Friday 25 December 2015

மறக்க முடியுமா - முதல்வன் உருவான கதை

அறுபது வயது முதியவரிடம் நீங்கள் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால், அறுபது வருட அனுபவம் உள்ளவரிடம் பேசுகிறோம் என பொருள். வாழ்ந்து கிடைக்கிற அனுபவங்களைவிட, இப்படியான அனுபவசாலிகளிடம் பேசி, அவர்களின் அனுவங்களை பெறுவது என்பது ஒரு கலை. ஒருவரது அறுபது வருட அனுபவத்தை அரைமணி நேர பேச்சில் அள்ளிக் கொள்ளலாம்.


 
 
திரையுலகில் இப்படியான அனுபவங்கள் பெருமளவில் கை கொடுக்கும். திரைப்படம் சார்ந்த சில பழைய நினைவுகள் இன்று புதிதாக வரும் இளைஞர்களுக்கு தெரியாதவை, ஆனால், அவர்களுக்கு உத்வேகம் தரக்கூடியவை.
 
இயக்குனர்கள் இன்று கதைக்காக முட்டி மோதுகிறார்கள். கதைக்கா எங்கும் ஓட வேண்டியதில்லை. நம்மைச் சுற்றி கதைகள் கொட்டிக் கிடக்கின்றன. தேவைப்படுவதெல்லாம், அதனை அடையாளம் கண்டு கொள்கிற திறமை மட்டுமே. ஷங்கரின் முதல்வன் படம் இதற்குச் சிறந்த உதாரணம்.
 
ஷங்கர் படங்களில் இந்தியனும், முதல்வன் திரைப்படமும் தான் அதிக ரசிகர்களால் விரும்பப்படுபவை. இரண்டுமே திரைக்கதைக்கு முக்கியத்துவம் தந்து உருவானவை. அதில் முதல்வன் படத்தின் கதை கிடைத்தது ஒரு சுவாரஸியமான சம்பவம்.
 
ஜீன்ஸ் படம் சுமாராக போன பிறகு ஒரு சூப்பர்ஹிட் படத்தை இயக்கியாக வேண்டிய நிலை ஷங்கருக்கு. அவர் விரும்பும் சமூக சீர்கேட்டை சரி செய்யும் ஹீரோ கதை யாரிடமும் இல்லை. கதையைப் பிடிங்க, திரைக்கதை எழுதி தருகிறேன் என்று சுஜாதா சொல்லிவிட்டார். எப்படி புரண்டுப் பார்த்தும் கதை அமையவில்லை. கடைசியில் அசிஸ்டெண்டுகளுடன் வெளியூர் பயணமானார்.

வெளியூர் வந்து சில தினங்கள் கழிந்தும் எதுவும் நகரவில்லை. யார் சொல்கிற ஐடியாவும் ஷங்கரை கவரவில்லை. இந்த நேரத்தில் பத்திரிகையில் ஒரு செய்தி வருகிறது. அமெரிக்காவின் ஒரு நகரத்தின் ஒருநாள் மேயராக இந்திய விஐபி ஒருவர் நியமிக்கப்பட்டது அந்த செய்தியில் உள்ளது. ஒருநாள் மேயராகிறவர், ஒரு பில்டிங்கையோ இல்லை வேறு எதையாவதையோ இடிக்கச் சொன்னால் என்னாகும்? ஒருநாள் மேயராகி என்னத்தான் செய்வார்கள்? இப்படி அரட்டை அடித்துக் கொண்டிருந்த வேளையில் திடீரென ஒரு பிளாஷ். இதேபோல் ஒருநாள் முதல்வர் தமிழகத்தில் சாத்தியமா?


 
 
உடனே சுஜாதாவுக்கு போன் பறக்கிறது. பெரும்பான்மையான எம்எல்ஏக்கள் ஒத்துக் கொண்டால், தேர்தலில் நிற்காமலேயே ஒருவரை ஒருநாள் முதல்வராக்கலாம் என்கிறார் சுஜாதா. சட்டத்தில் அதற்கு இடம் இருக்கிறது. சுஜாதா சொல்லி முடித்ததும் கதை தயார் என்கிறார் ஷங்கர்.
 
ஒருவனை ஏன் அனைத்து எம்எல்ஏ க்களும் சேர்ந்து முதல்வராக்க வேண்டும்? அப்படி முதல்வராகும் அவன் ஒருநாளில் என்னென்ன செய்ய முடியும்? 
 
அடுத்தடுத்த கேள்விகள், அதற்கான பதில்கள் என கொஞ்சம் கொஞ்சமாக உருவானதுதான் முதல்வன் என்ற மாபெரும் வெற்றிப்படம்.
 
பஜ்ரங்கி பைஜான் படத்தின் கதையும் இதேபோல் ஒரு செய்தித்தாளிலிருந்து எடுத்துக் கொண்டதே.
 
நீதி - செய்தித்தாளின் சின்னச் செய்திகளிலிருந்தும் ஒரு திரைப்படத்துக்கான கதை கிடைக்கும்.

No comments:

Post a Comment