Thursday 16 October 2014

தமிழ் சினிமாவின் வியாபாரப் பொருளாகும் ஈழப் போராளிகள்

ஈழம் குறித்து தமிழகத்தில் எடுக்கப்படும் திரைப்படங்கள் இரண்டு வகையானவை. ஈழத்தின்பால் உணர்ச்சிகரமான ஈடுபாட்டுடன் எடுக்கப்படும் திரைப்படங்கள் ஒருவகை. ஈழம் குறித்த திரைப்படத்துக்கு சர்வதேச அளவில் சட்டென்று ஓர் அங்கீகாரம் கிடைக்கும், படத்துடன் நாமும் பிரபலமாகிவிடலாம் என்ற நப்பாசையில் எடுக்கப்படுபவை இரண்டாவதுவகை. 


இந்த இரண்டுவகை திரைப்படங்களும் ஈழம் குறித்த சித்திரத்தை சர்வதேச அரங்கில் முன் வைத்ததில்லை என்பது வேதனையான உண்மை.
சினிமா என்பது ஒரு கலை வடிவம். உணர்ச்சிப்பெருக்குடன் அதனை அணுகும்போது கைவிரல்களுக்கிடையே நழுவும் நீரைப்போல சொல்ல வரும் விஷயங்கள் நழுவிவிடுகின்றன. தங்கராஜ் போன்ற உணர்ச்சிகரமான ஈழ ஆதரவாளர்களின் திரை ஆக்கங்களுக்கு நேர்ந்த சறுக்கல் இதுதான். சர்வதேச அரங்கில் முன்வைக்கப்படுவதற்கான வலு அவற்றிற்கு இல்லை.

அல்ஜீரியர்களின் போராட்டத்தை இன்றும் சர்வதேச அரங்கில் உரத்துப் பேசும் பேட்டில் ஆஃப் அல்ஜீர்ஸ் போன்ற ஒரு திரைப்படத்தை வெறும் உணர்ச்சிகளால் மட்டுமே உருவாக்கிவிட முடியாது. தங்கராஜ் போன்றவர்கள் இங்குதான் தோற்றுப் போகிறார்கள்.
பிரவீன் காந்த், பச்சை முத்து போன்ற வியாபாரிகள் எடுக்கும் புலிப்பார்வை போன்ற திரைப்படங்கள் வணிகத்தை மட்டும் நோக்கமாகக் கொண்டவை. வரலாறு, அதன் உண்மைகள். அவை சமூகத்தில் உருவாக்கப் போகும் அதிர்வுகள் எல்லாம் இவர்களுக்கு பொருட்டில்லை.

பார்வையாளர்களின் மேலோட்டான உணர்வுகளை தூண்டி காசு பார்க்க நினைக்கும் உணர்ச்சிகர வியாபாரிகள் இவர்கள். யுத்த பின்னணியில் எடுக்கப்பட்ட முதல் தமிழ்ப் படம் என்று புலிப்பார்வைக்கு விளம்பரம் தந்திருக்கிறார்கள்.
விடுதலைப்புலிகள் இறுதிகட்ட போரின் ஆரம்ப நாள்களில் போராளிகளை வைத்து எல்லாளன் என்ற திரைப்படத்தை எடுத்தனர். ஒளிப்பதிவாளர் உள்பட ஒரு சிலர் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். படத்தில் நடித்தவர்கள் அனைவரும் போராளிகள். படத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் அனைத்தும் அசலானவை, போரில் பயன்படுத்தப்படுபவை.

 முழுக்க போராளிகளின் நடிப்பில் உருவான ஒரே படம் என்றால் அது எல்லாளன்தான். குறைபட்ட திரைக்கதை மற்றும் திறனற்ற ஒளிப்பதிவால் படம் உள்ளூர் பார்வையாளர்களைக்கூட திருப்பதிப்படுத்தவில்லை. என்றாலும் போர்க்களத்தில் எடுக்கப்பட்ட, முழுக்க போராளிகள் நடித்த, போராளிகள் தயாரித்த படம் எல்லாளன்.
அப்படம் குறித்து நன்றாக தெரிந்தும் யுத்த பின்னணியில் தயாரான முதல் படம் என்று எப்படி இவர்களால் விளம்பரம் தர முடிகிறது? எல்லாமே வியாபாரம். அதில் உண்மைக்கும் நேர்மைக்கும் இடமில்லை.
இப்படியொரு சூழலில் திலீபன் என்ற பெயரில் ஒரு படம் தமிழில் தயாராகி வருகிறது. ஈழத்துக்காக உண்ணாவிரதம் இருந்து மரித்த முதல் தமிழன் திலீபன். திலீபனாக நந்தா நடிக்க இயக்குனர் ஆனந்த மூர்த்தி படத்தை எடுத்து வருகிறார். எண்பது சதவீத படம் முடிந்துள்ளது.
திலீபனின் சொந்த ஊருக்குப் போய் அவர் சம்பந்தப்பட்டவைகளை திரட்டி படத்தை எடுக்கிறேnம் என்று எல்லோரையும் போலவே ஆனந்த மூர்த்தியும் கூறுகிறார். படத்தில் பிரபாகரன், கிட்டு, மாத்தையா என்று முதல்வரிசை ஈழப்போராளிகள் அனைவரும் இடம்பெறுகிறார்கள். உணர்ச்சியை முதலீடாக்கியே திலீபன் படத்தை ஆனந்த மூர்த்தி எடுத்து வருவது அவரது பேச்சில் தெரிகிறது.

ஈழம் குறித்த நேர்மையான பதிவை தணிக்கைக்குழு அனுமதிப்பதில்லை. ஈழம் என்ற வார்த்தையையே அது அனுமதிப்பதில்லை. இவையெல்லாம் தெரிந்தும் தணிக்கைக்குழுவை திருப்திப்படுத்தும் சமரசங்களுடன் ஈழம் குறித்த படங்களை தமிழ் சினிமா உற்பத்தி செய்து தள்ளுகிறது. இது அப்பட்டமான வியாபாரம்.

இலங்கை ராணுவம் ஈழப்போராளிகளை ஒருமுறைதான் கொன்றது. தமிழ் சினிமாவோ பலமுறை, சிறுக சிறுக கொல்கிறது.

No comments:

Post a Comment