Thursday 16 October 2014

கத்தி: கதை(?) விமர்சனம்...!

கதைப்படி ஹீரோ நம்ம தற்காலிக சூப்பர்ஸ்டார்தான்.... எங்க பாத்தாலும் பவர்கட்டா இருக்கே, எல்லார் வாழ்க்கைலயும் வெளிச்சத்த ஏத்தலாம்னு ஒரு உயர்ந்த குறிக்கோளோட  ஊர்ல சின்னதா ஒரு கடை போட்டு பெட்ரோமேக்ஸ் லைட் வாடகைக்கு விட்டுட்டு இருக்கார். ஊர் திருவிழாவுக்கு புல் லைட் சப்பளையும் அவருதான். அத வெச்சே செமையா இண்ட்ரோ சாங் எடுத்திருக்காங்க. குரூப் டான்சர்ஸ் எல்லாரும் ஆளுக்கொரு பெட்ரோமேக்ஸ் லைட்ட தூக்கி பிடிச்சிட்டே ஆடுறது கண்ணைப் பறிக்குது. இப்படியே போய்ட்டு இருக்கும் போது ஒரு நாள் ஒரு பொம்பள கைல கூடையோட வந்து பெட்ரோமேக்ஸ் லைட்டு வேணும்னு கேக்குது... அந்த இடத்துல நம்ம டாகுடரோட ரியாக்சனை பார்க்கனுமே.... கண்ணு சிவக்குது, கை துடிக்குது, நாடி நரம்பெல்லாம் புடைக்குது, பின்னணி மியூசிக் அதிருது........ சான்சே இல்ல, அப்படி ஒரு பந்தாவான சீன்....! கூடை வெச்சிருக்கவங்களுக்கு எல்லாம் பெட்ரோமேக்ஸ் லைட் கிடையாதுன்னு சொல்லிடுறார். அந்தம்மாவும் திட்டிக்கிட்டே போய்டுது.


ஆனா இத வில்லனோட அல்லக்கை ஒருத்தன் ஒளிஞ்சி நின்னு பாத்துடுறான். அவன் நேரா போய் வில்லன்கிட்ட சொல்லிடுறான். வில்லன் உடனே அல்லக்கைகள் எல்லார் கைலயும் ஆளுக்கொரு கூடைய கொடுத்து போய் பெட்ரோமேக்ஸ் லைட்டு வாங்கிட்டு வாங்கடான்னு அனுப்பி வைக்கிறான். டாகுடருக்கு கோவம் கோவமா வருது, என்னடா இது இன்னிக்குன்னு பாத்து பெட்ரோமேக்ஸ் லைட் வாங்க வர்ரவங்கள்லாம் கைல கூடையோடவே வர்ராங்கன்னு. அப்போ கூடவே சுத்திட்டு இருக்க காமெடியன் இது வில்லனோட வேலைன்னு சொல்லி புரியவைக்கிறான். அவ்வளவுதான் டாகுடருக்கு கோபம் கொப்பளிக்குது.

கூடைய வெச்சி ஆளனுப்புறவனை கூடைக்குள்ளயே வெச்சி அடிப்பேண்டான்னு பஞ்ச் டயலாக் பேசியபடி வில்லன்களை அடிச்சு துவம்சம் பண்றார். அப்போதான் அவருக்கு தெரியுது கூடைகள்லாம் இந்தியாவுல்ல செஞ்சது இல்லேன்னு. வில்லன்கள் பின்னாடியே ஃபாலோ பண்ணி, வெளிநாட்டுல இருந்து கூடைகளை கடத்திட்டு வர்ராங்கன்னு கண்டுபுடிக்கிறார். இருந்தாலும் அவருக்கு சந்தேகம், உள்நாட்டுலயே கூடை கிடைக்கும் போது வெளிநாட்டுல இருந்து ஏன் கடத்திட்டு வரனும்னு. இதை கண்டுபிடிச்சே ஆகனும்னு வில்லன்களை புடிச்சி ரகசியமா ட்ரைனேஜ் பைப் லைன்களுக்குள் அடைச்சு வைக்கிறார். அங்கேயே பெட்ரோமேக்ஸ் லைட்டோட இரவு பகலா காவலுக்கும் இருக்கார். அப்போ வில்லன் ஆள் ஒருத்தன் டாகுடரோட டெடிக்கேசனை பாத்துட்டு கண்கலங்குறான். ஏண்ணே கூடை மேல உங்களுக்கு இவ்ளோ கோவம்னு கேக்குறான்,

அதைப் பாத்து டாகுடரும் கண்கலங்குறார். உடனே ப்ளாஷ்பேக் தொடங்குது. டவுசர் போட்டபடி சமந்தா ஆடிக்கொண்டிருக்கிறார். கூடவே டாகுடரும், டூயட் சாங்காம். டாகுடர் இதிலும் ஹீரோயின் டவுசரில் கையை வைக்கும் மேனரிசத்தை தொடர்வது அல்டிமேட். ரசிகர்களுக்கு நல்ல தீனி. லவ் சீன்ஸ் இப்படியே நல்லா போய்ட்டு இருக்கு, அப்போ ஒருநாள் ஹீரோயினோட செல்ல நாயைக் காணலைன்னு பெட்ரோமேக்ஸ் லைட்ட எடுத்துட்டு ஊர் பூரா தேடுறார் டாகுடர். எங்கே தேடியும் கிடைக்கல. ஹீரோயின் ஒரே அழுகையா அழுகுது. இந்த காட்சில தியேட்டரே ஒப்பாரி வைக்க போவது உறுதி. அழகான பொண்ணுங்க அழுதா யார்தான் தாங்குவா? காலைல பாத்தா அந்த நாய் ஒரு கூடைக்குள்ள செத்துக் கெடக்குது, டாகுடர் பதறி போறார். அந்த கூடையை நாய் உள்ளெ இருக்குன்னு தெரியாம கவுத்தி போட்டதே அவர்தான். குற்ற உணர்ச்சில துடிக்கிறார். அப்பவே சபதம் செய்றார் இனி கூடை வெச்சிருக்கவங்களுக்கு பெட்ரோமேக்ஸ் லைட் கொடுக்கவே மாட்டேன்னு.... டக்னு ஃப்ளாஷ்பேக் முடியுது, எல்லா வில்லனுங்க கண்ணுலயும் கண்ணீர்...  டாகுடரும் கண்ண தொடச்சிக்கிட்டே பெட்ரோமேக்ஸ் லைட்ட தொடைக்கிறார்.

வில்லன்களைத் தேடி வெளிநாட்டு கூடை வியாபாரி (தொழிலதிபர்) வர்ரார். இதை கேள்விப்படும் டாகுடர் தலைய லைட்டா புளிச் பண்ணி மீசைய பெருசா வெச்சிக்கிட்டு இன்னொரு கெட்டப் போட்டு ரகசியமா அந்த ட்ரைனேஜ் பைப்ப விட்டு வெளில வர்ரார்.  வில்லன் கூட பயங்கர சண்டை நடக்கிறது. தொழிலதிபர் அடிதாங்க முடியாமல் உண்மைகளை சொல்லிவிடுகிறார். வெளிநாட்டுக் கூடைகளை கடத்திக் கொண்டுவந்து உள்நாட்டுக் கூடை தொழிலை நசுக்கி இந்திய பொருளாதாரத்தை ஆட்டம் காணச் செய்ய வேண்டும் என்று சீன உளவுத்துறை சதித் திட்டம் தீட்டி இயங்குவதை கண்டுபிடிக்கிறார். பின்னணியில் இருக்கும் சீன சதிகாரர்களை சுற்றி வளைத்து சதித்திட்டத்தை முறியடித்து இந்திய பொருளாதாரத்தை டாகுடர் எப்படி காக்கிறார் என்பதே மீதிக்கதை...!  எந்த கெட்டப்பில் போய் இதை சாதிக்கிறார் என்பதை படு சஸ்பென்சாக வைத்திருக்கிறார்களாம். அதனால் நாமும் அதை சொல்லப் போவதில்லை.

டாகுடருக்கு இந்த கதைக்களம் மிகவும் புதுசு. இருந்தாலும் ஜமாய்த்திருக்கிறார். இதுவரை உள்ளூர் ரவுடிகள், வெளியூர் தீவிரவாதிகள்னு பட்டைய கெளப்பிட்டு இருந்த டாகுடரை இந்த முறை வெளிநாட்டுல இருந்து வர்ர டான்களை இரண்டு கெட்டப்புகளில் அடித்து துவைக்கும் கடினமான பணியை ஒப்படைத்திருக்கிறார் முருகதாஸ். ஒரே மாதிரி கதையில் நடிக்கிறார் என்று இனி யாருமே சொல்லமுடியாத அளவுக்கு அவரை இரண்டு கெட்டப்பில் நடிக்க வைத்து சாதித்திருக்கிறார் முருகதாஸ். பெரிய முன்னேற்றம்தான். அது போல டிரைனேஜ் பைப்புக்குள் துணிச்சலாக நடித்திருக்கும் டாகுடரின் தைரியத்தை நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும். பாதிக்கும் மேல் படம் அதற்குள்தான் வருகிறது என்பதால் மிகப்பிரம்மாண்டமாக ட்ரைனேஜ் செட் போட்டிருக்கிறார்கள். படம் வந்ததும் உங்கள் ஊரில் நல்ல தியேட்டரில் சென்று டிக்கட் எடுத்து பாருங்கள்!

No comments:

Post a Comment