Thursday 2 July 2015

தனிமை எனக்கு இனிமை! - கோவை சரளா

பள்ளி மாணவியாக 9ம் வகுப்பு படிக்கும்போதே திரைப்படங்களில் பயணிக்க தொடங்கியவர், கிட்டத்தட்ட 30 வருடங்களாக தமிழ், தெலுங்கு சினிமாவில் தன் மண்ணுக்கேத்த பேச்சாலும், மனதைத் தொடும் நடிப்பாலும், 750 படங்களில் கோவை சரளா என்ற முத்திரையை படைத்து விட்டார். ரசிகர்களின் பாராட்டை பெற்றவர் கோவை சரளா, 'முந்தானை முடிச்சு, சதிலீலாவதி, கரகாட்டக்காரன்' என்ற இவரின் வெற்றி பட்டியல், 'கொம்பன், காஞ்சனா' என்று இன்றும் தொடர்கிறது. காமெடி குயினாக தமிழ் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கும், கோவை சரளாவிடம் பேசியதிலிருந்து...



* வெற்றி உங்களை தேடி வருகிறதா.? இல்லை வெற்றி படத்தை தேடிபோய் நீங்க நடிக்கிறீர்களா.?

நான் 30 வருடமாக சினிமாவில் இருக்கேன். ஹிட் படங்களில் மட்டும் தான் நான் இருந்திருக்கிறேன் என்று சொல்ல முடியாது. நிறைய ஓடாத படங்களும் இருக்கும். நான் எதையும் உள் காரணம் வைத்து பார்ப்பது இல்லை. என் வேலையை செய்கிறேன். இப்போது எனக்கு நேரம் கொஞ்சம் நல்லா இருக்கு, அதனால் நிறைய வெற்றிகள் அமையுது.

இன்றைய சினிமா எப்படி இருக்கு?

நிறைய மாறியிருக்கு. ஒரு படம் வெற்றி அடைந்து விட்டது என்ற தகவல் வந்தால், அந்த படத்தில் நடிக்காவிட்டாலும், நமக்கே சந்தோஷமாக இருக்கு. இப்போது, கொம்பன், 50வது நாள் போஸ்டர் பாக்குறோம்; இதெல்லாம் சந்தோஷத்தை தருது. வெற்றிகரமான 2வது நாள் என்று போஸ்டர் அடிக்கும் நிலையில், இந்த மாதிரியான வெற்றி ஆச்சரியத்தை தருது.

பயந்து அல்லது வியந்து நடித்த படங்கள் எதுவும் இருக்கா?

அப்படி சொல்லணும்ன்னா சதிலீலாவதி படம் பற்றி சொல்லலாம். கமல் சாருடன் நடிக்கும் இந்த படம் வெற்றி அடைந்தே ஆக வேண்டும் என்ற பயம், படம் முடிக்கிற வரை இருந்தது. அந்த படம் ஓடவில்லை என்றால், கமல் சாரை திட்டுவாங்க; காமெடி நடிகையை ஜோடி சேர்த்ததால் தான் படம் தோல்வி அடைந்தது என, எல்லாரும் சொல்லிடுவாங்களோ என்ற பயம் இருந்தது. சதிலீலாவதி வெற்றின்னு கேள்விப்பட்ட பின் தான், எனக்கு உயிரே வந்ததுன்னு சொல்வேன்.

லாங்வேஜ், பாடி - லாங்வேஜ் எது உங்களுக்கு பிளஸ்?

எனக்கு இரண்டுமே பிளஸ்ன்னு நினைக்கிறேன். இது இரண்டும் இருந்தால் தான், நாம சினிமாவில் நிற்க முடியும்; திரையில் நான் வரும்போது, உங்களை அறியாமல் சிரிப்பு வரணும். ஒருத்தரை சிரிக்க வைக்கிறது, அவ்ளோ ஈசியான விஷயம் இல்லை.

நடிகைகளுக்குள் அவ்வளவாக நட்பு இல்லையே?

அது உண்மை தான்; யார்கிட்டேயும் இப்போது நட்பு இல்லை. கேரவன் கலாசாரம் ஆகிடுச்சி. படப்பிடிப்பின் போது, மரத்தடி, திண்ணை, தெரு, தரையில் உட்கார்ந்து ஒருத்தருக்கொருத்தர் மனம் விட்டு பேசிக்கிற நிலை போயிடுச்சு. டெக்னாலஜி வளர வளர, எல்லாமே மாறிட்டு வருது. முதல்ல இருந்த சினிமா உலகம் இப்ப இல்லை; நடிகைகள் பலரும் மாறிட்டாங்க. பல ஆண்டுகளுக்கு அப்புறம் கிட்டத்தட்ட, 15, 20 ஆண்டுகள் கழித்து, இப்ப தான் நான் கல்பனாவை பார்க்கிறேன். நாங்க இப்போது, இட்லி படத்தில் நடிக்கிறோம். இப்படி எல்லாரும் ஒரு வகையில் பிசியா இருக்காங்க; ஹலோ சொல்லிக்க எல்லாம் நேரம் இல்லை.

உங்களுக்கு பின், காமெடியில் எந்த நடிகையும் பேர் எடுக்கவில்லையே ஏன்?

பெண்கள் காமெடியில் நீடிக்கிறது, ரொம்ப கஷ்டம்.உள்ளுக்குள் காமெடி உணர்வு இயல்பா இருக்க வேண்டும். ஆச்சி மனோரமா காலத்தில், அவங்களுக்காக எழுதிய எழுத்தாளர்கள் இருந்தாங்க. நான் வரும்போது, எந்த எழுத்தாளர்களும் இல்லை; பல குட்டிக்கரணம் போட்டு தான் வந்தேன். எனக்கே இந்த நிலைமை என்றால், எனக்கப்புறம் வரப்போறவங்க நிலைமை எப்படி இருக்கும்?

காமெடி நடிகர்களுக்கு உரிய அங்கீகாரமோ, தேசிய விருதோ கிடைப்பதில்லையே ஏன்?

இதை நினைத்தால் கொஞ்சம் வருத்தமாகத் தான் இருக்கு. காமெடி நடிகர்களுக்கு ஏன் விருது கொடுக்க மறுக்கின்றனர் என்பது புரியவில்லை. நான் மட்டும் பேசினால் போதாது; பலரும் பேச வேண்டும்.

தெலுங்கில் உங்களுக்கு நிறைய சுதந்திரம் கிடைக்குதா?

தெலுங்கில் ஒரு படத்தில், 50 காமெடி நடிகர்கள் கூட நடிக்கலாம்; எந்த பிரச்னையும்

வர்றதில்லை. தமிழில், இரண்டு காமெடி நடிகர்கள் சேர்ந்து நடிக்கச் சொல்லுங்கள் பார்க்கலாம்? அங்குள்ள ஒற்றுமை, இங்கே இல்லை. நமக்கு போட்டியாக, அந்த நடிகர் வந்து விடுவாரோ, இந்த நடிகர் வந்து விடுவாரோ என்ற பயம் தான் இதற்கு காரணம். இந்த பயமே தேவை இல்லை; நமக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பு, கண்டிப்பாக கிடைக்கும்.

சினிமா தவிர?

சினிமாவை தவிர, வேற எதுவும் எனக்கு தெரியாது; அப்படி வாய்ப்பும் வந்ததில்லை. எனக்கான வேலைகள் எல்லாத்தையும் நானே பார்த்துக்கிறேன். நான் எதுக்காகவும், எந்த காரணத்துக்காகவும் யாரையும் நம்பி வாழ முடியாது; வாழ மாட்டேன். ஒருத்தரை நம்பி வாழ ஆரம்பித்தால், எந்த ஒரு சின்ன விஷயமா இருந்தாலும் கூட, அய்யோ, அவங்க இல்லையே என்ற வருத்தம் வர ஆரம்பிச்சிடும். அதனால், எப்பவும், நான் நானாகவே இருப்பேன்.

தனிமை வாழ்க்கையில் ரொம்ப பழகிட்டீங்க போல?

தனிமை எனக்கு இனிமை தான். நிறைய பேர் தனிமையைவிரக்தி என்று சொல்லுவாங்க. ஆனால், அதை அனுபவித்து பார்க்கும்போது தான் தெரியும்; அதில்எவ்வளவு சுகம் உள்ளது என்று. எனக்கு, இந்த தனிமை ரொம்பவே பழகி போயிடுச்சு.
- See more at: http://cinema.dinamalar.com/cinema-news/32220/special-report/Single-is-very-happy-says-Kovai-Sarala.htm#sthash.yoEViXES.dpuf

No comments:

Post a Comment