Friday 23 January 2015

'ஐ' - வெறும் ஷங்கர் படம் அல்ல ; 'அதுக்கும் மேல' !

நான் எந்தளவு ‘ஐ’-யை எதிர்பார்த்தேனோ அதில் ‘கால் இன்ச்’ கூட குறையாமல் முழுமையாக என்னைக் கவர்ந்தது. மெய்யாலுமே மெர்சலாகி விட்டேன். முதல் காரணம், எளிமையான ஒரு கதைக்கு ஷங்கர் அமைத்திருந்த சுவாரஸ்யமான நான்-லீனியர் திரைக்கதை ! மேக்கிங், மேக்அப், விக்ரம், ஒளிப்பதிவு, பின்னணி இசை என்று அடுத்தடுத்து வரிசை கட்டுகின்றன படத்துக்கான ப்ளஸ்கள். கல்யாண மண்டபத்திலிருந்து ஒரு பாழடைந்த பங்களாவுக்கு தியாவை கூனன் சாதுர்யமாக கடத்திக் கொண்டு போய் சிறை வைக்கும் அறிமுகக் காட்சியிலிருந்தே படம் கியர் தட்டிப் பறக்கிறது.

 

அதன் பிறகு ப்ளாஷ்பேக்கில் லிங்கேசன் காட்சிகளும், நிகழ்காலத்தில் கூனன் காட்சிகளுமாக மாறி, மாறிப் பயணிக்கும் படத்தில் எவ்வித குழப்பமும் இன்றி நம்மால் ஒன்றிப் போக முடிகிறது. மிஸ்டர்.தமிழ்நாடு ஆவதை குறிக்கோளாக கொண்டிருக்கும் லிங்கேசன், மாடல் அழகி தியாவின் தீவிர ரசிகனாகி செய்யும் கிறுக்குத்தனங்கள் ரசிப்பவையாக இருக்கின்றன. டூ பீஸில் தியாவைப் பார்த்து ‘பொத்’தென்று மயங்கி விழுவதும், அவளுடன் எடுத்துக் கொண்ட போட்டோவை வைத்துக் கொண்டு ‘மெர்சலாயிட்டேன்’ என்று பாடுவதுமாக லிங்கேசன் எபிசோடுகள் சுவாரஸ்யமாகக் கடக்கின்றன !
சீனா அத்தியாயங்கள் ஆங்காங்கே கொஞ்சம் மெதுவாக நகர்ந்தாலும், இடையிடையே வரும் கூனன் காட்சிகள் படத்தின் வேகத்தை சீராக உயர்த்தி விடுகின்றன. நிஜத்தை சொல்ல வேண்டுமெனில், இந்தப் படத்தின் உயிர்நாடியாக செயல்படுவதே கூனன் கதாபாத்திரம்தான். இவன் இல்லையேல் ‘ஐ’-யின் வெற்றி கேள்விக்குறியாகி இருக்கும். ஒரு கட்டத்துக்கு மேல் ஆடியன்ஸும் கூனனுடன் கைகோர்த்துக் கொண்டு ‘அதுக்கும் மேல’ என்று ‘பன்ச்’ அடித்து தியேட்டரையே அமர்க்களப்படுத்தும் அளவுக்கு கூனன் கதாபாத்திரம் அனைவரது நெஞ்சிலும் நீங்காத இடம் பிடித்து விடுகிறது.



தான் நேசித்த காதலியை அருகில் வைத்துக் கொண்டு தன்னை யார் என்று காட்டிக் கொள்ளாமல் தவிக்கும்போதும், காதலியின் கையாலேயே பிச்சை பெறும் போதும் நமக்கு அவன் மீது அளவு கடந்த பரிதாபம் எழுகிறது. தியேட்டரில் பலர் அவனுக்காக கண்ணீர் விட்டு, துடைத்துக் கொண்டதையும் காண முடிந்தது. அதனாலேயே அவனுடைய இந்த நிலைக்கு காரணமானவர்களை ஒவ்வொருவராக அவன் பழிவாங்கும்போது ஆடியன்ஸும் சேர்ந்து குதூகலம் அடைகிறார்கள். அந்தளவு மிகவும் அழுத்தமான கதாபாத்திரமாக ‘கூனன்’ ஷங்கரால் படைக்கப்பட்டிருக்கிறான் !
தியாவாக வரும் எமி ஜாக்ஸன் தன்னால் இயன்றளவு படத்துக்காக உழைத்திருப்பது பாராட்டத்தக்கது. தற்போதைய சூழ்நிலையில் மாடலாக நடிப்பதற்கு எமியை விட்டால் கச்சிதமான ஆள் இண்டஸ்ட்ரியில் யாரும் இல்லை என்றே எனக்கும் தோன்றுகிறது. சந்தானம் இந்தப் படத்துக்கு அவசியம் தேவைப்பட்டிருக்கிறார். லிங்கேசன் கூனனாக ஆன பிறகு நல்ல நண்பேன்டாவாக ஆறுதல் சொல்லி அவனுக்கு தோள் கொடுப்பதோடு, துரோகிகளைப் பழிவாங்குவதற்கும் சந்தானம்தான் கூனனுக்கு பெரும் உதவி செய்கிறார்.

பவர்ஸ்டாருடன் அவர் செய்யும் காமெடிகள் அநாவசியம் எனினும் ரிலாக்ஸ் ரகம். க்ளைமாக்ஸில் - கூனனால் உருக்குலைக்கப்பட்ட துரோகிகளை ஒவ்வொருவராக அவர் பேட்டி காணும் போது தியேட்டரில் ஆரவார அப்ளாஸ் ! சுரேஷ்கோபி, ராம்குமார், உபேன் பட்டேல், ஓஜஸ் ரஜனி ஆகியோர் தங்களுக்கு அளிக்கப்பட்ட பாத்திரங்களை சரியாக செய்திருக்கிறார்கள். ‘மெர்சலாயிட்டேன்’, ‘என்னோடு நீ இருந்தால்’ இரண்டு பாடல்களும் மிகவும் அவசியமான இடத்தில் வருவதால் கூடுதல் ஈர்ப்பை ஏற்படுத்துகின்றன.
படம் ஆரம்பிக்கப்பட்ட சில நிமிடங்களில் வரும் ‘லேடியோ’ பாடல் ஹீரோயின் அறிமுகத்துக்கும், அவளுடைய அழகையும் மற்றும் தொழில் பின்னணியையும் விளக்குவதற்கு உதவுகிறது. ‘பூக்களே சற்று ஓய்வெடுங்கள்’, ‘ஐலா ஐலா’ பாடல்கள் சுவாரஸ்யமாக போய்க் கொண்டிருக்கும் கதையோட்டத்தில் கொஞ்சம் தொய்வை உண்டாக்கினாலும் விஷுவல் ரீதியாக பாஸ்மார்க் வாங்கி விடுகின்றன. ஷங்கர் பிராண்ட் பாடல்கள் !

படத்தின் டெக்னிக்கல் சமாச்சாரங்களில் P.C.ஸ்ரீராமின் ஒளிப்பதிவுக்கு தான் முதலிடம். ‘ஐ’-யின் முதல் ப்ரேம் முதல் கடைசி ப்ரேம் வரை ஒவ்வொன்றும் நம்முடைய புருவத்தை உயர்த்தச் செய்யும் அளவுக்கு அசாத்திய உழைப்பு. படு நேர்த்தியான ஒளிப்பதிவுக்காகவே இரண்டு தடவை தியேட்டருக்குப் போய் ‘ஐ’-யைப் பார்த்து வியந்தேன். 3 மணி நேரம் 8 நிமிடங்கள் ஓடும் படத்தை மைக்ரோ விநாடி கூட பிசிறு தட்டாமல் எடிட்டிங் பண்ணியிருக்கும் ஆண்டனியின் திறமையையும், உழைப்பையும் எம்புட்டு பாராட்டினாலும் தகும். பாழடைந்த பங்களா, லிங்கேசனின் வீடு, கேரவன், மனிதமிருகத்தின் இருப்பிடம் என்று படத்தின் பல லொகேஷன்களை யதார்த்தத்துக்கு நெருக்கத்தில் கொண்டு வந்த வகையில் T.முத்துராஜின் கலை இயக்கம் ‘சபாஷ்’ போட வைக்கிறது.

பாடிபில்டர்களுடன் விக்ரம் மோதும் அனல் பறக்கும் சண்டை மற்றும் ரயில் மீதான கூனன் சண்டை இரண்டிலும் 'அனல் அரசு' அமைத்திருக்கும் ஸ்டண்ட்கள் பட்டையை கிளப்பியிருக்கின்றன. பீட்டர் பெங் அமைத்த சைக்கிள் சண்டைக்காட்சி செம ஸ்டைலிஷ் ஸ்டண்ட். ஷங்கர் படம் என்பதால் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரண்டிலும் வழக்கம்போல் இரட்டிப்பாக வேலை செய்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான் ! அவதார், லார்டு ஆப் தி ரிங்ஸ் போன்ற ஹாலிவுட் படங்களுக்கு பணிபுரிந்திருக்கும் Weta Workshop ‘ஐ’-யில் பண்ணியிருக்கும் மேக்அப் நிஜமாகவே உலகத்தரம். அவர்களுடைய அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் பல பிரம்மாண்ட ஹாலிவுட் படங்களுக்கு மத்தியில் ‘ஐ’ போஸ்டரையும் பார்க்கும்போது மிகவும் பெருமையாக உள்ளது. தமிழ் சினிமாவுக்கு அத்தகைய பெருமையை தேடிக் கொடுத்த ‘ஐ’ டீமுக்கு பாராட்டுகள் பல !

பலரும் சொல்வது போல் வாத்தியார் ‘சுஜாதா’ இல்லாத ஷங்கரின் படமாக பார்க்கும்போது வசனங்கள் சராசரியாக இருந்தாலும், இந்தப் படத்துக்கு இத்தகைய வசனங்களே போதுமானவையாக எனக்குத் தோன்றுகிறது. Finally, ‘ஐ’-யின் பிரம்மாண்டத் தூண்கள் இரண்டு. ஷங்கர் மற்றும் விக்ரம் ! சில விஷயங்கள் பணத்திற்கு அப்பாற்பட்டவை. விக்ரமின் ஈடுபாடும், உழைப்பும் அத்தகையதுதான்.

என்னதான் கோடிகளில் சம்பளம் வாங்குபவராக இருந்தாலும் கடுமையான உழைப்பின் கஷ்டம், வலி அனைவருக்கும் ஒன்றுதானே ? அந்த வகையில் ‘ஐ’-க்காக விக்ரம் நல்கியிருக்கும் மெனக்கெடல் அவசியம் பாராட்டுக்குரியது. அவருக்கு கிடைத்திருக்கும் புகழில் ஷங்கருக்கும் நிச்சயம் கணிசமான பங்கு இருக்கிறது. படத்தில் விக்ரம் கொடுத்திருக்கும் சில முகபாவனைகளைப் பார்க்கும்போது அடர்த்தியான ஒப்பனைகளைக் கடந்து, ஒரு நடிகரிடமிருந்து இந்தளவு நடிப்பை ஷங்கரால் அன்றி வேறு எந்த தமிழ் சினிமா இயக்குநராலும் வெளிக்கொண்டு வந்திருக்க முடியாது என்பது என் உறுதியான எண்ணம் ! ‘தரை டிக்கெட்’ முதல் ‘எலைட் டிக்கெட்’ வரை அனைவருக்கும் திருப்திகரமான ஒரு கமர்ஷியல் ஹிட் கொடுத்த வகையில் இந்த ‘ஐ’, ஷங்கரின் ஏனைய படங்களுடன் ஒப்பிடும்போது நிச்சயம் ‘அதுக்கும் மேல’ தான்....!!!

No comments:

Post a Comment