Monday 29 May 2017

ஜெயலலிதா இடத்தை குறி வைத்து காய் நகர்த்தும் ரஜினி?

தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்ந்த ஜெயலலிதாவின் திடீர் மரணத்தால் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த இடத்தை குறி வைத்தே ரஜினிகாந்த் அரசியல் களத்தில் இறங்கவிருப்பதாக கூறப்படுகிறது.


 
அரசியல்வாதியாக இல்லாமலேயே கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருபவர் ரஜினி.
 
1996-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது ரஜினி கொடுத்த ஒரே ஒரு வாய்ஸ் தமிழக அரசியலையே புரட்டிப் போட்டது. பாட்ஷா படவெற்றி விழாவில் ரஜினி பேசிய பேச்சுக்கள் புயலை கிளப்பியது.
 
அ.தி.மு.க.வுக்கு எதிராக தி.மு.க.-த.மா.கா. கூட்டணியை ஆதரித்து ரஜினி கொடுத்த வாய்ஸ் அக்கூட்டணிக்கு மாபெரும் வெற்றியை தேடித்தந்தது. அதன் பின்னர் அரசியல் களத்தில் ஒவ்வொரு கால கட்டங்களிலும் ரஜினி பேசப்படுபவராகவே இருந்து வந்துள்ளார்.
 
இதனால் தேர்தல் நேரங்களில் ரஜினியின் வாய்ஸ் யாருக்கு? என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அரசியல் கட்சிகளும் ரஜினியின் ஆதரவை பெறுவதற்கு துடியாய் துடித்தன. இதனை புரிந்து கொண்ட ரஜினி, தேர்தல் நேரங்களில் ஊடகங்களை சந்திப்பதையே தவிர்த்தார்.
 
ஆனால் திரைப்படங்கள் மூலமாக அரசியல் ஆசையை வெளிப்படுத்தி வந்தார். ‘‘என் வழி... தனி வழி’’, ‘‘நான் எப்ப வருவேன். எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனா வரவேண்டிய நேரத்துல கண்டிப்பா வருவேன்’’ என்பது போன்ற அரசியல் அனல் தெறித்த வசனங்களே இதற்கு உதாரணமாகும். இப்படி திரைப்படங்கள் மூலமாக ரஜினி தனது நீண்ட அரசியல் பயணத்தை தொடந்து கொண்டே இருந்தார்.
 
ஒவ்வொரு முறையும் அரசியல் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போதெல்லாம் எல்லாம் அந்த ஆண்டவன் கையில் இருக்கிறது என்றே ரஜினி பதில் அளித்து வந்துள்ளார்.
 
ஒரு கட்டத்தில் இந்த ஆளுக்கு வேற வேலையே இல்லப்பா... அரசியலுக்கு வருவேன் அல்லது வரமாட்டேன்னு தெளிவா சொல்லிட வேண்டியது தானே என்று பொதுமக்களே சலித்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டது. இது ரஜினியின் பலவீனமாகவே பார்க்கப்பட்டது.
 
இப்படி 1996-ம் ஆண்டில் இருந்து இன்று வரை அரசியல் களத்தில் இருந்து ஒதுங்கியே இருந்து வந்த ரஜினி தற்போது அரசியலில் குதிக்க ஆயத்தமாகி விட்டார்.
 
தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்ந்த ஜெயலலிதாவின் திடீர் மரணத்தால் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அதே போல தி.மு.க. தலைவர் கருணாநிதியும் முதுமை... உடல் நல கோளாறு ஆகியவற்றால் செயல்படாமல் இருக்கிறார்.
 
இப்படி அரசியல் களத்தில் ஜெயலலிதாவின் இடம் காலியாகவே உள்ளது. அந்த இடத்தை பிடிக்கப்போவது யார்? என்பதே மிகப்பெரிய கேள்வியாக உருவெடுத்துள்ளது. தங்களது புதிய தலைவரை தமிழகம் தேடிக் கொண்டிருக்கிறது என்று கூறினால் நிச்சயம் அது மிகையானதாக இருக்காது.
 
இந்த இடத்தை பிடிப்பதற்கே ரஜினி இத்தனை நாட்களாக காத்திருந்தது போலவே தெரிகிறது.
 
முத்து படத்தில் இடம் பெற்ற பாடல் காட்சி ஒன்றில் என்ன கட்சி? நம்ம கட்சி? என்று ஹீரோயின் மீனா பாட்டிலேயே கேள்வி கேட்பார். இதற்கு கட்சியெல்லாம் நமக்கெதுக்கு. காலத்தின் கையில் அது இருக்கு என்று ரஜினி பாட்டாலேயே பதில் அளிப்பார்.
 
அந்த காலமும் நேரமும் இப்போது வந்து விட்டதாகவே ரஜினி எண்ணியுள்ளார். அந்த எண்ணமே அவரை அரசியல் பாதைக்கு இழுத்து வந்துள்ளது என்பதே அரசியல் நோக்கர்களின் கணிப்பாக உள்ளது.
 
எம்.ஜி.ஆர். தொடங்கிய அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கத்தில் இருந்து அரசியல் பாதையை தொடங்கியவர் ஜெயலலிதா.
 
இதனால் எம்.ஜி.ஆருக்கு பின்னர் அரசியல் வானில் ஜொலிக்கும் நட்சத்திரமானார். அவரது தனிப்பட்ட திறமையும், உழைப்பும் ஜெயலலிதாவை உச்சத்துக்கு கொண்டு சென்றது என்பதை மறுக்க முடியாது. அதே நேரத்தில் அ.தி.மு.க. என்கிற கட்சியின் பின்புலமே அதற்கு மூலதனமாக அமைந்திருந்தது என்பதே உண்மையாகும்.
 
எம்.ஜி.ஆர். தனிக்கட்சியை தொடங்கி ஆட்சியை பிடித்த காலகட்டம் வேறு மாதிரியாக இருந்தது. தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்ற அ.தி.மு.க.வை அவர் தொடங்கிய நேரத்தில் இப்போது இருப்பது போன்று ஏராளமான கட்சிகள் கிடையாது. ஆனால் தற்போது தமிழகத்தில் ஏகப்பட்ட கட்சிகள், கொடிகள். ஒரு கட்சியை வழி நடத்திச் செல்வது சாதாரண வி‌ஷயம் அல்ல. எனவே ரஜினி தனிக்கட்சி கனவெல்லாம் பலிக்காது என்று பலர் கூறி வருகிறார்கள்.
 
ஆனால் அரசியலுக்கு வந்தால் தனிக்கட்சியை தொடங்குவதற்கே ரஜினி திட்டமிட்டிருப்பது போன்ற தோற்றங்களே காணப்படுகின்றன.
 
ரஜினியை வளைத்து போட தேசிய கட்சிகளான பா.ஜனதா, காங்கிரஸ் ஆகியவை போட்டி போட்ட நிலையில், யாருடைய தயவும் தனக்கு தேவையில்லை என்பதை தனது செயல்பாடுகள் மூலமாக உணர்த்தியுள்ளார்.
 
அரசியல் அமைப்பு கெட்டுப்போய் விட்டது என்று சாடியுள்ள ரஜினி, அரசியலில் எதிர்ப்பே மூலதனம் என்கிற கருத்தையும் பதிவு செய்துள்ளார். இதன் மூலம் அரசியலில் தனது எதிர்ப்பாளர்களை நேருக்கு நேர் சந்திக்க ரஜினி தயாராகி விட்டார் என்றே தோன்றுகிறது.
 
அதே நேரத்தில் தேர்தல் நேரத்தில் அரசியலுக்கு வருவேன் என்பதையும் ரஜினி சூசகமாக கூறி இருக்கிறார். போர் வரும்போது பார்த்துக் கொள்வோம் என்று கூறி இருப்பதன் மூலம் அரசியலில் குதித்து எதிரிகளுடன் மோதுவதற்கு ரஜினி தயாராகி விட்டதும் உறுதியாகி இருக்கிறது.
 
முதல் கட்ட சந்திப்பு முடிந்துள்ள நிலையில் இரண்டாம் கட்டமாக ரஜினியின் ரசிகர்கள் சந்திப்பு அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது.
 
இதன் பின்னர் ரஜினி அதிரடி அரசியல் பயணத்தை தொடங்குவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment