Sunday 2 August 2015

பாகுபலியை தூக்கி சாப்பிட தூபம்போடும் டைரக்டர்.. தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்

பாகுபலி திரைப்படத்தின் பிரமாண்டத்தை பார்த்து பயந்து போன நம்மூர் பிரமாண்ட டைரக்டர் உச்ச நட்சத்திரத்துடனான தனது அடுத்த படத்தை வெகு பிரமாண்டமாக எடுக்க முடிவு செய்து பெரிய குழுவோடு களமிறங்கியுள்ளார். ஆனால், இருவரையும் நம்புவதற்கு தயாரிப்பு தரப்புகள் தயாராக இல்லையாம். பாகுபலி திரைப்படம் பிரமாண்டமாக எடுக்கப்பட்ட விதத்தால் உலகமெங்கும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 



வசூலை வாரி குவித்து வருகிறது. இந்தியாவின் பிரமாண்ட இயக்குநர், ராஜமவுலிதான் என்று அனைத்து ஊடகங்களும் ரத்தின கம்பளம் விரித்துள்ளன. இது நம்மூரிலுள்ள பிரமாண்ட இயக்குநருக்கு கடும் கடுப்புகளை கிளப்பிவிட்டுள்ளது. ராஜமவுலியை அந்த பிரமாண்டம் வெளிப்படையாக வாழ்த்தி தனது பெரியமனுஷத் தனத்தை காண்பிப்பது போல காண்பித்துக் கொண்டாலும், உள்ளுக்குள் வெந்து கொண்டுள்ளது மனது. உச்ச நட்சத்திரத்தை வைத்து தனது முந்தைய படத்தின் 2வது பாகம் எடுக்க உள்ள அந்த பிரமாண்டம், 27 உதவி இயக்குநர்களையும், 10 நிர்வாக தயாரிப்பாளர்களையும் வைத்து டிஸ்கஷன் செய்துள்ளார். 

எப்படியாவது, பாகுபலியை முந்திவிட வேண்டும், தயாரிப்பாளருக்கு எத்தனை மொட்டை போட்டாலும் பரவாயில்லை என்ற ரீதியில் ரொம்ப உக்கிரமாக டிஸ்கஷன் நடந்துள்ளது. இந்நிலையில்தான், டிஸ்கஷன் விஷயத்தை யாரோ வெளியே லீக் செய்துவிட்டனர். கடுப்பிலுள்ளாராம், பிரமாண்டம். பிரமாண்டம், தயாரிப்பாளரை தெருவில் நிறுத்தி எடுத்த முந்தைய பிரமாண்ட படத்துக்கு போட்ட முதலை எடுப்பதற்குள் தயாரிப்பாளருக்கு நுரை தள்ளிவிட்டது. இதில், பாகுபாலியை முந்துகிறேன் பேர்வழி என்ற பெயரில், 300 கோடி என்று பட்ஜெட்டை போட்டு வைத்திருக்கும் பிரமாண்டத்தை நம்பினால் தெருக்கோடிதான் கதியா என்று பல தயாரிப்பாளர்களும் புழுதி பறக்க ஓடிக் கொண்டுள்ளனர்.

பிரமாண்டம் ஹீரோவாக வைத்து படமெடுக்க உள்ள நடிகருக்கும் இப்போது போதாத காலம். மக்கள் ரசனை மாறிவிட்டதால் அந்த குதிரை மீதும் பந்தையம் கட்ட தயாரிப்பாளர்கள் தயங்குகின்றனர். பிரமாண்டத்தின் சமீபத்திய படங்களும் பல லாஜிக் ஓட்டைகளுடன், புளித்து போன காட்சிகளுடன் பல்லிளிக்கின்றன. இருந்தாலும் ராஜமவுலியா, நானா என்ற கேள்விமட்டும் பிரமாண்டத்தை தூங்கவிடாமல் செய்து வருகிறதாம்.

No comments:

Post a Comment