Tuesday 25 April 2017

கில்லி கதை உருவான கதை தெரியுமா?

எந்த ஹீரோவுக்கும் காலத்துக்கும் சொல்லிக் கொள்கிற மாதிரியான ஒரு ஹிட் அமைவது... அவ்வளவு சுலபமில்லை. கில்லியில் விஜய்க்கு அமைந்தது அந்த ஹிட். இரண்டு மாதத்திகுள்ளாகவே எந்தப் புதுப் படமாக இருந்தாலும் டிவியில் போட்டுவிடும் சூழல் இது. ஆனால் கில்லி ரிலீஸ் ஆகி மூன்று வருடங்களுக்குப் பிறகுதான் டிவியில் ஒளிப்பரப்பானது. அந்த அளவுக்கு ப்ளாக்பஸ்டர் ஹிட். அந்தப் படம் வெளியாகி இன்றோடு பதிமூன்று வருடங்கள் ஆகிறன.  இரண்டில் எது பெஸ்ட், யார் பெஸ்ட் என்பதெல்லாம் தவிர்த்து, கில்லிக்குப் பின்னாலும், ஒக்கடு கதை உருவானதுக்குப் பின்னாலும் ஒரு சுவாரஸ்யம் உண்டு. அதைப் பற்றி மட்டும் பார்க்கலாம்.




அப்போது தான் உதயா படம் வெளிவந்து தோல்வியடைந்திருந்த நேரம். விஜய்க்கு மிகப் பெரிய வெற்றி தேவை. அப்படியே 2003 ஜனவரியை ஜும் செய்து பார்த்தால், தெலுங்கில் சங்கராந்தி (பொங்கல்) ரிலீஸாக வந்து மிகப்பெரிய ஹிட்டாகியிருந்தது 'ஒக்கடு'. அந்தப் படத்திற்கு முன்பு மகேஷ் பாபு நடித்த 'பாபி' படம் தோல்வியடைந்திருந்தது. அதிலிருந்து அவரை பெரிய உயரத்துக்கு கொண்டு சென்றது 'ஒக்கடு'. அது விஜய்க்கு தெரிந்திருந்ததோ என்னவோ. இவ்வளவுக்கும் அப்போது 'உதயா' ரிலீஸ் ஆகியிருக்கவில்லை. 'ஒக்கடு' பார்த்த விஜய் அதன் தமிழ் ரீமேக்கில் நடிக்கும் விரும்பினார். அது தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் காதுகளை எட்ட, இயக்குநர் தரணி, இசை வித்யாசாகர், ஒளிப்பதிவு கோபிநாத், நாயகி த்ரிஷா என சடசடவென அத்தனையும் முடிவானது. இயக்குநர் தரணி அப்போது தில், தூள்  என அதிரி புதிரியாக இரண்டு ஹிட்களைக் கொடுத்திருந்தார்.


பக்கா டீம் செட் ஆகியிருந்தது. ரமணா இயக்கத்தில் நடித்த 'திருமலை' படத்தின் ஷூட்டை முடித்துவிட்டு 2003ன் மத்தியில் 'கில்லி' படத்தைத் துவங்கினார்கள். சரியாக 'கில்லி' படப்பிடிப்பு முடியவும், சில நாளிலேயே 'உதயா' வெளியாகவும் சரியாக இருந்தது. உதயா பெரிய வரவேற்பைப் பெறாததால் விஜய் ரசிகர்களுக்கும், விஜய்க்கும் இருந்தது பசி இல்லை வெறி; வெறித்தனமான ஒரு ஹிட் வர வேண்டும் என்ற வெறி. அதற்காக ஒவ்வொரு சீனிலும், வசனத்திலும், சண்டைக்காட்சியிலும் மாஸ் ஏற்றியிருந்தார் தரணி.

இப்போது இங்கு இன்டர் கட் வைத்து, 'கில்லி'யின் ஒரிஜினல் ஒக்கடு உருவான கதையைப் பார்க்கலாம். சென்னை மெட்ராஸாக இருந்த நேரம் அது. அப்போது குணசேகர் என்கிற ஒரு உதவி இயக்குநர் ஹைதராபாத்தின் சார்மினார் பின்னணியில் ஒரு கேங்ஸ்டர் படத்தை எடுக்க வேண்டும் என்ற கனவுகளில் மிதந்து கொண்டிருந்தார். சில வருடங்கள் கழித்து, அதாவது உதவி இயக்குநராக இருந்த குணசேகர், மெகா ஸ்டார் சிரஞ்சீவியை வைத்தே படம் எடுத்திருந்த இயக்குநர் குணசேகர் ஆகிய பிறகு. 2001ல் பேட்மிட்டன் வீரர் புலேலா கோபிசந்தின் பேட்டி ஒன்றில், தன் தந்தையை எதிர்த்து பேட்மிட்டன் விளையாடியதையும், கப்களை மறைத்து வைத்ததையும் சொல்லியிருப்பதைப் பார்க்கிறார். பேட்மிட்டனை கபடியாக மாற்றி ஒரு கதையைத் தயார் செய்கிறார். முதலில் அதில் நடிக்க சொல்லி பவர்ஸ்டார் பவன்கல்யாணிடம் செல்கிறார் குணசேகர். ஆனால், பவன் மறுத்துவிடுகிறார். காரணம் சிரஞ்சீவியை வைத்து குணசேகர் எடுத்த ‘மிருகராஜூ’ தோல்வியடைந்திருந்தது. அடுத்து அவர் சென்றது மகேஷ் பாபுவிடம். அவர் ஓகே சொல்ல, துவங்கியது ஷூட். படம் வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஹிட்டானது. மகேஷின் கெரியரில் முதல் ஹிட் 'முராரி' என்றால் முதல் ப்ளாக்பஸ்டர் 'ஒக்கடு'. இந்தப் படத்துக்குப் பிறகு மகேஷுக்கு என தனியாக உருவான ரசிகர் வட்டம் மிகப் பெரியது.


இப்போது மீண்டும் கில்லிக்கு வருவோம். அதுவரை வெங்கடேஷின் சில தெலுங்குப் படங்களை ரீமேக் செய்திருந்த விஜய், முதல் முறையாக மகேஷின் படத்தை ரீமேக்க கையில் எடுக்கிறார். ‘ஒக்கடு’வின் கதையை கில்லிக்காக நிறைய மாற்றினார் தரணி. விஜய்யின் இன்ட்ரோ காட்சியில் கபடி கபடி கபடி என்ற பின்னணியுடன் வருவது, ஒக்கடுவில் கிடையாது. விஜய் வீட்டை ஏமாற்றிவிட்டு கபடி ஆட செல்வது போல, ஒக்கடுவில் இல்லை, ஓட்டேரி நரியோ, டுமீல் குப்பம் வௌவ்வாலோ, நெய் எடுத்துட்டுவா என டார்ச்சர் செய்யும் பிரம்மானந்தமோ ஒக்கடுவில் கிடையாது. அப்படி ஒரு ரீமேக்கை, தமிழ் ரசிகனுக்காக எந்த அளவுக்கு பக்காவாக கொடுக்க வேண்டுமோ அந்த அளவுக்கு ஸ்க்ரிட்டை ட்யூன் செய்திருந்தார். படம் எதிர்பார்த்ததை விட எகிறியடித்தது. ஒரு மாஸ் ஹீரோவுக்கு எதாவது ஒரு படம், தியேட்டருக்கு வரும் ஆடியன்ஸ் திரும்பி போகும் போது அந்தப் பட ஹீரோவின் ரசிகர்களாக மாற்றும் மாயத்தை செய்யும். அந்த மேஜிக்கை செய்தது கில்லி. படத்தைப் பார்க்க அத்தனை கூட்டம், எத்தனை ஸ்க்ரீன்களில் திரையிட்டாலும் குறையாத அளவுக்குக் கூட்டம். ‘இந்த ஏரியா, அந்த ஏரியா, அந்த இடம் இந்த இடம்’ என இன்ட்ரோ காட்சியில் பேசுவதாகட்டும், 'தம்மாத்தூண்டு ப்ளேடு மேல வெச்ச நம்பிக்கைய உன் மேல வை', 'கபடி ஆடலாம், கில்லி ஆடலாம், க்ரிக்கெட் ஆடலாம், கதகளி கூட ஆடலாம் ஆனா, ஆணவத்துல மட்டும் ஆடவே கூடாதுடா', எனப் படம் முழுக்க பேசும் ஒவ்வொரு வசனத்துக்கும் கைதட்டல் தெறிக்கிறது. அப்பா ஆஷிஷ் வித்யார்த்தியை சமாளிப்பது, தங்கையை கலாய்ப்பது, அம்மாவை ஏமாற்றுவது என விஜயின் ஒவ்வொரு ரியாக்‌ஷனும் வேற லெவல் ரீச்சைக் கொடுத்தது.

தெலுங்கு, தமிழில் உண்டான நடுக்கம், மற்ற மொழிகளில் இதே கதை சென்ற போது நடக்கவில்லை என்பது தான் விஷயம். இரண்டு வருடங்களுக்கு முன் சோனாக்‌ஷி சின்ஹா, அர்ஜுன் கபூர் நடித்து 'தேவர்' என ரீமேக் ஆனபோது கூட ஃப்ளாப் ஆனது. அப்படி ஒரு மேஜிக்கை மீண்டும் அதே கூட்டணி இணைந்தபோது கூட கொடுக்க முடியவில்லை. அதுதான் 'கில்லி' ஸ்பெஷல் படம் என சொல்லக்காரணமும் கூட.

No comments:

Post a Comment