Monday 25 May 2015

மாஸ் என்கிற மாசிலாமணி - கேலிக்குள்ளாகும் வரிச்சலுகை

திமுக ஆட்சிக் காலத்தில் திரைத்துறையினரையும், அவர்களை சார்ந்து இயங்கும் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களையும் திருப்திப்படுத்தும் நோக்கில், தமிழில் பெயர் வைக்கப்படும் படங்களுக்கு 30 சதவீத கேளிக்கை வரிவிதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று ஒரு உத்தரவை அப்போதைய முதல்வர் கருணாநிதி பிறப்பித்தார்.
 
 
 
அந்த அறிவிப்பு வெளிவந்தவுடன், உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங் என்ற படத்தின் பெயர், உனக்கும் எனக்கும் என்று சுருங்கியது. ஜில்லுன்னு ஒரு காதல் சில்லுன்னு ஒரு காதலானது. எது தமிழ்? எவையெல்லாம் தமிழ் என்பது குறித்து அந்த அறிவிப்பு வெளியான போதே தடுமாற்றம் உருவானது. எம்டன் மகன் என்ற பெயரை எம் மகன் என்று மாற்றினர். எம்டன் என்பது இரண்டாவது உலகப்போர் நேரத்தில் சென்னையில் குண்டு வீசிய ஜெர்மன் கப்பலின் பெயர். அதை எப்படி தமிழ்ப்படுத்த முடியும்?

பெயர் சொற்களை அப்படியே பயன்படுத்த வேண்டும் மாற்றக் கூடாது என்பதே விதி. ஜெர்மன் என்பதும், அமெரிக்கா என்பதும், லெனின் என்பதும், மைக்கேல் என்பதும், டாவின்சி என்பதும் எப்படி மொழிக்கேற்ப மாற்ற முடியாதோ அதேபோல்தான் எம்டன் என்பதும். ஆனால், எம் மகன் என்று மாற்றினால்தான் வரிச்சலுகை என்று சம்பந்தப்பட்டவர்கள் கூறியதால் எம்டன் மகன் எம் மகனானது.
 
இந்த பெயர்ச்சொல் பிரச்சனை இன்றும் தொடர்கிறது. வில்லன் என்பது ஆங்கிலச் சொல், வரிச்சலுகையில் பிரச்சனை கிளம்பும் என்பதால், மல்யுத்தம் செய்பவன் மல்லன், வில் யுத்தம் செய்பவன் வில்லன். ஆக, வில்லன் என்பது தமிழ்ச் சொல்தான் என்று உத்தம வில்லன் படத்தில் வசனமே வைத்திருந்தார் கமல்.  
 
கருணாநிதியின் பேரன்களில் ஒருவரான துரை தயாநிதி தயாரித்த படத்துக்கு குவார்ட்டர் கட்டிங் என்று பெயர் வைத்தார். அது ஆங்கிலச் சொல், வரிச்சலுகை கிடைக்காது என்பது அனைவருக்குமே தெரியும். படத்தை தணிக்கைக்கு அனுப்பும்வரை குவார்ட்டர் கட்டிங் என்பதை விளம்பரப்படுத்திவிட்டு, கடைசி நேரத்தில் வரிச்சலுகைக்காக படத்தின் பெயரை வ என்று மாற்றினர். வ -வின் கீழே கேப்ஸனாக கொட்டை எழுத்தில், குவார்ட்டர் கட்டிங். பெயர் தமிழில் இருக்க வேண்டும் என்பதுதான் அரசின் விதியே தவிர, கேப்ஷன் ஆங்கிலத்தில் இருக்கக் கூடாது என்று எந்த சட்டமும் இல்லையே?

இந்த மெகா சைஸ் ஓட்டையை திரைத்துறையினர் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்.
 
வெங்கட்பிரபு இயக்கியிருக்கும் மாஸ் படத்தின் பெயரை மாஸ் என்கிற மாசிலாமணி என்று நேற்றுமுதல் மாற்றியுள்ளனர். மாஸ் ஆங்கிலம். வரிச்சலுகை கிடைக்காது. ஆனால், வெங்கட்பிரபுவோ, மாசிலாமணி என்ற கதாநாயகனின் பெயர் சுருக்கம்தான் மாஸ், அதனால் அது தமிழ்தான் என்று விளக்கம் தந்தார். வரிச்சலுகை தருகிறவர்களை திருப்தி செய்ய அது போதவில்லை. அதனால், மாஸ் என்கிற மாசிலாமணி என்று படத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது.  
 
விளம்பரங்களில் இந்தப் பெயர் மாற்றத்தை நீங்கள் லென்ஸ் வைத்துதான் தேட வேண்டும். மாஸ் என்பதை பூதாகரமாக அச்சிட்டு அதன் கீழே யாருக்கும் தெரியாத அளவில், என்கிற மாசிலாமணியை அச்சிட்டிருக்கிறார்கள். விளம்பரங்களில், கன்டிஷன்ஸ் அப்ளை என்பதை மட்டும் கண்ணுக்கு தெரியாத சின்ன எழுத்துக்களில் குறிப்பிடுவது போல. 
 
மாஸ் என்பது பார்வையாளர்களின் மனதில் மாஸ் என்ற ஆங்கிலச் சொல்லாகவே பதியவைக்கப்பட்டுள்ள நிலையில், வரிச்சலுகைக்காக அரசின் உத்தரவு பகிரங்கமாக கேலி செய்யப்பட்டுள்ளது.
 
சினிமா மட்டுமின்றி, அனைத்து இடங்களிலும் இதுபோன்ற விதி மீறில்களுடனே அரசு எந்திரம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நோட்டீஸ் ஒட்டாதீர் என்ற அரசுப் பேருந்தின் அறிவிப்பின் மீதே போஸ்டர்கள் ஒட்டுவதில்லையா?
 
மக்கள்தான் அரசு என்ற அடிப்படையில், இதுபோன்ற செயல்களால் நம்மை நாமே கேலி செய்து கொள்கிறோம். மேலும், நீதி, நியாயம், நேர்மை என்றெல்லாம் திரையிலும், திரைக்கு வெளியேயும் ஆவேசம் கொள்ளும் நாயகர்கள் இது குறித்தெல்லாம் வாயே திறப்பதில்லை என்பது முக்கியமானது.

No comments:

Post a Comment