Sunday 7 February 2016

விசாரணை - பிரபலங்களின் வாழ்த்தும் சாமானியர்களின் எதிர்வினையும்

வெற்றிமாறனின் விசாரணை நேற்று திரைக்கு வந்தது. படம் வெளியாகும் முன்பு, படத்தைப் பார்த்த பிரபலங்கள், இதுபோன்று ஒரு படத்தை தமிழில் பார்த்ததில்லை என்று புகழந்தனர்.

 



இயக்குனர் மிஷ்கின் தமிழின் முன்னணி இயக்குனர்களை ஒன்று சேர்த்து வெற்றிமாறனுக்கு பாராட்டுவிழா ஒன்றை நடத்தினார்.
 
இயக்குனர் ராம், விசாரணை படத்தின் மையக்கருத்தை எடுத்துரைத்து படத்தை வாழ்த்தியுள்ளார்.
 
"நீங்களும் நானும் வாழும் இந்த நாடு, இதன் விதிகள், இதன் சட்டம் என எல்லாவற்றையும் விசாரணை செய்ய வருகிறது...
 
திரைக்கலையின் முழுமையோடு
சுவாரசிய நேர்த்தியோடு
அரச பயங்கரவாதத்திற்கு எதிராய்
முதல் தமிழ்ப் படம்...
 
விசாரணை அடையும் வெற்றி
தமிழ் சினிமாவின் வெற்றி..." - என ராம் குறிப்பிட்டுள்ளார். 
 
படத்தைப் பார்த்த பிரபலங்களின் விமர்சனம் பெரும்பாலும் பாராட்டாகவும், வியப்பாகவுமே உள்ளது.
 
"அறிவுத் திருட்டு ஒரு கலாச்சாரமாகிக் கொண்டிருக்கும் சூழலில் லாக்கப் நாவலை எழுதிய சந்திரகுமாரை கௌரவப்படுத்தியிருப்பதன் மூலமாக வெற்றிமாறன் தன்னை ஒரு பண்பட்ட, நாகரிகமான கலைஞன் என்பதை நிருபித்திருக்கிறார். விசாரணை தவற விடக்கூடாத அனுபவம்" என இயக்குனர் மீரா கதிரவன் வெற்றிமாறனை பாராட்டியுள்ளார்.
 
நேற்று வெளியான விசாரணையை சாமானிய ரசிகர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள்? "பிரபலங்களின் விமர்சனம் எதிர்பார்த்ததுதான். இந்தப் படத்தின் வெற்றி தோல்வி படம் வெளியாகும் அன்றுதான் தெரியும்" என வெற்றிமாறன் குறிப்பிட்டார். பொது ரசிகர்கள் படத்தை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதே அவருக்கு முக்கியமாக உள்ளது.
 
சென்னை போரூரில் உள்ள திரையரங்கில் நேற்றைய இரவுக்காட்சிக்கு அரங்கு நிறைந்த கூட்டம். படம் ஆரம்பித்த உடனேயே ரசிகர்களை அது உள்வாங்கிக் கொண்டது. இடைவேளைக்குப் பின், 'பின் ட்ராப்' சைலண்ட். படம் முழுமையாக ரசிகர்களை ஆகர்ஷித்திருந்தது. படம் முடிந்ததும் ரசிகர்கள் எழுந்து நின்று கைத்தட்டி பாராட்டிய அபூர்வ நிகழ்வை நேற்று காண முடிந்தது. அந்த கரவொலி விசாரணை படத்தின் வெற்றியை அறிவித்தது.
 
மலினமான காதல் காட்சிகள், உணர்ச்சியை தூண்டும் மேலோட்டமான சமூக அக்கறை, வலிந்து திணித்த சண்டைக் காட்சிகள், காட்சிக்கு தேவையற்ற வெற்று ஆடம்பரம் எதுவுமில்லாமல் விசாரணை சாமானிய ரசிகர்களின் இதயத்தை கவர்ந்துள்ளது. இதுவே அந்தப் படத்தின் உண்மையான வெற்றி. 

விசாரணையின் வெற்றியை நமது ரசனையின் வெற்றியாக கொண்டாடலாம்.

No comments:

Post a Comment