Saturday 6 October 2018

இளையராஜாவின் பாடல்களைக் காட்சிப்படுத்திய இயக்குநர்கள் - யார் சிறந்தவர் ?

சில பாடல்கள் நம்மை உருக்கிக் கூழாக்கி ஓரத்தில் ஊற்றிவிடும். அதிலிருந்து மீண்டும் உருப்பெற்று எழுவதற்குப் பன்னாழிகைகள் தேவைப்படும். பாடல் மட்டுமல்லாமல் பாடற்காட்சிகளும் அவ்வாறு செய்வதுண்டு. என்னை எப்போதும் அலைக்கழித்த பாடற்காட்சியாக சிப்பிக்குள் முத்து படத்தின் 'மனசு மயங்கும் மௌன கீதம் பாடு’ என்ற பாடலைச் சொல்ல முடியும். அந்தப் படம் வெளியானபோது நான் பார்க்க இயலவில்லை. பிற்காலத்தில் அதனைத் தொலைக்காட்சி ஒளிபரப்பு ஒன்றில்தான் பார்த்தேன். அப்படியிருந்தும் என்னால் அந்தப் பாடல் காட்சியின் காதல் வலிமையைக் காணும் நெஞ்சுரம் போதவில்லை. பாட்டும் அதற்குச் செய்யப்பட்ட காட்சியும் உயிரை வதைப்பது ஏன் என்றே தெரியவில்லை. அப்பாடலைக் கண்டுமுடித்த ஒவ்வொரு முறையும் உள்ளுறுப்பில் ஏதோ ஒன்று குழைந்து மீள்கிறது. பாயும் குருதித் துகளில் பனித்தொற்று படிகிறது.



இளையராஜாவின் பாடல்கள் காதலுணர்ச்சியின் தனிப்பேரிசை என்றாலும் அதனைப் படமாக்கிய விதத்தில் நம் இயக்குநர்கள் எத்தகைய எல்லைக்கும் கீழிறங்கியே வந்திருக்கிறார்கள். அதனாற்றானோ என்னவோ அவர் இசையமைத்துக் கொடுத்த பாடல்கள் எவ்வாறு படமாக்கப்பட்டிருக்கின்றன என்று பார்க்கும் ஆர்வத்தை இழந்திருக்கிறார், அதற்கு அவர்க்கு நேரமும் இருக்கவில்லைதான். 'மலையோரம் வீசும் காத்து’ பாடலைக் கடலோரம் படமாக்கியவர்கள் நம் இயக்குநர்கள். ஆனால், சில பாடல்கள் படமாக்கப்பட்ட விதத்தில் அவருடைய இசைக்கோலங்களை நிகர்த்த காட்சிக் கோலங்களையும் காண முடியும். அவற்றில் ஒன்றுதான் 'மனசு மயங்கும் பாடல்’.
ஒரு பாடல் படத்தின் கதைச்சூழலில் நன்கு அமர்வதற்குக் காரணம் அப்படத்தின் இயக்குநர்தான். கதைச்சூழலைச் சொல்லி அதற்கு வேண்டிய பாடலைப் பெற்றுச் செல்லும் இயக்குநர் தாம் விரும்பியவாறு அதனைப் படமாக்கிக்கொண்டு வரவேண்டும். தமிழ்ப்படங்களில் பல பாடல்கள் இயக்குநர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதில்லை. பாடலில் ஆடல் தேவைப்படுமென்றால் அது நேரடியாக ஆடலாசிரியரின் கட்டுப்பாட்டுக்குப் போய்விடும். அரங்கமைத்து எடுக்கப்படும் ஆடற்காட்சிகளை இயக்குபவர் அப்படத்தின் இயக்குநர் இல்லை என்பது பலர்க்கும் வியப்பாக இருக்கும். ஒரு படத்தின் பெரும்பொருட்செலவு பாடற்காட்சிக்கான அரங்குகளை அமைப்பதில்தான் செலவிடப்படும். ஆனால், அவ்விடத்தில் ஓர் இயக்குநரின் தலையைக் காண்பதே அரிதாக இருக்கும். நடனக்குழுவினரோடு தம் அடிப்பொடிகள் சூழ ஆடலாசிரியர்தான் அந்நடனக் காட்சியை எடுத்துக்கொண்டிருப்பார். படத்தின் பாடற்காட்சிகளை ஆடலாசிரியரும் சண்டைக் காட்சிகளை மோதலாசிரியரும் எடுத்துக்கொடுத்தது போக மீதமுள்ள காட்சிகளான உரையாடற்காட்சிகளை மட்டுமே ஓர் இயக்குநர் இயக்குகிறார். இதற்கு எதற்கு இயக்குநர் என்கிறீர்களா ? அஃதே உண்மை.
ஒரு படத்தின் முதன்மைப் படைப்பாளர் என்ற நிலையிலிருந்து கீழிறங்கி முதன்மை மேற்பார்வையாளராக மாறிப்போவதால்தான் இயக்குநர்கள் பலரும் தத்தம் பெருமையை இழந்து நிற்கின்றார்கள்.


பாரதிராஜாவைப் பற்றிய ஒரு செய்தி உண்டு. அவர் பாடற்காட்சிகளைத் தாமாகவே இயக்குவாராம். அதில் இடம்பெற வேண்டிய ஆடலையும் அவரே கற்றுக்கொடுத்து எடுத்து முடிப்பாராம். அதற்காக ஆடற்கலைஞர்கள் சங்கத்திலிருந்து 'ஒறுப்புக்கட்டணம்’ கேட்கப்பட்டாலும் அதனைச் செலுத்திவிடுவாராம். பாடலைப் படமாக்குவதில் அவர் அவ்வளவு முனைப்பைக் காட்டினார். ஆடலாசிரியர் கற்பித்து எடுத்துக்கொடுக்கும் பாடல்களால் அவர்க்கு நிறைவேற்படுவதில்லை என்பதனையே இது காட்டுகிறது. தம் படத்தின் ஒவ்வொரு சுடுவும் தாம் கற்பனை செய்தவாறு இருக்க வேண்டும் என்னும் பிடிவாதம். அதனாற்றான் பாரதிராஜா படங்களின் பாடற்காட்சிகள் தாழ்வில்லாமல் இருக்கின்றன. இளையராஜாவின் பாடல்களை நன்கு படமாக்கிக் காட்டியோருள் பாரதிராஜாவுக்கே முதலிடம். அதனைத் தம் முதற்படமான 'செந்தூரப்பூவே’ பாடற்காட்சியிலேயே மெய்ப்பித்துக் காட்டிவிட்டார்.
மகேந்திரன் படங்களில் இடம்பெறும் பாடல்கள் அவற்றின் உயிர்ப்பினை மேலும் ஈரமாக்கும் தன்மையோடு இடம்பெற்றன. “மெட்டியொலி காற்றோடு என் நெஞ்சைத் தாலாட்ட’ என்னும் பாடலில் இழையும் 'கசப்பு மாறாத மகிழ்ச்சி மனநிலையை’ இன்னொருவர் படம்பிடித்துக் காட்டுவது கடினமே. இளையராஜாவின் பாடல்களை 'மாண்டேஜஸ்’ எனப்படும் காட்சித் தொகுதிக்கான பின்னணியாகப் பயன்படுத்துவதிலும் பலர் ஆர்வம் காட்டியிருக்கின்றனர். தம் படத்தில் ஒரு பாடலையேனும் அவ்வாறு வைத்துக்கொள்வதைப் பாலுமகேந்திரா விரும்பினார். திரைப்படங்களுக்கு வகுக்கப்பட்ட மேனாட்டு இலக்கணங்களின்படி காட்சித் தொகுதியின் பின்பாட்டாகவே இசைக்கோப்பு இடம்பெற வேண்டும்.

இளையராஜா பாடல்களை வேற்றுத் தளத்திற்கு நகர்த்திச் சென்றதில் மணிரத்தினத்திற்கும் பங்குண்டு. 'பூமாலையே தோள் சேரவா’ பாடலிலேயே அதற்குரிய ஊக்கத்தைக் காட்டியவர் மணிரத்தினம். அதன் பிறகு வந்த படங்களான மௌனராகம், அக்னிநட்சத்திரம், தளபதி ஆகிய படங்களில் ஒரு பாடலை எவ்வளவு மேன்மையாகப் படமாக்கலாம் என்றுணர்த்தினார். பிசி ஸ்ரீராம் போன்ற ஒளிப்பதிவாளர்கட்கு ஓர் இசைக்கோப்புக்கு எத்தகைய காட்சிக் கலையை முன்வைக்க வேண்டும் என்பது தெரியும். ஒரு பாடலைக் கண்ணுக்கினிய காட்சி விருந்தாக்கிய பெருமையே பிசி ஸ்ரீராமையே சாரும். உறுத்தாமல் பொருத்தமாய்ப் பாடற்காட்சிகளை வைப்பதில் பாலசந்தரும் இளைத்தவரல்லர். சில படங்கள்தாம் என்றாலும் அவற்றிலேயே சிறப்பாகச் செய்தவர். சிந்து பைரவி, புதுப்புது அர்த்தங்கள் படப்பாடற் காட்சிகளை யாரால் மறக்க முடியும் ?
எல்லா இயக்குநர்கட்கும் இளையராஜாவின் பாடல்கள் மணிமணியாய்க் கிடைத்தன என்றாலும் அதனைத் தம் படங்களில் சிறப்பான காட்சிகளாக்கி வென்றவர்கள் சிலரே. கங்கை அமரனுக்குக் கிடைத்தவை எல்லாம் பிற இயக்குநர்கட்குக் கிடைக்கவேயில்லை. செல்வமணி, செந்தில்நாதன், மணிவண்ணன், பாக்கியராஜ், மனோபாலா, எஸ்பி முத்துராமன், ஆர் சுந்தரராஜன் என்று பட்டியல் நீளும். 'தாயம் ஒன்னு’ என்ற திரைப்படத்திற்கு முத்தான பாடல்கள் கிடைத்திருந்தும் அதனைத் தம் குழப்பமான திரைக்கதையால் வீணடித்தமைக்காக அதன் இயக்குநர் வருந்திக்கூறியது நினைவுக்கு வருகிறது.
இளையராஜாவின் பிறமொழிப் பங்களிப்பினையும் நாம் நினைவிற்கொள்ள வேண்டும். கே. விஸ்வநாத் இயக்கிய படங்களில் இடம்பெற்ற பாடல்கள் தமிழ்ப் பாடல்களுக்கு ஒருபடியேனும் மேலாக விளங்கின. மொழிமாற்றுப் படங்களின் பாடல்களும் இங்கே புகழ்பெற்றன. இதயத்தைத் திருடாதே, உதயம், சிப்பிக்குள் முத்து, சலங்கை ஒலி ஆகிய படத்தின் பாடல்கள் தெலுங்குக்குச் செய்யப்பட்டவை. அவற்றில் சலங்கை ஒலிக்கும் சிப்பிக்குள் முத்துக்கும் தலைமை இடம் தரவேண்டும். தம் படத்தின் பாடற்காட்சிகளை இழைத்து இழைத்து உருவாக்கிய கற்றச்சராய்த் தோற்றமளிக்கிறார் கே. விஸ்வநாத். தாதாசாகேப் பால்கே விருது பெற்றுள்ள பெரியவரான கே. விஸ்வநாத் தெலுங்குத் திரையுலகிற்குச் செய்துள்ள பங்களிப்பு வாயடைக்கச் செய்கிறது. ஆந்திரத்தின் பேராற்றங்கரைகளில் அவர் ஆக்கியளித்த படக்காட்சிகள் பாடல்களை நிகர்த்து நிற்கின்றன.

No comments:

Post a Comment