Friday 19 December 2014

அடுத்த சூப்பர் ஸ்டார் அஜித்?

ஜினியின் அறிவிக்கப்படாத அடுத்த வாரிசாக அமர்க்களப்படுத்திவருகிறார் அஜித். தொடர்ந்து வெற்றி களைக் குவித்துவரும் இவருக்கு ரசிகர்களின் வட்டம், மாவட்டமாய் வளர்ந்து, மாநிலங்கள் தாண்டி விரிந்து கொண்டிருக்கிறது.




படம் வெளியாகும்போது தியேட்டர்களில் பேனர் கட்டி புகழ்பாடவேண்டாம், கட்-அவுட் வைத்து பால்குளியல் நடத்த வேண்டாம், எல்லாவற்றுக்கும் மேலாக ரசிகர்மன்றமே வேண்டாம் என்று கலைத்துவிட்டபிறகும், ‘அதச்சொல்றதுக்கு நீ யாருய்யா? நாங்க அப்பிடித்தான் செய்வோம்’ என்று பாசக்காரப்புள்ளைகளாக அஜித்தைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறது ரசிகர் வட்டம். ஜீன்ஸ் மாறாத டீன்ஸ் ரசிகர்கள் கூட, ‘வீரம்’ படம் வந்த பிறகு வேட்டி- சட்டைக்கு மாறுவதை ஃபேஷனாகக் கொண்டார்கள்.

‘உயிரினும் மேலான ரசிகர்களே! புகை, மது இரண்டுமே தீங்கானது. திரைப் படத்தின் பாதிப்புகளில் கெட்டவைகளை அரங்கின் வாயிலோடு விட்டுவிட்டு, நல்லவைகளை வீட்டிற்கு எடுத்துச் செல்லுங்கள். உங்கள் நல் ஆரோக்யம், மகிழ்ச்சி, வெற்றி என்றென்றும் நிலைத்திருக்க... வாழ்த்துக்களுடன் அஜித்குமார்’ என்று ரசிகர்களுக்கு ‘தல’ எழுதிய கடிதம், அவர்களது குடும்பத்தையும் கவர்ந்தது. அப்புறமென்ன, அவர்களும் ரசிகர்களானார்கள்.

இமேஜ் பற்றிக் கவலைப்படாமல் அஜித் ஏற்கும் கதாபாத்திரங்களை பொது ரசிகர்களும் ஏற்றுக்கொள்வதே இவரது வெற்றிக்கு உத்தரவாதத்தை எந்த வாதம், விவாதமும் இல்லாமல் தருகிறது. மவுனப்படம் எடுத்தாலும், அதைப் பேசவைத்துவிடும் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனுடன் ‘தல’ கைகோர்த் திருக்கும் ‘என்னை அறிந்தால்’ படம், பூஜைபோட்ட நாளிலிருந்தே பண்டிகைக் கோலம் கண்டுவருகிறது. யூடியூபில் தூண்டல் காட்சி வெளியானபோது முதல் பன்னிரண்டு மணி நேரத்துக்குள் 5 லட்சம் பேர் பார்த்து ரசித்திருக்கிறார்கள் என்பது இதுவரை இல்லாத திரைச் சாதனை.

தன்னை நல்லவராக மட்டுமே காட்டிக்கொண்டு, ரசிகர்களுக்கு வஞ்சக வலை வீசாமல், கெட்டவனாகவும் வருவேன் என்று நெஞ்சக வலை விரிப்பதால் உஷார் பேர்வழிகளும் இவரிடம் சுலபமாக சிக்கிக் கொள்கிறார்கள். இவரது வெளிப்படையான பேச்சுக்கு, எழுந்து நின்று கைதட்டும் ரஜினிகாந்தின் அடுத்த வாரிசாகவே ‘தல’யை தலையில் வைத்துக் கொண்டாடுகிறார்கள் பொது ரசிகர்கள்.  பக்குவ முதிர்ச்சியும், தேர்ந்தெடுத்த கதாபாத்திரமும் அஜித்தை அடுத்த சூப்பர் ஸ்டார் ஆக்கும் என்பதே மனச்சாட்சியோடு பேசும் கோடம்பாக்க சினிமாக்காரர்களின் கருத்து.

No comments:

Post a Comment