Monday 11 July 2016

2016 அரையாண்டு தமிழ் சினிமா : அசத்தலா? அச்சமா?


2016ம் ஆண்டின் அரையாண்டு திரையுலகத்தைப் பொறுத்தவரையில் அதிக சிக்கல்கள் எதுவுமில்லாமல் வெற்றிகரமாக கடந்து போயுள்ளது.

pongal-2016-release.jpg

2014, 2015ம் ஆண்டுகளில் 200க்கும் அதிகமான படங்கள் வெளிவந்தன. அதே போல இந்த 2016ம் ஆண்டிலும் அந்த எண்ணிக்கை தொடரும் என எதிர்பார்க்கலாம்.


ஜனவரி மாதம் முதல் ஜுன் மாதம் முடிய 107 படங்கள் வெளிவந்துள்ளன. இந்த 107 படங்களில் மாபெரும் வெற்றி பெற்ற படங்கள் என்று பார்த்தால் அந்த எண்ணிக்கை 7ஐக் கூடத் தாண்டவில்லை என்பது எவ்வளவு பெரிய உண்மை.

மெகா ஹிட் 3 : மாபெரும் வெற்றி பெற்ற படங்கள் என்று பார்த்தால் 'ரஜினி முருகன், பிச்சைக்காரன், தெறி' ஆகிய மூன்று படங்களை மட்டுமே சொல்ல முடியும். இந்தப் படங்கள் அனைத்து விதமான ஏரியாக்களிலும் மிகப் பெரும் வசூலுடன் படத்தை வாங்கி வினியோகம் செய்தகவர்களுக்கும், திரையிட்டவர்களுக்கும், தியேட்டரில் கேன்டீன் நடத்தியவர்களுக்கும், பைக், கார் டோக்கன் போட்டவர்களுக்கும் வரை லாபத்தை அள்ளிக் கொடுத்த படங்களாக அமைந்தன.


'ரஜினி முருகன்' படத்தின் வெற்றி மூலம் சிவகார்த்திகேயன் அனைத்து ஏரியாக்களிலும் விரும்பப்படும் ஒரு நாயகனாக உயர்ந்துள்ளார். விஜய், அஜித் படங்களுக்குரிய வசூலையும், லாபத்தையும் அவர் நெருங்கிக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள்.

'பிச்சைக்காரன்' படத்தின் வெற்றி யாரும் எதிர்பார்க்காத ஒன்று. விஜய் ஆண்டனி நடிகரான பின் அவருக்கு மிகப் பெரும் வெற்றியை ஏற்படுத்திக் கொடுத்த படம் இது. தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கிலும் இப்படம் சுமார் 20 கோடி வரை லாபத்தைக் கொடுக்கும் என்கிறார்கள்.

'தெறி' படத்தின் வெற்றி அனைவரும் எதிர்பார்த்த ஒரு வெற்றிதான். விஜய், மீண்டும் தன்னை பாக்ஸ்-ஆபீஸ் நாயகனாக நிரூபித்த படம். அவருடைய முந்தைய படங்களின் வரலாற்றை இந்தப் படம் முறியடித்தது. 100 கோடிக்கும் மேல் வசூல் பெற்று இந்த ஆண்டின் மாபெரும் வெற்றிப் படங்களில் முதலிடத்தைப் பிடித்த படம் இது.

ஹிட் படங்கள் : மாபெரும் வெற்றியை அடுத்து வெற்றி பெற்ற படங்கள் என்ற பட்டியலில் சில படங்கள் இடம் பிடித்துள்ளன. அதில், “இறுதிச் சுற்று, அரண்மனை 2, விசாரணை, சேதுபதி, தோழா, 24, மருது, மனிதன், வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்” ஆகிய படங்களைக் குறிப்பிடலாம்.

பெண் இயக்குனர் சுதா கோங்கரா இயக்கிய 'இறுதிச் சுற்று' படத்தின் வெற்றி எதிர்பாராத வெற்றி. மாதவனுக்கு தமிழில் மீண்டும் ஒரு சுற்று வர இந்தப் படம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

'அரண்மனை' படத்தின் வெற்றி போலவே இல்லையென்றாலும் 'அரண்மனை 2' படத்தின் வெற்றி ஓரளவிற்கு அமைந்தது. பி அன்ட் சி சென்டர்களில் இந்தப் படம் குறிப்பிடத்தக்க வசூலைத் தந்ததாகச் சொல்கிறார்கள்.

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த 'விசாரணை' படம் பார்த்தவர்களையும் மிரள வைத்த படமாக இருந்தது. அந்த அளவிற்கு இப்படியெல்லாமா விசாரணை செய்வார்கள் என சாமானியனுக்கும் இந்தப் படம் புரிய வைத்தது. 'ஏ' சென்டர்களில் அதிக வரவேற்பைப் பெற்ற படமாக இருந்தது.

விஜய் சேதுபதியின் நடிப்பில் வந்த 'சேதுபதி' பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் மிதமான வெற்றியைப் பெற்றது. இன்னும் கொஞ்சம் அதிகமாக விளம்பரப்படுத்தியிருந்தால் இந்தப் படம் நல்ல வெற்றியைப் பெற்றிருக்க வாய்ப்புண்டு.

நாகார்ஜுனா தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்த படம் தோழா. ஒரு அழகான நட்பைச் சொல்லிய படம், கார்த்திக்கு மீண்டும் ஒரு வெற்றியைத் தேடிக் கொடுத்தது.


'24' படத்தின் பட்ஜெட்டை இன்னமும் குறைத்திருந்தால் படம் மாபெரும் வெற்றியைப் பெற்றிருக்கும். வெளிநாடுகளில் பெரும் வசூலைப் பெற்ற இந்தப் படம் உள்ளூரில் குறைவான வசூலைத்தான் பெற்றது.
தொடர்ந்து படங்களில் நடித்து வந்தாலும் பெரிய அளவில் வெற்றியைப் பெறாமல் இருந்த விஷ்ணு விஷாலுக்கு 'வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்' படம் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

ஏமாற்றிய படங்கள் : எதிர்பார்த்து ஏமாற்றிய படங்களில் நிறைய படங்கள் உள்ளன. “தாரை தப்பட்டை, கெத்து, கதகளி, பெங்களூர் நாட்கள், மிருதன், காதலும் கடந்து போகும், மனிதன், கோ 2, இது நம்ம ஆளு, இறைவி” ஆகிய படங்கள் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட படங்களாக இருந்தன.

அதிலும் குறிப்பாக இளையராஜாவின் 1000மாவது படமாக வந்த பாலாவின் 'தாரை தப்பட்டை', மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான 'பெங்களூர் நாட்கள்', முதல் பாகம் போலவே இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட 'கோ 2', விஷாலுக்குத் திருப்புமுனையைத் தரும் என எதிர்பார்க்கப்பட்ட 'கதகளி', கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த 'இறைவி' ஆகிய படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிராகரித்த படங்களாக இருந்தன. உதயநிதி ஸ்டாலின் மீண்டும் ஒரு 'ஒரு கல் ஒரு கண்ணாடி' போன்ற வெற்றியை எதிர்பார்த்த 'கெத்து' படம் அவருக்கு ஏமாற்றத்தையே தந்தன. சிம்பு, நயன்தாரா ஜோடியால் பேசப்பட்ட 'இது நம்ம ஆளு' படமும் பெரிதாக சோபிக்கவில்லை.

No comments:

Post a Comment