Thursday 15 January 2015

ஆம்பள விமர்சனம் – சுந்தர் சியின் காமெடி மசாலா மிக்ஸ் படம்!

பல படங்களில் வந்த கதையையே தனது படங்களில் சொன்னாலும் அதையும் ரசிக்கிற மாதிரி சொல்லுவதில் கெட்டிக்காரர் சுந்தர் சி. அதே வரிசையில் ஆம்பள படமும் அவரது ‘அக்மார்க்’ படைப்பாக உருவாகியிருக்கிறது.

 

பிரிஞ்சிருந்த குடும்பத்தை ஹீரோ ஒண்ணு சேர்க்கிறதை பல படங்களில் பார்த்திருப்போம். இதுதான் இந்தப் படத்தின் ஒன்லைனும் கூட. ஆனால் சுந்தர் சி தனது கைவண்ணத்தில் மசாலாவை மிக்ஸ் செய்து ரசிகர்கள் ரசிக்கிற மாதிரி ஆம்பள படத்தை இயக்கியிருக்கிறார்.

தனது அப்பாவை கொன்றுவிட்டார் என்று நினைத்து பிரபுவை அவரது தங்கைகள் அவரை வெறுத்து குடும்பத்தை விட்டே ஒதுக்கி வைத்துவிடுகிறார்கள். பிரபு மகன் விஷால் பிரிஞ்சிருக்கும் இந்த உறவுகளை எப்படி ஒண்ணு சேர்க்கிறார்…? என்பதுதான் படத்தின் கதை.

படத்தின் தொடக்கத்தில் இருந்தே சிரிக்க வைக்கும் காட்சிகளுடன் ஜாலியாக நகருகிறது படம். இடைவேளைக்கு பிறகு வரும் அரசியல் சம்பந்தப்பட்ட காட்சிகளில் சில இடங்களில் மட்டும் கொஞ்சம் ப்ரேக் ஆகி மீண்டும் வேகம் எடுக்கிறது திரைக்கதை.

விஷால், ஹன்ஸிகா நடிப்பு கேரியர் எண்ணிக்கையில் இந்தப் படமும் ஒன்று அவ்வளவுதான். அரசியல் கூட்டங்களுக்கு ஆள் சேர்க்கும் வேலை பார்க்கிறார் விஷால். கதாநாயகிகளைக் கவர்ச்சி பதுமைகளாக காட்டும் சுந்தர் சி படத்திற்கு இந்தப் படமும் விதிவிலக்கல்ல. கதாநாயகி ஹன்ஸிகா படம் முழுக்க அரைகுறை உடையிலேயே அலைகிறார். பாடல்களுக்கான நடனங்களில் சொல்லவே வேண்டாம்… உடம்பில் ஆடை எங்கதான் ஒட்டிக்கிட்டு இருக்கிறது என்று தேட வைத்துவிடுகிறார்கள். ஹன்ஸிகாவின் சகோதரிகளாக நடித்திருக்கும் இரண்டு நடிகைகளும் ஒப்புக்கு வந்து போகிறார்கள். விஷாலின் அப்பா ஆளவந்தான் கேரக்டரில் நடித்திருக்கிறார் பிரபு. விஷாலின் அத்தையாக நடித்திருக்கிறார்கள் ரம்யா கிருஷ்ணன், ஐஸ்வர்யா, கிரண். நல்ல வேளை அத்தை என்பதால் இவர்களை சேலையில் அலைய வைத்திருக்கிறார்கள். இல்லையென்றால் இவர்களுக்கும் கதாநாயகியின் காஸ்ட்யூம்தான் கொடுத்திருப்பார்களோ என்னவோ…! வைபவ் மற்றும் சதீஷ் விஷாலின் தம்பிகளாக நடித்திருக்கிறார்கள்.

சந்தானம் வரும் காட்சிகளில் கொஞ்சம் கூடுதலாக சிரிக்க முடிகிறது. படத்தின் முதலில் வரும் காட்சிகளில் அவர் படிப்படியாக வேலையை இழப்பது குபீர் சிரிப்பு என்றால் மீண்டும் வேலைக்கு சேர்ந்த சந்தானம் விஷாலுடன் சேர்ந்து நடித்திருக்கும் காட்சிகள் வெடிச்சிரிப்பு. அதுவும் கிரண், சந்தானம் காம்பினேஷன் காட்சிகள் ‘ஒரு மாதிரி’யாக இருந்தாலும் ரசிகர்களிடத்தில் அந்த காட்சிகளுக்கு செம ரெஸ்பான்ஸ். ஹிப் ஹாப் தமிழாவின் பாடல்கள் எல்லாமே கொஞ்சம் அதிகப்படியாகவே ஆட்டம் போட வைக்கின்றன. காமெடி பொழுது போக்கு படத்திற்கு தேவையான பின்னணி இசையை கொடுத்திருக்கிறார். படத்தை இயக்கியிருக்கிறார் சுந்தர் சி. தியேட்டருக்கு போனோமா… படத்தை பார்த்தோமா… ஜாலியா திரும்பி போனோமா… என்று இருக்கும் ரசிகர்களுக்கான படமாக ஆம்பள படத்தை இயக்கியிருக்கிறார் சுந்தர் சி.

No comments:

Post a Comment