ன புள்ளத்தனமா இருக்கு’,
‘ஆணியே புடுங்க வேண்டாம்’
‘வட போச்சே’
- இதெல்லாம் சர்வ சாதாரணமா தினம் தினம் நம்மையே அறியாமல் பேசி, 'வடிவேலுயிஸத்தில்’ மாட்டிகிட்டு இருக்கோம் என்பதற்கான எடுத்துக்காட்டு. வடிவேலு ஒரு சகாப்தம். இன்னைக்கு இருக்கிற இ(ளை)ணைய தலைமுறையின் கையில் இருக்கும் ஸ்மார்ட் போன் வரை நாம் நின்னு பேசுவோம் என அவர் நினைச்சி நடிச்சிருக்காரு பாருங்க... அதாங்க, அவர்!
சார்லி சாப்ளினின் அப்பா குடிக்கு அடிமையாகிப்போனார், அவர் அம்மா மனநலம் பாதிக்கப்பட்டார் எனப் பல கஷ்ட நஷ்டங்களுக்கு நடுவில்தான் சாப்ளின் நம்மை சிரிக்க வைத்தார். அப்படித்தான் நம்ம வைகைப் புயலும் பல கஷ்டங்களுக்கு நடுவில்தான் சினிமா வந்து ஜெயித்திருக்கிறார். இவரையும் சார்லி சாப்ளினையும் ஒப்பிட்டு கேள்வி கேட்டா, அப்போகூட 'அவரு எவ்வளவு பெரிய உயரம் தொட்ட மனுஷன், நீங்க வேற ஏன்ணே?' எனச் சொன்ன வைகைப் புயல், 'ஒரு விஷயத்துல என்னையும் அவரையும் ஒப்பிடலாம்ணே... ரெண்டுபேரும் வறுமைக்கு வாக்கப்பட்டவர்கள்' என ரத்தினச் சுருக்கமாகச் சொன்னார்.

சோகத்தைத் தாங்கனும்னா, அதைல் கண்டுக்கவே கூடாதுணே... அது கொஞ்சம் பொறுத்து பொறுத்துப் பார்க்கும். அப்பறம் இவனை ஒன்னும் பண்ண முடியாதுனு இடத்தைக் காலி பண்ணிடும்ணே!' என தன் ஸ்ட்ரெஸ் ரீலிவிங் பத்தி சொல்றார். ஒருநாள் கால்ல பலத்த அடியாம் இவருக்கு. ஷூட்டிங் வேணாம்னு டாக்டர்ஸ் சொல்ல, அந்த நேரத்துலதான் வழக்கத்தைவிட அதிகமா ஷூட்டிங்ல கலந்துக்கிட்டு நடிச்சார். 'வின்னர்' படத்துல நொண்டி நொண்டி நடிச்சிருப்பாரே நம்ம கைப்புள்ள?! அது நடிப்பில்லை, வேதனையோட துடிப்பாம்.

இன்னைக்கு வைகைப் புயலுக்கு பெயர், புகழ், பணம் இருந்தாலும் அன்னைக்கு அவர்கிட்ட ஒரு லட்சம் ரூபாய் இல்லாத காரணத்தால அவரோட அப்பாவைக் காப்பாத்த முடியாம போனது வடிவேலு வாழ்க்கையில் மிகவும் வருத்தமான விஷயம். 'என்ன பண்றதுணே ஆண்டவன் ஒன்ன பறிச்சுட்டுத்தான் இன்னொன்ன கொடுக்குறான்' என்கிறார் வடிவேலு.
வடிவேலு சென்னை வந்த கதையே ரொம்ப சுவாரஸ்யம். சென்னை கிளம்பிய வைகைப்புயலுக்கு மனசுல நிறைய கனவு இருந்தது. ஆனா, பாக்கெட்டில் பத்து பைசா இல்லை. வீட்டுல இருந்த சமையல் சட்டியை வித்து 80 ரூபாயைத் தேத்தியிருக்கார் மனுஷன். 'வாழ்க்கையில ஜெயிக்கணும், இல்ல மெட்ராஸ்லேயே செத்துடணும்' என அவருக்குள்ளே சொல்லிட்டு சென்னைக்குக் கிளம்பிய வடிவேலு, பஸ்ல ஏறலை. சென்னை வரைக்கும் லாரியில டிரைவர்கூட பக்கத்துல உட்கார்ந்து வரணும்னா, 25 ரூபாய். லாரி டாப்ல படுத்துக்கிட்டு வரணும்னா 15 ரூபாய். லாரியில் போவோம் என யோசிச்ச வடிவேலு, 'லாரி டாப்ல படுத்துக்கிட்டு போறேண்ணே!' எனச் சொல்லிட்டு, 'ரைட் போலாம்' எனத் துண்டை உதறியிருக்கிறார். சினிமா கனவை நினைச்சுக்கிட்டே படுத்திருந்த வடிவேலுவுக்கு, செம குளிர். உடம்பு வெடுவெடுக்க, மனசைத் தேத்திக்கிட்டு நடுங்கிக்கிட்டே கெடந்திருக்கார், வடிவேலு. கண் அசந்த நேரம், பையில் இருந்த பைசா காத்துல பறந்துடுச்சு!

வண்டி மெல்ல நகர்ந்து சமயபுரம் வர, சாப்பிடுறதுக்கு டிரைவர் கீழே இறங்குறார். நம்ம வடிவேலு அழுதுகிட்டே மேலே இருந்து கீழே இறங்கி வர்றார். 'அண்ணே, வண்டியில படுத்திருந்தேனா, காசு காத்துல பறந்துடுச்சு!' என அழ, பக்கத்தில் இருந்தவங்கெல்லாம் 'டேய் உன்னை மாதிரி எத்தனையோ பேரைப் பார்த்திருக்கோம்' என சிரித்திருக்கிறார்கள். சில நிமிடங்களுக்குப் பிறகு, 'சரிடா, சாப்பிட்டியா?' என டிரைவர் வடிவேலுவிடம் கேட்டு, அவரை அதிரவெச்சிட்டு, இரண்டு புரோட்டா வாங்கிக் கொடுத்து, புரோட்டாவுக்கான பணத்தை அவரே செட்டில் செய்து, 'விட்றா பார்த்துக்களாம்' எனத் தோளில் தட்டிக்கொடுத்திருக்கிறார். காலையில் தாம்பரம் வர, கீழே இறங்கிய வடிவேலுவுக்குக் கையில் கொஞ்சம் பணமும் திணித்து, அவரைப் பார்த்து ஒரு சிரிப்பு சிரித்தாராம், அந்த டிரைவர்.
அன்னைக்கு அந்த லாரி டிரைவர் வடிவேலுவுக்குக் கொடுத்தது பணம் மட்டுமில்ல, மனசுல தைரியமும்தான்.
நாம இன்னைக்கு வடிவேலு படம் பார்க்க கூட்டம் கூட்டமா தியேட்டருக்குப் படை எடுக்கிறோம். ஆனா, வடிவேலு ஆரம்ப காலத்துல படம் பார்த்த கதை தெரியுமா? படம் பார்க்க காசு கிடைக்காது என்பதால, வடிவேலுவும் அவர் ஃபிரெண்டும் நல்ல டீல் ஒன்னு பேசியிருக்காங்க. தியேட்டர் டிக்கெட் செலவு அவர் நண்பரோடது. அதுக்குப் பதிலா, அவரை சைக்கிள்ல டபுள்ஸ் அடிக்கிறது. அப்படி மாங்கு மாங்கென சைக்கிள் மிதிச்சுதான் பல எம்.ஜி.ஆர் படங்களைப் பார்த்து ரசிச்சிருக்கார், வைகைப்புயல். பட இன்டர்வெல்ல, 'இரு மாப்ள... சைக்கிள் வெளியே நிக்குதானு பார்த்துட்டு வந்துட்றேன்' என நழுவுற அந்த நண்பன், கேண்டீன்ல போய் ரெண்டு முட்டை போண்டாவை முழுங்கிட்டு, ஒண்ணும் தெரியாத மாதிரி வடிவேலு முன்னாடி வந்து அமர்வாராம். வடிவேலும் எதுவும் தெரியாத மாதிரியே கடைசி வரை காட்டிக்கிட்டு இருந்துக்குவாராம். நடிகர் ஆனபிறகு, வடிவேலு அவரைக் கூட வெச்சிகிட்டாராம். ஆனா, நண்பன் வளர்ந்த பொறாமை தாங்க முடியாம, அவரே கொஞ்சநாள்ல போயிட்டாராம்.

வடிவேலுகிட்ட ஒருமுறை, 'படத்துல நீங்க பேசுன பல வசனங்கள் நீங்களே எழுதினதுதானே.. ஏன் நீங்க காப்பிரைட் கேட்கக்கூடாது?' எனக் கேட்டப்போ, 'அட ஏன்ணே நீங்க வேற! அதுக்கு அவசியமே இல்லணே, மக்களுக்கு அது பிடிச்சிருக்கு. அவங்க சந்தோஷத்தை எப்படிணே நான் பரிச்சுக்க முடியும்... நாம போட்ட சாப்பாட்டை ஒருத்தர் சாப்பிடும்போது, அதை அடிச்சுப் புடிங்கிட்டு வந்தா நல்லா இருக்குமா? அதுமாதிரிதான் காப்பிரைட் கேட்குறது. அவங்க நல்லா நிம்மதியா சாப்பிட்டுக்கிட்டு சந்தோஷமா இருக்கட்டுமே!" எனச் சொல்கிறார், வடிவேலு. இந்த நல்ல மனசுக்கும் அவரது கடின உழைப்புக்கும்தான் வடிவேலு படங்கள் சமீபத்தில் ரீலிஸ் ஆகாமல் இருந்தாலும், அவர் முகம் தியேட்டர் திரையில் வராமல் இருந்தாலும், வடிவேலு வசனத்தை உச்சிரிக்காத வாய் இங்கே இருக்க முடியாது. வடிவேலு படத்தை வைக்காத ஒரு மீம் டெம்பிளேட் இருக்க முடியாது. அதனால, இந்தப் புயல் உலகத் தமிழர்கள் மனதில் இன்னைக்கு மையம் கொண்டிருக்கு.

No comments:

Post a Comment